அல்குர்ஆன் ஓதி முடிந்த பின் என்ன கூற வேண்டும்?

புறக்கணிக்கப்படும் ஸுன்னா :

அல்குர்ஆன் ஓதி முடிந்த பின் 'ஸதகல்லாஹுல் அழீம்' என்று கூறுவது எந்த அடிப்படையுமற்றது என்பதோடு நபிகளாரின் நடைமுறைக்கு முரணானதுமாகும்.

அவ்வாறெனில், அல்குர்ஆன் ஓதி முடிந்த பின் என்ன கூற வேண்டும்?

ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள் : 'நபியவர்கள் எந்த ஒரு சபையில் அமர்ந்தாலும், குர்ஆன் ஓதினாலும், தொழுது முடித்தாலும் ' ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தஹ்பிருக வஅதூபு இலைக' என்ற வாசகங்களை கூறாமல் விடுவதில்லை. ஒரு தடவை நான் அவர்களிடம் ' தாங்கள் சபையில் அமர்ந்தாலும் குர்ஆன் ஓதினாலும் தொழுதாலும் இந்த வாசகங்களை ஓதியே நிறைவுசெய்கிறீர்களே' என்று கேட்ட போது, 'ஆம், நல்ல விடயம் ஒன்றை கூறிவிட்டு இந்த வாசகங்களை ஒருவர் கூறினால் அது அவரது நல்வார்த்தைக்கு முத்திரையாக அமையும்; ஒரு தீய விடயத்தை கூறிய பின் இந்த வாசகங்களை கூறினால் அது அவருக்கு குற்றப்பரிகாரமாக அமையும்' என்று கூறினார்கள் (நஸாஈ).

இமாம் நஸாஈ (ரஹ்) அவர்கள் 'அல்குர்ஆன் ஓதி முடித்த பின் கூறும் திக்ர்' என்று தலைப்பிட்டு மேற்படி ஹதீஸை தனது நூலில் பதிவுசெய்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும். 

இது ஸஹீஹான ஹதீஸ் என ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தனது 'அந்நுகத்' (2/733)திலும், ஷெய்க் அல்பானி (ரஹ்) அவர்கள் தனது 'ஸில்ஸிலா' (7/495) விலும், ஷெய்க் முக்பில் (ரஹ்) அவர்கள் 'அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்' (2/128) இலும் குறிப்பிடுகிறார்கள்.

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
Previous Post Next Post