-அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி
குலபாஉர் ராஷீதூன்களில் அதிகமான விமர்சனங்களைச் சந்தித்தவராக உஸ்மான்(ரழி) அவர்கள் திகழ்கின்றார்கள். தனது மரணத்தின் பின் நுபுவ்வத்தின் அடிப்படையிலான கிலாபத் குறிப்பிட்ட காலம் இருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறு நபியவர்களால் நபித்துவத்தின் அடிப்படையில் அமைந்த கிலாபத் எனும் போற்றப்பட்ட ஆட்சியில் உஸ்மான்(ரழி) அவர்களின் ஆட்சியும் ஒன்றாகும்.
அன்று வாழ்ந்த இஸ்லாத்தின் எதிரிகளும், இஸ்லாத்தின் பெயரில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பியவர்களும் உஸ்மான்(ரழி) அவர்களது கிலாபத் நிர்வாகம் தெடர்பிலும் மார்க்க விவகாரங்கள் தொடர்பிலும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். ஆட்சித் தலைவர் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணுவதே இவர்களின் நோக்கமாக இருந்தது. அவர்கள் உண்மையில் சீர்திருத்தத்தை விரும்பவில்லை. இன்றும் முஸ்லிம்கள் மத்தியில் தவ்ஹீதின் பெயரில் குழப்பதையும் வழிகேட்டையும் விளைவிக்க விரும்புபவர்கள், உஸ்மான்(ரழி) அவர்களைத் தரக்குறைவாக விமர்சிப்பதைக் காணலாம். உஸ்மான்(ரழி) அவர்கள் மீது சுமத்தப்பட்ட மார்க்க ரீதியான சில குற்றச்சாட்டுக்களை நோக்குவோம்.
01. பத்ரில் கலந்து கொள்ளவில்லை:
உஸ்மான்(ரழி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ளவில்லை. இதை அன்றைய குழப்பக்காரர்கள் ஒரு பெரும் குறையாக முன்வைத்தனர். பத்ருப் போர் திட்டம் தீட்டி முன்னெடுக்கப்பட்ட ஒரு போர் அல்ல. திடீரென முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்ட போராகும். எனவே, பத்ரில் கலந்து கொள்ளாத எவரும் குறை கூறப்படவில்லை. இவர்களுக்கு ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அவரைக் களங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எதிரிகள் இவ்விடயத்தை பூதாகரமாக்கினர்.
பத்ர் போருக்கு உஸ்மான்(ரழி) அவர்கள் செல்ல முற்பட்டார்கள். அந்த வேளையில் நபி(ஸல்) அவர்களது மகளார், உஸ்மான்(ரழி) அவர்களின் மனைவி ருகையா (ரழி) கடினமாக சுகயீனமுற்றிருந்தார்கள். நபி(ச) அவர்கள் தான் உஸ்மான்(ரழி) அவர்களை வர வேண்டாம் என்றும் மகளைக் கவனித்துக் கொள்ளுமாறும் கூறினார்கள். அதுமட்டுமன்றி நீர் போரில் பங்குபற்றாவிட்டாலும் பங்குபற்றியதற்கான நற்கூலியும், போர் வெகுமதியின் பங்கும் உனக்கும் உள்ளது என்று ஆறுதல் கூறினார்கள். போரில் வெற்றிவாகை சூடி நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்த போது அவரது மகள் மரணித்திருந்தார்கள்.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் நபி(ஸல்) அவர்களின் உத்தரவின் பெயரில்தான் உஸ்மான்(ரழி) அவர்கள் பத்ர் போரில் பங்குகொள்ளவில்லை. இந்த உண்மையை மறைத்து இதைக் குழப்பக்காரர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
02. உஹதில் ஓடினார்:
உஹதுப் போரின் போது ஏற்பட்ட குழப்ப நிலையின் போது நபி(ஸல்) அவர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பப்பட்ட போது சில நபித்தோழர்கள் போர்க்களத்தை விட்டும் வெருண்டோடினர். அவர்களில் உஸ்மான்(ரழி) அவர்களும் ஒருவர். இது தற்செயலாக இடம்பெற்ற ஒரு நடவடிக்கையாகும். இந்தச் சிக்கலுக்குள்ளானவர்களை அல்லாஹ் மன்னித்துவிட்டதாக அல்குர்ஆனில் கூறுகின்றான்.
