இஸ்லாம் காட்டித் தந்த திக்ருகளும் அவற்றின் சிறப்புகளும்

இன்றைய பரபரப்பான இயந்திர உலகில் மனிதன் பணமே பிரதானம், பணத்தால் அனைத்தையும் சாதித்து விடலாம்  என்று நினைக்கிற மனிதனால் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிற நிம்மதியை பெறமுடியாமல் தவிக்கிறான். அதை எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கமுடியாமல் தவிக்கிறான். அதை அடைவதற்காக இந்நாட்டில் இருப்பவர்கள் வெளிநாடுகளுக்கும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் நம் நாட்டிற்கும் செல்லக்கூடிய காட்சிகளை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆனால் இவர்கள் எங்கே சென்று நிம்மதியை தேடினாலும் அது அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை.

இஸ்லாம் மட்டுமே நிம்மதிக்கான அனைத்து வழிகளையும் காட்டியிருக்கிறது.

நம்மைப் படைத்த இறைவனை நினைவுகூர்வதில் தான் மனநிம்மதி கிடைக்கிறது என்பதை திருமறைக்குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது

...மேலும் அல்லாஹ்வை நினைவுகூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி  பெறுகின்றன,அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்துகொள்க! 13:28

இறைவனை எவ்வாறு நினைவுகூர்வது என்றும் அவற்றின் நன்மைகளையும் நாம் முதலில் பார்க்க வேண்டும் அவற்றில் ஒன்று நம்மை நினைத்து நமக்கு அவன் அருள்புரிகிறான்

...ஆகவே நீங்கள் என்னை நினைவு கூருங்கள், நானும் உங்களை நினைவு கூருவேன். இன்னும் நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள், எனக்கு மாறு செய்யாதீர்கள்.2:152

அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவதன் சிறப்பு.

தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகிறவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். புகாரி 6407

ஆக இறைவனை நினைவுகூர்பவர் உயிரோடிருப்பவருக்குச் சமம் இறைவனை நினைவு கூறாதவர் பிணத்திற்கு சமம் என்பதை மேற்கூறப்பட்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது

உங்களுடைய அமல்களில் சிறந்ததும் உங்களின் எஜமானனிடத்தில் சிறந்ததும் தங்கம் வெள்ளியை செலவிடுவதை விட சிறந்ததும் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்து எதிரிகளின் கழுத்துக்களை நீங்கள் வெட்டி உங்களின் கழுத்துக்களை எதிரிகள் வெட்டுவதையும் விட மிகச்சிறந்த ஒரு காரியத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?என்று நபியவர்கள் தன் தோழர்களிடத்தில் கேட்க அவர்களோ அறிவியுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்றவுடன் அது தான் அல்லாஹ்வை நினைவுகூர்வதாகும் என்றார்கள் நபியவர்கள். நூல்:அஹ்மத்

அல்லாஹ்வின் தூதரே இஸ்லாத்தின் காரியங்கள் அதிகமாக இருக்கின்றன எனக்கு ஒரு காரியத்தை அறிவியுங்கள் நான் அதைக் கொண்டு பற்றிப்பிடிப்பேன் என்று ஒரு புறநகர்வாசி நபியிடம் கேட்க அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதின் மூலம் உன் நாவை எப்போதும் ஈரமாகவே வைத்துக்கொள் என்று கூறினார்கள். நூல்:திர்மிதீ

அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள் என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்? என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றர் என்று வானவர்கள் கூறுகின்றனர்.

அதற்கு இறைவன், அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா? என்று கேட்பான். அதற்கு வானவர்கள், இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்? என்று கேட்பான். வானவர்கள், உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள் இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள் என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்? என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர் என்பார்கள். அதற்கு இறைவன், அவர்கள் அதைப் பார்த்ததுண்டா? என்று கேட்பான். அதற்கு வானவர்கள், இல்லை; உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை என்பர். அதற்கு இறைவன், அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலைஎப்படியிருக்கும்? என்று கேட்பான். வானவர்கள், சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள் என்று பதிலளிப்பார்கள்.

இறைவன், அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்? என்றுவினவுவான். வானவர்கள், நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்) என்று பதிலளிப்பார். இறைவன், அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா? என்று கேட்பான்.வானவர்கள், இல்லை; உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை என்பர். அதற்கு இறைவன், அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்? என்று கேட்பான் வானவர்கள், நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள் என்பர். அப்போது இறைவன், எனவே(வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன் என்று கூறுவான்.அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், (அந்தக்  குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான் என்பார். அதற்கு இறைவன், அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான் என்று கூறுவான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி 6408

உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:

என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவுகூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான்(வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி 7405.

லாயிலாஹ இல்லால்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று)கூறுவதன் சிறப்பு.

லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு,வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்) என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும்,அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (முறை இதை ஓதினால்,அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.புகாரி 6403

(மேற்கண்ட வாக்கியங்களை) பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார். (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்).

