بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
கேள்வி :
பித்அத்வாதிகளுடன் அமர்வதையும், அவர்களுடன் பழகுவதையும் சுன்னாவின் இமாம்கள் (அஇம்மதுஸ்ஸுன்னா) தடுத்துள்ளார்கள். அவ்வாறு இருக்க, பள்ளிவாசலில் பித்அத்வாதி ஒருவர் ஜமாஅத் தொழுகையை நடத்தும் இமாமாக இருக்கையில், நாம் பள்ளியை அடைந்தால் அவருக்குப் பின்னால் தொழ முடியுமா?
பதில் :
தொழுவிப்பவர் பித்அத்வாதியாக இருக்கும் நிலையில், நீங்கள் ஜமாஅத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் சென்றிருந்தால்,
அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்,
நீங்கள் (ருகூஉ செய்து) குணிபவர்களுடன் நீங்களும் (ருகூஉ செய்து) குணியுங்கள்.
( அல் குர்ஆன் 2:43)
என்ற ஏவலின் அடிப்படையில், நீங்கள் அந்த ஜமாஅத்துடன் சேர்ந்து உங்கள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.
ஜமாஅத் தொழுகையை நடத்தும் பித்அத்வாதியின் விடயத்தில் இமாம் ஹஸனுல் பஸ்ரி (றஹிமஹுல்லாஹ்) கூறியதைக் குறிப்பிடுவது பொருத்தமானது. அவர் கூறினார்,
நீங்கள் தொழுங்கள்! அவனுடைய பித்அத் அவனோடு இருக்கட்டும்!
இமாம் புஹhரி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது நூலான ஸஹீஹ் அல் புஹாரியில், இது தொடர்பான தலைப்பு ஒன்றையே இட்டுள்ளார்கள். அதனை இங்கே குறிப்பிடுகிறோம்.
குழப்பம் செய்பவனும் பித்அத் செய்பவனும் இமாமத் செய்வது.
உபைதுல்லாஹ் பின் அதீ கூறியதாவது,
"உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) முற்றுகையிடப்பட்டிருந்த போது நான் அவர்களிடம் சென்று, நீங்கள் மக்களுக்கு தொழுகை நடத்துகின்ற இமாம்மாக இருக்கின்றீர்கள். உங்கள் மீது சோதனை ஏற்பட்டிருப்பதை காண்கிறோம். இந்நிலையில் எங்களுக்கு குழப்பம் விளைவிக்கின்றவர் இமாம்மாக தொழுகை நடத்துகிறார். அதனால் நாங்கள் மன வேதனை அடைகிறோம்"
எனக் கூறினேன்.
"அதற்கு தொழுகை மக்கள் செய்கின்ற செயல்களில் மிக சிறந்த செயலாகும். மக்கள் அதை அழகான முறையில் செய்யும் போது நீயும் அவர்களோடு தொழு. அவர்கள் அதில் தவறிழைகின்ற போது அத் தவறுகளை விட்டும் நீ ஒதுங்கிக்கொள்"
என உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்.
உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சிக் காலத்திலேயே, இஸ்லாமிய கிலாபத்தை அடியோடு ஒழிக்க பாடுபட்டவர்களில் மிக முக்கியமானவான் தான் அப்துல்லாஹ் இப்னு ஸபாவாகும் என்பது நாம் அறிந்தது. அப்படியிருந்தும் அந்த கொடிய, கெட்ட பாவியான பித்அத் காரர்களின் பின்னாலேயே தொழுவதற்க்கு உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள். இன்னும் அப்படியான பித்அத் காரர்கள் தொழுகை நடத்துகின்ற போது நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதனை நாம் மேலே கவனித்த ஹதீஸில் உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
இமாம் அபூ ஜஹ்பர் அத் தஹாவி அவர்கள் தனது அகீததுத் தஹாவி எனும் நூலில், இது பற்றி பேசும் போது பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.
"கிப்லா வாசிகளில் உள்ள ஒவ்வொரு கெட்ட நல்ல மனிதர்களின் பின்னாலும் தொழ முடியும்"
என நாங்கள் கருதுகிறோம்.
எனவே அல்லாஹ்வின் ஏவலின் அடிப்படையில், தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவது கடமையாகும். நீங்கள் தொழச் சென்ற பள்ளியில் கப்ருகள் இல்லை என்றால், அப்பள்ளியில் தொழுவது உங்கள் மீது குற்றமில்லை.
சுன்னாவின் இமாம்கள் பித்அத்வாதிகளுடன் அமர்வதையும், அவர்களுடன் பழகுவதையும் தவிர்ந்து கொள்ளுமாறு கூறியதன் பொருள் என்னவென்றால், அவர்களுடன் தோழமை கொள்ள வேண்டாம் என்பதாகும். அவ்வாறு தோழமை கொள்ளும் போது, நீங்கள் அவர்களை நாடிச் செல்வர்களாக ஆகி விடலாம். அவ்வாறு அவர்களுடன் பழகும் போது, அவர்களிடமுள்ள பித்அத்களின் தீமைகள் உங்களை அழித்து விடும்.
நீங்கள் பித்அத்வாதியையும், பொது மனிதனையும் பிரித்து அறிந்து இருப்பது அவசியமாகும். பித்அத்வாதிகள் எனப்படுபவர்கள் யாா் என்றால், யாரெல்லாம் தங்களுடன் பித்அத்களைச் சுமந்து கொண்டு, அவற்றைப் பிரச்சாரம் செய்வதற்கு என்று முன்வருகிறார்களோ, அத்தகையவர்களைத்தான் அஇம்மதுஸ்ஸுன்னா பித்அத்வாதிகள் என்று அழைத்தார்கள்.
இதனால் பித்அத்களைச் சுமந்து, பிரச்சாரம் செய்யும் அழைப்பாளர்களே பித்அத்வாதிகள் ஆவர்கள். ஆனால் தங்களை அறியாமல், பித்அத்களுக்குள் சிக்குண்ட பொது மக்கள் பித்அத்வதிகளாகக் கருதப்பட மாட்டார்கள். பொது மக்களுக்கு பித்அத்வாதிகள் என்று அஹ்லுஸ்ஸுன்னாவின் உலமாக்கள் தீர்ப்புக் கொடுக்க மாட்டார்கள். பித்அத்தில் சிக்கியுள்ள பொது மக்களின் செயல்கள் பித்அத்தைக் கொண்டிருப்பதனால், அவற்றை உபதேசங்களின் மூலம் திருத்தம் செய்வதற்கு முயற்சி செய்வாா்கள்.
பொது மனிதனின் இந்நிலைக்கு மாற்றமாக பித்அத்வாதி எனப்படுபவன், தான் செய்வது பித்அத் என்று உணர்ந்ததன் பின்னாலும், அவற்றைக் கைவிடாமல் அதில் பிடிவாதத்துடன் நடந்து கொள்பவனாக இருப்பான். இத்தகைய தன்மையைக் கொண்டவர்களுடன் பழகுவதையே சுன்னாவின் இமாம்கள் தடுத்துள்ளார்கள்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.