மலக்குகளை ஈமான் கொள்வது

கண்ணியமிக்க மலக்குகள் குறித்து நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர்களில் யாருடைய பெயர்கள், பணிகள், பண்புகள் குறித்து ஆதாரமுள்ளதோ அவர்களை குறித்து விரிவாகவும் அறிந்து கொள்ள வேண்டும். 
                                                
இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கையில் ஒன்று தான் மலக்குகளை (வானவர்களை)க் குறித்த நம்பிக்கை. 

 اٰمَنَ الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَيْهِ مِنْ رَّبِّهٖ وَ الْمُؤْمِنُوْنَ‌ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ‌ وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا‌ غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ 

(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள். (அல்குர்ஆன் : 2:285) 
                                                
ஈமானின் அடிப்படையில் ஒன்றான மலாயிக்காவைக் குறித்த நம்பிக்கையை யார் மறுத்து விடுவார்களோ அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். 
                                                
 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْ نَزَّلَ عَلٰى رَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْۤ اَنْزَلَ مِنْ قَبْلُ‌ وَمَنْ يَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًا بَعِيْدًا 

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார். (அல்குர்ஆன் : 4:136) 
                                                
"மலக்குன்" எனும் ஒருமைச் சொல்லின் பன்மைச் சொல் மலாயிகா என்பதாகும். அலக, மஅலக என்ற சொல்லில் இருந்து தான் இச்சொல் பெறப்பட்டது. இதன் பொருள் தூதுச் செய்தி என்பதாகும். மலாயிகா என்றால் அல்லாஹ்வின் செய்தியை எடுத்துச் சொல்பவர்கள் என்பதாகும். அல்லாஹ்வின் தூய்மையான பரிசுத்தமான அறிவுள்ள படைப்பாக மலக்குகள் திகழ்கிறார்கள். 
                                                

மலாயிக்காவை அல்லாஹ் ஒளியிலிருந்து படைத்தான்:
                                                
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். "ஜின்"கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப் பட்டார். அறிவிப்பாளர்:  ஆயிஷா (ரலி) 
 நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : 5722. 
                                                
மலாயிக்காவை எவ்வாறு ஈமான் கொள்வது: 

மலாயிக்காவை மூன்று விதமாக ஈமான் கொள்ள வேண்டும் என இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

 1. அவர்கள் இருப்பதை உண்மைப்படுத்த வேண்டும். 

 2. அவர்களுக்குரிய அந்தஸ்தை வழங்க வேண்டும், அவர்களும் மனிதர்கள், ஜின்கள் மற்றும் ஏனைய படைப்புகளைப் போன்று அல்லாஹ்வின் அடியார்கள் என்றும், அவனது படைப்புகள் என்றும் உறுதி செய்ய வேண்டும். அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய ஆற்றல்களுக்கு மேல் அவர்களுக்கு எவ்வித ஆற்றலுமில்லை அவர்களும் மரணிப்பார்கள். 

 3. அவர்களை அல்லாஹ் மனிதர்களின் தான் நாடியவர்களிடம் தூதராக அனுப்பி வைப்பான் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். இன்னும் அவர்களில் சொர்க்கத்தையும் நரகத்தையும் பாதுகாப்பவர்களும், அல்லாஹ்வின் அர்ஷை சுமப்பவர்களும், அடியார்களின் செயல்களை கண்கானிப்பவர்களும் உள்ளனர். நூல்: ஆல்ஹபாயிக் ஃபி அஹ்பாரில் மலாயிக் பக்கம் -10 
 ஆலமுல் மலாஇகதில் அபரார் பக்கம் -8 
                                                
மலக்குகளின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். 
                                                
 وَمَا يَعْلَمُ جُنُوْدَ رَبِّكَ اِلَّا هُوَ ‌ وَمَا هِىَ اِلَّا ذِكْرٰى لِلْبَشَرِ 
 
அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள்; (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் : 74:31) 
                                                
