-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களை மாற்றுக் கருத்து உடையவர்கள் ஓர் முஜஸ்ஸிமா (அல்லாஹ்வுக்கு சடவாதம் பேசுபவர்) என்று கூறி அவரை காஃபீர் என்று சொல்லும் அளவிற்கு மிஞ்சி விட்டனர்,
நாம் ஒரு கருத்தை எதிர்ப்பதும் ஆதரிப்பதும் நமது கருத்து உரிமையை சார்ந்தது, ஆனாலும் நாம் கொண்டிருக்கும் கொள்கை சத்தியத்தில் இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு அல்லவா !!
அதுபோல் மாற்றுக்கருத்தினரின் தவறான கொள்கைகளை சுட்டிக் காண்பிப்பது என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் மாற்றுக் கருத்துணரின் புத்தகத்திலிருந்து ஆதாரத்துடன் நாம் நமது வாதத்தை முன் வைக்காமல் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று பொய்யான வாதத்தை கற்பனையுடன் கலந்து நாம் புனைந்து ஒருவரை எதிர்ப்பது நமது அறியாமையும் மடத்தனத்தையும் உறுதி செய்கிறது.
அதுபோன்றே இமாம் இப்னு தைமியாவை மாற்றுக்கருத்தனர் அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றி அவர் சொல்லும் பொழுது அல்லாஹ்விற்கு படைப்பினங்களை போன்று உடல் அமைப்பு இருப்பதாக அவர் பிழையாக சொல்லிவிட்டார் என்று சொல்வார்கள் இதோ வாருங்கள் ஷைஹூல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதிய புத்தகங்களில் மிகப் பிரபலமான ஒரு புத்தகம்
ஜாமியுல் மஸாயில்
(جامع المسائل)
ஒன்பது வால்யம்களைக் கொண்டது....
அதில் பின் வருமாறு அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றி எடுத்துரைக்கிறார் வாருங்கள் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்....
"அல்லாஹ் வானில் இருக்கிறான் என்பதற்கு அர்த்தம் அவன் வானங்களுக்கு மத்தியில் இருக்கிறான், வானங்கள் அவனை சூழ்ந்து இருக்கின்றன அவன் அதற்குள் இருக்கிறான் என்பதல்ல.
இவ்வாறு நமது முன்னோர்களோ (சங்கையான ) இமாம்களோ சொன்னதே இல்லை, ஆனால் அவர்கள் கூறுவது அல்லாஹ் வானில் தனது அர்ஷில் இருக்கிறான், அவன் படைப்பினங்களை விட்டு விலகி இருக்கிறான். அவன் படைப்பினங்களிலும் இல்லை படைப்பினங்கள் அவனிலும் இல்லை.
இமாம் மாலிக் பின் அனஸ் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:
அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் அவனின் ஞானம் முழு உலகத்திலும் வியாபித்திருக்கிறது,
அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது
எதை வைத்து நாம் அல்லாஹ்வை அறிந்து கொள்வது?
கூறினார்கள் அல்லாஹ் தனது வானங்களுக்கு மேல் அர்ஷில் இருக்கிறான் படைப்பினங்களை விட்டு விலகி இருக்கிறான்.
இதே கருத்தை தான் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்களும் கூறுகிறார்கள்.
இமாம் ஷாஃபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் அபூபக்கர் சித்திக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கிலாபஃதை அல்லாஹ் வானத்தில் தெரிவு செய்து, இந்த அடிப்படையில் அவரின் தோழர்கள் உள்ளத்தில் உறுதியாக்கினான்.
இமாம் அவ்ஸாயி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் நாங்கள் தாபியீன்கள் அனைவரும் ஒத்த கருத்தில் இருக்கிறோம் அதாவது அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் அல்லாஹ்வின் பண்புகளை ஸிபாஃதுகளை ஸுன்னா நமக்கு விளக்கமளித்த அடிப்படையில் நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
(இதற்கு மாற்றமாக) யார் அல்லாஹ் வானதிற்கு மத்தியில் இருக்கிறான், வானங்கள் அவனை சூழ்ந்து இருக்கின்றன அல்லது அவன் அர்ஷின் பக்கம் தேவை உடையவனாக இருக்கிறான் அல்லது அவன் படைப்பினங்களின் பக்கம் தேவையுடையவனாக இருக்கிறான் அவன் அர்ஷில் இருக்கிறான் (இஸ்திவா என்ற விளக்கத்தை தவறாக) மனிதர்கள் நாற்காலியில் அமர்வது போன்று இருக்கிறான் என்று சொன்னால் அவன் வழிகேடன் பித்அத்வாதி மடையன் ".
நூல் - ஜாமியுல் மஸாயில் -3/198