இஸ்லாத்தில் ஹலாலும் ஹராமும் - நூல் விமர்சனம்



ஜமாஅத்தே இஸ்லாமியுடைய IFT யின், புதிதாக வெளிவந்த, கலாநிதி யூசுப் அல்கர்ழாவியின் மிக சர்ச்சைக்கு உரிய புத்தகமாகிய "இஸ்லாத்தில் ஹலாலும் ஹராமும்", தமிழில் வெளிவர உள்ளது என்ற செய்தியினை, இந்த அடியேன் முக நூலில் கண்ட பொழுது, 'கலாநிதி யூசுப் அல்கர்ழாவி அவர்களின் புத்தகம் தமிழில் வெளிவர இருக்கின்றது' என்ற மகிழ்ச்சியை விட, விமர்சன சிந்தனைகள் தான் மேலோங்கியது ஒரு சில ஆரோக்கியமான விமர்சனங்களை பதிவு செய்ய நாடுகின்றேன்,

கலாநிதி யூசுப் அல்கர்ழாவி அவர்கள், இஸ்லாமிய உலகிற்கு ஆற்றிக் கொண்டிருக்கும் பணிகள் எண்ணிலடங்காதவைகள். இஸ்லாமிய உலகதிற்கு அவர்கள் வழங்கி இருக்கின்ற, சுமார் 120 புத்தகங்களும் அதிகம்.

அவருடைய சமகால அறிஞர்களை விட, மிக அதிகமாகவே இஸ்லாமிய அழைப்புப்பணி வளர்வதற்கு உரமிட்டவர்கள். 

இந்தியாவைச் சேர்ந்த, புகழ்பெற்ற அறிஞரான இமாம் அபுல் ஹசன் அலி நத்வி(ரஹ்) அவர்களின் நெருங்கிய
நண்பரும் கூட.

 ஆனால், அவருடைய புத்தகம் "இஸ்லாத்தில் ஹலாலும் ஹராமும் ", மிகப்பெரிய அளவில் அரபு உலகத்தில், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சவூதியுடைய பிரபல்யமான தற்போதைய அறிஞர் ஷேக் ஸாலிஹ் அல்ஃபவ்ஷான், இந்த புத்தகத்திற்கு உண்டான - தனது மறுப்பை, 86 பக்கங்கள் கொண்ட "அல்இஃலாம் பிநக்தி கிதாபி அல் ஹலால் வல் ஹராம் பில் இஸ்லாம்" என்ற புத்தகத்தை, தனது மறுப்பு புத்தகமாக வெளியிட்டிருக்கின்றார்கள்.


இதனால், கலாநிதி யூசுப் அல்கர்ழாவியின் "இஸ்லாத்தில் ஹலாலும் ஹராமும்" என்ற புத்தகத்தை, சவூதி அரசாங்கம் ஆரம்பத்தில், தடை செய்திருந்தது .

அறிஞர் ஷேக் ஸாலிஹ் அல்ஃபவ்ஷான், தங்களின் இந்த புத்தகத்தில், மறுப்பிற்கான காரணங்களை கூறுகின்றார். தனது முன்னுரையில், "தனக்கு முன்பாகவே, 'சிரியாவை சேர்ந்த அறிஞர் ஷேக் அப்துல் ஹமீது தஹ்மாஸ் என்பவர், யூசுப் அல் கர்ழாவிற்கு மறுப்பாக,  14 குற்றச்சாட்டுக்களை 
"நழ்ராத் பீ கிதாபி அல்ஹலால் வல் ஹராம் பில் இஸ்லாம்" என்ற தனது புத்தகத்தில் குறிப்பிடுள்ளது' சிறப்பிற்கு உரியது" என்று கூறுகின்றார். 

இதோ, ஒரு சில குற்றச்சாட்டுகளின் சுருக்கங்கள் :-

1 - "சினிமா ஹலால்" -
தனது மூலப்புத்தகத்தில், கலாநிதி யூசுப் அல்கர்ழாவியின் புத்கமாகிய "இஸ்லாத்தில் ஹலாலும் ஹராமும்" புத்தகத்தின் 223 ம் பக்கதில் இவ்வாறு கூறுகின்றார் - "சினிமா ஹலாலான, ஒரு நல்ல விடயம். அதற்கு, பின்வரும் நிபந்தனைகள் இருந்தால் இன்னும் உகந்ததாக இருக்கும் :-

'இஸ்லாமிய கடமைகளான 5 நேர தொழுகைகள், இன்னும் உலக ரீதியான கடமைகளை விட்டும் திருப்பி விடாமல் அது இருக்க வேண்டும்'. 

'அங்கு வரும் நபர்கள் -  ஆண்களுடன், அன்னிய பெண்கள் ஒட்டி உரசாமல், கலந்து விடாமல் இருக்க வேண்டும். அது குழப்பம் - இன்னும் சந்தேகத்திற்க்கு 
காரணமாகி விடும்'."

