முன்மாதிரி முஸ்லிம் குடும்பம்


அஷ்ஷைக் முஹம்மது அலீ அல்ஹாஷிமி, 

தமிழில்: முஃப்தி M. உமர் ஷரீஃப், 
வெளியிடு : தாருல் ஹுதா



உள்ளடக்கம்:-

பதிப்புரை.

முஸ்லிம் கணவர் தமது மனைவியுடன்

இஸ்லாமியப் பார்வையில் திருமணமும் மனைவியும்.

முஸ்லிம் தேடும் மனைவி.

மணவாழ்வில் இஸ்லாமிய வழி காட்டலைப் பின்பற்றுவார்.

முன்மாதிரி கணவர்.

வெற்றிகரமான கணவர்.

மனைவியிடம் நுண்ணறிவுடன், விவேகத்துடன் நடந்து கொள்வார்.

மனைவியின் குறைகளைச் சீராக்குவார்.

பெற்றோர் மற்றும் மனைவிக்கிடையே சமத்துவம் பேணுவார்.

மனைவியைச் செம்மையாக நிர்வகிப்பார்.

முஸ்லிம் பெண்மணி தமது கணவருடன்.

இஸ்லாமியப் பார்வையில் திருமணம்.

கணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தித்துக் கொள்வாள்.

கணவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பாள் அவரிடம் நல்ல முறையில் நடந்து கொள்வாள்.

முஸ்லிம் பெண்மணி - தம் கணவன் தாய்க்கு உபகாரம் செய்வாள் அவன் குடும்பத்தார்களைக் கண்ணியப் படுத்துவாள்.

கணவரிடம் அன்பாக நடந்து கொள்வாள் - அவரது மகிழ்ச்சியை அடைய பேராவல் கொள்வாள்.

இறையச்சமுள்ள முஸ்லிமான பெண், தனது கணவன் இரகசியத்தைப் பாதுகாக்க வேண்டும்.

கணவருக்குத் துணை நிற்பாள் - நல்ல ஆலோசனைகளை வழங்குவாள்.

அல்லாஹ்வின் பாதையில் தர்மங்கள் செய்யத் தூண்ட வேண்டும்.

கணவன் உள்ளத்தைக் கொள்ளை கொள்வாள்.

கணவருக்காக அலங்காரம் செய்து கொள்வாள்.

கணவரைச் சந்திக்கும் போது மகிழ்ச்சியாகவும், ஆறுதல் அளிக்கும் விதமாகவும் நன்றி உணர்வோடும் நடந்து கொள்வாள்.

கணவருடைய மகிழ்ச்சியில் பங்கு பெறுவாள்.

கணவர் அல்லாதவரை விட்டும் தமது பார்வையைத் தாழ்த்திக் கொள்வாள்.

கணவரிடம் எந்தப் பெண்ணைப் பற்றியும் வருணிக்க மாட்டாள்.

கணவனுக்கு அமைதி அளிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பாள்.

பெருந்தன்மை உள்ளவளாகவும் சிறுசிறு குறைகளை மன்னித்து விடக் கூடியவளாகவும் இருப்பாள்.

உறுதியுடனும் மதி நுட்பத்துடனும் இருப்பாள்.

வெற்றிமிக்க மனைவி.

முஸ்லிம் பெற்றோர் தமது பிள்ளைகளுடன்.

மகத்தான கடமைகளை அறிவார்.

ஒழுக்கப் பயிற்சியில் விவேகமான வழிமுறைகளைக் கையாள்வார்.

அன்பை உணரச் செய்வார்.

தாராளமாகச் செலவிடுவார்.

ஆண், பெண் பிள்ளைகளிடையே வேறுபாடு காட்டமாட்டார்.

சிந்தனை, செயலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பார்.

சமத்துவம் பேணுவார்.

உயர்பண்புகளை வளர்ப்பார்.

முஸ்லிம் பெண்மணி தமது கணவருடன்.

முஸ்லிம் பெற்றோர் தமது பிள்ளைகளுடன்.

அல்லாஹ்வே... குணங்களில் மிகச் சிறந்ததற்கு நீ எனக்கு வழிகாட்டு! குணங்களில் மிகச் சிறந்ததற்கு உன்னைத் தவிர வேறு யாரும் வழிகாட்ட முடியாது. குணங்களில் தீயதை விட்டும் என்னைத் திருப்பிவிடு! குணங்களில் தீயதை உன்னைத்தவிர வேறு யாராலும் என்னை விட்டும் திருப்ப முடியாது.


பதிப்புரை:

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! இறையருளும் ஈடேற்றமும் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள், நல்லோர் அனைவருக்கும் உண்டாகட்டும்.

இதற்கு முன்பு ‘முன்மாதிரி முஸ்லிம்' என்ற நூலை ‘தாருல் ஹுதாவின்' மூலமாக நாங்கள் வெளியிட்டிருந்தோம்.

அல்ஹம்துலில்லாஹ்... அந்நூலுக்கு மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பலர் அந்நூலைக் கொண்டு பெரிதும் பயன்பெற்று வருகின்றனர். முஸ்லிம்கள் மட்டுமின்றி மாற்று மத சகோதர சகோதரிகளும் அந்நூலைப் பெரிதும் விரும்பிப் படித்துப் பயன் பெறுகின்றனர்.

தமிழ்நாட்டு அரசாங்கம் அந்நூலின் 600 பிரதிகளை விலைக்கு வாங்கி தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசாங்க நூல் நிலையங்களிலும் வைத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து ‘முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி' என்ற நூலையும் தற்போது தமிழாக்கம் செய்து வருகிறோம்.

இதற்கிடையில் திருமணம் செய்யும் வாலிப சகோதர சகோதரிகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கும் வகையில் நல்ல ஒரு பரிசுப்புத்தகம் தேவை என்று நண்பர்கள் கருத்துக் கூறினர். அதற்கிணங்கவே ‘முன்மாதிரி முஸ்லிம் குடும்பம்' என்ற இந்நூலை வெளியிடுகிறோம்.

இந்நூலில், கணவர் தமது மனைவியுடன் எப்படி அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்? தாம் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன? நல்ல இஸ்லாமியக் குடும்பத்தை எப்படி உருவாக்குவது? போன்ற விஷயங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

அவ்வாறே ஒரு முஸ்லிம் பெண், தனது கணவருடன் எப்படி அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்? தனது கணவருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? நல்ல இஸ்லாமியக் குடும்பத்தை எப்படி உருவாக்குவது? என்ற விஷயங்களும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் இவ்விருவரும் தங்களுக்குப் பிறக்க இருக்கும் பிள்ளைகளை எப்படி இஸ்லாமிய முறையில் வளர்ப்பது, அவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி தருவது, இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிக்கும் நல்லவர்களாக உருவாக்குவது? போன்ற விஷயங்களும் இந்நூலில் கொடுக்கப் பட்டுள்ளன.

பலமுறை இந்நூல் மேலாய்வு செய்யப்பட்டு வாசகர்கள் எளிதாக படிக்கும் அளவு மெருகூட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு விஷயத்தையும் துல்லியமாக குர்ஆன் மற்றும் ஆதாரமிக்க நபிமொழிகளின் வெளிச்சத்தில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

திருமணம் முடிக்க இருப்பவர்கள் மட்டுமல்லாமல் திருமணம் முடித்தவர்களுக்கும் இந்நூல் அதிகம் பயனுள்ளதாக இருக்கும் என அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கிறோம்.

ஒவ்வொரு கணவரும் மனைவியும் இந்நூலில் கூறப்பட்டிருப்பதற்கு ஏற்ப தங்களை அமைத்துக்கொண்டால், தங்களைப் பண்படுத்திக்கொண்டால் நிச்சயமாக அவர்களது குடும்ப வாழ்க்கை ஒரு முன்மாதிரி முஸ்லிம் குடும்பமாகத் திகழும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்ஷா அல்லாஹ்... இத்தகைய தம்பதிகள் இவ்வுலகத்திலேயே தங்களது சொர்க்க வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

அல்லாஹு தஆலா நமது எல்லா நல்ல காரியங்களையும் ஏற்றுக் கொள்வானாக! இந்நூலை எழுதிய ஆசிரியருக்கும் அதை மொழிபெயர்ப்பதிலும் வெளியிடுவதிலும் உதவிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அல்லாஹ் அவனது அன்பையும் மன்னிப்பையும் அருளையும் நெருக்கத்தையும் ஈருலக வெற்றியையும் வழங்குவானாக!

இந்நூலில் பிழை ஏதாவது இருப்பின் சிரமம் பாராது வாசகர்கள் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். இன்ஷா அல்லாஹ்! அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிடுகிறோம். அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்கட்டும்!

தங்களின் நல்ல துஆக்களில் எங்களையும் தாருல் ஹுதாவையும் என்றும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்ற அன்பான கோரிக்கையுடன் நிறைவு செய்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்...

முஃப்தி M. உமர் ஷரீஃப் காஸிமி
குர்ஆன் மற்றும் நபிமொழி பணியாளன்
தாருல் ஹுதா, சென்னை - 1.



முஸ்லிம் கணவர் தமது மனைவியுடன்:

இஸ்லாமியப் பார்வையில் திருமணமும் மனைவியும்:

இஸ்லாமியப் பார்வையில் திருமணம் என்பது ஆன்மாவிற்கு நிம்மதியையும், உள்ளத்திற்கு உற்சாகத்தையும், மனதிற்கு மகிழ்ச்சியையும், இதயத்திற்கு உறுதிப் பாட்டையும் ஏற்படுத்தக் கூடிய ஓர் உறவாகும். ஓர் ஆணும், பெண்ணும் அன்பு, நேசம், கருணை, ஒற்றுமை, புரிந்துணர்வு, உதவி, நலவை நாடுதல், விட்டுக் கொடுத்தல் போன்ற நற்பண்புகளுடன் இணைந்து வாழ வழி அமைப்பதாகும். இதன்மூலம் கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியான இல்லறத்தை ஏற்படுத்திக் கொள்ள சக்தி பெறுகிறார்கள். இப்படிப்பட்ட இல்லறத்தில் பிறக்கும் குழந்தைகள்தான் நிறைவு பெற்ற, பாதுகாக்கப்பட்ட இஸ்லாமியத் தலைமுறையாக உருவாகிறார்கள்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அமைந்த இந்த இயற்கையான, நிரந்தரமான தொடர்பை மிகத் துல்லியமாக வர்ணிக்கிறது அல்குர்ஆன். அந்த வர்ணிப்பில் மன நிம்மதி, பாதுகாப்பு மற்றும் ஆறுதலின் அழைப்புகள் பரவி நிற்கின்றன. கருணை, அன்பு மற்றும் புரிந்துணர்வின் நறுமணம் அங்கே கமழ்கிறது.
நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்க ளுக்கு இவற்றில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அர்ரூம் 30:21)

திருமணம் என்பது ஆன்மாவை ஆன்மா வுடன் இணைக்கும் உறுதிமிக்க ஒரு பந்தமாகும். இதில் பாசத்துடன் கூடிய கருணை மற்றும் தூய்மையான அன்பு செழிப்புற்று விளங்குகின்றன. நேசமும் இதமும் மிக்க இந்த இல்லறத்தில் ஆண், பெண் இருவரும் மன நிம்மதி, மன மகிழ்ச்சி, மற்றும் பாதுகாப்பு எனும் அருட்கொடைகளை முழுமையாகப் பெறுகிறார்கள். இதற்காகத்தான் அல்லாஹ் இரு ஆன்மாக்களுக்குமிடையே திருமணப் பந்தத்தை ஏற்படுத்துகிறான்.

நல்ல பெண் இந்த உலக வாழ்வின் சிறந்த இன்பம் என்றும் ஓர் ஆணுக்கு அல்லாஹ் வழங்கும் மகத்தான அருட்கொடை அந்தப் பெண்ணே என்றும் இஸ்லாம் கூறுகிறது. ஏனென்றால், ஒரு கணவன் தன் வாழ்வில் துன்பங்களையும் சோதனைகளையும் சிரமங்களையும் சந்தித்த நிலையில் இல்லம் திரும்பும் போது, தன் மனைவியிடம்தான் நிம்மதியையும் மனஆறுதலையும் இன்பத்தையும் அடைகிறான். இந்த இன்பத்திற்கு இணையாக உலகில் வேறெந்த இன்பமும் இருக்க முடியாது.

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியது எவ்வளவு உண்மையாக உள்ளது!

‘‘உலகம் அனைத்தும் இன்பமே. அதன் இன்பத்தில் மிகச் சிறந்தது நல்ல பெண்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
இப்படித்தான், திருமணம் அதன் உயர்ந்த, பிரகாசமிக்க தரத்தில் அமைய வேண்டும் என இஸ்லாம் கருதுகிறது. அவ்வாறே, பெண்ணையும் அவளது பெண்மையின் மிக உயர்ந்த தரத்தில் வைத்து இஸ்லாம் பார்க்கிறது.


முஸ்லிம் தேடும் மனைவி:

பெண்ணைக் குறித்தும் திருமணத்தைக் குறித்தும் இஸ்லாம் போதிக்கும் உயர்வான கண்ணோட்டத்தின்படி செயல்பட விரும்பும் ஒரு முஸ்லிமை, வெறும் வெளி அலங்காரங்களை மட்டுமே கொண்ட இந்தக் கால இளம் பெண்கள் எவரும் கவர்ந்திட முடியாது. மாறாக, முழுமையான மார்க்கப்பற்றுள்ள பெண்கள்தான் அந்த முஸ்லிமை ஈர்க்க முடியும். ஆகவே, தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் தம் மண வாழ்வை நிம்மதியானதாகவும், மகிழ்ச்சி கரமானதாகவும் ஆக்கக்கூடிய இஸ்லாமிய நற்பண்புகள் மிக்க பெண்ணையே அவர் தேர்ந்தெடுப்பார் அதில் நிதானத்தையும் கடைப்பிடிப்பார். கொள்கையற்று வீணான இளைஞர்களைப் போன்று வெறும் அழகையும், அலங்காரத்தையும், கவர்ச்சி யையும் மட்டுமே அவர் நோக்கமாகக் கொள்ளமாட்டார். அதற்கெல்லாம் மேலாக உறுதிமிக்க மார்க்கப்பற்று, சிறந்த அறிவு, அழகிய பண்பாடுகளை உடைய பெண்ணைத் தான் முஸ்லிம் தேடுவார். மேலும், இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை கருத்தில் கொள்வார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நான்கு (நோக்கங்களு)க்காக ஒரு பெண் மணமுடிக் கப்படுகிறாள். அவளது செல்வத்துக்காக, அவளது குடும்பப் பாரம்பரியத்துக்காக, அவளது அழகுக்காக, அவளது மார்க்கத்திற்காக. நீ மார்க்கமுடையவளையே தேடிப் பெற்றுக் கொள்! உன் இருகரங்களும் மண்ணாகட்டும்!'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

(வாழ்த்துகிற பொழுது ‘உன் இருகரங்கள் மண்ணாகட்டும், உன் நெற்றி மண்ணாகட்டும்' என்றெல்லாம் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அதற்கு அதிகமதிகம் அல்லாஹ்விற்குச் சிரம் பணி(ந்து ஸஜ்தா செய்)யட்டும் என்பது பொருளாகும்.)
மார்க்கத்தைப் பேணக்கூடிய பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு உபதேசித்தது, அழகான பெண்ணைத் தேர்ந்தெடுக்கக்கூடாது என்ற கருத்தில் அல்ல. ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் திருமணத்துக்கு முன் பெண்ணைப் பார்த்துக் கொள்வதும் விரும்பத்தக்கதே என்று கூறியிருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் தமது மனதுக்கு மகிழ்ச்சியளிக்காத, கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்காத பெண்ணை மணந்து சிரமத்தில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே திருமணத்திற்கு முன் பெண்ணைப் பார்த்துக்கொள்ளவும் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

முகீரா இப்னு ஷுஅபா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் காலத்தில், நான் ஒரு பெண்ணை மணம் முடிக்கப் பேசினேன். நபி (ஸல்) அவர்கள் ‘அந்தப் பெண்ணைப் பார்த்தீரா?' என்று கேட்டார்கள். நான் ‘இல்லை' என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘அவளைப் பார்த்துக் கொள்! அது உங்களிடையே நேசத்தை ஏற்படுத்துவதற்கு மிக ஏற்றமாக இருக்கும்'' என்று கூறினார்கள். (ஸுனனுன் நஸாம்)

அன்சாரிப் பெண்ணை மணந்து கொள்ள இருந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி (ஸல்) அவர்கள், அவரிடம் ‘அப்பெண்ணைப் பார்த்தாயா?' என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை' என்றார். ‘அப்பெண்ணைப் பார்த்துக் கொள்!' என அவருக்கு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். (ஸுனனுன் நஸாம்)
ஒரு நல்ல பெண்ணிடம், விரும்பத்தகுந்த ஆன்மிகப் பண்புகளை ஓர் ஆண் எதிர்பார்ப்பது போன்றே அவள் அழகானவளாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இயற்கையான ஒன்றுதான். இதை நபி (ஸல்) அவர்கள் பல ஹதீஸ்களில் உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்த இரண்டில் ஒன்று இருப்பதால் மற்றொன்று தேவையில்லை என்றாக முடியாது.

இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்குக் கூறினார்கள்: ‘‘மனிதன் பொக்கிஷமாகக் கருத வேண்டியதில் மிகச் சிறந்ததை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நல்ல பெண். கணவர் அவளைப் பார்த்தால், அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளைவிட்டும் சென்றுவிட்டால் அவரைப் பாதுகாத்துக் கொள்வாள்.'' (முஸ்தத்ரகுல் ஹாகிம்)

(இந்த இடத்தில், மனைவி தனது கற்பைப் பாதுகாப்பதையே கணவரைப் பாதுகாப்பதென்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.)

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ‘பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?' என கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கணவர் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். அவர் ஏவினால் கட்டுப்படுவாள். அவரது பொருளிலும் அவளது ஆன்மாவிலும் அவர் வெறுக்கும் காரியங்களிலும் அவருக்கு மாறு செய்ய மாட்டாள்' என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மது)

கணவருக்கு நிம்மதியையும் மகிழ்ச்சி யையும் நற்பாக்கியத்தையும் வழங்க ஆற்றல் பெற்ற மனைவியின் தனித்தன்மையைப் பற்றி நபியவர்களின் உயர்ந்த கண்ணோட்டமாகும் இது. இத்தகைய பெண்ணே இல்லறத்தில் திருப்தி, அமைதி, மன மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை வழங்கவும் ஆற்றல் பெற்றவள். அது மட்டுமின்றி பல தலைமுறைகளுக்குச் சிறந்த பயிற்சியாளராகவும் வீரர்களை உருவாக்குபவராகவும் மேதைகளை உற்பத்தி செய்பவராகவும் விளங்குவாள்.

உடல், உணர்வு, ஆன்மா, அறிவின் தேட்டங்களுக்கு ஏற்ப உறுதிமிக்க, சமநிலை பெற்ற அடிப்படையின் மீதே திருமணம் என்ற மாளிகை நிர்மாணிக்கப்பட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் ஆசைப்பட்டார்கள். அப்போதுதான் திருமண உறவு பலமாக அமைந்து வெறுப்புணர்வும் மனக்கசப்பும் அதை அசைத்து விட முடியாமல் இருக்கும். ஆகவே, எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தையே பின்பற்றும் உண்மை முஸ்லிம் தீயகுணமுள்ள அழகிய பெண்ணின் வலையில் சிக்கிவிட மாட்டார். மாறாக, அவளைவிட்டும் தாமும் விலகி மக்களையும் எச்சரிப்பார்.


மணவாழ்வில் இஸ்லாமிய வழி காட்டலைப் பின்பற்றுவார்:

உண்மை முஸ்லிம் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ச்சி செய்தால் நிச்சயமாக, அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன.

இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.

இதோ, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆண்களை எச்சரிக்கிறார்கள்:

‘‘பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

‘‘பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

‘‘பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்! அவளை நீ நேராக்க முயன்றால் ஒடித்து விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளைத் ‘தலாக்' விடுவதாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

இலக்கிய நயமான இந்த உதாரணத்தில் பெண்ணின் இயற்கைத் தன்மைகளையும் பண்புகளையும் மிகத் துல்லியமாக நபி (ஸல்) அவர்கள் விவரித்துள்ளார்கள். மனைவி என்பவள் கணவர் விரும்புவது போன்று ஒரே நிலையில் சீராக இருக்கமாட்டாள். அவளிடம் சில கோணலான பண்புகளும் இயல்பாகவே அமைந்திருக்கும். இதைக் கணவர் விளங்கிக் கொள்ள வேண்டும். பூரணமானது அல்லது சரியானது என, தாம் நினைக்கும் முறையில் அவளைத் திருத்திவிட முயலக் கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவளை, அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது, ‘விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்' என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.

நபி (ஸல்) அவர்கள் பெண்ணின் மன நிலைiயும் இயற்கைப் பண்புகளையும் ஆழமாக விளங்கி விவரித்திருக்கிறார்கள். இந்த வழிகாட்டுதலை உள்ளத்தில் ஏற்றுள்ள உண்மை முஸ்லிம், தமது மனைவியின் குறைகளை சகித்துக்கொள்வார். அவளது சிணுங்கல்களைப் பொருட்படுத்த மாட்டார். அதன் மூலம் அவரது இல்லறம் சண்டை, சச்சரவு, வாக்குவாதம், கூச்சல் இல்லாத மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி நிறைந்த இன்பப் பூங்காவாகத் திகழும்.

சற்றுமுன் கூறப்பட்ட நபிமொழியை ஆய்வு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது நபி (ஸல்) அவர்கள், ‘பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று ஆரம்பித்து, பிறகு அவளது இயல்புகளை விவரிக்கிறார்கள். அதன் பின், மீண்டும் தாம் ஆரம்பித்த முந்தைய வார்த்தையைக் கூறியே முடிக்கிறார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் பெண்ணுக்கு எந்தளவு முக்கியத் துவம் அளித்துள்ளார்கள் அவளது இயல் பைப் பற்றி எந்தளவு ஆழமாக விளங்கி இருக்கிறார்கள் அவள் மீது எந்தளவு இரக்கம் கொண்டுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள்!

நபி (ஸல்) அவர்களின் இந்த மேலான வழிகாட்டுதல்களை எல்லா நிலைகளிலும் முன்மாதியாக அமைத்து செயல்படுவதைத் தவிர ஓர் உண்மை முஸ்லிமுக்கு வேறு ஏதேனும் வழியுண்டோ!
பெண்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்ததால்தான் தமது இறுதி ஹஜ்ஜின் பேருரையிலும் பெண்களைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் உபதேசிக்க மறந்துவிடவில்லை. முஸ்லிம்களுக்கு எவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமோ அவை அனைத்தையும் கூறுவதற்கான கடைசி வாய்ப்பாக இறுதி ஹஜ்ஜுப் பேருரையைப் பயன்படுத்தினார்கள். அந்த உரையின் ஆரம்பமே பெண்களைப் பற்றியதாக அமைந்திருப்பது, அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அறிந்து கொள்ளுங்கள்! பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். அதைத்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியாது அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர! அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களை காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.'' (ஜாமிவுத் திர்மிதி)

நபியவர்களின் இந்த உபதேசத்தை ஒவ்வொரு உண்மை முஸ்லிமும் நிச்சயமாக செவிமடுப்பார். கணவன், மனைவி இருவரின் உரிமைகள், கடமைகள் குறித்து நபி (ஸல்) அவர்கள் எத்துணை நுட்பமாக வழிகாட்டியுள் ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வார். இதில் குறிப்பாக பெண்கள் மீது கருணை, அன்பு காட்டுவது, அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது பற்றி நபி (ஸல்) வலியுறுத்தியுள்ளார்கள். ஆகையால், முஸ்லிம்களின் வீடுகளில் பெண்கள் மீது அநீதி இழைக்கப்படுவது அல்லது அவர்களுக்கு இடையூறு செய்யப்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் அறவே இருக்காது.

பெண்ணைப் பேணுவதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய உபதேசங்கள் ஏராளமானவை. தமது மனைவியிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்பவர்தான் இச்சமுதாயத்தின் சிறந்தோல் ஆக முடியும் என்கிற அளவிற்கு நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நம்பிக்கையாளர்களில் நம்பிக்கையில் (ஈமானில்) பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே! உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியடத்தில் சிறந்தோரே!''(ஜாமிவுத் திர்மிதி)
இந்த நபிமொழி, ‘பரிபூரண நம்பிக்கை யாளர் மிக நேர்த்தியான குணத்தைக் கொண்டிருக்க வேண்டும் அந்த குணமில்லாமல் பரிபூரண நம்பிக்கையை அடைய முடியாது நாம் யாரை நம்மில் சிறந்தவராக கருதுகிறோமோ அவர், தம் மனைவிக்கும் சிறந்தவராக விளங்க வேண்டும் நம்மிடத்தில் சிறந்தவராக இருந்து மனைவியிடத்தில் சிறந்தவராக இல்லை யென்றால் உண்மையில் அவர் நம்மில் சிறந்தவரல்லர்' என்று வலியுறுத்துகிறது.

சில பெண்கள் தங்களுடைய கணவர்களைப்பற்றி முறையிடுவதற்காக நபி (ஸல்) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆண்களின் காதுகளுக்கு எட்டும் விதமாக ‘‘முஹம்மதின் குடும்பத்தாரிடம் சில பெண்கள் தங்களது கணவன்மாரைப்பற்றி முறையிட வருகிறார்கள். அந்தக் கணவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்'' என்று கூறினார்கள். (ஸுனன் அபூதாவூது)

நேரிய மார்க்கமான இஸ்லாம், பெண்ணுக்கு நீதி வழங்குவதிலும் அவளைக் கண்ணியப் படுத்துவதிலும் ஏனைய மார்க்கங்களைப் பார்க்கிலும் மிக உயர்ந்தே நிற்கிறது. அவளைக் கணவன் வெறுத்தாலும் அவளுடன் நல்ல முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் என உபதேசிக்கிறது. பெண்கள், தங்களது வரலாற்றில் இஸ்லாமைத் தவிர வேறெங்கும் இந்தக் கண்ணியத்தை அடைந்து கொண்டதே கிடையாது.

மேலும், ‘‘அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.'' (அன்னிஸா 4:19)

இந்த இறைவசனம் உண்மை முஸ்லிமின் உள்ளுணர்வைத் தொட்டுப் பேசுகிறது. அவரது கோபத்தின் கொதிப்பைத் தணிக்கிறது தம் மனைவி மீதான வெறுப்பின் வேகத்தைக் குறைக்கிறது. ஆகவே, இதன் மூலம் மண வளையம் துண்டிக்கப்படுவதிலிருந்து இஸ்லாம் அதைப் பாதுகாக்கிறது. இங்குமங்கும் அலைபாயும் மடத்தனமான எண்ணங்களாலும், மாறிக் கொண்டே இருக்கும் சுபாவத்தினாலும் தூய்மையானத் திருமண உறவில் பங்கம் ஏற்படுவதை விட்டும் கட்டிக்காக்கிறது.

தம் மனைவியின் மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டதால் அவளை விவாகரத்துச் செய்யப் போவதாக கூறிய மனிதருக்கு உமர் (ரழி) அவர்கள் ‘‘உனக்கென்ன கேடு! இல்லறம் அன்பின் மீதுதானே அமைக்கப்படுகிறது. அதில், பராமரிப்பும் புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும்?'' என்று அறிவுரை கூறினார்கள்.

இஸ்லாமில் திருமண ஒப்பந்தம் என்பது அற்பமான உணர்வுகளின் வெளிப்பாடோ அல்லது இயற்கை ஆசையைத் தணித்து விட்டுப் போவதற்கான வழியோ அல்ல. மாறாக, இதற்கெல்லாம் மேலாகத் தூய்மை யானதும் மிகக் கண்ணியமானதுமாகும்.

உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் அமைந்திருக்கும். அந்தப் பண்புகள் தமது மனைவியிடம் காணப்படும் வெறுக்கத்தகுந்த குணங்களைச் சகித்துக் கொள்ளும் பக்குவத்தை அவருக்கு அளிக்கும்.

உண்மை முஸ்லிம் தமது இறைவனின் கட்டளையைப் பின்பற்றுவார். மனைவியின் மீது வெறுப்புள்ளவராக இருந்தாலும் நல்லுற வையே கடைப்பிடிப்பார். தமது இறைவனின் கூற்றுக்கிணங்க தம்மை அமைத்துக் கொள்வார். ஏனென்றால், மனிதன் சில விஷயங்களை வெறுத்து அதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால், உண்மையில் அவை நன்மைகளால் சூழப்பட்டதாகவும், நல்லதை உள்ளடக் கியதாகவும் அமைந்திருக்கும்.

எனவே உண்மை முஸ்லிம், எப்படி நேசிக்க வேண்டும், எப்படி வெறுக்க வேண்டும் என்பதையெல்லாம் அறிந் திருப்பார். நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்கவும் மாட்டார். அதே சமயம், வெறுப்பவர் மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தையும் வெளிப்படுத்த மாட்டார். நேசிப்பிலும் வெறுப்பிலும் நீதமான நடுநிலையைக் கொண்டிருப்பார்.

‘‘முஸ்லிமான பெண்ணை அவளது கணவர் எவ்வளவுதான் வெறுத்தாலும் அவளிடம் விரும்பத்தகுந்த பல நற்குணங்கள் இருந்தே தீரும். எனவே, அந்தக் கணவர் தமது மனைவியிடம் தமக்கு திருப்தி அளிக்கும் நற்குணங்கள் இருப்பதை மறந்துவிடக் கூடாது. அவளிடம் உள்ள வெறுக்கத்தக்க குணங்களைச் சுட்டிக் காட்டித் திருத்தவும் தவறக்கூடாது'' என மகத்தான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)


முன்மாதிரி கணவர்:

மனைவியிடம் நீதமான அழகிய நடத்தையைக் கொண்டிருக்க வேண்டுமென இந்த ஆதாரங்கள் அனைத்தும் வலியுறுத்துவதை உண்மை முஸ்லிம் அறிந்திருப்பார். எனவே, நிச்சயமாக அவர் ஒரு முன்மாதிரி கணவராகத் திகழ்வார். காலமும் வயதும் எவ்வளவு நீண்டாலும் அவன் மிருதுவான குடும்ப வாழ்க்கையில் இன்புற்று, அவன் உன்னதமான பண்பட்ட உயர்ந்தத் தோழமையில் வாழ்வதை அவரது மனைவி பாக்கியமாகக் கருதுவாள்.

வீட்டினுள் நுழைந்தால் அவர் தமது மனைவி, மக்களை முகமலர்ச்சியுடன் அணுகுவார் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார் அவர்களைப் பார்த்து புன்முறுவல் பூப்பார். அல்லாஹ் ஏவிய பிரகாரம் அழகிய முகமனைக் கூறியபடி அவர்களைச் சந்திப்பார். அந்த முகமனை இஸ்லாமிற்கு மட்டும் உரித்தான உயரிய தனித்துவமிக்கதாக அல்லாஹ் ஆக்கி இருக்கின்றான்.
‘‘(நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவு உண்பதில்) குருடன் மீதும் குற்றமாகாது நொண்டி மீதும் குற்றமாகாது நோயாளி மீதும் குற்றமாகாது உங்கள் மீதும் குற்றமாகாது. நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தைகள் வீட்டிலோ அல்லது உங்கள் தாய்மார்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சகோதரிகள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீட்டிலோ அல்லது உங்கள் தாயினுடைய சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தாயுடைய சகோதரிகள் வீட்டிலோ அல்லது சாவி உங்கள் வசமிருக்கும் வீட்டிலோ அல்லது உங்கள் தோழர்கள் வீட்டிலோ நீங்கள் (உணவு) புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது. இதில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புசித்தாலும் சரி, தனித் தனியாகப் புசித்தாலும் சரியே (உங்கள் மீது குற்றமில்லை). ஆனால், நீங்கள் எந்த வீட்டில் நுழைந்த போதிலும் அல்லாஹ்வினால் உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட மிக்க பாக்கியமுள்ள பரிசுத்தமான (ம்ஸலாமுன்' என்னும்) வாக்கி யத்தை நீங்கள் உங்களுக்குள் (ஒருவருக்கு மற்றொருவர்) கூறிக் கொள்ளவும். இவ்வாறே இறைவன் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை விவரித்துக் கூறுகிறான்! (என்பதை) நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!'' (அன்னூர் 24:61)

இந்த முகமனைக் கூறும்படி நபி (ஸல்) அவர்களும் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

அனஸ் (ரழி) அவர்களிடம், ‘‘என் அருமை மகனே! நீ உனது குடும்பத்தாரிடம் சென்றால் ஸலாம் கூறிக் கொள். அது உனக்கும் உனது குடும்பத்தாருக்கும் அருளாக அமையும்'' என்று உபதேசித்தார்கள். (ஜாமிவுத் திர்மிதி)

ஒரு மனிதர் தமது குடும்பத்தாரை ஸலாம் கூறிச் சந்திப்பது எவ்வளவு அருள்வள- மிக்க (பரக்கத்) காரியம்! இவ்வாறு சந்தித்து குடும்பத்தினரின் வாழ்வை மகிழ்ச்சியும் குதூகலமும் நிம்மதியும் உடையதாக ஆக்கி, இல்லத்தில் அன்பையும் அருளையும் திருப்தியையும் ஏற்படுத்துகிறார்.

ஒரு கணவர் தமது மனைவிக்கு ஏதேனும் உதவி தேவை இருப்பின் அவளுக்கு உதவ வேண்டும். வேலைப் பளுவின் காரணமாக அவளுக்குகளைப்பு, சடைவு, சஞ்சலம் ஏற்பட்டால் மென்மையாகப் பேசி அவளுக்கு ஆறுதலும் ஆனந்தமும் அளிக்கவேண்டும்.

'தான் ஒரு சங்கைமிக்க உயர்ந்த குணமும் வலிமையும் கொண்ட கணவன் நிழலில் இருக்கிறோம்' என்ற உணர்வை தம் மனைவியின் உள்ளத்தில் ஏற்படுத்த வேண்டும். அவளைப் பாதுகாத்துப், பராமரித்து அவளது காரியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தமது சக்திக்கு ஏற்ப அவளது முறையானத் தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும். மார்க்கம் அனுமதியளித்த அலங்காரங்களைக் கொண்டு தம்மை அழகுபடுத்திக் கொண்டு அவளது பெண்மையை மகிழ்விக்க வேண்டும். தமது தேவைகள் அல்லது நண்பர்கள் அல்லது பொழுதுபோக்குகள் அல்லது படிப்புகள் என்று தம்மை ஈடுபடுத்திக்கொண்டு நேரம் அனைத்தையும் அவற்றில் மட்டும் செலவிட்டுவிடாமல் மனைவியின் தேவைக்கெனவும் நேரங்களை ஒதுக்க வேண்டும்.

கணவன் மூலம் சுகமனுபவித்துக் கொள்ளும் விஷயத்தில் மனைவியின் உரிமைக்கு இஸ்லாம் பொறுப்பேற்றுள்ளது. எனவேதான், அவர் தமது அனைத்து நேரங்களையும், தொழுகை, நோன்பு, திக்ரு போன்ற காரியங்களிலேயே சிறந்த வணக்க வழிபாடுகளில் செலவிடுவதைக் கூட இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஏனென்றால், இது இந்த மகத்தான மார்க்கம் நிர்ணயித்துள்ள சமநிலைப் பேணுதல் என்ற அடிப்படைக்கு எதிராகும். இக்கருத்தை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்த நபிமொழியில் காண்கிறோம்.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸின் அளவுக்கதிகமான வணக்கங்களைப் பற்றி அறிந்த நபி (ஸல்) அவர்கள் ‘‘நீர் பகல் முழுவதும் நோன்பு நோற்று இரவு முழுவதும் நின்று வணங்குவதாக நான் கேள்விப்பட்டேனே?'' என்று கேட்டார்கள். அவர் ‘‘ஆம் அல்லாஹ்வின் தூதரே!'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படிச் செய்யாதீர். நோன்பு வையுங்கள் நோன்பின்றியும் இருங்கள்! தொழவும் செய்யுங்கள் தூங்கவும் செய்யுங்கள்! நிச்சயமாக உங்கள் உடலுக்கும், உங்கள் இரு கண்களுக்கும், உங்கள் மனைவிக்கும், உங்களைச் சந்திக்க வருபவர்களுக்கும் நீங்கள் செலுத்த வேண்டிய கடமைகள் உள்ளன'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

உஸ்மான் இப்னு மள்வூனின் மனைவி கவ்லா பின்த் ஹகீம் (ரழி), நபி (ஸல்) அவர்களின் மனைவியரிடம் அலங்கோலமான ஆடையுடன், அழகற்ற நிலையில் வந்தார். அதைக் கண்ட அன்னையர், ‘‘உனக்கு என்ன நேர்ந்தது? (ஏன் இந்தக் கோலத்தில் இருக்கிறாய்)'' என்று கேட்டார்கள். கவ்லா (ரழி) தமது கணவரைப் பற்றி ‘‘அவர் இரவு நேரங்களில் நின்று வணங்குகிறார் பகல் காலங்களில் நோன்பு வைக்கிறார்'' என பதிலளித்தார். அன்னையர், நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் இப்னு மள்வூனைக் கண்டித்தவர்களாக ‘‘என்னி டத்தில் உமக்கு முன்மாதிரி இல்லையா?'' என்றார்கள். அவர் ‘ஆம்' இருக்கிறது. ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னை உங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்'' என்றார்கள். அதற்குப் பிறகு கவ்லா (ரழி) மணம் பூசி அலங்காரமாக வந்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் ‘‘உஸ்மானே! நமக்கு துறவறம் விதிக்கப்பட வில்லை என்னிடம் உமக்கு முன்மாதிரி இல்லையா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களில் அதிகமாக அல்லாஹ்வை அஞ்சுகிறவன் உங்களில் அதிகமாக அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணுகிறவன் நான்தான்'' என்று கூறினார்கள். (தபகாத் இப்னு ஸஅத்3/394)

ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் தங்களது அழகிய வழிமுறையைத் தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்து குடும்ப வாழ்க்கையிலும் வணக்க வழிபாட்டிலும் எவ்வாறு நடுநிலை யுடன் நடக்க வேண்டும் என்று வழி காட்டினார்கள். ஆகவேதான், மார்க்கத்தில் நடுநிலையைக் கையாளும் குணம் நபித்தோழர்களின் இயற்கைப் பண்புகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. அவர்களில் ஒருவர் இதற்கு மாறு செய்யும்போது மற்றவர் அதைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவார்கள்.

அபூஜுஹைஃபா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘ஸல்மான் ஃபார்ஸி (ரழி) அவர்களுக்கும் அபுத்தர்தா (ரழி) அவர்களுக்குமிடையே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்தி இருந்தார்கள். அபுத்தர்தா (ரழி) அவர்களைச் சந்திக்க ஸல்மான் (ரழி) சென்றிருந்தார்கள். அங்கு அவர்களது மனைவி மிக சாதாரண ஆடையில் இருந்தார். அவரைப் பார்த்த ஸல்மான் (ரழி) ‘‘உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். அதற்கவர் ‘‘உமது சகோதரர் அபுத்தர்தாவுக்கு இந்த உலகில் எதுவும் தேவையில்லை'' என்றார்.

வெளியிலிருந்து வந்த அபுத்தர்தா உணவு தயார் செய்து ஸல்மான் (ரழி) அவர்களிடம் ‘‘நீங்கள் சாப்பிடுங்கள் நான் நோன்பு நோற்றிருக்கிறேன்'' என்றார். அதற்கு ஸல்மான் (ரழி) அவர்கள் ‘‘நீர் சாப்பிடாதவரை நானும் சாப்பிடமாட்டேன்'' என்று மறுத்துவிட்டார். பின்னர் அபுத்தர்தா (ரழி) அவர்களும் சேர்ந்து சாப்பிட்டார்கள். இரவில் அபுத்தர்தா (ரழி) நின்று வணங்க ஆயத்தமானார். ஸல்மான் (ரழி) ‘‘தூங்குங்கள்'' என்று கூறியவுடன் தூங்கிக் கொண்டார். பின்பும் அபுத்தர்தா (ரழி) தொழ முயன்ற போது ‘‘தூங்குங்கள்'' என ஸல்மான் (ரழி) கூறினார்கள்.

இரவின் கடைசிப் பகுதி வந்ததும் ஸல்மான் (ரழி) அவர்கள் ‘‘இப்போது எழுந்திருங்கள்'' என்று கூற, இருவரும் எழுந்து தொழுதார்கள். அபுத்தர்தா (ரழி) அவர்களிடம் ‘‘உமது இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமையும் உண்டு உமது உயிருக்கு நீர் செய்ய வேண்டிய கடமையும் உண்டு உமது குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய கடமையும் உண்டு ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய கடமையை நிறைவேற்றுங்கள்'' என்று ஸல்மான் (ரழி) கூறினார்கள்.

பிறகு அபுத்தர்தா (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் ‘‘ஸல்மான் சரியானதையே (உண்மையே) உரைத்தார்'' என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அறிவும் இறையச்சமும் நன்னடத்தையும் கொண்ட முஸ்லிம் தமது மனைவியுடனான இல்லறத்தை பசுமையாக வைத்திருக்க வேண்டும். இன்பமூட்டும் விளையாட்டினாலும் ஆனந்தமூட்டும் வார்த்தைகளாலும் தமது மனைவிக்கு அவ்வப்போது மகிழ்ச்சி யூட்டி, தங்கள் இருவடையே உள்ள உறவைச் செழிப்பாக்க வேண்டும். இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களை முன்மாதியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மார்க்கத்தை நிலைநிறுத்துவது, முஸ்லிம் சமுதாயத்தை உருவாக்குவது, அறப் போருக்காக ராணுவத்தைத் தயார்படுத்துவது, இன்னும் இதுபோன்ற எத்தனையோ பல முக்கியமான பொறுப்புகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தும் இப்பொறுப்புகள் எல்லாம் நபியவர்களை ஒரு முன்மாதிக் கணவராக இருப்பதை விட்டும் தமது மனைவியருடன் அழகிய பண்புகளுடனும் பரந்த மனதுடனும் பழகி, அவர்களுடன் கொஞ்சி விளையாடு வதை விட்டும் தடுக்கவில்லை.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் சாப்பிடு வதற்காக ‘ஹரீர்' என்ற உணவைச் சமைத்து எடுத்துக் கொண்டு வந்தேன். நபி (ஸல்) அவர்கள் எனக்கும் ஸவ்தா (ரழி) அவர்களுக்கும் மத்தியில் அமர்ந்திருந் தார்கள். நான் ஸவ்தாவிடம் ‘‘சாப்பிடுங்கள்!'' என்று கூறினேன். ஸவ்தாவோ (ரழி) மறுத்துவிட்டார். ‘‘கண்டிப்பாக அதைச் சாப்பிட்டே ஆக வேண்டும். இல்லையெனில், அதை உங்கள் முகத்தில் பூசிவிடுவேன்'' என்றேன். ஆனாலும் அவர் மறுத்துவிட்டார். நான் ஹரீராவை எடுத்து நன்றாக அவரது முகத்தில் பூசிவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் சிரித்தவர்களாக தமது கரத்தால் கொஞ்சம் ஹரீராவை எடுத்து ஸவ்தாவிடம் நீட்டி ‘‘ஆயிஷாவின் முகத்தில் நீ இதைப் பூசிவிடு'' என்றார்கள். (அல்ஹைஸமி)

மனைவியின் இதயத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு அழகிய நடத்தையுடன் இனிமை தரும் விதமாக செயல்பட்டதிலிருந்து அவர்களது நற்குணத்தையும் பெரியமனதையும் மலர்ந்த பண்பையும் நாம் புரிந்துகொள்ளலாம்.