(ஏழாம் வானத்தில் வைத்து) எனக்கு பைதுல் மஃமூர் எனும் இறை இல்லம் எடுத்துக் காட்டப்பட்டது. அதைப் பற்றி ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் கேட்டேன். இதுதான் பைதுல் மஃமூராகும். ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குகள் இங்கே நுழைந்து தொழுகிறார்கள். அதிலிருந்து வெளியேறியவர்கள் மறுபடியும் அதனுள் நுழைவதில்லை என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல்: ஸஹீஹுல் புஹாரி 3207. ஸஹீஹ் முஸ்லிம் 259, 264. 
                                                
ஒரு நாளைக்கு பைதுல் மஃமூருக்கு நுழைகின்ற 70,000 மலக்குகள் மறுபடியும் அம் மஸ்ஜிதுக்குள் நுழைவதில்லை என்றால் இதுவரை நுழைந்த மலக்குகளின் எண்ணிக்கையும், உலகம் அழியும் வரை நுழையப் போகின்ற மலக்குகளின் எண்ணிக்கையும் நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். இது தவிர ஏனைய மலக்குகளின் எண்ணிக்கையும் எவரும் அறிய மாட்டார்கள். 
                                               

 மலாயிக்காவை காண முடியுமா? 

இறைத் தூதர்கள் மலக்குகளை பார்த்தார்கள் என்று குர்ஆன் கூறுகிறது. 
                                                
 مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَاٰى  
 اَفَتُمٰرُوْنَهٗ عَلٰى مَا يَرٰى 
 وَلَقَدْ رَاٰهُ نَزْلَةً اُخْرٰىۙ 

 (நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை. ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா? அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரீல்) இறங்கக் கண்டார். (அல்குர்ஆன் : 53:11-13) 
                                                
 وَلَقَدْ رَاٰهُ بِالْاُفُقِ الْمُبِيْنِ‌ 
 وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِيْنٍ‌ 

அவர் திட்டமாக அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார். மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர். (அல்குர்ஆன் : 81:23,24) 
                                                
இறைச் செய்தியை கொண்டு வரக்கூடிய ஜிப்ரீல் (அலை) அவர்களின் இயற்கை தோற்றத்தை கண்டது பற்றி நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு விவரித்தார்கள். 
                                                
நான் ஜிப்ரீலை,  அவர் படைக்கப்பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து(பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.அப்போது  அவருடைய பிராமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது”  என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) 
 ஸஹீஹ் முஸ்லிம் : 287. 
                                                
 
மனித உருவில் காட்சி தருவார்கள்: 

(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (என் தோழர்) தஹ்யா அவர்களுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்:  ஜாபிர் (ரலி) 
 ஸஹீஹ் முஸ்லிம் : 271. 
                                                
ஜிப்ரீல்(அலை) அவர்களை நபி(ஸல்) அவர்கள் கண்டது போல் மாலிக்(அலை) மற்றும் மீக்காயீல்(அலை) அவர்களையும் கண்டுள்ளார்கள். 
                                                
நான் இன்றிரவு இரண்டு பேர்களைக் (கனவில்) கண்டேன். (அவ்விருவரையும் அறிமுகப்படுத்தும் விதமாக ஜிப்ரீல் என்னிடம் கூறும் போது) 'அதோ, நெருப்பை மூட்டிக் கொண்டிருப்பவர் நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக் ஆவார். நான் ஜிப்ரீல் இவர் மீக்காயீல் என்றார்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஸமுரா(ரலி) 
 நூல்: ஸஹீஹுல் புஹாரி - 1386. 
                                                
ஜிப்ரீல்(அலை) மனித தோற்றத்தில் ஸஹாபாக்கள் முன்னிலையில் தோன்றினார்கள் என்பதை நபி(ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தினார்கள். 
                                                
 உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 

ஒரு நாள் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது மிக வெண்மையான ஆடை அணிந்த கடும் கறுத்த  நிறமுடைய முடி நிறைந்த ஒரு மனிதர் வந்தார். அவரிடத்தில் பயணத்தின் அடையாளம் தென்படவில்லை. எங்களில் எவரும் அவரை அறிந்ததுமில்லை. அவர் வந்து நபி(ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தனது முழங்கால்களை நபி(ஸல்) அவர்களுடைய முழங்கால்களுடன் இணைத்து தனது இரு உள்ளங்கைகளை தனது இரு தொடைகளின் மேல் வைத்தார். (பிறகு) நபி(ஸல்) அவர்களிடம் இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் மற்றும் மறுமை நாள் பற்றியும் அதன் அடையாளங்கள் பற்றியும் கேட்டார். நபி (ஸல்) அவர்களும் விளக்கப்படுத்தினார்கள். பிறகு அவர் போய் விட்டார். பிறகு நபி(ஸல்) அவர்கள் உமரே! இப்போது வந்து கேள்வி கேட்டவரை அறிவீரா? எனக் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது ரசூலுமே மிக அறிந்தவர்கள் எனக் கூறினேன். "நிச்சயமாக அவர்தான் ஜிப்ரீல். உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு உங்களிடம் வந்தார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (ஹதீஸின் சுருக்கம்). அறிவிப்பாளர்: உமர் இப்னு கத்தாப்(ரலி) 
 நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : 1. 
                                                
அல்லாஹ் தேர்ந்தெடுத்த நபிமார்களுக்கு வஹீ(இறை கட்டளை)யை மலக்குகள் மூலமாக அல்லாஹ் இறக்கிவைக்கிறான். அப்பணியில் கூட்டல் குறைவின்றி மலக்குகள் எடுத்துரைப்பார். 
                                                
மனித தோற்றத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் மலக்குகள் இரண்டு இறக்கைகள், மூன்று இறக்கைகள், நான்கு இறக்கைகள் உடையவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளார்கள். ஜிப்ரீல்(அலை) 600 இறக்கைகள் உடையவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளார்கள். 
                                                
 اَ لْحَمْدُ لِلّٰهِ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ جَاعِلِ الْمَلٰٓٮِٕكَةِ رُسُلًا اُولِىْۤ اَجْنِحَةٍ مَّثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ  يَزِيْدُ فِى الْخَـلْقِ مَا يَشَآءُ  اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ 

அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் : 35:1) 
                                                
"நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களை 600 இறக்கைகள் உடையவராக பார்த்துள்ளார்கள்". அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி) 
 நூல்: ஸஹீஹுல் புஹாரி - 3232, ஸஹீஹ் முஸ்லிம் - 280,281,282. 

                                                
மலக்குகளுக்கென நியமிக்கப்பட்ட பணிகள்: 

அல்லாஹ் கூறுகிறான்: 

 وَالنّٰزِعٰتِ غَرْقًا ۙ وَّالنّٰشِطٰتِ نَشْطًا ۙ
 وَّالسّٰبِحٰتِ سَبْحًا فَالسّٰبِقٰتِ سَبْقًا ۙ فَالْمُدَبِّرٰتِ اَمْرًا‌ ۘ 

(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக- 
(நல்லோர் உயிர்களை) இலேசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- 
வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- (அல்குர்ஆன் : 79:1-5) 
                                                
இக்குர்ஆன் வசனங்கள் முக்கிய சில பணிகளை சுட்டிக் காட்டுவது போல் மேலும் சில வசனங்களும், ஹதீஸ்களும் வேறு சில பணிகளுடைய மலக்குகளையும் சுட்டிக் காட்டுகின்றன. 
                                                

உயிர்களை கைப்பற்றும் மலக்குகள்: 
                                      
தீயவர்களின் உயிர்களை கைப்பற்றும் மலக்குகள்: 

 حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُـنَا وَهُمْ لَا يُفَرِّطُوْنَ 

உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நமது தூதர்கள் (மலக்குகள்), அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை. (அல்குர்ஆன் : 6:61) 
                                      
 
நல்லவர்களின் உயிர்களை கைப்பற்றும் மலக்குகள்: 

நல்லவர்களின் உயிரை கைப்பற்றும் போது மிக இலகுவான முறையிலும், நற்செய்தி கூறியும் மலக்குகள் உயிர்களை கைப்பற்றுகிறார்கள். 
                                      
 اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ نَحْنُ اَوْلِيٰٓـؤُکُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ  وَلَـكُمْ فِيْهَا مَا تَشْتَهِىْۤ اَنْفُسُكُمْ وَلَـكُمْ فِيْهَا مَا تَدَّعُوْنَ نُزُلًا مِّنْ غَفُوْرٍ رَّحِيْمٍ 

 நிச்சயமாக எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள். 

