பித்அத்வாதிகளுடன் விவாதம் செய்வது கூடுமா? கூடாதா?

பித்அத்வாதிகளுடன் விவாதம் செய்வது கூடுமா? கூடாதா? என்பதை பற்றி ஆய்வு செய்தால், விவாதம் செய்வது கூடும் என்பதற்கும், விவாதம்  செய்வது கூடாது என்பதற்கும் ஆகிய இரண்டு விதமான ஆதாரங்களையும் காண முடிகிறது. 
அந்த ஆதாரங்களையும், அவற்றை எவ்வாறு விளங்க வேண்டும் என்பதையும் பற்றி இனி பார்ப்போம்!

விவாதம் செய்வது கூடும் என்பதற்கான ஆதாரங்கள்,

اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ‌ وَجَادِلْهُمْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ‌ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ‌ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ‏

1 - (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.
(அல்குர்ஆன் : 16:125)

2 -  நபி இப்ராஹிம் அலை , நபி மூஸா அலை போன்ற நபிமார்கள் செய்த விவாதங்கள். நபி ஸல் அவர்கள் காஃபிர்களுடன் செய்த அழகிய விவாதங்கள். 

3 - அலி ரலி மற்றும் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கவாரிஜ்களுடன் செய்த விவாதங்கள்.

4 - இமாம் அஹமது இப்னு ஹம்பல்   ஜஹமியாக்களுடன் செய்த விவாதம்.

விவாதம் செய்வது கூடாது என்பதற்கான ஆதாரங்கள்,
اۨلَّذِيْنَ يُجَادِلُوْنَ فِىْۤ اٰيٰتِ اللّٰهِ بِغَيْرِ سُلْطٰنٍ اَتٰٮهُمْ  كَبُـرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ وَعِنْدَ الَّذِيْنَ اٰمَنُوْا  كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ‏

1 -   “(இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்த யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும்; இவ்வாறே, பெருமையடித்து ஆணவம் கொள்ளும் ஒவ்வோர் இருதயத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்.
(அல்குர்ஆன் : 40:35)

2 - عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ أَبْغَضَ الرِّجَالِ إِلَى اللَّهِ الأَلَدُّ الْخَصِمُ "".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்.  (புகாரி : 2457)

3 - அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது இரண்டுபேர் குர்ஆனின் ஒரு வசனம் தொடர்பாகக் கருத்து முரண்பாடு கொண்டு சர்ச்சை செய்து கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முகத்தில் கோபம் தென்பட எங்களிடம் வெளியே வந்து, "உங்களுக்கு முன்னிருந்தோர், வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்துபோயினர்" என்று சொன்னார்கள்.
 (முஸ்லிம் : 5180)

இந்த இரண்டு விதமான ஆதாரங்களையும் எவ்வாறு அணுக வேண்டும்!

ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், விவாதம் செய்வது அடிப்படையில் தடுக்கப்பட்டதல்ல. எனினும் அவற்றில் ஈடுபடுவதினால் கிடைக்கும் தீர்வை வைத்தே அவை அனுமதிக்கப்பட்டதாகவும் அல்லது தடுக்கப்பட்டதாகவும் ஆகிவிடும் என்கிறார்கள். (நூல் தர்உ தஅருஜ் )  

இமாம் இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள், விவாதம் செய்வது இரண்டு வகைப்படும். 
1 . அனுமதிக்கப்பட்டது.
2 . தடுக்கப்பட்டது.
(நூல் அஸ்ஸவாயிக்குல் முர்ஸலா) 

இந்த ஆதாரங்களை வைத்து விவாதிப்பதற்கான அடிப்படைகளில் சிலவற்றை அறிந்து கொள்ளலாம்.

1 - சத்தியத்தை அறிய வேண்டும் என்ற எண்ணத்துடன் வருபவர்களோடு விவாதிப்பது அனுமதிகட்டப்பட்டதாகும். 

(TNTJ& PJ கூட்டத்தினரை பொருத்த வரை தங்களின் வழிகேடான கருத்தை திணிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் விவாதத்திற்கு வருவார்கள்.)

