முஸ்லிம்களில் சிலர் மரணித்த தம் தாயார் அல்லது தந்தை அல்லது மற்ற நெருங்கிய உறவினர்கள் சார்பாக குர்பானி கொடுக்கின்றனரே! இஸ்லாத்தில் அதனுடைய நிலைப்பாடு என்ன?
இது சற்று விபரமாக பார்க்கப்பட வேண்டிய சட்டம். பொதுவாகவே மார்க்கம் என்றால் அது அல்-குர்ஆனும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் காட்டித் தந்த வழிமுறை தான். இவை தவிர ஏனையவற்றை செய்யும் போது அது நபி (ஸல்) அவர்களின் சுன்னாவில் வராத புதுமையாகும். இந்த அடிப்படிடையை நன்கு மனதில் இருத்தி பின்வரும் செய்திகளை கவனமுடன் படிக்க வேண்டுகின்றேன்.
அஷ்ஷைக் முஹம்மது இப்னு உதைமீன் அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில்,
குர்பானியின் அடிப்படை என்னவெனில் அது நபி (ஸல்) அவர்கள் தமக்காகவும் தமது குடுமபத்தினர்கள் சார்பாகவும் குர்பானி கொடுத்ததைப் போல உயிருடனிருப்பவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். ஆனால் மக்களில் சிலர் நினைப்பது போல இறந்வர்கள் சார்பாகவும் உயிருடன் இருப்பவர்கள் குர்பானி எனும் கடமையை நிறைவேற்றலாம் என்பதற்கு எவ்வித அடிப்படை முகாந்திரமும் இல்லை!
இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதை மூன்று வகைகளாக பிரிக்கலாம்:
1) உயிருடன் இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்களுக்காகவும் சேர்த்து குர்பானி கொடுப்பது:
அதாவது, ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் ஒருவர் தனக்காகவும் தனது குடும்பத்தில் தற்போது உயிருடன் இருப்பவர்களுக்காகவும் ஒரு குர்பானி கொடுக்கும் போது அந்த நிய்யத்தில் முன்னரே இறந்துவிட்டவர்களுக்காகவும் என நிய்யத் வைத்துக்கொள்வது.
இது அனுமதிக்கப்பட்டது. இதன் அடிப்படை என்னவெனில், நபி (ஸல்) அவர்கள் தமக்காகவும் தனது குடும்பத்தினர்களுக்காகவும் குர்பானி கொடுத்தார்கள். அந்த குடும்பத்தார்களில் ஏற்கனவே மரணித்துவிட்டவர்களும் உள்ளடங்குவர்.
2) இறந்தவர்களின் வஸிய்யத்தை நிறைவேற்றும் முகமாக குர்பானி கொடுப்பது:
அதாவது, இறந்தவர் உயிருடன் இருக்கும் போது குர்பானி கொடுக்க வேண்டும் என வஸிய்யத் செய்திருந்தால் அதை நிறைவேற்றுவது அவரது வாரிசுதாரர்களுக்கோ அல்லது அவரின் பொருப்பாளர்களுக்கோ கடமையாகும்.
ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்:
“வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் – நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.” (அல்-குர்ஆன் 2:181)
இந்த அடிப்படையில், தனது உறவினர்களில் யாராவது இறப்பதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் என் சார்பாக குர்பானி கொடுத்து விடுங்கள் அல்லது இத்தனை ஆண்டுகளுக்கு கொடுத்துவிடுங்கள் என்று கட்டாயமாக வஸிய்யத்து செய்து இருந்தால் அவர் சார்பாக அந்த வஸிய்யத்து நிறைவேற்றப்படலாம்.
3) இறந்தவர்கள் சார்பாக தனிப்பட்ட முறையில் குர்பானி கொடுப்பது:
அதாவது, ஒருவர், ஏற்கனவே இறந்துவிட்ட தனது தாயாருக்காகவோ அல்லது தந்தைக்காகவோ உயிருடனிருப்பவர்களுடன் சேர்த்துக் கொடுக்காமல் தனிப்பட்ட முறையில் குர்பானி கொடுப்பது.
ஹன்பலி மத்ஹப் இதை அனுமதிக்கின்றது. இதற்கு அடிப்படையாக, இறந்தவர்கள் சார்பாக தர்மம் செய்கின்ற போது அதன் நன்மைகள் அவர்களுக்குச் சென்றடைவது போல குர்பானியின் நன்மைகளும் இறந்தவர்களைச் சென்றடையும் என்கின்றனர்.
ஆனால், இறந்தவர்கள் சார்பாக தனிப்பட்ட முறையில் குர்பானி கொடுப்பது என்பது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் இல்லாத ஒன்றாகும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ஏற்கனவே மரணித்திருந்த தமது பாசத்திற்குரிய குடும்ப உறுப்பினர்களான தமது சிறிய தந்தை ஹம்ஜா (ரலி), தனது அன்புக்குரிய மூன்று மகள்கள் மற்றும் மூன்று மகன்கள், ஏன் தமது நேசத்திற்குரிய அன்பு மனைவி கதீஜா (ரலி) ஆகியோர்களுக்காக தனிப்பட்ட முறையில் குர்பானி கொடுத்ததில்லை. மேலும், சஹாபாக்களும் ஏற்கனவே இறந்துவிட்ட தமது குடும்ப உறுப்பினர்களுக்காக குர்பானி கொடுத்ததாக எந்த அறிவிப்பையும் காணமுடியவில்லை!
எனவே, இறந்த குடும்ப உறுப்பினர்கள் சார்பாக தனிப்பட்ட முறையில் குர்பானி கொடுப்பது என்பது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையல்ல என்பதை அறியமுடிகிறது.
இறந்தவர்கள் சார்பாக அவரது வாரிசுதாரர்கள் ஆடு, மாடு போன்றவற்றை அறுத்து அதன் இறைச்சியை தர்மமாக வழங்கலாம்!
குர்பானி கொடுக்க வேண்டிய நாட்களான ஹஜ்ஜூப் பெருநாள் மற்றும் அடுத்து வரக்கூடிய அய்யமுஷ் தஷ்ரீக்கின் மூன்று நாட்கள் மட்டுமின்றி வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒருவர் மரணித்த தன்னுடைய பெற்றோர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் ஆகியோருக்கு நன்மைகளைச் சேர்ப்பதற்காக ஆடு, மாடு போன்ற பிராணிகளை அறுத்து அவற்றின் இறைச்சியை தானமாக வழங்குவதற்கு இஸ்லாம் அனுமதிக்கின்றது.
இதற்குரிய அறிஞர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கூறுகின்றனர்.
“ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘என்னுடைய தாய் திடீரென்று மரணித்துவிட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல (தர்ம) காரியம் செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்றனர்.”
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); புகாரி 1388
மேற்கண்ட ஹதீஸின்படி மரணித்த பெற்றோர்களின் சார்பாக உழ்ஹிய்யா (குர்பானி) என்ற நிய்யத்தில்லாமல் அவர்களின் நன்மையை ஒரு குறிப்பிட்ட நாட்கள் என்று கணக்கெடுத்து செய்யாமல் வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஆடு, மாடு போன்ற பிராணிகளை அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்து அவற்றின் இறைச்சியை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்குவதற்கு இஸ்லாத்தில் எவ்வித தடையுமில்லை. ஏழைகளுக்கு உணவுகள் கிடைப்பதால் இது வரவேற்க்க கூடிய ஒன்றாகவும் இருக்கின்றது.
அல்லாஹ் அஃலம்.