நீ எங்கிருந்த போதிலும் மரணம் உன்னை வந்தடையும்!

بسم الله الرحمن الرحيم

படைப்பாளனாகிய அல்லாஹுத்ஆலாவின் மாபெரும் படைப்புக்களில் ஒன்றே வாழ்க்கையும் மரணமுமாகும்.

அல்லாஹுதஆலா கூறுகின்றான்: 'அவன் எத்தகையவனென்றால், உங்களில் சிறந்த முறையில் நற்காரியத்தில் ஈடுபடுபவர் யார் என்பதை சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்க்கையையும் படைத்தான்.' (அல்முல்க்: 02)

மரணம் என்பது அல்லாஹ்வின் படைப்புக்களில் ஒன்று என்பதையும் மரணம் என்பது உண்டு என்பதையும் இவ்வசனம் உறுதிப்படுத்துகின்றது.

'அல்மவ்த்' என்ற இந்த மரணத்தின் விடயத்தில் எம்மில் பலர் அலட்சியப்போக்குடன் நாட்களை கழித்து வருகின்றனர். மரணத்தை ஞாபகப்படுத்தாதவர்களாகவும் அதற்கு உரிய முறையில் தங்களைத் தயார்படுத்தாதவர்களாகவும் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலை ஓர் ஆரோக்கியமற்ற, அல்லாஹ்வினால் பொருந்திக் கொள்ளப்படாத ஒரு நிலையாகும். உண்மையான ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் அவன் எப்பொழுதும் இந்த மரணத்தை ஞாபகப்படுத்தக் கடமைப்பட்டுள்ளான். ஜனாஸாக்களில் கலந்துகொள்ளும் சமயத்திலும் அல்லது, கப்ருகளைச் சந்திக்கின்ற வேளையிலும் மரணத்தை ஓரிரு நிமிடங்களுக்கு ஞாபகப்படுத்திவிட்டுச் செல்வது ஒரு முஸ்லிமின் பண்பாக இருக்க முடியாது.

மரணத்தைப் பற்றிய முஸ்லிமின் கொள்கைக் கோட்பாடுகள், செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாத்தில் அழகான வழிகாட்டல்கள் வலியுறுத்திச் சொல்லப்பட்டுள்ளன. அவைகளைச் சற்று அறிந்துகொள்வோம்.

மரணம் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

ஏன் நாம் வாழ்கின்றோம்? ஏன் மரணிக்கின்றோம்? என்பதற்கு விடை காணுவது ஒரு முஸ்லிமின் பொறுப்பாக இருக்கின்றது. இந்த வாழ்வும் மரணமும் ஏன் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதை அவன் சிந்திக்க வேண்டும். அல்லாஹ்வை நிராகரித்து வாழக்கூடிய காபிர்கள் கருதுவதைப் போன்று இந்த வாழ்வும் மரணமும் வீணாக நோக்கமின்றிப் படைக்கப்படவில்லை.

அல்லாஹுதஆலா காபிர்கள் விடயமாகக் கூறுகின்றான்: "நமது இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (நமக்கு) வேறு வாழ்க்கை இல்லை. நாம் வாழ்ந்து மரணிப்போம். ஆனால், மீண்டும் நாம் (உயிர் கொடுக்கப்பட்டு) எழுப்பப்படமாட்டோம் என்று நிராகரித்தவர்கள் கூறினர்." (அல்முஃமினூன்: 37)

ஏதோ இவ்வுலகில் பிறந்தோம், ஏதோ வாழ்கின்றோம், ஒரு நாளில் மரணிக்க இருக்கின்றோம் என்று வாழக்கூடியவர்கள்தான் காபிர்கள் என்று இவ்வசனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்து மரணிப்பது ஓர் அர்த்தமற்ற, நோக்கமற்ற ஒன்று என அவர்கள் கருதி வந்தனர்.

