இஸ்லாத்தில் ஓதி பார்த்தல் (ருக்யா) பற்றி அறிந்து கொள்ளுவோம்

இஸ்லாத்தில் ஷிர்க் மற்றும் பித்ஆத் (புதுமை) இல்லாமல் ஓதி பார்க்க நபி (ஸல்) அவர்கள் நமக்கு அனுமதி கொடுத்து உள்ளார்கள்! இதனை அரபியில் ‘ ருக்யா ’ ஓதி பார்த்தர்தல் என்று கூறுவார்கள்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என் சமுதாயத்தாரில் 70,00 பேர் விசாரணையின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள் - அவர்கள் எத்தகையவர்கள் எனில், ஓதிப்பார்க்கமாட்டார்கள்! பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள்! நோய்க்காக சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள்! தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைப்பார்கள் என்று கூறினார்கள்!

(நூல் : முஸ்லிம் : 372)

இதில் ஓதி பார்க்க மாட்டார்கள் என்பது இஸ்லாம் கூறிய முறை இல்லாமல் வேறு புதுமையான முறையில் பித்அத் உள்ள முறையில் அல்லது ஷிர்க் ஆன முறையில் ஓதுவார்கள் என்பதை குறிக்கும் !

ஏன் என்றால் ஆரம்ப காலத்தில் பல ஷிர்க் ஆன செயல்கள் மூலம் ஓதி பார்த்தார்கள் நபி (ஸல்) அவற்றை தடுத்த அழகிய வழி காட்டுதல்களை நமக்கு கூறி உள்ளார்கள்!

நாம் நோய் அல்லது உடல் வலி அல்லது கண்ணேறு அல்லது மன ரீதியான பிரச்சனை அல்லது சூனியம் போன்றவற்றிக்கு ஓதி பார்த்து கொள்ளலாம்!

ஆனால் இன்று ஓதி பார்ப்பது என்றாலே பள்ளி வாசலுக்கு சென்று ஹஜ்ரத்களிடம் தான் ஓதி கொள்ளுகிறார்கள்!

இன்னும் சிலர் அறியாமை காரணமாக நபி (ஸல்) அவர்கள் பொருட்டால் குணம் அடைய வேண்டும் அல்லது இந்த பெரியார் பொருட்டால் அல்லது இந்த அவ்லியா பொருட்டால் குணம் அடைய வேண்டும் என்று ஓதி கொள்ளுகிறார்கள் அல்லது துஆ செய்கிறார்கள் ஆனால் இவ்வாறு ஒரு போதும் செய்ய கூடாது இது இஸ்லாம் காட்டிதராத வழிமுறையாகும்! இவ்வாறு நாம் ஒரு போதும் செய்ய கூடாது! 

இஸ்லாம் அனைவரும் பொதுவான மற்றும் வெளிப்படையான மார்க்கம் ஆகும்! எப்படி ஓதி பார்க்க வேண்டும் என்ன ஓத வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் அனைவருக்கும் பொதுவாக தெளிவாக சொல்லி கொடுத்தும் செய்தும் காட்டி உள்ளார்கள் அதை பற்றி பார்ப்போம் ;

மருத்தும் பார்ப்பது :

நமக்கு உடல் நல குறைவு ஏற்பட்டால் முதலில் நாம் ஓதி பார்த்து கொள்ளலாம் பின்பு நல்ல மருத்துவரை அணுகி மருத்துவம் பார்த்து கொள்ளலாம்! இஸ்லாத்தில் மருத்துவம் பார்க்க அனுமதித்து உள்ளது!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் அல்லாஹ் இறக்கவில்லை!

(நூல் : திர்மிதீ : 1961)

மிக முக்கியம் : நோய்க்கு குணம் அளிக்கும் ஆற்றல் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது!

அல்லாஹ் பாதுகாக்கணும் இன்று பலர் இந்த மருத்துவரிடம் செல்லலாம் இவர் கைராசியானவர் இவரிடம் சென்றால் உடனே சரி ஆகி விடும் அல்லது இந்த மருத்து எடுத்தால் உடனே சரி ஆகிடும் என்று கூறுவார்கள் இது தெளிவான ஷிர்க் ஆகும்! இவ்வாறு நாம் ஒரு போதும் கூற கூடாது!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்! 

