ஸஹாபாக்களை இழிவுப்படுத்துவதையே நோக்கமாக கொண்டிருக்கும் பீஜே

1 – பீ ஜே என்பவர் கடந்த காலங்களில் பல சந்தர்பங்களில் ஸஹாபாக்களை இழிவாக பேசியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு லைவ் நிகழ்ச்சியில், இரண்டு ஸஹாபாக்கள் பயணத்திலிருந்து இரவில் வீடு திரும்பும் போது வீட்டில் அவர்களின் மனைவிமார்களோடு ஆண்கள் இருந்தார்கள் என்று பேசிவிட்டு அதற்கு ஆதாரமாக இந்த ஹதீஸை குறிப்பிட்டார்.

وقد روي عن ابن عباس أن النبي صلى الله عليه و سلم نهاهم أن يطرقوا النساء ليلا قال فطرق رجلان بعد نهي النبي صلى الله عليه و سلم فوجد كل واحد منهما مع امرأته رجلا سنن الترمذي
இப்னு அப்பாஸ் வழியாக அறிவிக்கப்படுகிறது :
நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களை (அவர்களின்) மனைவிமார்களிடத்தில் இரவு நேரத்தில் செல்ல வேண்டாமென தடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தடுத்தற்கு பிறகும் இரண்டு ஸஹாபாக்கள் சென்றனர். அந்த இருவரில் ஒவ்வொருவருமே தம் மனைவியுடன் வேறோரு ஆண் இருப்பதைக் கண்டனர்.
நூல் : திர்மிதி

இந்த ஹதீஸை பீ ஜே கூறிவிட்டு இது ஆதாரப்புர்வமான ஹதீஸ் என்கிறார். இதனை ஆதாரமாக வைத்து ஸஹாபிய பெண்மனிகளில் சிலர் தன் கணவன் இல்லாதபோது இவ்வாறாக அந்நிய ஆண்களுடன் தவறாக நடந்துக் கொண்டார்கள். எனவே இதுபோன்ற தவறுகளை எல்லாம் பெரிது படுத்தக் கூடாது என்கிறார்.

அதற்கடுத்த நாள் லைவ் நிகழ்ச்சியில் ஸஹாபிய்யா பெண்மனிகளுடன் அந்நிய ஆண்கள் இருந்த செய்தி பலவீனமானது கவனக்குறைவால் சொல்லிவிட்டேன் என்று கூறிவிட்டு இதனை சட்டமாக சொல்லவில்லை, சம்பவமாக தான் சொன்னேன் என்கிறார்.

அப்ப பீஜே அகராதிபடி சட்டமாக தான் சொல்லக் கூடாது. சம்பவமாக எதனை வேண்டுமானலும் சொல்லிக் கொள்ளலாம். சம்பவம் சரியானதா? பிழையானதா என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை.

பீஜேவும், அவரை ஆதரிப்பவர்களும் – TNTJ அமைப்பு பீஜே பல பெண்களுடன் விபச்சாரம் செய்தார் என்று சொல்வதை சட்டமாக பார்க்காதீர்கள் நடந்த சம்பவமாக மட்டுமே பாருங்கள்!

சுப்ஹானல்லாஹ்! ஸஹாபக்களை குறித்து இவ்வளவு கீழ்தரமான சிந்தனையை கொண்ட ஒருவர் தன்னை முஸ்லிம் என்றால் அவருடைய இஸ்லாத்தின் மீதே சந்தேகம் ஏற்படுகிறது.

آيَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ ، وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الأَنْصَارِ

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் அன்ஸார் ஸஹாபாக்களை நேசிப்பது ஈமானின் அடையாளமாகும். அன்ஸார் ஸஹாபாக்களை வெருப்பது நயவஞ்சகத்தனத்தின் அடையாளமாகும். (நூல் புகாரி – 17)

இமாம் அபு ஜுர்ஆ அர்ராஜி அவர்கள் கூறுகிறார்கள், அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களின் ஸஹாபாக்களிலிருந்து ஒரு ஸஹாபியைக் கூட குறைக் கூறும் ஒரு மனிதனைக் கண்டால் அந்த குறை கூறுபவன் ஜின்திக் ஆவான் என்பதை நன்றாக அறிந்துக் கொள்ளுங்கள்.

முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்பதை நாம் உறுதியாக ஏற்றுக் கொண்டோம். அல்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் என்பதையும் உறுதியாக நாம் ஏற்றுக் கொண்டோம். இந்த அல்குர்ஆனும், சுன்னாவும் நம்வரை வந்தடைய அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களின் ஸஹாபாக்களே காரணமாக இருந்தார்கள்.

நிச்சயமாக இந்த ஜின்திக்குகள் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவை அசத்தியமானதாக ஆக்கிடவே நமது இந்த சாட்சியாளர்களை குறைகூற நாடுகின்றனர். இத்தகைய ஜின்திக்குகளை குறை கூறுவதே மிகப் பொருத்தமானாதாகும். (அல்கிஃபாயா)

2 – ஸஹாபிய்யா பெண்மனிகள் மீது சுமத்திய குற்றச்சாட்டு ஆதாரமாற்ற செய்தியாக ஆகி போனதினால் எப்படியாவது அவர்களை இழிவுப்படுத்தியே ஆக வேண்டும் என்பதற்காக பீஜே நபி ஸல் அவர்களின் ஒரு ஹதீஸை ஆதாரமாக காட்டி தவறுகள் நடப்பதற்கு வாய்ப்புள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்.