ஆனால், ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்து கொள்வதற்காக வேண்டி அல்லாஹுதஆலா வாழ்க்கை மற்றும் மரணத்தின் நோக்கத்தை தெளிவாக அவனது வேதத்தில் குறிப்பிட்டுள்ளான். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட சூரதுல் முல்கின் இரண்டாவது வசனம் அதனை அழகாக தெரியப்படுத்தியுள்ளது. "உங்களில் அழகான முறையில் நற்செயல்களைச் செய்யக்கூடியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்" என்று அவ்வசனம் கூறுகின்றது.

சிறந்த முறையில் நற்காரியத்தில் ஈடுபடுவர் யார்? அல்லாஹ்வுக்குப் பொருத்தமான முறையிலும் நபிவழியின் அடிப்படையிலும் அமல்கள் செய்யக்கூடியவர் யார்? அல்லாஹ்வுக்கு அவனது தூதருக்கும் உண்மையாகவே கட்டுப்படக்கூடியவர் யார்? இதற்கு மாற்றமானவர்கள் யார் என்பதை சோதிக்கும் வண்ணமாக இந்த எமது வாழ்க்கையும் நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்க இருக்கின்ற எமது மரணமும் படைக்கப்பட்டிருக்கின்றது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் அறிந்தாக வேண்டும்.

கோடிக்கணக்கில் பணங்களைச் சம்பாதித்து அவற்றைச் சேகரித்து வைக்க வேண்டும் என்பதற்கோ, அல்லது மாடிக் கட்டிடங்களுக்கும் மாளிகைகளுக்கும் பரந்த பூமிகளுக்கும் சொந்தக்காரர்களாக ஆக வேண்டும் என்பதற்கோ, அல்லது ஒருவரையொருவர் முறியடித்துக் கொண்டு பட்டம், உயர் பதவிகளில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதற்கோ மனிதனுடைய வாழ்கையையும் மரணத்தையும் அல்லாஹ் படைக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள எமது உள்ளங்கள் தயங்கக்கூடாது.

ஒரு முஸ்லிமின் உயரிய நோக்கம் சிறப்பான முறையில் அல்லாஹ்வுக்கு வணக்க வழிபாடுகளைச் செய்வதாகவே அமைந்திருக்க வேண்டும். ஓர் அமல் சிறப்பாக அமைவதற்கு இரண்டு நிபந்தனைகள் காணப்படுகின்றன.

1. அல்லாஹ்வின் கூலி நாடப்பட்டு நிறைவேற்றப்படக்கூடிய அமலாக அது அமைந்திருக்க வேண்டும்.

2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அமலாகவும் அது அமைந்திருக்க வேண்டும்.

இவ்விரண்டில் ஒரு நிபந்தனை இழக்கப்பட்டாலும் அவ்வமலுக்குப் பிரயோசனம் இருக்காது என்பதை உள்ளத்தில் ஆழப்பதிய வேண்டும்.

இவ்விரு நிபந்தனைகளையும் உட்படுத்தி நற்காரியங்களில் ஈடுபடக்கூடியவர் யார் என்பதை சோதிப்பதற்காக அல்லாஹ் எமக்கு வாழ்க்கையையும் மரணத்தையும் வழங்கியிருக்கின்றான்.

ஒவ்வொருவரின் மரணமும் விதியாக்கப்பட்டு விட்டது!

இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனின் மரணமும் ஏற்கெனவே விதியாக்கப்பட்டு, அல்லவ்ஹுல் மஹ்பூல் எனும் ஏட்டில் எழுதப்பட்டுவிட்டது என்பது ஒரு முஸ்லிமின் நம்பிக்கைக் கோட்பாடாக இருக்க வேண்டும். எந்த ஒருவராலும் அல்லாஹ் விதியாக்கியவற்றில் மாற்றங்களைச் செய்ய முடியாது. நாம் எப்போது மரணிப்போம், எங்கு மரணிப்போம், எந்நிலையில் மரணிப்போம், எவ்வளவு காலம் வாழ்ந்து மரணிப்போம் ஆகியவை வானங்களும் பூமியும் படைக்கப்படுவதற்கு முன்பே விதியாக்கப்பட்டுவிட்டன.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹுத்தஆலா படைப்பினங்களின் விதிகளை வானங்கள் மற்றும் பூமியை அவன் படைப்பதற்கு ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்போ எழுதிவிட்டான்.' (முஸ்லிம்)

மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அவனுடைய ஏட்டில் பதியப்படாமல் எவருடைய வயதும் அதிகரிப்பதுமில்லை, குறைந்து விடுவதுமில்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்குச் சுலபமானதே!' (அல்பாதிர்: 11)

மரணம் எம்மைத் தழுவிக்கொள்ளும்போது எமது வயது எவ்வளவாக இருக்கும் என்பது ஏற்கெனவே விதியாக்கப்பட்டு, எழுதப்பட்டுவிட்டது. அல்லாஹ் குறிப்பிட்ட ஒரு மனிதனின் உயிரைக் குறிப்பிட்ட ஓர் இடத்தில் கைப்பற்ற நாடியிருந்தால், முழு உலக மனிதர்களும் ஒன்று சேர்ந்து அவ்வுயிரைக் காப்பாற்ற முயற்சித்தாலும் அவ்வுயிரை அல்லாஹ் நாடியவாறு கைப்பற்றியே தீருவான். அல்லாஹ் ஒரு மனிதனுக்கு எவ்வளவு காலம் அவன் வாழ வேண்டும் என்று நாடியிருக்கின்றானோ அவ்வளவு காலம் அவனை வாழ வைப்பான். உலக மக்கள் ஒன்று சேர்ந்து அம்மனிதனின் உயிரைக் கைப்பற்ற முயற்சித்தாலும் அல்லாஹ் விதித்த தவணையை அம்மனிதன் அடையும்வரை எவராலும் அவனுடைய உயிருக்குச் சேதம் விளைத்துவிட முடியாது.

எப்போது மரணிப்போம், எங்கு மரணிப்போம் ஆகியவற்றை அறிந்தவன் அல்லாஹ் மாத்திரமே!

ஒரு மனிதனுக்கு அவன் எப்போது மரணிப்பான், எங்கு மரணிப்பான் என்பது பற்றி அறிந்துகொள்ள முடியாது. அது பற்றிய அறிவு அல்லாஹ் ஒருவனிடம் மாத்திரமே உள்ளது என்பது எமது ஆழமான நம்பிக்கையாக இருக்க வேண்டும்.

எவ்வாறான நவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அறிவியல் தொழில்நுட்பம் பலத்த முன்னேற்றத்தை அடைந்த போதிலும் மரணிக்கும் நேரம், மரணிக்கும் இடம் ஆகியவற்றை எந்த மனித சக்தியாலும் அறிந்துகொள்ள முடியாது.

அல்லாஹுதஆலா கூறுகின்றான்: 'நிச்சயமாக மறுமை நாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே காணப்படுகிறது. அவனே மழையை இறக்கி வைக்கின்றான். அவனே கர்ப்பங்களில் தரிப்பதையும் அறிவான். எவரும் நாளைக்கு என்ன செய்வார் என்பதை அறியமாட்டார். எந்தப் பூமியில் இறப்பார் என்பதையும் எவரும் அறியமாட்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் (இவைகளை) நன்கறிந்தவனும் தெரிந்தவனுமாக இருக்கின்றான்.' (லுக்மான்: 34)

இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டது போல் அல்லாஹ்வையன்றி வேறு எவராலும் மரணிக்கும் நேரத்தையும் இடத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. நாம் எவ்வருடத்தில் மரணிப்போம், எம்மாதத்தில் மரணிப்போம், எத்தினத்தில் மரணிப்போம், எந்நிமிடத்தில் மரணிப்போம், எவ்வினாடியில் மரணிப்போம், பூமியின் எந்தப் பகுதியில் மரணிப்போம் என்பதை அறிந்தவன் அல்லாஹ் மாத்திரமே.