(நூல் : முஸ்லிம் : 4432)

நாம் என்ன தான் மருத்துவம் பார்த்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் நமக்கு சரி ஆகாது அதை எப்போதும் நாம் உள்ளத்தில் உறுதியாக வைத்து கொள்ள வேண்டும்!

மருத்துவம் பார்ப்பது ஒரு காரணி மட்டுமே குணம் அளிக்கும் ஆற்றல் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது!

தொழுகை + பொறுமை :

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்!

(அல்குர்ஆன் : 2 : 153)

உலகம் மற்றும் மறுமை சார்ந்த எந்த பிரச்சனையாக இருந்தாலும் நமது உள்ளத்தில் முதலில் வர வேண்டிய எண்ணம் தொழுகை தான்!

தொழுதால் அல்லாஹ் எனக்கு உதவி புரிவான் அது எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரியே என்ற எண்ணம் உள்ளத்தில் உறுதியாக நமக்கு வர வேண்டும்!

ஓத வேண்டிய சூராக்கள் :

நபி (ஸல்) அவர்கள் ஓதி பார்க்க சில துஆக்களையும் மற்றும் சில சூராக்களையும் நமக்கு கற்று கொடுத்து உள்ளார்கள்! அவற்றை கொண்டு நாம் ஓதி பார்த்து கொள்ளலாம்!

நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்!

(அல்குர்ஆன் : 17 : 82)

அல் குர்ஆனில் உள்ள சில சூராக்களையும் மற்றும் சில வசனங்களையும் நபி (ஸல்) அவர்கள் ஓதி பார்த்து உள்ளார்கள்! அவைகள் ;

1)  சூரத்துல் பாத்திஹா 

2) சூரத்துல் இக்லாஸ் - 112

3) சூரத்துல் பஃலக் - 113

4)  சூரத்துல் நாஸ் - 114

(நூல் : புகாரி : 5748 & 5749)

5) ஆயத்துல் குர்ஸி (சூரா அல் பாகராவின் : 255 வது வசனம்)

பொதுவாக நாம் ஆயத்துல் குர்ஸி ஓதி கொள்ளலாம்! மற்றும் உறங்கும் முன்பு ஆயத்துல் குர்ஸி ஓதி கொண்டால் எந்த வித தீங்கும் நமக்கு ஏற்படாது!

(நூல் : புகாரி : 5010)

6) அல் பகரா உடைய கடைசி இரண்டு வசனங்கள் - 285 & 256 இந்த வசனங்களை நாம் பொதுவாக ஓதி கொள்ளலாம்! இரவில் உறங்கும் முன் ஓதி கொண்டால் எந்த தீங்கும் ஏற்படாது!

(நூல் : புகாரி : 5009)

மேலே உள்ள சூராக்களையும் மற்றும் வசனங்களையும் நாம் ஓதி நமது உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தமது முகத்தையும், தம் இரு கரங்களால் உடலில் எங்கெல்லாம் படுமோ அந்த இடங்களையும் தடவிக் கொள்ளலாம் அல்லது பிறருக்கும் நாம் இவ்வாறு செய்து விடலாம்! (மஹ்ரம் பேணி)

(நூல் : புகாரி : 5748)

ஓத வேண்டிய துஆக்கள் :

ஓதி பார்க்க நபி (ஸல்) அவர்கள் நமக்கு சில துஆக்களை கற்று கொடுத்து உள்ளார்கள் அவற்றை இரண்டு வகையாக நாம் பிரித்து கொள்ளலாம்!

1) நோய் மற்றும் துன்பத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் செய்யும் துஆ (மூன்று முறை துஆ கேட்பது சுன்னாஹ் ஆகும்)

(நூல் : முஸ்லீம் : 3352)

2) நோய் மற்றும் துன்பத்தினால் பாதிக்கப்பட்டவர் தனக்கு தானே செய்து கொள்ளும் துஆ!

நோய் மற்றும் துன்பத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் செய்யும் துஆ :

மேலே குறிப்பிட்டு உள்ள சூராக்கள் மற்றும் வசனங்களை நாம் ஓதி விடலாம்! பின்பு கிழே கூறிப்பிட்டு உள்ள துஆக்களை நாம் ஓதி விடலாம்!

