அரபி தெரியாதவர்களுக்கு தராவீஹ் தொழுகைக்கான 5 குறிப்புகள்

ரமதான் மாத நற்செயல்களில் சிறப்பானது தராவீஹ் (ஒவ்வொரு இரவும் இஷா தொழுகைக்குப்பின் தொழக்கூடிய நீண்ட இரவுத் தொழுகை). பல இஸ்லாமிய நாடுகளில், ஒவ்வொரு ஆண்டும் ரமதான் மாதத்தில் தராவீஹ் தொழுகையில் குர்’ஆன் முழுவதையும் ஓதி முடிப்பது ஒரு பழக்கமாக உள்ளது.
ரமதான், நிச்சயமாக குர்’ஆனுடைய மாதம் தான். அல்லாஹ் அருளிய இறுதி வேதமாகிய அதை அந்த புனித மாதத்தின் இரவுகளில் ஓதி முழுமையாக்குவதை விட அதை கண்ணியப்படுத்த வேறு என்ன வழி இருக்க முடியும்? தராவீஹ் தொழுகையே ஒரு பெரும் வணக்கமாகும். புகாரி கிரந்தத்தில் உள்ள ஒரு ஹதீஸில், ‘எவர் அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நாடி ரமதானின் இரவுகளில் நின்று வணங்குகிறாரோ, அவருடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது!

இருப்பினும், ஒரு சிறு பிரச்சினை உள்ளது. அரபி மொழி புரியாத ஒருவருக்கு, தராவீஹ் தொழுகை சில சமயங்களில், அசையாமல் நின்று கொண்டும், சில நேரங்களில் குனிந்து, சஜ்தா செய்யும் ஒரு உடற்பயிற்சி போல் தோன்றும். குர்’ஆனிய கடலில் ஆழமாக மூழ்குவதற்கு மிகவும் சிறந்த வழி, அரபி மொழி படிப்பது தான். எந்த மொழிபெயர்ப்பும் நேரடியாக புரிந்து கொள்வதற்கு ஈடாகாது.

இருப்பினும், இந்த கட்டுரையை படிக்கும் பெரும்பாலானவர்கள் அரபி மொழி தெரியாவதவர்களே. நீங்கள் மிகவும் பின்தங்கியிருப்பது போல் தோன்றுகிறதா? இந்த கட்டுரையின் நோக்கம், நம் எல்லோருக்கும் – அரபி மொழி புரியாது, ஆனாலும், குர்’ஆனுடைய அழகை ரமதானில் அனுபவிப்பதற்கு ஒரு வழியைக் காட்டுவது தான். இதற்கிடையில், அண்டர்ஸ்டான் குர்’ஆன் அகாடெமியில் 50% குர்’ஆனிய சொற்களை படிக்க ஆரம்பியுங்கள். அதை முடிக்கும்போது, இன் ஷா அல்லாஹ், தராவீஹ் தொழுகையில் ஓதப்படும் வசனங்களில் உள்ள சில வார்த்தைகள் உங்களுக்கு புரியும்.

மிக எளிதானதிலிருந்து, மிகக் கடினமானது என்ற வரிசையில் கீழே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன:
1. குர்’ஆனை சரியான முறையில் ஓதும் ஒரு பள்ளிவாயிலை கண்டுபிடியுங்கள். சில இடங்களில், தராவீஹ் தொழுகையில் ஓதுவது ஏதோ பந்தயத்துக்காக ஓதுவது போல் இருக்கும். இதில் நாம் மிகக்குறைந்த அளவில் செய்யக்கூடியது, குர்’ஆனுடைய ஒலியின் அழகை ரசிப்பது தான். பொருள் புரியாவிட்டாலும், ஓதுவதை வெறுமனே கேட்பது கூட ஒருவரை நெகிழ வைக்கும் அளவிற்கு குர்’ஆன் அற்புதமானது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது அழகான ஓதுதல் உள்ள ஒரு மஸ்ஜிதைத் தேர்ந்தெடுப்பது தான்.