மரணத்திற்கு குறிப்பிட்ட ஒரு வயதெல்லையை எம்மால் நிர்ணயிக்க முடியாது. வயோதிபப் பருவத்தில்தான் மரணம் ஏற்படும் என்றும் எம்மால் ஒருபோதும் கூறமுடியாது. மரணம் என்பது பச்சிளம் பாலகனையும் வந்தடையும். மரணமே தன்னை வந்தடையாது என்று எண்ணி வாழக்கூடிய வாலிபனையும் வந்தடையும். வயோதிபனையும் வந்தடையும்.

தனக்குத் தற்போது மரணம் வந்துவிடாது என்று கருதிய எத்தனையோ மனிதர்கள் அவ்விடத்திலேயே மரணத்தை எய்தியிருக்கின்றார்கள். தொழும்போது, ஸுஜூதில் இருக்கும்போது, பாதையில் பயணிக்கும்போது, விளையாட்டில் ஈடுபடும்போது, சிகரட் புகைக்கும்போது, மது அருந்திக் கொண்டிருக்கும்போது, அல்லாஹ் ஹராமாக்கிய பாவமான காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது என்று பலர் மரணத்தைப் பலவாறான அமைப்புக்களில் சம்பாதித்திருக்கின்றார்கள் என்பதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகின்றோம், அல்லது காதுகளால் செவிமடுத்து வருகின்றோம். எனவே, மரணம் என்பது சொல்லிவிட்டு வரக்கூடிய ஒன்றல்ல என்பதை சிறந்த முறையில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எமக்கு அல்லாஹ் நியமித்த தவனையை நாம் அடைந்துவிட்டால் அதற்குப் பின்பு எமது உயிர் கைப்பற்றப்படும். நாம் ஒரு வினாடி அதைவிட்டும் பிந்தவோ முந்தவோ மாட்டோம் என்பதை அல்குர்ஆன் உறுதிப்படுத்தியுள்ளது.

 அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அவர்கள் வாழ்வதற்கும் பின்பு மரணிப்பதற்கும்) ஒரு தவனை உண்டு. அவர்களுக்குரிய தவனை வந்துவிட்டால் அவர்கள் ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள், முந்தவும் மாட்டார்கள்.' (அல்அஃராப்: 34)

மரணம் என்பது அனைவரையும் வந்தடையும்.

இவ்வுலகில் வாழக்கூடிய ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள், வாலிபர்கள், வயோதிபர்கள், ஏழைகள், செல்வந்தர்கள், முஸ்லிம்கள், காபிர்கள், நல்லவர்கள், தீயவர்கள் ஆகிய அனைவருக்கும் மரணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவ்வுலகில் வாழ்ந்த கொடுங்கோல் மன்னர்கள், பூமியை உரிமை கொண்டாடிய அரசர்கள், அதிபர்கள் எவருக்கும் அல்லாஹ் நிரந்தர வாழ்க்கையை அமைக்கவில்லை. அவர்கள் அனைவருமே இறந்து மடிந்துவிட்டனர். அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு நற்காரியங்களைச் செய்து வந்த நபிமார்கள், ஸஹாபாக்கள், நல்லவர்கள் ஆகிய எவருக்கும் அல்லாஹ் நிரந்தர வாழ்க்கையை அமைக்கவில்லை. அவர்கள் அனைவருமே இறந்துவிட்டனர்.