1) வலியால் கஷ்டம் பட்டால் : நோய் ஏற்பட்டு கஷ்டம் பட கூடியவர்களுக்கு நாம் வலி உள்ள இடத்தில் கை வைத்து (அல்லது) நோயாளியே தனது உடலில் வலி உள்ள இடத்தில் கை வைத்து ‘ பிஸ்மில்லாஹி ’ என்று மூன்று தடவை சொல்ல வேண்டும்! பின்பு கிழே உள்ள துஆவை 7 முறை ஓத வேண்டும்!

أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

‘ அஊது பில்லாஹி வகுத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு ’

பொருள் : நான் அல்லாஹ்விடம் அவனது ஆற்றலை முன்வைத்து, நான் தற்போது உணர்கின்ற தீமையிலிருந்தும் எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என நான் அஞ்சுகின்ற தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்!

(நூல் : முஸ்லிம் : 4430)

2) நோயாளி ஆரோக்கியம் பெற : நோயாளிகளுக்கு நாம் கிழே உள்ள துஆவை 7 முறை ஓதி விட வேண்டும்! இந்த துஆவை நாம் ஓதி விட்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு உடல் ஆரோகியம் வழங்குவான்!

أَسْأَلُ اللهَ الْعَظِيمَ، رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ

‘ அஸ்அலுல்லாஹல் அளீம் ரப்பல் அர்ஷில் அளீம் அய் யஷ்ஃபியக ’

பொருள் : உனக்கு ஆரோக்கயம் அளிக்க வேண்டும் என்று மகத்துவமிக்கவனும், மகத்தான அர்ஷின் இரட்சகனுமான அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்!

(நூல் : அஹ்மத் :  2137)

3) கிழே உள்ள துஆவை நாம் பிறருக்கு ஓதி விடலாம் :

بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ

‘ பிஸ்மில்லாஹி யுப்ரீக்க, வ மின் குல்லி தாயின் யஷ்ஃபீக்க, வ மின் ஷர்ரி ஹாசிதின் இதா ஹசத, வ ஷர்ரி குல்லி தீ அய்னின் ’

பொருள் : அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஒதிப் பார்க்கிறேன். உமக்குத் தொல்லை தரும் அனைத்து அம்சங்களிலிருந்தும், பொறாமை கொள்ளக்கூடிய அனைவரின் அல்லது கண்களின் தீமையிலிருந்தும் உமக்கு அல்லாஹ் நிவாரணமளிப்பானாக. அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதிப் பார்க்கிறேன்!

(நூல்: முஸ்லிம் : 4403)

4) நோயாளிகளை சந்திக்க சென்றால் ஓதும் துஆ :
لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللهُ

‘ லா பஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ் ’

பொருள் : கவலைப்பட வேண்டாம்!  இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தை நீக்கி) உங்களைத் தூய்மைப்படுத்திவிடும்!

(நூல் : புகாரி : 3616)

5) நோயாளிகளை சந்திக்க சென்றால் ஓதும் துஆ  :

أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءٌ لَا يُغَادِرُ سَقَمًا

‘ அத்ஹிபில் பாஸ, ரப்பந் நாஸ், வஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன் ’

பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை!

(நூல் : முஸ்லிம் : 4411)

6) சிறு பிள்ளைகளுக்கு நாம் ஓதி பார்க்க வேண்டிய துஆ :

أعوذ بكلمات الله التامة من كل شيطان وهامة ، ومن كل عين لامة

‘ [உஈதுக்குமா] பி கலிமாதில்லாஹித் தாம்மாத்தி மின் குல்லி ஷைத்தானின் வ ஹாம்மத்தின் வமின் குல்லி ஐனின் லாம்மத்தின் ’

பொருள் : அல்லாஹ்வின் பரிபூரண வார்த்தைகளைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தான், விச ஜந்துக்கள், பல்லிக்கும் ஒவ்வொரு கண்ணின் கெடுதிகளை விட்டும் பாதுகாப்பத் தேடுகிறேன்!