2. ஒவ்வொரு சஜ்தாவிலும் துவா செய்யுங்கள். துவா செய்வதற்கு மிகச் சிறந்த நிலைகளில் ஒன்று, சஜ்தாவுடைய நிலை. தராவீஹ் தொழுகையில் நமக்கு குறைந்தது 46 சஜ்தாக்கள் (வித்ர் தொழுகையையும் சேர்த்து) கிடைக்கும். அதனால் நமக்கு ரமதானில் ஒவ்வொரு இரவிலும், அல்லாஹ்விடம் 46 துவாக்கள் கேட்கும் வாய்ப்பு கிடைக்கும். ரமதானில் தான் துவாக்கள் அதிக அளவில் அங்கீகரிக்கப்படுகின்றன. மேலும், அதிகமான துவாக்கள் கேட்பதற்கு அதிகமான சஜ்தாக்கள், ஆண்டின் மற்ற பகுதிகளில் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஒவ்வொரு முறை சஜ்தா செய்யும்போதும், ஒரு சிறிய துவா கேளுங்கள். இந்த ரமதானில் உங்களுக்கு பதில் கிடைக்க வேண்டிய துவாக்களின் பட்டியலை எழுதிக்கொள்ளுங்கள். அவற்றை தராவீஹ் தொழும்போது, சஜ்தாவின் நிலையில் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு நீங்கள் கேட்டதை அருளுவான். உங்களுக்கும் கூடுதல் சிறப்பான தராவீஹ் அனுபவம் கிடைக்கும்.

3. ஒரு தூண்டுதல் கிடைக்கும்போதெல்லாம், துவா செய்யுங்கள். இதற்கு இன் ஷா அல்லாஹ், நீங்கள் கூர்மையாக கவனிக்கக்கூடியவராகவும், அரபி மொழி அறிவு சிறிதளவு இருப்பவராகவும் இருத்தல் உதவியாக இருக்கும். ஹுதைஃபா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய இரவுத் தொழுகையைப் பற்றி கூறும்போது, “அவர்கள் அல்லாஹ்வைப் புகழக்கூடிய வசனத்தை அடையும்போது, அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்வார்கள்; அவர்கள் ஒரு துவா அடங்கியுள்ள வசனத்தை ஓதும்போது, அல்லாஹ்விடம் துவா செய்வார்கள்; அல்லாஹ்வின் பாதுகாப்பைத் தேடும் வசனத்தை அவர்கள் அடையும்போது, அவர்கள் அல்லாஹ்வின் பாதுகாப்பைத் தேடுவார்கள்.“ [முஸ்லிம்]. இன் ஷா அல்லாஹ், நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய இரவுத்தொழுகைகளில் கடைபிடித்த இந்த பழக்கத்தை நாமும் தராவீஹ் தொழுகைகளில் கடைபிடிக்கலாம். ஜன்னா (சுவனம்) என்ற சொல்லைக் கேட்கும்போதெல்லாம், நீங்கள் சுவனத்திற்க்காக துவா செய்யுங்கள். ஜஹன்னம் (நரகம்) என்ற சொல்லைக் கேட்கும்போதெல்லாம், அதிலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள். அல்லாஹ் (சுபஹ்) முஸ்லிம்/முஸ்லிமீன், மு’மின்/மு’மினீன் என்ற சொற்களைக் கேட்கும்போது, உங்களை அவர்களில் ஒருவராகச் செய்யும்படி அல்லாஹ்விடம் துவா கேளுங்கள். ஒரு ஓதுதலில் எத்தனை அரபி வார்த்தைகளை நீங்கள் புரிந்து கொள்ள முடிகிறது என்பதைப் பொறுத்து, நீங்கள் அமைதியாக துவா செய்து கொள்ளலாம். ஓதுதலைப் பொறுத்து நீங்கள் தொடர்ந்து அல்லாஹ்விடம் பேசிக்கொண்டிருப்பதால், ஒரு நல்ல தராவீஹ் அனுபவத்தைப் பெற முடியும்.

