இஸ்லாத்தின் தூய்மையான வடிவம் ஸஹாபா விளக்கமாகும். இதனை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருத்தல், தெரிந்திருத்தல் வேண்டும்.
ஏனெனில் இந்த மார்க்கத்தை சுமப்பதற்கு, எத்தி வைப்பதற்கு, விளக்கம் கொடுப்பதற்கு அருமை ஸஹாபாக்களைத் தான் அல்லாஹ் ஸுபஹானஹுதாலா தேர்ந்து எடுத்தான். அவர்கள் இந்த மார்க்கத்தை நபியிடம் இருந்து கற்று தூய்மையாக எம்மிடம் ஒப்படைத்தார்கள். இதனை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஹுத் ரலியல்லாஹு அன்ஹு பின்வருமாறு கூறுகிறார்கள்:
அல்லாஹ் சுபஹானஹுதாலா நபிக்கு தோழராக ஒரு சமூகத்தை தேர்ந்து எடுத்தான். எனவே, யார் விளக்கம் என்றோ, தெளிவென்றோ தேடுவாராயின் அவர் மரணித்து சென்ற ஸஹாபா ரில்வானுல்லாஹி அலைஹிம் அஜ்மயீன் அவர்களை பின்பற்றட்டும்.
எனவே, யார் நேர் வழியை அடைய ஆசைப்படுகிறாரோ, ஜென்னத்துல் பிர்தவ்ஸை அடைய ஆசைபடுகிறாரோ, கப்ருடைய வேதனையில் இருந்து விமோசனம் பெற ஆசைபடுகிறாரோ, ஹவ்லுல் கவ்ஸரில் நீர் அருந்த ஆசைபடுகிறாரோ, அவர்கள் இந்த அருமை ஸஹாபாக்களின் அடிச்சுவட்டை பின்பற்றட்டும்.
ஏனெனில், அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருமை ஸஹாபாக்களுக்கு தான் இந்த மார்க்கத்தை கற்றுக் கொடுத்தார்கள். விளக்கம் கொடுத்தார்கள். சுமப்பதற்கு தேர்ந்து எடுத்தார்கள். அவர்களிடம் இந்த மார்க்கத்தின் தூய்மையான , ஸஹிஹான விளக்கம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் கொடுக்கப்பட்டது. இந்த மார்க்கத்தின் தூய்மையான வடிவம் அவர்களிடம் தான் இருந்தது என்பதில் யாரும் சந்தேகம் கொள்ள முடியாது.
எனவே, யார் இந்த அருமை ஸஹாபாக்களின் பாதையை தவிர்ந்து கொள்ளுகிறாரோ, விட்டு விடுகிறாரோ அவர் நபி வழியை விட்டு வழிகேட்டை தான் வாங்கிகொள்கிறார், அடைந்துக்கொள்கிறார்.
இந்த மார்க்கத்தின் கொள்கையை , அகீதாவை, ஈமானை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்துக் கொள்வது, சுமப்பது கட்டாய கடமையாகும்.
எனவே, இந்த ஈமானை, சரியானை அகீதாவை நாம் எப்படி விளங்கிகொள்வது? யாரிடம் இருந்து பெற்றுக்கொள்வது? என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டும்.
இல்லை என்றால், தர்க்கத்தாலும், வாதங்களினாலும், மனித புத்திகளினாலும் விளங்க முற்படுவோமேயானால், அந்த தர்க்கங்களையும், வாதங்களையும், மனித புத்திகளையும் தான் சுமப்போமே தவிர தூய்மையான அகீதாவை அல்ல.
எனவே தான், அல்லாஹ் சுபஹானஹுதாலா இந்த அகிதாவை , ஈமானை பெற்றுக் கொள்வதற்காக ஒரு நிபந்தனையை இட்டுள்ளான்.