ஒரு பயணத்தின் போது நபி (ஸல்) அவர்களோடு ஆயிஷா (ரழி) அவர்களும் இருந்தார்கள். இருவரும் ஓட்டப்பந்தயம் வைத்தபோது ஆயிஷா (ரழி) அவர்கள் முந்திவிட்டார்கள். ஆயிஷா (ரழி) அவர்களுக்குக் கொஞ்சம் சதைபோட்டப் பிறகு மீண்டும் இருவரும் ஓடினார்கள். அப்போது நபி (ஸல்) ஆயிஷாவை முந்திவிட்டார்கள். ‘‘இது அந்தப் பந்தயத்திற்குப் பதிலாகிவிட்டது'' என்று நபி (ஸல்) கூறினார்கள். இதை அன்னை ஆயிஷா (ரழி) அவர்களே தெரிவித்துள்ளார்கள். (ஸுனன் அபூதாவூது, முஸ்னது அஹ்மது)

தமது நேசமிகு இளம் மனைவியின் இதயம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக, அனுமதிக்கப்பட்ட விளை யாட்டுகளைக் காண்பித்து அதை அவர்கள் பார்த்து ரசித்ததைக் கண்டு நபி (ஸல்) அவர்களும் மகிழ்ந்தார்கள்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த போது சிறுவர்கள், பெரியவர் களின் ஆரவாரத்தைச் செவியுற்றார்கள். அங்கு சில ஹபஷி (நீக்ரோக்)கள் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். மக்கள் அவர்களைச் சூழ்ந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆயிஷாவே! இங்கு வந்து பார்'' என்றார்கள். எனது கன்னங்களை அவர்களது தோளின் மீது வைத்துக்கொண்டு, நான் அவர்களது புஜத்துக்கும் தலைக்கும் இடையிலிருந்து பார்த்தேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆயிஷாவே, உனக்குத் திருப்தியா? ஆயிஷாவே, உனக்குத் திருப்தியா?'' என்று கேட்க ஆரம்பித்தார்கள். என் மீது அவர்களுக்கு இருந்த நேசத்தை அறிந்து கொள்வதற்காக நான் ‘‘இல்லை'' என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (வலியின் காரணமாக) தங்களது இருபாதங்களில் ஒன்றை மாற்றி ஒன்றின் மீது நிற்பதைப் பார்த்தேன். (ஸுனனுன் நஸாம்)

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் நபி (ஸல்) அவர்களை என்னுடைய அறையின் வாசலில் நிற்கக் கண்டேன். ஹபஷிகள் சிலர் ஈட்டியைக் கொண்டு மஸ்ஜிதில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களின் காதுக்கும் தோளுக்கும் இடையிலிருந்து அந்த விளையாட்டைக் கண்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேலாடையால் மறைத்துக் கொண்டார்கள். நானாகத் திரும்பிச் செல்லும்வரை எனக்காக நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். விளையாட்டில் ஆர்வமுள்ள இளம் வயதுப்பெண் எவ்வளவு நேரம் வேடிக்கைப் பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுப் பாருங்கள்!'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் தங்களது மனைவி யரிடம் கொண்டிருந்த நல்லுறவு, நகைச்சுவை போன்ற பண்புகளைக் காணும் ஓர் உண்மை முஸ்லிம், தமது மனைவியிடம் நல்லவராகவும் அவளுக்கு உறுதுணையாகவும் அவளுடன் அன்பான குணமுடையவராகவும் மிருதுவான வராகவும் நடந்து கொள்வார்.

உண்மை முஸ்லிம் அற்பமானக் காரணங்களுக்கெல்லாம் கோபத்தை வெளிப்படுத்தும் மூடக்கணவர்களைப் போன்று நடந்து கொள்ளமாட்டார். விருப்பத்திற்கேற்ப உணவு தயார் செய்யவில்லை அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு பரிமாறவில்லை என்பது போன்ற அற்பமானக் காரணங்களுக்கெல்லாம் சிலர், வீட்டில் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தி விடுகின்றனர். ஆனால், நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி நடப்பவர் தமது ஒவ்வொரு நிலையிலும் நபி (ஸல்) அவர் களின் நற்பண்புகளை நினைவில் நிறுத்தி, அன்பும் நேசமும் பரந்த மனப்பான்மையும் கொண்ட கணவராகத் திகழ்வார்.

உண்மை முஸ்லிம் இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் நடத்தையை நினைவு கூர்வார். நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் குறை கூறியதே இல்லை. விரும்பினால் அதைச் சாப்பிடுவார்கள் பிடிக்கவில்லை என்றால் அதை விட்டுவிடுவார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் தங்களது மனைவியிடம் ஆணத்தைக் கொண்டு வரக் கூறினார்கள். குடும்பத்தினர் ‘‘எங்களிடம் காடி (வினிகர்) மட்டும்தான் இருக்கிறது'' என்றனர். நபி (ஸல்) அவர்கள் அதைக் கொண்டு வரச் சொல்லி ‘‘காடி மிகச் சிறந்த ஆணம் காடி மிகச் சிறந்த ஆணம்'' என்று கூறிக்கொண்டே சாப்பிட்டார்கள். (ஆணம் - குழம்பு) (ஸஹீஹ் முஸ்லிம்)

தங்களது மனைவியிடம் ஏற்படும் சிறிய குறைகளைப் பார்த்து கோபித்துக் கொள்பவர்கள் நன்கு கவனத்தில் வைத்துக் கொள்ளட்டும். உணவு தாமதமாகுதல், தான் விரும்பிய ருசியின்மை போன்ற காரணங்களுக்காக கோபப்படும்போது அந்த அப்பாவி மனைவியிடம் அக்குறை ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், சில சமயங்களில் அவளுக்குச் சில நிர்ப்பந்தங்கள் இருக்கலாம். அவற்றைத் தெரிந்து கொள்வதற்கு முன்பே பலர் கோபப்பட்டு விடுகிறார்கள்.

உண்மை முஸ்லிம், தம் மனைவியிடம் மட்டுமல்லாது அவளது உறவினர், தோழியரிடமும் நல்லுறவைக் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கும் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் ஆதாரம் இருக்கிறது.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு வயோதிகப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து செல்வார். ''நபி (ஸல்) அவர்கள் அந்த மூதாட்டியைக் கண்ணியப்படுத்தி அவரிடம் ‘‘நீர் எப்படி இருக்கிறீர்? உம் நிலை எப்படி இருக்கிறது? நமது சந்திப்பிற்குப் பிறகு எப்படி இருந்தீர்?'' என்று விசாரிப்பார்கள். அந்தப் பெண் ‘‘நலமாக இருக்கிறேன். என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ் வின் தூதரே!'' என்று கூறுவார்.

ஒரு நாள் அந்த மூதாட்டி வந்து சென்ற பிறகு அன்னை ஆயிஷா (ரழி) ‘‘இந்த மூதாட்டியை இந்தளவிற்கு நீங்கள் வரவேற்கிறீர்களே! நீங்கள் யாருக்குமே செய்யாத சில காரியங்களையெல்லாம் அவருக்குச் செய்கிறீர்களே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘இந்தப் பெண் நாங்கள் கதீஜா (ரழி) அவர்களின் வீட்டில் இருக்கும் போது எங்களைச் சந்திக்க வருவார். நேசிப்பவர்களைக் கண்ணியப்படுத்துவது ஈமானில் (நம்பிக்கையில்) கட்டுப்பட்டது என்பது உமக்குத் தெரியாதா?'' என்றார்கள். (முஸ்தத்ரகுல் ஹாகிம்)

சில சமயங்களில் மனைவி கணவர் மீது கோபப்படலாம். ஏதேனும் ஒரு காரணத்தால் ஆத்திரத்தை வெளிப்படுத்தலாம். இந்த மாதியான சந்தர்ப்பங்களில் பெண்ணின் குண இயல்புகளை ஒரு முஸ்லிம் ஆழ்ந்து அறிந்தவராக இருப்பதால், மிகுந்த சகிப்புத் தன்மையுடனும் அழகிய குணத்துடனும் அதை எதிர்கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் மனைவியரும் நபி (ஸல்) அவர்கள் மீது கோபித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் நபி (ஸல்) அவர்கள் சகித்துக் கொள்வார்கள். மனைவியரில் சிலர் இரவு வரையிலும் கூட நபி (ஸல்) அவர்களுடன் பேசாதிருப்பர்.

உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘குறைஷி குலத்தைச் சேர்ந்த நாங்கள், பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தோம். நாங்கள் மதீனா வந்தபோது அந்நகரப் பெண்கள், ஆண்கள் மீது ஆதிக்கம் கொண்டிருந்தார்கள். எங்களது குடும்பப் பெண்கள் அப்பெண்களிடம் பாடம் கற்றுக் கொண்டார்கள்.'' நான் மதீனாவின் மேட்டுப் பகுதியில் உமய்யா இப்னு ஜைத் கோத்திரத்தாருடன் வசித்து வந்தேன்.

ஒரு நாள் என் மனைவி என்மீது கோபப்பட்டு, என்னை எதிர்த்துப் பேசியது எனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அதற்கவர் ‘‘நான் உங்களை எதிர்த்துப் பேசியதற்காக நீங்கள் என்னை வெறுக்கிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் துணைவியர்கூட நபியவர்களின் பேச்சுக்கு மறுபேச்சு பேசத்தான் செய்கிறார்கள். அவர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் பகலிலிருந்து இரவு வரை பேசுவதில்லை'' என்று கூறினார்.

பின்பு நான் எனது மகள் ஹஃப்ஸாவிடம் சென்றேன். ‘‘ஹஃப்ஸாவே! நீ நபி (ஸல்) அவர்களை எதிர்த்துப் பேசுகிறாயா?'' என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘ஆம்'' என்றார். ‘‘உங்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம் பகலிலிருந்து இரவு வரை கோபமாக இருக்கிறார்களா?'' என்று கேட்டேன். அதற்கும் ஹஃப்ஸா ‘‘ஆம்'' என்றார். நான் கூறினேன்: ‘‘உங்களில் எவரேனும் அவ்வாறு செய்தால் நஷ்டமும் தோல்வியும் அடைந்து விடுவார்.

உங்களில் ஒருவர் மீது இறைத்தூதருக்குக் கோபம் ஏற்பட்டால், அதனால் அல்லாஹ்வும் கோபமடைவான். அதனால் ‘அவர் அழிந்துவிடுவார்' என்ற அச்சம் அவருக்கு இல்லையா? நீ இறைத்தூதரிடம் எதிர்த்துப் பேசாதே அவர்களிடம் எதையும் கேட்காதே உனக்குத் தேவையானதை என்னிடமே கேள்!'' என்று கூறினேன். பிறகு உமர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கும் தனது மகள் ஹஃப்ஸாவுக்கு மிடையே நடைபெற்ற உரையாடலைக் கூறியபோது நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்களை நற்பண்புகளிலும் செயல்பாடுகளிலும் பின்பற்ற நினைக்கும் முஸ்லிம், இதுபோன்ற நற்குணங்களைத் தமக்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இஸ்லாம் என்பது உயர்ந்த சமூக வாழ்க்கைக்குரிய மார்க்கம் என்பதை அவர் ஆதாரத்துடன் நிலை நாட்டியவராவார். மேலும், இன்று தனி மனிதர் அல்லது குடும்பம் அல்லது சமூகத்தில் ஏற்படுகின்ற அதிகமான பிரச்சினைகள், பிரிவினைகள், நெருக்கடிகள், குழப்பங்கள் அனைத்திற்கும் காரணம், இஸ்லாம் போதிக்கும் உயர்ந்த பண்புகளை விட்டும் தூரமாக இருப்பதுதான் அவற்றை அறியாமல் இருப்பதுதான் அவற்றின் மீது அவர்களுக்கு இருக்கும் தப்பான எண்ணம்தான். இதை மக்களுக்கு ஆதாரத்துடன் எடுத்துச் சொல்லவும் முடியும். உண்மையில் இஸ்லாம் போதிக்கக் கூடியவை அனைத்தும் மிக உயர்ந்த நற்பண்புகளாகும், நல்ல பழக்க வழக்கங்களாகும். கணவன் மனைவி இருவரும் இவற்றை மேற்கொள்ளும்போது சண்டை சச்சரவுகள், மனக்கசப்புகள் குடும்பத்தைவிட்டும் நீங்கிவிடும். இல்லங்களில் ஈடேற்றம், நற்பாக்கியம், நிம்மதி, மகிழ்ச்சி எனும் இறக்கைகள் சிறகடிக்கும்.


வெற்றிகரமான கணவர்:

மார்க்கப் பற்றுள்ள முஸ்லிமே சமூகத்தின் வெற்றிகரமான கணவராகவும் தூய்மைமிக்க, நல்ல மனைவியின் நேசத்திற்குரியவராகவும் திகழமுடியும். இஸ்லாமின் நேரிய வழி காட்டுதலின் காரணமாக அவர் தமது மனைவியிடம் மென்மையாகவும், மிருது வாகவும் நடந்து கொள்வார். நற்குணங்களால் நிரம்பிய இஸ்லாமிய வாழ்வியலை கடைப்பிடிக்க தமது மனைவிக்கு முழுமையாக வழிகாட்டுவார். மனைவியின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்து, அவளது நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதை நிறை வேற்றுவதில் தமது முழு ஆற்றலையும் வெளிப்படுத்துவார். பெண், விலா எலும்பினால் படைக்கப்பட்டவள் என்பதை யும் விலா எலும்பை நேராக்குவது அறவே சாத்தியமற்றது என்பதையும் ஒரு விநாடி கூட மறந்துவிடமாட்டார்.
மனைவியிடம் நுண்ணறிவுடன், விவேகத்துடன் நடந்து கொள்வார்.

உண்மை முஸ்லிம், தம் மனைவியிடம் நுண்ணறிவுடன், விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவளது குடும்பத்தார் எவரையும் அவளுக்கு முன் தவறாகப் பேசக் கூடாது. அவளது உறவினர் பற்றி அவளது இதயத்தைக் காயப்படுத்தும் படியான எந்த வார்த்தையையும் பேசிவிடக் கூடாது. கணவனும் இதில் கவனமாக இருக்க வேண்டும். மனைவியும் கணவனின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவருக்கு மன வருத்தம் தரும் எந்தக் காரியத்தையும் செய்துவிடாமல் இருக்க வேண்டும். அவரது குடும்பத்தாருக்கும் சொல்லாலோ செயலாலோ எவ்வித தீங்கும் இழைத்து விடாமல் நடந்துகொள்ள வேண்டும்.

தம்மிடம் தம் மனைவி வெளிப்படுத்திய ரகசியங்கள் எதையும் பிறரிடம் பகிரங்கப் படுத்தக்கூடாது. இதில் ஏற்படும் கவனக் குறைவும் அலட்சியமும் பல குடும்பங்களில் கணவன் மனைவியிடையே பிரச்சினைகளின் எமலையை வெடிக்கச் செய்து அவர்களிடையே நிலவும் அன்பொளியை அணைத்துவிடுகிறது. எல்லா நிலையிலும் இஸ்லாமின் தூய ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என்ற உறுதி உள்ள புத்திசாலியான முஸ்லிம் இவ்வாறான சூழல்களிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.


மனைவியின் குறைகளைச் சீராக்குவார்:

மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் தமது மனைவியின் கல்வியறிவிலோ நடத்தை ‘லோ ஏதேனும் குறைகளைக் கண்டால் அவளிடம் அறிவார்ந்த முறையில் மென்மையாக நடந்து, அவளது குறைகளைக் களைந்து, அவளைச் செம்மைப்படுத்துவதில் ஆர்வம் கொள்ள வேண்டும். அவளைப் பண்படுத்தும் முயற்சியில் அவளிடம் ஆர்வக் குறைவோ, வெறுப்போ வெளிப்பட்டால் அதை மென்மையாகவும் புத்திக் கூர்மையுடனும் எதிர்கொள்ள வேண்டும்.

எக்காரணத்தை முன்னிட்டும் பிறருக்கு மத்தியில் அவளைக் கண்டிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பெண்ணைக் கடுமையாகப் பாதிக்கும் விஷயம் என்னவென்றால், அவளைத் தண்டிப்பதைப் பிறர் பார்ப்பதும், அவளைக் கண்டிப்பதைப் பிறர் கேட்பதும்தான். இறையச்சமுள்ள முஸ்லிம், பிற மனிதர்களைவிட உணர்வால் மிக நுட்பமானவராக இருப்பார். அவ்வாறே மற்றவர்களின் உணர்வுகளையும் மிக அதிகமாக மதிப்பார்.


பெற்றோர் மற்றும் மனைவிக்கிடையே சமத்துவம் பேணுவார்:

நற்பண்புள்ள முஸ்லிம், தமது பெற்றோர் மற்றும் மனைவி இருவரையும் எப்படி திருப்திப்படுத்துவது என நன்கறிவார். இருவரில் எவருக்கும் அநீதி இழைத்து விடாமல், அந்த இருவருடனான உறவில் சமநிலை பேணி, பெற்றோருக்கு நோவினை அளிக்காமலும், மனைவிக்கு அநீதியிழைத்து விடாமலும் விவேகத்துடன் நடந்து கொள்வார்.

பெற்றோர்களிடம் நல்ல முறையில் நடந்து, உபகாரம் புரிந்து அவர்களது கடமையை நிறைவேற்றுவார். அவ்வாறே மனைவியின் கடமைகளையும் பூரணமாக நிறைவேற்றுவார். பெற்றோருக்கு உபகாரம் செய்வதாலும் அவர்களைப் பேணுவதாலும் மனைவியைப் புறக்கணித்து விடக்கூடாது.

உண்மை முஸ்லிம் இறையச்சமுடைய வராகவும் இஸ்லாம் போதித்த நற்பண்புடைய வராகவும் இருப்பதால், இவ்வாறு சமநிலை மேற்கொள்வதில் அவருக்குச் சிரமம் ஏதுமில்லை. இஸ்லாமிய மார்க்கம் பெற்றோர், மனைவியிடையே எவ்வாறு நீதமாக நடந்து, அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர்களுக் குரிய சரியான அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்பதை அவருக்குப் போதித்துள்ளது. எனவே, அதைப் பேணி நடப்பார்.


மனைவியைச் செம்மையாக நிர்வகிப்பார்:

இவ்வாறான உயரிய பண்புகள் மற்றும் அழகிய பழக்கவழக்கங்கள் மூலம் ஒரு முஸ்லிம், தமது மனைவியின் இதயத்தை கொள்ளை கொண்டிருப்பார். எனவே, அவள் அவருக்குப் பணிந்து, அவரது எந்தக் கட்டளைக்கும் மாறு செய்யாமல் நடந்து கொள்வாள்.

ஆணுக்குப் பெண்ணைவிட பல நற்பண்புகளை இஸ்லாம் கற்றுக் கொடுத்துள்ளது. பல தகுதிகளை வழங்கியுள்ளது, பல சட்டங்களையும் வழிமுறைகளையும் வகுத்துக் கொடுத்துள்ளது. இதனால் பெண்ணை நிர்வகிக்கும் தகுதியையும் ஆணே பெறுகிறார்.

ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்கள். காரணம், அவர்களில் (-ஆண்கள், பெண்களில்) சிலரை (-ஆண்களை) சிலரைவிட (-பெண்களை விட) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக் கின்றான். மேலும் ஆண்கள் தங்கள் பொருள்களை(ப் பெண்களுக்கு)ச் செலவு செய்கின்றனர். (அன்னிஸா 4:34)

இந்த நிர்வகிக்கும் அதிகாரத்திற்கென சில கடமைகளும் உள்ளன. கணவர் அந்தக் கடமைகள் குறித்து விசாரிக்கப்படுவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளர். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தனது குடும்பத்தின் பொறுப்பாளன். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தனது கணவன் வீட்டிற்குப் பொறுப்பாளர். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவாள். பணியாளன் தனது எஜமானனின் செல்வத்திற்குப் பொறுப்பாளன். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாக் கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே; தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஆம், சமுதாயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. அந்த ஒவ்வொருவரும் சமுதாயத்தைப் பற்றி ஏதேனும் ஒரு வகையில் விசாரிக்கப்படுவார். ஏனெனில், இஸ்லாமியப் பார்வையில் வாழ்க்கை என்பது முயலுதல், செயல்படுதல், உருவாக்குதல் ஆகும். அது வீண் கேளிக்கையோ நோக்கமற்ற ஒன்றோ அல்ல.

இஸ்லாம் பெண்களைப் பேண வேண்டிய விஷயத்தில் ஆண்களுக்குப் பல அறிவுரைகளைக் கூறியுள்ளது, மேலும், பெண்களின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளது. அவ்வாறே வாழ்வில் அவள், தான் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, மார்க்கம் பெண்ணுக்கு என நிர்ணயித்துள்ள வரம்புகளுக்குள் நிற்க வேண்டுமெனவும் கட்டளையிடுகிறது. அப்போதுதான் வருங்காலத் தலைமுறைகளை உருவாக்குவதிலும் வாழ்க்கையை இன்பத் தாலும் நற்பாக்கியத்தாலும் செழிப்பாக்கு வதிலும் தன் கணவனுடன் பங்கெடுத்துக் கொண்டு வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றியவளாவாள்.

இஸ்லாம், ஒரு கணவன் தன் மனைவியிடம் சிறந்த முறையில் நடக்க வேண்டுமென கூறும் அதே நேரத்தில், மனைவியும் அல்லாஹ் அனுமதித்த மற்றும் நீதமான செயல்களில் கணவருக்குக் கட்டுப்பட வேண்டுமெனவும் மிக உறுதியாக கட்டளையிடுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒருவர் மற்றவருக்கு ஸஜ்தா செய்ய வேண்டுமென நான் ஏவுவதாக இருந்தால், கணவருக்கு ஸஜ்தா செய்யுமாறு மனைவியை ஏவியிருப்பேன்.'' (ஜாமிவுத் திர்மிதி)

மேலும், மனைவி சொர்க்கம் செல்வதற்குக் கணவன் திருப்தியைப் பெற்றிருக்க வேண்டுமெனவும் இஸ்லாம் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எந்தப் பெண் கணவன் திருப்தியைப் பெற்ற நிலையில் மரணம் அடைகிறாளோ அவள் சொர்க்கம் செல்வாள்.'' (ஸுனன் இப்னுமாஜா)

கணவருக்குக் கட்டுப்படாத பெண், திருந்தி தனது கணவருடன் இணக்கமாக நடந்து கொள்ளும் வரை அவளை வானவர்கள் சபிக்கிறார்கள் என்று நபி (ஸல்) எச்சரித்துள்ளார்கள்.

நபி (ஸல்) கூறினார்கள்: ‘‘ஒரு பெண் தனது கணவன் படுக்கையை வெறுத்த நிலையில் இரவைக் கழிப்பாளாயின் விடியும் வரை வானவர்கள் அவளைச் சபிக்கிறார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஆண், பெண்ணை நிர்வகிப்பவர் பெண், ஆணைத் திருப்திப்படுத்த வேண்டும் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இதை உறுதி செய்யும் விதமாகவே ரமழான் அல்லாத காலங்களில் கணவன் அனுமதியின்றி நோன்பு நோற்கக் கூடாது என்றும், அவரது அனுமதியின்றி எந்தவொரு விருந்தினரையும் வீட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் இஸ்லாம் பெண்ணிற்கு வலியுறுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘கணவர் தன்னுடன் இருக்கும் போது அவரது அனுமதியின்றி (உபரியான) நோன்பு நோற்பது பெண்ணுக்கு ஆகுமானதல்ல. மேலும், கணவன் வீட்டில் அவரது அனுமதியின்றி எவரையும் அவள் அனுமதிக்கக் கூடாது.'' (ஸஹீஹுல் புகாரி)

உண்மையில் கணவர் ஓர் ஆண் மகனாக இருந்து குடும்பத்தைப் பாதுகாத்து, நேர்வழியின்பால் அழைத்துச் செல்ல தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பதால்தான் இஸ்லாம் ஆணுக்குப் பெண்ணை நிர்வகிக்கும் உரிமையைக் கொடுத்திருக்கிறது. மேலும், பெண்களின் குழப்பங்களுக்கு ஆண்கள் ஆளாகுவதைக் கடுமையாக எச்சரிக்கிறது. ஆண்கள், பெண்களின் குழப்பங்களுக்கு ஆளாகும் போது அவர்கள் கண்கள் குருடாகி விடுகின்றன் அவர்கள் வீரம் இழந்து விடுகின்றனர் மார்க்கத்தில் பலவீனமடைந்து விடுகின்றனர் நேரிய பாதையிலிருந்து தவறி விடுகின்றனர். இறுதியில் கடிவாளம் அவர்களது கையை விட்டு நழுவி, வழி தவறிய பெண்ணின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் குடும்பம் சிக்குண்டு விடுகிறது. பின்பு அவளது பேச்சை மறுக்க முடியாத, அவளது கட்டளையை மீற முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக முன் அறிவிப்புச் செய்தார்கள்:

‘‘எனக்குப் பின் ஆண்களுக்கு, பெண்களை விட மிக இடையூறு தரும் ஒரு சோதனையை நான் விட்டுச் செல்லவில்லை.'' (ஸஹீஹுல் புகாரி)

வழி தவறிய மனைவியின் எந்தவொரு குழப்பத்திற்கும் முன்பாக முஸ்லிம் பலவீன மடையமாட்டார். அவளது குழப்பம் எவ்வளவு கடுமையாக இருப்பினும் சரியே! மனைவியின் அன்பு உள்ளத்தில் இருந்தாலும் ‘‘அல்லாஹ்வின் பொருத்தம்தான் மிக விரும்பத்தக்கது கணவர், மனைவியை விரும்புவது எவ்வளவு அதிகமாக இருப்பினும் அது அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் அன்பை விட குறைந்ததுதான்'' என்பதை அவளுக்கு மிக அழகாக புரிய வைக்க முயல்வார்.

(நபியே! நம்பிக்கையாளர்களை நோக்கி) நீர் கூறும்: உங்களுடைய தந்தைகளும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிகளும், உங்களுடைய குடும்பங்களும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் உங்கள் பொருட்களும், நஷ்டமாகிவிடுமோ என நீங்கள் பயந்து மிக எச்சரிக்கையுடன் செய்து வரும் வியாபாரமும், உங்களுக்கு மிக்க விருப்பமுள்ள உங்கள் வீடுகளும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விடவும், அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதை விடவும் உங்களுக்கு மிக விருப்பமானவையாக இருந்தால் (நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்கள் அல்ல. நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் நீங்கள் எதிர்பார்த்திருங்கள். (இது போன்ற) பாவிகளை அல்லாஹ், நேரான வழியில் செலுத்துவதில்லை. (அத்தவ்பா 9:24)

தங்களை முஸ்லிம்களென வாதிக்கும் பலருடைய இல்லங்களில் காணப்படுவது போன்று இஸ்லாமிற்கு மாற்றமாக நடக்கும் பெண்களை உண்மை முஸ்லிமின் இல்லத்தில் காண இயலாது.

ஒருவர் தமது மனைவியை அல்லது சகோதரிகளை அல்லது மகள்களை அரைகுறை ஆடையுடன் தலையைத் திறந்து போட்டவர்களாக, நெஞ்சுப் பகுதியை மறைக்காமல் வெளியேறிச் செல்வதைக் காணுகிறார். இஸ்லாமின் ஒழுக்கங்களுக்கும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும் மாறாக உள்ள இந்தச் சூழலை மாற்றுவதற்குரிய முயற்சியை அவர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர் ஆணுக்குரிய வீரத்தை இழந்து, மார்க்கத் திலிருந்து விலகி அல்லாஹ்வின் கோபத்துக்கு இலக்காகி விட்டார் என்பதே பொருளாகும். இந்த இழிவிலிருந்து அவர் மீளுவதாக இருந்தால் அதற்காக மனம் வருந்தி உண்மையான பாவமன்னிப்புக் கோர வேண்டும், நேரான வழியின் பக்கம் திரும்ப உறுதி கொள்ள வேண்டும்.

இஸ்லாம் பெண்களுக்கென சில ஒழுக்க மாண்புகளைக் கற்றுக் கொடுத்து அவளுக்கு தனித்த ஆடை அமைப்பையும் அமைத்துள்ளது. மஹ்ரம் அல்லாத அன்னிய ஆண்களிடையே செல்வதற்கோ அல்லது வீட்டை விட்டு வெளியேறுவதற்கோ அவள் அணிந்து கொள்ள வேண்டிய ஆடைகளை நிர்ணயித்துள்ளது. அதுதான் முஸ்லிம் பெண்களுக்குரிய ‘ஹிஜாப்'-பர்தா என்று சொல்லப்படும் ஆடையாகும்.

ஒரு முஸ்லிம் பெண்மணி, இஸ்லாமியப் பண்பாட்டில் வளர்ந்தவள் இஸ்லாமின் நீண்ட நிழலில் இளைப்பாறியவள். எனவே, இஸ்லாம் கூறும் ஹிஜாபைத் திருப்தி கொண்ட நிம்மதியான இதயத்துடனும், மிகுந்த ஆழமான விருப்பத்துடனும் ஏற்றுக் கொள்வாள். ஹிஜாப் அணிவது அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வின் கட்டளையாகும். அது ஆணின் வற்புறுத்த லுக்காகவும் இல்லை அல்லது ஆணின் அகம்பாவத்தைத் திருப்திப்படுத்துவதற் காகவும் இல்லை. அல்லது அதைத்தூக்கி எறிவதற்கு அது ஒன்றும் இஸ்லாமிய மன்னர்களால் புதிதாக உருவாக்கப் பட்டதுமல்ல.

எவ்விதக் கல்வி ஆதாரமுமின்றி, அருள்மறையின் வழிகாட்டுதலும் இன்றி, வெட்கமற்ற வீணான ஆண் பெண்களுக்கு இந்த ஹிஜாபைப் பரிகசிப்பது இன்பமாகத் தோன்றுகிறது.

அன்னை ஆயிஷா (ரழி) கூறினார்கள்: ‘‘முதலாவதாக ஹிஜ்ரத் செய்த பெண்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

ம்தங்களது ஆடை ஆபரணம் போன்ற அலங்காரத்தை வெளிக் காட்டாது மறைத்துக் கொள்ளவும் தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும்... (அன்னூர் 24:31)

என்ற பொருள் கொண்ட அல்குர்ஆன் வசனம் அருளப்பட்ட போது தங்களது போர்வைகளைக் கிழித்து மறைத்துக் கொண்டனர்.''

ஸஹீஹுல் புகாரியின் மற்றோர் அறிவிப்பில், ‘‘அந்தப் பெண்கள் தங்களது போர்வைகளின் ஓரப்பகுதியைக் கிழித்து தங்களை மறைத்துக் கொண்டனர்'' என்று காணப்படுகிறது.

ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முறை நாங்கள் ஆயிஷா (ரழி) அவர்களுடன் இருந்த போது குறைஷிப் பெண்களையும் அவர்களது மேன்மைகளையும் நினைவு கூர்ந்தோம். அப்போது ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாகக் குறைஷிப் பெண்களுக்குச் சில சிறப்புகள் உள்ளன. அல்லாஹ்வின் நூலை (குர்ஆனை) உண்மைப்படுத்துவதில் காட்டும் உறுதி, அருளப்பட்டதை ஈமான் (நம்பிக்கை) கொள்வது போன்ற விஷயங்களில் அன்சாரிப் பெண்களை விட சிறந்த பெண்களை நான் பார்த்ததில்லை.

‘‘....தங்கள் அலங்காரத்தை வெளிக் காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பை மறைத்துக் கொள்ளவும்...'' என்ற பொருளுடைய வசனம் அருளப்பட்ட போது, ஆண்கள் அவற்றை ஓதிக் காட்டுவதற்காக அந்தப் பெண்களிடம் சென்றார்கள். ஒவ்வோர் ஆணும் தனது மனைவி, மகள், சகோதரியிடமும் நெருங்கிய ஒவ்வோர் உறவினரிடமும் ஓதிக் காட்டினார்கள். உடனே அனைத்துப் பெண்களும் தங்களது கம்பளி ஆடைகளை எடுத்து தங்கள் மீது சுற்றிக் கொண்டனர். இவ்வாறு அல்லாஹ் அருளியதை உறுதியாக நம்பிக்கை கொண்டு உண்மைப்படுத்தி னார்கள். ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தங்களது தலையில் துணி போர்த்தியவர்களாக ஸுப்ஹு தொழுகைக்கு வந்தார்கள். அது பார்ப்பதற்கு, காகம் தலையில் உட்கார்ந்திருந்ததைப் போன்று இருந்தது. (ஃபத்ஹுல் பாரி)

அல்லாஹ் அந்த அன்சாரிப் பெண்கள் மீது அருள் பொழியட்டும்! அவர்களது நம்பிக்கை (ஈமான்) எவ்வளவு உறுதியானது! அவர்களது இஸ்லாம் எந்தளவு உண்மையானது! குர்ஆன் வசனங்கள் இறக்கப்படும் போது அவற்றை அவர்கள் ஒப்புக் கொண்டதுதான் எவ்வளவு அழகு! அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு பெண்ணும் அந்த அன்சாரிப் பெண்களைப் பின்பற்றி நடக்க வேண்டும். அவர்களைப் போன்று தனித்தன்மைமிக்க இஸ்லாமிய ஆடையைத் தான், தாமும் கண்டிப்பாக அணிந்து கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் அணியும் அரைகுறை ஆடைகளையும் ஹிஜாப் இன்றி சுற்றித் திவதையும் பொருட்படுத்தக் கூடாது.

இந்த இடத்தில் பல்கலைக் கழகத்தில் பர்தா அணிந்த ஒரு முஸ்லிம் பெண்ணை நினைவு கூர்கிறேன். அந்த பெண்மணியிடம் அன்சாரிப் பெண்களிடம் காணப்பட்டதற்கு சற்றும் குறையாத ரோஷ உணர்வு வெளிப்பட்டது. டமாஸ்கஸ் பல்கலைக் கழகத்தில் பர்தா அணிந்திருந்த அந்த இளம் பெண்ணிடம் ‘‘இந்தக் கடுமையான கோடை காலத்தில் பர்தா அணிவது சிரமமாக இல்லையா?'' என ஒரு தினசரி பத்திரிகையின் நிருபர் கேட்ட போது அந்தப் பெண்மணி, அல்குர்ஆனின் வசனத்தையே பதிலாகக் கூறினார்:

‘‘(நபியே!) கூறுவீராக! நரக நெருப்பு மிகக் கடுமையான வெப்பமுடையது.'' (அத்தவ்பா 9:81)

இப்படிப்பட்ட பரிசுத்தமான முஸ்லிம் பெண்களால்தான் இல்லங்கள் செழிப்புறு கின்றன் சிறப்புமிக்க தலைமுறையினர் ஒழுக்கப்பயிற்சி பெறுகின்றனர். சமுதாயத்தில் வீரமிக்க - செயல் திறன்மிக்க ஆண்கள் உருவாகின்றனர். சமூகத்தில் இத்தகைய பெண்கள் இன்றும் அதிகமாக இருக்கத்தான் செய்கின்றனர். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!

தமது பெண்கள், வீட்டிலிருந்து வெளியேறும்போது இஸ்லாமிய ஒழுக்கங்களைப் பின்பற்றி வெளியே செல்கிறார்களா? ஹிஜாபைக் கடைப்பிடிக்கிறார்களா? என்று கண்காணிப்பது உண்மை முஸ்லிமின் பொறுப்பாகும். மனைவியோ அல்லது சூழ்நிலையோ மிகைத்து, மார்க்கத்தை மீறுவதற்கு தூண்டும் போது கணவன் திருத்த முடியாமல் பலவீனப்பட்டு நிற்பானேயானால் அது அவனது மார்க்கமும் ஆண்மையும் அவனிடமிருந்து எடுபட்டுவிட்டன என்பதற்குரிய அடையாளமாகும்.

தமது மனைவியின் விஷயத்தில் கணவன் பொறுப்பு, அவளது வெளித் தோற்றங்களுக்கு மட்டுமல்ல. மாறாக, அவளது வணக்க வழிபாடுகள் மற்றும் குணங்கள் அனைத்திற்கும் கணவர் பொறுப்பாளியாவார். மனைவி வணக்க வழிபாட்டில் குறை செய்தால், அல்லாஹ் வுடைய கடமையில் அலட்சியம் அல்லது பாவம் செய்து வரம்பு மீறினால் அதற்காக கணவர் விசாரிக்கப்படுவார். மேலும் அவளின் குணங்கள், பழக்க வழக்கங்கள் அவள் தனது கடமைகளை நிறைவேற்றுவது குறித்தும் கணவடமும் விசாரிக்கப்படும். இந்த விஷயங்களில் எந்த ஒன்றிலும் அவளிடம் குறைவு ஏற்பட்டால் அது கணவனின் ஆண்மைக்குப் பாதகமாகவும், அவனது இஸ்லாமிய மார்க்கப் பற்றுக்கு பங்கம் விளைவிப்பதாகவும், அல்லாஹ் அருளிய நிர்வகிக்கும் தகுதிக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் அமையும்.

இதற்குக் காரணம் என்னவென்றால், இஸ்லாம் பெண்ணை ஆணிடம் அமானித மாக ஒப்படைத்துள்ளது. பெரும்பாலும் மனைவி கணவன் வழியை அடியொற்றி நடப்பவளாகத்தான் இருப்பாள். அவர் அவளைத் தம்முடன் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார் அல்லது நரகிற்கு இழுத்துச் செல்வார். அதனால்தான் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் தங்களையும் தங்களது குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு உத்தரவிடுகிறான். தங்களது மனைவி, மக்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டினால்... அவர்களைச் சத்தியப்பாதையில் வழிநடத்தவில்லையென்றால் அதற்காக அல்லாஹ் கூறும் தண்டனையைக் கேட்கும்போது இதயம் நடுங்குகிறது பயத்தால் தலை சுற்றுகிறது.

‘‘நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடின குணமுடைய பலசாலிகளான வானவர்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு ஏவியதில் ஒரு சிறிதும் மாறு செய்யமாட்டார்கள். அவர்கள் (வேதனை செய்யுமாறு) தங்களுக்கிடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள்.'' (அத்தஹ்ரீம் 66:6)

முஸ்லிம் தமது குடும்பத்தை வழிநடத்துவதில் முழுமையான வெற்றி பெறும்போதுதான் பெண் மீது தமக்கிருக்கும் நிர்வகிக்கும் உரிமையை இஸ்லாம் விரும்பியபடி நிலைநாட்டியவராவார். முஸ்லிம் கணவர் கடின இதயமும், கீறிக் கிழிக்கும் நாவும், அடக்குமுறையும் கொண்ட பிடிவாதக்காரராக இருக்கக் கூடாது. ஏனென்றால், இது அறியாமைக்கால ஆண்மையாகும். இஸ்லாமில் ஆண்மை என்பது முற்றிலும் இதுவல்ல.

இஸ்லாமில் ஆண்மையின் இலக்கணம் என்னவென்றால், வலிமை, நேசம், உயர்குணம், சிறிய தவறுகளை மறந்து மன்னித்தல், அல்லாஹ் ஏற்படுத்திய வரம்பில் மிக உறுதியாக இருத்தல், அல்லாஹ்வின் கட்டளைகளைக் குடும்ப உறுப்பினர் அனைவர் மீதும் சமமாகப் பேணுதல், நன்மையின்பால் அழைத்துச் செல்வது, வீண் விரயமும் கஞ்சத்தனமும் இல்லாத கொடைத்தன்மை, இம்மை மறுமையின் கடமைகளை ஆழ்ந்து அறிதல், முன்மாதிரி முஸ்லிம் குடும்பம் எப்படியிருக்க வேண்டுமென்பதை விளங்கியிருத்தல். இவையே இஸ்லாம் விரும்பும் உண்மை முஸ்லிமின் தன்மைகளாகும்.



முஸ்லிம் பெண்மணி தமது கணவருடன்:

இஸ்லாமியப் பார்வையில் திருமணம்:

இஸ்லாமியப் பார்வையில் திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகிற அருள் வளமிக்க ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலமாகவே, இருவரில் ஒருவர் மற்றவருக்கு ஆகுமானவராக ஆகிறார்.

இது மட்டுமின்றி, இதன் வழியாகத்தான், இருவரும் ஒரு நீண்ட வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகின்றனர்.

இந்தப் பயணத்தின் மத்தியில் இருவரும் தங்களுக்குள் நேசம் கொண்டவர்களாகவும், அன்பு கொண்டவர்களாகவும் ஒருவருக் கொருவர் புரிந்துணர்வு உள்ளவர்களாகவும், உதவி ஒத்தாசை செய்பவர்களாகவும் இருக்கின்றனர். மேலும், இந்தத் திருமண ஒப்பந்தத்தின் வாயிலாக, ஒருவர் மற்றவரைக் கொண்டு நிம்மதியையும் அமைதியையும் பெறுகிறார். ஒருவர் மற்றவரது தோழமையில் வாழ்வின் சுபிட்சத்தையும், சுவையையும், பாதுகாப்பையும், மனமகிழ்ச்சியையும், திருப்தி உணர்வையும் அடைந்து கொள்கிறார்.

அல்லாஹ்வின் சங்கைமிகு நூலாம் அல்குர்ஆன், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகிற இந்த சட்டரீதியான ஒப்பந்தத்தை அழகிய முறையில் விளக்கிச் சொல்கிறது.

அன்பு, பாசம், நெருக்கம், உறுதி, புரிந்துணர்வு, இரக்கம் ஆகிய அனைத்தும் இந்த ஒப்பந்தத்தில் பரந்து காணப்படுகின்றன. இதனால்தான் இந்தத் திருமணத்திலே நற்பாக்கியம், ஈடேற்றம், வாழ்க்கையில் வெற்றி போன்ற நறுமணங்கள் வீசுகின்றன.

அல்லாஹ் கூறுகிறான்:
நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்க ளுக்கு இவற்றில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அர்ரூம் 30:21)

இந்தத் திருமண ஒப்பந்தம், மிக உறுதி மிக்க அடிப்படையில் கண்ணியமிக்க இறைவனால் ஏற்படுத்தப்படுகிற ஒப்பந்தமாகும். ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் நன்மையை நாடிக் கொள்வதற்காக இதில் சந்திக்கிறார்கள். இருவரும் தங்களுக்கிடையே இறையச்சம் கொண்ட இஸ்லாமியக் குடும்பத்தை நிர்மாணிக்கிறார்கள். இங்குதான் இஸ்லாமியக் குழந்தை வளர்கிறது அதன் அறிவு வளர்கிறது அதன் ஆன்மா, இஸ்லாமியப் பண்பாட்டிலே வார்த்தெடுக்கப்படுகிறது.

இதிலிருந்து நமக்குத் தெரிய வருவது என்னவென்றால், இஸ்லாமியச் சமூகத்தைக் கட்டி எழுப்புவதில் ஒரு முஸ்லிம் குடும்பம் உறுதிமிக்க செங்கல்லைப் போன்றதாகும்.

அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் இறையச்சம் உள்ளவர்களாகவும், நன்மையில் ஒருவருக்கொருவர் உதவக்கூடியவர் களாகவும், ஆக்கப்பூர்வமான காரியங்களை நிகழ்த்தக் கூடியவர்களாகவும், நன்மையான விஷயங்களுக்காகப் போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் முந்துபவர் களாகவும் இருப்பார்கள்.

இறையச்சமுள்ள நல்ல பெண்ணே, ஒரு முஸ்லிம் குடும்பத்திற்கு அடிப்படைத் தூணாக விளங்குகிறாள். குடும்பத்தின் உறுதிமிக்க அடித்தளமாக இருக்கிறாள்.
ஆணின் வாழ்க்கையிலே பெண்தான் இன்பத்தை வழங்க முடியும். உண்மையில், பெண்ணால் மட்டுமே ஓர் ஆணுக்குச் சிறந்த இன்பத்தை வழங்க முடியும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘‘உலகம் அனைத்தும் ஒரு செல்வம். அந்தச் செல்வத்திலேயே மிகச் சிறந்த செல்வம், நல்லொழுக்கமுள்ள ஒரு பெண்ணாவாள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

ஆம்! ஓர் ஆணுக்கு அல்லாஹ் வழங்குகிற அருட்கொடைகளிலேயே ஒரு பெரியஅருட்கொடை, நல்ல பெண் அமைவது. வாழ்க்கையில் ஏற்படுகிற சிரமங்களையும், கஷ்டங்களையும், துக்கங்களையும் அந்தப் பெண்ணின் மூலமாக அவன் நிவர்த்தி செய்து நிம்மதி அடைகிறான்.

தனது அன்பு மனைவியின் மூலமாக அந்த ஆண் அடைகிற ஆறுதலுக்கும், ஆதரவுக்கும் இந்த உலகிலுள்ள எந்தச் செல்வமும் ஈடாகாது. ஒரு பெண் தன் கணவனுக்கு எப்படியெல்லாம் சிறந்த செல்வமாக இருக்க முடியும், எந்த முறையில் வாழ்க்கையை நடத்தினால் சிறந்த மனைவியாக அமைய முடியும், பெண்மையைப் பாதுகாத்துக் கொள்வதுடன் மற்றவர்களின் மத்தியில் எவ்வாறெல்லாம் கண்ணியத்தையும் உயர்வையும் பெற முடியும் போன்ற ஆகிய கேள்விகளுக்கு இனி வரும் பகுதிகளில் விளக்கம் அறிய இருக்கிறோம்.


கணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தித்துக் கொள்வாள்:

இஸ்லாம், பெண்ணைக் கண்ணியப் படுத்தியதிலும், சங்கை செய்திருப்பதிலும் முதன்மையாக விளங்குவது, ‘ஒரு பெண் தன் கணவரைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை பெற்றவள்' என்று கூறியிருப்பதே! தம் மகளை நிர்ப்பந்தம் செய்து, அவள் விரும்பாத ஒருவருக்கு அவளை மணமுடித்து வைக்க எந்தப் பெற்றோருக்கும் இஸ்லாம் அனுமதி வழங்கவில்லை.

இந்த உரிமையை ஒவ்வொரு நேர்வழி பெற்ற முஸ்லிம் பெண்ணும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதே நேரம், தம் பெற்றோரிடம் ஆலோசனை செய்து, தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப் பதற்கும் ஒரு முஸ்லிம் பெண் கூச்சப்பட மாட்டாள் நாணம் கொள்ள மாட்டாள்.

தம்மை மணமுடித்துக் கொள்ள எவராவது விரும்பினால் அது சம்பந்தமாக முதலில் தன் பெற்றோரிடம் கலந்தாலோசனை செய்துவிட்டே முடிவெடுப்பாள்.

வாழ்க்கையின் தரத்தையும் மக்களின் தரத்தையும் தன்னைவிட தன் பெற்றோர்களே தெளிவாக அறிந்து வைத்திருப்பார்கள் என்பதை விளங்கி இருப்பாள். அதே சமயம், தனது தகப்பனின் பிடிவாதத்திற்கோ, உலக ஆசைகளுக்கோ தன் உரிமை பறிக்கப்படுவதையும் ஏற்க மாட்டாள்.