“இரு அணியினரும் (போருக்காக) நேருக்கு நேர் சந்தித்த அந்நாளில் உங்களில் நிச்சயமாக எவர்கள் புறமுதுகிட்டுச் சென்றார்களோ, அவர்கள் செய்த (தவறுகள்) சிலவற்றின் காரணமாக ஷைத்தானே அவர்களை நிலைகுலையச் செய்தான். எனினும், நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், சகிப்புத் தன்மையுடையவனுமாவான்.” (3:155)
அல்லாஹ்வே மன்னித்துவிட்டேன் என்று கூறிய பின்னர் இதைச் சொல்லி உஸ்மான்(ரழி) அவர்களின் ஈமானிலும், உறுதியிலும், தியாகத்திலும் களங்கம் கற்பித்து அவர்களின் ஆட்சியைச் சீர்கெடுக்க ஒரு கூட்டம் முற்பட்டது.
03. பைஅதுர் ரிழ்வானில் பங்கு பெறவில்லை:
பைஅதுர் ரிழ்வான் என்பது ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன்னர் நபி(ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் செய்த பைஅத்தைக் குறிக்கும். இந்த பைஅத்தில் பங்குபற்றியவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டதாக அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
“(நபியே!) நம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உடன்படிக்கை எடுத்தபோது, நிச்சயமாக அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் உள்ளவற்றை அவன் நன்கறிந்து, அவர்கள் மீது அமைதியை இறக்கிவைத்தான். மேலும், அவன் அவர்களுக்கு சமீபமான வெற்றியையும் வழங்கினான்.” (48:18)
எனவே, ஹுதைபிய்யாவில் இடம்பெற்ற இந்த பைஅத், பைஅதுர் ரிழ்வான் என அழைக்கப்படுகின்றது. “இந்த பைஅத்தில் பங்கு பற்றிய எவரும் நரகம் நுழையமாட்டார்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உஸ்மான்(ரழி) அவர்கள் இந்த பைஅத்தில் பங்குகொள்ளவில்லை எனக் கூறி அவர்களின் அந்தஸ்தைக் குறைக்க குழப்பக்காரக் கூட்டம் முற்பட்டது.
ஆனால், உண்மையில் நடந்தது என்ன என்பதை இவர்கள் உணர மறுத்துவிட்டனர். உஸ்மான்(ரழி) அவர்களுக்காகவே இந்த பைஅத் செய்யப்பட்டது. உஸ்மான்(ரழி) அவர்களுக்காக நபியவர்களே பைஅத் செய்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து உம்றாவுக்காக வந்து ஹுதைபிய்யாவில் தங்கி நின்றார்கள். அப்போது தாம் உம்றா செய்ய வந்திருக்கும் செய்தியைக் குறைஷிகளுக்கு எத்திவைத்துவிட்டு உம்றாக் கடமையைச் செய்ய நபி(ஸல்) அவர்கள் நினைத்தார்கள். எனவே, குறைஷிகளுடன் பேச்சுவார்த்தைக்காக உஸ்மான்(ரழி) அவர்களை நபி(ச) அவர்கள் தூதுவராக அனுப்பினார்கள்.
பேச்சுவார்த்தைக்காகச் சென்ற உஸ்மான்(ரழி) அவர்கள் வருவது தாமதமானது. இந்த சந்தர்ப்பத்தில், “உஸ்மான்(ரழி) அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்” என்ற வதந்தி பரப்பப்பட்டது. தூதுவர்களைக் கொல்வது பெரும் தூரோகச் செயலாக அன்றும் இன்றும் பார்க்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில்தான் உஸ்மான் கொல்லப்பட்டிருந்தால், உயிருள்ள வரை போராடுவது” என்ற அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் நபித்தோழர்களிடத்தில் பைஅத் வாங்கினார்கள். இந்த பைஅத் தான் “பைஅதுர் ரிழ்வான்” என அழைக்கப்படுகின்றது. உஸ்மான்(ரழி) அவர்கள் நபியவர்களால் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்ட பின்னர் அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்தியின் பின்னர் செய்யப்பட்ட பைஅத்தில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்று எப்படிக் குற்றம் கூற முடியும்.