எனவே, அல்லாஹ் வைத்த நிபந்தனையைத்தான் ஒவ்வொரு முஸ்லிமும் தனக்கு நிபந்தனையாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனை சூரத்துல் பகராவில் அல்லாஹ் சுபஹானஹுதாலா பின்வருமாறு கூறுகிறான்:
2:137 فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنتُم بِهِ فَقَدِ اهْتَدَوا ۖ وَّإِن تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ
நீங்கள் (அருமை நபியும் ஸஹாபாக்களும்) எவ்வாறு ஈமானை பெற்றுக் கொண்டீர்களோ, சுமந்தீர்களோ அவ்வாறே ஏனையோர் பெற்று சுமந்துக் கொண்டால் நேர்வழியை அடைவீர்கள். இல்லையென்றால் பிளவில் தான் இருப்பீர்கள்.
எனவே, சரியான ஈமானை, சரியான அகீதாவை அந்த அருமை ஸஹாபாக்கள் சுமந்தது போன்று சுமக்க, அதனை அவர்களிடம் இருந்து தான் பெற வேண்டும். எந்தவொரு அல்குர் ஆன் வசனமாகட்டும், ஹதீஸுன் நபவியாகட்டும் அதற்குரிய விளக்கத்தை, அந்த அருமை ஸஹாபாக்களிடம் இருந்து தான் பெற வேண்டும்.
இல்லை என்றால் , மனித புத்திக்கு படவில்லை என்று புறக்கணிப்பான், அல்லது மாற்று கருத்து கொடுப்பான்.
எனவே, அல்குர் ஆனையும் சுன்னாவையும் வந்தது போன்று எடுத்துக் கொள்ள வேண்டும் .
அல்குர்ஆனினதோ, ஸுன்னாவினதோ கருத்தை மாற்றுவது கூட புறக்கணித்ததாக தான் அமையும் என்று ஷேக் ஸாலிஹ் அல் பவுசான் ஹபிதஹுல்லாஹ் அவர்கள் லுமாதுள் இஃதிகாத் என்ற நூலின் விளக்கத்தில் குறிப்பிடுகிறார்கள்.
எந்தவொரு அல்குர் ஆன் வசனமாக இருந்தாலும், ஹதீஸுன் நபவியாக இருந்தாலும் அதனை ஸஹாபாக்கள் விளக்கத்தில் தான் சுமக்க வேண்டும் என்று அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஆ உலமாக்கள் நிபந்தனையாக வைத்துள்ளார்கள்.
ஏனெனில், மனித புத்திகள் விளக்கம் கொடுக்க முற்பட்டால், அது அல்குர் ஆனையும் சுன்னாவையும் மாற்றிவிடும். இதனை உணராத காரணத்தால், TNTJ, CTJ, SLTJ போன்ற தவ்ஹீத் ஜமாஅத் கூட்டங்கள் இந்த ஸஹாபா விளக்கத்திற்கு தடை கல்லாக மாறிவிட்டார்கள்.
இவர்களுடைய கொள்கையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக, இவர்களுடைய முஹ்தஸிலா, அஷாயிரா கொள்கையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக, அருமை ஸஹாபாக்களை விடவும் நாம் சிறப்பாக விளங்க முடியும் என்று கூறி வருகிறார்கள்.
இதற்கு ஆதாரமாக ஒரு நபி மொழியை ஆதாரமாக அவர்களாகவே கருதி அதனை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
அதாவது, " ருப்ப முபல்லகின் அவ்வாமி சாமியின் ",
சில நேரம், கேட்பவரை விட எத்திவைக்கப்படுபவர் சிறப்பாக விளங்க முடியும் என்ற ஹதீஸை கூறி வருகிறார்கள்.
இந்த ஹதீஸை பொறுத்த மற்றில், இந்த ஒரு ஹதீஸுக்காகவே விளக்கமாக ஒரு நூலை ஷேக் அப்துல் முஹ்சின் அல் அப்பாத் ஹபிதஹுல்லாஹ் அவர்கள் எழுதி வைத்துள்ளார்கள்.