சில சமயங்களில் அவளுக்குப் பிடிக்காத ஒருவனை மணமுடித்து வைக்க, தகப்பன் நிர்ப்பந்திக்கக் கூடும். அந்த நிலையிலும் பெண்ணாகிய அவளிடம்தான் முடிவெடுக்கிற உரிமை உண்டு என்பதற்கு பலமான மார்க்க ஆதாரம் இருக்கிறது. இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் கன்ஸா பின்த் கிதாம் (ரழி) அவர்கள் மூலமாக அறிவிக்கும் ஓர் அறிவிப்பே அந்த ஆதாரம்.

கன்ஸா பின்த் கிதாம் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘என்னை, எனது தந்தை தன் சகோதரன் மகனுக்குத் திருமணம் முடித்து வைத்தார். ஆனால், நான் அந்தத் திருமணத்தை விரும்பவில்லை. எனக்கு அது வெறுப்பாகவே இருந்தது. இதைப்பற்றி நான், நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள், ‘‘உனது தந்தை செய்ததை நீ ஏற்றுக்கொள் பொருந்திக் கொள்!'' என்றார்கள். நானோ, ‘எனது தந்தையின் செயல் எனக்குப் பிடிக்கவில்லை' என்பதாக மறுத்து விட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால் நீ செல்லலாம் இந்தத் திருமணம் ஆகுமான திருமணம் அல்ல இது செல்லாது நீ விரும்பியவரை மணம் முடித்துக் கொள்ள உனக்கு உரிமை இருக்கிறது!'' என்று கூறி என் திருமணத்தை ரத்து செய்தார்கள். எனினும் நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை செய்ததை ஏற்றுக் கொண்டேன். இருப்பினும் பெண்கள் விஷயத்தில் அவர்களின் பெற்றோர்களுக்கு (நிர்ப்பந்திக்க) எந்த அதிகாரமும் இல்லை என்பதை வெளிப்படுத்தவே இப்படி விசாரித்தேன். பெண்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன்'' என்று தெரிவித்தேன். (ஸஹீஹுல் புகாரி)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நிகழ்ச்சியில் அந்தப் பெண்ணுக்கு முதலில் என்ன உபதேசம் செய்தார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

‘‘தந்தையின் செயலை ஏற்றுக்கொள்! பொருந்திக் கொள்!'' என்று உபதேசித்தார்கள். ஆம்! இதுதான் உண்மை. பொதுவாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் நல்லபடி வாழ வேண்டும் என்றும் வெற்றிகரமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனாலும், நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணுக்கு அவர் விரும்பாத ஒருவரை அவரது பெற்றோர் மணமுடித்து வைத்துள்ளார்கள் என்பதை உணர்ந்தவுடன், ‘தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அதிகாரத்தை' அவருக்கு முழுமையாக வழங்கி விட்டார்கள். அதுமட்டுமின்றி, அநியாயக்காரத் தந்தை தன் பெண்ணுக்கு இழைக்கிற அநீதத்தை விட்டும் பாதுகாப்பு வழங்கினார்கள்.

இஸ்லாம், பெண்ணுக்குச் சிரமத்தை அளிக்க விரும்பவில்லை தான் விரும்பாத ஒருவரோடு அவள் வாழ்வதையும் விரும்பவில்லை. காரணம், திருமணம் என்பது வெற்றிகரமானதாகவும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஓர் உறுதியான பொருத்தம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. மேலும், தம்பதியர் இருவரும் அவர்களின் ஆசையிலும், இயற்கைப் பண்பாடுகளிலும், தோழமையிலும், நோக்கங்களிலும் ஒருவர் மற்றவருக்கு நிகரானவராக மனமொப்பி வாழவேண்டும் எனவும் விரும்புகிறது.

இப்படிப்பட்ட இல்லறக் கோட்டையை நிர்மாணிப்பதில் இடையூறு ஏற்பட்டு விட்டால்... கணவன் மனைவி இருவரின் வாழ்க்கையும் சுவையாக இல்லை என்றால்... தன் கணவனிடம் இருந்து அன்பையும் மனத்தூய்மையையும், வாக்குறுதியை நிறைவேற்றுகிற நேர்மையையும் ஒரு பெண் பார்க்க முடியவில்லை என்றால்... கணவனால் இறைமறுப்புக்கு ஆளாகிவிடுவோம் என்று பயந்தால்... கணவனைக் கொண்டு இறைக் கட்டளைகளை அமல் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டால் அப்போது அந்தப் பெண், தனது கணவனிடமிருந்து விவாகரத்து கோருவதற்கும் இஸ்லாம் அனுமதிக்கிறது. இதை நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஸாபித் பின் கைஸ் (ரழி) என்ற நபித்தோழன் மனைவி நபியவர்களிடம் வந்தார். அவரது பெயர் ‘ஜமீலா' என்பதாகும். (இவர் அப்துல்லாஹ் இப்னு உபை உடைய சகோதயாவார்.) ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாமில் இருந்து கொண்டே நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று பயப்படுகிறேன்'' என்றார்.

அதாவது, நல்லவரான தன் கணவருடன் வெளியுலகத்தில் மனைவியாக வாழ்ந்து கொண்டு மனதளவில் அவரை வெறுத்துக் கொண்டு இரட்டை வேடம் போடுவதை, தாம் விரும்பவில்லை என்பதைச் சூசகமாகச் சொன்னார். அல்லது, நல்லவரான தம் கணவரை வெறுத்த நிலையிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தால், எங்கே தாம் நிராகரிப்பாளர்களின் செயல்களில் சிக்கிவிடுவோமோ என்று அஞ்சுவதாகத் தெரிவித்தார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஸாபித் உனக்கு மஹராக - மணக்கொடையாக அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘ஆம் அல்லாஹ்வின் தூதரே! நான் அதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்'' என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது தூதர் ஒருவரை ஸாபித் பின் கைஸிடம் அனுப்பி, ‘‘நீ அவருக்கு (ஜமீலாவுக்கு) கொடுத்த தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவரைத் தலாக் சொல்லிவிடு!'' என்று கூறி விட்டார்கள்.

ஸஹீஹுல் புகாரியின் மற்றோர் அறிவிப்பில், அந்தப் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் முறையிடும் போது, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஷ் (ரழி) அவர்களுடைய மார்க்கப் பற்றையோ, குணத்தையோ குறை சொல்லவில்லை. எனினும், அவரைச் சகித்துக் கொண்டு என்னால் வாழ முடியவில்லை'' என்று கூறியதாக வந்துள்ளது. (ஸஹீஹுல் புகாரி)

இஸ்லாம், பெண்ணுக்குரிய மனித உரிமையைப் பாதுகாக்கிறது அவளுடைய கண்ணியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஒரு கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அவளுக்குரிய உரிமையை மதிக்கிறது. அவளுக்குப் பிடிக்காத ஓர் ஆணுக்கு அவளை மணமுடித்து வைக்க தந்தையோ, வேறு நெருங்கிய உறவினர்களோ யார் முயன்றாலும் அதைத் தடை செய்கிறது. இதற்கு பரீரா (ரழி) அவர்களது சம்பவம் இன்னுமோர் ஆதாரமாகும்.

பரீரா (ரழி) அவர்கள் ஓர் ஹபஷி (நீக்ரோ) அடிமைப் பெண்ணாக இருந்தார்கள். அவரை அபூலஹபின் மகன் உத்பா சொந்தமாக்கி இருந்தான். தனக்கு அடிமையாக இருந்த காலத்தில் முஃகீஸ் என்ற ஓர் அடிமைக்கு பரீராவைக் கட்டாயப்படுத்தி மணமுடித்து வைத்துவிட்டான்.

பரீரா (ரழி) அவர்களுக்கோ அந்தத் திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லை. தம் கணவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அவருக்கு இருந்திருந்தால், நிச்சயமாக முஃகீஸை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். இந்த நிலையில் ஆயிஷா (ரழி) அவர்கள், பரீராவின் மீது கருணை காட்டி அவரை விலைக்கு வாங்கி உரிமையிட்டு விட்டார்கள் விடுதலை செய்து விட்டார்கள்.

தான் சுதந்தரமாகி விட்டதை உணர்ந்த பரீரா, இனி தமது மண வாழ்க்கையின் நிலைமையையும் முடிவையும் தீர்மானிப்பதில், தமக்கு மார்க்கம் வழங்கியிருக்கும் முழு உரிமையையும் நன்கு விளங்கிக் கொண்டார். உடனே, தம் கணவடமிருந்து விவாகரத்துப் பெறுவதை நாடினார். இதையறிந்த முஃகீஸ் ‘‘பரீராவே! என்னை ஏற்றுக்கொள் ஏற்றுக்கொள்!'' என்றவாறு அவர் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார்.

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், இந்தச் செய்தியை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கிறார்கள். அதில் இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்:

‘‘பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா, தம்மை பிரிந்து விட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் (எனது தந்தையான) அப்பாஸ் (ரழி) அவர்களிடம், ‘‘அப்பாஸ் அவர்களே! முஃகீஸ், பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா, முஃகீஸின் மீது கொண்டுள்ள வெறுப்பையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?'' என்று கேட்டார்கள்.

மேலும், முஃகீஸ் (ரழி) அவர்களின் நிலைமையைப் பார்த்து, ‘‘முஃகீஸை நீ மீண்டும் ஏற்றுக்கொள்ளலாமல்லவா?'' என்று பரீராவிடமும் சொன்னார்கள். அதற்கு பரீரா, ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளை இடுகின்றீர்களா?'' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை இல்லை! நான் சிபாரிசு செய்(யவே விரும்பு)கின்றேன்'' என்றார்கள். அப்போது பரீரா, ‘‘(அப்படியானால்,) அவர் எனக்குத் தேவையில்லை!'' என்று கூறிவிட்டார். (ஸஹீஹுல் புகாரி)

இந்த நபிவழிச் செய்தியின் வாயிலாக, ஒரு சுதந்தரமான பெண் தனக்குப் பிடிக்காத கணவரை விட்டுப் பிரிந்து விடுவதில், மார்க்கம் எந்த அளவிற்கு அனுமதித்துள்ளது என்பதை அறிகிறோம்.

இன்னும், உள்ளத்தை உருக்கக்கூடிய இக்கட்டான நிலையில் நபியவர்கள் சிக்கியிருந்ததையும் உணர முடிகிறது. ஒரு பக்கம், தம் மனைவியை ஆழமாக நேசிக்கும் கணவர் மறுபக்கம், கொஞ்சமும் சமரசத்திற்கு இணங்கி வராதபடி, தன் கணவரை வெறுக்கும் மனைவி!

இங்கு நபி (ஸல்) அவர்களால் செய்ய முடிந்த ஒரே விஷயம், ‘‘பரீராவே! முஃகீஸை மீட்டுக்கொள்ள முடியாதா? அவர் உனக்குக் கணவராக, உன் குழந்தைக்குத் தந்தையாக இருந்தால்லையா?'' என்று சிபாரிசு செய்தது மட்டுமே!

இந்த இடத்தில் இறையச்சமுள்ள பெண்ணான பரீராவைப் பற்றியும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டவுடன், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது உங்களது கட்டளையா? அல்லது சிபாரிசா? - கட்டளை என்றால், இதோ... உடனே கட்டுப்படுகிறேன்'' என்று தனது கீழ்ப்படிதலை வெளிப்படுத்துகிறார். ஆயினும், நபியவர்கள் தங்களது நிலைப்பாட்டைத் தெரிவித்தவுடன் தன் இறுதி முடிவைச் சொல்லி விடுகிறார்.

தங்களது பெண் பிள்ளைகள் மீது வரம்புமீறி நிர்ப்பந்தம் செய்து, அவர்கள் விரும்பாத ஆணுக்கு அநியாயமாக மணமுடித்து வைக்கிற பெற்றோர்கள், நபி (ஸல்) அவர்களின் அழகிய நடைமுறையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மார்க்கத்தைப் பேணி நடக்க விரும்புகிற நல்ல முஸ்லிமான பெண்களுக்கு ஒரு நிலையான, நிரந்தரமான, அழகிய அளவுகோல்கள் இருக்கின்றன. அந்த அளவுகோல்களைக் கொண்டே ஒரு முஸ்லிமான பெண், தனது வருங்காலக் கணவரைத் தேர்ந்தெடுக்கின்றாள்.

வெறுமனே வெளிரங்க அழகைக் கொண்டோ, கவர்ச்சியைக் கொண்டோ, உயர்ந்த பதவிகளைப் பார்த்தோ, செல்வச் செழிப்பை வைத்தோ மட்டும் அந்தப் பெண் தனது கணவரைத் தேர்ந்தெடுப்பது கிடையாது. அதே மாதி, பொதுவாக பெண்கள் ஆசைப்படக் கூடிய விஷயங்களை வைத்தும்கூட, ஒரு நம்பிக்கை (ஈமான்) கொண்ட பெண் கணவரைத் தேர்ந்தெடுப்பது கிடையாது.

மாறாக, தான் தேர்ந்தெடுக்கப் போகிற கணவரிடம் உறுதியான மார்க்கப் பற்றும் நல்ல குணங்களும் இருக்கின்றதா என்று தெளிவாகத் தெரிந்த பின்பே தேர்ந்தெடுப்பாள். இவை இரண்டுதான் வெற்றிகரமான இல்லறத்தின் தூண்களாகவும் கணவரை அலங்கரிக்கக் கூடிய ஆபரணங்களாகவும் இருக்கின்றன. அதனால்தான் நபி (ஸல்) அவர்கள், ஆண், பெண் இருவரும் தங்களது துணையைத் தேர்ந்தெடுக்கும் போது உன்னிப்பாக கவனிக்க வேண்டிய இரண்டு தகுதிகளாக மார்க்கப்பற்றையும் நல்ல குணத்தையும் குறிப்பிட்டார்கள்.

‘‘எவருடைய மார்க்கப்பற்றைக் குறித்தும் ஒழுக்கப் பண்பாட்டைக் குறித்தும் உங்களுக் குத் திருப்தியாக உள்ளதோ அவர் திருமணச் சம்பந்தம் வைத்துக் கொள்வதற்குத் தூது அனுப்பினால், அவருக்குத் திருமணம் செய்து கொடுங்கள். நீங்கள் அப்படிச் செய்யவில்லை யானால், சமுதாயத்தில் குழப்பமும் சீர்குலைவுமே ஏற்படும்'' என்று எச்சரித்தார்கள். (ஜாமிவுத் திர்மிதி, ஸுனன் இப்னு மாஜா)

எப்படி ஒரு முஸ்லிமான ஆண், ‘(வெளி அழகால்) தன்னைக் கவர்கிறாளே' என்ற ஒரே காரணத்திற்காக குணத்தால் கெட்ட ஒருத்தியை மணக்க மாட்டாரோ, அதுபோலவே ஒரு முஸ்லிமான பெண்ணும் வெளி அழகு மட்டுமே கொண்ட மார்க்கப் பற்றில்லாத வாலிபரையும் மணக்க மாட்டாள்.

நல்ல ஒழுக்கமுள்ள, திறந்த சிந்தனை உள்ள, தூய்மையான பண்புள்ள, கற்பைப் பேணும் நடத்தையுள்ள, அழகிய மார்க்கமுள்ள ஒரு வாலிபரே ஓர் உண்மையான முஸ்லிம் பெண்மணியைக் கவர முடியும்.

நம்பிக்கையுள்ள, தூய்மையான வாலிபப் பெண்ணுக்கு, ஒரு நம்பிக்கையுள்ள தூய்மையான வாலிபரே தகுதியுள்ள கணவராக இருக்க முடியும். இவ்வாறே ஓர் ஒழுக்கமற்ற, வழிகெட்ட வாலிபப் பெண்ணுக்கு, அவளைப் போலவே ஒழுக்கமற்ற வழிகெட்ட வாலிபனே தகுதியாக முடியும். இதை அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்:

‘‘கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும், கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் தகுமானவர்கள். (அவ்வாறே) பரிசுத்தமான பெண்கள், பரிசுத்தமான ஆண்களுக்கும் பரிசுத்தமான ஆண்கள், பரிசுத்தமான பெண்களுக்கும் தகுமானவர்கள். இத்தகைய (பரிசுத்தமான) வர்கள்தாம், குற்றம் குறைகளிலிருந்து பரிசுத்தமாக இருக்கின்றனர். இவர்களுக்கு (மறுமையில்) மன்னிப்பும் உண்டு கண்ணியமான முறையில் உணவும் உண்டு. (அன்னூர் 24:26)

இங்கு ஒன்றை மறந்து விடக்கூடாது. அதாவது, தான் தேர்ந்தெடுக்கிற ஆண், சிறிதும் அழகற்றவராக கோரமாக இருந்தாலும் மார்க்கப்பற்றுக்காக அவரைத்தான் மணந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் ஒரு முஸ்லிமான பெண்ணுக்கு இல்லை. அவள் எதிர்பார்க்கும் அழகையும் மனதை நிரப்பும் செழிப்பையும் பெற்ற ஆணை மணக்க அவளுக்கு முழு உரிமையும் உண்டு. அதே சமயம், வெளித்தோற்றத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவத்தைக் காட்டி, உள்ளரங்கமான நற்குணங்களை அலட்சியப்படுத்தி விடக் கூடாது.

ஒரு முன்மாதியான முஸ்லிம் பெண்மணி, தனது தனித்தன்மைக்கும் மனதிற்கும் உகந்த ஆணை மணமுடிப்பதுடன், தனது கணவர் தன் மீது முழு அதிகாரம் பெற்ற நிர்வாகி என்பதையும் புரிந்து வைத்திருப்பாள்

அல்லாஹ் கூறுகிறான்:
‘‘ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்கள். காரணம், அவர்களில் (ஆண்கள், பெண்களில்) சிலரை (ஆண்களை) சிலரைவிட (பெண்களைவிட) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கின்றான். மேலும் ஆண்கள் தங்கள் பொருள்களை(ப் பெண்களுக்கு)ச் செலவு செய்கின்றனர். (அன்னிஸா 4:34)

எனவே, ஒரு முஸ்லிம் பெண்மணி எப்படிப்பட்ட ஆணைத் தனக்குக் கணவராகத் தேர்ந்தெடுக்க விரும்புவாள் என்றால், அவள் தேர்ந்தெடுத்த கணவர் அவளை நிர்வகிப்பதால் அவள் கண்ணியத்தையும் மரியாதையையும் அடைய வேண்டும் அந்தக் கணவருடன் வாழ்வதைக் கொண்டு அவள் மகிழ்ச்சியுற வேண்டும். ‘இவனைப் போய், மணமுடித்துக் கொண்டோமே!' என்று நாளை புலம்புகிற நிலைக்கு அவள் ஆகி விடக்கூடாது.

கரங்களைக் கோர்த்து நம்பிக்கையுடன் தொடங்குகிற இல்லற வாழ்க்கையில், இஸ்லாம் விரும்புவதெல்லாம் அது காட்டிய நெறியின்படி வாழ வேண்டும் என்பதுதான்.

கணவன் மனைவி இருவரும் மனித குலத்துக்கு இஸ்லாம் விடுக்கிற செய்தியை எடுத்துரைக்க வேண்டும் முழுமையான முஸ்லிம் குடும்பத்தை உருவாக்க வேண்டும் தூய்மையான சந்ததியை உருவாக்குவதிலும், அதற்கு நல்ல அறிவைப் புகட்டுவதிலும், சிறந்த சிந்தனைகளைத் தங்கள் பிள்ளைகளிடம் விதைப்பதிலும் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்த முயற்சியில் ஒருவருக்கொருவர் அன்புடனும் நெருக்கத்துடனும் இணங்கி செயல்பட வேண்டும். இருவரின் போக்கிலும் முரண்பாடுகளோ, குண மாறுதல்களோ ஏற்பட்டுவிடக் கூடாது. இயற்கையிலும் பண்பாட்டிலும் வித்தியாசங்கள் உண்டாகி விடக்கூடாது. மார்க்கப்பற்றில் கோளாறு வந்து விடக்கூடாது.

ஓர் இறை நம்பிக்கையுள்ள ஆணும் பெண்ணும் ஒரு மகா சமுத்திரத்தில், அருகருகே இணைந்து சென்று கொண்டிருக்கிற இரண்டு ஓடங்களைப் போன்றவர்கள் ஆவர். எனவே, இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணிக்காமல் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான், இஸ்லாம் விரும்புகிற இல்லறத்தை நடத்திக் காட்ட முடியும்.

இஸ்லாம் என்பது உலக மக்களுக்கு அல்லாஹ் எடுத்துச் சொல்ல விரும்பும் நேர்வழியின் தூதுத்துவ செய்தியாகும். அதை ஒவ்வோர் ஆண் பெண் மீதும் அமானிதமாகச்" ("அமானிதம் - அடைக்கலம்) சுமத்தியிருக்கிறான். இதையே தனது சங்கைமிகு நூலில் கூறும்போது....

நிச்சயமாக முஸ்லிமாகிய ஆண்களும் பெண்களும், நம்பிக்கையாளரான ஆண்களும் பெண்களும், (இறைவனுக்கு) வழிப்படும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்ப்படுத்தி வைத்திருக்கின்றான். (அல்அஹ்ஸாப் 33:35)

ஆகவே, வாழ்க்கைப் பயணத்தை நல்ல முறையில் தொடங்குவதற்கும், சரியான இலக்கை நோக்கி நகர்த்துவதற்கும் திருமண உறவு பலமிக்கதாக இருக்க வேண்டும். குடும்பத்தின் தூண்களை உறுதிப்படுத்த வேண்டும். பாதுகாப்பான அஸ்திவாரத்தின் மீது அந்தக் குடும்பம் நிலைபெற வேண்டும். பாதுகாப்பான அஸ்திவாரம் என்பது ஒன்றை அழகிய முறையில் தேர்ந்தெடுப்பதே!

எத்தனையோ மகத்துவமிக்க முஸ்லிம் பெண்மணிகள் இருக்கிறார்கள். அவர்களின் உயர்ந்த நோக்கங்களும் தனித்தன்மைகளும் மிகச் சிறப்பானவை. கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அவர்கள் காட்டுகிற ஒரு தொலைநோக்குப் பார்வை, உண்மையில் பாராட்டுக்குரியது.

இத்தகையோல் ஒருவராகத்தான் உம்மு ஸுலைம் பின்த் மில்ஹான் (ரழி) அவர்களை அறிகிறோம். அன்ஸாப் பெண்களிலேயே மிக விரைந்து இஸ்லாமைத் தழுவிய பெண்களில் இவரும் ஒருவர்.

உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் இஸ்லாமைத் தழுவிய காலத்தில் ‘மாலிக் பின் நழ்ர்' என்பவருக்கு மனைவியாக இருந்தார்கள். (உம்மு ஸுலைமுக்கு மாலிக் பின் நழ்ரு மூலமாக பிறந்தவரே அனஸ் (ரழி).)
உம்மு ஸுலைம் (ரழி), இஸ்லாமை ஏற்றது மாலிக் பின் நழ்ருக்குப் பிடிக்கவில்லை. எனவே, உம்மு ஸுலைமை வெறுத்து விலகிவிட்டார்.

தன் கணவர் தன்னை ஆதரவின்றி விட்டுவிட்டாரே என்பதற்காக உம்மு ஸுலைம் (ரழி) இஸ்லாமைத் துறந்து விடவில்லை விட்டுக் கொடுத்து விடவில்லை. மாறாக, இஸ்லாமில் உறுதியாக நிலைத்திருந்தார்.

சில காலங்கள் கழிந்தன. மாலிக், இறந்துவிட்ட செய்தி உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்குக் கிடைத்தது. அப்போது நபியவர்களுக்குப் பணிவிடை புரியுமாறு, பத்து வயதே நிரம்பியிருந்த தனது மகன் அனஸை நபியவர்களிடம் ஒப்படைத்து விட்டிருந்தார்கள்.

கணவரை இழந்த உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்கு இளம் வயதுதான். இந்த நிலையில், மதீனாவில் மிகப்பெரும் செல்வந்தராகவும் அழகிய தோற்றமிக்க வராகவும் நன்கு பிரசித்தி பெற்றவராகவும் இருந்த ஒருவர் உம்மு ஸுலைமை மணமுடிக்க முன்வந்தார். அவரது பெயர்தான் ‘அபூதல்ஹா'. அபூதல்ஹா (ரழி) அவர்கள் அப்போது முஸ்லிமாகவில்லை. எனினும், மதீனத்துப் பெண்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்பட்டு பலரின் உள்ளங்களைக் கவர்ந்தவராக இருந்தார். தான் உம்மு ஸுலைமை மணமுடித்துக் கொள்ள விரும்புவதைத் தெரியப்படுத்தினால், அதை அவர் உடனே விரும்பி சந்தோஷப்பட்டு மனமாற ஏற்றுக்கொள்வார் என்று நினைத்திருந்தார். ஆனால், உம்மு ஸுலைமைச் சந்தித்து அவரது பதிலைக் கேட்ட போதோ, அபூதல்ஹாவுக்குப் பெரியதோர் அதிர்ச்சியாக இருந்தது.
உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் கேட்டார்கள்: ‘‘ஓ... அபூதல்ஹாவே! நீ வணங்கக் கூடிய தெய்வம் என்னவென்று பார்த்தீரா? அது பூமியிலிருந்து முளைக்கக் கூடிய ஓர் அற்ப மரம். அதை ஹபஷி அடிமை ஒருவன் சிலையாகச் செதுக்கினான்''.
இதற்கு அபூதல்ஹா, ‘‘ஆம் அப்படித்தான்!'' என்று ஆமோதித்தார். உடனே உம்மு ஸுலைம் (ரழி), ‘‘அபூதல்ஹாவே! என்ன, உமக்கு வெட்கமாக இல்லையா? பூமியிலிருந்து முளைத்த ஒரு மரத்திற்கு, ஹபஷி ஒருவன் உருவம் கொடுத்தான். அதைப்போய் வணங்குகிறீரே? அதற்குச் சிரம் பணிகிறீரே?'' என்று அறிவுரை கூறினார்.
இதைக் கேட்டு அபூதல்ஹா, சற்று சுதாரித்துக் கொண்டு உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்கு ஆசையூட்டும் விதமாக, ‘‘உம்மு ஸுலைமே! உமக்கு ஓர் உயர்ந்த வாழ்க்கையைத் தருகிறேன் பெரும் மஹரையும் கொடுத்து மணமுடித்துக் கொள்கிறேன்'' என்றார். ஆனாலும், உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள், ‘‘இல்லை ஒருக்காலும் நான் உம்மை ஏற்றுக் கொள்ளமாட்டேன்'' என்று உறுதியாக மறுத்து விட்டார்.
மேலும் கூறினார்: ‘‘அபூதல்ஹாவே! உம்மைப் போன்ற ஓர் ஆணை யாரும் திரும்ப அனுப்பமாட்டார் ஏற்றுக் கொள்ள மறுக்க மாட்டார் ஆனால், நீரோ ஏக இறைவனை நிராகரிக்கக் கூடிய காஃபிராக - நிராகரிப்பாளராக இருக்கிறீர் நானோ ஒரு இஸ்லாமியப் பெண்! உம்மை மணமுடித்துக் கொள்ள எனது மார்க்கத்தில் எனக்கு அனுமதியில்லை. நீர் இஸ்லாமை ஏற்று, நம்பிக்கை கொண்டால், அதையே எனக்குரிய மஹராக ஏற்று நான் உம்மை மணமுடித்துக் கொள்கிறேன் அதைத் தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்'' என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார்கள். (ஸுனனுன் அந்நஸாம்)
திரும்பிச் சென்ற அபூதல்ஹா, மீண்டும் இரண்டாவது முறையாக உம்மு ஸுலைமிடம் வந்து, முன்பு கூறியதைவிட அதிகமான மஹரைத் தருவதாகக் கூறி ஆசையூட்டினார்.
இப்போதும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் கண்டிப்பாக மறுத்து விட்டார்கள். அவர்களின் வைராக்கியம் (மனஉறுதி), அபூதல்ஹாவின் உள்ளத்தில் உம்மு ஸுலைமின் மீது நேசத்தையும் அன்பையுமே அதிகப்படுத்தியது. உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் மீண்டும் சொன்னார்கள்:
‘‘அபூதல்ஹாவே! ஓர் அற்ப மரத்திலிருந்து அடிமை ஒருவன் செதுக்கியதையே நீர் தெய்வமாக வணங்குகிறீர் அதற்கு தீ மூட்டினால், எரிந்து சாம்பலாகி விடும். இது உமக்குத் தெரியாதா?''
இந்த ஞானமிக்க பேச்சு, அபூதல்ஹாவின் உள்ளத்தில் ஆழமாக இறங்கியது. தன் மனதிற்குள்ளேயே, ‘‘என்ன... கடவுளை எரிக்க முடியுமா? எரிந்து சாம்பலானால், அது கடவுளாகத்தான் இருக்க முடியுமா?'' என்று கேட்டுக் கொண்டார். பின் அதே இடத்தில் தம் நாவை அடக்க முடியாமல், ‘‘நான் சாட்சி சொல்கிறேன் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை! இன்னும், சாட்சி சொல்கிறேன் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் அடியாரும் ஆவார்கள்'' என்று மொழிந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். உடனே உம்மு ஸுலைம் (ரழி) அவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் பொங்கின. தம் மகன் அனஸ் (ரழி) அவர்களை நோக்கி, ‘‘அனஸே! எழு தயாராகு உனது தாய் உம்மு ஸுலைமை அபூதல்ஹாவுக்கு மணமுடித்து வை!'' என்று கூறினார்கள்.
அனஸ் (ரழி) அவர்கள், சாட்சிகளை வரவழைத்து தமது தாயை அபூதல்ஹா (ரழி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். அந்தத் தருணத்தில் அபூதல்ஹா (ரழி) அவர்கள் அடைந்த ஆனந்தத்தை எப்படித்தான் வருணிக்க!
தமது செல்வம் அனைத்தையும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களிடமே கொட்டி விட்டார்கள். இருப்பினும், உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள், ‘‘அபூதல்ஹாவே! நான் உங்களை அல்லாஹ்விற்காகவே மணமுடிக்கிறேன் அதைத் தவிர வேறு எந்த மஹரும் எனக்குத் தேவையில்லை'' என்பதாகச் சொல்லிவிட்டார்கள்.
அபூதல்ஹா (ரழி) அவர்களை மணமுடித்ததைக் கொண்டு, தமக்குப் பொருத்தமான, நிகரான ஒருவரைத் துணையாக்கிக் கொண்டோம் என்று மட்டும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் நினைக்கவில்லை. மாறாக, இந்த உலகச் செல்வங்கள் அனைத்தையும் மிகைத்த ஒரு செல்வத்தை, நன்மையை அல்லாஹ்விடம் அடைந்து கொண்டோம் என்றே விளங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி அவர்களுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்...?
‘‘உங்கள் மூலமாக அல்லாஹு தஆலா ஒருவருக்கு நேர்வழி காட்டுவது, உங்களுக்குச் சிவந்த ஒட்டகைகள் கிடைப்பதை விடச் சிறந்தது'' என்றல்லவா நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்!? (ஸஹீஹுல் புகாரி)

இன்றைய முஸ்லிம் பெண்மணிகள் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களைப் போன்ற பெண்களின் வரலாற்றைப் படித்து படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும். இவர்களையே முன்மாதிகளாக பின்பற்றி வாழ வேண்டும். இவர்களிடம் இருக்கும் தனித்தன்மைகளையும் ஈமானின் (நம்பிக்கையின்) தூய்மையையும் கொள்கை உறுதியையும் கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அழகிய முறையைக் கையாள்வதையும் கற்றுக் கொள்ள வேண்டும்.


கணவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பாள் அவரிடம் நல்ல முறையில் நடந்து கொள்வாள்:

ஒரு நல்ல அறிவுள்ள முஸ்லிமான பெண்மணி பாவமற்ற விஷயத்தில் தனது கணவருக்குக் கீழ்ப்படிந்தே நடப்பாள்.

தன் கணவருக்கு நல்ல முறையில் பணிவிடைகள் புரிவாள். அவரது திருப்தியைத் தேடுவதில் பேராசை கொண்டவளாக இருப்பாள். அவருக்கு மகிழ்ச்சி ஊட்டுவதில் ஆர்வம் உள்ளவளாக இருப்பாள்.

அந்தக் கணவர் ஏழையாக, வறுமையில் வாடுபவராக இருந்தாலும், ‘உன்னிடம் செல்வம் இல்லையே; வாழ்க்கை வசதிகள் இல்லாமல் இருக்கிறதே!' என்பதாகச் சடைந்து கொள்ள மாட்டாள். வீட்டு வேலைகள் செய்வதில் குறை வைக்க மாட்டாள். மேலும், இஸ்லாமிய வரலாற்றின் மிகச் சிறந்த பெண்களையெல்லாம் நினைத்துப் பார்த்து, அவர்களது பொறுமையையும் உபகாரப் பண்பையும் கணவருக்குப் பணிவிடை புரிந்து வீட்டைப் பேணிய கடமையுணர்வையும் பின்பற்ற விரும்புவாள்.

தங்கள் கணவருக்குப் பணிந்து நடப்பதிலும் வீட்டு வேலைகளை ஒழுங்குறச் செய்வதிலும் அந்த மிகச் சிறந்த பெண்களுக்கு அவர்களின் வறுமையும் சிரமங்களும் நெருக்கடிகளும் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. இதற்குச் சரியான முன்னுதாரணமாக நமது தலைவி ஃபாத்திமா (ரழி) அவர்கள் திகழ்கிறார்கள்.

இறைத்தூதர்களின் தலைவரான முஹம்மது (ஸல்) அவர்களின் மகளாகவும் அலீ இப்னு அபீதாலிப் (ரழி) அவர்களின் மனைவியாகவும் ஃபாத்திமா (ரழி) இருந்தார்கள். வீட்டில் மாவரைக்கத் திகை சுற்றியதால் அவர்களின் கைகளில் காய்ப்பு உண்டாகி வடுக்கள் விழுந்திருந்தன. எனினும், ஃபாத்திமா (ரழி) அவற்றைச் சிரமத்துடன் சகித்து வந்தார்கள்.

இதைக் கண்ட அலீ இப்னு அபீதாலிப் (ரழி) அவர்கள், ‘‘ஃபாத்திமாவே! உனது தந்தையிடம் சில கைதிகள் கொண்டு வரப்பட்டுள்ளார்கள். அங்கு சென்று உனக்கு வசதியாக ஓர் அடிமைப் பெண்ணை, நீ பெற்று வரலாமே?'' என்று யோசனை கூறினார்கள்.

ஃபாத்திமா (ரழி) அவர்கள் அதற்காகச் சென்ற போது அவர்களின் வெட்க உணர்வு, தம் தந்தையிடம் தமது தேவையைக் கேட்பதை விட்டும் அவர்களைத் தடுத்து விட்டது. எனவே, கேட்காமலேயே திரும்பி விட்டார்கள்.

இதனால் அலீ (ரழி) அவர்களே சென்று, ‘‘நபியின் பிரியத்திற்குரிய மகளான ஃபாத்திமாவுக்கு, உதவி ஒத்தாசை புரிய ஒரு பணியாளர் தேவை'' என்று கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே தமக்கு விருப்பமான தமது மகள் ஃபாத்திமாவுக்கு ஒரு பணியாளரை வழங்கிவிட்டு, முஸ்லிம்களில் மிக வறுமையில் சிக்கியிருப்பவர்களுக்கு இல்லாமல் ஆக்கிவிடுவதை விரும்பவில்லை. எனவே, தமது மகள் ஃபாத்திமாவின் வீட்டிற்கு வந்து அவரையும் அலீ (ரழி) அவர்களையும் நோக்கி, ‘‘நீங்கள் விரும்பியதைவிட சிறந்த ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்றார்கள். பிறகு சொன்னார்கள்:
‘‘நீங்கள் தூங்குவதற்காக படுக்கைக்குச் சென்றவுடன், 33 தடவை அல்லாஹ்வை ‘சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்று துதியுங்கள் 33 தடவை ‘அல்ஹம்துலில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) என்று புகழுங்கள் 34 தடவை ‘அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெயரிவன்) என்று பெருமைப்படுத்துங்கள். இது உங்களுக்கு ஓர் அடிமைப் பணியாளர் கிடைப்பதை விடச் சிறந்தது.''
இவ்வாறு கூறி, அந்த இருவர் மனதிலும் இறைவனது உதவியின் மீதுள்ள நம்பிக்கையை விதைத்துவிட்டுச் சென்றார்கள். எப்படிப்பட்ட உதவியை அது செய்ததென் றால், அதனால் மனத்தின் கவலைகளும் உடல் சோர்வுகளும் விலகி மறைந்தன.
அலீ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
‘‘என்றைக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இந்த துதிச் சொற்களைக் கற்றுக் கொடுத்தார்களோ, அன்று முதல் இன்று வரையிலும் நான் அதை அப்படியே அமல் செய்து வருகிறேன்''.
இந்தக் கூற்றைக் கேட்ட அலீயின் தோழர்கள் சிலர், ‘‘நீங்கள் ஸிஃப்ஃபீன் போர்களிலே கடுமையாக ஈடுபட்டிருந்த அந்த இரவுகளிலுமா?'' என்று கேட்டார்கள். உடனே அலீ (ரழி) அவர்கள், ‘‘ஆம்! அந்த ஸிஃப்ஃபீன் இரவுகளிலும் நான் அதை விட்டு விடவில்லை'' என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

கணவருக்குப் பணிவிடை புரிவதில் இன்னொரு முன்னுதாரணத்தையும் இங்கு நாம் சொல்லலாம்.

அபூபக்ர் (ரழி) அவர்களின் மகளார் அஸ்மா (ரழி) அவர்கள் தம் கணவர் ஜுபைர் (ரழி) அவர்களுக்குப் பணிவிடை புரிந்தார்கள். அவரது வீட்டை நல்ல முறையில் பராமரித்து வந்தார்கள்.
ஜுபைர் (ரழி) அவர்களுக்கு ஒரு குதிரை இருந்தது. அந்தக் குதிரைக்கு நீர் புகட்டுவதையும் தீனி போடுவதையும் குளிப்பாட்டுவதையும் அஸ்மா (ரழி) அவர்களே செய்வார்கள். மேலும், அந்தக் குதிரைக்காக தானியங்களையும் பேரீச்ச மர வித்துகளையும் தூரமான இடங்களுக்குச் சென்று, சேகரித்து வருவார்கள்.
அஸ்மா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
‘‘என்னை ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்கள் மணமுடித்துக் கொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரது குதிரையையும் தவிர வேறு எந்தச் செல்வங்களும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அவர் குதிரைக்கு நானே தீனி போடுவேன் தண்ணீர் இறைப்பேன் அவரது தோல் துருத்தியைத் தைப்பேன் மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் பக்கத்து வீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் மிக நல்லவர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து - நானே பேரீச்சங்கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலை மீது சுமந்து வருவேன். அந்த நிலம், இரண்டு மைல் தொலைவில் இருந்தது.
(ஒரு நாள்) நான் என் தலை மீது பேரீச்சங்கொட்டைகளைச் சுமந்து வந்து கொண்டிந்தேன். (வழியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை, (அவர் தம் தோழர்களான) அன்சாரிகளில் சிலர் அவர்களுடன் இருக்கச் சந்தித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக ‘‘இஃக் இஃக்'' என்று சொல்லித் தம் ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால்,) நான் ஆண்களுடன் செல்ல வெட்கப்பட்டேன்.
மேலும், நான் (என் கணவர்) ஜுபைர் (ரழி) அவர்களையும் அவரது ரோஷத்தையும் நினைத்துப் பார்த்தேன். அவர் மக்களில் மிகவும் ரோஷக்காரராக இருந்தார். நான் வெட்கப்படுவதைப் புரிந்து கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று விட்டார்கள். நான் (என் கணவர்) ஜுபைடம் ‘‘(வழியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தலையில் பேரீச்சங்கொட்டைகளிருக்க என்னைச் சந்தித்தார்கள். அவர்களுடன் அவர்களுடைய தோழர்கள் சிலரும் இருந்தனர். நான் ஏறிக் கொள்வதற்காக(த் தமது ஒட்டகத்தை) மண்டியிடச் செய்தார்கள். நான் அவர்களைக் கண்டு வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தையும் நான் அறிந்துள்ளேன்'' என்று கூறினேன். அதற்கு என் கணவர், ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதை விட பேரீச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்ததுதான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது'' என்றார்.
(இவ்வாறாக வீட்டுப் பணிகளில் பெரும் பகுதியை நானே மேற்கொண்டு வந்தேன்.) அதற்குப் பிறகு (என் தந்தை) அபூபக்ர் (ரழி) அவர்கள் எனக்கு ஓர் அடிமையை (உதவிக்காக) அனுப்பி வைத்தார்கள். அந்த அடிமை(ப் பெண்) குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். என்னவோ அது எனக்கு ஒரு பெரியவிடுதலை கிடைத்தது போல் இருந்தது. (ஸஹீஹுல் புகாரி)

இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய மிக முக்கியப் படிப்பினை என்னவென்றால், ஒரு நல்ல முஸ்லிம் பெண்மணி தனது கணவருக்குப் பணிவிடை புரிவதிலும், அவரது வீட்டைப் பராமரிப்ப திலும் அதிக அக்கறையுள்ளவளாக இருப்பாள். தனது கடமையை நன்கு அறிந்திருப்பாள். உண்மையில், கணவருக்குப் புரிய வேண்டிய பணிவிடைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை, சிந்தியுங்கள்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘‘எந்த மனிதனுக்கும் எந்த மனிதனும் சிரம் தாழ்த்தி மரியாதை செய்வதற்கு அனுமதியில்லை அப்படி ஒருவர் மற்றவருக்குச் சிரம் பணிவது அனுமதிக்கப் பட்டதாக இருப்பின், நான் பெண்ணை அவள் தமது கணவருக்குச் சிரம் பணியுமாறு கட்டளையிட்டிருப்பேன் ஏனெனில், கணவருக்குப் பணிவிடை செய்வது அவ்வளவு மகத்துவமானதாக இருக்கிறது.'' இன்னும், சொன்னார்கள்:
‘‘ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்குச் சிரம் பணிய நான் கட்டளை இடுவதாக இருந்தால், கணவருக்கு மனைவி சிரம் பணியுமாறு கட்டளையிட்டிருப்பேன்.'' (ஜாமிவுத் திர்மிதி)

ஒரு முறை ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! பெண்ணின் மீது மிக மகத்தான உரிமை உள்ளவர் யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘அவளது கணவர்'' என்றார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள், ‘‘ஆணின் மீது மிக மகத்தான உரிமையுள்ளவர் யார்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘அவனது தாய்'' என்றார்கள். (முஸ்னதுல் பஸ்ஸார்)

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் ஒரு தேவையை முன்னிட்டு வந்தார்கள். அவர் தம் தேவையைக் கூறி முடித்த பின், நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘உனக்குக் கணவர் இருக்கிறாரா?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண் ‘ஆம்! இருக்கின்றார்' என்றார்.

ம்நீ அவரிடம் எப்படி நடந்து கொள்கிறாய்?' என்று நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அதற்கு அந்தப் பெண், ‘நான் அவருக்குப் பணிவிடை செய்வதிலே, என்னால் முடிந்தளவு எக்குறையும் வைப்பது கிடையாது' என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உபதேசித்தார்கள்: ‘‘நீ அந்தக் கணவரிடம் எந்தத் தகுதியில், தரத்தில் இருக்கிறாய் என்பதைச் சபார்த்துச் சிந்தித்துக் கொள்! ஏனென்றால், கணவர்தான் உனக்குச் சொர்க்கமாக இருப்பார் அல்லது நரகமாக இருப்பார்''. (முஸ்னது அஹ்மது, ஸுனனுன் நஸாம்)

ஒரு முஸ்லிமானப் பெண்மணி நபியவர்களின் இந்த உபதேசங்களையும் எச்சரிக்கைகளையும் கேட்ட பின்பும், தன் கணவருக்கும் அவரது வீட்டுக்கும் பணிவிடை புரிவதிலிருந்து தன்னை தூரமாக்கிக் கொள்வாளா? நிச்சயமாக தூரமாக்கிக் கொள்ள மாட்டாள். தன் கணவர் மீது தனக்குள்ள பொறுப்புகளையும் கடமைகளையும் உணர்ந்து செயல்படுவாள் கவனித்துக் கொள்வாள்.

மேலும், மலர்ந்த முகத்துடன் தன் கணவரை அணுகி ஆதரவு தருவாள். வீட்டு வேலைகளைச் செய்வதைக் கொண்டு மனமகிழ்ச்சி அடைவாள். அதை ஒரு பெரியசுமையாகவோ, சிரமமாகவோ கருதமாட்டாள். தன் வீட்டுக்குத்தான் வேலை செய்கிறோம் என்ற எண்ணத்துடனும், அல்லாஹ்விடம் அதற்கான நன்மைகளைப் பெற்றுக் கொள்வோம் என்ற உறுதியுடனும் தன் கடமைகளைச் செய்து முடிப்பாள்.
நபித்தோழர்களும் மனத்தூய்மையில் அவர்களைப் பின்பற்றியவர்களும் இந்த விளக்கத்தை நன்கு புரிந்து வைத்திருந் தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இதைக் கற்று வைத்திருந் தார்கள். தங்கள் பெண் பிள்ளைகளை மணமுடித்துக் கொடுக்கும் போது, கணவரை நன்கு கவனித்துக் கொள்ளுமாறும், அனுசரித்து நடக்குமாறும் அவர்களுக்கு உபதேசம் செய்வார்கள். எனவேதான், அந்த முஸ்லிம் பெண்மக்கள் நல்லதோர் இல்லறத்தை நடத்தி வந்தார்கள். கணவரைச் சரியான முறையில் பராமரித்து வந்தார்கள். கணவரிடம் அழகிய முறையில் நடந்து கொண்டு, இனிய மனைவியராகத் திகழ்ந் தார்கள். இந்தப் பண்பாடெல்லாம் அவர்களிடம் இயற்கைப் பழக்கங்களாக காலங்காலமாகத் தொடர்ந்தது.

