அர்ஷ் என்றால் என்ன? குர்ஸி என்றால் என்ன?

-ஷெய்க் SM இஸ்மாயீல் நத்வி

அல்லாஹ்வின் ஆட்சி பீடமாகிய  அர்ஷ் என்பதிற்கும் குர்ஸி என்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன, அந்த இரண்டும் ஒன்று என்று விளங்குவது தவறு, அர்ஷ் என்பது குர்ஷியை விட பெரியது, அர்ஷ் அனைத்து படைப்புக்களை விட உயர்ந்த கண்ணியமிக்கது, அதில் தான் ரப்புல் ஆலமீன் (இறைவன்) இருக்கிறான் (அவனுடைய தகுதிக்கு தகுந்தவாறு), அர்ஷிற்கு கால்கள் இருக்கின்றன அதை உயர்ந்த வானவர்கள் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கீழ்காணும் சில ஆதாரங்கள் மூலம் அவதானிக்கலாம் :-

அப்துல்லாஹ் இப்னு மசூது (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் பூமியுடைய வானத்திற்கும் ,அதற்கடுத்து உள்ள வானத்திற்கும் 500 வருடங்கள் (தொலைவு ) உள்ளது, ஒவ்வொரு வானத்திற்கும் மத்தியில் 500 வருடங்கள் உள்ளன, ஏழாவது வானத்திற்கும், குர்சியிக்கும் மத்தியில் 500 வருடங்கள் உள்ளன, குர்சியுக்கும் தண்ணீருக்கும் மத்தியில் 500 வருடங்கள் உள்ளன அர்ஷ் தண்ணீரின் மீது இருக்கின்றது, அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கின்றான், நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களையும் இறைவன் அறியாமலில்லை.

நூல் -இப்னு குஸைமா 
பகுதி -ஏகத்துவம் 
பக்கம் -105
இன்னும் 
நூல் -பைஹகீ 
பகுதி -அஸ்மா வா சிபாத்
பக்கம் -401 

இந்த அதரை (اثر) இப்னு கயூம் (ரஹ்) ஸஹீஹ் (ஆதர்ப்பூரவமானது) என்று இஜ்திமா அல்ஜியூஷ் அலீஸ்லமிய்யா (اجتماع الجيوش الاسلامية) என்ற புத்தகத்தில் 100 வது பக்கத்திலும் ,இமாம் தஹபீ (ரஹ்) அல்உழுவ் (العلو) என்ற புத்தகத்தில் 64 வது பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளனர். 

இறைவன் அல்குரானில் அர்ஷை பற்றி இவ்வாறு கூறுகிறான். 

ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்; அவனைத் தவிர நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே! -23:116.

அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக!-9:129 

(அவனே) அர்ஷுக்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன்.85:15

இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் "கண்ணியமிக்க அர்ஷ் " என்பதற்கு அவன் தான் அனைத்து படைப்புகளுக்கும் எஜமானன் இன்னும் படைத்தவன், மகத்தான அரியாசனத்தின் அதிபதி, இந்த அரியாசனம் தான் அனைத்து படைப்புகளின் முகடு, இந்த  வானம் இன்னும் பூமியின் படைப்பினங்கள், அதற்கு மத்தியில் இருப்பவைகள் அனைத்தும் அர்ஷிற்கு கீழ் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து (அறிந்தவனாக) இருக்கிறான்.
இப்னு கஸீர் (405/2)

இமாம் மாலிக் (ரஹ்) கீழ்கண்ட இறை வசனத்திற்கு விளக்கம் கூறுகிறார்கள்
 
அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமர்ந்தான்.20:5.(தாஹா)

அர்ஷில் ரஹ்மானின் அமர்தல் என்பது இந்த வசனத்தின் மூலம் அறியபட்டிருக்கின்றது 
ஆனால் எவ்வாறு அமர்தல் என்பது  அறியப்படாததாக இருக்கின்றது, ஆனால் அல்லாஹாவின்  அமர்தல் என்பதை நம்புவது (ஈமான் கொள்வது) அவசியம் (வாஜிப்) அது எவ்வாறு என்று கேள்வி கேட்பது அனாச்சாரம் (பித்அத்).
‎شرح لمعة الاعتقاد للمحمود -6/9

குர்ஸிய்யு என்றால் இறைவன் திரு மறையில் கூறுவது போன்று 

அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது;-2:255 (அல்பகரா)

குர்ஸிய்யு என்றால் இறைவனின் ஞானம் என்றும் அவனுடைய கால்கள்  இருக்கும் இடம் என்றும்  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் சயீத் இப்னு ஜுபைர் (ரலி) அவர்களும் கூறுகிறார்கள் .
ஷரஹு அகீதது தஹாவீ (313,312 பக்கம் )

குர்ஸி என்றால் சிலர் அர்ஷுதான் என்கின்றனர் அது சரியான கூற்று அல்ல என்று அல்லாமா இப்னு உஸைமீன் (ரஹ்) கூறுகிறார்கள் (பதாவா முஹம்மது சாலிஹ் பின் முனஜித் இணைய தளம் )

இது தான் நம் முன்னோர்களின் வழியாக, கொள்கையாக இருந்தது, ஏக இறைவனாகிய அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலுள்ள அர்ஷில் இருந்து கொண்டு அனைத்து படைப்புகளையும் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றான், இறை பண்புகளை மிக கவனத்துடன் எந்த முறையில்  நமக்கு இறை தூதுவர் (ஸல்) அவர்களின் மூலமும், இன்னும் சத்திய ஸஹாபாக்களின் வழியிலும் மார்க்கம் கற்று தரப்பட்டதோ  அதை அணுவளவும் மாற்றாமல் பின்பற்ற வேண்டும் இன்று சில வழிகெட்ட கொள்கையுடையவர்கள், அல்லாஹ் வேறு ரப்பு வேறு அவன் தூணிலும் இருக்கின்றான், துரும்பிலும் இருக்கின்றான், என்ற அத்வேத கொள்கையான "வஹ்ததுல் வுஜுத்" (உள்ளமை ஒன்று) யை பற்றி பிடித்துக்கொண்டு பொதுமக்களை குழப்பி கொண்டிருக்கிறார்கள்.

கவனம் தேவை.
Previous Post Next Post