எமது மறுப்புகளும் காரணங்களும் :-

முதலாவது, ஆசிரியர் கூறி இருக்கும் இந்த நிபந்தனைகள், சினிமாவில் தவிர்க்கவே முடியாது என்பது மட்டுமல்ல, அவைகள் மிக பாரதூரமான விடயமும் கூட. ஏனென்றால், இதனால், மக்களின் ஆர்வம் குன்றிவிடும். சினிமாகார்களின்  நோக்கமே, 'இது போன்ற காரியங்களின் மூலம், தான் சம்பாதிக்க முடியுமா' - என்பது தான் .
இரண்டாவது, அதுபோல, உருவப் படங்கள் வரைவது,  மறுமை நாளின் தண்டனைகளுக்கு உரியது. 
அதனால் தான், கஃபாவின் உள்ளே இருந்த உருவப்படங்களை அகற்றிய பின்னரே, நபி(ஸல்) உள்ளே சென்றார்கள். அதுபோல், ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிலும், அலி (ரலி) அவர்கள் வீட்டில் இருந்த திரையில் உள்ள உருவப்படம் அகற்ற பட்ட பின்னரே, உள்ளே சென்றார்கள் .

2- "இசை கேட்பது, ஹலால்". 
இது சம்பந்தமான நபி மொழி ஆதாரங்கள், அனைத்துமே கடுமையான முறையில் மார்க்க அறிஞர்களினால் ஆய்வுக்கு உட்பட்டவைகள்.  இதுவும் ஹதீஸ் கலை சட்டதிட்டங்களின் நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டவை.  ஆதாரபூர்வமானதல்ல .

மறுப்பு -

நபி மொழிகளினால் மட்டும், 'இசை ஹராம்' என்று உங்கள் ஆய்வின் அடிப்படையில், நாம் கூறவில்லை. மாறாக, அல்குர்ஆனில், ஸூரா லுக்மானின் 6 வது வசனம் இவ்வாறு உள்ளது 
 "(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு"-(31:6)

இந்த வசனத்தில் வந்திருக்கும் "வீணான பேச்சுக்களை " என்பதற்கு, நாம் முன்னரே விளக்கி இருகின்றோம். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இதற்கு,  'இசைக் கருவிகள்'என்றே விளக்கமளித்தனர் .

அது போல் ......

"இன்னும் அவர்களிலிருந்து நீ எவரை (வழி சறுகச் செய்ய) சக்தி பெற்றிருக்கிறாயோ, அவர்களை உன் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய்;" (17:64).

இந்த வசனத்தில் வரும்,
" உன் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய்" என்பதற்கு முஜாஹித் (ரஹ்) அவர்களும், "இஹாத்துல் லஹ்பான் " என்ற புத்தகத்தில் 'இசை' என்பதினையே
சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள். 
மேலும், எந்த நபி மொழிகளை தாங்கள் ஆதாரமற்றது என்று கூறுகிறீர்களோ, அவைகள், ஆதாரபூர்வமான ஸஹீஹுல் புகாரியில் இடம் பெற்றிருக்கின்ற நபி மொழிகள் தான். 

3- 'சுய இன்பம், மிகப்பெரிய பாவம்' என்று, தன் புத்தகத்தில் தெளிவாக கூற ஆரம்பித்து, அதற்குரிய அல்குர்ஆன் வசனங்கள் இன்னும் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் பற்றிய செய்திகளை தீர்க்கமாக பதிவிட்ட பின், இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களும், இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களும், 'விபசாரத்தில் சென்று விடாமல் இருப்பதற்கும், திருமணம் செய்ய முடியாத நிலையிலும், சுய இன்பம் கூடும்' என்ற வீணான வாதத்தை, எந்த ஆதாரத்தையும் கோடிட்டு காட்டாமல், குறிப்பிடப்பட்டிருக்கின்றார்கள். இது, இந்த புத்தகத்தை படிக்கும் வாலிபர்களை, தவறான வழிகேட்டிற்கு கொண்டு சென்று விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 இன்னும் பல......

இப்படிப்பட்ட தெளிவற்ற, சந்தேகத்திற்குரிய ஒரு ஆய்வை சுமந்து இருக்கும் இந்த புத்தகத்தினை, மார்க்க கல்வியை முறையாக படித்த எந்த ஆலிம் உலமாக்களும், வெளியிட அனுமதிக்கமாட்டார்கள். 
அதுபோல், ஒரு சில சர்ச்சைக்குரிய விமர்சனங்களை IFT நீக்கினாலும், அது அரபு ,மற்றும் ஏனைய மொழிகளில் ஏற்கெனவே வெளிவந்திருப்பதால், அதிகமாக மறைக்கவும் முடியாத நிலை ஏற்பட்டு, அதுவே ஒரு சர்ச்சையாகி விடும் - என்பதே இந்த அடியேனின் தாழ்மையான வேண்டுகோள் .

பொதுமக்கள் மிக கவனத்துடன் படித்து பயனடையுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

-உஸ்தாத் SM.இஸ்மாயில் நத்வி

Previous Post Next Post