ஒரு நல்ல அறிவுள்ள முஸ்லிம் பெண், தன் கணவருக்கு நற்குணங்களைக் கடைப்பிடிப்பதில் உதவி புரிபவளாக இருப்பாள். தன்னுடைய புத்திக் கூர்மையாலும், நுண்ணறிவாலும் கணவன் நற்குணங்களுக்கு மெருகூட்டக் கூடியவளாக இருப்பாள். காரணம், அப்படி நடந்து கொள்வது அல்லாஹ் தனக்கு இட்ட கட்டளை என்று புரிந்து வைத்திருப்பாள். இதுதான் மார்க்கம் என்றும் விளங்கி வைத்திருப்பாள். நாளை விசாரணை நாளில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்றும், நல்ல முறையில் நடந்தால் நற்கூலி பெறுவோம், மாறு செய்தால் தண்டிக்கப் படுவோம் என்றும் நம்பியிருப்பாள்.

இறையச்சமிக்க நல்ல பெண்கள், எப்படி கணவருக்குக் கீழ்ப்படிய வேண்டுமெனில், கணவன் நல்ல குணங்களுக்கு ஆதரவளித்து அந்தக் குணங்களுடன் ஒத்துப்போக வேண்டும். இவ்வாறு ஒத்துப்போகும் போதுதான் குடும்ப வாழ்க்கையின் சுவையை உணர முடியும். உதாரணமாக, பழக்க வழக்கங்கள், சந்திப்புகள், சாப்பிடுவது, ஆடை அணிவது, பேசுவது மட்டுமின்றி அன்றாடத் தேவைகள் அனைத்திலும் கணவன் விருப்பத்திற்கு ஒத்தவளாக இருக்க வேண்டும். அவரது விருப்பத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும்.

எவ்வளவு தூரம் இந்த விஷயத்தில் ஒரு பெண் அக்கறை காட்டி அதற்கேற்ப நடந்து கொள்வாளோ, அவ்வளவு தூரம் அவளது குடும்பத்தில் ஈடேற்றம், சுபிட்சம், மகிழ்ச்சி, அமைதி ஆகியன நிலவும். மேலும், இஸ்லாம் போதிக்கக்கூடிய உயிரோட்டமுள்ள மணவாழ்க்கைக்கு இதுவே நெருக்கமாகவும் இருக்க முடியும்.

மார்க்கத்தை அறிந்து உணர்ந்து கொண்ட ஒரு முஸ்லிம் பெண்மணி ‘‘தனது கணவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பது, தன்னைச் சொர்க்கத்தில் சேர்த்து வைக்கக்கூடிய நல்ல அமல் - நற்செயல் என்பதை'' ஒருக்காலும் மறந்து விடக்கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘‘ஒரு பெண் ஐங்காலத் தொழுகைகளைத் தொழுது, ரமழான் மாத நோன்பு நோற்று, தனது கணவருக்குக் கீழ்ப்படிந்து நடந்து, தனது கற்பையும் பாதுகாத்துக் கொண்டு நடப்பாளாயின், (மறுமையில்) அவளை நோக்கி நீ சொர்க்கத்தில் எந்த வாசல் வழியாக நுழைய விரும்பினாலும், உன் விருப்பப்படி நுழைந்து கொள்ளலாம்'' என்று சொல்லப்படும். (முஸ்னது அஹ்மது, முஃஜமுத் தப்ரானி)

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக உம்மு ஸலமா (ரழி) அறிவிக்கிறார்கள்: எந்தப் பெண், கணவர் திருப்தியுற்ற நிலையில் மரணிக்கிறாளோ, அவள் சொர்க்கம் புகுவாள். (ஸுனன் இப்னுமாஜா)

நல்லொழுக்கமுள்ள, பிரியத்திற்குரிய, பெருந்தன்மையான, நற்குணமுள்ள, இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெறக்கூடிய பெண் எப்படி இருப்பாள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை நபி (ஸல்) கூறும் போது,

‘‘சொர்க்கத்தில் உங்களுடன் இருக்கும் மனைவியரைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு தோழர்கள், ‘ஆம், அறிவியுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
‘‘அதிகமாகக் குழந்தை பெற்றெடுக்கக் கூடியவள் அதிகமாக நேசிக்கக் கூடியவள் அவளுக்குக் கோபம் ஏற்பட்டாலோ அல்லது தீங்கு இழைக்கப்பட்டாலோ அல்லது அவளது கணவர் கோபித்துக் கொண்டாலோ, கணவரை நெருங்கி அவள் சொல்லுவாள்: ‘இதோ... எனது கைகளை உங்களது கைகளுடன் கோர்த்துக் கொண்டேன் உங்களை விட்டுப் பிரியமாட்டேன் நீங்கள் என்னைக் கொண்டு திருப்தி அடையும் வரை தூக்கத்தால் என் கண்களுக்கு மை தீட்ட மாட்டேன்.' (தூங்கமாட்டேன்) (முஃஜமுத் தப்ரானி)

மனைவி கணவருக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் நன்மையையும் சொர்க்கத்தையும் நற்கூலியாக பெறுவாள் என்று கூறும் இஸ்லாம், மனைவி கணவருக்குக் கீழ்ப்படியாமல் நடந்தால், கணவருக்கு மாறு செய்தால், கணவன் விருப்பங்களைப் புறக்கணித்தால் கடுமையான தண்டனை யையும் வானவர்களின் சாபத்தையும் அந்தப் பெண் அடைவாள் என்றும் எச்சரிக்கிறது.

ஸஹீஹுல் புகாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில் வரக்கூடிய ஒரு ஹதீஸ் இதற்கு மிகப் பெரியசான்றாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறுகிறார்கள்:
‘‘ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவரிடம் அவள் செல்லாம லிருக்க, அதை முன்னிட்டு அவள்மீது கோபம் கொண்ட நிலையில் அவர் இரவைக் கழிப்பாராயின், விடியும் வரை அவளை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக் கின்றனர்.''

மற்றுமொரு ஹதீஸில்,
‘‘என் உயிரை தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவரது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானத்திற்கு மேல் இருக்கும் இறைவன் அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான் அவள் மீது கணவர் திருப்தி கொள்ளும்வரை.!'' ( ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

கணவருக்கு மாறு செய்யக்கூடிய, அவரது விருப்பத்தைப் புறக்கணிக்கக் கூடிய ஒவ்வொரு தீய பெண்களின் மீதும் சாபம் இறங்குகிறது. அவ்வாறே கணவரை அலட்சியப்படுத்தும் பெண்களும் அவரது ஆசையைப் பூர்த்தி செய்வதில் காலம் தாழ்த்தும் பெண்களும் அந்தச் சாபத்திலிருந்து தப்பிக்க முடியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள்: ‘‘இன்ன பெண்ணை அல்லாஹ் சபிப்பானாக! அவள் யார் என்றால், கணவர் படுக்கைக்கு அழைக்கும் போது ‘அப்புறம்! அப்புறம்! அப்புறம்!' என்றபடியே தள்ளிப்போடுகிறாள். பின்பு கணவரும் தூக்கம் மிகைத்து தூங்கி விடுகிறார்''. (முஃஜமுத் தப்ரானி)

பெண்களும் ஆண்களும் தங்களது கற்பைப் பாதுகாத்து பேணிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இஸ்லாம், திருமணத்தை உபதேசித்து முறைப்படுத்தி யுள்ளது. இதனால்தான், கணவர் தன் மனைவியைத் தமது தேவைக்காக அழைக்கும் போது, அவசியம் அவரிடம் செல்ல வேண்டும் எனக் கட்டளையிடுகிறது. கணவர் தம் விருப்பத்திற்கு அழைக்கும் போது இல்லாத காரணங்களைச் சொல்லி சாக்குபோக்குகளைக் கூறி அலட்சியப்படுத்தி விடக்கூடாது என்கிறது. தன்னைக் கணவர் அழைக்கும் போது அவருக்கு இணங்க வேண்டும் என்பதைக் கூறும் ஏராளமான நபிமொழிகள் காணப்படுகின்றன.

உண்மையான மார்க்கக் காரணங்களுக் காகவே தவிர வேறு எதற்காகவும், எவ்வளவுதான் தடைகளும் இடையூறுகளும் இருந்தாலும் மறுக்கக் கூடாது.

நபி (ஸல்) கூறினார்கள்: ‘‘ஒருவர் தமது மனைவியைப் படுக்கைக்கு அழைத்தால், அந்த மனைவி அவருக்குப் பதிலளிக்கட்டும் அவள் ஒட்டகத்தின் மீதிருந்தாலும் சரியே!'' (முஸ்னதுல் பஸ்ஸார்)

மேலும், கூறினார்கள்:
‘‘ஒருவர் தமது மனைவியைத் தேவைக்கு அழைத்தால், அந்த மனைவி அவரிடம் செல்லட்டும் அவள் அடுப்பிலே சமைத்துக் கொண்டிருந்தாலும் சரியே!'' (ஜாமிவுத் திர்மிதி)

இப்படியெல்லாம் நபியவர்கள் கட்டளை ‘டுவதற்குக் காரணம், ஒரு மனைவி தமது கணவரைக் குழப்பமான சூழ்நிலைகளை விட்டும், மனதைப் பதவிக்க வைக்கும் நிலைகளை விட்டும் பாதுகாத்து அவருக்கு அமைதி அளிக்க வேண்டும் என்பதற்கே! இதுதான்அந்த மனைவியின் முதன்மையான கடமையும் ஆகும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாம் விரும்புவதெல்லாம் அவர்கள் இருவரும் ஒரு தூய்மையான சூழ்நிலையில் வாழ வேண்டும் என்பதே! அந்தத் தூய்மையான சூழ்நிலை எப்படி இருக்க வேண்டுமென்றால், தீய ஆசாபாசங்களை விட்டும், தடுக்கப்பட்ட வற்றைக் கொண்டு இன்பம் காணுவதை விட்டும் தூரமானதாக இருக்க வேண்டும். இயற்கையான ஆசைகளை அல்லாஹ் அனுமதித்த வழிகளில் தீர்த்துக் கொள்வதால் மட்டுமே இச்சையின் நெருப்பை அணைக்க முடியும் தவறான வழிகளில் செல்லும் சிந்தனையைக் கட்டுப்படுத்த முடியும்.

‘‘உங்களில் ஒருவரை ஒரு பெண் கவர்ந்து விட்டால் அவர் தமது மனைவியிடம் செல்லட்டும். அவளிடம் தம் தேவைகளை முடித்துக் கொள்ளட்டும். அது அவரது உள்ளத்தில் ஏற்பட்ட(குழப்பத்)தை நீக்கி விடும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

கணவரால் அதிருப்தி கொள்ளப்பட்ட பெண்ணை, மார்க்கம் வன்மையாக கண்டித்திருக்கின்றது. அந்தக் கண்டிப்பைக் கேட்கும் போது இறையச்சமுள்ள ஒவ்வொரு மனைவியும் உள்ளத்தால் நடுநடுங்கி விடுவாள். உண்மையில், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் அவள் பயப்படக் கூடியவளாக இருந்தால், அந்த எச்சரிக்கைகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வாள். ஏனெனில், யார் கணவருக்கு அதிருப்தி அளிக்கின்றார்களோ, அவர்களுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது வானத்தின் பக்கம் அவர்களுடைய எந்த நன்மைகளும் உயர்த்தப்படாது அவர்கள் தமது கணவருக்கு திருப்தி அளிக்கும் வரை அதே நிலையே நீடிக்கும்!

இதை ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு நபிமொழி உறுதிப்படுத்துகிறது.

மூன்று நபர்களுடைய தொழுகையும், அவர்களது நற்செயல்களும் வானத்தின் பக்கம் உயர்த்தப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று நபர்களில் முதலாமவர், ஓடிப்போன ஓர் அடிமையாவார். அந்த அடிமை தன் எஜமானனிடம் திரும்பும்வரை அவரது தொழுகையும், நற்செயல்களும் ஏற்கப்படாது. இரண்டாமவர், கணவரால் கோபிக்கப்பட்ட ஒரு மனைவியாவார். அந்த மனைவி தன் கணவருக்குத் திருப்தியளிக்கும் வரை அவரது தொழுகையும், நற்செயல்களும் ஏற்கப்படாது. மூன்றாமவர், போதை உள்ளவராவார். அவர் போதையை விட்டுத் தெளிவு அடையும் வரை அவரது தொழுகையும், நற்செயல்களும் ஏற்கப்படாது. (ஸஹீஹ் இப்னு ப்பான்)

இந்த இடத்தில் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். மனைவி மீது கணவர் அதிருப்தி கொள்வதற்கு முறையான, நியாயமான, அனுமதிக்கப்பட்ட காரணங்கள் இருக்க வேண்டும். அதாவது, கணவரிடம் சரியான காரணங்கள் இருந்து, மனைவியிடம் குற்றங்கள் இருந்தால் அந்த நேரத்தில்தான் கணவன் கோபம் மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டதாகவும் ஆகுமானதாகவும் ஆகிவிடும். ஆனால், கணவர் இதற்கு மாறாக, நியாயமற்ற காரணங்களுக்காக கோபித்துக் கொண்டால், அது அவரை அக்கிரமக்காரனாகவும், அநியாயக்காரனாகவும் ஆக்கிவிடும். அவர் தன் மனைவியை இந்நேரத்தில் கோபித்துக் கொள்வதால், மனைவிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மாறாக, அல்லாஹு தஆலா அந்தப் பெண்ணுக்கு அவள் காக்கும் பொறுமைக்காக நற்கூலியையே வழங்குவான். எனினும், மார்க்கத்தில் எவை பாவமானவையாக, தடுக்கப்பட்டவையாக இல்லையோ, அந்த விஷயங்களில் எல்லாம் கணவருக்குக் கீழ்ப்படிந்தே ஒரு மனைவி இருக்க வேண்டும். ஆனால், மார்க்கம் தடுத்த விஷயங்களாக இருப்பின் அவற்றில் தன் கணவருக்கு அந்த மனைவி கட்டுப்படக் கூடாது. இஸ்லாமில் இது ஒரு பொதுவான சட்ட விதியாகும்.

எந்த ஒரு படைப்பினத்திற்கும், படைத்த இறைவனுக்கு மாறாக கீழ்ப்படியக் கூடாது என்பது மார்க்கச் சட்டமாகும். இது விஷயமாகத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘‘கணவருக்கு விருப்பமின்றி ஒருவரை வீட்டிற்குள் அனுமதிப்பதும், அவரது விருப்பமின்றி வீட்டை விட்டு வெளியேறுவதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணுக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல! இன்னும், கணவரது விஷயத்தில் பிறருடைய பேச்சைக் கேட்பதும், பிறருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதும் அனுமதிக்கப்பட்டதல்ல! மேலும், கணவன் படுக்கையை விட்டு தூரமாகி இருப்பதும், அவரை அடிப்பதும் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பெண்ணுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல! உண்மையில்,
கணவர் அநியாயக்காரராகவே இருந்தாலும், அவரது திருப்தியைப் பெறுவதற்கே ஒரு மனைவி முயல வேண்டும். அந்தக் கணவர் அவளிடமிருந்து அவள் கூறும் காரணத்தை ஏற்றுக் கொண் டால், அது மிகச் சிறந்தது. அல்லாஹ்வும் அந்தப் பெண்ணின் காரணத்தை (மன்னிப்பை) ஏற்றுக் கொள்கிறான் அவள் தனது கடமையை நிறைவேற்றி விட்டாள் அவள் மீது எந்தக் குற்றமும் இல்லை. ஆனால், அந்தப் பெண் எவ்வளவோ முயன்றும் கணவர் திருப்தியுறவில்லை யெனில், அல்லாஹ்விடம் அவள் தனது மன்னிப்புக்குரிய காரணத்தைச் சமர்ப்பித்த வளாக ஆகிவிடுவாள்..'' (முஸ்தத்ரகுல் ஹாகிம்)

கணவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதும், கட்டுப்பட்டு நடப்பதும் இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு முக்கியப் பண்பாடாகும். இந்த அடிப்படையில்தான், ரமழான் அல்லாத மாதங்களில் நோற்கிற உபரியான (நஃபில்) நோன்புகளை ஒரு மனைவி தன் கணவன் அனுமதியின்றி நோற்கக் கூடாது என இஸ்லாம் கட்டளையிடுகிறது.

அவ்வாறே கணவன் அனுமதியும் திருப்தியுமின்றி எவரையும் அவரது வீட்டிற்குள் அனுமதிக்கவும் கூடாது அவரது சம்பாத்தியத்தை அவர் அனுமதியில்லாமல் செலவளிக்கக் கூடாது (அப்படியே நன்மையான காரணங்களுக்காக செலவளித்தாலும் அதில் ஒரு பகுதி நன்மை கணவருக்கும் வழங்கப்படும்) என்றும் இஸ்லாம் கூறுகிறது.

இறையச்சமுள்ள பெண், அல்லாஹ்வும் அவனது தூதரும் நிர்ணயித்த மார்க்கச் சட்டங்களைப் பேணிக் கொள்வாள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘‘கணவர் உள்;ல் இருக்கும் நிலையில் ஒரு பெண் அவரது அனுமதி இல்லாமல் (உபரியான நஃபில்) நோன்பு நோற்கக் கூடாது. அவரது அனுமதியில்லாமல் (யாரையும்) அவரது வீட்டிற்குள் அனுமதிப்பது ஆகுமானதல்ல கணவர் கட்டளையிடாமலேயே ஒரு பெண் (நல்வழியில் அவரது பொருளைச்) செலவிட்டால் (அதன் நன்மையில்) பாதி அவருக்கும் கிடைக்கும்.'' (ஸஹீஹுல் புகாரி)

இந்த கருத்திலான நபிமொழி ஸஹீஹ் முஸ்லிமிலும் பதிவாகியுள்ளது.

ஒரு பெண் தம் கணவன் வீட்டிலுள்ளவற்றை முறையோடு (அறவழியில்) செலவளித்தால் அவளுக்கும் நற்பலன் உண்டு. அதைப் போன்றே, அதைச் சம்பாதித்தவர் என்ற அடிப்படையில் கணவருக்கும் நற்பலன் உண்டு. அதைப் போன்றே, காசாளருக்கும் (செலவிட உதவியதற்காக நற்பலன்) உண்டு. அவர்களுடைய நற்பலன்களில் சிறிதும் குறைந்து விடாது. (ஸஹீஹ் முஸ்லிம்)

இவற்றின் மூலம் நாம் மிக முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், ஒரு செயலைச் செய்யும் போது அதற்கு கணவன் அனுமதியும் ஆதரவும் இருக்கின்றதா என்பதே! அதாவது, அவரது பொருளைக் கொண்டு அவர் அனுமதியின்றி தர்மம் செய்வது நன்மையாகாது மாறாக குற்றமாகிவிடும். அதே நேரம், அருகே கணவர் இல்லாவிட்டாலும், தான் செய்கிற தர்மத்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என்றால், அந்தத் தர்மம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அதன் நன்மையின் ஒரு பகுதி கணவருக்கும் சேரக் கூடியதாகவும் ஆகிவிடும். ஆனால், தான் செய்யப் போகிற தர்மத்தால் அவர் கோபித்துக் கொள்வார் என இருப்பின், அப்போது தர்மம் செய்வது ஆகுமானதல்ல.
இந்த விஷயங்களில் எல்லாம் கணவன் மனைவி இருவரிடமும் ஒற்றுமை ஏற்பட வேண்டும் முழுமையான புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் எந்த விதமான குழப்பங்களோ, மனச் சங்கடங்களோ ஏற்பட்டு விடக்கூடாது. அப்படி இருவருக்கிடையேயும் மனச்சங்கடங்களும் குழப்பங்களும் ஏற்பட்டு விட்டால், இஸ்லாம் எதிர்பார்க்கிற அன்பு, நேசம், இரக்கம் ஆகிய திருமண நோக்கங்கள் சீர்குலைந்து விடும் அவற்றின் அஸ்திவாரங்கள் உறுதியற்ற வையாக ஆகிவிடும் பொதுவாக இஸ்லாம் திருமண வாழ்க்கையில் தூய்மையையும், ஒருவரை ஒருவர் பாதுகாக்கக் கூடிய, ஒத்தக் கருத்துள்ள போக்கையுமே விரும்புகின்றது.

சில நேரங்களில் கணவர் கஞ்சனாகவும், தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் செலவளிப்பதில் இறுகக் கையை மூடியவராகவும் இருக்கலாம். இந்த நேரங்களில் ஒரு மனைவி அவரது அனுமதியில்லாமலும் அவருடைய செல்வத்திலிருந்து தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் உரிய தேவைகளைப் பூர்த்தி செய்ய மார்க்கம் அனுமதித்திருக்கிறது. இதை அபூ ஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பாவிற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய ஓர் உபதேசத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

(ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூ ஸுஃப்யான் கஞ்சனாக இருக்கிறார். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான(செல்வத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான செல்வத்தை அவராகத் தரமாட்டார்)'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவு நீ எடுத்துக் கொள்!'' என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இந்த நபிமொழியின் மூலம், வீட்டுக் காரியங்களைச் செம்மையாக நிர்வகிப்பதில் பெண்ணே பொறுப்பாளி என்று இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.

முஸ்லிமான பெண் இஸ்லாம் தனக்குக் கொடுத்துள்ள பொறுப்பை நன்கு புரிந்து கொள்வாள். தமது கணவன் வீட்டைப் பாதுகாப்பதிலும், அவரது பிள்ளைகளையும் பொருட்களையும் பராமரிப்பதிலும் இஸ்லாம் தனக்கு வழங்கியுள்ள பொறுப்பை உணர்ந்து செயல்படுவாள் தான் ஒரு பொறுப்பாளி என்பதை நன்கு விளங்கி வைத்திருப்பாள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘‘உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பா ளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படு வீர்கள். தலைவர் பொறுப்பாளர். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தின் பொறுப்பாளன். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவன் வீட்டிற்குப் பொறுப்பாளர். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாளர் தன் எஜமானனின் செல்வத்திற்குப் பொறுப்பாளன். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு நல்ல முஸ்லிம் பெண், எப்போதுமே தன் குழந்தைகளின் மீது அன்பையும் பாசத்தையும் இரக்கத்தையும் பொழிந்து கொண்டிருப்பாள். அன்பால் தன் கணவரை அரவணைத்தவளாக இருப்பாள். இந்த இரண்டும் எல்லாக் காலங்களிலும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டிய முக்கிய நற்குணங்களாகும். இந்த நற்குணங்கள், குறைஷிப் பெண்களிடம் நிறைவாக இருந்ததாக ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தம் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதிலும், கணவன் பொருளையும் வீட்டையும் பாதுகாப்பதிலும், வீண் விரயங்களை விட்டு விலகி நிற்பதிலும் குறைஷிப் பெண்கள் நல்ல முன்மாதிகளாகத் திகழ்ந்தார்கள். இதைத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இப்படிக் கூறினார்கள்:
‘‘ஒட்டகங்களில் ஏறிச் செல்கிற பெண்களிலேயே மிகச் சிறந்த பெண்கள் குறைஷிப் பெண்கள்தான். அவர்கள் தங்களது குழந்தைகளின் மீது அதிக இரக்கமுள்ளவர் களாகவும், தங்கள் கணவன் செல்வத்தைப் பாதுகாப்பதில் அதிகப் பேணுதல் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நாவிலிருந்தே வெளிவந்துள்ள இந்த சாட்சி மிக உன்னதமானது. குறைஷிப் பெண்களுக்கு அவர்களின் உயர்ந்த குணங்களைக் கொண்டு, அல்லாஹ்வின் தூதரே புகழாரம் சூட்டியுள்ளார்கள். இது அந்தக் குறைஷிப் பெண்களின் சிறப்பை இன்னும் அதிகப்படுத்தி விட்டது.

இந்த சாட்சியிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முஸ்லிமான ஒவ்வொரு பெண்களும் தம் குழந்தைகளின் மீது அன்பு காட்டுவதிலும், கணவன் உடைமைகளைப் பாதுகாப்பதிலும் குறைஷிப் பெண்களைப் போன்று வாழ வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள். இந்த மகத்தான தன்மைகளைக் கொண்டே திருமண வாழ்க்கை வெற்றிகரமானதாக அமைய முடியும் தனி நபரும் ஈடேற்றம் பெற முடியும் குடும்பமும் நற்பாக்கியம் பெறும் சமுதாயமும் முன்னேற்றத்தைக் காண முடியும்.

பெண்ணின் சிறப்பே இங்குதான் இருக்கின்றது. அதாவது, தம் கணவருடன் அன்பாக நடப்பதிலும், அவரை அரவணைத்து அவர் காரியங்களைப் பொறுப்பாக நிர்வகிப்பதிலும், காலை மாலை, இரவு பகல் எல்லா நேரங்களிலும் அவருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்வதிலும், மென்மையான அணுகுமுறை களால் அவருக்கு நிம்மதியை, வெற்றியை, பாதுகாப்பை அளிப்பதிலும் மட்டுமே ஒரு பெண் சிறப்பை அடைகிறாள். இதற்கு அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் வாழ்க்கையிலே நல்லதொரு முன்மாதிரி இருக்கின்றது.

ஆயிஷா (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜிலே கலந்து கொள்வார்கள் அனைத்து பணிவிடைகளையும் துதமாகச் செய்வார்கள் ‘இஹ்ராம்' அணிவதற்கு முன்பதாக, நபியவர்களின் மீது நறுமணம் பூசி விடுவார்கள் ‘இஹ்ராம்' களைந்து கடமையான தவாஃபை ஆரம்பிக்கும் முன் நறுமணம் பூசி விடுவார்கள். இன்னும், நபி (ஸல்) அவர்களுக்காக தாமே மிகச் சிறந்த நறுமணம் எது என்று தேர்ந்தெடுப்பார்கள். இதைப் பல தருணங்களில் ஆயிஷா (ரழி) அவர்களே மகிழ்வுடன் தெரிவித்திருக் கிறார்கள். அந்தச் செய்திகள் ஸஹீஹுல் புகாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய நூற்களிலே ஏராளமாக இடம் பெற்றுள்ளன.

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்' அணியும்போது அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன். அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது அவர்கள், கஅபாவைச் சுற்றுவதற்கு (ம்தவாஃபுல் இஃபாழா' செய்வதற்கு) முன்பு அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுவதற்காகவும் அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன். (ஸஹீஹ் முஸ்லிம்)

மற்றோர் அறிவிப்பில்,
‘‘இஹ்ராம் அணியும் நேரத்தில், நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்காக நான் நறுமணம் பூசினேன். இதுபோல் இஹ்ராமிலி ருந்து விடுபடும்போதும் கஅபாவை தவாஃப் செய்வதற்கு முன்னால் நறுமணம் பூசுவேன்'' என்றும் கூறியுள்ளார்கள். (ஸஹீஹுல் புகாரி) இன்னும்,
உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்' அணியும்போது எதனால் அவர்களுக்கு நறுமணம் பூசினீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘மிக நல்ல வாசனைப் பொருளால் (நறுமணம் பூசிவிட்டேன்)'' என்று விடையளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும், சில அறிவிப்புகளில், ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்:
‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்' அணியும் போது அவர்கள் ‘இஹ்ராம்' அணிந்ததற்காகவும், அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்ட போது அவர்கள் ‘தவாஃபுல் இஃபாழா' செய்வதற்கு முன்பும் எனக்குக் கிடைத்தவற்றில் மிக நல்ல நறுமணத்தை அவர்களுக்கு நான் பூசி விட்டேன். (ஸஹீஹ் முஸ்லிம்)

‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்' அணிவதற்காகவும், அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுவதற்காகவும் எனக்குக் கிடைத்தவற்றில் மிக நல்ல நறுமணத்தை நானே பூசிவிடுவேன்.'' (ஸஹீஹுல் புகாரி)

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் ‘இஃதிகாஃப்' இருக்கும் போதும், ஆயிஷா (ரழி) அவர்கள் நபியவர்களுக்குத் தலைவா விடுவார்கள் தலையை கழுவிவிடுவார்கள் என்றும் செய்திகள் பதிவாகியுள்ளன.

ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்:
‘‘நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதிலிருந்து தலையை நீட்டுவார்கள் நான் அவர்களுக்கு தலை வாரி விடுவேன். இஃதிகாஃப் இருக்கும் போது சுய தேவைக்கே தவிர வீட்டிற்குள் வரமாட்டார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)

ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில்,
‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஃதிகாஃபில் இருக்கும் போது பள்ளிவாசலி லிருந்து தலையை என் பக்கம் நீட்டுவார்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களது தலையைக் கழுவி விடுவேன்'' என்று பதிவாகியுள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம்)
கணவருக்குக் கடமையாற்றுவதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறியுள்ள ஓர் அறிவுரை மிக ஆழமானது அழுத்தமானது.
‘‘பெண்களே! உங்கள் கணவருக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமையின் முக்கியத்து வத்தை தெரிந்து கொண்டால், உங்கள் கணவன் பாதத்தில் படிந்திருக்கும் தூசுகளை உங்கள் முகத்தாலேயே துடைத்து சுத்தம் செய்வீர்கள்''. (முஸ்னதுல் பஸ்ஸார், ஸஹீஹ் இப்னுப்பான்)

அதாவது, கணவருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளின் அவசியத்தை ஆயிஷா (ரழி) அவர்கள் இந்த அளவிற்கு வலியுறுத்தினார்கள்.

அவர்களின் வார்த்தைகள் எவ்வளவு ஆழமானவை என்பதைக் கவனிக்க வேண்டும். இப்படிக் கூறுவதின் மூலம் உம்முல் முஃமினீன் - நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கணவரைப் பேணுவதின் அவசியத்தை எல்லாப் பெண்களின் சிந்தனையிலும் பதிய வைக்க நாடினார்கள். தம் கணவரை விட தானே மிகச் சிறந்தவள், மேன்மையானவள், உயர்ந்தவள் என்று பெருமையடிக்கக் கூடிய பெண்கள், அந்த வரட்டுக் கர்வத்தை விட்டும், அந்த எண்ணத்தை விட்டும் நீங்க வேண்டுமென விரும்பினார்கள்.

ஆணவம்தான் குடும்ப வாழ்க்கையின் கோட்டையை அடியோடு தகர்க்கிறது அல்லது நரகமாக்கி விடுகிறது. கணவரிடம் கண்ணியமாக நடந்து கொள்வது நமது சமுதாயத்தின் சிறந்த நற்குணங்களில் ஒன்றாகும். இந்த நற்குணம், அறியாமைக் காலத்தில் கூட நடைமுறையில் இருந்து வந்தது. இஸ்லாம் அதைச் சீராக்கி, செம்மைப்படுத்தி மெருகூட்டியது. இன்றும் அரபிய முஸ்லிம்களிடையே இந்த நற்குணம் வாழையடி வாழையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அங்கு தாய்மார்கள், தங்கள் பெண் மக்களை மணமுடித்துக் கொடுக்கும் போது நல்ல உபதேசங்களைக் கூறி வழியனுப்புவார்கள். அந்த உபதேசங்களில் கணவரைப் பேணுவதின் ஒழுக்கங்களை எல்லாம் தெளிவாக எடுத்துச் சொல்வார்கள். அந்த உபதேசங்கள் சமுதாயத்தைச் சீர்திருத்தும் பிரசாரங்களாக இன்று விளங்குகின்றன. அப்படிப்பட்ட ஒழுக்க போதனைகளில் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில், கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கிய ‘அப்துல் மலிக் பின் உமைர் அல் குறைஷி' என்பவர் அறிவிக்கும் ஓர் அறிவிப்பு மிகச் சிறப்பானது.

அவ்ஃப் இப்னு முஹல்லிம் ஷைபானி என்ற பிரசித்தி பெற்ற ஓர் அரபுத் தலைவர் தமது மகள் உம்மு இயாஸ் என்பவரை ஹாரிஸ் இப்னு அம்ர் என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தார். உம்மு இயாஸ் அலங்கரிக்கப்பட்டு கணவன் வீட்டிற்கு அவர் வழியனுப்பப்படும்போது, அந்தப் பெண்ணின் தாய் ‘உமாமா பின்த் ஹாரிஸ்' வந்தார்.

இலக்கிய நயத்துடன் பேசுகிற அறிவும், சீய சிந்தனையும் கொண்ட அவர், தம் மகளுக்கு அப்போது உபதேசித்தவை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை.

இதோ... அவரது உபதேசம்:

‘‘என் அருமை மகளே! ஒழுக்கத்தில் சிறந்தவருக்கும் உயர்ந்த பரம்பரையைச் சேர்ந்தவருக்கும் உபதேசம் தேவையில்லை என்றால், அது உனக்கும் தேவையில்லை தான்.

இருப்பினும் உபதேசம் என்பது, மறதி உள்ளவர்களுக்கு ஒரு நினைவூட்டல் அறிவுள்ளவர்களுக்கு ஓர் உதவி!

என் அருமை மகளே! தகப்பனது செல்வம், அன்பு, பிரியம் ஒரு பெண்ணுக்குப் போதுமானது என்றால், அவை உனக்கும் போதுமானதுதான்.

இருப்பினும் பெண், ஆணுக்காகப் படைக்கப்பட்டவள் ஆண், பெண்ணுக்காகப் படைக்கப்பட்டவன்.

என் அருமை மகளே! எந்தச் சூழ்நிலைகளில் நீ இதுவரை வளர்ந்து வந்தாயோ, அந்தச் சூழ்நிலைகளிலிருந்து இனி பிரியப் போகிறாய்.

எந்தக் கூட்டிற்குள் நீ வளர்ந்து வந்தாயோ, அந்தக் கூட்டை விட்டு வெளியேறி, இதுவரை அறியாத ஒரு கூட்டிற்குச் செல்லப் போகிறாய்.

நீ பழகாத ஒரு நண்பனிடம் செல்லப் போகிறாய். அந்த நண்பன் உன் மீது உரிமை பெற்றிருப்பதால் உனக்கு அரசனாக ஆகிறான் நீ அவனுக்கு அடிமையாக இருந்தால், அவனும் உனக்கு அடிமையாக மாறி விடுவான்.

நான் உனக்கு பத்து நற்பண்புகளைச் சொல்லுகிறேன். அவற்றை நன்றாக நினைவில் பதித்துக் கொள்.

முதலாவது, உன் கணவரிடம் போதுமென்ற தன்மையுடன் நீ பழகிக் கொள். போதுமென்ற தன்மையில்தான், மனதிற்கு அமைதி இருக்கிறது.

இரண்டாவது, அவன் பேச்சுக்குச் செவிதாழ்த்திக் கட்டுப்பட்டு நடந்து கொள். அதில்தான் அல்லாஹ்வின் பொருத்தம் இருக்கின்றது.

மூன்றாவது, உன் கணவன் மூக்கு எதை நுகர்கிறது என்பதைத் தெரிந்து கொள். நல்ல நறுமணத்தையே தவிர வேறு எதையும் அவர் உன்னிடம் நுகர்ந்துவிட வேண்டாம்.

நான்காவது, உன் கணவன் கண் எதைப் பார்க்கிறது என்பதைக் கவனித்துக் கொள். அருவருப்பான எதையும் உன்னிடத்தில் அவர் பார்த்துவிட வேண்டாம்.

சுர்மா இட்டுக் கொள் அது கண்களுக்கு கவர்ச்சி தரும் குளித்துச் சுத்தமாக இரு; தண்ணீரும் நறுமணங்களில் ஒன்றாகும்.

ஐந்தாவது, கணவர் உணவு உண்ணும் நேரங்களை நன்கு அறிந்து வைத்துக் கொள்! பசி கொழுந்துவிட்டு எயும் நெருப்பாகும்.

ஆறாவது, அவர் தூங்கும் பொழுது அமைதி காத்துக் கொள்! தூக்கத்தைக் கெடுப்பது எச்சலூட்டக் கூடிய செயல்.

ஏழாவது, அவரது உறவினர் மற்றும் குடும்பத்தினரைப் பேணிக் கொள்! அதன் மூலம்தான் குடும்பத்தை அழகிய முறையில் நிர்வகிக்க முடியும்.

எட்டாவது, கணவன் செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்! அதன் மூலம்தான் குடும்பத்தை அழகிய முறையில் சீர்படுத்த முடியும்.

ஒன்பதாவது, கணவன் இரகசியத்தைப் பகிரங்கப்படுத்தாதே. அதனால், அவரது வஞ்சகத்திற்கு ஆளாக நேரிடும்.

பத்தாவது, அவரது கட்டளைகளுக்கு மாறு செய்யாதே. அதனால் அவருக்கு கோபமூட்டியவளாக ஆகிவிடுவாய்!

என்னருமை மகளே! கணவர் துயரத்தில் இருக்கும் போது மகிழ்ந்திருப்பதைத் தவிர்த்துக் கொள்! இது ஒழுக்கக் குறையாகும். அவர் மகிழ்ச்சியுற்று இருக்கும் போது கவலையில் இருப்பதையும் தவிர்த்துக் கொள்! அது (உங்கள் இருவரது) மகிழ்ச்சியை(யும்) கெடுப்பதாகும்.

எந்த அளவிற்குக் கணவரைக் கண்ணியப்படுத்தி, மதிக்க முடியுமோ, அந்த அளவிற்கு மதித்து வாழ்ந்து கொள்! அவரும் உனக்கு அதே அளவிற்குச் சங்கை செய்வார் உன்னைக் கண்ணியப்படுத்துவார்.

மேலும், எந்த அளவிற்கு அவருக்கு கீழ்ப்படிந்தவளாக, கட்டுப்பட்டவளாக இருக்க முடியுமோ, அந்த அளவிற்கு ஒற்றுமையுடன் வாழ்ந்து கொள்! அவர் உன்னை விட்டுப் பிரிய மாட்டார் உன்னுடன் வாழ்வதையும் சேர்ந்திருப்பதையுமே விரும்புவார்.

என் அருமை மகளே! நீ விரும்பியதை உன் கணவரிடம் அடைய வேண்டுமென்றால், உன் விருப்பத்தை விட அவர் விருப்பத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடு! உன் மகிழ்ச்சியை விட அவர் மகிழ்ச்சிக்கே அதிக முன்னுரிமை கொடு! அது உனக்கு விருப்பமாகவோ வெறுப்பாகவோ இருந்தாலும் சரியே!

அல்லாஹ் உனக்கு நன்மையே நாடட்டும் அல்லாஹ் உன்னைப் பாதுகாக்கட்டும்.

இந்த உபதேசங்கள் கூறப்பட்டே அந்த மகள் தம் கணவரிடம் அனுப்பி வைக்கப்பட்டாள். தனது தாயின் வார்த்தைகளுக்கு இணங்க அவள் வாழ்ந்ததால், கணவரிடம் கண்ணியம் அடைந்தாள். அவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைகள், பிற்காலத்தில் அரபுலகத்தின் பிரசித்தி பெற்ற அரசர்களாக இருந்தார்கள் என வரலாறு கூறுகிறது.

உண்மையில், மேற்கூறப்பட்ட நல்லுபதேசங்கள் மிக ஆழமானவை; விசாலமான கருத்துடையவை; நுட்பமான ஞானமிக்கவை. ஒரு வாலிபப் பெண் தமது கணவருடன் வாழத் தேவையான எல்லா நற்பண்புகளையும், நல்ல நடத்தைகளையும், நுண்ணறிவையும் அந்த உபதேசங்கள் உள்ளடக்கியுள்ளன. எனவேதான், மணமுடிக்க இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அந்த உபதேசங்கள், பொருத்தமான வாழ்க்கை வழிகாட்டிகளாக இருக்கின்றன.

இறையச்சமுள்ள ஒரு முஸ்லிம் பெண்மணி, செல்வம் படைத்த சீமாட்டியாக இருந்தாலும், அவளது செல்வம் அவள் பார்வையைக் குருடாக்கி விடக் கூடாது. கணவரை விட தன்னிடமே செல்வம் அதிகமிருப்பதாக எண்ணி, தானே சிறந்தவள் என்று கர்வம் கொண்டு விடக் கூடாது. மாறாக, எப்போதும் அவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், அவரது உரிமைகளையும் பாதுகாத்து அவர் விரும்பும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் எவ்வளவுதான் இருந்தாலும் கணவன் மதிப்பை மட்டந்தட்டிவிடக்கூடாது.

தனக்கு அல்லாஹ் புரிந்துள்ள அருட்கொடைகளுக்கு நன்றியையும் உபகாரத்தையும் வெளிப்படுத்த வேண்டும். அல்லாஹ்வின் திருப்தியை வேண்டி, தானதர்மங்களை அதிகப்படுத்த வேண்டும். அப்படி தனது புறத்திலிருந்து கொடுக்கப் படுகிற தர்மங்களிலேயே முதலாவதாக அதைப் பெறும் தகுதியுள்ளவர், தம் கணவரே என்பதை உணர வேண்டும். அதாவது, வறுமையிலும் ஏழ்மையிலும் கணவர் இருந்தால், தனது செல்வத்தை முதலில் அவருக்கே செலவளிக்க வேண்டும். இதன் மூலமாக அந்தப் பெண்ணுக்கு இரண்டு கூலிகள் கிடைக்கின்றன. ஒன்று, உறவுக்குச் செய்த உபகாரத்திற்கான கூலி; மற்றொன்று, தர்மத்திற்கான கூலி.

இதோ... அதற்கான ஆதாரம்!

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களின் மனைவி ஜைனப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் பள்ளிவாம்லில் இருந்த போது நபி (ஸல்) அவர்கள், ‘‘பெண்களே! உங்களின் நகைகளிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்'' எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரழி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அனாதைக ளுக்கும்" செலவளிப்பவளாக இருந்தேன். எனவே, என் கணவரிடம், ‘நான் உங்களுக் காகவும் எனது அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவளிப்பது தர்மமாகுமா?' என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் என்றேன். அவரோ ‘நீயே சென்று கேள்!' எனக் கூறிவிட்டார். எனவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டு வாம்லில் ஓர் அன்ஸாப் பெண்ணும் அப்போது நின்று கொண்டிருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது (எங்களுக்கு) மதிப்பு கலந்த அச்சம் இருந்தது. (எனவே, வெளியிலேயே நின்று கொண்டிருந்தோம்) அந்த நேரத்தில் எங்களிடையே பிலால் (ரழி) வந்தார். அவரிடம் நான், ‘எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அனாதைகளுக்கும் நான் செலவளிப்பது தர்மமாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள் நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம்' எனக் கூறினோம். பிலால் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்ட போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்த இருவரும் யார்?'' எனக் கேட்டார்கள். அதற்கு, ‘‘ஓர் அன்சாரிப் பெண்ணும் ஜைனபும்'' என்று பிலால் (ரழி) பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘எந்த ஸைனப்?' என்று கேட்டார்கள். ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களுடைய மனைவி ஸைனப்' என்று பிலால் பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அந்த இருவருக்கும் இரு நன்மைகள் உண்டு. ஒன்று, உறவுக்குரியது மற்றொன்று தர்மத்திற்குரியது'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி ஸஹீஹ் முஸ்லிம்)

புகாரியின் மற்றோர் அறிவிப்பில், ‘‘உன் கணவரும் உன் குழந்தைகளுமே" உனது தர்மத்தைப் பெறுவதற்கு அதிக உரிமை உள்ளவர்கள்'' என்று நபி (ஸல்) கூறியதாக பதிவாகியுள்ளது. (ஸஹீஹுல் புகாரி)
மார்க்கத்தைப் பேணிப் பாதுகாக்கக் கூடிய முஸ்லிமான பெண், எந்த நேரத்திலும் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவாள். அல்லாஹ்வின் அருட் கொடை, தன்னைச் சூழ்ந்திருக்கும் நேரத்தில் அதற்காக நன்றி செலுத்துவதை மறந்துவிட மாட்டாள். அதே நேரம், சோதனைகளும் சிரமங்கள் ஏற்படும் போது பொறுமை காத்துக் கொள்வாள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்த விஷயங்களை அலட்சியப் படுத்திவிட மாட்டாள். நரகத்தில் பெண்களே அதிகமாக இருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கண்டிருக்கிறார்கள். எனவே, அந்த நரகப் பெண்களில் தானும் ஒருத்தியாக இருந்து விடக் கூடாது என்று அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவாள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண்களே! நீங்கள் அதிகமதிகம் தர்மம் செய்யுங்கள். நரகத்தில் உங்களைத்தான், நான் அதிகமாகப் பார்த்தேன். ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அதிகமாக நரகில் இருக்க என்ன காரணம்?'' என்று பெண்கள் கேட்டார்கள். ‘‘நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள் கணவருக்கு மாறு செய்கிறீர்கள். கூய அறிவுடைய ஆண் மகனின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்தி(ன் கடமைம்)லும் குறையுடையவர்களாக இருக்கும் நீங்கள் போக்கி விடுகிறீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
ஸஹீஹுல் புகாரியின் மற்றோர் அறிவிப்பில், ‘‘எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்'' என்று நபி (ஸல்) கூறிய போது, ‘இறைவனையா நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘கணவனை நிராகரிக்கிறார்கள் உதவிகளை நிராகரிக் கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலமெல்லாம் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் பார்த்துவிட்டா ளானால் ‘உன்னிடமிருந்து ஒரு போதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசி விடுவாள்'' என்று கூறியதாக பதிவாகியுள்ளது. (ஸஹீஹுல் புகாரி)
இமாம் அஹ்மத் அவர்களின் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் பற்றி இவ்வாறு கூறிய சமயத்தில் ஒரு தோழர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அந்தப் பெண்கள் - எங்கள் தாய்மார்கள் அல்லவா? சகோதரிகள் அல்லவா? மனைவியர் அல்லவா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்! அப்படித்தான். ஆனால், அவர்களுக்கு வாரி வழங்கப்பட்டாலும் அவர்கள் நன்றி செலுத்துவதில்லை சோதனைக் காலங்களில் பொறுமை காப்பதில்லை!'' என்று கூறியதாக உள்ளது. (முஸ்னது அஹ்மது)

தூய்மையும் இறையச்சமும் மிக்க முஸ்லிம் பெண்மணி இந்த ஆதாரமிக்க நபிமொழிகளைச் சிந்தித்து, மறுமையில் தாமும் அந்த நரகவாசிகளில் ஒருத்தியாக ஆகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். கணவருக்கு மாறு செய்வதை விட்டும், அவனுக்கு நன்றி கெட்டத்தனமாக நடப்பதை விட்டும், உபகாரத்தை மறுப்பதை விட்டும், சபிப்பதை விட்டும், செல்வ வசதியுள்ள காலங்களில் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தாமல் இருப்பதை விட்டும், சிரமங்களின் போது பொறுமை இழப்பதை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும்.