(நூல் : புஹாரி : 3371)

குழந்தை ஒன்று என்றால் ‘ உஈதுக்க ’ என்று சொன்னால் போதும். நபி (ஸல்) இரு குழந்தைகளுக்கும் சேர்ந்து ஓதியதால், ‘உஈதுக்குமா’ என்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பெண்ணாக இருந்தால் ‘ உஈதுக்கி ’ என்று கூற வேண்டும்!

நோயாளிகள் ஓத வேண்டிய துஆக்கள் :

நாம் மேலே கூறி உள்ள சூராக்கள் மற்றும் துஆக்களை ஓதி கொள்ளலாம்! இவைகளை தவிர்த்து கிழே குறிப்பிட்டு உள்ள துஆக்களையும் நாம் ஓதி கொள்ளலாம்!

1) தீங்குகளை விட்டு பாதுகாப்பு பெற :

أَعُـوْذُ بِكَلِمَـاتِ اللَّهِ ا لتَّـا مَّـاتِ مِنْ شَـرِّ مَا خَلَـقَ

‘ அஊது பி கமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக் '

பொருள் : அல்லாஹ்வின் முழுமையான சொற்களின் மூலம் அவனுடைய படைப்பினங்களின் தீங்கிருந்து நான் பாதுகாப்புக் கோருகிறேன்!

(நூல் : முஸ்லிம் : 5247)

2) நபி அய்யூப் (அலை) அவர்கள் கடுமையான நோய் ஏற்பட்ட போது அல்லாஹ்விடம் கேட்ட துஆ :

‘ அன்னீ மஸ்ஸனியல் லுர்ரு வஅன்த்த அர்ஹமுர் ராஹிமீன் ’

பொருள் : எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்!

(அல் குர்ஆன் : 21 : 83)

3) மரணத்திற்கு நிகரான துன்பம் ஏற்பட்டால் ஓதும் துஆ :

اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الوَفَاةُ خَيْرًا لِي

‘ அல்லாஹும்ம அஹ்யினீ மா கானத்தில் ஹயாத்து கைரன்லீ வதவப்ஃபனீ இதா கானத்தில் வஃப்பாத்து கைரன் லீ ’

பொருள் : இறைவா! நான் உயிர்வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர்வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!

(நூல்: புகாரி : 6351)

4) அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேளுங்கள் : 

بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

‘ பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ளி வ லா ஃபிஸ் ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம் ’

பொருள் : எந்த இறைவனுடைய பெயருடன் பூமி - வானத்திலுள்ள எந்தப் பொருளும் எவ்வித இடையூறும் செய்ய முடியாதோ அந்த இறைவனின் திருப்பெயர் கொண்டு ஆரோக்கியம் கேட்கிறேன்!

(நூல் : அபூதாவூத் : 324)

5) பாதுகாப்பு தேடுங்கள் :

أَعـوذُ بِكَلِمـاتِ اللّهِ التّـامّـاتِ مِن غَضَـبِهِ وَعِـقابِهِ وَشَـرِّ عِبـادِهِ وَمِنْ هَمَـزاتِ الشَّـياطينِ وَأَنْ يَحْضـرون 

‘ அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹி வஇகாபிஹி, வஷர்ரி இபாதிஹி, வமின்ஹமஜாத்திஷ் ஷையாத்தீனி, வஅன்யஹ்ளுருன் ’

பொருள் : அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் தண்டனையை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷைத்தான்களின் ஊசலாட்டத்தை விட்டும் , அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் பரிப்பூரணமான வார்த்தைகளைக் கொண்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்!

(நூல் : அபூதாவூத் : 3893)

மேலே உள்ள துஆக்களை நாம் ஓதி கொள்ளலாம் இவைகளை கொண்டு நபி (ஸல்) அவர்கள் பிறருக்கு ஓதி உள்ளார்கள்!

பிறருக்கு நாம் ஓதி விடலாம் :

நாம் பிறருக்கு ஓதியும் விடலாம் இதற்க்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்து உள்ளார்கள்!

(நூல் : முஸ்லிம் : 4414)

சிலருக்கு ஓதி பார்க்க தெரியாது இன்னும் சிலருக்கு ஓதி பார்க்கும் அளவிற்கு உடலில் ஆரோக்கியம் இருக்காது அல்லது சிறு பிள்ளைகளால் ஓதி பார்க்க இயலாது இது போன்ற நிலைகளில் நாம் ஓதி நம்முடைய கைகளால் தடவி விடலாம்!