 “நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். 

 “மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்” (இது என்று கூறுவார்கள்). (அல்குர்ஆன் : 41:30-32) 
                                      
தீயவர்களின் உயிர்களை கைப்பற்றும் போது மலக்குகள் கடுமையாக நடந்து கொள்கிறார்கள், நிராகரிப்பவர்களாக மரணிப்பவர்களை சபிக்கின்றார்கள். 
                                      
 فَكَيْفَ اِذَا تَوَفَّتْهُمُ الْمَلٰٓٮِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْ ذٰلِكَ بِاَنَّهُمُ اتَّبَعُوْا مَاۤ اَسْخَطَ اللّٰهَ وَكَرِهُوْا رِضْوَانَهٗ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ 

ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும், 

 இது ஏனெனில்: நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தமைதான்; ஆகவே அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கி விட்டான். (அல்குர்ஆன் : 47:27,28) 
                             

சபிக்கும் மலக்குகள்:

 اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلْنَا مِنَ الْبَيِّنٰتِ وَالْهُدٰى مِنْ بَعْدِ مَا بَيَّنّٰهُ لِلنَّاسِ فِى الْكِتٰبِۙ اُولٰٓٮِٕكَ يَلْعَنُهُمُ اللّٰهُ وَ يَلْعَنُهُمُ اللّٰعِنُوْنَۙ اِلَّا الَّذِيْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَبَيَّـنُوْا فَاُولٰٓٮِٕكَ اَ تُوْبُ عَلَيْهِمْ وَاَنَا التَّوَّابُ الرَّحِيْمُ اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ اُولٰٓٮِٕكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللّٰهِ وَالْمَلٰٓٮِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَۙ خٰلِدِيْنَ فِيْهَا  لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُوْنَ 

நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். 

எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன். 

யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும். 

அவர்கள் அ(ச் சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள்; அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படமாட்டாது; மேலும், (மன்னிப்புக் கோர) அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது. (அல்குர்ஆன் : 2:159-162) 
                                                
அவ்வாறே கணவன் தன் மனைவியை தனது தேவைக்காக படுக்கைக்கு அழைக்கும் போது தகுந்த காரணமின்றி மறுக்கின்ற மனைவியையும் மலக்குகள் சபிக்கின்றனர். 
                                                
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) ஸஹீஹுல் புகாரி : 3237. 
 

போர்க்களத்தில் முஃமின்களுக்கு உதவியாக இறங்கும் மலாயிகா:
                                              
இறை நிராகரிப்புக்கு எதிராக ஷைத்தான்கள் படை திரட்டி வந்தபோது முஃமின்களுக்கு உதவியாக நின்று பலப்படுத்தக் கூடியவர்களாகவும், யுத்தம் புரியக் கூடியவர்களாகவும் மலக்குகள் களம் இறங்கினார்கள். பத்ரு களத்தில் இறங்கிய மலக்குகள் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்: 
                                                
 اِذْ تَسْتَغِيْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَـكُمْ اَنِّىْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰۤٮِٕكَةِ مُرْدِفِيْنَ وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰى وَلِتَطْمَٮِٕنَّ بِهٖ قُلُوْبُكُمْ‌ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ 
 (நினைவு கூறுங்கள்:) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்” என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான். 

 உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 8:9,10) 
                                                

 அல்லாஹ்வை துதிக்கின்ற மலாயிகா:
                                                
மலக்குகள் அல்லாஹ்வை துதிக்கின்றவர்களாகவும், அல்லாஹ்வை துதிக்கின்ற அவைக்கு வருகை தருகின்றவர்களாகவும் உள்ளனர். 
                                                
 وَلَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ وَمَنْ عِنْدَهٗ لَا يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَلَا يَسْتَحْسِرُوْنَ‌ يُسَبِّحُوْنَ الَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُوْنَ 

 வானங்களிலும் பூமியிலும் உள்ளோரெல்லாம் அவனுக்கே உரியோராவார்கள்; மேலும் அவனிடம் இருப்பவர்கள் அவனுக்கு வணங்குவதை விட்டுப் பெருமையடிக்க மாட்டார்கள்; சோர்வடையவுமாட்டார்கள். 

 இடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.  (அல்குர்ஆன் : 21:19,20) 
                                                
 فَاِنِ اسْتَكْبَرُوْا فَالَّذِيْنَ عِنْدَ رَبِّكَ يُسَبِّحُوْنَ لَهٗ بِالَّيْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا يَسْــٴَــمُوْنَ 

 ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள் (வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹு செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள்; அவர்கள் (அதில்) சோர்வடைவதுமில்லை. (அல்குர்ஆன் : 41:38) 
                                                
அல்லாஹ்வைத் துதிக்கின்ற முஃமின்களை மலக்குகள் பூமியில் தேடிய வண்ணம் அலைவதுடன் அந்த முஃமின்களை சூழ்ந்தவாறு அமர்கின்றனர். இந்த மக்களின் நிலையைப் பற்றி அல்லாஹ்விடம் சென்று புகழவும் செய்கின்றனர். 
                                                
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ்விடம் கூடுதல் வானவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் பூமியில் சுற்றிவருகின்றனர்.   அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றும் சபைகளைத் தேடி வருகின்றனர்.   அல்லாஹ்வைப் போற்றும் சபை ஒன்றை அவர்கள் கண்டால், அவர்களுடன் அவ்வானவர்களும் அமர்ந்துகொள்கின்றனர்.   அவர்களில் சிலர் வேறுசிலரைத் தம் இறக்கைகளால் சூழ்ந்து, தமக்கும் முதல் வானத்துக்கும் இடையே உள்ள பகுதியை நிரப்புகின்றனர்.   (இறைவனை நினைவுகூரும்) அம்மக்கள் கலைந்து சென்றதும் அ(ந்த வான)வர்கள் வானுலகிற்கு ஏறிச் செல்கின்றனர். 
 அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், அவர்களிடம் -அவர்களை நன்கறிந்திருந்தும்- "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்கிறான்.   அதற்கு வானவர்கள், "பூமியிலுள்ள உன் அடியார்கள் சிலரிடமிருந்து நாங்கள் வருகிறோம்.   அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறித் துதிக்கின்றனர்; உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னை ஏகன் என்று கூறிக்கொண்டும், உன்னைப் புகழ்ந்து போற்றிக் கொண்டும், உன்னிடத்தில் வேண்டிக்கொண்டும் இருக்கின்றனர்" என்று கூறுகின்றனர்.   அதற்கு இறைவன், "என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகின்றனர்?" என்று (தனக்குத் தெரியாதது போலக்)கேட்கிறான்.   வானவர்கள்,   "அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தை வேண்டுகின்றனர்" 
 என்பார்கள்.   அதற்கு இறைவன், "அவர்கள் என் சொர்க்கத்தைப் பார்த்ததுண்டா?" என்று கேட்பான். 
 அதற்கு வானவர்கள், "இல்லை, இறைவா!" என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், "அவ்வாறாயின், என் சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?" என்று கூறுவான். 
 மேலும், "உன்னிடம் அவர்கள் பாதுகாப்புக் கோருகின்றனர்" என்றும் வானவர்கள் கூறுகின்றனர். அதற்கு இறைவன், "என்னிடம் அவர்கள் எதிலிருந்து (காக்குமாறு) பாதுகாப்புக் கோருகின்றனர்?" என்று கேட்பான்.   அதற்கு வானவர்கள், "உன் நரகத்திலிருந்து, இறைவா!" என்று பதிலளிப்பார்கள். 
 இறைவன், "அவர்கள் எனது நரகத்தைப் பார்த்திருக்கிறார்களா?" என்று கேட்பான்.   வானவர்கள், "இல்லை" என்பார்கள். அதற்கு இறைவன், "அவ்வாறாயின் என் நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?" என்று கூறுவான். 
 மேலும், "அவர்கள் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறார்கள்" என்றும் வானவர்கள் கூறுவார்கள்.   அதற்கு இறைவன், "அவர்களுடைய பாவங்களை நான் மன்னித்துவிட்டேன்.   அவர்கள் வேண்டியதையும் அவர்களுக்கு நான் வழங்கிவிட்டேன். அவர்கள் எதிலிருந்து பாதுகாப்புக் கோரினார்களோ அதிலிருந்து அவர்களை நான் காப்பாற்றிவிட்டேன்" என்று கூறுவான். 
 அப்போது வானவர்கள், "இறைவா! (அந்த) சபையோரிடையே அதிகப் பாவங்கள் புரியும் இன்ன மனிதன் இருந்தான். அவன் அவ்வழியே கடந்து சென்றபோது அவர்களுடன் அமர்ந்துகொண்டான்" என்று கூறுகின்றனர். 
 அதற்கு இறைவன், "அவனையும் நான் மன்னித்துவிட்டேன்.   அவர்கள் ஒரு கூட்டத்தார் ஆவர்.   அவர்களுடன் அமர்ந்திருந்தவர் அவர்களால் (பாக்கியம் பெறுவாரே தவிர) பாக்கியமற்றவராக ஆகமாட்டார்" என்று கூறுவான். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) ஸஹீஹ் முஸ்லிம் : 5218. 
                         