பொதுவாக நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியிருக்கும் தர்மங்களைச் செய்வதிலே ஈடுபாடு காட்ட வேண்டும். அந்த தர்மங்கள்தான், நாளை மறுமை நாளில் தங்களை அழிவிலிருந்து பாதுகாக்கக் கூடியது என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்விற்கும் மறுமை நாளிற்கும் அஞ்சாமல், வாழ்க்கையில் ஒழுக்கமின்றி வாழ்ந்த பெண்கள், மறுமையில் பெயதொரு நஷ்டத்தில் இருப்பார்கள். அவர்களிடம் இருந்த தீய பண்புகளே அவர்களை நரகத்தில் புகுத்திவிட காரணமாகிவிடும். மாறாக, நேர்வழி பெற்ற முஸ்லிம் பெண்கள் தம் கணவரைக் கண்ணியப்படுத்துவதிலும், அவரது சிறப்புகளைப் பிரஸ்தாபிப்பதிலும், அவன் நற்குணங்களை நினைவுகூர்வதிலும் அழகிய பண்புகளைப் பரப்புவதிலும் முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

கணவன் உரிமைகளைக் கண்ணியப் படுத்த வேண்டும். அல்லாஹ் கணவருக்கு வழங்கியுள்ள மேன்மைகளை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். தங்கள் கணவன் பாராட்டத்தக்க தன்மைகளை நினைவுகூர வேண்டும். அவற்றைப் புரிந்து வைத்திருக்க வேண்டும்.
இஸ்லாமிய வரலாற்றில் இவற்றிற்கு நல்லதொரு முன்னுதாரணங்கள் இருக்கின்றன. அந்த முன்னுதாரணங்களில் ‘அஸ்மா பின்த் உமைஸ் (ரழி)' அவர்களைப் பற்றிய செய்தி ஒரு நல்ல சான்றாகும்.

ஆரம்பக் காலத்திலேயே இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களில் அஸ்மா பின்த் உமைஸும் ஒருவராவார். சிறந்த நல்லடியாராக இருந்த இவரை முதலில் ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரழி) அவர்கள் மணமுடித்தார்கள். ஜஅஃபர் (ரழி) அவர்கள் மரணமடைந்த பின், அவரை அபூபக்ர் சித்தீக் (ரழி) அவர்கள் மணமுடித்துக் கொண்டார்கள். அபூபக்ர் (ரழி) அவர்களும் மரணித்து விட, பின்னர் அலீ (ரழி) அவர்கள் அஸ்மாவை மணமுடித்தார்கள்.

இந்த நிலையில் ஒரு நாள் ஜஅஃபர் (ரழி) அவர்களின் மகன் முஹம்மதும், அபூபக்ர் (ரழி) அவர்களின் மகன் முஹம்மதும் தங்கள் இருவரில் யார் சிறந்தவர் என்பதில் தர்க்கித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் இன்னொருவரைப் பார்த்து ‘‘உன் தந்தையை விட என் தந்தையே உயர்ந்தவர் எனவே, உன்னை விட நானே சிறந்தவன்'' என்று கூறினார். இதைப் பார்த்த அலீ (ரழி) அவர்கள், ‘‘அஸ்மாவே! இவர்களுக்கு மத்தியில் நீயே தீர்ப்புச் சொல்லிவிடு'' என்று அஸ்மா (ரழி) அவர்களை நோக்கி கூறினார்கள். அப்போது அஸ்மா (ரழி) அவர்கள், ‘‘நான் அரபுகளிலேயே ஜஅஃபரை விடச் சிறந்த ஒரு வாலிபரைப் பார்த்ததில்லை அபூபக்ரை விடச் சிறந்த ஒரு நடுத்தர வயதுடையவரையும் பார்த்ததில்லை'' என்றார்கள்.

இதைக் கேட்ட அலீ (ரழி) அவர்கள், ‘‘அஸ்மாவே! இதில் என்னைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே; அதே சமயம் அவர்களைப் பற்றி இது தவிர்த்து வேறு எதையாவது நீ கூறியிருந்தால், நான் உன்னைக் கோபித்திருப்பேன்'' என்றார்கள். அதற்கு அஸ்மா (ரழி) அவர்கள், ‘நீங்கள் மூன்றுபேரும் நிச்சயமாக நல்லோரே! நீர் அவர்களில் வயது குறைந்தவர்! என்று கூறி முடித்தார்கள்.

இங்கு அஸ்மா (ரழி) அவர்களது அறிவின் முதிர்ச்சியைக் கவனிக்க வேண்டும். அவர் மணம் முடித்த கணவன்மார்கள் எல்லோருக்கும் அவரவருக்குத் தகுந்த கண்ணியத்தை வழங்கினார்கள். குறிப்பாக அலீ (ரழி) அவர்களையும் திருப்திப்படுத் தினார்கள். அவரது ஞானம்தான் எவ்வளவு ஆழமானது! அவரது பதில்தான் எவ்வளவு நுட்பமானது!

முஸ்லிம் பெண்மணி - தம் கணவன் தாய்க்கு உபகாரம் செய்வாள் அவன் குடும்பத்தார்களைக் கண்ணியப் படுத்துவாள்.

நல்லறிவுள்ள முஸ்லிம் மனைவி, தம் கணவரைக் கண்ணியப்படுத்துவதுடன் அவரது தாய்க்கும் உபகாரம் புரிவாள். அல்லாஹ்வின் மார்க்கத்தைக் கற்று வைத்துள்ள அவள், தம் கணவருக்கு அவரது தாய் மீதுள்ள கடமையையும் தெரிந்து வைத்திருப்பாள். எனவே, தமது கணவர் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமைகளில், தானும் உதவி புரிவாள். இதனால் தனக்கும் தம் கணவருக்கும் நன்மை புரிந்தவளாகி விடுவாள்.

அல்லாஹ் உபதேசிக்கிறான்:
நன்மைக்கும் (அல்லாஹ்வின் மீதான) இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக் கொருவர் உதவியாக இருங்கள். (அல்மாயிதா 5:2)

இந்த அல்குர்ஆன் வசனத்திற்கேற்ப அவள் நடந்து கொள்வதால், கணவன் பிரியத்திற்கு பாத்திரமானவளாக ஆகுவாள். தன் மனைவி தனது தாய்க்கும் தனது குடும்பத்திற்கும் செய்கிற உபகாரங்களை எண்ணி அந்தக் கணவர், அவளைச் சங்கையுடன் கண்ணியப்படுத்தி வைத்துக் கொள்வார்.

ஒரு வீரமிக்க ஆண்மகனின் மனதைக் குளிர வைப்பதெல்லாம், அவரது மனைவிக்கும் அவரது குடும்பத்திற்கும் இடையே நிலவுகிற உறுதியான அன்பு, உண்மையான நேசம், பரஸ்பர புரிந்துணர்வு, ஒற்றுமை ஆகியவையே!

அதே போல் அந்த ஆண்மகனைக் கோபமூட்டுவதெல்லாம், அவரது மனைவிக் கும் அவரது குடும்பத்திற்கும் இடையே நிலவுகிற பொறாமை, குரோதம், வெறுப்பு, பகைமை, சச்சரவு ஆகியவையே!

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு ‘ஈமான்' என்ற நறுமணத்தால் மணம் வீசுகிற ஒரு முஸ்லிம் குடும்பம், தங்களது அறிவையும், உணர்வையும் இஸ்லாமிய வழிகாட்டுதலின்படி பிரகாசம் பெறச்செய்ய வேண்டும். மடத்தனமான அறியாமைச் செயல்களில் இருந்து தூரமாக வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், குடும்பத்தில் பிரச்சனைகளும் சிக்கல்களுமே மிஞ்சும்.
சில முஸ்லிம் பெண்மணிகளுக்கு அவர்களது கணவன்மான் சகோதர சகோதரிகள், உறவினர்கள் ஆகியோர் உயர்ந்த நற்பண்புகள் இல்லாதவர்களாக இருப்பார்கள். இது போன்ற சூழ்நிலைகளில் அவர்களிடம் மென்மையான அணுகுமு றையை மேற்கொள்ள வேண்டும். அப்போது மதி நுட்பத்துடனும், சமயோசித புத்தியுடனும், தவறுகளை நயமாகச் சுட்டிக் காட்டுகிற நாககத்துடனும், நன்மைகளை ஏவுகிற ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே, கணவரது உறவினர்களை ஒரு சமநிலையில் பேண முடியும். மேலும், தன்னையும் தனது திருமண வாழ்க்கையையும் சச்சரவுகள், குழப்பங்கள் போன்றவற்றை விட்டுப் பாதுகாக்க முடியும்.

கணவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் உபகாரம் செய்யும்படி முஸ்லிமான பெண் கட்டளையிடப்பட்டுள்ளாள். அதே நேரம், ‘தனக்கு மட்டுமே அந்தக் கட்டளை, கணவருக்கு இல்லை கணவர் குடும்ப கடமைகளையும் ஒழுக்கங்களையும் பேணவில்லை என்றாலும் அவர் மீது எவ்வித குற்றமும் இல்லை' என்று நினைத்து விடக் கூடாது.

மண வாழ்க்கையை முறைப்படுத்தி, சீர்படுத்தியுள்ள இஸ்லாம், கணவர் மனைவியர் இருவருக்கும் தனித்தனியான பொறுப்புகளையும் கடமைகளையும் சுமத்தியிருக்கிறது.

எப்படி கணவருக்கு மனைவி செய்ய வேண்டிய கடமைகள் உள்ளனவோ, அதே போல் மனைவிக்கு கணவர் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. அந்தக் கடமைகள் மனைவியின் கண்ணியத்தையும், தனித்தன்மைகளையும் பாதுகாக்கின்றன. இன்னும், அவளுடன் தவறாகவோ, அலட்சியமாகவோ, அநியாயமாகவோ அந்தக் கணவர் நடப்பதை விட்டும் பாதுகாக்கின்றன.

பெண்ணின் உரிமைகளைப் பேணுவது கணவன் மீது கடமையாகும். கணவர் தன் மனைவியின் உரிமைகளைக் கண்ணியப் படுத்த வேண்டும் தனது கடமைகளைச் செம்மையாக நிறைவேற்ற வேண்டும்.

ஒரு நல்ல முஸ்லிமான கணவன் கடமை, தனது மனைவியை நல்ல முறையில் நிர்வகிப்பதாகும். அப்படி நிர்வகிக்கும் போது, தன் குடும்பம் சீர்குலையாதபடி வெற்றி கரமாகவும் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு அவரது மனைவி விரும்பக் கூடிய தனித்தன்மையான குணங்களும் அவரிடம் இருக்க வேண்டும்.

உதாரணமாக, தன் விருப்பத்தைச் சாதிப்பதில் கடினப்போக்கு காட்டாமல் நளினம் காட்ட வேண்டும் பலவீனனாக இருக்காமல் உயர்ந்த கொள்கை உறுதி உள்ளவராக இருக்க வேண்டும். அதே சமயம், சகிப்புத்தன்மையுடன் நடந்து, மன்னிக்கும் மனப்பான்மையும் இருக்க வேண்டும். மணவாழ்க்கையின் எல்லாப் பக்கங்களையும் புரிந்து கொண்டு, வழி நடத்தக் கூடிய திறமை இருக்க வேண்டும். பெருந்தன்மை பரந்த மனப்பான்மை இருக்க வேண்டும். வீண் விரயமோ, வரம்பு மீறிய செலவுகளோ அவரிடம் இருக்கக் கூடாது. மனைவியின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும். வீட்டையும் பிள்ளைகளையும் பேணுவதில் உயர்ந்த இஸ்லாமியக் குடும்பத்தை உருவாக்குவதில் அவளது பொறுப்புகளை அவளுக்கு உணர வைக்க வேண்டும்.


கணவரிடம் அன்பாக நடந்து கொள்வாள் - அவரது மகிழ்ச்சியை அடைய பேராவல் கொள்வாள்:

இறையச்சமுள்ள முஸ்லிம் பெண்மணி, எந்நேரமும் தமது கணவன் பிரியத்தைத் தேடுவாள். அவரைத் திருப்திப்படுத்துவதிலும், மகிழ்ச்சியுறச் செய்வதிலும் பேராசை கொண்டிருப்பாள்.

கணவன் வாழ்க்கையை எந்த அசம்பாவிதமும் அணுகி விடக்கூடாது என்பதிலும், அவரது சந்தோஷத்தை எதுவும் சீரழித்து விடக்கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பாள்.

தம் கணவரை ஆனந்தப்படுத்தும் வார்த்தைகளைப் பேச வேண்டும் அவரது சிந்தனைக்குப் புத்துணர்வு ஊட்டும் விஷயத்தையே பேச வேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பாள்.

கணவன் மனதைப் புண்படுத்தும் வார்த்தைகளைப் பேச மாட்டாள் அவரை நோகடிக்கும் பேச்சுகளை விட்டும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வாள் அவரிடம் நல்ல செய்திகளையே சொல்ல வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவாள். அவரைக் கவலையுறச் செய்யும் செய்திகளை முடிந்த வரை தவிர்க்கவே செய்வாள் அதையும் தாண்டி, அவரிடம் சொல்லியே ஆக வேண்டும் என்ற நிலையிருப்பின், அதை எந்த நேரத்தில், எப்படிச் சொன்னால் அதன் திடுக்கம் அவரைத் தாக்காது என்று சிந்தித்துக் கொள்வாள். அந்தத் துயரச் செய்தியைச் சொல்லும் முன், சில வார்த்தைகளை அதற்கு முன்னுரையாகப் பேசுவாள். பிறகு, அவர் உள்ளம் காயம் படாதபடி நளினமாகவும், நயமாகவும் அந்த விஷயத்தை அவரிடம் எடுத்துச் சொல்வாள்.

உண்மையில், இந்த அணுகுமுறை மிக சவாலான செயலே என்றாலும், புத்திக் கூர்மையுள்ள பெண்களுக்கு சாத்தியமான ஒன்றுதான். அப்படிப்பட்டவர்களில் ஒருவரா கத்தான் உம்மு ஸுலைம் பின்த் மில்ஹான் (ரழி) அவர்களை அறிகிறோம். இந்த நிகழ்ச்சியை இங்கு பதிவு செய்வதற்கு முன், நாம் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். இது மட்டும் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகாது போயிருந்தால், இதை வெறும் கதையாகவே நம்பியிருப்போம்.

ஒரு நாள் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களின் ஆண் குழந்தை திடீரென இறந்து விட்டது. கணவர் அபூதல்ஹா (ரழி) வெளியே சென்றிருந்தார். குழந்தை இறந்து விட்டதை அறிந்தவுடன், உம்மு ஸுலைம் (ரழி) செய்த முதல் வேலை, ‘அந்தக் குழந்தை இறந்ததைப் பற்றி, அபூதல்ஹாவிடம் யாரும் சொல்ல வேண்டாம் நானே சொல்லுகிறேன்' என்று தம் குடும்பத்தாரிடம் சொல்லி வைத்ததுதான்.

அபூதல்ஹா (ரழி) அவர்கள் வீட்டிற்கு வந்த பிறகு அவருக்கு எப்போதும் போல் உம்மு ஸுலைம் (ரழி) உணவு பரிமாறினார். பிறகு தன்னை மிக அழகிய முறையில் அலங்கரித்துக் கொண்டார். அபூதல்ஹா மனைவியிடம் தனது ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டார். தன் கணவன் ஆசை பூர்த்தியாகி விட்டதை அறிந்த பின், அவரிடம் மெல்லப் பேச்சு கொடுத்தார் உம்மு ஸுலைம்.

‘‘ஒரு கூட்டத்தினர் ஒரு வீட்டாரிடம் சில பொருட்களை இரவலாகக் கொடுத்து விட்டு, பிறகு ஒரு நேரத்தில் அதை வாங்கிக் கொள்ள நினைக்கும் போது, அந்த வீட்டார் அப்பொருட்களைத் தர மறுப்பதற்கு அனுமதி இருக்கிறதா?'' என்று கேட்டார். அதற்கு அபூதல்ஹா (ரழி), ‘இல்லை!' என்று பதிலளித்தார். அப்போது உம்மு ஸுலைம், ‘‘அப்படியானால், உமது குழந்தையின் இழப்பை (அல்லாஹ்விடம் கிடைக்கப் பெறும் நன்மையாக) நினைத்துக் கொள்ளுங்கள்! என்றார்கள்.

இதைக் கேட்டவுடன் அபூதல்ஹா (ரழி) அவர்களுக்குக் கோபம் மிகைத்து விட்டது. ‘நான் பெருந்தவறு செய்து விட்டேன்!' என்றவாறு தன் நிலையை ஒரு குற்றமாக எண்ணினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்து, நடந்ததைச் சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘அல்லாஹ் உங்கள் இருவருக்கும் கடந்த இரவில் அருள் செய்வானாக! அருளைப் பொழிவானாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.

தன் தூதருடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் கர்ப்பமானார்கள். அவர்கள் கர்ப்பமாகி பிரசவிக்கக் கூடிய நிலைக்கு வந்த சமயத்தில் அபூதல்ஹாவுடன் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அந்த பயணம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு சென்ற பயணம். மதீனாவை நோக்கி அவர்கள் வந்து கொண்டிருந்த அந்தத் தருணத்தில் இரவு வந்து விட்டது. பொதுவாகவே இரவு நேரங்களில் மதீனாவிற்குள் நுழைகிற வழக்கம் நபி (ஸல்) அவர்களிடம் இருந்ததில்லை. நகருக்கு வெளியிலேயே தங்கி இருந்து விட்டு, அதிகாலையில் தான் நுழைவார்கள்.

இந்த நிலையில் மதீனாவிற்கு அருகில் அனைவரும் வந்துவிட்டனர். உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது.

மனைவிக்காக அங்கேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு, நபி (ஸல்) அவர்களோடு சேர்ந்து மதீனாவிற்குள் நுழைய முடியாததை எண்ணி அபூதல்ஹா (ரழி) அவர்கள் மிகவும் வருந்தினார்கள்.

‘‘என் இறைவனே! எப்போதும் உனது தூதருடன் இருப்பதையே நான் விரும்புகிறேன் அவர் வெளியேறினால் நானும் வெளியேற வேண்டும் அவர் நுழைந்தால் நானும் நுழைய வேண்டும் எதற்காக நான் தடுக்கப்பட்டுள்ளேன் என்பதை நீயே அறிவாய் அல்லவா?'' என்று பிரார்த்தித்தார்கள்.

அபூதல்ஹா (ரழி) அவர்களின் நிலையைப் பார்த்த உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் ‘‘அபூதல்ஹாவே! இது எனக்கு ஏற்பட்டுள்ள பெரியசிரமம் ஒன்றுமில்லை நாம் செல்லலாம்'' என்றார்கள். பிறகு இருவரும் நபியவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.

மதீனாவில் நுழைந்த பிறகு உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
உம்மு ஸுலைம் (ரழி) என்னிடம் ‘‘அனஸே! இந்தக் குழந்தையை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் காலையில் கொண்டு செல்லும் வரை எவரும் இதற்குப் பால் கொடுக்கக் கூடாது'' என்று கூறிவிட்டார். நான் காலை விடிந்தவுடன் நபியவர்களிடம் அந்தக் குழந்தையைத் தூக்கிச் சென்றேன். என்னைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்திற்கு அடையாளம் இடுவதற்காக தம் கையில் வைத்திருந்த இரும்பை ஓர் ஓரமாக வைத்து விட்டு ‘‘உம்மு ஸுலைம், குழந்தை பெற்று விட்டாரா?'' என்று கேட்டார்கள்.

நான் ‘ஆம், குழந்தை பெற்று விட்டார்' என்றேன். உடனே குழந்தையை தம் கைகளில் வாங்கிய நபியவர்கள், மதீனாவின் ‘அஜ்வா' பேரீச்சங்கனிகளில் ஒன்றைப் பெற்று, அதைத் தமது வாம்லிட்டு மென்று இளகியதாக்கி அதில் சிறிதை குழந்தையின் வாயில் வைத்தார்கள்.

குழந்தை அதைச் சுவைக்க ஆரம்பித்தது. நபியவர்கள் அந்தக் குழந்தையைச் சுட்டிக் காட்டி, ‘‘பாருங்கள்! அன்சாரிகள் எந்த அளவிற்கு பேரீச்சங்கனிகளை நேசிக்கிறார்கள்!'' என்றார்கள். குழந்தையின் முகத்தை மென்மையாகத் தடவி, ‘அப்துல்லாஹ்' என்றும் பெயரிட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும். உம்மு ஸுலைமே! உன் ஈமான் எவ்வளவு மகத்துவமானது. உனது பொறுமை எவ்வளவு போற்றத்தக்கது! கணவருக்காக தன்னை அலங்கரித்துக் கொண்டு அவரது அன்பை நீ அடையத்தேடியது எந்தளவு சிறப்புமிக்க செயல்! உனது அன்பு பிள்ளை இறந்த துக்கத்தை உன்னால் எப்படி சகித்துக் கொள்ள முடிந்தது! உன் பொறுமை, நீ கணவருடன் அழகிய முறையில் நடந்து கொண்டது - இவை அனைத்திலும் அல்லாஹ்வின் அன்பை அல்லவா நீ எதிர்பார்த்தாய்! ஆம் இதுதான் ஆழமான உண்மை இறைநம்பிக்கை ஆகும்.
உம்மு ஸுலைம் கர்ப்பமான சமயத்தில்தான் மக்காவை வெற்றி கொள்ள நபி (ஸல்) புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஜிஹாதில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில் உம்மு ஸுலைம் (ரழி) நபியவர்களிடம் அனுமதி கேட்க, நபியவர்களும் அனுமதி வழங்கினார்கள். எவ்வளவு தூரமான பயணம், கரடுமுரடான பாதை, வெயில், வாகன வசதியின்மை என எதையும் பொருட்படுத்த வில்லை. மக்கா நகரம் நல்ல முறையில் வெற்றி கொள்ளப்பட்டது. பிறகு நபி (ஸல்) ஹுனைன் நோக்கி புறப்பட, அதிலும் உம்மு ஸுலைம் (ரழி) கலந்து கொண்டார்கள். இந்தப் போரோ மிகக் கடுமையாக இருந்தது. பல உறுதிமிக்க தோழர்கள் கூட பின்வாங்கிவிட, உம்மு ஸுலைம் நிலைகுலையாமல் நின்றார். பிறகு மதீனா நெருங்கும்போது பிரசவ வேதனையை உணர, சற்று தாமதித்தார். ஆனால் நபியர்களுடன் சேர்ந்து மதீனாவிற்குள் நுழைய வேண்டும் என்ற ஆர்வ மிகுதியில் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார். வலி குறைந்தது. மதீனாவிற்குள் நுழைந்தவுடன் குழந்தை பிறக்க் அதை நபியவர்களிடம் அனுப்பி வைத்தார். நபியவர்கள் அந்தக் குழந்தைக்காக துஆ கேட்கிறார்கள். அல்லாஹ் அதை அங்கீகரித்து அந்தக் குழந்தையின் சந்ததியில் பத்து பெரும் மார்க்க அறிஞர்களை நமக்குத் தந்தான்.
நிச்சயமாக அல்லாஹ் அவன் உறுதிமிக்க நம்பிக்கையை அறிந்தவன். அவருக்குத் தனது நபியின் வாயிலாக நற்செய்தி வழங்கினான். நபி (ஸல்) சொன்னார்கள் ‘‘நான் சொர்க்கத்தில் நுழைந் தேன். அங்கு காலடி சப்தத்தைக் கேட்டேன். இது யாருடைய சப்தம் என்று கேட்டேன். இவர்தான் மில்ஹானின் மகள் அனஸ் இப்னு மாலிகின் தாய் என்று வானவர்கள் பதில் அளித்தனர்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு முஸ்லிம் பெண்மணி, தனது கணவருடன் அன்பாக நடந்து கொள்வதற்கு மற்றுமோர் உதாரணமாக ஆயிஷா (ரழி) அவர்களின் வாழ்க்கை நம் முன் இருக்கிறது.

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருடன் ஒரு மாதக் காலம் சேரப் போவதில்லை என்று சத்தியம் செய்துவிட்டு (விலகி) இருந்தார்கள். பின்னர் இருபத்தொன்பது இரவுகள் முடிந்ததும் - அந்த இரவுகளை எண்ணிக் கொண்டே இருந்த - என்னிடம்தான் முதன்முதலில் வந்தார்கள். அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஒரு மாதம் எங்களிடம் வரமாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந் தீர்களே, இருபத்தொன்பது நாட்கள்தான் முடிந்திருக்க தாங்கள் வந்துவிட்டீர்களே? நான் அந்த இரவுகளை, ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருந்தேனே!'' என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மாதம் இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்'' என்றார்கள். உண்மையில், அந்த மாதம் இருபத் தொன்பது நாட்களாகவே இருந்தது. (ஸஹீஹுல் புகாரி)

முஃமின்களின் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் கூற்றைக் கவனியுங்கள். தம் கணவர் எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்புடன், அவர் குறிப்பிட்ட காலம் வரும் வரை அதைக் கணக்கிட்டு, ‘நான் அந்த நாட்களை எண்ணிக் கொண்டி ருந்தேனே!' என்று கூறும் அளவிற்கு கணவன் மீது பிரியமும் அவரது வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிற ஆர்வமும் ஆயிஷா (ரழி) அவர்களிடம் இருந்திருக்கிறது. இந்த அன்பும் பிரியமும் மற்றவர்களிடம் இருப்பதைவிட ஆயிஷா (ரழி) அவர்களிடம் அதிகமாக இருந்ததால் தான், நபி (ஸல்) அவர்களும் தம் மனைவியலேயே ஆயிஷாவை முதலில் சந்தித்துள்ளார்கள்.

முஸ்லிமான நல்ல மனைவி இப்படித்தான் இருப்பாள். தம் கணவன் நோக்கத்தையும், ஆசைகளையும் நன்கு புரிந்து வைத்துக் கொண்டு, தன்னால் இயன்றவரை அவரைத் திருப்திப்படுத்துவதிலேயே காலத்தைக் கழிப்பாள். இருவருக்கிடையே கருத்து ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் கவனமாகப் பேணிக் கொள்வாள். இதனால்தான் கணவருக்கும் தனக்கும் இடையே ஏற்படும் மனக்கசப்புகளை விட்டும், சோம்பல், சடைவு ஆகியவற்றை விட்டும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வாள். அறிவுள்ள ஒவ்வொரு முஸ்லிம் பெண்மணியும் இப்படித்தான் நடந்து கொள்வாள்.

‘ஷுரைஹ்' என்ற மிகப்பெரியமார்க்க அறிஞர் மூலம் ஒரு கருத்து வலியுறுத்தப்படுகிறது.

ம்ஹன்ளலா' குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியை அவர் மணமுடித்தார். முதலிரவில் அவரும் அந்தப் பெண்மணியும் அல்லாஹ்வுக்காக இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு, அல்லாஹ்விடம் நன்மையை வேண்டி பிரார்த்தித்தார்கள். அப்போது அந்தப் பெண்மணி அவரிடம் ‘‘நான் உங்களுக்கு ஒரு புதிய பெண்ணாவேன் அதனால் நீங்கள் விரும்புவதையெல்லாம் என்னிடம் சொல்லி விடுங்கள். நான் அவற்றைச் செய்கிறேன். அதே போல் நீங்கள் வெறுப்பவற்றையும் என்னிடம் சொல்லி விடுங்கள். நான் அவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன்'' என்றார். அறிஞர் ஷுரைஹ் அவர்களும் தம்மைப் பற்றி அவளிடம் தெரிவிக்கவே, அவரும் அவரது சொல்படியே நடந்து கொண்டார். அவர்களின் இல்லற வாழ்வும் மகிழ்ச்சிகரமாக கடந்தது.

பிற்காலத்தில் அறிஞர் ஷுரைஹ் அந்தப் பெண்மணியைப் பற்றிக் கூறும் போது ‘‘என்னுடன் அந்தப் பெண் சுமார் 20 ஆண்டுகள் குடும்பம் நடத்தினாள். எந்த நேரத்திலும் நான் அவளைப் பழித்தது கிடையாது குறை கூறியது கிடையாது ஒரேயொரு முறை மட்டுமே அப்படி நேர்ந்தது அதிலும் என்மீதுதான் தவறு இருந்தது'' என்றார்.

இஸ்லாம், விரும்பக்கூடிய நல்ல மனைவிக்கு இலக்கணம் இதுதான். தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வாள் தம் கணவருக்கு நன்றியுள்ளவளாக இருப்பாள் அவரது உறவைப் பலப்படுத்திக் கொள்வதில் பேராவல் உள்ளவளாக இருப்பாள் தனக்கும் தம் கணவருக்கும் இடையே ஏதாவது மன சஞ்சலங்கள் ஏற்பட்டால் அதைத் தூய்மையான அன்பைக் கொண்டும், மதி நுட்பமான புரிந்துணர்வைக் கொண்டும் நீக்கி சுத்தப்படுத்திக் கொள்வாள். ஷைத்தானின் ஊசலாட்டங்களுக்கும், தீமையை ஏவக்கூடிய மன இச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கும் செவி சாய்க்க மாட்டாள்.

சில பெண்கள் தம் கணவன் மீதுள்ள சில சந்தேகங்களுக்காகவே விவாகரத்துக் கோருவதை நாம் பார்க்கிறோம். அது தவறு திருமண ஒப்பந்தம் என்பது சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளுக்காகவோ, மனக்கசப்புகளுக்காகவோ சட்டென்று உடைத்துக் கொண்டு பிரியக் கூடிய உறவு அல்ல அது ஓர் உறுதிமிக்க, உன்னதமான, நீண்ட உறவாகும். எனவேதான், நபி (ஸல்) அவர்கள் மார்க்க ரீதியான காரணமல்லாமல் ‘தலாக்'கைக் கேட்கிற மூடப் பெண்களைக் கடுமையாக எச்சரித்தார்கள்.

‘‘தக்க காரணமின்றி தமது கணவரிடம் ‘தலாக்'கைக் கோருகிற பெண்ணுக்குச் சொர்க்கத்தின் வாடையும் தடுக்கப்பட்டதாகி விடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். (ஜாமிவுத் திர்மிதி)

இறையச்சமுள்ள முஸ்லிமான பெண், தனது கணவன் இரகசியத்தைப் பாதுகாக்க வேண்டும்.

தனக்கும் தம் கணவருக்கும் இடையே யுள்ள அந்தரங்கங்களை எவரிடமும் சொல்லி விடக்கூடாது. வெளிப்படுத்தக் கூடாது.

ஒரு நல்ல மனைவி அது போன்ற அற்பக் காரியங்களை விட்டும் உயர்ந்திருப்பாள். வெட்கக்கேடான, அசிங்கமான பேச்சுகளைப் பேசுவதை விட்டும் விலகி, ஒழுக்கத்தைக் காப்பாள் தன் நிலையை உணர்ந்து நடந்து கொள்வாள் ஒழுங்கீனமான செயல்களையும் செய்து நேரத்தை வீணடிப்பதை விட்டும், தன்னைப் பாதுகாத்துக் கொள்வாள்.

பொறுப்பற்ற குணங்களை விட்டு தன்னை விலக்கிக் கொள்வாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய எச்சரிக்கைகளை உணர்ந்து நடந்து கொள்வாள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுப் பின்னர் அவர்களில் ஒருவர் மற்றவன் இரகசியத்தைப் பரப்பினால் அவர்களே அல்லாஹ்விடம் நாளை மறுமை நாளில் தகுதியால் மிகவும் மோசமானவர்கள் ஆவர். (ஸஹீஹ் முஸ்லிம்)

இரகசியங்களை வெளியிடுவதிலேயே மிக மட்டரகமான செயல் இதுவே ஆகும். தரங்கெட்ட மனிதர்கள்தான், அப்படிச் செய்வார்கள்.

இரகசியங்களைப் பாதுகாப்பது என்பது உயர்ந்த பண்புகளில் ஒன்றாகும். அதை வெளிப்படுத்துவது என்பது மிக மோசமான பண்புகளில் அடங்கியதாகும். இரகசியங்களில் சில, அவற்றை வெளிப்படுத்துவது அந்த அளவு குற்றம் இல்லை என்றாலும் அது ஒரு வெறுக்கத்தக்க செயலே. நபியவர்களைத் தவிர வேறு யாரும் இதிலிருந்து தப்பிப்பது சாதாரண விஷயமல்ல.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்னை ஹஃப்ஸா (ரழி) அவர்களிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி வைத்திருந்தார்கள். ஹஃப்ஸாவோ அதை ஆயிஷா (ரழி) அவர்களிடம் சொல்லி விட்டார்கள். அதனால் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினுள் பல குழப்பங்களும், பிரச்சினைகளும் உருவாயின. இந்த நிலையில் தமது மனைவியர் மீது கோபம் கொண்ட நபி (ஸல்) அவர்கள், ஒரு மாதம் வரை எவரிடமும் சேர மாட்டேன் என்பதாக சத்தியம் செய்து விட்டு ஒதுங்கி விட்டார்கள். இந்தச் சம்பவத்தைப் பற்றியே அல்லாஹ் சூரத்துத் தஹ்ரீமின் 3, 4, 5 ஆகிய வசனங்களில் பேசுகிறான்.

(நமது) நபி தன்னுடைய மனைவிகளில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகக் கூறிய சமயத்தில், அப்பெண் அதனை (மற்றொரு மனைவிக்கு) அறிவித்து விட்டார். அதனை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கித்தந்தான். நபி (அதில்) சிலவற்றை (அம்மனைவிக்கு) அறிவித்துச் சிலவற்றை (அறிவிக்காது) புறக்கணித்து விட்டார். (இவ்வாறு) நபி தன் மனைவிக்கு அறிவிக்கவே, அந்த மனைவி ‘‘இதனை உங்களுக்கு அறிவித்தவர் யார்?'' எனக் கேட்டார். அதற்கு அவர் ‘‘(அனைத்தையும்) நன்கறிந்து தெரிந்தவனே அதனை எனக்கு அறிவித்தான்'' என்று கூறினார்.

அதன் பிறகு அல்லாஹ் அவ்விரு மனைவியரையும் பாவமன்னிப்புக் கோரும் படி கட்டளையிடுகிறான். அவர்கள் செய்த குற்றத்தால் அவர்களது உள்ளங்கள் அல்லாஹ்வை விட்டும் விலகி விட்டன. உண்மையான பாவமன்னிப்பைக் கொண்டு தான் அல்லாஹ்வை நெருங்க முடியும்.

(நபியுடைய அவ்விரு மனைவிகளே!) நீங்கள் இருவரும் (உங்கள் குற்றங்களைப் பற்றி) அல்லாஹ்வின் பக்கம் கைசேதப்பட்டு மன்னிப்புக் கோரி மீண்டுவிட்டால் (அது உங்களுக்கே நன்று. ஏனென்றால்,) உங்கள் இருவரின் உள்ளங்கள் (நேரான வழியிலிருந்து) சாய்ந்துவிட்டன. ஆகவே, நீங்கள் இருவரும் அவருக்கு விரோதமாக ஒன்று சேர்ந்தால், நிச்சயமாக அல்லாஹ் அவரை பாதுகாப்பவனாக இருக்கின்றான். அன்றி, ஜிப்ரயீலும், நம்பிக்கையாளர்களிலுள்ள நல்லடியார்களும், இவர்களுடன் (மற்ற) மலக்குகளும் (அவருக்கு) உதவியாக இருப்பார்கள். (அத்தஹ்ரீம் 66:3, 4)

இந்த அளவிற்கு கண்டித்த பிறகும் அவர்கள் பாவமன்னிப்புக் கோராமல் தங்கள் தவறிலேயே நிலைத்திருந்தால் நபி (ஸல்) அவர்கள் உங்களை ‘தலாக்' விடும் நிலை ஏற்படலாம் என்பதையும் அல்லாஹ் பின்வருமாறு தெரிவிக்கிறான்:

நபி உங்களை ‘தலாக்' கூறி (விலக்கி) விட்டால், உங்களைவிட மேலான பெண்கள் பலரை அவருடைய இறைவன் அவருக்கு மனைவியாக்கி வைக்க முடியும். (மனைவியாக வரக்கூடிய அப்பெண்களோ) முஸ்லிமானவர்களாகவும், நம்பிக்கை கொண்டவர்களாகவும், (இறை வனுக்குப்) பயந்து (நபிக்குக் கட்டுப்பட்டு) நடக்கக் கூடியவர்களாகவும், (பாவத்தை விட்டு) விலகியவர்களாகவும், (இறைவனை) வணங்குபவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், கன்னியர்களாகவும், கன்னியர் அல்லாத வர்களாகவும் இருப்பார்கள். (அத்தஹ்ரீம் 66:5)

இந்த நிகழ்ச்சியின் மூலம் இஸ்லாம் இரகசியங்களைப் பாதுகாப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதை ஒவ்வொரு முஸ்லிமான பெண்ணும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இதில் அல்லாஹ்வின் தனிப்பெரும் அருள் என்னவென்றால், தனது தூதரின் தனிப்பட்ட வாழ்க்கையையும், பொது வாழ்க்கையையும் நமக்கு ஒரு திறந்த புத்தகமாக அவன் ஆக்கியிருப்பதே!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை மூலமாக நாம் கொள்கை கோட்பாடுகளை மட்டுமின்றி அவற்றை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவேதான், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மறைக்கப்பட்ட இரகசியம் என்றோ, பிறருக்குக் கூறக்கூடாத விஷயம் என்றோ எதுவும் கிடையாது.

குர்ஆனிலும் நபிவழித் தொகுப்புகளிலும் நபியவர்களின் வாழ்க்கை எந்த அளவிற்குப் பதிவாகி இருக்கிறதென்றால், பொதுவாக மக்கள் வெட்கப்பட்டு மறைத்து விடக்கூடிய தவறுகளும், நிகழ்ச்சிகளும் கூட வெளிப்படையாக உள்ளன. காரணம் இஸ்லாமின் ஒரே நோக்கம், உண்மையை விட்டும் பொய்யை; நேர்வழியை விட்டும் வழிகேட்டைத் துல்லியமாகப் பிரித்துக் காட்டுவதே ஆகும்.

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முழுவதும் அல்லாஹ்விற்காகவும், அவனது மார்க்கத்தை நிலை நாட்டுகிற அழைப்புப் பணியின் அடிப்படையிலும்தான் இருந்தது என்பதை நபித்தோழர்கள் நன்கு விளங்கி வைத்திருந்தார்கள். எனவே, அவர்களில் எவரும் நபியவர்களின் வாழ்க்கையில் சிலவற்றை மறைத்தும் சிலவற்றை வெளிப்படுத்தியும் வேறுபாடு காட்டவில்லை. அறிந்ததை அப்படியே பிறருக்கு எடுத்துச் சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையாயினும், பொது வாழ்க்கை யாயினும் அனைத்தும் அவர்கள் எந்தக் கொள்கையைப் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்களோ, அந்தக் கொள்கையின் நடைமுறை விளக்கங்களாகவே இருந்தன. இந்த நிலையில் நபித்தோழர்கள் ஒன்றைச் சொல்லியும் இன்னொன்றை மறைத்தும் இருப்பார்கள் என்பதற்கு எந்தச் சாத்தியக் கூறும் இல்லை.

நபி (ஸல்) அவர்களைப் பற்றிய சிறிய, பெரியஎந்தச் செய்தியாக இருப்பினும் அதை நபித்தோழர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். இதுவே அல்லாஹ்வின் ஏற்பாடாகவும் இருந்தது.

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்கிற அவசியத்தை அல்லாஹ்வே உண்டாக்கினான். ஒருபுறம், நபித்தோழர் களின் அறிவிப்புகளால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாழ்க்கை தெளிவாக கிடைத்திருக்க, இன்னொரு புறம், உலக முடிவுநாள் வரையிலும் பாதுகாக்கப்பட்டதாக உள்ள அல்லாஹ்வின் இறுதி நூல் அல்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களது வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதியை நமக்கு விளக்கிக் கொண்டிருக்கின்றன.


கணவருக்குத் துணை நிற்பாள் - நல்ல ஆலோசனைகளை வழங்குவாள்:

இந்த உலகின் காரியங்களைச் செம்மையாக வழி நடத்துவதற்கும், நிர்வகிப்பதற்கும் ஆண் பெண் இருவரும் சேர்ந்தே செயல்பட வேண்டும். இந்த அமைப்பில்தான் அல்லாஹ்வும் உலகைப் படைத்துள்ளான். பெண்ணை விட்டும் தேவையற்றவராக ஆணோ, ஆணை விட்டும் தேவையற்றவராக பெண்ணோ இருக்க முடியாது. இந்த அடிப்படையில்தான் இஸ்லாமிய போதனைகளும் வழிகாட்டல்களும் அமைந்திருக்கின்றன.

ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக் கொண்டும், உதவி செய்து கொண்டும் இருக்க வேண்டுமென இஸ்லாம் அறிவுறுத்துகிறது. தன்னால் இயன்றவரை தன் மனைவிக்கு நன்மை செய்ய வேண்டுமென ஒவ்வொரு கணவனுக்கும் இஸ்லாம் ஆர்வமூட்டியுள்ளது. இதற்கு சிறந்த முன்னோடியாகவும் முன் மாதிரியாகவும் நபி (ஸல்) அவர்களே திகழ்ந்தார்கள்.

தம் குடும்பத்தாருடனும் மனைவிய ருடனும் வீட்டு வேலைகளில் ஈடுபடுவார்கள். அதே நேரம் தொழுகை நேரம் வந்தவுடன் தொழுகைக்குப் புறப்பட்டு விடுவார்கள்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பை (அதான் சப்தத்தை) செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப் பட்டு விடுவார்கள்.(ஸஹீஹுல் புகாரி)

இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு கணவன் தமது குடும்பத்திற்கு எப்படி உதவ வேண்டும், எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதோ, அதேபோல் தனது கணவருக்கு ஆலோசனை கூறுவதிலும், அறிவுரைகளைக் கூறுவதிலும், ஒரு மனைவி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதும் போதிக்கப்பட்டுள்ளது.

இதற்குச் சான்றாக இஸ்லாமிய வரலாற்றில் பல நிகழ்ச்சிகள் இருக்கின்றன.

ஆண்களுக்கு நிகராக இஸ்லாமியப் பெண்களும் போர்க்களங்களுக்குச் சென்றதை இஸ்லாமிய வரலாற்றில் பார்க்கிறோம்.

போல் புண்பட்டு வீழ்ந்த நல்லோர்களுக்கு அவர்களின் தாகத்தைத் தணிக்க நீர் புகட்டியும், காயங்களுக்கு மருந்திட்டும் பணிவிடைகள் செய்தார்கள். அந்தப் பெண்கள் சில நேரங்களில் போர்க்களத்தில் நேரடியாக இறங்கி போடவும் செய்தார்கள். ஆண்களின் வீரத்திற்கு உரமூட்டினார்கள்.

வாள்களுக்கும் ஈட்டிகளுக்கும் இடையே புகுந்து தங்கள் துணிச்சலை வெளிப்படுத் தினார்கள். ஆண் வீரர்களில் சிலர் புறங்காட்டிச் சென்ற போதிலும், தங்கள் வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத் தினார்கள். மேலும், போல் பங்கு பெறுவது மட்டுமின்றி, உடன்படிக்கை போன்ற சமாதான முயற்சி களிலும் தங்கள் பங்கை வெளிப்படுத்தினார்கள்.

நல்ல ஆலோசனைகளைக் கொண்டும், தெளிவான கருத்துகளைக் கொண்டும் தங்கள் கணவன்மாருக்கு உதவியாக இருந்தார்கள். சிரமமான நேரங்களின் போதும் கஷ்டமான சூழ்நிலைகளின் போதும் ஊக்கமூட்டி உறுதியை அளித்தார்கள். அவர்களின் ஆலோசனைகளின் பேல் இஸ்லாமியத் தலைவர்கள் வழிநடந்தார்கள் என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கிறது.