மஹ்ரமான உறவு பேன வேண்டும்! பெண்! அந்நிய ஆணிடமோ அல்லது ஆண்! அந்நிய பெண்ணிடமோ இவ்வாறு ஒரு போதும் செய்ய கூடாது!

தண்ணீரில் ஓதி  குடிக்க வேண்டுமா ?

இன்று பல ஊர்களில் அல்லது பள்ளி வாசல்களில் ஓதி தண்ணீரில் ஊதி கொடுக்கின்றார்கள் இன்னும் சிலர் அதை முகத்தில் அடிக்கின்றார்கள்!

ஆனால் இவ்வாறு ஓதி விட கூடாது இதற்கு ஒரு ஸஹீஹானா ஆதாரமும் கிடையாது!

இப்னு மாஜா : 3523 வில் ஒரு பலகீனமான ஹதீஸ் உள்ளது அதில் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து தனது குழந்தைக்கு வாய் பேச முடியவில்லை என்று கூற அதற்கு நபி (ஸல்) அவர்கள் தண்ணீரில் கைகளை கழுவி மற்றும் வாய் கொப்பளித்து கொடுத்து உள்ளார்கள் அந்த பெண்மணியின் பிள்ளைக்கும் இதனால் உடல் ஆரோக்கியம் பெற்று உள்ளார்கள்!

இந்த பலகீனமான ஹதீஸை ஆதாரமாக முன் வைத்து தண்ணீரில் ஓதி விடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளது என்று கூறுகிறார்கள் ஆனால் இது மிகவும் பலகீனமான ஹதீஸ் ஆகும்!

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில்  யஸீத் பின் அபீ ஸியாத் என்பவர் இடம் பெற்று உள்ளார் இவர் அறிவிக்கும் ஹதீஸ்களை ஏற்று கொள்ள கூடாது என்று இமாம் நஸயீ (ரஹ்) மற்றும் இமாம் தாரகுத்னி (ரஹ்)  ஆகியோர் கூறி உள்ளார்கள்!

(நூல்: தஹ்தீப் தஹ்தீப் :  11 / 288)

ஒரு வாதத்திற்கு இந்த ஹதீசை ஸஹீஹ் என்று எடுத்து கொண்டாலும் இந்த ஹதீஸில் எந்த இடத்திலும் தண்ணீரில் ஓதி ஊதி கொடுத்ததாகவோ அல்லது தண்ணீரில் ஓதி முகத்தில் அடித்ததாகவோ எந்த ஒரு வார்த்தையும் இடம் பெற வில்லை!

அதிகப்படியாக நாம் மேலே உள்ள துஆக்கள் மற்றும் சூராக்களை ஓதி உள்ளங்கைகளில் ஊதி உடலில் தடவ மட்டுமே இஸ்லாத்தில் அனுமதி உண்டு இதற்கு மேல் நாம் எதுவும் செய்யவேண்டியது கிடையாது! 

மாற்று மதத்தினரை  நலம் விசாரியுங்கள் :

மாற்று மதத்தினர் நோய்ப்பட்டு இருந்தால் நாம் அவரை சந்திக்க செல்லலாம் மேலும் அவருக்கு நாம் துஆவும் செய்யலாம் அவரின் நேர்வழிக்கும் நாம் துஆ செய்யலாம் அதே நேரத்தில் நாம் அவருக்கு இஸ்லாத்தையும் எடுத்துரைக்க வேண்டும்!

(நூல் : புகாரி : 1356)

ஸலாவாத்துன் நாரிய :

நம்முடைய நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்க கூடிய ஒன்று தான் இந்த ஸலாத்துன் நாரிய ஆகும்! இது இஸ்லாத்தில் கிடையாது!

நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். ஸலாத்துன் நாரிய என்றால் நரகத்து ஸலவாத்து என்று பொருளாகும்!

நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு வெவ்வேறு ஸலவாத்கள் கற்று கொடுத்து உள்ளார்கள் ஆனால் ஒரு போதும் ஸலவாத்துன்னாரிய்யா என்ற ஸலவாத்தை சொல்லி கொடுக்க வில்லை! 