எனவே, மரணத்திலிருந்து எவராலும் தப்பிவிடவோ, விரண்டோடிச் செல்லவோ முடியாது. இந்த உலகின் எந்த மூளைமுடுக்கிற்குச் சென்றாலும், ஆகாயத்தில் உயரப் பறந்தாலும், பூமியின் ஆழப்பகுதிக்குச் சென்றாலும், பலமான கட்டிடங்களில் வசித்தாலும் மரணத்திலிருந்து எவரும் தப்பிவிட முடியாது. இதனைப் பின்வரும் வசனங்கள் அழகாகத் தெளிவுபடுத்தியுள்ளன.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆக வேண்டும்.' (ஆலுஇம்ரான்: 185)

மேலும் கூறுகின்றான்: 'நீங்கள் எங்கிருத்த போதிலும் உங்களை மரணம் வந்தடையும். பலமாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் வசித்தாலும் சரியே!' (அந்நிஸா: 78)

மேலும் கூறுகின்றான்: '(நபியே!) நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக எந்த மரணத்தை விட்டும் நீங்கள் விரண்டோடிச் செல்கின்றீர்களோ அம்மரணம் உங்களைச் சந்தித்தேயாகும்.' (அல்ஜுமுஆ: 08)

மரணத்தைப் பற்றிச் சிந்திப்போம், அதற்கு எம்மைத் தயார்படுத்துவோம்!

மரணத்தை ஞாபகப்படுத்துவதும் நற்காரியங்களைச் செய்து அம்மரணத்தைச் சந்திக்க எப்பொழுதும் தயாராக இருப்பதும் முஸ்லிமின் கடமையாகும். நானும் ஒரு தினம் மரணிப்பேன், என்னையும் மக்கள் குளிப்பாட்டுவார்கள், எனக்கும் அவர்கள் கபன் அணிவிப்பார்கள், எனக்கும் அவர்கள் ஜனாஸாத் தொழுவார்கள், என்னையும் அவர்கள் நல்லடக்கம் செய்வார்கள், எனது கப்ரைச் சூழ எனது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், ஊர் மக்கள் ஆகியோர் நின்றுகொண்டு இருப்பார்கள், பின்பு என்னைத் தனிமையில் விட்டுவிட்டு அவர்கள் அனைவருமே அங்கிருந்து சென்றுவிடுவார்கள் என்பதை அடிக்கடி சிந்திக்கக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும்.

அத்தருணத்தில் எமக்கு எமது கப்ரில் பயனளிக்கக்கூடியதும் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் எம்மைப் பாதுகாக்கக்கூடியதும் நாம் செய்த நற்காரியங்களேயாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'மரணித்த மனிதரை மூன்று விடயங்கள் பின்துயர்ந்து செல்லும். அவற்றில் இரண்டு விடயங்கள் திரும்பிவிடும். ஒன்று மாத்திரம் அவருடன் தங்கிவிடும். அவனுடைய குடும்பம், செல்வம், நற்காரியங்கள் ஆகியன அவனைப் பின்துயர்ந்து செல்லும். அவனுடைய குடும்பமும் செல்வமும் திரும்பிவிடும். அவனுடைய நற்காரியங்கள் மாத்திரம் அவனுடன் தங்கிவிடுகின்றன.' (புஹாரி, முஸ்லிம்)

நாட்களையும் நேரங்களையும் செலவழித்து அவன் சேகரித்த பணமோ அல்லது, அவன் உருவாக்கிவிட்டுச் சென்ற குடும்பமோ அவனுடைய கப்ரில் அவனுக்கு எப்பயனையும் தந்திராது. மாறாக, அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியவனாகவும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைப்படியும் அவன் செய்த நற்காரியங்கள் மாத்திரமே அவனுக்கு மரணத்திற்குப் பின் பயனளிக்கும்.

ஆகவே, இந்த மரணம் எம்மை வந்தடைய முன் அதிகமாக நற்காரியங்களை விரைந்து செய்து, மரணத்தை எதிர்கொள்ளத் தயாரானவர்களாக இருப்பது புத்திசாலித்தனமாகும்.

