அல்லாமா ஷேக் சாலிக் மின் உதைமீன் அவர்களின் மரண வேளையிலே..
ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் எந்த விடயத்தில் தன்னுடைய நேரம் காலத்தை அதிகம் ஈடுபடுத்துகின்றானோ அந்த விஷயமே அவனுடைய அடி மனதில் ஆழமாக பதிந்திருக்கும் சிலவேளை அவன் சுய நினைவற்ற நிலையில் ஆகும்போதும் அவன் அதிகம் உபயோகித்த வார்த்தைகள் அவனை அறியாமலேயே அவன் வாயிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் இது அறிவியல் உண்மையும் கூட..
இமாம் ஷாலிஹ் பின் உதைமீன் அவர்கள் தனது வாழ்நாளின் பெரும்பாலான பகுதிகளை மார்க்க தீர்ப்பு வழங்குவதிலும் மக்களுக்கு நல்லுபதேசம், உரை நிகழ்த்துவதிலும் மாணவர்களுக்கு பாடங்களை போதிப்பதிலும் செலவு செய்தவர்கள். அவர்கள் தமது வாழ்வின் கடைசி பகுதியிலே நோயுற்றார்கள். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு சிகிட்சை அளிக்க இடமில்லை என மருத்துவர்களும் கூறி விட வீட்டுக்கு அழைத்து வரப்பட்டு தனது வாழ்வின் இறுதித் தருவாயில் இருந்து கொண்டிருந்த நேரத்தில் அடிக்கடி சுயநினைவற்றுப் போவதும் பின்னர் நினைவு திரும்புவதுமாக இருந்து கொண்டிருந்தது. இதே நிலை எம்பெருமானார் நபி (ஸல்) அவர்களுக்கும் ஏற்பட்டதாக ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது . அச்சமயத்தில் அங்கிருந்த அங்கு சமூகமளித்திருந்த நம்பிக்கைக்குரியவர்கள் கூறுகின்றார்கள்... இமாம் அவர்களுக்கு சுய நினைவு அற்றுப்போன நேரங்களில் கூட அவர்கள் மஸ்ஜிதுகளில் பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை போன்று உங்களின் கேள்வி என்ன என்று கேட்பதும் பின்னர் அதற்கு விடை இதுவாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான், நபியவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள், என்று தன்னை அறியாமல் அவர்களின் வாயிலிருந்து இவ்வாறான வார்த்தைகள் வந்து கொண்டிருந்தன.
அடிக்கடி ஷஹாதத் கலிமாவை உரைத்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையிலேயே அவர்களது இன்னுயிர் பிரிந்தது.
சுபஹானல்லாஹ்....
ஒவ்வொரு மனிதனும் எப்படி வாழ்ந்தானோ அதன் வழியிலேயே அவனுடைய இறுதி முடிவும் அமையும் என்பது எவ்வளவு உண்மை!!
இமாம் இபுனுல் ஜவ்ஷி அவர்கள் தனது தல்பீஸு இப்லீஸ் (சைத்தான் வழி கெடுக்கும் வழிமுறைகள்)
எனும் நூலில் இது போன்ற பல சம்பவங்களை குறிப்பிடுகின்றார்கள்.
ஒரு பலசரக்கு வியாபாரி இருந்தார். தனது தொழிலில் நூறு வீத கவனம் செலுத்துபவர். தொழில்தான் அனைத்தும், தொழுகைக்காக அழைக்கப்பட்டாலும் தனக்கு நேரமில்லை என்று கூறி விடுபவர்.. மரண வேளையிலே கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்ட போது இன்ன சரக்கு இன்ன விலை... பருப்பு இன்ன விலை பயறு இன்ன விலை.. என்றே கூறிக் கொண்டிருந்தார். கடைசி வரைக்கும் அவரால் ஷஹாதத் கலிமாவை உச்சரிக்க முடியவில்லை. மற்றொருவர் இஸ்லாமிய அறப்போரில் அதிகம் ஈடுபடுபவர் இறுதித் தருவாயில் "புறப்படுங்கள்.. படை திரட்டுங்கள்.. உக்கிரமாக போராடுங்கள்... என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
எனவே ஒரு முஸ்லிம் தன் மரண வேளையிலே இறுதி நேரத்தில் ஷஹாதத் கலிமாவை சிரமமின்றி உச்சரிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அது அவனது கடந்த கால வாழ்க்கையின் சாராம்சத்தை பிரதிபலிக்கும் தருணம்.
சிலவேளை நாம் கலிமா சொல்லிக் கொடுப்போம். அது அவருக்கு விளங்காது , அவர் சொல்ல நினைப்பார் அவருக்கு நாவு வழங்காது.. அவரது வாழ்வு இறை திருப்திக்கு உட்பட்டதாக இருந்தால் மாத்திரமே அவருக்கு இறுதி வேளையில் கலிமாவை உரைக்கும் பாக்கியத்தை அல்லாஹ் வழங்குவான்.
ஒருவரின் வாழ்வின் செயல்பாடுகள் எவ்வாறு அமைகிறதோ அவ்வாறே அவரது இறுதி முடிவும் அமைகின்றது என்பது நபி மொழியாகும்