இந்த ஹதீஸை, எந்த எந்த ஸஹாபாக்கள் அறிவித்தார்கள், எந்த எந்த தாபியீன்கள் அறிவித்தார்கள், என்ன என்ன வார்த்தைகளில் அறிவித்தார்கள், இந்த ஹதீஸின் விளக்கம் என்ன என்ற சகல விளக்கங்களுடன் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
இந்த சிறப்பான ஹதீஸை, தலைகீழாக விளங்கி, அருமை ஸஹாபாக்களை விடவும் நாம் சிறப்பாக விளங்க முடியும்
என்று இந்த தவ்ஹீத் ஜமாஅத் கூட்டங்கள் விளக்கம் எடுத்து விட்டார்கள். நவூதுபில்லாஹ் அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.
அருமை ஸஹாபாக்களை விடவும் ஒருவன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவை விளங்க முடியுமா ?
ஹதீஸை அறிவிக்கக் கூடிய ஸஹாபிதான், அவர் அறிவிக்க கூடிய ஹதீஸை சிறப்பாக விளங்கியவர் என்று இமாம் இப்னு ஹஜர் ரஹீமஹுல்லாஹ் அவர்கள் பத்ஹுல் பாரியில் இந்த ஹதீசுக்கு விளக்கமாக அறிவிக்கிறார்கள்.
ஏனெனில், அந்த ஹதீஸை நபியின் வாயில் இருந்து, நபிக்கு முன்னிலையில் இருந்து நேரடியாக பெற்றுக் கொண்டவர் தான் அந்த அருமை ஸஹாபி ஆவார். எனவே, அவரை விடவும் இந்த உலகத்தில் யாரும் அந்த ஹதீஸை தெளிவாக விளங்கியவராக இருக்க முடியாது.
மேலும், இந்த ஹதீஸில் “சில நேரம்” என்று உள்ளது. இவர்கள் மொழியாக்கம் செய்யும் போது “சில நேரம்” என்ற வாசகத்தை விட்டு மொழியாக்கமும் செய்கின்றனர்.
“சில நேரம்” என்றால் எப்போதுமே விளங்கலாம் என்று அர்த்தமா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஏனைய ஹதிஸ்களை அறியாத மனிதரும் விளங்க முடியுமா ?
எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் வாழ்ந்த , தர்பியத் பெற்ற ஏனைய அருமை ஸஹாபாக்கள் தான் , நபியை தொட்டும் ஒரு அறிவிப்பு வந்தால் சிறப்பாக விளங்க கூடியவர்களில் முதன்மையானவர்கள் என்பது தெளிவான, மறுக்க முடியாத உண்மையாகும். இந்த தவ்ஹீத் கூட்டங்கள் அருமை ஸஹாபாக்களை யார் என்று அறிந்ததில்லை.
எனவே, அறிந்துக் கொள்ளுங்கள், ஸஹாபா விளக்கத்தை தவிர்ந்துக் கொண்டு, யார் அல் குர் ஆனையும் சுன்னாவையும் விளங்க முற்பட்டால், அவர்கள் தனது மனோ இச்சையை தான் மார்க்கமாக பெற்றுக் கொள்வார்கள்.
ஏனெனில், ஸஹாபா விளக்கத்தில் உள்ள கல்வி தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கற்று கொடுத்த கல்வியாகும். அது தான் நேரான பாதையாகும்.
எனவே, எந்த அல்குர் ஆன் வசனமாக இருந்தாலும் சரி, ஹதீஸுன் நபவியாக இருந்தாலும் சரி, ஸஹாபா விளக்கத்துடன் மட்டுமே சரியாக விளங்க முடியும்.
இல்லை என்றால், அல்குர் ஆன் சுன்னாவின் பெயரில் அதுவல்லாத வேறொன்றைத்தான் பெற்றுக் கொள்வார்கள். ஆகையால் தான், அல்குர் ஆனுக்கு சிறப்பான விளக்கம் எழுதிய , இமாம் இப்னு கஸீர் ரஹீமஹுல்லாஹ் அவர்கள், ஸஹாபாக்களை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
அருமை ஸஹாபாக்களிடம் இருந்த கல்வியை மூன்று வகையாக வர்ணிக்கலாம்.
