இரகசியம் பேசுவதன் ஒழுங்கு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

"நீங்கள் மூவர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்" 

நூல்: புஹாரி (6288)

மூவரில் ஒருவரை மட்டும் தனிமைப்படுத்திவிட்டு இரகசியம் பேசுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். 

மூவராக இருந்தாலும், நால்வராக இருந்தாலும் ஒருவரை அல்லது சிலரை மட்டும் அந்நியப்படுத்திவிட்டு இரகசியம் பேசுவதை இது குறிக்கும்.

இச்செயல் காரணமாக ஒதுக்கப்படுபவர் தான் புறக்கணிக்கப்படுவதாக அவருடைய உள்ளத்தில் நெருடல் ஏற்படும் என்பதுடன், அது பரஸ்பரம் குரோதத்தையும், மன வெறுப்பையும் தூண்டிவிடும். 

மட்டுமன்றி, இத்தகைய சபைகளில் சிலர் மட்டும் தாமறிந்த வேற்று மொழியில் உரையாடிக்கொள்வதும் முறையற்றது. இது சபைக்குரிய இங்கிதத்தைக் கெடுக்கக்கூடிய காரியமாகும். 

அதுவன்றி, சபை ஒன்று அதிகப்படியானவர்கள் இருக்கும் கூட்டமாக அமையும்போது இருவர் மட்டும் பொதுவாக உரையாடிக்கொள்வது இரகசியம் ஆக மாட்டாது என்பதுடன், அதற்கு அனுமதியுள்ளது என்பதைக் கீழ் காணும் ஹதீஸ் எடுத்துக்காட்டுகிறது:

”நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது மூன்றாமவரைவிட்டுவிட்டு இரண்டு பேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்;  *நீங்கள் மூவரும் மக்களுடன் கலக்கும் வரை!* ஏனெனில், (அவ்வாறு மூன்று பேர் இருக்கும்போது இருவர் மட்டும் பேசுவது) மூன்றாமவரை வருத்தமடையச் செய்யும்.” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

நூல்: புஹாரி (6288)



Previous Post Next Post