அந்த ஹதீஸ்
3897. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(வெளியூரிலிருந்து திரும்புகின்ற) ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும் (அவ்வாறு செல்வது முறையாகாது).

இந்த ஹதீஸில் வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும் (அவ்வாறு செல்வது முறையாகாது). என்ற கூற்று முத்ரஜ் ஆ(அறிவிப்பாளரின் வார்த்தையா)கும். நபி ஸல் அவர்களின் வார்த்தையல்ல. இதனை இமாம் முஸ்லிம் ரஹ் அவர்களே இந்த ஹதீஸை பதிந்து விட்டு தொடர்ந்து கூறுகிறார்கள்,

– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள், “வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” எனும் இந்த வாசகம் ஹதீஸில் உள்ளதா, அல்லது இல்லையா (அறிவிப்பாளர் முஹாரிப் அவர்களின் வாசகமா) என எனக்குத் தெரியவில்லை” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

3898. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், “ஒருவர் (பயணத்திலிருந்து திரும்பி) இரவில் திடீரென வீட்டாரிடம் செல்வதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்து வந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.
“வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

முஹாரிப் என்பவரிடமிருந்து இமாம் ஷுஅபா அறிவித்துள்ளார்கள் அதில் இந்த வாசம் இல்லை. அந்த ஹதீஸ் புகாரியில் வந்துள்ளது,

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்
ஒருவர் (வெளியிலிருந்து) இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் வருவதை நபி(ஸல்) அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாயிருந்தார்கள். (புகாரி – 5243)

இமாம் இப்னு ஹுமைத், இமாம் நவவி, இமாம் இப்னு ஹஜர் ரஹ் போன்றோர் இந்த வார்த்தை நபி ஸல் அவர்களின் வார்த்தையல்ல, முஹாரிப் என்ற அறிவிப்பாளரின் சொந்த வார்த்தை என்கின்றனர்.

பீஜே கூறும் வாதங்கள் குறித்து சரியான மறுப்பை TNTJ அமைப்பினரும் தனது முகநூல் பக்கத்தில் தந்துள்ளார்கள்.

3 – ஸஹாபாக்களை இழிவுப்படுத்துவதை தனது நோக்கமாக கொண்டிருப்பவர் தான் இந்த பிஜே. சில ஆண்டுகளுக்கு முன்பு அமர் பின் ஆஸ் ரலி அவர்களை கிரிமினல் என்றார். அதற்கு அவர் ஆதாரமாக காட்டும் செய்தி இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பாளரை கொண்ட செய்தியாகும்.

(ஒரு ஸஹாபியை கிரிமினல் என்கிறாரே என்று விமர்சனங்கள் வந்த போது கிரிமினைலை கிரிமனல் என்று தான் சொல்ல வேண்டும் என TNTJ வினர் கூறினர்)

4 – அன்ஸார் ஸஹாபாக்களை குறித்து பீஜே பேசும் போது போனபோதென்று முஹாஜிர் ஸஹாபாக்களுக்கு சோறு போட்டோம். இருப்பதற்கு இடம் கொடுத்தோம். இப்ப ஆட்சியில் பங்கா? தரக்கூடாது என்ற சிந்தனை அவர்களின் மனங்களில் இருந்தது என்று பேசினார்.

( இந்த கூற்றை ததஜாவில் இருந்தவர்கள் அன்று ரசித்து கேட்டார்கள்)

அன்ஸார் ஸஹாபாக்களை குறித்து அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்,
وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ

இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் பொறாமைப் பட மாட்டார்கள்;

மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் – இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். (59:9)

அல்லாஹ்வே அன்ஸார் ஸஹாபாக்களை குறித்து அவர்களின் உள்ளங்களில் முஹாஜிர்கள் குறித்த எவ்வித பொறாமையும் இல்லை என்கிறான்.

ஆனால் பீஜே, அன்ஸார் ஸஹாபாக்களின் உள்ளத்தில் பொறாமை இருந்தது என்கிறார்.

TNTJ அமைப்பினர் பீஜேவோடு இருந்த போது இதுபோன்ற தவறுகளை அவர்கள் தவறுகளாகவே பார்க்கவில்லை. இப்போது பீஜேவை அமைப்பை விட்டு வெளியேற்றியதற்கு பிறகு கடுமையான மறுப்பை அளிக்கின்றனர்.

பீஜே அன்று அமைப்பில் இருந்ததினால் அவருடைய தவறுகள் குருட்டு தக்லீதினால் தெரியாமல் இருந்ததா?

பீஜே இன்று அமைப்பிற்கு எதிராக செயல்படுவதினால் அவருடைய தவறுகள் தெரிய வருகிறதா,?

பீஜே என்ற மனிதனிடம் ஆய்வு ரீதியான தவறுகள் அமைப்பை விட்டு வெளியேறியதற்கு பிறகு வரமுடியும் என்றால்,

பீஜே அமைப்பில் இருக்கும் போது செய்த ஆய்வில் தவறுகளே வராதா?

பீஜே அமைப்பில் இருக்கும் போது மலக்காக இருந்தாரா? அமைப்பை விட்டு சென்றதற்கு பிறகு மனிதனாக மாறி உள்ளரா?
பீஜே காட்டிய வழிகெட்ட பாதையிலிருந்து விலகிவாருங்கள். நேர்வழியில் செல்வீர்கள்!

அன்புடன்
ஹசன் அலி உமரி
Previous Post Next Post