முஃதஸிலா என்பதன் மொழிக்கருத்து பிரிந்து சென்றவர்கள் என்பதாகும். இஸ்லாமிய மரபில் “அகீதா சார்ந்த விடயங்களை பகுத்தறிவு ரீதியாக சிந்தித்ததனால் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக பெரும்பான்மை முஸ்லிம் சமூகத்தை விட்டும்
பிரிந்து சென்ற ஒரு தத்துவ இயக்கம்” முஃதஸிலா என அறியப்படுகிறது.
தோற்றம்:
இமாம் ஹஸனுல் பஸரி(ரஹ்) பஸராப் பள்ளி வாசலில் இஸ்லாமிய வகுப்புக்களை நடாத்திக் கொண்டிருந்த போது அவர்களது மாணவர்களில் ஒருவனாயிருந்த வாஸில் பின் அதாவினாலேயே இக்கொள்கை உருவாக்கப்பட்டது. இமாம் அவர்களுடன்
பெரும் பாவம் செய்தவனின் நிலைப்பாடு பற்றி தர்க்கித்து முரண்பாடு கொண்ட வாஸில், அவன் குப்ருக்கும் ஈமானுக்கும் இடையில் இருக்கிறான் எனக்கூறி இமாம் அவர்களது சபையில் இருந்து விலகிச் சென்றான். அப்போது இமாமவர்கள் அவர்
எங்களைப் பிரிந்து சென்றார் என்று கூறினார். இந்நிகழ்வைத் தொடர்ந்து இவர்கள் முஃதஸிலாக்கள் (பிரிந்து சென்றவர்கள்) என வரலாற்றில்
அடையாளப்படுத்தப் படுகின்றனர்.
இமாமை விட்டுப் பிரிந்த வாஸில், பகுத்தறிவு ரீதியாக சிந்திக்கத் தொடங்கி தனது கருத்துக்கு சார்பாக மாணவர்களைத் திரட்டிக் கொண்டார். அவர்களது செயற்பாட்டால் இவ்வியக்கம் மேலும் வளர்ச்சி பெற்றது.
அல்குர்ஆன் படைக்கப்பட்டது என்பது இவர்களது பிரதான கொள்கைகளில் ஒன்றாகும். அல்லாஹ்வின் தாத், ஸிபாத் பற்றிய விடயத்திலும் இவர்கள் முரண்பட்ட சிந்தனையைக் கொண்டிருந்தனர். மனிதன் பூரண செயற் சுதந்திரம் மிக்கவன்
எனப் பகுத்தறிவு ரீதியாக விளக்கினர். மறுமையில் அல்லாஹ்வைக் காண முடியாது எனவும் பெரும் பாவம் செய்தவர்கள் நிராகரிப்புக்கும் விசுவாசத்துக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றனர் என்றும் குறிப்பிடுகின்றனர்.
முஃதஸிலாக்களின் அகீதா:
தொடக்கத்தில் பெரும் பாவம் செய்தவனின் விடயத்தில் முரண்பட்ட முஃதஸிலாக்கள் பின்னர் இன்னும் பல விடயங்களிலும் முரண்பட்டனர். அதனால் அவர்களிடம் பல நம்பிக்கைகள் உருவாகின. அவற்றுள் ஐந்து அடிப்படைகள் மிக முக்கியமானவை.
அவற்றைப் பொதுவாக அனைத்து முஃதஸிலாக்களும் ஏற்றுக்கொள்கின்றனர். அவை வருமாறு.
தவ்ஹீத்: இவர்களிடத்தில் தவ்ஹீத் என கருதுவது அல்லாஹ்வின் தாத்தும் ஸிபத்தும் ஒன்றே என்பதாகும். இவை இரண்டையும் பிரித்துத் தனியாக நோக்கினால் இறைவனின் ஒருமைத் தன்மை நீங்கி விடும் என்கின்றனர். இவர்கள் அல்லாஹ்வை
எதிர்மறையிலேயே வர்ணிப்பார்கள் உதாரணம். அவன் நீளமானவனுமலல. அகலமானவனுமல்ல. நிறமுடையவனுமல்ல. சுவையுடையவனுமல்ல.
மணமுடையவனுமல்ல. வெப்பமானவனுமல்ல. குளிரானவனுமல்ல....
நீதி: இதன் மூலம் இவர்கள் நாடுவது. மனிதர்களது செயற்பாடுகள் அனைத்தும் அவர்களாகவே செய்து கொள்வதுதான். அவர்களது எந்தச் செயற்பாட்டிலும்
அல்லாஹ்வின் நாட்டத்திற்கு எப்பங்கும் கிடையாது. அது நன்மையாயினும் சரி தீமையாயினும் சரியே. ஒருவனது தீயசெயற்பாட்டுக்கு அல்லாஹ்வின் நாட்டம்
காரணமாக இருப்பின், அது நீதிக்கு முரணானது என்பது இவர்களது வாதமாகும்.