அடுத்து, இந்த பைஅத்தின் போது உஸ்மான்(ரழி) அவர்களுக்காக நபி(ஸல்) அவர்களே பைஅத்தும் செய்தார்கள். இது உஸ்மானின் கை எனக் கூறி தானே உஸ்மான்(ரழி) அவர்களுக்காக பைஅத் செய்தார்கள். இந்தப் பாக்கியம் வேறு எவருக்கும் கிடைக்கவில்லை என்று கூற வேண்டும். எதைக் கூறியாவது உஸ்மான்(ரழி) அவர்களின் கண்ணியத்தில் களங்கம் கற்பிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டியவர்கள் இல்லாததையெல்லாம் தூக்கிப் பிடிக்க ஆரம்பித்தனர்.
04. அல்குர்ஆனை எரித்தார்:
நபி(ஸல்) அவர்களது காலத்தில் பலரும் குர்ஆனை எழுதி வைத்திருந்தனர். அவர்களில் சிலர் சில பகுதிகளை எழுதியும் சில பகுதிகளை எழுதாதும் விட்டிருந்தனர். மற்றும் சிலர் ஓதுவது மாற்றப்பட்ட வசனங்களையும் அது மாற்றப்பட்டுவிட்டது என்பதை அறியாது தமது கையெழுத்துக் குர்ஆனில் எழுதிவைத்திருந்தனர். மற்றும் சிலர் குர்ஆனோடு தமது விளக்கங்களையும், நபித்தோழர்களது விளக்கங்களையும் சேர்த்து எழுதியிருந்தனர். குர்ஆனை ஓதும் போது கூட வித்தியாசமான பல கோணங்களில் ஒத நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தார்கள். இதில் ஒரு கிராஅத் முறையை அறிந்து மறு கிராஅத் முறையை அறியாதவர்கள் பல குழப்பங்கள் விளைவித்தனர்.
இதனால் நபியவர்களின் இரகசியத் தோழர் ஹுதைபதுல் யமானீ(ரழி) அவர்களது ஆலோசனைப் பிரகாரம் மக்கள் அனைவரையும் ஒரே கிராஅத்தில் ஒரே குர்ஆனில் ஒன்று சேர்க்க உஸ்மான்(ரழி) அவர்கள் முடிவு செய்தார்கள். குறைஷிகளின் மொழிநடையில் எழுத்தாளர்களை எழுதப் பணித்தார்கள். “ஹத்துல் உஸ்மானீ ” என்று கூறப்படும் ஒரே எழுத்து முறையில், ஒரே வடிவமைப்பில், ஒரே ஒழுங்கு முறையில் குர்ஆனைக் கொடுத்து அதைப் பல பகுதிகளுக்கும் அனுப்பியதோடு ஒவ்வொருவரும் தம்வசம் தமக்காக வைத்திருந்த குர்ஆன் பிரதிகளை வரவழைத்து அவற்றை எரித்தார்கள். அவர்களின் இந்தச் செயல் தூர நோக்குடன் செய்யப்பட்ட மகத்தான பணியாகும். இதனால் அவர்கள் “ஜாமிஉல் குர்ஆன்” – குர்ஆனை ஒன்று திரட்டியவர் எனப் புகழப்படுகின்றார். அவரின் தூர நோக்குள்ள இச்சிறந்த பணியைக் கூட குழப்பக்காரர்கள் குர்ஆனை எரித்தார் என்று கூறி விமர்சிக்கின்றனர். அவர் குர்ஆனைப் பாதுகாத்தார் என்பதைப் புரிந்து கொள்ள அவர்கள் விரும்பவில்லை. குழப்பக்காரர்கள் எப்போதும் குறைகளைத்தான் தேடுவார்கள். அவர்களின் கண்களுக்கு நிறைகள் தென்படவே மாட்டாது!
05. பயணத்தில் தொழுகையை முழுமைப் படுத்தினார்:
பயணத்தில் தொழும் போதும், ஹஜ்ஜின் போது மினாவில் தங்கும் போதும் நான்கு ரக்அத்துக்களுடைய தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்துக்களாகச் சுருக்கித் தொழுவதே சிறந்ததாகும். அபூபக்கர்(ரழி), உமர்(ரழி) ஆகியோர் இச்சந்தர்ப்பங்களில் இரண்டிரண்டாடிவே தொழுதுள்ளனர். உஸ்மான்(வ) அவர்களும் இரண்டிரண்டாகவே ஆரம்பத்தில் தொழுதார். அவரது ஆட்சியின் இறுதிப் பகுதியில் நான்கு நான்காகவே முழுமைப்படுத்தியே தொழுதார்.