இந்த ஸலவாத்துன்னாரிய்யா பற்றி ஹதீஸ்களில் கிடையாது ஏன் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலயோ அல்லது ஸஹாபாக்கள் வாழ்ந்த காலத்திலயோ அல்லது தாபியீன்கள் - தபா தாபியீன்கள் வாழ்ந்த காலத்திலயோ இந்த ஸலவாத்துன்னாரிய்யா கிடையாது!

மிகவும் பின்னால் வந்த சுபியாக்கள் கொள்கை கொண்ட வழிகேடு கொள்கை கொண்டவர்கள் நபி (ஸல்) அவர்களை புகழ்ந்து பேச அவர்களாக சுயமாக உருவாக்கி கொண்டு தான் இந்த ஸலவாத்துன்னாரிய்யா ஆகும்!

இந்த ஸலவாத்துன்னாரிய்யா என்ற ஸலவாத் தெளிவான ஷிர்க் ஆகும் காரணம் அதன் பொருளை நாம் படித்தாலே நமக்கு புரியும்!

ஸலவாத்துன்னாரிய்யா பொருள் :

யா அல்லாஹ்! எவர் மூலம் சிக்கல்கள் அவிழ்ந்து விடுமோ; எவர் மூலம் கஷ்டங்கள் அகன்று விடுமோ; எவர் மூலம் தேவைகள் நிறைவு செய்யப்படுமோ; எவர் மூலம் ஆசைகள் பூர்த்தி செய்யப் படுமோ; எவருடைய திருமுகத்தின் மூலம் மேகத்திலிருந்து மழை பெறப்படுமோ அந்த எங்கள் தலைவர் மீது முழுமையாக நீ அருள் புரிவாயாக! 

அல்லாஹ்விற்கு மட்டும் உடைய தன்மைகளை நவதுபில்லாஹ் நபி (ஸல்) அவர்களை ஒப்பிட்டு கூறுகிறார்கள்!

(நபியே!) நீர் கூறும் : அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை! 

(அல்குர்ஆன் : 10 : 49)

நபி (ஸல்) அவர்களுக்கு பல சிறப்புகள் இருந்தாலும் அவர்கள் மனிதரே அல்லாஹ்வின் உதவி இன்றி எதுவும் அவர்களால் செய்ய முடியாது!

இந்த ஸலவாத்துன்னாரிய்யாவை மக்கள் அதிகம் ஓத வேண்டும் என்று இதற்கு நிறைய சிறப்புகள் கூறுவார்கள் இந்த ஸலவாத்தை 4444 முறை ஓதினால் கஷ்டம் நோய் பிரச்சனை அனைத்துமே தீர்ந்து விடும் என்று ஆனால் இந்த ஸலவாத்தை ஓதுவதே முதலில் நம்மை பெரும் பாவத்தில் சேர்த்து விடும்! மேலும் இது ஷிர்க் ஆனா சொல்லாகும்!

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க கூடாது :

இன்றும் நம்மில் பலரின் நிலை இது தான் நமக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் அதற்க்கு துஆ செய்வோம் தொழுவோம் ஆனால் அந்த தீங்கு இன்னும் அதிகம் ஆகினால் அல்லது அந்த தீங்கு நீங்குவதற்கு எந்த வழியும் இல்லை என்று நாமே முடிவு செய்து அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்து விடுவோம்!

இன்னும் சிலர் ஓதி பார்க்கும் போதே இது கடுமையான நோய் இவருக்கும் வயது ஆகி விட்டது! அல்லது மருத்துவரே கூறி விட்டார் சரி ஆகாது என்று நாம் ஓதி பார்ப்பதால் என்ன ஆக போகிறது உள்ளத்தில் அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை இல்லாமலே ஓதி பார்ப்பார்கள்!

இவ்வாறு நாம் நம்பிக்கை இல்லாமல் ஓதி பார்த்தாலும் பயன் இல்லை ஏதேனும் எனக்கு ஆகி விடும் என்று அவர் கூறினால் அதே போன்று ஏதேனும் அவருக்கு ஆகி விடும்! அல்லாஹ் பாதுகாக்கணும்!