 பாவமன்னிப்புக் கோருகின்ற மலாயிகா:
                                                
மலக்குகள் அல்லாஹ்வை துதிப்பது போல் அல்லாஹ்வை ஈமான் கொண்டு அல்லாஹ் காட்டிய வழியை பின்பற்றுபவர்களுக்காக மன்னிப்பும் கோருகிறார்கள். 
                                                
 اَلَّذِيْنَ يَحْمِلُوْنَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهٗ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُوْنَ بِهٖ وَيَسْتَغْفِرُوْنَ لِلَّذِيْنَ اٰمَنُوْا‌  رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍ رَّحْمَةً وَّعِلْمًا فَاغْفِرْ لِلَّذِيْنَ تَابُوْا وَاتَّبَعُوْا سَبِيْلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيْمِ 

அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்: “எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!  (அல்குர்ஆன் : 40:7) 
                                                

பிரார்த்தனை செய்யும் மலாயிகா:
                                                
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து நற்காரியம் புரியும் முஃமினான நல்ல மக்களுக்கு மலக்குகள் பிரார்த்தனையும் செய்கின்றார்கள். 
                                                
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  

ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், 'அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக!' என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!' என்று கூறுவார். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) ஸஹீஹ் புகாரி : 1442. 
                                                
 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

 'உங்களில் ஒருவர் தாம் தொழுமிடத்தில் உளூவுடன் இருக்கும் போதெல்லாம் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள். தங்கள் பிரார்த்தனையில், 'இறைவா! இவரை மன்னித்து விடு! இவருக்கு நீ கருணை புரி!' என்றும் கூறுவார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) ஸஹீஹ் புகாரி : 659. 
                              

கருவில் விதியை எழுதும் மலாயிகா:
                                                
ஒவ்வொரு மனிதனும் உலகத்தில் பிறக்கும் முன்பே அவனது விதி குறித்து எழுதப்படுகிறது. கருவறையில் குழந்தையாக உருவாகின்ற சந்தர்ப்பத்தில் மலக்குகளை அல்லாஹ் அனுப்பி அம்மனிதனின் முடிவுகள் சம்பந்தமாக எழுதச் செய்கிறான். 
                                                
 உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: 

 உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை -  போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது' என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் செர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஸஹீஹ் புகாரி : 3208. 
                     
                           
மனிதர்களை கண்காணிக்கின்ற மலாயிகா:
                                                
அல்லாஹ்வினால் நியமிக்கப்பட்ட சில மலக்குகள் மனிதர்களை தூக்கத்திலும், விழிப்பிலும் பாதுகாக்கின்றவர்களாகவும், கண்காணிக்கின்றவர்களாகவும் உள்ளார்கள். 
                                                
 لَهٗ مُعَقِّبٰتٌ مِّنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖ يَحْفَظُوْنَهٗ مِنْ اَمْرِ اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ 

 மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; (அல்குர்ஆன் : 13:11) 
                                                
மலக்குகளின் இந்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு ஒருநாளைக்கு இரு நேரங்களில் மேற்கொள்ளப்படக் கூடியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. 
                                                