1 . பரிபூரணமான விளக்கம்
2 . சஹிஹான கல்வி
3 . சாலிஹான அமல்கள் .
அதாவது பரிபூரணமான விளக்கம் என்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நேரடியாக பெற்ற விளக்கம். சஹிஹான கல்வி என்றால், எந்த விதமான கலப்படமும் இல்லாத, இட்டுகட்டப்பட்ட, பொய்யான, களங்கமான என்ற எந்தவிதமான மாசும் இல்லாத தூய்மையாக ஏழு வானத்தின் மேல் இருந்து நேரடியாக இறங்க்கப்பட்ட கல்வி.
எங்களுடைய எந்த கல்வியை எடுத்தாலும், அது அகீதாவாக இருந்தாலும் வரலாறாக இருந்தாலும்,பிஃஹ் ஆக இருந்தாலும் பொய்யும், இட்டுக் கட்டப்பட்ட , களங்கமான செய்திகள் கலக்கப்பட்டு , உலமாக்களால் பிரித்து துப்பரவு செய்யப்பட வேண்டியவைகள்.
ஏனெனில், புத்தி ஜீவிகள் என்று சொல்லக்கூடிய அநியாயக்காரர்களால் திரிக்கப்பட்டு மாசுபடுத்தப்பட்டு, மனோ இச்சைகள் திணிக்கப்பட்டவைகள் அவை.
அதனால்தான் அல்லாஹ் சுபஹானஹுதாலா காலத்துக்கு காலம், சிறப்பான அறிஞர்களை வெளியாக்குகிறான் என்று இமாம் இப்னு தைமியா அவர்கள் மஜ்மூ பதாவாவில் குறிப்பிடுகிறார்கள். எந்த வழிகேடர், எந்த அநியாயக்காரன் இந்த மார்க்கத்தில் எதனை புகுத்தினாலும் அதனை துப்பரவு செய்ய காலத்துக்கு காலம் அல்லாஹ் சிறப்பான உலமாக்களை அனுப்பிக்கொண்டு இருக்கிறான்.
சாலிஹான அமல் என்றால் அவர்களுடைய அத்துணை நடவடிக்கைகளும் சாலிஹானதாக தான் இருந்தது. அதனால் தான் அல்லாஹ் அவர்களை ஏழு வானத்தில் இருந்து ரலியல்லாஹு அன்ஹு வரலு அன்ஹு என்று புகழ்ந்து பாராட்டி விட்டான்.
எனவேதான் இந்த சிறப்பான மூன்று பண்புகளை அந்த அருமை ஸஹாபாக்கள் கொண்டதனால்தான் ,
அவர்களிடம் இருந்து நாம் கல்வியை, விளக்கத்தை பெற்று கொள்ள வேண்டும் என்று
இமாம் இப்னு கஸீர் ரஹீமஹுல்லாஹ் அவர்கள், தப்ஸீர் இப்னு கஸீர் நூலில் குறிப்பிடுகிறார்கள்.
இது போன்று ஏனைய இமாம்களும் தங்களுடைய நூற்களில் அருமை ஸஹாபாக்களை விளக்கத்தில் தான் அல்குர் ஆனையும் சுன்னாவையும் விளங்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்கள்.
இமாம் முஸ்லிம் ரஹீமஹுல்லாஹ் அவர்களும் தங்களுடைய ஸஹிஹ் முஸ்லிம் கிரந்தத்தின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள். எவன் ஸலபுஸ் ஸாலிஹீன்களை திட்டுகிறானோ அவனிடம் கல்வி பெறவேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.
ஏனெனில், ஸலபுஸ் ஸாலிஹின்களில் முதன்மையானவர்கள் அருமை ஸஹாபாக்கள் ஆவார்கள். அவர்களை திட்டுபவனிடம் இருந்து கல்வி பெறுவதை, இமாம் முஸ்லிம் அவர்கள் தடை செய்கிறார்கள்.