(நூல் : புகாரி : 3616)

கண்ணியத்திற்குறிய சகோதரா சகோதரிகளே நமக்கு தான் இவைகள் எல்லாம் முடியாத நடக்காத செயல் ஆகும் ஆனால் அல்லாஹ்விற்கு இதை செய்வது மிகவும் எளிதான ஒன்றாகும்!

ஏன் என்றால் அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றல் உடையவன் அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாங்களுக்கு மருத்துவதிற்கு வழி காட்டியதை விட துஆவை தான் அதிகம் வழி காட்டி உள்ளார்கள் ஸஹாபாக்கள் உறுதியாக நம்பிக்கை வைத்தார்கள் அல்லாஹ்வின் உதவியை பெற்றார்கள்!

நாம் சந்தேகத்துடன் துஆ செய்கிறோம் அல்லது ஓதி பார்க்கிறோம் இதனால் நமக்கு அல்லாஹ்வின் உதவி கிடைப்பதிலும் சந்தேகமாக உள்ளது!

ஒரு மனிதன் மட்டும் அல்லாஹ் எப்படி துஆவை ஏற்று அதை அடியானுக்கு தருகிறான் என்று மட்டும் அறிந்து கொண்டால் மௌத் வரை அவர் துஆவை விட மாட்டார்!

அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்!

(அல்குர்ஆன் : 12 : 87)

ஷிர்க் & மாற்று மத வழிமுறை & மூடநம்பிக்கை :

1) கடுகுமிளகாய், கல் உப்பு, வீட்டு வாசல் மண் ஆகிய மூன்றையும் கையில் வைத்துக்கொண்டு குழந்தயை உட்காரவைத்து சில வார்த்தைகள் கூறி சுத்தி போடுவார்கள் இதனால் கண்ணேறு முறிந்து விடும் என்று ஆனால் இது தெளிவான ஷிர்க் மற்றும் மாற்று மத கலாச்சாரம் ஆகும்! இஸ்லாத்தில் இவ்வாறு எதுவும் கிடையாது!

2) குழந்தைகளுக்கு கண்ணேறு பட கூடாது என்பதற்கு குழந்தைக்கு ஒப்பனை செய்யும் பொழுது, கன்னத்தில் ஒரு மை நெற்றியில் ஒரு மை வைத்து விடுவார்கள் ஆனால் இது தெளிவான ஷிர்க் மற்றும் மாற்று மத கலாச்சாரம் ஆகும்! இஸ்லாத்தில் இவ்வாறு எதுவும் கிடையாது!

3) ஏதேனும் துஆ அல்லது அல் குர்ஆன் வசனம் எழுதி அதை தண்ணீரில் கரைத்து குடிப்பது அறியாமை செயலாகும்!

இன்னும் சில ஊர்களில் அறியாமை காரணமாக அல் குர்ஆன் ஆயத்துகளை அல்லது துஆக்களை எல்லாம் frame ஆக செய்து அதை வீடு கடைகளில் மாட்டி வைத்து கொள்ளுகிறார்கள் இது அறியாமை மற்றும் இஸ்லாம் காட்டிதராத செயலாகும்!

இவ்வாறு செய்வது அல்லாஹ்வின் வசனங்களை நாம் அவமதிப்பது போன்று ஆகும்! 

4) தாயத்து காட்டுவது : முஸ்லீம்கள் அனேக மக்கள் அறியாமை காரணமாக அல்லது தாயத்து உடைய பாவத்தின் அளவு தெரியாமல் நோய் கண்ணேறு போன்றவற்றிக்கு தாயத்து என்று ஒன்றை வாங்கி அணிந்து கொள்ளுகிறார்கள்!

இஸ்லாத்திற்கும் தயத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது இது தெளிவான ஷிர்க் ஆகும்! இந்த தாயத்துகளை எல்லாம் ஆரம்ப கால மக்கள் அறியாமை காரணமாக அணிந்து இருந்தார்கள் ஆனால் நபி (ஸல்) அவர்கள் இதை கண்ட உடன் இதை தடை செய்து விட்டார்கள்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் தாயத்தைத் தொங்கவிடுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்! 

(நூல் : அஹ்மத் : 16781)
Previous Post Next Post