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக வருகிறார்கள். ஃபஜ்ருடைய தொழுகையிலும் அஸருடைய தொழுகையிலும் ஒன்று சேருகிறார்கள். பிறகு, அல்லாஹ் - அவனோ மிகவும் அறிந்தவன் - அவர்களிடம், '(பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில்விட்டு வந்தீர்கள்?' என்று கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், 'அவர்களை உன்னைத் தொழுகிற நிலையில்விட்டு வந்தோம். அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்' என்று பதிலளிப்பார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) ஸஹீஹ் புகாரி : 3223. 
                                                
அது போல் மனிதர்களின் பட்டோலையை எழுதும் மலக்குகளும் உள்ளார்கள். 
                                                
 اِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيٰنِ عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ قَعِيْدٌ مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ 

(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது- 

கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை. (அல்குர்ஆன் : 50:17,18) 

ஜும்ஆவுக்கு வருகை தருபவர்களை பதிவு செய்யும் மலாயிகா:
                                                
ஜும்ஆவுடைய நாள் மிக முக்கியமான தினமாகும். அந்நாளில் முஸ்லிம்கள் கண்டிப்பாக பள்ளிவாசலுக்கு வருகை தர வேண்டும். அங்கே நடைபெறும் குத்பாவிலும் பங்கேற்க வேண்டும். அந்த நாளில் பள்ளிக்கு வருபவர்களுக்கு விஷேடமான நன்மைகளும் வழங்கப்படுகின்றன. அந்த ஏற்பாட்டை அல்லாஹ் மலக்குகள் மூலமாக செய்கிறான். மலக்குகள் ஜும்ஆ நடைபெறும் பள்ளிவாசலுக்கு வந்து வருகை தருபவர்களின் நன்மைகளை பதிவு செய்கிறார்கள். 
                                                
 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

 ஜும்ஆ நாள் (வெள்ளிக்கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வசாலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம், உரை மேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்துவிட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்துவிட்டு (அவரின் உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) ஸஹீஹ் புகாரி : 3211. 
                                                

சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் காவலாளிகளாக இருக்கும் மலாயிகா:
                                                
சுவர்க்கத்திற்கும், நரகத்திற்கும் பாதுகாவலர்களாக அல்லாஹ் மலக்குகளை நியமித்துள்ளான். 
                                                
 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, இழுத்து வருவார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஸஹீஹ் முஸ்லிம் : 5464. 
                                                
இந்த பயங்கரமான நரகத்திற்குள் குற்றமிழைத்தவர்கள் நுழையும் போது நரகத்திற்கு பொறுப்பான மலக்குகள் குற்றவாளிகளுடன் பேசுவார்கள். 
                                                
 وَسِيْقَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى جَهَنَّمَ زُمَرًا‌  حَتّٰٓى اِذَا جَآءُوْهَا فُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَـتُهَاۤ اَلَمْ يَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَتْلُوْنَ عَلَيْكُمْ اٰيٰتِ رَبِّكُمْ وَيُنْذِرُوْنَـكُمْ لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا‌  قَالُوْا بَلٰى وَلٰـكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكٰفِرِيْنَ قِيْلَ ادْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا‌ فَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِيْنَ 

 (அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: “உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?” என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) “ஆம் (வந்தார்கள்)” என்று கூறுவார்கள்; எனினும் காஃபிர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது. 

 “நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்” என்று (அவர்களுக்குக்) கூறப்படும்; பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் : 39:71,72) 
                                                
 இந்த நரகத்தின் பொறுப்பாளியாக மாலிக்(அலை) எனும் மலக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 
                                                
 நான் இன்றிரவு இரண்டு பேர்களைக் (கனவில்) கண்டேன். அவர்கள் என்னிடம் வந்தனர். (அந்த இருவர் சார்பாக அவர்களில் ஒருவரான ஜிப்ரீல் என்னிடம் பேசும் போது:) அதோ, அங்கே நெருப்பை மூட்டிக் கொண்டிருப்பவர் நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக் ஆவார். நான் ஜிப்ரீல் (என்னுடனிருக்கும்) இவர் மீக்காயீல் ஆவார் என்று கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஸமுரா(ரலி) 
 நூல்: ஸஹீஹுல் புஹாரி 1386. 
                                                