அல்லாஹுத்தஆலா மரணத்திற்கு முன்பாக நற்காரியங்களை விரைந்து செய்யுமாறு கட்டளையிட்டுள்ளான்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'உங்களுக்கு மரணம் ஏற்படுவதற்கு முன்பே நாம் வழங்கியவற்றிலிருந்து செலவளியுங்கள். (இவ்வாறு செய்யாதவர்கள்) என்னுடைய இரட்சகனே! இன்னும் சமீபகாலத்திற்கு எனது தவனையை நீ பிற்படுத்தியிருக்கக்கூடாதா? அவ்வாறிருந்தால் நான் (எனது செல்வத்தை) தர்மம் செய்து (நற்காரியங்களைச் செய்து) நல்ல மனிதர்களில் ஒருவனாக ஆகிவிடுவேன்! என்று கூறுவான். (ஆனால்) அவன் எந்த ஆத்மாவையும் அதனுடைய தவனை வந்துவிட்டால் பிற்படுத்தமாட்டான். நீங்கள் செய்பவற்றை அவன் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.' (அல்முனாபிகூன்: 10, 11)

மரணத்திற்கு முன்பாக உரிய முறையில் தானதர்மங்களைச் செய்யுமாறு இவ்வசனத்தில் அல்லாஹுதஆலா கட்டளையிட்டிருப்பதோடு, நற்காரியங்களைச் செய்து மரணத்திற்கு தம்மைத் தயார்படுத்தாதவர்கள் இறுதி நேரத்தில் எவ்வாறு கைசேதப்படுவார்கள் என்பதையும் இவ்வசனத்தில் அல்லாஹ் தெரிவித்திருக்கின்றான்.

ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் அனைவருமே மறுமை வாழ்வுக்காக அவர்கள் செய்த நற்காரியங்கள் எவை? என்று சிந்திப்பதற்கு கடமைப்பட்டுள்ளனர். மறுமைக்காக நாம் என்னதான் செய்துள்ளோம் என்று சிந்திக்குமாறு அல்குர்ஆன் எம்மைத் தூண்டியிருக்கின்றது.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "ஈமான் கொண்டவர்ளே! நீங்கள் அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதரும் நாளை (மறுமை)க்காக வேண்டி எதனை முற்படுத்தி வைத்துள்ளார் என்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்." (அல்ஹஷ்ர்: 18)

மரணம் என்பது திடீரென ஏற்படலாம். மரணம் எம்மைத் தழுவிக்கொண்டால் எம்மை அல்லாஹ்வின் வேதனையிலிருந்து பாதுகாக்கக்கூடிய நற்செயல்களில் எவைகளைத்தான் நாம் செய்திருக்கின்றோம் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் சிந்தனையாக இருக்க வேண்டும்.

நாம் தொழுத தொழுகைகள், நாம் நோற்ற நோன்புகள், நாம் கொடுத்த தர்மங்கள், நாம் ஓதிய ஓதல்கள், நாம் புரிந்த நல்லுபகாரங்கள், நாம் மொழிந்த நல்வார்த்தைகள் ஆகியன எமது மரணத்திற்குப் பின்பு எமக்கு பயனளிக்குமா? என்று சிந்திக்கக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். இந்நற்காரியங்களை அல்லாஹ்வின் கூலியை நாடியும், நபிவழியிலும் செய்திருந்தால் நிச்சயமாக இவைகள் எமது மரணத்திற்குப் பின் எமக்கு ஈடேற்றத்தையும் மறுமையில் சிறந்த வாழ்க்கையையும் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமிருக்கக்கூடாது.

எனவே, மரணத்தை அடிக்கடி ஞாபகப்படுத்துவதும், அதற்குரிய முன் ஆயத்தங்களை மார்க்க அடிப்படையில் மேற்கொள்வதும் எமது உயரிய செயலாக இருக்க வேண்டும். மேலும், எமது உயிர்கள் கைப்பற்றப்படும்போது அல்லாஹ் எம்மைப் பொருந்திக்கொண்ட நிலையில் அவ்வுயிர்கள் கைப்பற்றப்பட வேண்டும் என்று நாம் அடிக்கடி அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவோம்.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
Previous Post Next Post