இதேபோன்று, ஸஹீஹுல் புகாரிக்கு விளக்கம் எழுதிய இமாம் இப்னு ஹஜர் அவர்கள், பத்ஹுல் பாரியின் கடைசி பாகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.
அதாவது, அவர்கள் விளக்கமாக எழுதியவைகள் அனைத்தும் ஸஹாபா விளக்கத்தில் இருந்து பெறப்பட்டவைகள் என்று.
இதேபோன்று, முஅத்தா மாலிக் நூலை எடுத்துக் கொண்டால், இமாம் மாலிக் அவர்களும் ஸஹாபா விளக்கத்தை அடிப்படையில் தான் கிதாபையே தொகுத்துள்ளார்கள்.
மேலும், அவர்கள் கூறினார்கள், அதாவது இந்த முஸ்லிம் உம்மத் சீர் பெற வேண்டுமெனில், அந்த ஸஹாபா சமூகம் சென்ற பாதையில் சென்றால் தான் சீர் பெற முடியும் என்றும் குறிப்பிடுகின்றார்கள்.
அதே போன்று இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹீமஹுல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:
அதாவது, எங்களிடம் சுன்னா என்பது, அதாவது அஹ்லுஸ் சுன்னாஹ் உலமாக்களிடம் சுன்னாஹ் என்பது, நபியும் ஸஹாபாக்களும் எதில் இருந்தார்களோ அது தான் என்பதாக.
இவ்வாறு, அஹ்லுஸ் சுன்னாஹ் உலமாக்களின் எந்த நூலை எடுத்தாலும் ஸஹாபா விளக்கம் அடிப்படையில் எழுதப்படாத ஒரு நூலை காண முடியாது. அவர்களின் அனைத்து நூல்களும் ஸஹாபா விளக்கத்தை அடிப்படையில் தான் எழுதப்பட்டு உள்ளன.
எனவே, கைசேதமான, துர்பாக்கியம் தான் இந்த தவ்ஹீத் ஜமாஅத் கூட்டங்கள் ஸஹாபா விளக்கத்தை தவிர்ந்துக் கொண்டு தவ்ஹீத் பேச வந்து விட்டார்கள். எனவே, இவர்கள் வழிகேடர்கள் அன்றி வேறில்லை.
எனவே, பொது மக்களின் கடமையாகிறது, இந்த மார்க்கத்தை ஸஹாபா விளக்கத்தில் தந்தால் எடுத்துக் கொள்வது ஆகும்.
இதனை , இமாம் பர்பஹாரி ரஹீமஹுல்லா பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறார்கள்:
உங்களுடைய காலத்தில் ஒரு மனிதர் ஒரு விடயத்தை சொன்னால், அதனை எடுத்தது நடப்பதில் அவசரப்பட்டு விடாதீர்கள். அதனை நல்ல முறையில் சீர்தூக்கி பாருங்கள. நல்ல முறையில் கவனித்து பாருங்கள். இந்தவிடயத்தை ஸஹாபாக்கள் இப்படிதான் சொன்னார்களா என்று பாருங்கள். அஹ்லுஸ் சுன்னாஹ் உலமாக்கள் ஏதும் சொல்லி இருக்கிறார்களா என்று பாருங்கள் .
ஸஹாபாக்கள் அந்த விடயத்தை பேசவில்லை என்றால், ஸலபுஸ் ஸாலிஹீன்கள் அந்த விடயத்தில் பேச வில்லை என்றால், அதனை விட்டும் ஒதுங்கி விடுங்கள்.
இதனை 8 வது குறிப்பாக ஸரஹ் சுன்னாஹ் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள்.
எனவே, அல்குர் ஆனையும் சுன்னாவையும் ஸஹாபா விளக்கத்தில் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த வழிகேடர்களையும் இந்த வழிகேடான கூட்டங்களையும் விட்டு ஒதுங்கி இருங்கள்.
-நபிவழி நம் வழி