மூஸா(அலை)அவர்கள் அல்லாஹ்விடம் ரப்பே எனக்கு ஒரு விஷயத்தை கற்றுத்தா அதன் மூலம் உன்னை நான் நினைவுகூர்வேன் மேலும் உன்னை அழைப்பேன் என்று கேட்டார் அதற்கு அல்லாஹ்லாயிலாஹ இல்லால்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறு என்றான்.இறiவா இதைத்தானே உன் அடியார்கள் அனைவரும் கூறிக்கொண்டிருக்கின்றனர் எனக்கு வேறொன்றைக் கற்றுத்தா என்று மூஸா நபி கேட்கும்போது அல்லாஹ் ஏழு வானங்களையும் என்னைத் தவிர அவற்றில் உள்ளவர்களையும் ஏழு பூமிகயையும் ஒரு தராசுத் தட்டிலும் லாயிலாஹ இல்லால்லாஹ்வை மற்றொரு தராசுத் தட்டிலும் வைத்தால் லாயிலாஹ இல்லால்லாஹ்வைக்கப்பட்ட தராசுத் தட்டு கணத்தால் தாழ்ந்து போகும் என்று அல்லாஹ் கூறினான் என நபியவர்கள் தெரிவிக்கின்றார்கள்.நூல்:ஷரஹ் ஃபத்ஹுல் பாரி

சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன் என்று) கூறுவதன் சிறப்பு.

சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்)என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.புகாரி 6405

இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும்.தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளின் பிரியத்திற் குரியவையுமாகும். (அவை:)

சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.

(பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன் அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன்.) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்  கூறினார்கள்புகாரி 6406

உங்களில் ஒருவர் ஒரு நாளைக்கு ஆயிரம் நன்மைகளை சம்பாதிக்க முடியுமா? என்று நபியவர்கள் கேட்க அருகிலிருந்த தோழர்களில் ஒருவர் எவ்வாறு எங்களில் ஒருவர் ஆயிரம் நன்மைகளை ஒருநாளைக்கு சம்பாதிக்க முடியும் என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் சுப்ஹானல்லாஹ் என்று நூறு தடைவை சொன்னால் ஆயிரம் நன்மைகள் எழுதப்படும் அல்லது ஆயிரம் தீமைகள் அகற்றப்படும் என்று நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள். நூல்:முஸ்லிம்

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்று கூறுவதன் சிறப்பு

அல்லாஹ்விற்கு பிடித்தமான வார்த்தையை நான் உனக்கு அறிவிக்கட்டுமா? என்று நபியவர்கள் என்னிடம்  கேட்டார்கள் நானும் அறிவியுங்கள் என்று கேட்டேன் அல்லாஹ்விற்கு பிடித்தமான வார்த்தை சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்று கூறினார்கள் என அபூதர்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.நூல்:முஸ்லிம்

சுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹி என்றும் வேறு பல திக்ருகளை கூறுவதன் சிறப்புகளும்

சுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹி என்று யார் கூறுகிறாரோ அவருக்கு சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படுகிறது என்று நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள் நூல்:திர்மிதீ

...அல்ஹம்துலில்லாஹ் என்பது தராசுத் தட்டையே நிரப்பிவிடும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். நூல் :முஸ்லிம்

சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹா இல்லல்லாஹுவல்லாஹு அக்பர் என்று நான் சொல்வது சூரியன் எந்த பூமியின் மீது உதிக்கிறதோ அதை விட சிறந்ததாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள். நூல் :முஸ்லிம்

....ஒவ்வொரு தஸ்பீஹும்(சுப்ஹானல்லாஹ்) தர்மமே. ஒவ்வொரு தஹ்மீதும்(அல்ஹம்துலில்லாஹ்) தர்மமே. ஒவ்வொரு தக்பீரும்(அல்லாஹுஅக்பர்) தர்மமே. ஒவ்வொரு தஹ்லீலும் (லாயி லாஹா இல்லல்லாஹ்) தர்மமே... நூல்:முஸ்லிம்

ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்னரும் சுப்ஹானல்லாஹ் முப்பத்து மூன்று தடவையும் அல்ஹம்துலில்லாஹ் முப்பத்து மூன்று தடவையும அல்லாஹுஅக்பர் முப்பத்து மூன்று தடவையும் நூறாவதாக லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு,வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது.அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்) என்று யார் கூறுகிறாரோ அவருடைய பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.நூல்:முஸ்லிம்

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ் என்று கூறுவதன் சிறப்பு.

(நாங்கள் கைபர் பயணத்தில் இருந்த போது) நபி(ஸல்) அவர்கள் ஒரு குன்றில்அல்லது மேட்டில் ஏறலானார்கள். அதன் மீது ஏறியபோது ஒருவர் உரத்த குரலில்லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று முழங்கினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் கோவேறு கழுதையில் இருந்தபடி, (மெதுவாகக்கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேளாதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை என்று கூறினார்கள். பிறகு, அபூ மூஸா! அல்லதுஅப்துல்லாஹ்! (என்று என்னைக் கூப்பிட்டு) சொர்க்கத்தின் கருவூலமான ஒருவார்த்தையை உமக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? என்று கேட்டார்கள். நான், ஆம்(அறிவித்துத்தாருங்கள்) என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், (அந்த வார்த்தை:)லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ் (அல்லாஹ்வின் உதவியன்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ மனிதனால் இயலாது) என்றார்கள் என அபூ மூஸா அப்தில்லாஹ் இப்னு கைஸ் அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். புகாரி 6409

சாப்பிடும் போது அந்த சாப்பாட்டுக்காகவும் தண்ணீர் அருந்தும் போது அத்தண்ணீருக்காவும் அல்ஹம்துலில்லாஹ் என்று அல்லாஹ்வை புகழ்கிற அடியானை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள். நூல்:முஸ்லிம்

இப்படி பல இறைதியானங்களை இஸ்லாமிய மார்க்கம் நமக்கு கற்றுத்தருகிறது. அவற்றை நன்கு மனனமிட்டு வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி மகிழ்ச்சியான மனநிம்மதியான வாழ்க்கை வாழ்வோமாக.

ஆக்கம்:

ஹாஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி MA
Previous Post Next Post