மினாவில் உஸ்மான்(ரழி) அவர்கள் தொழுகையைப் பூரணப்படுத்தித் தொழுவதை இப்னு மஸ்ஊத்(ரழி) போன்றோர் எதிர்த்த போதிலும் அவருக்குப் பின்னால் இருந்து பூரணப்படுத்தியே தொழுதனர். எனினும், குழப்பக்காரர்கள் இதையும் தமக்குரிய குழப்பத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
இது இஜ்திஹாதுடன் தொடர்புபட்ட விடயமாகும். ஒருவர் இஜ்திஹாத் செய்து இஜ்திஹாதில் குறை விட்டால் கூட அவர் குறை பிடிக்கப்பட மாட்டார். அடுத்து, கட்டாயம் சுருக்கித்தான் தொழ வேண்டும் என்ற கட்டாயம் கூட இல்லை. அவர் பயணத்தில் சுருக்கித் தொழாவிட்டால் அனுமதிக்கப்பட்டதில் ஏற்றமானதை விட்டுள்ளார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
உஸ்மான்(ரழி) அவர்கள் இரண்டு காரணங்களின் அடிப்படையில் மினாவில் சுருக்கித் தொழுவதை விட்டார்கள்.
1. அவர் மக்காவில் திருமணம் முடித்தார். தான் மக்காவில் திருணம் புரிந்துவிட்ட காரணத்தினால் தான் மக்காவாசி என அவர் எண்ணினார். இருப்பினும் மக்காவாசியாக இருந்தாலும் ஹஜ்ஜில் மினாவில் இருக்கும் போது சுருக்கித் தொழுவதே ஏற்றமானதாகும்.
2. ஹஜ்ஜுடைய காலத்தில் நிறைய நாட்டுப்புற மக்கள் ஒன்று கூடுவார்கள். அவர்களில் அதிகமானனோர் கல்வியறிவு அற்றவர்கள். மினாவில் ழுஹர், அஸர், இஷா என்பவற்றை இரண்டிரண்டாகத் தொழுதால் இந்தத் தொழுகையின் ரக்அத்துக்களே இரண்டுதான் என அவர்கள் தவறாக எண்ணித் தமது ஊருக்குச் சென்ற பின்னர் கூட இரண்டிரண்டாகவே தொழுதுவிடலாம். கேட்டால் எமக்கு இப்படித்தான் கலீபா உஸ்மான்(ரழி) தொழுவித்தார் என்று கூறிவிடலாம். எனவே, இந்தத் தொழுகைகளின் அடிப்படையான ரக்அத்துக்கள் நான்கு என்பதைப் பொதுமக்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவே சுருக்கித் தொழாமல் நான்கு நான்காகத் தொழுதார்கள். பெரியதொரு தீங்கை நிவர்த்தி செய்வதற்காக அவர்கள் எடுத்த முயற்சியாகவே இது பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு உஸ்மான்(ரழி) அவர்கள் மீது வீண் பழிகளைச் சுமத்தியும் அவர்கள் செய்த சில இஜ்திஹாதுகளைத் தவறாகத் திசை திருப்பியும் உஸ்மான்(ரழி) அவர்களை மார்க்க விரோதியாகக் காட்டி அவரது ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை இஸ்லாத்தின் எதிரிகள் தூண்டிவிட்டனர். இன்றும் சிலர் தவ்ஹீதின் பெயரில் இந்த மாமனிதர் மீது கலங்கம் கற்பித்து அவதூறு பரப்பி வருகின்றனர். அன்றைய முனாபிக்குகளும் இஸ்லாத்தின் எதிரிகளும், குழப்பக்காரர்களும் விட்ட துரோகத்தனத்தைத் தொடர்கின்றனர் என்றால் இத்தகைய இழி பிறவிகள் யார் என்பதை சமூகம் இனம் கண்டு அவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.