மனைவியரின் ஆலோசனைகளைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் வழி நடந்துள்ளார்கள். சில நேரங்களில் அன்னை உம்மு ஸலமா (ரழி), சில நேரங்களில் அன்னை ஆயிஷா (ரழி) மற்றும் சில மனைவியர் ஆகியோரின் ஆலோசனைக்கு இணங்கவும் நபி (ஸல்) அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள்.

அவ்வாறே அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) அவர்கள் தனது தாய் அஸ்மா (ரழி) அவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடந்திருக்கிறார்கள்.

‘வலீது இப்னு அப்துல் மலிக்' என்ற இஸ்லாமிய மன்னர், தனது மனைவி உம்முல் பனீன் பின்த் அப்துல் அஜீஸ் இப்னு மர்வானின் ஆலோசனையைக் கேட்டு நடந்திருக்கிறார். இப்படியே மன்னர் ஹாரூன் ரஷீத், தனது மனைவி ஸுபைதா அவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பார் என்றும் இஸ்லாமிய வரலாறு நமக்குச் சான்று தருகிறது.

பெண்ணுக்கு இஸ்லாம் மகத்தான பொறுப்பை வழங்கியுள்ளது. அந்தப் பொறுப்பை ஒரு முஸ்லிம் பெண்மணி நன்கு புரிந்து வைத்திருப்பாள்.

தமது கணவருடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் அவரது தேவையை உணர்ந்து திருப்திப்படுத்த வேண்டும் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும் அவரது உற்சாகத்திற்கும் இயற்கைக்கும் தக்கவாறு நடந்து அவரிடம் பிரியம் காட்ட வேண்டும் மார்க்கத்தை எந்த நோக்கத் திற்காக ஏற்றிருக்கிறோமோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் அவருக்கு உதவியாக இருக்க வேண்டும் அதற்காக அவரைத் தயார்ப்படுத்த வேண்டும் என்றெல்லாம் இஸ்லாம் கூறியிருக்கின்ற நல்லுரைகளை அந்தப் பெண்மணி நினைவில் வைத்துக் கொள்வாள்.

தமது கணவர் ஆலோசனையின் பக்கம் தேவை உள்ளவராக இருக்கிறார் என்பதை அறிந்தவுடன், அவருக்கு அதில் எப்படி உதவுவது என்று சிந்தித்து நல்ல யோசனைகளைக் கூறுவாள். நல்ல காரியங்களில் அவருக்கு ஆர்வமூட்டி, அவற்றின் பக்கம் அவரைச் செலுத்துவாள்.

இதற்கு உம்முல் முஃமினின் - நம்பிக்கை யாளர்களின் அன்னை கதீஜா பின்த் குவைலித் (ரழி) அவர்கள், முழு உலக முஸ்லிம் பெண்களுக்கும் நல்ல முன்னு தாரணமாகத் திகழ்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரியபங்கை வகிக்கக் கூடிய கதீஜா (ரழி) அவர்கள், முதன் முதலாக நபியவர்களுக்கு வஹி இறங்கிய சமயத்தில் பெயதொரு ஆறுதலாக இருந்தார்கள்.

'என்னைப் போர்த்துங்கள் என்னைப் போர்த்துங்கள்' என்று திடுக்கத்துடனும் நடுக்கத்துடனும் நபி (ஸல்) அவர்கள் ஹிரா குகையிலிருந்து வீட்டிற்கு வந்த பொழுது, நபியவர்களுக்கு உதவ உடனடியாகத் தயாரானார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி, நேர்வழியில் அவர்களை உறுதிப்படுத்தவும், உற்சாக மூட்டவும் தன்னால் இயன்றவரை போராடினார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு ஆரம்பத்தில் வஹி எப்படி இறங்கியது, அந்த நேரத்தில் அன்னை கதீஜா (ரழி) அவர்களின் செயல் பாடு, ஒத்துழைப்பு எவ்வளவு சிறப்பாகவும் உயர்வாகவும் அமைந்திருந்தது என்பதைப் பற்றி அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுவதை நேரடியாகக் கேட்போம்:

ஆயிஷா (ரழி) கூறியதாவது:
ஆரம்பமாக நபி (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போலத் தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையில் இருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தமது குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த நாட்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அந்த உணவு முடிந்ததும்) மீண்டும் (தமது துணைவியார்) கதீஜா (ரழி) அவர்களிடம் திரும்பி வருவார்கள். அதே போன்று பல நாட்களுக்கான உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்குச் சத்தியம் வரும் வரை நீடித்தது. (ஒரு நாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, ‘ஓதுவீராக!' என்றார். அதற்கவர்கள் ‘‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே!'' என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின்வருமாறு விளக்கினார்கள்:
‘‘அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக் கட்டி யணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு ‘ஓதுவீராக!' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்து என்னை விட்டுவிட்டு மீண்டும் ‘ஓதுவீராக!' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டியணைத்து விட்டுவிட்டு,
‘‘படைத்தவனாகிய உம்முடைய இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் தான் மனிதனை ‘அலக்'கில் (கருவில்) இருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியம் மிக்கவன்'' என்றார்.

மேலும் ஆயிஷா (ரழி) கூறியதாவது:
பிறகு இதயம் படபடத்தவர்களாக - அந்த வசனங்களுடன் (தமது துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து ‘‘என்னைப் போர்த்துங்கள் என்னைப் போர்த்துங்கள்!'' என்றார்கள். கதீஜா (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜா (ரழி) அவர்களிடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ எனத் தாம் உறுதியாக அஞ்சுவ தாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரழி) ‘அவ்வாறு கூறாதீர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். (ஏனெனில்,) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள் (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள் வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள் விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள் உண்மையான சோதனைகளில் (ஆட்பட்ட வருக்கு) உதவி புரிகின்றீர்கள்' என்றார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களைத் தமது தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவன் மகன் வரகாவிடம் அழைத்துச் சென்றார்கள். நவ்ஃபல், அஸது என்பவன் மகனும் அப்துல் உஸ்ஸா என்பவன் பேரருமாவார்.

ம்வரகா' அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழி கற்றிருந்தார். இன்ஜீல் வேதத்தை ஹீப்ரு மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுவார். கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா (ரழி), ‘என் சகோதரரே! உமது சகோதரர் மகன் கூறுவதைக் கேளுங்கள்' என்றார்கள். வரகா, நபி (ஸல்) அவர்களிடம் ‘‘என் சகோதரன் மகனே! நீர் எதைக் கண்டீர்?'' எனக்கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் சொன்னார்கள். அதைக்கேட்டதும் வரகா, நபி (ஸல்) அவர்களிடம் இவர்தாம், மூஸாவிடம் இறைவன் அனுப்பிய ‘நாமூஸ்' (ஜிப்ரீல்) ஆவார்' என்று கூறிவிட்டு, ‘உமது சமூகத்தார் உம்மை உமது நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருக்க வேண்டுமே!' என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்கள் என்னை வெளியேற்றவும் செய்வார்களா?'' என்று அப்போது அவரிடம் கேட்டார்கள். அதற்கவர் ‘ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமான உதவி செய்வேன்' என்று கூறினார். அதன் பிறகு வரகா நீண்ட நாள் உயிர் வாழவில்லை. இந்த முதற்செய்தியுடன் வஹி (சிறிது காலம்) நின்று போயிற்று.

இந்த அறிவிப்பு, கதீஜா (ரழி) அவர்களின் உயர்வான பண்பிற்கும், விசாலமான அறிவிற்கும், உறுதிப்பாட்டிற்கும் ஒரு பெயதொரு சாட்சியாக இருக்கிறது. மேலும், அவர்களின் உள்ளம் எந்த அளவிற்கு பக்குவப்பட்டிருந்தது என்பதற்கும், தொலை நோக்குப் பார்வையுடன் நபியவர்களுக்கு ஆறுதல் கூறிய ஆழமான சிந்தனைக்கு தெளிவானதொரு சான்றாகவும் இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெற்றிருந்த நற்குணங்கள், சங்கைமிக்க பண்புகள், தூய்மையான நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பார்த்திருந்த கதீஜா (ரழி) அவர்கள், நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், கைவிடமாட்டான் கேவலப்படுத்திவிடமாட்டான் தீமைகள் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கமாட்டான் என்பதை எல்லாம் உறுதியாக நம்பினார்கள்.

அதுமட்டுமின்றி, தமது கணவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் புதிய அனுபவம், அவர்களை ஒரு மகத்தான பொறுப்புக்கும், பணிக்கும் அல்லாஹ் ஆயத்தப்படுத்துகிறான் என்பதையும் தம் நுண்ணறிவால் புரிந்து கொண்டார்கள். அதனால்தான், தன் அன்புக் கணவரிடம் பாசத்துடனும் ஆறுதலுடனும் பிரியத்துடனும் அணுகினார்கள் நபியவர்களுக்கு மன உறுதியையும் மன நிம்மதியையும் ஏற்படுத்தினார்கள்.
‘‘எனது சிறிய தந்தையின் மகனே! நீங்கள் நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள் உறுதியாக இருங்கள். கதீஜாவின் உயிர் எந்த இறைவனின் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இந்தச் சமுதாயத்தின் நபியாக (இறைத் தூதராக) நீங்கள் ஆக இருக்கின்றீர்கள் என நான் நம்பிக்கை கொள்கிறேன்'' என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
இதற்குப் பின்பே தம் கணவரை அழைத்துக் கொண்டு இன்ஜீல், தவ்றாத் ஆகிய நூல்களை எல்லாம் கற்ற அறிஞர் வரகா பின் நவ்ஃபலிடம் சென்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டிருந்த திடீர் நிகழ்வைப் பற்றி தாம் அறிந்த விஷயங்களைக் கூறினார்.

உண்மையில், நம்பிக்கையாளர்களின் அன்னையான கதீஜா (ரழி) அவர்கள் இஸ்லாமிய அழைப்புப் பணியின் போது நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு சிறந்த மந்தியாகத் திகழ்ந்தார்கள் முதன் முதலில் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நம்பிக்கை கொண்ட முதன்மை முஸ்லிமாகவும் இருந்தார்கள் அவர்களின் சிறப்பிற்கும் மேன்மைக்கும் இதுவே போதுமானதாகும்.

நபியவர்களின் அழைப்புப் பணியின் போது அவர்களுடன் ஒன்றுபட்டு நின்று, உதவிக்கரம் நீட்டி அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்கள். அழைப்புப் பணியின் ஆரம்பக்கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் சந்தித்த சிரமங்களை அன்னை கதீஜா (ரழி) அவர்களும் சந்தித்தார்கள். தம் கணவருக்கு சோதனைகள் ஏற்படும் போது, ஆதரவு தந்தார்கள் நபியவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்துகளையும் வேதனைகளையும் தாமும் சுமந்தார்கள்.

வரலாற்று அறிஞர் இப்னு ஹிஷாம், தமது நூல் ‘அஸ்ஸீரா'விலே கதீஜா (ரழி) அவர்களைப் பற்றி இப்படி எழுதுகிறார்:
‘‘கதீஜா பின்த் குவைலித்'', நம்பிக்கை (ஈமான்) கொண்டார் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த செய்தியை உண்மைப் படுத்தினார் நபியவர்களின் காரியங்களில் துணையாக இருந்தார் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டவர் களில் முதன்மையானவராகத் திகழ்ந்தார் இதன் மூலம் அல்லாஹ், தனது நபியின் சுமைகளை இலேசாக்கினான். மக்களிடமிருந்து மனதைப் புண்படுத்தக் கூடிய வார்த்தைகளால் மன சஞ்சலத்தை நபி (ஸல்) அவர்கள் அடையும் போதெல்லாம் அந்தக் கவலைகளை அல்லாஹ், கதீஜா (ரழி) அவர்களின் வழியாக நீக்கினான் நபியவர்களுக்கு கதீஜா (ரழி) அவர்கள் ஊக்கமூட்டினார்கள் அவர்களின் துயரங்களைப் போக்கினார்கள் அவர்களை ‘உண்மையாளர்' எனக் கூறிப் போற்றுவார்கள்.
மக்கள் கொடுக்கிற இன்னல்களையும் இடையூறுகளையும் பொருட்படுத்தாதீர்கள் என்று சொல்லி உறுதிப்படுத்துவார்கள்.
அல்லாஹு தஆலா, அன்னை கதீஜா (ரழி) அவர்களுக்கு நல்லருள் புரிவானாக! அவர்கள் மீது கருணை காட்டுவானாக!
உண்மையில், பெண்களிலேயே ‘சித்தீகா' (மிக வாய்மையாளர்) என்ற பட்டத்திற்கு கதீஜா (ரழி) தகுதியானவர்தாம். தமது பொறுப்பையும் கடமையையும் சரியாக அவர்கள் நிறைவேற்றியதால்தான், அல்லாஹ் வின் சார்பிலிருந்தே அவர்களுக்கு நற்செய்தி சொல்லப்பட்டது. அந்தச் செய்தியை அல்லாஹ், தனது வானவ தூதர் ஜிப்ரீல் (அலை) வழியாகவும் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) வழியாகவும் வெளிப்படுத்தினான்.

அபூஹுரைரா (ரழி) அவர்கள் வாயிலாக ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய நூல்களில் பதிவாகியுள்ள அந்தச் செய்தி இதுதான்.

‘‘ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் உணவுடன் உங்களிடம் வருகிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் ஸலாம் சொல்லுங்கள். மேலும், அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு முத்து மாளிகை உண்டென்றும், அங்கு கூச்சல் குழப்பமோ, கஷ்டமோ, களைப்போ இருக்காதென்றும் நற்செய்தி சொல்லுங்கள்'' என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரி)

தனது அறிவைப் பயன்படுத்துவதிலும், சிந்தனையைத் தீட்டிக் கொண்டிருப்பதிலும் நிச்சயமாக ஒரு முஸ்லிம் பெண், என்றுமே பின்தங்கிவிட மாட்டாள். ‘சோதனைக் காலங்களில் தனக்கு எவராவது நல்ல ஆலோசனைகள் வழங்க மாட்டார்களா' என்ற தேவையில் கணவர் இருக்கும் போது, அவருக்கு ஆலோசனைகள் பல வழங்குவாள்.

தம் கணவருக்கு நன்மைகள் புரிய வேண்டும் சிறந்த முறையில் உபகாரம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பாள். இப்படிப்பட்ட பெண்களின் ஆலோசனைகள், தக்க நேரத்தில் வெளிப்பட்டு பயனளித்துள்ளன.

ஹுதைபிய்யா ஒப்பந்தத்தின் போது முஸ்லிம்கள் சந்தித்த நெருக்கடியான நிலைமையை அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் எப்படி எதிர் கொண்டார்கள் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். அந்த நேரத்தில் ஆழமான சிந்தனையைக் கொண்டும் ஞானமிக்க கருத்தைக் கொண்டும் அன்னையவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஆலோசனை கூறினார்கள்.

ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு அல்லாஹ்வின் புனித இல்லமான கஅபாவை உம்ரா செய்ய, நபி (ஸல்) அவர்களும், தோழர்கள் பலரும் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். நபியவர்களுடன் அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களும் உடன் சென்றிருந்தார்கள். அப்போது (காஃபிர்கள்) நிராகரிப்பாளர்கள், நபியவர்களும் அவர்களின் தோழர்களும் ‘உம்ரா' செய்வதற்கு அனுமதி மறுத்ததுடன், மக்காவில் நுழையவும் தடையாக நின்றார்கள்.

இந்த நிலையில் ரஸுலுல்லா (ஸல்) அவர்கள் ‘ஹுதைபிய்யா' என்ற இடத்தில் தங்கி, நிலைமையைச் சுமுகமாக்க முயன்றார்கள். நிராகரிப்பாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில், அந்த இடத்திலேயே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் விதிகள் இதுதான்:

1. பத்து ஆண்டுகளுக்கு இரு தரப்பிலும் போர் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது. யாரும் யாருக்கும் எந்த வித தீங்கும் செய்யக் கூடாது. அனைவரும் அச்சமற்று இருப்பார்கள்.

2. யார் முஹம்மதுடைய ஒப்பந்தத்தில் சேர விரும்புகிறாரோ, அவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். குறைஷிகளின் ஒப்பந்தத்தில் சேர விரும்புபவர், அதில் சேர்ந்து கொள்ளலாம். இந்த இரு வகுப்பால் யாராவது ஒருவர் இன்னொரு வகுப்பார் மீது அத்து மீறினால் அது அந்த வகுப்பார் அனைவர் மீதும் அத்து மீறியதாகும்.

3. குறைஷிகளில் எவராவது தனது பாதுகாவலரான நெருங்கிய உறவினன் அனுமதியின்றி, தப்பித்து முஹம்மதிடம் வந்து சேர்ந்தால் முஹம்மது அவரை குறைஷிகளிடம் திருப்பி அனுப்பி விட வேண்டும். ஆனால், முஹம்மதிடம் உள்ளவர்களில் எவராவது தப்பித்து குறைஷிகளிடம் வந்துவிட்டால் அவரை முஹம்மதிடம் திருப்பி அனுப்பப்படாது.

4. முஸ்லிம்கள் இந்த ஆண்டு திரும்பிச் செல்ல வேண்டும். மக்காவிற்குள் நுழையக் கூடாது... என்றெல்லாம் ஒப்பந்தமாகின.

இந்த ஒப்பந்தம், வெளிப்படையாக பார்க்கும் போது முஸ்லிம்களுக்குப் பாதகமாக இருந்தாலும், நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருந்த நேர்வழியின் அகப்பார்வையில், ஒரு கலப்பற்ற, நன்மையாகவும், இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் அல்லாஹ்வின் மாபெரும் உதவியாகவும் தெரிந்தது.

நபித்தோழர்களுக்கோ பெரியதோர் அதிர்ச்சியாகவும், மனக்கஷ்டமாகவும் ஆகிவிட்டது. தங்களது உரிமைகளும் சுதந்தரமும் பறிக்கப்படுவதை எண்ணி வருந்தினார்கள். உடனே, நிராகரிப்பாளர் களான குறைஷிகளை எதிர்த்துப் போரிட்டு, அவர்களை வென்று பழி தீர்ப்பதற்கும் தயாராக இருந்தார்கள். இதற்கு உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்களின் கோபமும் பேச்சும் ஒரு பெரியஆதாரமாகும்.

ஆவேசத்துடன் அபூபக்ர் (ரழி) அவர்களிடம் வந்த உமர் (ரழி) ‘‘என்ன... இவர் அல்லாஹ்வின் தூதல்லையா?'' என்று கேட்டார். அதற்கு அபூபக்ர் (ரழி) ‘‘(இதிலென்ன சந்தேகம்?) அவர் அல்லாஹ்வின் தூதர்தாம்!'' என்று பதிலளித் தார்கள். அடுத்து உமர் (ரழி) ‘‘நாம் முஸ்லிம்கள் அல்லவா?'' என கேட்டார்கள். ‘‘ஆம் நாம் முஸ்லிம்கள்தான்!'' என அதற்கும் அபூபக்ர் (ரழி) பதிலளித்தார்கள். மீண்டும் உமர் (ரழி) ‘‘அவர்கள் முஷ்ரிக்குகள் அல்லவா? என்று கேட்டார்கள். இதற்கும் அபூபக்ர் (ரழி) ‘ஆம்' முஷ்ரிக்குகள்தான்!'' என்றார்கள். உடனே அதற்கு உமர் (ரழி) அவர்கள், ‘‘அப்படியானால், நாம் ஏன் அவர்களுக்குப் பணிந்து போக வேண்டும்? நமது மார்க்கத்தில் விட்டுக் கொடுத்து ஏன் இழிவடைய வேண்டும்?'' என்று கேட்டார்கள்.

அப்போது அபூபக்ர் (ரழி) அவர்கள், ‘‘உமரே! இந்த நபியின் (தூதரின்) காரியத்தைப் பற்றிப் பிடித்துக் கொள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் சாட்சி சொல்கிறேன். அவர் உண்மையில் அல்லாஹ்வின் தூதர்தான்!'' என்று எச்சரித்தார்கள்.

இதற்கு உமர் (ரழி) அவர்கள், ‘‘நானும் சாட்சி சொல்கிறேன் அவர் அல்லாஹ்வின் தூதர்தான்!'' என்று கூறிவிட்டு, நேராக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அபூபக்ர் (ரழி) அவர்களிடம் கேட்ட கேள்விகளையே நபியவர்களிடமும் கேட்டு விட்டு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் விட்டுக் கொடுத்து இழிவை ஏற்றுக் கொள்ள வேண்டும்? நமக்கும் அவர்களுக்கும் இடையில் அல்லாஹ் தீர்ப்பளிக்காத நிலையில், நாம் திரும்பிச் செல்வது எப்படி நியாயமாகும்?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘கத்தாபின் மகனே! நான் அல்லாஹ்வின் தூதர். என்னால் அவனுடைய கட்டளைக்கு மாறு செய்ய முடியாது. அவன் எனக்கு உதவி செய்வான். ஒருக்காலும் என்னைக் கைவிட மாட்டான்'' என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், தாரீக் இப்னு ஹிஷாம், ஃபத்ஹுல் பாரி)

பின்னர், உமர் (ரழி) அவர்கள், தான் செய்த காரியத்தை எண்ணி மிகவும் கவலையடைந்தார்கள். அதைப் பற்றி அவர்களே கூறும்போது, ‘‘நான் எனது செயலை எண்ணி வருந்தி அதற்குப் பரிகாரமாக பல நற்செயல்களைச் செய்தேன் அன்றைய தினம் நான் நபி (ஸல்) அவர்களிடம் நடந்து கொண்ட விதத்திற்காக எப்போதும் தர்மம் செய்து வந்தேன் உபரியான நோன்புகள் நோற்று வந்தேன் உபரியான தொழுகைகள் தொழுது வந்தேன் அடிமைகளை உரிமையிட்டு (விடுதலை செய்து) வந்தேன் நான் நபி (ஸல்) அவர்களிடம் பேசிய பேச்சை எண்ணி பயந்து பல நன்மைகளைச் செய்தேன். நான் பேசிய பேச்சு நன்மையாக மாறிட வேண்டும் என்பது மட்டுமே என் விருப்பமாக இருந்தது'' என்றார்கள். (தாரீக் இப்னு ஹிஷாம்)

ஒப்பந்தத்தால் தங்களது ஆசைகள் எல்லாம் வீணாகிப் போனதை எண்ணி வருந்திக் கொண்டிருந்தார்கள் நபித் தோழர்கள். அந்த சமயத்தில்தான், நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களை நோக்கி, ‘‘எழுந்து சென்று, உங்கள் குர்பானிப் பிராணிகளை அறுங்கள் தலை முடிகளைச் சிரைத்துக் கொள்ளுங்கள்!'' என்று கட்டளையிட்டார்கள். ஆனால், அந்தக் கட்டளையை கேட்ட பிறகும், நபித் தோழர்களில் ஒருவர் கூட அதற்கு தயாராகவில்லை நபி (ஸல்) அவர்கள் மீண்டும் மீண்டும் மூன்று முறை கூறியும் அமைதியே நிலவியது.

இந்த நேரத்தில்தான், தம் மனைவி உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) சென்றார்கள். நபித்தோழர்களின் செயலை அறிந்த உம்மு ஸலமா (ரழி) அவர்கள், அந்தத் தருணத்தில் நபியவர்களுக்கு நல்லதோர் ஆலோசனை வழங்கினார்கள்.

உம்மு ஸலமா (ரழி) அவர்களின் புத்திக் கூர்மைக்கும், நுட்பமான அணுகுமுறைக்கும் அவர்கள் அப்போது வழங்கிய ஆலோசனை ஒரு சான்றாக நம்முன் இருந்து கொண்டிருக்கிறது.

‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வெளியே செல்லுங்கள் யாரிடமும் பேசாதீர்கள் உங்களது ஒட்டகத்தை மட்டும் அறுத்து குர்பானி கொடுங்கள் தலை முடியை சிரைத்துக் கொள்ளுங்கள்!'' என்று உம்மு ஸலமா (ரழி) கூறியதை நபி (ஸல்) அவர்களும் அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். அதன்படியே செய்தார்கள்.

இதைக் கண்ட நபித்தோழர்கள், சற்றும் தாமதிக்காமல் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு தங்களது குர்பானிப் பிராணிகளை அறுத்தார்கள் ஒருவர் மற்றவன் தலைமுடியைச் சிரைத்தார்கள். அந்தச் சூழலில் நபித்தோழர்களின் நிலை எப்படி இருந்ததென்றால், கவலையால், கைசேதத்தால் ஒருவர் மற்றவரைக் கொன்று விடுவார்கள் போலிருந்தது. இதற்குப் பின் அவர்கள் தங்களது சரியான வழியைத் தெரிந்து கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் பரந்த அறிவை நன்கு உணர்ந்து கொண்டார்கள். உண்மையில், அந்த சமாதான ஒப்பந்தம்தான், முஸ்லிம்களுக்கு மிகப் பெரியவெற்றியாக மாறியது.

ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்கு முன்பு இஸ்லாமைத் தழுவியவர்களை விட, அதற்குப் பின்பு இஸ்லாமைத் தழுவியவர் களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இறங்கிய குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் கீழ்வருமாறு முன்னறிவிப்புச் செய்தான்:
‘‘(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான ஒப்பந்தத்தின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப்பெய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம்.'' (அல்ஃபத்ஹ் 48:1)

இந்த வசனம் அருளப்பட்டவுடன் நபி (ஸல்) அவர்கள், ஒருவரை உமர் (ரழி) அவர்களிடம் அனுப்பி இதை ஓதிக் காட்டுமாறு கூறினார்கள்.

இதைக் கேட்ட உமர் (ரழி) அவர்கள் உடனே நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது வெற்றியான விஷயமா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ‘ஆம்!' என்றவுடன், உமர் (ரழி) அவர்கள் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தபடி திரும்பிச் சென்றார்கள். அவர்களின் மனம் அமைதி அடைந்தது. (ஸஹீஹ் முஸ்லிம்)


அல்லாஹ்வின் பாதையில் தர்மங்கள் செய்யத் தூண்ட வேண்டும்:

நேர்வழியும் நல்லறிவும் கொண்ட ஒரு முஸ்லிம் பெண்மணி தம் கணவரை அல்லாஹ்வின் பாதையில் தர்மங்கள் செய்யத் தூண்ட வேண்டும். வீண் விரயத்திற்கோ, அவசியமற்ற காரியங்களுக்கோ பொருளைச் செலவளிக்க ஒருபோதும் தூண்டக்கூடாது வழி காட்டக்கூடாது. பகட்டுக்காகவோ, அனாவசியமான விஷயத்திற்காகவோ பொருளைச் செலவளிக்க வழிவிடக்கூடாது. கணவருக்கு இந்த விஷயத்தில் சரியான வழிகாட்டுவதும் அவருக்குச் செய்கிற உதவி ஒத்தாசைகளில் ஒன்றே ஆகும்.

பொதுவாக அல்லாஹ்வின் நேர்வழி ‘லிருந்து விலகி வாழக்கூடிய பல அற்பமான பெண்களிடம் இந்த நற்குணம் இருப்பதில்லை.

இறையச்சத்துடன் மார்க்கத்தைப் பேணி வாழக் கூடிய பெண், எப்போதும் தமது கணவருக்கு நன்மையே நாட வேண்டும் நல்ல விஷயங்களில் ஆர்வமூட்ட வேண்டும் நற்செயல்களை அதிகப்படுத்திக் கொள்ள அவரைத் தூண்ட வேண்டும் இந்த அணுகுமுறையால் தம் கணவருக்கு மட்டுமின்றி, தனக்கும் மறுமையில் பல நற்கூலிகள் உண்டு என்பதை நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இதற்கொரு நல்ல முன்மாதிரியாக உம்முத் தஹ்தா (ரழி) அவர்கள் திகழ்கிறார்கள்.

உம்முத் தஹ்தாவின் கணவர், தாமும் தமது குடும்பத்தாரும் தங்கியிருந்த ஒரு தோட்டத்தை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்து விட்டதாக அவரிடம் கூறினார். உடனே உம்முத் தஹ்தா (ரழி), ‘‘(அப்படியா!) நமது வியாபாரம் வெற்றி அடைந்து விட்டது'' என்றார்.

இது விஷயமாகத்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘சொர்க்கத்தில் (உம்முத் தஹ்தாவின் கணவர்) அபூதஹ்தாவிற்கு எத்தனை பேரீச்சங்குலைகள் காத்திருக்கினறன! எத்தனை பேரீச்சங்குலைகள் காத்திருக்கின்றன!'' (முஸ்னது அஹ்மது, முஃஜமுத் தப்ரானி)

ஒரு முஸ்லிமான பெண், அல்லாஹ்வின் வணக்க வழிபாடுகளிலே தம் கணவருக்குத் துணையாக இருக்க வேண்டும். நேர்வழி பெற்ற நல்ல முஸ்லிம் பெண்மணியின் பண்புகளில் ஒன்று, தம் கணவன் பலதரப்பட்ட வணக்கங்களில் தானும் உதவியாக இருப்பதாகும். குறிப்பாக, இரவுத் தொழுகைக்கு மிக முக்கியத்துவம் தரவேண்டும்.

இதில் மனைவி தம் கணவருக்கு உதவுவதால், மிக மகத்தானதொரு பலனை அந்தக் கணவர் அடைகிறார்.

கணவர் சோம்பேறித்தனமாகவோ, அசதியாகவோ, கவனக் குறைவாகவோ இருக்கும் போது, அந்த மனைவி இது விஷயத்தில் அவருக்கு நினைவூட்ட வேண்டும். இருவரும் அல்லாஹ்வின் அருளைப் பெருமளவில் அடைவதற்கு முயல வேண்டும். நன்மைகளைப் பகிர்ந்து பெருக்க வேண்டும். இதற்கு நபி (ஸல்) அவர்கள் ஓர் அழகிய காட்சியை நம் முன் விவரிக்கிறார்கள். சிறந்த கணவன் மனைவி ஒவ்வொருவருக்கும் அதில் பொருத்தமான தொரு முன்மாதிரி இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
‘‘அல்லாஹுதஆலா அந்த ஆணுக்குக் கருணை காட்டட்டும் (அவர் எப்படிப் பட்டவர் என்றால்,) இரவில் எழுந்து தொழுகிறார் தம் மனைவியையும் எழுப்பு கிறார் அவளும் எழுந்து தொழுகிறாள். (ஆனால்,) மனைவி எழ மறுத்தாலோ, அவளது முகத்தில் தண்ணீர் தெளிக்கிறார்.

இன்னும் அல்லாஹு தஆலா அந்தப் பெண்ணுக்குக் கருணை காட்டட்டும் (அவள் எப்படிப்பட்டவள் என்றால்,) இரவில் எழுந்து தொழுகிறாள் தம் கணவரையும் எழுப்பு கிறாள் அவரும் எழுந்து தொழுகிறார் (ஆனால்,) கணவர் எழ மறுத்தாலோ, அவரது முகத்தில் தண்ணீர் தெளிக்கிறாள்.'' (ஸுனன் அபூதாவூது)


கணவன் உள்ளத்தைக் கொள்ளை கொள்வாள்:

கணவன் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதும், அவரது மனதிற்குத் திருப்தி அளிப்பதும் ஒரு பெண்ணின் கடமையாகும்.

நல்லறிவுடன் மார்க்கத்தைப் பேணி வாழக் கூடிய முஸ்லிம் பெண்மணி, தனது முதல் நோக்கமாக தன் இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளைச் சரியாக நிறைவேற்றுவாள். அதற்குப் பிறகு தம் கணவன் உள்ளத்தைக் கவர்வதிலும், அவரது இதயத்தில் இடம் பிடிப்பதிலும் கவனம் செலுத்துவாள். இதை எக்காலத்திலும் மறந்துவிட மாட்டாள்.

இதனால் அந்தக் கணவர் தனக்கு ‘‘இப்படிப்பட்ட மனைவி அமைந்திருப்பது பெரும் பாக்கியம்'' என்றும் ‘அருள்' என்றும் உணர வேண்டும். அந்த அளவிற்கு அவள் நடந்து கொள்ள வேண்டும்.

கணவன் உள்ளத்தை ஈர்ப்பதற்கான எல்லா வழிகளையும் தன் நுண்ணறிவால் தெரிந்து வைத்திருக்க வேண்டும் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

பெருந்தன்மையுடனும் மற்றவர்கள் பொறாமைப்படுகிற அளவிற்கு நெருக்கத் துடனும் கணவன் அதிகாரத்தின் கீழ் நற்பேறு பெற்று வாழ முழு முயற்சி செய்வாள்.

ஓர் ஆண் பெறக்கூடிய உலக இன்பங்களிலேயே மிகச் சிறந்த இன்பம், பெண்தான் என்பதை விளங்கி வைத்திருப்பாள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்:
‘‘உலகமே இன்பம்தான். அந்த இன்பங்களிலேயே மிகச் சிறந்தது நல்ல மனைவியாவாள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

ஆம்! ஒரு முஸ்லிம் பெண்மணி இதர உலக இன்பங்களிலேயே மிகச் சிறந்த இன்பமாக இருக்க வேண்டும். அதை என்றுமே நினைவில் வைத்திருக்க வேண்டும்.

கணவன் இதயத்தில் எப்படி இடம்பிடிப்பது, அவர் மனதிற்கு எப்படி நிம்மதி அளிப்பது ஆகிய விஷயங்களை அவள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

எந்தப் பெண்ணுக்குக் கணவன் உள்ளத்தைக் கவர்வதற்குத் தெரிய வில்லையோ, அந்தப் பெண் தமது கணவருக்கு மகிழ்ச்சியூட்ட முடியாது. மாறாக, பெரும்பாலான நேரங்களில் அந்தப் பெண்ணே தமது கணவன் துக்கத்திற்கும், கவலைகளுக்கும் காரணமாகி விடுவாள். இதைத்தான் நபி (ஸல்) அவர்கள் இப்படி கூறினார்கள்:
மனிதனுடைய நற்பாக்கியத்திற்கு மூன்று விஷயங்கள் தேவைப்படுகின்றன. அதே போல் மனிதனுடைய துர்பாக்கியத்திற்கும் மூன்று விஷயங்கள் காரணமாகின்றன. இதில் நற்பாக்கியமிக்க மூன்று விஷயங்கள்: 1) நல்ல பெண், 2) நல்ல தங்குமிடம், 3) நல்ல வாகனம்.

துர்பாக்கியத்திற்கான மூன்று விஷயங்கள்: 1) கெட்ட பெண், 2) கெட்ட தங்குமிடம் 3) கெட்ட வாகனம். (முஸ்னது அஹ்மது)

எனவே, ஒரு முஸ்லிமான பெண் தமது கணவரிடம், தான் ஓர் உண்மையான பணிவுமிக்க மனைவி என்பதை வெளிப் படுத்த வேண்டும். கணவன் உள்ளத்தைக் கவர்வதும், ஈர்ப்பதும் ஒரு மார்க்கப் பண்பு என்பதாய் எண்ண வேண்டும். ஒரு மனைவியின் இந்த அணுகுமுறையே, கணவரது ஒழுக்கத்தைப் பாதுகாத்து, நற்பண்புகளை வளர்க்கிறது குடும்பத்தின் தூண்களை உறுதிப்படுத்துகிறது நற்பாக்கியம் ஈடேற்றம் மற்றும் நல்ல வாழ்க்கையை தமக்கும் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் தேடித் தருகிறது.
பொதுவாகவே பெண்கள் தங்களது கணவன் இதயத்தை ஈர்ப்பதும், அதை கொள்ளை கொள்வதுமே தங்கள் பெண்மைக்கு அழகு என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், ஒரு முஸ்லிம் பெண்மணி அத்துடன் மட்டும் இருந்துவிட மாட்டாள். வெறுமனே உணர்ச்சிகளுக்கு அடிபணிய மாட்டாள். மாறாக, தமது கணவன் மனதிற்குத் திருப்தி அளிப்பதும், அவரை சந்தோஷப் படுத்துவதும் அல்லாஹ்வின் திருப்திக்காக என்றே நம்பிக்கை கொள்வாள். ஏனென்றால், அந்த அல்லாஹ்தான், ஒரு பெண் தமது கணவருக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதை மார்க்கமாக்கி உள்ளான் அதில் அவள் சரியாக நடந்து கொண்டாளா என்பதைப் பற்றி மறுமையில் கேள்வியும் கேட்பான். எனவே, ஒரு பெண் தமது கணவரிடம் அன்பு காட்டுவதிலும், பிரியத்துடன் நடந்து கொள்வதிலும், எந்த விதத்திலும் குறை வைத்துவிடக் கூடாது. வெளிரங்கமான அழகைக் கொண்டும், நல்ல வார்த்தைகளைக் கொண்டும், உயர்ந்த, விரும்பத்தகுந்த பண்பாடுகளைக் கொண்டும் அந்தக் கணவன் அன்பை அடைய முயல வேண்டும்.


கணவருக்காக அலங்காரம் செய்து கொள்வாள்:

எந்தெந்த முறைகளிலெல்லாம் ஒரு மனைவி தமது கணவருக்காகத் தன்னை அலங்கரித்துக் கொள்ள இயலுமோ, அந்த முறைகளிலெல்லாம் அவள் தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.

கணவன் கண்கள் குளிர்ச்சி அடையும் விதமாக அவள் தன் அழகை வெளிப் படுத்திக் கொள்ள வேண்டும். தமது அழகின் மூலமாக கணவருக்குத் திருப்தியூட்டி, மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்த வேண்டும். இப்படித்தான் நமக்கு முன் வாழ்ந்த நல்ல பெண்மணிகள் திகழ்ந் திருக்கிறார்கள்.

அவர்கள் இறைவணக்க வழிபாடுகளிலே திளைத்து வந்தார்கள் அல்லாஹ்வின் நூலை ஓதி வந்தார்கள். இருப்பினும், தங்களது கணவரை மகிழ்விப்பதில் அவர்கள் எவ்விதக் குறையும் வைக்கவில்லை. இவர்களுக்கொரு சிறந்த உதாரணமாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்களும் மற்ற பெண்களும் திகழ்கிறார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் வருகிற பல பெண்கள் தங்களைச் சிறந்த ஆடைகளால் அலங்கரித்துக் கொண்டதை அறிகிறோம். கணவருடன் உள்;ல் இருந்த போதிலும், அல்லது வெளியூர் செல்லும் போதிலும் அவருக்காக நகைகள் அணிந்து அலங்கரித்துக் கொண்டார்கள்.

ஒருமுறை பக்ரா பின்த் உக்பா (ரழி) அவர்கள் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் வந்து மருதாணி இடுவதைப் பற்றி கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரழி), ‘‘அது ஒரு நல்ல மரம் அதன் சாறும் தூய்மையானது'' என்று கூறினார்கள். அடுத்து பக்ரா (ரழி) அவர்கள் ஒரு பெண் தனது தேவையற்ற முடிகளை அகற்றிக் கொள்வதைப் பற்றி கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள், ‘‘உன் கணவருக்காக உனது இரண்டு கண்களையும் கழற்றி அதை முன்பிருந்ததை விட மிக கவர்ச்சியாக பொருத்திக் கொள்ள முடியும் என்ற வாய்ப்பிருந்தால், அதையும் நீ செய்து கொள்ளலாம்'' என்று பதிலளித்தார்கள். (அஹ்காமுன்னிஸா)

தன் கணவருக்காக அலங்கரித்துக் கொள்வதில் அலட்சியமாக இருந்து கொண்டிருக்கிற பெண்கள் இந்த வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும். எனவே, ஒரு மனைவியானவள் தனது அலங்காரங்களை முதன்மையாக கணவருக்காகவே செய்து கொள்ள வேண்டும். தோழிகளுக்காகவோ, பக்கத்து வீட்டு பெண்களுக்காகவோ அலங்கரித்துக் கொள்ளக் கூடாது.

கணவருக்காக அழகுபடுத்திக் கொள்வ தில் குறை வைக்கக் கூடிய பெண்கள் குற்றவா ளிகளாவர். தன் மீதுள்ள கடமையைச் சரிவர நிறைவேற்றாதது, ‘குற்றம்' என்பதை அவர்கள் உணர வேண்டும். இப்படி குற்றம் புரிவதால் தங்கள் கணவரை விட்டே அவர்கள் விலக வேண்டிய நிலையும் ஏற்படலாம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எந்த நேரமும் பரட்டைத் தலையுடனும், மலர்ச்சியற்ற முகத்துடனும், அழுக்கான ஆடையுடனும் இருக்கும் பெண், உண்மையில் கணவருக்கு மாறு செய்பவளாகவும் அறிவற்றவளாகவுமே இருப்பாள். இப்படிப்பட்ட பெண்கள், தங்கள் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தாலோ, வெளியில் எங்காவது விழாக்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் சென்றாலோ, உடனே தங்களை முழுமையாக அலங்கரித்துக் கொள்கிறார்கள். வீட்டில் இருக்கும் போதோ கணவருக்காக அலங்கரித்துக் கொள்வதில் அலட்சியம் செய்கிறார்கள்.

அல்லாஹ்வின் நேர்வழி பெற்று நல்லறிவுடன் வாழும் முஸ்லிமான பெண், இது போன்ற குற்றங்களில் இருந்து தன்னை தூரமாக்கி வைத்திருப்பாள். இப்படி நல்ல முறையில் வாழ்கிற பெண், கணவன் உரிமைகளில் குறை வைப்பாளா என்ன? நிச்சயமாக குறை வைக்க மாட்டாள்.

கணவரிடம் நல்ல முறையில் நடந்து கொள்வது மற்றும் அவருக்கு மாறு செய்வது ஆகிய இரண்டும் முரண்பட்ட பண்புகளாகும். கணவரை அதிகமதிகம் நேசிக்கக்கூடிய, மார்க்கப்பற்றுள்ள பெண்ணிடம் இரண்டும் ஒன்று சேராது. மாறாக முதலாவது பண்பே நிரம்பியிருக்கும்.

நிச்சயமாக இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு மிக நேர்த்தியான வழி காட்டியுள்ளது. கணவருக்காக அலங்கரித்துக் கொள்ள வேண்டும் அவருடைய கண்களைக் கவரும்படி ஆடை அணிந்து கொள்ள வேண்டும் அவரது விருப்பம் அறிந்து நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் உபதேசித்துள்ளது.

துக்கக் காலத்தில் கூட மூன்று நாட்களுக்கு மேல் ஒரு பெண் துக்கம் கடைப்பிடித்து துக்க ஆடைகள் அணியக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளது. ஆனால் கணவர் இறந்து விட்டால் மட்டும் நான்கு மாதமும் பத்து நாட்களும் துக்கம் கடைப்பிடிக்கலாம் என்று அனுமதித்திருக்கிறது.

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் ஸைனப் பின்த் அபீசலமா (ரழி) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
நான் (அன்னை) ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களின் சகோதரர் இறந்த சமயம் அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் நறுமணப் பொருள் ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி அதைப் பூசிக் கொண்டார்கள்.

பிறகு, இதோ! (பாருங்கள்.) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனக்கு இப்பொழுது இந்த நறுமணம் தேவையே இல்லை. எனினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மிம்பர்) மேடையில் இருந்தபடி ‘‘அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், தம் கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர!'' என்று கூறக் கேட்டுள்ளேன் என்றார்கள். (ஆகவேதான் இப்படி செய்தேன் என்றார்கள்) (ஸஹீஹுல் புகாரி)


கணவரைச் சந்திக்கும் போது மகிழ்ச்சியாகவும், ஆறுதல் அளிக்கும் விதமாகவும் நன்றி உணர்வோடும் நடந்து கொள்வாள்:

ஒரு முஸ்லிமான பெண் தமது கணவருக்காக மலர்ச்சியான முகத்துடனும், சந்தோஷமான நினைவுடனும் இருப்பது, அவள் தம் கணவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதில் உள்ளடங்கியதாகும். இதன் மூலம் அவள் தமது கணவன் வாழ்வைச் செழிப்படையச் செய்கிறாள். அந்தச் செழிப்பின் மூலம் கணவன் வாழ்க்கையில் ஈடேற்றத்தையும், நற்பாக்கியத்தையும் ஏற்படுத்துகிறாள்.

பெரியசிரமங்களுக்கு மத்தியிலும் மன அழுத்தங்களுக்கு மத்தியிலும் கணவர் வீடு திரும்பும்போது, அவரை மலர்ந்த முகத்துடன் அணுகி வரவேற்க வேண்டும். இப்படி வரவேற்பதை அவன் பார்த்தவுடன், தனது கவலைகளை எல்லாம் மறந்து, மகிழ்வடைகிற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

தன்னால் இயன்ற வரை அவரது கவலைகளை மாற்றுவதற்கும், அதற்கு ஈடாக மகிழ்ச்சியை உண்டாக்குவதற்கும் முயல வேண்டும்.

கணவரிடம் அவருக்கு நல்லதொரு வாழ்க்கையும் ஈடேற்றமும் உண்டாகும் என்று கூறி ஊக்கமூட்ட வேண்டும் அவரது உள்ளத்தைத் திறக்க வேண்டும். அவர் செய்த உபகாரங்களை நினைவு கூர்ந்து நன்றி கலந்த வார்த்தைகளைப் பேச வேண்டும்.

தனக்கு தம் கணவர் ஒரு நன்மையைச் செய்யும்பொழுதோ, அல்லது பாராட்டுக்குத் தகுதி மிக்க காரியங்களைச் செய்து தரும்போதோ, அவருக்கு அதற்குரிய நன்றியை நல்ல முறையில் சொல்ல வேண்டும்.