4. தராவீஹ் தொழுகைக்கு முன்னால் மொழிபெயர்ப்பைப் படிப்பது. இது சிறிது கடினமானதாக இருந்தாலும், இன் ஷா அல்லாஹ், அதிக நன்மைகளையும், தராவீஹ் தொழுகையைப் பற்றிய மேன்மையான உணர்வையும் தரக்கூடியது. ஒவ்வொரு இரவும் தராவீஹ் தொழுகைக்கு முன்னால், சிறிது நேரத்தை ஒதுக்கி, குர்’ஆன் மொழிபெயர்ப்பைப் படித்தால், அன்று ஓதப்போகும் வசனங்களில் அல்லாஹ் (சுபஹ்) என்ன சொல்ல விரும்புகிறான் என தெரிந்து கொள்வீர்கள். உதாரணமாக, இமான் அந்த இரவு சூரா தாஹா ஓதப்போகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதன் மொழிபெயர்ப்பில், மூஸா (அலை) அவர்களின் வரலாறைப் படிக்கும்போது, அன்று இமாம் என்ன ஓதப்போகிறார் என்பது உங்களுக்குப் புரியும். இமாம் ஓதுவது என்ன என்று மிகத்துல்லியமாக புரியாவிட்டாலும், உங்களுக்கு எதைப்பற்றி ஓதுகிறார் என்பது புரியும். ஒவ்வொரு முறை இமாம், ‘மூஸா’, ‘ஃபிர்’அவுன்’ என்று சொல்லும்போது உங்களால், தொடர்பு படுத்த முடியும். இது கனிசமான அளவு உங்களுடைய தராவீஹ் அனுபவத்தை மேம்படுத்தும்.

5. ஒலிநாடாவில் ஓதுதலைக்கேட்டுக் கொண்டே, அதன் மொழிபெயர்ப்பையும் படியுங்கள். ஒரு வேளை உங்களுக்கு அரபி மொழி சுத்தமாகத் தெரியாது என்றால், இது தான் நீங்கள் செய்யக்கூடியவற்றிலேயே மிகச்சிறந்ததாக இருக்கும். ஆங்கிலம் அல்லது தமிழில் பொருள் வரக்கூடிய குர்’ஆன் வீடியோக்களைப் பாருங்கள். அதன் பின், அன்றைய இரவு தொழுகையில் இமாம் அதே வசனங்களை ஓதும்போது நீங்கள் படித்தது நினைவுக்கு வந்து உங்களால் தொடர்பு படுத்த முடியும். மேலும், மீண்டும், மீண்டும் ஓதப்படும் சில வார்த்தைகளின் பொருளை புரிந்து கொள்ள ஆரம்பிப்பீர்கள். இன் ஷா அல்லாஹ், இது, அல்லாஹ்வின் வேதத்துடன் உங்களுக்குள்ள தொடர்பை இன்னும் சிறப்பானதாக்க, அரபி கற்க விரும்பும் உங்களுடைய பயணத்தின் ஆரம்பமாக இருக்கும்.

இவை தான் இவ்வருட ரமதானில் உங்களுக்கு பயனளிக்கக்கூடிய ஐந்து குறிப்புகள். அல்லாஹ் (சுபஹ்) நம்முடைய ரமதான் வழிபாடுகளை ஏற்றுக் கொள்வானாக. ஆமீன். அவன் நம்மை, வணக்க, வழிபாடுகளின் மூலம் நரகநெருப்பிலிருந்து காக்கப்பட்டவர்களுடன் ஒன்று சேர்ப்பானாக. ஆமீன்.
நீங்கள் எடுக்கும் முயற்சி தான் மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் (சுபஹ்) அவனுடைய வேதத்தின் மீது நமக்கு விருப்பத்தையும், அதைப்புரிந்து கொள்ளும் ஆற்றலையும் அருள்வானாக. ஆமீன்.

தராவீஹ் தொழுகையை அதிக பயனுள்ளதான அனுபவமாக்க நீங்கள் ஏதாவது கருத்துகளை அளிக்க முடிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இறுதியாக, மிக முக்கியமானது, அல்லாஹ்வின் வேதம் உள்ள மொழியான அரபியைப் படிக்கும் குறிக்கோளை, ஒரு குறிக்கோளை செயல்படுத்த சிறந்த நேரமான ரமதானில் தொடங்குங்கள். அண்டர்ஸ்டான் குர்’ஆன் அகாடெமியின் பல வகுப்புகள், இந்த பயணத்தைத் தொடங்கும் யாராக இருந்தாலும், அவர்களுடைய பாதையை மிகவும் எளிதாக்கும்!
أحدث أقدم