இரு நிலைகளுக்கு இடைப்பட்ட நிலை: உலகில் பெரும் பாவம் செய்பவன் எவ்விதத்திலும் முஃமின் என்று அழைக்கப்பட தகுதி அற்றவன். அவன் முஃமினுக்கும் காபிருக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பான். அவன் தவ்பா செய்தால் ஈமானின் பக்கம் மீள்வான். தவ்பாச் செய்யாத நிலையில் மரணித்தால் நரகில் நிரந்தரமாகத் தங்குவான்.
வாக்குறுதியும் தண்டனையும்: இதன் மூலம் இவர்கள் நம்புவது. முஃமின் தவ்பா செய்தவனாகவும் கட்டுப்பட்டவனாகவும் உலகை விட்டுச் சென்றால்
பிரதிபலன்களுக்கும் நன்மைகளுக்கும் உரித்துடையவனாவான். தான் செய்த பெரும்
பாவத்துக்காக தவ்பா செய்யாத நிலையில் மரணித்தால் அவன் நரகில் நிரந்தரமாகாகத் தங்குவான். எனினும் அவனுக்குரிய தண்டனை காபிருக்குரிய தண்டனையை விடக் குறைவானதாக இருக்கும். மறுமையில் பாவிகளுக்குத் தண்டனை
வழங்கப்படாமல் மன்னிப்பு வழங்கப்படும் என்ற கூற்றானது அல்லாஹ்வுடைய தண்டனையை அர்த்தமற்றதாக்கி விடுகிறது. இந்தக் கொள்கையின் காரணமாகவே முஃதஸிலாக்கள் மறுமையில் ஷபாஅத் மூலமாக பாவிகள் பயன் பெறுவதை
நிராகரிக்கின்றனர்.
நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல்: நாவினாலோ கையினாலோ ஆயுதத்தினாலோ சக்தி பெறும் போது அதற்கேற்ப நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது அனைவர் மீதும் கடமையானதாகும்.
இவை அல்லாத இன்னும் பல நம்பிக்கைகளும் முஃதஸிலாக்களிடம் காணப்படுகின்றன. அவற்றுள் சில அவர்களிடம் கருத்துவேறுபாடானவை. இன்னும்
சில கருத்தொற்றுமையானவை. அவை வருமாறு
1. மறுமையில் எவருக்கும் அல்லாஹ்வைக் காண முடியாது
2. அல்குர்ஆன் படைக்கப்பட்டது
3. அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்பதை மறுத்தல்
4. பெரும் பாவம் செய்த எவரும் நபியவர்களின் ஷபாஅத்தை பெறமுடியாது.
5. அவ்லியாக்களின் கராமத்தை மறுத்தல்
முஃதஸிலாக்களின் உட்பிரிவுகள்:
பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட முஃதஸிலாக்கள் தமக்குள்ளும் கருத்து வேறுபாடுபட்டு ஈமான் சார்ந்த விடயங்களில் பல உட்பிரிவுகளாகப் பிரிந்தனர். அவற்றுள் சில
1. வாஸிலிய்யா
2. ஹுதைலிய்யா
3. நிலாமிய்யா
4. ஹாதிபிய்யா
5. பஷரிய்யா
6. முர்தாரிய்யா
7. ஸமாமிய்யா
8. ஹிஷாமிய்யா
இது மட்டுமல்லாது முஸ்லிம் உம்மத்தில் ஜஹமிய்யா, கதரிய்யா, ஜபரிய்யா முஅத்திலா போன்ற பிரிவுகள் தோன்றுவதற்கும் முஃதஸிலாக்கள் உருவாக்கிய
பகுத்தறிவுவாத சிந்தனைப் போக்கே காரணமாக அமைந்தது. ஈமான் சார்ந்த விடயங்களில் பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் உண்மையைக் கண்டறிய முடியாது என்பதற்கு மேற்குறிப்பிட்ட பிரிவுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அப்பாஸிய ஆட்சியாளரான மஃமூனின் காலத்தில் முஃதஸிலாக் கொள்கை அரச கொள்கையாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இக்கொள்கையை ஏற்காதோர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டனர். இதனால் இக்கொள்கை அரச ஆதரவோடு வளரத்
தொடங்கியது. பின்வந்த ஆட்சியாளர்கள் இக்கொள்கைக்கு ஆதரவு வழங்காமையினாலும் அறிஞர்களின் தெளிவான இஸ்லாமிய அகீதாப் பிரசாரத்தாலும் அது இல்லாதொழிந்தது. எனினும் அதன் சிந்தனைத் தாக்கம், இன்றும் அஷ்அரிய்யா, மாத்ரூதிய்யா மற்றும் சில
முஸ்லிம் பகுத்தறிவாளர்களிடையே செல்வாக்குச் செலுத்துவதை அவதானிக்க முடிகிறது.