நிச்சயமாக முஸ்லிமான பெண், நன்றி மிக்கவளாகவும் நீதமிக்கவளாகவும் இருப்பாள். நன்றி மறப்பதையோ, அதற்கு மாறு செய்வதையோ, முரண்பட்டு நடப் பதையோ யாருக்கும் செய்ய மாட்டாள்.

இஸ்லாமியப் பெண் பின்பற்றி வரும் அவளது தூய மார்க்கம் அவளை இந்த கெட்ட குணங்களை விட்டும் பாதுகாக்கிறது.

பொதுவாக அந்நியருக்கே அவர்கள் செய்த நன்றிக்கு மாறாக நடந்து கொள்ளக் கூடாது என்று அவளது மார்க்கம் போதிக்கும் போது, அவளின் நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் உற்ற தோழனாகவும், மிகப் பிரியத்திற்கு உரியவனாகவும் இருக்கிற தம் கணவருக்கு நன்றி கெட்டவளாக அவள் நடந்து கொள்வாளா? நிச்சயமாக மாட்டாள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘‘யார் மக்களுக்கு நன்றி செலுத்த வில்லையோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவர்களாய் ஆக மாட்டார்கள்''. (அல் அதபுல் முஃப்ரத்)

முஸ்லிம் பெண்மணி, இந்த சொல்லின் ஆழத்தை உணர்ந்திருப்பாள். மேலும், மக்களில் யாராயினும் தனக்கு ஒரு நன்மை செய்தால் - ஓர் உதவி செய்தால், உடனடியாக அவருக்குக் கைமாறு செய்ய வேண்டும் என்ற மார்க்கப் பண்புடன் நடப்பாள்.

இன்னும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘‘கணவர் பக்கம் தேவை உள்ளவளாக இருந்தும் அவருக்கு நன்றி செய்யாத பெண்ணை அல்லாஹ் (மறுமையில் கருணைப் பார்வை கொண்டு) பார்க்க மாட்டான்.'' (முஸ்தத்ரகுல் ஹாகிம்)

இந்த நபிமொழியின் கருத்தைப் பார்த்த பிறகும் ஒரு முஸ்லிமான பெண் தம் கணவருக்கு நன்றி செலுத்தும் விஷயத்தில் சந்தேகம் கொள்வதற்கோ, தயங்குவதற்கோ எப்படித் துணிய முடியும்!


கணவருடைய மகிழ்ச்சியில் பங்கு பெறுவாள்:

கணவருடைய உள்ளத்தில் இடம் பிடிப்பதற்கும், அவருள் அன்பை நிரப்புவதற்கும் உள்ள வழிகளில் ஒன்று, கணவரது மகிழ்ச்சியிலும் துயரத்திலும் பங்கு பெறுவதாகும்.

கணவன் அன்றாடப் பணிகளில் பங்கெடுக்க வேண்டும். உதாரணமாக, படிப்பது, உடற்பயிற்சி செய்வது, சில பேச்சுகளைப் பரிமாறுவது, செய்திகளைக் கேட்பது போன்றவற்றைச் சொல்லலாம்.

இதனால் கணவருக்கு எப்படிப்பட்ட உணர்வை ஏற்படுத்த வேண்டுமென்றால், வாழ்க்கையின் நல்லவற்றைக் கொண்டு இன்பங்களைப் பெறுவதில், தான் ஒரு தனித்தவன் அல்ல தன்னுடன் தனக்கு துணையாக ஒரு நன்றியுள்ள, பிரியமுள்ள நல்லொழுக்கமுள்ள மனைவியும் இருக்கிறாள் என்ற எண்ணத்தை அவர் அடைய வேண்டும்.

கணவருடன் இணைந்து, வாழ்வின் எல்லாச் சுவைகளையும் பருக வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது துணைவி ஆயிஷா (ரழி) அவர்களிடம் ஓட்டப் பந்தய விளையாட்டை மேற்கொண்டதில் இதற்கொரு நல்ல சான்று இருக்கிறது.

இஸ்லாம், கணவன் மனைவி இருவரும் ஒருவர் மற்றவன் இன்பத்திலும், வாழ்க்கையின் சுகங்களிலும், துக்கங்களிலும் பங்குபெற வேண்டுமென ஆர்வமூட்டுகிறது. இவ்வாறு மனைவியானவள் கணவனின் சுக துக்கங்களில் பங்கு பெறுவதும், பகிர்ந்து கொள்வதும் இல்லற வாழ்க்கையின் உணர்வுகளில் மிகப் பெரியதாக்கத்தை ஏற்படுத்தும் திருமண ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் திருமணக் கோட்டையைப் பலப்படுத்தும்.

மனைவி என்பவள் கணவன் மகிழ்ச்சியிலும் சந்தோஷத்திலும் மட்டும் பங்கு கொள்ளாமல், அவரது கவலைகளின் போதும் பங்கு கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நல்ல ஆறுதலான வார்த்தைகளைக் கூறி அவரைத் தேற்ற வேண்டும். அவரது தேவைக்குத் தகுந்தாற் போல் பயனுள்ள ஆலோசனைகளைக் கூறியும், உள்ளத்தால் உண்மையான அன்பையும் பரிவையும் வெளிப்படுத்தியும் உறுதுணையாக இருக்க வேண்டும்.


கணவர் அல்லாதவரை விட்டும் தமது பார்வையைத் தாழ்த்திக் கொள்வாள்:

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட முஸ்லிமான பெண், தனது கணவர் அல்லாத பிற ஆடவரை ஏறிட்டும் பார்க்க மாட்டாள். மஹ்ரம் அல்லாத (மணமுடிக்கத் தடை செய்யப்படாத) ஆண்களின் மீது தனது பார்வையைச் செலுத்த மாட்டாள்.

‘‘(நபியே!) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீர் கூறுவீராக! அவர்களும் தங்கள் பார்வையைத் தாழ்த்தியே வைத்திருக்கட்டும்!'' (அன்னூர் 24:31)

என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். எனவே, முஸ்லிமான பெண் தனது பார்வையைப் பேணுதலாக கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும்.

ஒரு பெண் தனது பார்வையைத் தாழ்த்தி இருப்பது, அவளது கற்பு பரிசுத்தமாக இருப்பதற்கும் உணர்வுகள் தூய்மையானதாக இருப்பதற்கும் மிகப் பெரியஅடையாள மாகும். அது மட்டுமின்றி, ஆண்களுக்குப் பெண்களிடம் பிடித்தமானதும் அதுவே ஆகும்.

இதனால்தான், இறுதி இறைநூல் அல்குர்ஆனில் சொர்க்கப் பெண்மணிகளையும் அவர்களின் தன்மைகளையும் வருணிக்கும் போது அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்:

(அந்தச் சொர்க்கச் சோலைகளில்) கீழ் நோக்கிய பார்வைகளை உடைய (அழகிய) கன்னிகைகளும் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர், அவர்களை யாதொரு மனிதனும் ஜின்னும் தீண்டி இருக்க மாட்டார்கள். (அர்ரஹ்மான் 55:56)


கணவரிடம் எந்தப் பெண்ணைப் பற்றியும் வருணிக்க மாட்டாள்:

ஒரு நல்ல பண்புள்ள முஸ்லிம் பெண்மணி, தனது கணவரிடம் தன் தோழிகளையோ அவர்களின் குணாதிசயங்கள் பற்றியோ வருணித்துப் பேச மாட்டாள். அப்படிப் பேசுவதை நபி (ஸல்) அவர்கள் கண்டித்திருக்கிறார்கள்.

‘‘ஒரு பெண் இன்னொரு பெண்ணை வெறும் உடலோடு கட்டித் தழுவ வேண்டாம் அவளைப் பற்றி தம் கணவரிடம் - அவளை அவர் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம்'' (ஸஹீஹுல் புகாரி)

இஸ்லாம், மனிதனுடைய உள்ளத்தை நிம்மதி மிக்கதாகவும், குழப்பங்கள் நீங்கி நற்சிந்தனைகள் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறது. அவனது சிந்தனைகள் முறைப்படுத்தப்பட்டு நேர்மையானதாக இருக்க வேண்டும் என்கிறது. அப்போதுதான், மனிதன் தன் வாழ்க்கையில் நிம்மதியுடனும் நடு நிலையுடனும், உள்ளத்தில் தெளிவான எண்ணத்துடனும் நடைபோட முடியும் அதன் மூலமே அவனுக்கு அல்லாஹ் விதித்திருக்கிற கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற முடியும்.

ஒரு முஸ்லிம் ஆடவருக்கு எத்தனையோ கடமைகளும் பணிகளும் இருந்து கொண்டிருக்கும் போது அவரது மனைவியால் பிற பெண்கள் வீணாக வருணிக்கப்பட்டு, அதைப் பற்றிய சிந்தனையாலும் எண்ணத்தாலும் அவருடைய காரியங்கள் வீணாகி விடக் கூடாது. அது போன்ற வீணான பேச்சுகளில் ஈடுபட்டு, அவரது ஆற்றலும் அறிவுத் திறமையும் நிலைகுலைந்து விடக்கூடாது. சில சமயங்களில் இத்தகைய பேச்சுகள், வழிகேட்டிற்கும் குழப்பத்திற்கும் பிரச்சினைகளுக்கும் தூண்டுகோலாகி விடும்.


கணவனுக்கு அமைதி அளிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பாள்:

ஒரு முஸ்லிமான பெண், தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும், அழகுபடுத்திக் கொள்வதிலும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவிட மாட்டாள். மாறாக, கணவருக்குத் தேவையான அமைதியையும், மனநிம்மதியையும் உண்டாக்கவும் முயற்சி செய்வாள்.
கணவருடைய பார்வை வீட்டின் எந்தப் பகுதியில் பட்டாலும் அந்த வீடு தூய்மையாக முறையான அமைப்பாக இருக்க வேண்டும். வீட்டில் வளரும் குழந்தைகள் இஸ்லாமியக் கலாசாரம் அறிந்தவர்களாகவும், அதைப் பின்பற்றக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் அந்த உணர்வு உள்ளவர்களாக உருவாக வேண்டும்.

இந்த அனைத்துமே கணவருடன் ஒரு மனைவி பேணவேண்டிய ஒழுக்கங்களில் உள்ளடங்கியதாகும்.
ஒவ்வொரு முஸ்லிம் பெண்மணியும் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். திருமணம் என்பது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஓர் அத்தாட்சியாகும். அந்த அத்தாட்சியில் மனைவி என்பவளை அல்லாஹ், அவள் தனது கணவருக்கு மன அமைதி தரக் கூடியவளாகவும், மகிழ்ச்சியை உண்டாக்கக் கூடியவளாகவும் ஆக்கியுள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான்:
நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பை யும் நேசத்தையும் உண்டுபண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு இவற்றில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அர்ரூம் 30:21)
ஆம்! திருமண உறவு என்பது ஓர் உயிர் மற்றோர் உயிருடன் இணையக் கூடிய ஆழமானதோர் உறவாகும். அல்லாஹ், அந்த உறவை இரண்டு உயிர்களுக்கிடையே ஏற்படுத்தி, அவர்கள் ஒருவர் மற்றவரிடம் ஆகுமான முறையில் நிம்மதியையும் இன்பத்தையும் அடைகின்றனர் மகிழ்ச்சியை யும் பெறுகின்றனர்.

நிச்சயமாக ஆணுக்கு மன அமைதியை யும், ஆறுதலையும் வழங்குவதில் அவன் மனைவியே முழுத் தகுதியுள்ளவளாவாள். இஸ்லாமிய இல்லறம் என்பது பரிசுத்தமான அன்பினாலும், ஆழமான இரக்கத்தாலும் செழிப்புற்று இருக்க வேண்டும். நல்ல அறிவுள்ள முஸ்லிம் பெண், இந்த கருத்துகளை நன்கு விளங்கி வைத்திருப்பாள். தான் கற்ற இஸ்லாமியக் கல்வி அறிவை எதார்த்த வாழ்வில் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்துவதிலும் தவறாதிருப்பாள்.

பெருந்தன்மை உள்ளவளாகவும் சிறுசிறு குறைகளை மன்னித்து விடக் கூடியவளாகவும் இருப்பாள்:

முஸ்லிம் பெண்மணி பெருந்தன்மை மிக்க வளாகவும், மன்னிக்கும் மனப்பான்மை உடையவளாகவும் இருக்க வேண்டும். தவறுகளையோ, தான் விரும்பாத செயல்களையோ கணவர் செய்து விடும் போது அதை மன்னித்து மறந்து விடுபவளாக இருக்க வேண்டும். அவற்றை நினைவில் வைத்துக் கொண்டு, அவ்வப்போதெல்லாம் கணவரிடம் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கக் கூடாது.

இறுக்கமான முகத்துடன் உள்ள கணவன் உள்ளத்தைத் திறப்பதில், இந்த மன்னித்து மறக்கும் மனப்பான்மையை விட ஒரு சிறந்த குணம் இருக்க முடியாது. அதேபோல், அவரது உள்ளக் கதவுகளை உடைத்தெறி வதில், அவருடைய குற்றங்களை அவ்வப்போதெல்லாம் நினைவுப்படுத்திக் கொண்டிருப்பதை விட வேறொரு தீய குணம் இருக்க முடியாது.

மார்க்கத்தைப் பேணுதலாகவும் முறையாகவும் பின்பற்றக் கூடிய முஸ்லிம் பெண்மணிகள், அல்லாஹ் கூறுவதைக் கவனிக்கட்டும்:
‘‘அதனை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.'' (அன்னூர் 24:22)

எனவே, இந்த நற்பண்பைக் கொண்டுள்ள முஸ்லிம் பெண்மணியே, கணவரது உள்ளத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய வளாக இருப்பாள். அவரது உள்ளத்திற்கு உவகையையும் அமைதியையும் அளிப்பதில் அவளே முதன்மையானவளாக இருப்பாள்.

உறுதியுடனும் மதி நுட்பத்துடனும் இருப்பாள்:

தனது மார்க்க நல்வழி காட்டலைக் கொண்டு பிரகாசம் பெற்ற முஸ்லிம் பெண்மணிக்குச் சில தனித்தன்மைகள் இருக்கின்றன. அவளது சிந்தனை கனிந்த தாகவும், உறுதியானதாகவும், தீர்க்கமான தாகவும் இருக்கும். திருமணத்திற்கு முன்பும், பின்பும் இந்தப் பண்புகள் அவளிடம் நிரம்பிக் காணப்படும். காரணம், இந்தப் பண்புகள் அனைத்தும் அந்த முஸ்லிமான பெண்மணி, தனது மார்க்கத்தை விளங்கி அதைப் பற்றிய அறிவைப் பெற்றுள்ளாள் என்பதற்கு அடையாளங்களாகும்.

தனக்கு அல்லாஹ் விதித்திருக்கின்ற பொறுப்புகளையும் கடமைகளையும் புரிந்து வைத்திருக்கிறாள் என்பதற்குச் சான்றுகளாகும்.

கணவரைத் தேர்ந்தெடுக்கக் கூடிய நிலையிலும் முஸ்லிம் பெண்மணி உறுதி மிக்கவளாக இருப்பாள். தனது பெற்றோர்கள் வழி தவறி, தனக்குப் பொருந்தாத ஓர் ஆணை மணமுடித்து வைக்க முனையும் போது அவளது உறுதியைத் தளர்த்திவிட மாட்டாள். பெற்றோரின் ஆசைக்காக அவளது உறுதி தளர்ந்துவிடாது பலவீனமாகி விடாது.

தன்னை நிர்ப்பந்தித்து மணமுடித்து வைக்க முயலும் போது அவர்களுக்கு இசைந்து விட மாட்டாள். அதேபோல், மார்க்கப் பற்றும் மார்க்க அறிவும் இல்லாத ஒருவன், அவளை மணமுடிக்க விரும்பி முன்வரும் போது அவன் எவ்வளவுதான் செல்வ வசதிகள் உள்ளவனாக இருந்தாலும், அவனை நிராகரிப்பதில் உறுதி குலைந்துவிட மாட்டாள் அதில் பலவீனப்பட்டு விட மாட்டாள்.

மேலும், நல்லதொரு கணவனை மணமுடித்த பிறகும் தன் உறுதியில் பலவீனப்பட்டு விட மாட்டாள். நல்ல குணங்களுடனும், பெருந்தன்மையுடனும், கணவருக்கு வழிப்பட்டு நடப்பதுடனும் தன் உறுதியான பண்பாட்டையும் தக்க வைத்திருப்பாள். குறிப்பாக, தனது மார்க்கக் கொள்கை விஷயங்களில் எக்காலத்திலும் உறுதியை விட்டு விடமாட்டாள்.

இதற்கொரு சிறந்த உதாரணத்தை உம்மு ஸுலைம் (ரழி) அவர்களது வரலாற்றில் பார்த்திருக்கிறோம்.

தனது முதல் கணவர் ‘மாலிக் பின் நழ்ர்' இணை வைப்பதிலும், அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலும் இருந்த போது, அவரை விட்டும் முற்றிலுமாக உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் விலகி இருந்தார்கள்.

மேலும், உம்மு ஹபீபா பின்த் அபூஸுஃப்யான் (ரழி) அவர்களும் தனது மார்க்கக் கொள்கையில் பிடிப்புள்ளவர்களாக வாழ்ந்தார்கள்.

உம்மு ஹபீபா (ரழி) அவர்களின் கணவர் ‘உபைதுல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் அல்அஸதி' என்பவர் இஸ்லாமை விட்டும் விலகி கிருத்துவராக மாறிச் சென்ற போதும், உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் தன் கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை. தனது மார்க்கத்திலிருந்து இறங்கி வரவில்லை நிலை குலையவில்லை மார்க்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

இன்னும், தனக்கு விருப்பமற்ற கணவனி டம் இருந்து பிரிவதில் இறுதிவரை உறுதியாக இருந்த பரீரா (ரழி) அவர்களும் ஒரு முன்னுதாரணம் ஆவார்கள். முஃகீஸ் (ரழி) என்ற அவரது கணவருக்காக நபி (ஸல்) அவர்கள் சிபாரிசு செய்த போதிலும், ‘அல்லாஹ்வின் தூதரே! இது உங்களது கட்டளையா? சிபாரிசா?' என்று கேட்டு, கட்டளை என்றால், உடனடியாக அடி பணிகிறேன் என்ற தனது கீழ்ப்படிதலை வெளிப்படுத்தினார்கள்.

அவ்வாறே, ஸாபித் பின்த் கைஸ் பின் ஷம்மாஷ் (ரழி) அவர்களது மனைவி, நபி (ஸல்) அவர்களிடம் தனது கணவருடனான தன் நிலையைக் கூறி தலாக் கேட்டதையும் இதற்கு முன்பு கூறியுள்ளோம்.

இந்தப் பெண்களெல்லாம் அப்படி இருந்ததற்கு காரணம், தங்களது மார்க்கக் கொள்கை விஷயத்தில் மிக்க பேணுதலாகவும், உறுதிப்பாட்டுடனும் இருந்ததே ஆகும். அவர்களில் ஒவ்வொருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் (அல்லாஹ் அனுமதித்தவற்றையே) ஹலாலையே தேடினார்கள். (அல்லாஹ் தடுத்தவற்றில்) ஹராமில் விழுவதிலிருந்து பயந்தார்கள்.

தனது இறைமார்க்கத்தைப் பின்பற்றாத, அந்தக் கொள்கைப்படி வாழாத ஒருவனைக் கணவனாக அடைந்து விட்டாலோ, அல்லது தனக்குப் பிடிக்காத ஒருவனிடம் வாழ்கிற நிலைக்கு ஆளாகி விட்டாலோ, அல்லது அந்தக் கணவரை அனுசரித்து வாழ இயலாது என்று உணர்ந்து விட்டாலோ, தாம் ஹராமில் விழுந்து முறையற்ற நடத்தைக்கு ஆளாகி விடுவோமோ என்று பயந்தார்கள்.

இதனால்தான், மார்க்க நெறிப்படி உறுதிமிக்க நிலைப்பாட்டை எடுத்தார்கள். அதில் மட்டும் அவர்களிடம் நம்பிக்கையைப் (ஈமானைப்) பற்றிய கண்ணியம் இல்லாதிருந்தால், அவர்களும் தம் கணவன்மாரின் செயல்களுக்கெல்லாம் செவிதாழ்த்தி இருப்பார்கள். அற்ப உலக விஷயங்களில் தங்களை இழந்திருப்பார்கள். துர்பாக்கியங்களையும் மன நெருக்கடிகளையும் அதிக மதிகம் அனுபவித்திருப்பார்கள். எனவே, மார்க்கத்தின் நல்வழிகாட்டுதலைப் பெற்ற முஸ்லிம் பெண்மணிகள் ஒவ்வொரு காலத்திலும் அந்த மகத்தான பெண்களைப் போல இருக்க வேண்டும்.

முஸ்லிம் பெண்மணியிடம் இருக்கும் உறுதியான பண்பு தன் கணவருக்கு அவள் கீழ்ப்படிவதை விட்டும், அவரிடம் நல்ல முறையில் நடந்து கொள்வதை விட்டும், அவருக்கு உபகாரம் செய்வதை விட்டும், அவரை மதித்து நடப்பதை விட்டும் அவளை வெளியேற்றி விடக் கூடாது தடுத்து விடக் கூடாது.

எதிலும் சமநிலை மிக்க பெண்ணாக அவள் இருக்க வேண்டும். சொல்லிலும் செயலிலும் மதி நுட்பம் மிக்க நிதானம் இருக்க வேண்டும்.

அற்பமான காரியங்களையோ மன இச்சைக்கு அடிமையான போக்கையோ அவள் மேற்கொண்டு விடக் கூடாது. குறிப்பாக, கணவன் மீது கோபமோ, அவரைப் பற்றி கசப்புணர்வுகளோ ஏற்படும் போது கூட, அந்த முஸ்லிம் பெண்மணி தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வாள். நாவிற்குக் கடிவாளம் இட்டு அடக்கி வைத்திருப்பாள்.

கணவருக்கு வெறுப்பூட்டக் கூடிய - அவரது மனதைக் காயப்படுத்தக் கூடிய எந்த வார்த்தையையும் அவள் உதிர்த்துவிட மாட்டாள்.

ஒரு சமநிலையான சிந்தனையுடன் தெளிவுள்ள முஸ்லிம் பெண்ணின் தனித்தன்மைகள் இவையே ஆகும்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் இருந்த, இத்தகைய பண்புகளை ஒவ்வொரு முஸ்லிம் பெண்மணியும் பின்பற்றுவது அவசியமாகும்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தமது கணவராம் நபி (ஸல்) அவர்கள் மீது கோபப்பட்டவராக இருக்கும் போது செய்யும் சத்தியத்தின் வாசகமும் அவர்கள் மீது மகிழ்ச்சியுற்றவராக இருக்கும் போது செய்யும் சத்தியத்தின் வாசகமும் மாறுபட்டதாக இருக்கும். ஆனால், இரண்டிலுமே ஒழுக்கம், கண்ணியம், மதிப்பு, மரியாதை ஆகியவை மிகைத்தே காணப்படும். இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள்.

ம்ஆயிஷாவே! நீ என்னிடம் மகிழ்ச்சியுடன் இருந்தால் அதையும் தெரிந்து கொள்கிறேன் என்னிடம் கோபமாக இருந்தால் அதையும் தெரிந்து கொள்கிறேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, ‘அல்லாஹ்வின் தூதரே! அதை எப்படித் தெரிந்து கொள்கிறீர்கள்?' என்று ஆயிஷா (ரழி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ என்னிடம் மகிழ்ச்சியுடன் இருந்தால், ஏதாவதொரு விஷயத்தைப் பேசும் போது ‘இல்லை! முஹம்மதின் இறைவன் மீது சத்தியமாக!' என்று சொல்கிறாய் என்னிடம் கோபமாக இருந்து எதையாவது பேசினால், ‘இல்லை! இப்றாஹீமின் இறைவன் மீது சத்தியமாக!' என்று சொல்கிறாய்'' என்று கூறினார்கள். இதைக் கேட்டவுடன் ஆயிஷா (ரழி) அவர்கள், ‘‘ஆம் அல்லாஹ்வின் தூதரே! அந்த நேரத்தில் நான் உங்களுடைய பெயரைத்தான் விடுகிறேன். (உங்களை அல்ல உங்கள் மீதான நேசத்தை அல்ல!)'' என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

ஆஹா! என்னவொரு கண்ணியமான வாக்கியம் என்னவொரு தூய்மையான அன்பு! என்னவொரு உயர்வான ரசனை!!

ஆயிஷா (ரழி) அவர்களின் மேலான பொறுமையும் உறுதியான நிலைப்பாடும் மிக அதிகமாகத் தென்பட்டது எப்போதென்றால், அவர்கள் மீது அவதூறு கூறிய நிகழ்ச்சி நடந்தபோதாகும். அந்த நிகழ்ச்சியை அல்லாஹ், தனது தூதருக்கும் முழு முஸ்லிம் சமுதாயத்துக்கும் ஒரு சோதனையாக ஆக்கி வைத்தான். அச்சோதனையின் மூலம் ஒரு கூட்டத்தை மேன்மைப்படுத்தினான் மற்றொரு கூட்டத்தை கேவலப்படுத்தினான். யார் நேர்வழி பெற்றிருந்தார்களோ, அவர்களின் ஈமானும் (நம்பிக்கையும்) நேர்வழியும் அதிகரித்தது. யார் அநியாயம் செய்து கொண்டிருந்தார்களோ, அவர்களுக்கு அந்த நிகழ்ச்சி நஷ்டத்தைத் தவிர வேறொன்றையும் அதிகப்படுத்தவில்லை.

ஆயிஷா (ரழி) அவர்களின் மன உறுதியையும் மன தைரியத்தையும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மிகத் தெளிவாக அறிய முடிகிறது. அல்லாஹ்வின் மீது அவர்கள் கொண்டிருந்த ஈமான் (நம்பிக்கை) எவ்வளவு உறுதியாக இருந்தது, தனது தூய்மையை அல்லாஹ் நிச்சயம் வெளிப் படுத்துவான் என்பதில் எந்தளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதையும் அறிகிறோம்.

இமாம் இப்னுல் கைய்’‘ (ரஹ்) அவர்கள் இந்த நிகழ்ச்சியைப் பற்றி கூறுகிற வருணனையை விட சிறந்ததொரு வாக்கி யத்தை என்னால் கூற முடியாது. ஓர் ஆழமான - உண்மையான ஈமான் (நம்பிக்கை) எந்த அளவிற்கு ஆயிஷா (ரழி) அவர்களிடம் இருந்தது! அல்லாஹ்வைக் கொண்டே கண்ணியம் பெற வேண்டும் அவனிடமே உதவி பெற வேண்டும் அவன் நீதமானவன் உண்மையானவன் என்று அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை எவ்வளவு அதிகமாக - அழுத்தமாக இருந்தது! அதை இப்னுல் கைய்’‘ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஆம்! சோதனை முழுமையடைய வேண்டுமென அல்லாஹ்வின் நாட்டம் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இது விஷயமாக ஒரு மாத காலம் வஹி (இறைச் செய்தி) தடை செய்யப்பட்டிருந்தது. இது பற்றி எந்த செய்தியும் அவர்களுக்கு வரவில்லை.

அல்லாஹ், இது விஷயமாக எந்த அறிவுரையை - நுட்பத்தை வெளிப்படுத்த நாடினானோ, அதை முழுமையாகச் செய்ய விரும்பினான். உண்மையான நம்பிக்கை யாளர்களுக்கு அவர்களின் நீதமும் - அல்லாஹ்வின் மீதும் அவனது தூதரின் மீதும் - அந்தத் தூதரின் குடும்பத்தார் மீதும் -அல்லாஹ்வுடைய அடியார்களில் உண்மையானவர்கள் மீதும் - நம்பிக்கை கொள்வது உறுதி பெறவேண்டும் நல்லெண்ணம் வரவேண்டும் நயவஞ்சகர்களுக்கு அவர்களின் பழிச்சொல்லால் அவர்களது நயவஞ்சகம் இன்னும் அதிகரிக்க வேண்டும் தனது தூதருக்கும் நம்பிக்கை யாளர்களுக்கும் அந்த நயவஞ்சகர்களின் சுயரூபத்தை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் அல்லாஹ் விரும்பியிருந்த அடிமைத் தன்மையை ஆயிஷா (ரழி) அவர்களிடமும், அவர்களது பெற்றோரிடமும் பூரணமாக வெளிப்படுத்தச் செய்ய வேண்டும் அவர்களுக்குத் தனது அருளை முழுமைப்படுத்த வேண்டும் அல்லாஹ்வின் பக்கம் தேவை உள்ளவர்களாக இருக்கிற அவர்களின் பண்பும் ஆசையும் மேலும் பலமாக வேண்டும் அவனுக்கு அதிகம் பணிய வேண்டும் அவனைப் பற்றி நல்லெண்ணம் கொள்ள வேண்டும் அவனிடமே ஆதரவு வைக்க வேண்டும் அல்லாஹ்வின் படைப்பினங்களை நம்பித் தான் நமக்கொரு காரியம் ஆக வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்களைத் துண்டித்து, அவர்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் என்றெல்லாம் அல்லாஹ் விரும்பினான்.

இந்த நிலையில், தனது கடமையை ஆயிஷா (ரழி) அவர்கள் சரியாகவே நிறைவேற்றினார்கள்.

ஆயிஷா (ரழி) அவர்கள் தூய்மையானவர் என்ற அல்லாஹ்வின் அறிவிப்பு வந்த நிலையில், அவர்களுடைய பெற்றோர்கள், ‘‘ஆயிஷாவே! நீ எழுந்து நபி (ஸல்) அவர்களிடம் செல்!'' என்று கூறிய சமயத்தில், ஆயிஷா (ரழி) கூறினார்கள்:
‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அவர்களிடம் எழுந்து செல்லவும் மாட்டேன். அவர்களைப் பாராட்டவும் மாட்டேன் உங்கள் இருவரையும் கூட பாராட்ட மாட்டேன். மாறாக, என்னைக் குற்றமற்ற வளாக அறிவித்து, (வஹ்யை) இறைத்தூதை அருளிய அல்லாஹ்வையே புகழ்வேன். நீங்கள் (என் மீதான) அவதூற்றைக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். அதை மறுக்கவுமில்லை அதை மாற்ற முயலவுமில்லை''.
இங்கு நாம், வஹி ஏன் ஒரு மாதக்காலம் தாமதித்தது என்ற கேள்விக்கும் விடை அறிய வேண்டியுள்ளது.

அல்லாஹ் தனது தூதருக்கு இந்த நெருக்கடியான நிலையில் என்ன வஹி (இறைச் செய்தி) இறக்கப் போகிறான் என்ற ஆவலுடன் எதிர்பார்த்தபடி முஃமின்கள் (நம்பிக்கையாளர்கள்) இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாரும், அபூபக்ர் (ரழி) அவர்களின் குடும்பத்தாரும் மற்றும் அனைத்து நபித்தோழர்களும் வஹ்யை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடும் வறட்சியான காலத்தில் எப்படி ஒரு வளமான மழையை எதிர்பார்ப்போமோ, அதைப் போல் அந்தத் தோழர்கள் வஹ்யை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த நேரத்தில்தான், அல்லாஹ்வின் வசனம் இறங்கி அங்கிருந்தோன் மீது பெயதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அல்லாஹ் தனது தூதருக்கு இது விஷயத்தின் உண்மை நிலைகளை ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தியிருந்தால் - வஹ்யை உடனடியாக இறக்கியிருந்தால் - இந்த நுட்பங்கள் எதுவும் நமக்குத் தெரியாமலே போயிருக்கும்.

மேலும், அல்லாஹு தஆலா தனது தூதரின் மேன்மையை, அவரது குடும்பத் தான் தகுதியை உலகுக்கு உணர்த்த விரும்பினான். நபி (ஸல்) அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் தன்னிடத்தில் எந்த அளவிற்கு மதிப்பிற்குரியவர்கள், சங்கை மிக்கவர்கள் என்பதை வெளிப்படுத்த விரும்பினான்.

இன்னும், நபி (ஸல்) அவர்களை இந்த பிரச்சினையிலிருந்து பாதுகாக்க விரும்பினான். அவர்களது கண்ணியத்தைப் பாதுகாப்பதையும் அவர்களுடைய எதிரிகளைக் கேவலப்படுத்துகிற பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டான்.

இந்த விஷயத்தில் எதிரிகளின் அவதூறுக்குப் பதில் சொல்கிற எந்தத் தேவையும் இல்லாதவராக நபி (ஸல்) அவர்களை ஆக்கி விட்டான் அந்தப் பணியை தானே செய்து முடித்தான் தன் தூதருக்காகவும் அவரது குடும்பத்தாருக் காகவும் தானே பழி தீர்த்தான்.
நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் இருந்த நோக்கமெல்லாம், நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் மீது அவதூறான பொய்ப் பிரசாரங்கள் செய்து, நபியவர்களைக் களங்கப்படுத்தி அவர்களின் கண்ணியத்தைக் குறைக்க வேண்டும் என்பதே!

தமது மனைவி ஆயிஷா (ரழி) அவர்கள் அந்த அவதூறுகளை விட்டும் தூய்மை யானவர் என்று நபி (ஸல்) அவர்களுக்கு நன்கு தெரியும். இருப்பினும், நபியவர்கள் தமது மனைவியைப் பற்றி தாமே சாட்சி உரைப்பது அவ்வளவு சிறந்ததல்ல என்று அல்லாஹ் நாடினான்.

உண்மையில், ஆயிஷா (ரழி) விஷயத்தில் நபியவர்கள் எந்தத் தவறான எண்ணமும் கொள்ளவில்லை. அல்லாஹ், அவர்களையும் பரிசுத்தமாக்கினான் அவர்களது மனைவி யையும் பரிசுத்தமாக்கினான்.
அவதூறு பரப்பியவரைப் பற்றி நபி (ஸல்) சொன்னார்கள்:

‘‘முஸ்லிம் மக்களே! என் குடும்பத்தார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மனவேதனை அளித்த ஒரு மனிதரை நான் தண்டித்தால் நான் தண்டித்த காரணத்தை ஏற்றுக் கொள்பவர் யார்? ஏனென்றால், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என் வீட்டாரிடம் நல்லதையே நான் அறிவேன். அவர்கள் (-அவதூறு கிளப்பிய நயவஞ்சகர்கள்) ஒரு மனிதரை (என் குடும்பத்தாருடன் இணைத்து) அவதூறு கூறியுள்ளனர். அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன். நான் இருக்கும் போதுதான், அவர் என் வீட்டிற்கு வந்திருக்கின்றார். (தனியாக வந்ததில்லை).''
இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறி முடித்தார்கள். 

ஆயிஷா (ரழி) அவர்கள் மிக்க பரிசுத்தமானவர் என்பதற்கு முஃமின்கள் (நம்பிக்கையாளர்கள்) அறிந்த சான்றுகளை விட, நபி (ஸல்) அவர்களுக்கு மிக அதிகமாகவே தெரியும். எனினும், அவர்களிடம் இருந்த பொறுமை, நளினம், மென்மை, தன் இறைவன் மீது கொண்டிருந்த நல்லெண்ணம், அவன் மீது கொண்டிருந்த உறுதி ஆகியவை எல்லாம் அவர்களை ஒரு சரியான நிலைப்பாட்டுக்கு ஆக்கி இருந்தது. முழுமையாக அல்லாஹ்வையே சார்ந்து அவன் மீதே நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

அல்லாஹு தஆலா, அவர்களது எண்ணத்திற்கு ஏற்ப, வஹ்யை இறக்கி, உண்மையை வெளிப்படுத்தி அவர்களின் கண்களைக் குளிரச் செய்தான் உள்ளத்திற்கு மகிழ்வூட்டினான் அவர்களது கண்ணியத்தை மேலும் உயர்த்தி வைத்தான்.

நபி (ஸல்) அவர்களது சமுதாயத்தின் மீது அல்லாஹ், தான் வைத்திருக்கிற மதிப்பையும் அன்பையும் வெளிப்படுத்திக் காட்டினான்.

இந்த இடத்தில் நாம் ஆயிஷா (ரழி) அவர்களைப் பற்றி ஒரு விஷயத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

அனைத்தும் பொய் என்பது நிரூபணமான பிறகு, ஆயிஷா (ரழி) அவர்களின் பெற்றோர்கள் ‘‘ஆயிஷாவே! நீ எழுந்து நபி (ஸல்) அவர்களிடம் செல்!'' என்று கூறிய சமயத்தில், அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் செல்ல மாட்டேன் உங்களில் எவரையும் பாராட்ட மாட்டேன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் புகழ மாட்டேன்'' என்று சொன்னார்கள்.

இந்த வாசகம், ஆயிஷா (ரழி) அவர்களுடைய ஈமானின் (நம்பிக்கையின்) உறுதியையும் அல்லாஹ்வுடைய நிஃமத்தை (அருளை) ஏற்று அவனுக்கு நன்றி செலுத்துவதையும் காட்டுகிறது.

மேலும், புகழ் அனைத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கே உத்தாக்குவது ஓரிறை நம்பிக்கையைக் கலப்பற்றதாக ஆக்குவது தனது உண்மையான ரோஷத்தையும் உணர்வையும் தெளிவாக வெளிப்படுத்துவது போன்றவற்றையும் அவர்களின் சொல்லில் இருந்து அறிய முடிகிறது.

தான் தூய்மையானவர் என்பதை ஆயிஷா (ரழி) அவர்கள் எவ்வளவு அழகாக, நயமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். உண்மையில், அவர்கள் எந்தத் தவறான காரியத்தையும் செய்யவில்லை. இருப்பினும், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்.

மேலும், ‘எழுந்து நபியவர்களிடம் செல்!' என்று அவர்களது பெற்றோர் கூறிய போது, ஆயிஷா (ரழி) அவர்கள் பேசிய வார்த்தைகளில் நபி (ஸல்) அவர்களின் மீதான அன்பும் வெளிப்படுகிறது. பொது வாகவே இந்த மாதிரியான தருணங்கள் ஒருவர் மற்றவர் மீது கொண்டிருக்கிற அன்பை வெளிப்படுத்துவதற்கான தருணங்களிலேயே மிகச் சிறந்த தருணங்களாகும். அதற்குத் தகுந்தாற்போல்தான், ஆயிஷா (ரழி) அவர்கள் நடந்து கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுடைய நேசம் ஆயிஷா (ரழி) அவர்கள் மீது எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பதற்கு இங்கு சான்று கிடைக்கிறது. ‘‘நான் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் புகழ மாட்டேன் அவனே என்னைப் பரிசுத்தப்படுத்தினான்'' என்று ஆயிஷா (ரழி) கூறும் அளவிற்கு, நபியவர்களால் அவர்கள் நேசிக்கப் பட்டிருக்கிறார்கள். அதில் அவர்களின் தனித்தன்மையும் உறுதியும் சிறப்பாக வெளிப்படுகிறது.

நபியவர்களை விட்டு ஒரு மாதக் காலம் ஒதுக்கப்பட்டிருந்தும், பிறகு வஹி வந்து அவர்களை மகிழ்ச்சியுறச் செய்தது. ஆனால் நபியவர்கள் மீது ஆயிஷா (ரழி) அவர்களுக்கு ஆழமான அன்பு இருந்தும் உடனே நபி (ஸல்) அவர்களிடம் எழுந்து செல்லவில்லை தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை. இதுதான் உறுதி மற்றும் தன்னம்பிக்கையின் எல்லையாகும்.

இவ்வாறுதான் ஒரு முஸ்லிமான பெண், தனது கணவரிடம் நடந்து கொள்வாள் அவருக்குப் பணிந்திருப்பாள் அவரது பிரியத்தைத் தேடுவாள் அவருக்கு உபகாரம் செய்வாள். அதே நேரம், தமது கணவருக்கு முன்பாக தன் தனித்தன்மைகளையும் விட்டுக் கொடுத்து விட மாட்டாள். அவர் எவ்வளவுதான் அழகானவராகவும், நல்ல குணமுள்ளவராகவும் இருந்தாலும், அவருடைய தவறுகளுக்கு இணங்கி விட மாட்டாள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் தமது கொள்கையிலும் மார்க்கத்திலும் எவ்வளவு உறுதிப் பிடிப்போடு இருந்தார்கள் என்பதை உணர்ந்து அவர்களைப் போல ஒவ்வொரு முஸ்லிம் பெண்மணியும் இருக்க வேண்டும்.
தனது கொள்கையைக் கொண்டும் மார்க்கத்தைக் கொண்டும் கண்ணியத்தைத் தேடக் கூடிய முஸ்லிம் பெண்மணிக்கு - தான் அல்லாஹ்விற்கு மட்டுமே அடிமை என்ற எதார்த்தத்தை உணர்ந்து வாழக் கூடிய முஸ்லிம் பெண்மணிக்கு - இன்னும், தனது அடிபணிதலுக்கு உரிய முதன்மைத் தகுதி அந்த அல்லாஹ் ஒருவனுக்கே தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கக் கூடிய முஸ்லிம் பெண் மணிக்கு - ஆயிஷா (ரழி) அவர்களை மிகச் சிறந்த முன்மாதிரியாகக் கூறலாம்.

ஒவ்வொரு முஸ்லிம் பெண்மணிக்கும் தன்னை ஒரு முன்னுதாரணமாக ஆயிஷா (ரழி) அவர்கள் காட்டியுள்ளார்கள்.

இதிலுள்ள படிப்பினைகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எந்தக் கண்ணியத்தை முஸ்லிமான பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளதோ, எந்த மதிப்பைக் கொண்டு அவளை அலங்கரித்துள்ளதோ, அவை அனைத்தும் எதுவரை என்றால், அந்த முஸ்லிமான பெண் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பற்றிப் பிடித்திருக்கும் காலம் வரையிலும், அவனது நேர்வழியில் கொள்கைப் பிடிப்புடன் நடக்கும் காலம் வரையிலும் அவனது வழிகாட்டல்களை தனது வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் காலம் வரையிலுமே ஆகும். அவள் எதுவரை இப்படி இருக்கிறாளோ, அதுவரை மட்டுமே அல்லாஹ்வின் மார்க்கம் அந்தப் பெண்ணுக்குக் கண்ணியத்தை வழங்குகிறது.

மேற்கத்திய பெண்கள் கூட பொறாமைப் படக்கூடிய அளவில் முஸ்லிமான பெண்மணி பல உரிமைகளைப் பெற்றுள்ளாள். இஸ்லாமில் சங்கை செய்யப்பட்டுள்ளாள்.

முஸ்லிம் பெண்மணி பெற்றுள்ள உரிமைகளை மேற்கத்திய பெண்கள் அறியும் போது ஆச்சரியத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள் வாய் பிளந்து விடுகிறார்கள். அரபிய நாட்டு பெண்களுக்குச் சுதந்தரம் வேண்டும் என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டிருந்த மேற்கத்திய மக்கள், இதை இன்று தெளிவாக தெரிந்து கொண்டுள்ளார்கள். பலர் அந்தத் தவறான போக்குகளை விட்டும் விலகி, நேர்வழிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில் டாக்டர் ‘நவால் சஃதாவி' என்ற பெண்ணை உதாரணமாக இங்கு குறிப்பிடலாம். அவரை ‘ஜரீரததுல் வத்தனில் குவைத்தியா' என்ற நாளிதழ் 1989-களில் பேட்டி கண்டது. அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில், ‘‘ஐரோப்பிய பெண்கள் பின்பற்றப்பட தகுதியானவர்கள், என்று நீங்கள் நினைக்கிறீர்களா?'' என்பதும் ஒன்றாகும்.

அதற்கு ‘நவால்' பதிலளிக்கும் போது, ‘‘ஐரோப்பியப் பெண்கள் சில விஷயங்களில் முன்னேறியிருக்கிறார்கள். பல விஷயங்களிலோ பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஐரோப்பிய நாடுகளில் உள்ள திருமணச் சட்டங்கள் பெண்ணுக்கு மிகப் பெரியஅநீதி இழைக்கின்றன. அதனால்தான், அவர்களில் பெண் விடுதலைக்காக கூக்குரல் கொடுக்கிற கூட்டம் ஒன்று கிளம்பியுள்ளது. அமெரிக்காவிலும் இதே நிலைதான்.

இஸ்லாமிய மார்க்கமோ பெண்ணுக்குப் பல உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த உரிமைகளில் பலவற்றை எந்த மதங்களும் வழங்கவில்லை. பெண்ணுடைய கண்ணியத் திற்கும் பாதுகாப்புக்கும் இஸ்லாம் பொறுப்பேற்றுள்ளது.

சில நேரங்களில் இஸ்லாமின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து தங்களுக்குச் சாதகமாக சில ஆண்கள் பயன்படுத்தி விடுகிறார்கள். இது இஸ்லாமில் ஆணாதிக்கம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டி விடுகிறது. மற்றபடி, இஸ்லாமியச் சட்டத்திட்டங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பையே வழங்கியுள்ளன'' என்று பதிலளித்தார்கள்.

‘நவால் சஃதாவி' அவர்களின் வார்த்தைகள் உண்மையானவை. அவர் கூறுவது போல, ஆண்களுடைய தவறுகள்தான் இஸ்லாமைப் பற்றிய தவறான புரிதலுக்கு வழிவகுத்து விடுகின்றன. உண்மையில் சிலரின் அந்த போக்கு, அவர்கள் இஸ்லாமைப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. மேலும், இஸ்லாமின் ஒளிமயமான வழியை விட்டும் அவர்கள் தூரமாகியுள்ளார்கள் என்பதையே காட்டுகிறது.