நரகவாசிகள் தண்டனையை பொறுக்க முடியாமல் மாலிக் (அலை) அவர்களை அழைத்துக் கதறுவார்கள். 
                                                
 وَنَادَوْا يٰمٰلِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ‌ قَالَ اِنَّكُمْ مّٰكِثُوْنَ 

 மேலும், அவர்கள் (நரகத்தில்) “யா மாலிக்” உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!” என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் “நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே” என்று கூறுவார். (அல்குர்ஆன் : 43:77) 
                                                
நல்லவர்கள் சுவர்க்கத்திற்குள் நுழையும் போது அதன் காவலாளிகள் சுவனவாசிகளுக்கு நற்செய்தி கூறுவார்கள். 
                                                
 وَسِيْقَ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ اِلَى الْجَـنَّةِ زُمَرًا‌ حَتّٰٓى اِذَا جَآءُوْهَا وَفُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلٰمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خٰلِدِيْنَ وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ صَدَقَنَا وَعْدَهٗ وَاَوْرَثَنَا الْاَرْضَ نَتَبَوَّاُ مِنَ الْجَـنَّةِ حَيْثُ نَشَآءُ ‌ فَنِعْمَ اَجْرُ الْعٰمِلِيْنَ 

 எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்; எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்). 

 அதற்கு (சுவர்க்கவாசிகள்): “அல்ஹம்து லில்லாஹ்! அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்து, சுவர்க்கத்தில் நாம் விரும்பும் இடமெல்லாம் சென்றிருக்க (அப்) பூமியை எங்களுக்கு உரிமையாக்கி வைத்தான்” என்று கூறுவார்கள். எனவே நன்மை செய்தோரின் கூலி (இவ்வாறு) நன்மையாகவே இருக்கிறது. (அல்குர்ஆன் : 39:73,74) 

                              
 மறுமையில் ஷபாஅத் செய்யும் மலாயிகா:
                                                
மறுமையில் நல்லவர்களுக்கு பரிந்துரை செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் நபிமார்களுக்கும், முஃமின்களுக்கும், மலக்குகளுக்கும் வழங்குவான் என்பதை நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். 
                                                
இவ்வாறு இறைத்தூதர்கள், மலக்குகள், இறை நம்பிக்கையாளர்கள் ஆகியோர் (தத்தம் தகுதிக்கேற்ப) பரிந்துரை செய்வார்கள். நூல்: ஸஹீஹுல் புஹாரி - 7439. 
                                                
அந்நாளில் அல்லாஹ் நாடிய முஃமின்களுக்கு அல்லாஹ்வின் அனுமதியைப் பெற்று மலக்குகள் மறுமையில் ஷபாஅத் செய்வார்கள். 
                                                
 وَكَمْ مِّنْ مَّلَكٍ فِى السَّمٰوٰتِ لَا تُغْنِىْ شَفَاعَتُهُمْ شَيْــٴًــــا اِلَّا مِنْ بَعْدِ اَنْ يَّاْذَنَ اللّٰهُ لِمَنْ يَّشَآءُ وَيَرْضٰى 

அன்றியும் வானங்களில் எத்தனை மலக்குகள் இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ் விரும்பி, எவரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்தப் பயனுமளிக்காது. (அல்குர்ஆன் : 53:26) 

                                                
 மலாயிக்காவை ஈமான் கொள்வதன் பலன்:
                                                
 1. அவர்களைப் படைத்த அல்லாஹ்வின் ஆற்றலில் மகத்துவத்தையும் அவனது அதிகாரத்தையும் அறிந்து கொள்கிறோம். 
                                                
 2. மலாயிக்காவைப் படைத்து அடியார்களை கண்காணிப்பதற்கும் அவர்களுடைய செயல்களை பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் செய்த அல்லாஹ்வுக்கு நாம் நன்றிக் கடன்பட்டவர்கள் என்பதை உணர்த்துகிறது. 
                                                
 3. அவர்கள் அல்லாஹ்வை முழுமையான விதத்தில் வணங்குவதுடன் முஃமின்களுக்காக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பும் கோருகிறார்கள் என்பது மலாயிக்காவின் மீதான நேசத்தை தூண்டுகிறது.


 - உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி. 
                                                
Previous Post Next Post