2 -  அசத்தியவாதிகள் சத்தியத்தை நோக்கி திரும்ப வேண்டும். அசத்தியம் இதன் மூலம் தெளிவுப்படுத்த படும் என்றால்  அத்தகைய விவாதம் அனுமதிக்கப்பட்டதாகும். இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கவாரிஜ்களுடன் செய்த விவாதத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேர்வழியை நோக்கி திரும்பினார்கள். 

3 - இக்லாஸ் இல்லாதவர்கள் மற்றும் தீய எண்ணம் உடையவர்களுடன் விவாதிப்பது தடுக்கப்பட்டதாகும். 

TNTJ& PJ கூட்டத்தினர் தங்களின் வழிகேடுகளை பரப்புவதற்கு பொய் மற்றும் பித்தலாட்டத்தை துணிந்து செய்பவர்கள். இதற்கு ஓர் உதாரணம், சமீபத்தில் மன்ஹஜுஸ் ஸலஃப் வழிகேடானது என்ற  தலைப்பில்  அவர்களின் ஆலிம் பேசும் போது மன்ஹஜுஸ் ஸலஃப்பை ஆதரிப்பவர்கள் ஸஹாபாக்களுக்கு வஹீ வருகின்றது என்று நம்ப கூடியவர்கள் என்று கூறிவிட்டு அதற்கு ஆதாரமாக அஷ்ஷெய்க் இக்பால் மதனி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வீடியோவை காட்டுகிறார். அந்த வீடியோவில் ஷெய்க் அவர்கள் கூறுகிறார்கள் ஸஹாபாக்களுக்கு வஹீ வராது, நபிக்கு தான் வஹீ வரும் என்று கூறிவிட்டு வந்த வஹீயில் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது என்று தெளிவாக கூறுகிறார்கள்.  அந்த வீடியோ முடிந்ததும் தவ்ஹீத் ஜமாஅத் ஆலிம் கூறுகிறார், பார்த்தீர்களா ஸஹாபாக்களுக்கு வஹீ வருகின்றது என்று சொல்கிறார்கள் என்று ஓர் அபாண்டத்தை சுமத்துகிறார்.)

4 - எந்த ஒரு விவாதத்தினால், சந்தேகங்களும், தடுமாற்றங்களும் நீங்காதோ அத்தகைய விவாதம் தடுக்கப்பட்டதாகும். 

(TNTJ& PJ கூட்டத்தினர் ஒவ்வொரு விவாதத்திற்கு பிறகும் ஒவ்வொரு ஹதீஸாக மறுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.)

5 - எந்த ஒரு விவாதத்தில் மார்க்க நன்மைகள் ஒன்றும் ஏற்படாதோ. மேலும் நேரம் வீணாகுமோ அத்தகைய விவாதம் தடுக்கப்பட்டதாகும்.  

(TNTJ& PJ கூட்டத்தினர் ஒவ்வொரு விவாதத்திற்கும் மக்களிடம் வசூல் செய்து பொருளாதாரத்தையும், நேரத்தையும் வீணாக்குகின்றனர்.)

6 - விவாதம் செய்வதாக இருந்தால் அழகிய முறையில் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அல்லாஹ் விவாதிப்பதை பற்றி கூறுகிறான். (பார்க்க அல்குர்ஆன்  16:125)

(TNTJ& PJ  கூட்டத்தினர் இது வரை செய்த எந்த ஒரு விவாதத்திலும் இந்த நிபந்தனையை பார்க்க முடியாது. )

இறுதியாக TNTJ & PJ கூட்டத்தினருடன் நேர்வழியில் இருப்பவர்கள்  விவாதம் செய்வது எவ்வித நன்மையும் தராது. மாறாக அது இன்னும் பாதிப்பையும், தீங்கையும் மட்டுமே ஏற்படுத்தும்.

இமாம் ஹசன் அல்பஸரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்,  பித்அத்வாதிகளுடன் அமராதீர்கள்,  அவர்களுடன் தர்க்கம் செய்யாதீர்கள், அவர்களிடமிருந்து எதனையும் செவிமடுக்காதீர்கள். (நூல் அல்லால்காயி)

ஆக்கம் 
ஹசன் அலி உமரி

Hasan Ali Umari
Previous Post Next Post