வெற்றிமிக்க மனைவி:

எனவே, இறுதியாக நாம் சொல்ல வருவது இதுதான்:
ஒரு முஸ்லிம் பெண்மணி, மனைவியர் களிலேயே சிறந்த மனைவியாக - வெற்றி கரமான மனைவியாக இருப்பாள். தன் உயர்ந்த நற்குணங்களாலும், நேரியச் சிந்தனைகளாலும் மனரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் மேன்மை மிக்கவளாகத் திகழ்வாள்.

மனைவியலேயே மிக அதிகமாகக் கணவருக்கு நன்மை செய்யக் கூடிய வளாகவும், அருள்வளங்கள் மிக்கவளாகவும் திகழ்வாள். காரணம், அவள் தனது மார்க்கம் தனக்கு விதித்துள்ள எல்லைகளை, சட்டத்திட்டங்களை நன்கு தெரிந்தவளாக இருப்பாள். கணவருக்குக் கீழ்ப்படிவதின் வழிமுறைகளை அந்த மார்க்கத்தின் வாயிலாகக் கற்று அறிந்திருப்பாள். இதனால் மட்டுமே, ஓர் ஆணுக்குக் கிடைக்கக் கூடிய இன்பங்களிலேயே மிகச் சிறந்த இன்பமாக அந்தப் பெண் திகழ்வாள்.

கணவர் வீட்டிற்குள் நுழையும் போது அவரை மலர்ந்த முகத்துடன் வரவேற்பாள். அழகிய முறையில் அவருக்கு முகமன் (ஸலாம்) கூறுவாள்.

எப்படி வசந்த காலம் வருகிறதோ, அதுபோல் கணவருக்கு ஒரு வசந்த காலமாகத் திகழ்வாள். கணவன் மனதை நல்ல வார்த்தைகளைக் கொண்டும், ஆறுதலான பேச்சுகளைக் கொண்டும் செழிப்புறச் செய்வாள்.

இனிய நகைச்சுவைகளைக் கொண்டும், கண்ணைக் கவரும் அலங்காரங்களைக் கொண்டும், தன் பக்கம் அவரை ஈர்க்கக் கூடிய தோற்றத்தைக் கொண்டும், தூய்மையான ஒழுங்கமைப்பு மிக்க வீட்டைக் கொண்டும், மகிழ்ச்சி ஊட்டக் கூடிய உரையாடல்களைக் கொண்டும், ருசிமிக்க உணவு வகைகளைக் கொண்டும் அழகிய விரிப்பைக் கொண்டும் தம் கணவன் வாழ்க்கையை செழிப்பாக்குவாள்.

வாழ்வின் அதிகமான நேரங்களைத் தம் கணவன் மகிழ்ச்சிக்காகவே பயன் படுத்துவாள் அதற்காகவே பெரும் பகுதிகளைச் செலவழிப்பாள் கணவன் அன்பைத் தேடுவாள் அதில் பேராவல் கொள்வாள் அவரது இரகசியங்களைப் பரப்ப மாட்டாள் கணவருடைய எந்தக் காரியத்தையும் வீணாக்கிவிட மாட்டாள் கஷ்ட காலங்களில் கணவருக்கு உறுதுணையாக இருப்பாள் நல்ல ஆலோசனைகளை வழங்குவாள் அப்பழுக்கற்ற - எந்த உள்நோக்கமும் இல்லாத ஆலோசனைகளைக் கூறுவாள்.

கணவன் மகிழ்ச்சியே தனது மகிழ்ச்சியாகக் கொள்வாள். கணவன் கவலையை தனது கவலையாக எடுத்துக் கொள்வாள். அகத்தாலும் புறத்தாலும் கணவன் மனதை மகிழ்ச்சியால் நிரப்புவாள். நற்பாக்கியம், சந்தோஷம், மலர்ச்சியைக் கொண்டு கணவன் வாழ்வை செழுமையாக்குவாள். அனைத்துவிதமான வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதற்கு கணவரை ஆர்வமூட்டுவாள். தானும் அவற்றில் பங்கெடுத்துக் கொண்டு அவரை உற்சாகமூட்டுவாள்.

கணவன் பெற்றோருடன் உபகாரமாக நடந்து கொள்வாள், அவர்களுக்கு நன்மை செய்வாள் கணவன் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு கண்ணியம் தருவாள். அன்னிய ஆண்களை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக்கொள்வாள். முட்டாள்தனமான வீணான கெட்ட பேச்சுகளை விட்டும் தன்னை தூரமாக்கிக் கொள்வாள். தமது கணவருக்கும் பிள்ளைகளுக்கும் அமைதி, நிம்மதி, மன ஓர்மை, குழப்பமற்ற சூழ்நிலை அமைய வேண்டுமென பேராசை கொள்வாள்.

இத்துடன் உறுதிமிக்கவளாக இருப்பாள். ஆனால் கடினமானவளாகவோ முரட்டு சுபாவமுள்ளவளாகவோ இருக்க மாட்டாள். மென்மை மிக்க உணர்வுள்ளவளாக இருப்பாள். எனினும் பலவீனமானவளாகவோ அப்பாவியாகவோ இருக்க மாட்டாள். தன்னிடம் பேசுபவர் தன்னைக் கண்ணியப்படுத்தும்படி நடந்து கொள்வாள். பெருந்தன்மையும் மன்னிக்கும் மனப்பான் மையும் கொண்டவளாக விளங்குவாள். தீமைகளை மறந்துவிடுவாள் குரோதம் மற்றும் வஞ்சகத்தை தன் உள்ளத்திலிருந்து தூக்கி எறிந்துவிடுவாள்.

இத்தகைய பண்புகள் இருப்பதால் முஸ்லிம் மனைவி, மனைவியர்களிலேயே வெற்றிமிக்கவளாக விளங்குவாள். ஆணுக்கு அல்லாஹ் வழங்கும் மிகப் பெரியஅருட்கொடைகளில் ஒன்றாக் நிகல்லா இன்பமாகத் திகழ்வாள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியது எவ்வளவு உண்மையாக இருக்கின்றது!
‘‘உலகம் அனைத்தும் இன்பம்தான். உலக இன்பத்தில் மிகச் சிறந்தது நல்ல பெண் ஆவாள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)


முஸ்லிம் பெற்றோர் தமது பிள்ளைகளுடன்:

குழந்தைகள், மனிதனின் வாழ்வில் கண்குளிர்ச்சியும் செழிப்பும் மனநிம்மதியும் ஆவார்கள். அவர்களால்தான், மனித வாழ்வு இனிமை பெறுகிறது. அல்லாஹ்வுக்குப் பின் அவர்கள் மீதே நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது. அவர்கள் மீது இறங்கும் அல்லாஹ்வின் அருள், பெற்றோருக்கும் கிடைக்கிறது. பிள்ளைகளால் அல்லாஹ் உணவில் பரகத் (அருள்வளம்) செய்கிறான்.

மேற்கூறிய அனைத்தும் சிறந்த முறையிலான குழந்தை வளர்ப்பின் மூலமே சாத்தியமாகும். அழகிய முறையில் அவர்களை வளர்க்கும்போது அவர்களது இதயங்களில் நற்சிந்தனைகள் பிரகாசிக் கின்றன. உள்ளங்கள் நற்பண்புகளின் ஊற்றாகத் திகழ்கின்றன. நற்பாக்கியத்தின் பிறப்பிடமாக அவர்கள் அமைவார்கள். இவ்வாறான தன்மைகளைக் கொண்ட குழந்தைகள்தாம், அல்லாஹ் தனது நூலில் வருணிப்பது போன்று உண்மையில் மனித வாழ்வின் அலங்கார மாகத் திகழ முடியும்.

‘‘பொருளும் பிள்ளைகளும் இந்த உலக வாழ்வின் அலங்காரங்களாகும்.'' (அல்கஹ்ஃபு 18:46)

இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் தமது பிரியத்திற்குரியவருக்குப் பின்வருமாறு துஆ செய்தார்கள்:
அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நானும் எனது தாயும், தாயின் சகோதரியும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழ வைத்த பிறகு எல்லா நன்மைகளையும் வேண்டி எங்களுக்காகப் பிரார்தித்தார்கள். எனது தாயார் (உம்மு ஸுலைம்) அவர்கள், ‘‘இறைத்தூதரே! உங்களது இந்தச் சிறிய பணியாளருக்காக அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் எனக்காக எல்லா நன்மைகளையும் வேண்டி துஆ கேட்டார்கள். அந்தப் பிரார்த்தனையின் இறுதியில் ‘‘அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்கிவை! அவருக்கு நீ வழங்கி யுள்ளவற்றில் பரகத் (அருள்வளம்) செய்வாயாக!'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

குழந்தை வளர்ப்பிலும் அவர்களைச் சிறந்த முறையில் கண்காணிப்பதிலும் அவர்கள் மீது கவனம் செலுத்துவதிலும் பெற்றோர்கள் அசட்டையாக இருந்தால் அந்தக் குழந்தைகள் சோதனையாக, கவலையாக, சிரமமாக உருவெடுத்து விடுவார்கள். அதற்குப் பின் அந்தப் பெற்றோர்களுக்குத் தூக்கமற்ற இரவுகளும் துன்பமான பகல்களும்தான் பரிசாகக் கிடைக்கும்.

மகத்தான கடமைகளை அறிவார்:

சங்கைமிகு குர்ஆனின் கம்பீரமான எச்சரிக்கைக் குரலை செவியேற்கும் முஸ்லிம், தாம் பெற்றெடுத்த, தமது வாழ்க்கைக்காக முற்படுத்திய குழந்தைகள் விஷயத்தில் தமது மகத்தான பொறுப்பை அறிந்து கொள்வார்.

‘‘நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை மனிதர்களும் கற்களுமாகும்.'' (அத்தஹ்ரீம் 66:6)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளர். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தனது குடும்பத்தின் பொறுப்பாளன். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தனது கணவன் வீட்டிற்குப் பொறுப்பாளர். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாளர் தன் எஜமானனின் செல்வத்திற்குப் பொறுப்பாளன். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இஸ்லாம், இந்த விசாலமான பொறுப்பை உலகில் வாழும் அனைவரின் கழுத்திலும் பிணைத்துள்ளது. அதிலிருந்து எவரும் தப்பிவிட முடியாது. இஸ்லாம் கற்றுக் கொடுத்த முறையில் குழந்தைகளை வளர்ப்பதும், அழகிய நற்பண்புகளை அவர் களிடம் உருவாக்குவதும் பெற்றோர்களின் பொறுப்பாகும். நற்பண்புகளைப் பூரணமாக்கி, மக்களிடையே அதை உறுதிப்படுத்தவே ரஸுலுல்லா (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நற்பண்புகளைப் பரிபூரணப்படுத்தவே நான் அனுப்பப்பட்டேன்.'' (முவத்தா மாலிக்)

பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை அல்லாஹ்வுக்கும், அவனது தூதர் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்பட்டவர்களாக வளர்க்க வேண்டும் என்பதற்குப் பின்வரும் நபிமொழி மிகப்பெரியஓர் ஆதாரம் என அறிஞர்கள் பலர் உறுதி செய்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உங்களது பிள்ளைகள் ஏழு வயதாகும்போது அவர்களை தொழுகைக்கு ஏவுங்கள். பத்து வயதாகியும் அவர்கள் தொழுகையை விட்டால் அவர்களை அடியுங்கள்'' (ஸுனன் அபூதாவூது)

ஒருவர் இந்த நபிமொழியைச் செவியேற்ற பின்னரும் தமது குழந்தைகள் ஏழு வயதாகியும் அவர்களைத் தொழுகைக்கு ஏவவில்லையானால், பத்து வயதாகியும் தொழாமலிருக்கும் பிள்ளைகளை அடிக்க வில்லையானால் அவரது இல்லம் அல்லாஹ் வின் கட்டளைகளை மீறிய, குறைபாடுகளுடைய இல்லமாகும். இதற்காக பெற்றோர் இருவரும் அல்லாஹ்வின் முன்னிலையில் குற்றவாளியாக நிற்பார்கள்.

சிறந்த இல்லம் ஒரு நற்பண்புள்ள தாயின் மடியைப் போன்றதாகும். அதில்தான் பிள்ளைகள் வளர்கிறார்கள். அது குழந்தைகள் நற்பண்புகளுடன் மலர் வதற்கான முதல் கட்டமாகும். அவர்களது ஆசைகளும், ஆர்வங்களும், பண்புகளும் உருப்பெறும் மையமாகும். எனவே, இக்காலக்கட்டத்தில் அந்தப் பிஞ்சு இதயங்களைப் பண்படுத்துவதில் பெற்றோரின் பங்கு மகத்தானது. அவர்களது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் உடல், அறிவு, ஆன்மா என அனைத்தும் பூரணத்துவம் பெற்றுத் திகழ, பெற்றோர்கள் பாடுபட வேண்டும்.

ஒழுக்கப் பயிற்சியில் விவேகமான வழிமுறைகளைக் கையாள்வார்:

குழந்தையின் தாயும் தந்தையும் அதன் இயல்புகளை அறிந்து கொள்ள வேண்டும். அதன் மனநிலையை தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் உலகம் என்பது தூய்மையான, மென்மையானதாகும். எனவே அவற்றுக்குள் மிக அழகிய முறையிலும் ஆழமாகவும் நெருங்க வேண்டும். அந்த அணுகுமுறையில் மிக நுட்பமான வழி முறைகளையே கையாள வேண்டும்.

முஸ்லிம் தமது குழந்தைகளிடம் பல வழிகளிலும் அன்பைத் தேட வேண்டும். அவர்களிடம் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களது வயது, அறிவிற்கேற்ப அவர்களுடன் விளையாடி, சிரிப்பூட்டி அவர்களை இன்புறச் செய்து அக்குழந்தை களின் இதயங்களுக்கு மகிழ்வான, அன்பான வார்த்தைகளைக் கூற வேண்டும். நேசம் மற்றும், மரியாதையின் காரணமாக கட்டுப்படுவதற்கும், மிரட்டல், நெருக்கடி, நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் கட்டுப்படு வதற்குமிடையே மிகுந்த வேறுபாடுண்டு. முந்தியது, நிரந்தரமான அடிபணிதல். இரண்டாவது, கண்டிப்பும் மிரட்டலும் இல்லாதபோது நீங்கிவிடும் தன்மையுடைய தற்காலிக அடிபணிதலாகும்.

சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் எளிமையான முறையில் கலந்துற வாடினால் அது தங்களின் தகுதிக்கே பெரும் இழுக்காகிவிடும் என்ற கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறானதாகும். பிள்ளைகளுடன் நற்பண்பு மிக்க அழகிய நடத்தையை மேற்கொள்வது, அறிவுடைய பெற்றோரின் வெற்றிகரமான வழிமுறை எனத் தற்கால குழந்தை வளர்ப்புத் திட்டங்களும்கூட ஏற்றுக் கொள்கின்றன. இதை நபி (ஸல்) அவர்கள் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே தமது சொல்லாலும் செயலாலும் வலியுறுத்தி யுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள், அப்பாஸ் (ரழி) அவர்களின் பிள்ளைகளான அப்துல்லாஹ், உபைதுல்லாஹ், குஸய்ம்ர் (ரழி) ஆகிய மூவரையும் அணிவகுக்கச் செய்து ‘‘எவர் என்னிடம் முந்தி வருகிறாரோ அவருக்கு இன்னின்ன (பசு) கிடைக்கும்'' என்று கூறுவார்கள். சிறுவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஓடி வந்து அவர்களது முதுகிலும் நெஞ்சிலும் விழுவார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவர்களை முத்தமிடுவார்கள். (முஸ்னது அஹ்மது)
இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தனது ‘அல் அதபுல் முஃப்ரத்' என்ற நூலிலும் இமாம் தப்ரானி (ரஹ்) தமது ‘முஃஜம்' என்ற நூலிலும் அபூஹுரைரா (ரழி) அவர்களின் வாயிலாக அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹஸன் அல்லது ஹுஸைன் (ரழி) அவர்களின் கரத்தைப் பிடித்து அவர்களது பாதங்களை தனது பாதத்தின் மீது வைத்து பிறகு ‘‘நீ மேலே ஏறு'' என்று கூறுவார்கள்.

மகத்தான போதனையாளரான நபி (ஸல்) அவர்கள் ஹஸன் - ஹுஸைன் (ரழி) அவர்களை தங்கள் மேனியில் சுமப்பதிலும் அவர்கள் மீது பாசத்தைப் பொழிவதிலும் காட்டிய நடைமுறைகள், பெற்றோர்களுக்கும் பாட்டனார்களுக்கும் அழகிய முன்மாதிரியாக அமைந்துள்ளது. அந்த மென்மையான இளம் நாற்றுகளுடன் நற்குணத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தாங்கள் எவ்வளவு பெரியஅந்தஸ்துடனும் மதிப்புடனும் இருந்தாலும், அது சிறுவர் சிறுமியரிடம் நேசத்தை வெளிப்படுத்துவதற்குத் தடையாகி விடக்கூடாது என்ற விஷயம் பின்வரும் நபிமொழியிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது.

ஷத்தாத் (ரழி) அவர்கள் அறிவிக் கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹஸன் அல்லது ஹுஸைனைச் சுமந்தவாறு வந்தார்கள். எங்களுக்கு முன்னால் வந்து நின்று, கீழே இறக்கிவிட்டு பின்பு தொழுகைக்காக தக்பீர் கட்டினார்கள். தொழுகையில் நீண்ட நேரம் ஸஜ்தாவில் இருந்தார்கள். இதனால் சந்தேகத்தில் நான் தலையை உயர்த்திப் பார்த்தபோது அந்த சிறுவர் நபி (ஸல்) அவர்களின் முதுகில் இருந்தார். உடன் நான் ஸஜ்தாவுக்குத் திரும்பி விட்டேன். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவு செய்த போது தோழர்கள் கேட்டார்கள்: ‘‘அல்லாஹ் வின் தூதரே! நீங்கள் நீண்ட ஸஜ்தா செய்தீர்களே (காரணமென்ன?)'' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எனது பேரர் என் மீது சவாரி செய்து கொண்டிருந்தார். அவர் தமது ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்குள் நான் அவசரப்பட விரும்பவில்லை.'' (ஸுனனுன் நஸாம்)

முஸ்லிம் தமது பிள்ளைகளுடன் இம்மாதிரி நடந்து கொள்வது அவசியமாகும். அவர்களுடன் கலந்துறவாடி அன்பை வெளிப்படுத்த வேண்டும். வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் அந்தப் பிஞ்சு இதயங்களில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்ட வேண்டும்.

அன்பை உணரச் செய்வார்:

பிள்ளைகளிடம் தங்களது அன்பையும் நேசத்தையும் உணர வைப்பது பெற்றோர் களின் தலையாயக் கடமைகளில் ஒன்றாகும். அப்போதுதான் பிள்ளைகள் மன ஆரோக்கி யத்துடன் வளர்வார்கள். அவர்களது உள்ளங்களில் உறுதியும் தெளிவும் நிறைந்திருக்கும்.
கருணை, இஸ்லாமின் அடிப்படைப் பண்பாகும். அது நபி (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட மிகச் சிறந்த பண்பாக இருந்தது. அவர்களது நடைமுறைகள் அனைத்திலும் கருணை வெளிப்பட்டது.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘குடும்பத்தாரிடம் கருணையுடன் நடந்து கொள்ளும் மனிதர்களில் நபி (ஸல்) அவர்களை விட கருணையுடையவர் வேறு எவரையும் நான் கண்டதில்லை.'' மேலும் கூறினார்கள்: ‘‘மதீனாவின் மேட்டுப் பகுதியிலிருந்த ஒரு வீட்டில், நபி (ஸல்) அவர்களின் மகனார் இப்ராஹீமுக்கு பாலூட்டப்பட்டு வந்தது. நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்று அவரைத் தூக்கி முத்தமிடுவார்கள். நாங்களும் உடன் இருப்போம்'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் சிறு குழந்தைகள் மீது மட்டும் அன்புடன் இருக்கவில்லை. மாறாக, விளையாடிக் கொண்டிருக்கும் இளம் சிறார்களைக் காணும்போது அவர்களிடமும் பாசத்தை வெளிப்படுத்துவார்கள்.

அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களைக் கண்டால் அன்பை வெளிப்படுத்தி, அவர்களுக்கு ஸலாம் கூறுவார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களது பொன்மொழிகளில் ஒன்று: ‘‘நம்முடைய சிறுவர்கள் மீது அன்பு செலுத்தாதவரும் பெரியவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை அறியாதவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.'' (முஸ்னது அஹ்மது)

அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) அவர்கள் ‘‘எனக்கு 10 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரையும் நான் முத்தமிட்டதில்லை'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘கருணை காட்டாதவர், கருணை காட்டப்படமாட்டார்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் எப்போதும் மனிதர்களின் இதயங்களில் அன்பையும் கருணையையும் வளர்த்து வந்தார்கள். அதுவே மனிதத் தன்மைகளில் மிக விசேஷமான தன்மை என்றும் வலியுறுத்தினார்கள்.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘‘நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவ தில்லை'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா (ரழி) வந்தால் நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று வரவேற்று முத்தமிடுவார்கள். அவரைத் தங்களது இருக்கையில் அமரச் செய்வார்கள். ஃபாத்திமா (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் சென்றால், அவர்களும் எழுந்து நபி (ஸல்) அவர்களை மகிழ்வுடன் வரவேற்று கரத்தைப் பிடித்து முத்தமிடு வார்கள். இன்னும், தங்கள் இருக்கையில் அமரச் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் மரணமடைவதற்கு முன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது ஃபாத்திமா (ரழி) வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களை வரவேற்று முத்தமிட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

உண்மை முஸ்லிம் இந்த உயரிய வழிகாட்டுதலைப் புறக்கணித்துவிட முடியாது. தங்களது இதயங்கள் பசுமையற்று வறண்டதாக, கடின குணம் உடையதாக இருந்தாலும் சிறுவர்களுடன் பழகும்போது முரட்டுத் தனமாக நடந்து கொள்ளக் கூடாது. ஏனென்றால், இந்த மார்க்கத்தின் பிரகாசமான வழிகாட்டுதல் இதயத்தை மென்மைப் படுத்துகிறது அன்பின் ஊற்றுகளைப் பீறிடச் செய்கிறது. குழந்தைகளை இதயத்தின் துண்டுகளாகவே கருதுமளவிற்கு போதிக்கிறது.

தாராளமாகச் செலவிடுவார்:

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மீது இயற்கையாகக் காட்டும் அன்பும் பரிவும் மட்டுமே போதுமானதல்ல. சில நேரத்தில் வாழ்வில் சிரமமும் நெருக்கடியும் வறுமையும் ஏற்படும்போது பிள்ளைகளை மறந்து விடலாம் அவர்களுக்கு ஏற்படும் செலவினங்களை எண்ணி மனம் சோர்வடையலாம் இந்த மாதிரியான நேரங்களில் பெற்றோர்கள் செய்யும் தியாகத்திற்கு மகத்தான நன்மை உண்டு என்று இஸ்லாம் உற்சாகமூட்டுகிறது. அல்லாஹ் வழங்கும் நன்மையை எண்ணும் போது பிள்ளைகளுக்காக சிரமத்தைச் சகித்துக் கொள்வதும், தியாகம் செய்வதும், அதனால் ஏற்படும் சோதனைகளைத் தாங்கிக் கொள்வதும் பெற்றோர்களுக்குச் சுலபமாகி விடுகின்றன.

உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் தூதரே! (என் முதல் கணவரான) அபூஸலமாவின் பிள்ளைகளுக்கு நான் செலவிடுவதால் எனக்கு நற்கூலி உண்டா? நான் அவர்களை இப்படியே (பராமரிப்பின்றி) விட்டுவிட முடியாது. அவர்களும் எனக்கு குழந்தைகள்தான்'' என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆம்! நீ அவர்களுக்குச் செலவிடுவதில் உனக்கும் நற்கூலி உண்டு'' என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அபூ மஸ்வூத் அல்பத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘ஒரு மனிதர் தமது குடும்பத்தாருக்கு அல்லாஹ்வின் திருப்தியை நாடி செலவிடுவாரானால் அது அவருக்கு தர்மமாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும், ஒருவர் தமது குடும்பத்தினருக் காகச் செலவிடுவதை செலவுகளிலெல்லாம் மிகச் சிறந்த செலவாக இஸ்லாம் கூறுகிறது. இதற்கான முன்னுதாரணத்தை நபி மொழிகளில் காண்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘நீ அல்லாஹ்வின் பாதையில் செலவிட்ட தீனார் (தங்க காசு), அடிமையை உரிமை விடுவதற்காகச் செலவிட்ட தீனார், ஏழை ஒருவருக்காகச் செலவிட்ட தீனார், உனது குடும்பத்துக்காகச் செலவிட்ட தீனார் - இவை அனைத்திலும் மிக மகத்தான நன்மை பெற்றது உனது குடும்பத்தினருக்காகச் செலவிட்ட தீனாரே ஆகும்.'' (ஸஹீஹுல் புகாரி)

ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மனிதன் செலவிடும் தீனார்களில் மிகச் சிறந்தது தனது குடும்பத்தினருக்காகச் செலவு செய்யும் தீனாரும், அல்லாஹ்வின் பாதையில் வாகனத்துக்காகச் செலவு செய்யும் தீனாரும், அல்லாஹ்வின் பாதையில் தனது தோழர்களுக்காகச் செலவு செய்யும் தீனாரும் ஆகும்.''
முஸ்லிம் தமது குடும்பத்தினருக்குச் செலவிடுவதில் அளவற்ற ஆனந்தம் அடைவார். அவர் தமது குடும்பத்தினருக் காகவோ அல்லது பிறருக்காகவோ அல்லாஹ் வின் திருப்தியை நாடி செலவிடும்போது அதற்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை வழங்குவான். எந்தளவுக்கென்றால் ஒரு மனிதர் பாசத்துடன் தமது மனைவியின் வாயில் ஒரு கவளம் உணவை ஊட்டு வாரானால் அதிலும் அவருக்கு நற்கூலி உண்டு.

ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீர் ஒன்றைச் செலவிட்டால் நிச்சயமாக அதற்கு நற்கூலியைப் பெறுவீர். உமது மனைவியின் வாயில் ஊட்டிவிடும் ஒரு கவள உணவிற்காகவும் நன்மை அளிக்கப்படுவீர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு முஸ்லிம் தமது குடும்பத்தினரை விட்டு விலகி அவர்களைத் துன்பத்திலும் பசியிலும் வாடும் நிலையில் விட்டு விடக்கூடாது. குடும்பத்தினரின் நியாயமானத் தேவைகளைப் புறக்கணிக்கும் ஆண்களை நபி (ஸல்) அவர்கள் கடுமையான தண்டனை யைக் கொண்டு எச்சரித்திருக்கிறார்கள். ‘‘தான் உணவளித்து பராமரிக்க வேண்டியவர்களை வீணடிப்பது ஒரு மனிதனுக்கு பாவத்தால் போதுமானதாகும்'' என்று கூறியுள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

அதாவது, தன்னுடைய பிள்ளைகள், உறவினர் என்று தனது ஆதரவில் வாழ்ந்து வருபவர்களை அலட்சியப்படுத்தி, அவர்களை சிரமத்தில் விட்டுவிடுவது ஒரு பெரும் குற்றமாகும். ‘‘பாவத்தால் போதுமானது'' என்பதற்கு பொருள் என்னவென்றால், அல்லாஹ்வின் கோபத்திற்கும் தண்டனைக் கும் ஆளாக இந்தப் பாவமே போதுமான காரணமாகி விடும் என்பதாகும்.


ஆண், பெண் பிள்ளைகளிடையே வேறுபாடு காட்டமாட்டார்:

பெண் குழந்தைகள் பிறந்தால் சிலர் சஞ்சலமடைந்து, அவை ஆண் குழந்தை களாக பிறந்திருக்கக் கூடாதா என்று ஆதங்கப்படுகின்றனர். பெண் குழந்தைகளைப் பெற்று அவர்கள் மீது அன்பும் பரிவும் காட்டி, முறையாக வளர்த்து ஆளாக்குபவர்களுக்கு அல்லாஹ் தரும் வெகுமதியை இவர்கள் அறிந்து கொள்ள வில்லை. அப்படி அறிந்திருந்தால், அந்த நன்மையை அடைய தமக்கு பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே பெண்பிள்ளை களாக இருக்க வேண்டுமென ஆசைப் படுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்து, அவர்கள் மீது பொறுமை காத்து, நல்ல முறையில் தமது உழைப்பிலிருந்து அவர்களுக்கு உணவு, பானம், உடையளித்து வருகிறாரோ அவருக்கு அந்தப் பெண் பிள்ளைகள் மறுமை நாளில் நரக நெருப்பிலிருந்து காக்கும் திரையாக ஆவார்கள்.''(முஸ்னது அஹ்மது)

மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள், ‘‘எவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்து அவர்களை அரவணைத்து, தேவைகளை நிறைவேற்றி, கருணை காட்டி வருவாரோ அவருக்கு நிச்சயமாக சொர்க்கம் உறுதியாகிவிட்டது'' என்று கூறிய போது கூட்டத்திலிருந்த ஒரு மனிதர் ‘‘இரு பெண் பிள்ளைகள் இருந்தாலுமா இறைத்தூதரே?'' என்று கேட்டார். அதற்கு, நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்! இரு பெண் பிள்ளைகள் இருந்தாலும்தான்'' என்றார்கள்.

அல்லாஹ்விடமுள்ள மகத்தான நற்கூலியைத் தெரிந்த பின்னும் தமது பெண் பிள்ளைகளைப் பராமரிப்பதில் யார்தான் அலட்சியம் காட்ட முடியும்?

இஸ்லாம் மிக நுட்பமான மார்க்கம். அது மனித வாழ்வின் எல்லாக் காலங்களிலும் சூழ்நிலைகளிலும் அவனுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு சரியான, அறிவுப் பூர்வமான தீர்வை அளிக்கிறது. சில சமயங்களில் திருமணம் செய்து கொடுக் கப்பட்ட பெண் பிள்ளை ‘தலாக்' கூறப்பட்டு தாய் வீடு திரும்புவாள். அப்போது வீட்டில் குழந்தைகள் அதிகமாக இருப்பதாலோ அல்லது வருமானக் குறைவினாலோ தந்தை மிகுந்த சிரமத்திலும் நெருக்கடியிலும் இருப்பார். இந்த நேரத்தில் தந்தையின் புண்பட்ட உள்ளத்திற்கு ஆறுதல் அளித்து, பெண்ணுக்கு ஏற்பட்ட துன்பத்தையும் இஸ்லாம் களைகிறது. ‘தலாக்' விடப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட பெண்ணுக்குச் செலவு செய்வதும் அவளைப் பராமரிப்பதும் மிக உயர்ந்த தர்மத்தைச் சேர்ந்தது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள், சுராகா இப்னு ஜுஃஷும் (ரழி) அவர்களிடம் ‘‘நான் உமக்கு ஒரு மகத்தான தர்மத்தை அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டார்கள். அவர் ‘‘ஆம் இறைத்தூதரே!'' என்ற போது நபி (ஸல்) கூறினார்கள்: ‘‘(கணவனின் வீட்டிலிருந்து) திருப்பி அனுப்பப்பட்ட உமது மகள். உம்மைத் தவிர அவளுக்கு சம்பாதித்துத் தரக்கூடியவர் ஒருவருமில்லை'' (இந்த நிலையில் அந்தப் பெண்ணைப் பராமரித்துக் காப்பது தர்மங்களில் மகத்தான தர்மமாகும்.) (அல்அதபுல் முஃப்ரத்)

நேசம் மிகுந்த இஸ்லாமிய உலகில் குழந்தைகள் அடையும் இத்தகைய பராமரிப்பு எங்கே! வெறும் பொருளாதாரத்தை மட்டுமே மையமாகக் கொண்ட மேற்கத்திய உலகில் குழந்தைகள் அனுபவிக்கும் துன்பங்கள் எங்கே! இரண்டும் நிச்சயமாக சமமாக முடியாது. அங்கு ஆணோ பெண்ணோ பதினெட்டு வயதை அடைந்துவிட்டால் பெற்றோர்களின் கண்காணிப்பிலிருந்து விலகிச் சென்று விடுகிறார்கள். பிறகு இறுக்கமான உலகாதாய வாழ்க்கையைச் சந்திக்கிறார்கள். பொருளீட்டுவதில் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் மீண்டும் பெற்றோர்களின் அரவணைப்புக்குத் திரும்புவதோ, அவர்களின் அன்பை அடைவதோ முடியாத ஒன்றாகி விடுகிறது.

மனிதனின் வெற்றிக்காகவும் நற்பாக்கியத் திற்காகவும் அல்லாஹ்வினால் அருளப்பட்ட மார்க்கத்துக்கும், குறையுள்ள மனிதனின் கேடு விளைவிக்கும் வாழ்க்கை நெறிக்கு மிடையேதான் எத்துனை தூரம்!

மேற்கத்திய நாடுகளில் பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை நெறியின் விளைவாக - கட்டுப்பாடற்ற, ஒழுங்கீனம் நிறைந்த வாலிபர்களும், திருமணம் செய்து கொள்ளாமல் கர்ப்பமடைந்து குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்வை அழித்துக் கொள்ளும் இளம் பெண்களும் நிறைந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அங்கே இவ்வாறான ஆண் பெண்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகத்தே வருகிறது.

சிந்தனை, செயலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பார்:

மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் தமது மக்களைக் கண்காணித்து, எதைப் படிக் கிறார்கள், எழுதுகிறார்கள் என்பதையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும். எப்படிப்பட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும், அவர்கள் தங்களை அறியாமலேயே எப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். தமது மக்களுடன் எல்லா நேரங்களிலும் அல்லது பெரும்பாலான நேரங்களில் இணைந்திருக்கும் அவர்களது நண்பர்களைப் பற்றியும், ஓய்வு நேரங்களில் எப்படிப்பட்ட இடங்களுக்குச் செல்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வதற்காக அவர்கள் அறியாத வகையில் கண்காணிக்க வேண்டும்.

அந்த நிலையில் அவர்களது படிப்பில், விருப்பங்களில் ஏதாவது மாற்றங்கள் தெரிந்தால் அல்லது தீய நண்பர்களுடனான தொடர்பு அல்லது சந்தேகத்திற்கிடமான இடங்களுக்குச் செல்வது அல்லது புகை பிடித்தல், சூதாடுவது போன்ற தீய பழக்கங்களைக் கொண்டிருந்தால் அல்லது நேரத்தை வீணாக்கி, உடலைப் பலவீனப்படுத்தும் வீண் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினால் அந்தப் பிள்ளைகளை மென்மையான, அறிவுப்பூர்வமான அணுகு முறையின் மூலம் தடுத்து நேர்வழியின் பக்கம் திருப்ப வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒவ்வொரு குழந்தையும் (இஸ்லாம் என்ற) இயற்கை மார்க்கத்தில்தான் பிறக்கின்றது. அதன் பெற்றோர்களே அந்தக் குழந்தையை யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக அல்லது நெருப்பை வணங்குபவர்களாக மாற்றி விடுகிறார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)

பிள்ளைகளின் அறிவை வளர்த்து, நற்பயிற்சிகளால் அவர்களைச் சிறந்தவர் களாக உருவாக்குவது பெற்றோர்களின் கடமையாகும்.

படிப்பதற்கென தமது மக்கள் தேர்ந்தெடுக்கும் நூல்கள், அவர்களது அறிவுக் கண்களைத் திறப்பதாகவும் உயரிய பண்புகளை அவர்களிடம் உருவாக்கு வதாகவும் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். அந்த நூல்கள் அறிவை அழித்து, நல்லியல்புகளைச் சிதைத்து, மனதில் நன்மையின் மீதான ஆர்வத்தை அணைக்கக் கூடியதாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அவர்களது பழக்க வழக்கங்கள், பொழுது போக்குகள் அவர்களிடம் நன்மையை வளர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும் தீமையை அல்ல! சத்தியத்தின் பிரகாசத்தைத் தூண்ட வேண்டும் அசத்தியத்தின் நெருப்புக் கங்குகளை அல்ல! நற்குணங்களை வளர்க்க வேண்டும் கெட்ட குணங்களை அல்ல!

நண்பர் என்பவர் சொர்க்கத்தின் பக்கம் அழைத்துச் செல்பவராக இருக்க வேண்டும் நரகத்தின் பக்கம் அல்ல! சத்தியத்தின் பக்கம் வழிகாட்ட வேண்டும் அசத்தியத்தின் பக்கம் அல்ல! நேர்மை, வெற்றி, நன்மை, உயர்வுக்கு வழிகாட்ட வேண்டும் வழிகேடு, அழிவு, நஷ்டம், பிறருக்கு நோவினையளித்தல் போன்ற தீய செயல்களுக்கு அல்ல!

எத்தனையோ நண்பர்களின் நட்பு அவர்களைத் தீமையில் வழுக்கி விழச் செய்கிறது. தீமைப் படுகுழியினுள் வீழ்த்தி விடுகிறது. இழிவான சிந்தனைகளை இதயத்தினுள் திணித்து விடுகிறது. ஆனால், கவனிக்க வேண்டிய அவர்களது பெற்றோர்களோ அலட்சியத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

இவ்வாறு முஸ்லிம் தனது பிள்ளைகளை வளர்த்து பரிபாலிப்பதில் அவர்களுக்குரிய நூல்கள், நாளிதழ்கள், நண்பர்கள், பொழுதுபோக்குகள், கல்விக்கூடம், ஆசிரியர்கள், சபைகள், செய்தி ஊடகங்கள் ஆகியவற்றைக் கண்காணிக்க வேண்டும். அவற்றைத் தேர்வு செய்வதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். மேலும், அவர்களது பண்புகளில் அல்லது கொள்கைகளில் மாற்றம் ஏற்படுவதையும் கண்காணித்து வர வேண்டும்.

அவசியம் ஏற்படும்போது அந்தப் பிள்ளைகள் விரும்பினாலும் வெறுத்தாலும் அவர்களது காரியங்களில் தலையிட்டு அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில குடும்பங்கள் தங்களது பிள்ளைகளை வளர்ப்பதில் வெற்றியடைவதின் ரகசியத்தை யும் சில குடும்பங்கள் தோல்வியடைவதின் ரகசியத்தையும் இந்த விளக்கத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

பிள்ளை வளர்ப்பு விஷயத்தில் தங்களது பொறுப்பை உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்த பெற்றோர்களின் பிள்ளைகள் அவர்களுக்கும் அவர்கள் வாழும் சமுதாயத்திற்கும் நற்பயன் அளிப்பவர்களாகத் திகழ்கிறார்கள். இவ்வாறு பொறுப்பை உணராமல் அந்த கடமையைப் பாழாக்கியவர்களின் பிள்ளைகள், அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் கேடாக அமைந்து, இவ்வுலக, மறு உலக வாழ்வின் சோதனையாக மாறிவிடுகிறார்கள்.

‘‘நம்பிக்கையாளர்களே! உங்கள் மனைவி களிலும் உங்கள் சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு எதிரிகளும் இருக்கின்றனர். ஆகவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்...'' (அத்தலாக் 65:14)

பெற்றோர்கள் நேரான வழியில் உறுதியாக இருந்து, பிள்ளை வளர்ப்பில் தங்களது கடமைகளை அறிந்து, முறையாக அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றினால் பிள்ளைகள் ஒருபோதும் அவர்களுக்கு எதிரியாக மாட்டார்கள்.


சமத்துவம் பேணுவார்:

முஸ்லிம் தந்தையின் அறிவார்ந்த நடைமுறைகளில் ஒன்று அவர் தமது பிள்ளைகளிடையே சமத்துவம் பேணுவ தாகும். எல்லா விஷயங்களிலும் அவர்களில் ஒருவரை விட மற்றவருக்குத் தனிச்சலுகை வழங்கக்கூடாது. ஏனென்றால், தமக்கும் பிற சகோதரர்களுக்குமிடையே காட்டப்படும் சமத்துவத்தையும், நீதத்தையும் உணரும் பிள்ளையே, சீரான சிந்தனையைக் கொண்டிருப்பார். குறைபாடுகளிலிருந்து நீங்கி, ஏனைய சகோதரர்கள் மீது பொறாமை கொள்ளாமல் இருப்பார்.

சமத்துவமாக வளர்க்கப்படும் பிள்ளை களிடத்தில் பிறரை நேசித்தல், தன்னைவிட பிறரைத் தேர்ந்தெடுத்தல், பிறருக்கு உபகாரம் செய்தல் போன்ற நற்குணங்கள் குடிகொள்ளும். அதனால்தான் பிள்ளை களிடையே சமத்துவத்தைப் பேணுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது.

பஷீர் (ரழி) அவர்கள் தமது மகன் நுஃமானை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து, ‘‘எனது இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்பாக தந்துள்ளேன்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களது அனைத்து பிள்ளைகளுக்கும் இது போன்று அன்பளிப்புச் செய்தீரா? என்று கேட்டார்கள். அவரோ ‘இல்லை' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அந்த அடிமையைத் திரும்ப வாங்கிக் கொள்!' என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் ‘‘இதை உமது அனைத்து பிள்ளைகளுக்கும் செய்தீரா?'' என்று கேட்டார்கள். அவர் ‘‘இல்லை'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களது பிள்ளைகளிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். நுஃமான் (ரழி) கூறுகிறார்கள்: ‘‘உடனே எனது தந்தை இல்லத்திற்கு வந்து எனக்களித்திருந்த அந்த அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.''

மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள்: ‘‘பிஷ்ரே! உமக்கு இவரைத் தவிர வேறு குழந்தைகள் இருக்கிறார்களா?'' என்று கேட்டார்கள். அவர் ‘‘ஆம்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘‘உமது எல்லா குழந்தைகளுக்கும் இவ்வாறு அன்பளிப்புச் செய்தீரா?'' என்று கேட்டார்கள். அவர் ‘‘இல்லை'' என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘‘என்னை சாட்சியாக்காதீர்கள். நான் ஒரு குற்றச்செயலுக்கு சாட்சியாக இருக்க மாட்டேன்'' என்றார்கள். பின்பு ‘‘உமது குழந்தைகள் அனைவரும் உமக்கு உபகாரம் செய்வதில் சமமாக இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறீரா?'' என்று கேட்டார்கள். அவர் ‘‘ஆம்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘‘அப்படியானால் அதைச் செய்யாதீர்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
உண்மை முஸ்லிம் தமது பிள்ளைகளுக்குச் செலவிடுதல், அன்பளிப்பு செய்தல் போன்ற எல்லா விஷயங்களிலும் ஒருவரைவிட மற்றவருக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது. அப்போதுதான் பிள்ளைகள் அனைவரும் பெற்றோருக்காக துஆ (பிரார்த்தனை) செய்து உண்மையான அன்பையும், கண்ணியத்தையும் வெளிப் படுத்துவார்கள்.


உயர்பண்புகளை வளர்ப்பார்:

உபகாரம், மகிழ்ச்சி, போதுமென்ற தன்மை ஆகிய குணங்களால் அலங்காரம் பெற்ற உள்ளங்களைக் கொண்டுதான் பிள்ளைகளை மிக உயர்ந்த தரத்திற்கு பெற்றோர்களால் கொண்டுபோக முடியும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நற்பாக்கியம் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கிறது. ஒழுக்கம் பெற்றோரிடமிருந்து கிடைக்கிறது.'' (அல்அதபுல் முஃப்ரத்)

மார்க்க அறிவுள்ள முஸ்லிம் தமது பிள்ளையின் உள்ளத்தினுள் நுட்பமான வழிகளைக் கொண்டு ஊடுருவி, உயர் பண்புகளையும் நல்லறிவையும் எப்படி விதைப்பது என்று அறிந்திருப்பார்.

குழந்தை வளர்ப்பின் நுட்பமான வழிமுறைகள்:

1. பெற்றோர் தம்மை அழகிய முன்மாதிரியாக ஆக்க வேண்டும்.

2. பிள்ளைகளுடன் மனம் விட்டு கலந்து பழக வேண்டும். அழகிய முறையில் விசாரித்துக் கொள்ளவேண்டும்.

3. அவர்களை முகமலர்ச்சியுடன் அரவணைத்து அன்பு காட்ட வேண்டும்.

4. அவர்களுக்கு ஊக்கமளித்து உற்சாகமூட்ட வேண்டும்.

5. எல்லாப் பிள்ளைகளுடனும் அன்புடன் நடந்து நீதத்தையும் சமத்துவத்தையும் பேணவேண்டும்.

6. அவர்களுடன் பழகுவதிலும் அவர்களைத் திருத்துவதிலும் நளினம் இருக்க வேண்டும். ஆனால் பலவீனமடைந்து விடக்கூடாது. தேவை என்றால் சற்று கடினம் காட்டலாம். அதே சமயம் வன்மை இருக்கக்கூடாது.

நேர்மையான, திறந்த சிந்தனையுள்ள, பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதற்குத் தகுதியான, தயாளத்தன்மை பெற்ற நல்ல பிள்ளைகளை இதுபோன்ற சூழ்நிலையில் தான் உருவாக்க முடியும்.

இஸ்லாமிய அடிப்படையையும் குர்ஆனின் கட்டளைகளையும் பின்பற்றும் நல்ல குடும்பங்களில் இந்த விஷயத்தைத் தெளிவாகக் காணலாம்.

அல்லாஹ் அழகாகக் கூறுகிறான்:
‘‘அல்லாஹ்வின் மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அல்லாஹ்வை விட மார்க்கத்தால் மிக அழகானவன் யார்?'' (அல்பகரா 2:138)

Previous Post Next Post