இவ்வுலகில் ஒருவனுக்குக் கொடுக்கப்படும் மிகப்பெரும் தண்டனை எதுவெனில், அவமானம்தான். ஒருவன் தனது குடும்பத்தாரிடம், நண்பர்களிடம், அக்கம்பக்கத்தாரிடம், உறவினர்களிடம் கேவலப்பட்டு நிற்பதை விட வேறெதுவும் இவ்வுலகத்தில் கொடுமையானதாக இருந்துவிட முடியாது.
இவ்வளவு நாட்கள் நம்மை எப்படி நம்பினார்களோ அந்த நம்பிக்கை உடைத்தெரியப்பட்டு நம் உள்புறம் வெளிப்படும்போது ஏற்படும் அவமானமும் வேதனையும் வர்ணிக்க முடியா உணர்வு. அத்துடன் தனது மானத்தைக் காக்க இவ்வுலகை விட்டு எங்காவது சென்று தப்பித்துக் கொள்ள வேண்டுமென்று மனம் பதபதைக்கும் தருணமாக இருக்கும் அது. இவ்வளவு நாட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்தக் கேடுகெட்ட மறுபறம் வெளிக்கொணரப்படும் தருணம் அது. இந்த நிலையைச் சகித்துக் கொள்ள முடியாமல்தான் முஸ்லிம் அல்லாதவர்களில் பலர் தங்களது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
புகழ்ந்து கொள்ளுங்கள் உங்களது இறைவனை! அவன் இன்னும் உங்கள் மீதும் என் மீதும் இருக்கும் திரையை அகற்றவில்லை. ஆனால், அப்படி அகற்றுவது அவனுக்கு பெரியதொரு காரியமில்லை என்பதையும் மனத்தில் ஆழமாகப் பதிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை வரம்பை மீறும்போதும் தன் மீது இருக்கும் திரையின் இயக்கம் அவனது கையில் உள்ளது என்பதைச் சற்று நினைவூட்டிக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு முறை நாம் புகழப்படும் போதும் மனம் பதற வேண்டும், அதற்கு நாம் தகுதியானவர்களில்லை என்று. ஒவ்வொரு புகழ்ச்சியும் கண்ணியமும் அந்தக் கருணையாளன் போட்ட திரைக்குத்தான் என்பதை ஒவ்வொரு முறையும் உணர வேண்டும். புகழப்படும் போதெல்லாம் "அந்தக் கருணையாளனுக்குத்தான் புகழ் அனைத்தும்" என்று கூறுங்கள். உள்ளத்தை புகழ்ச்சியில் லயிக்கவிடாதீர்கள். இங்கு கொடுக்கப்படும் கண்ணியம், மதிப்பு, புகழ்ச்சி என எதற்குமே நாம் தகுதியற்றவர்கள். நாம் என்பது அவன் அழங்கரித்த குப்பை.
குப்பையாக இருந்துகொண்டு, அவன் மேலிட்ட அந்தத் திரையை வைத்துப் பெருமை அடைவதை விட வேறென்ன அற்ப குணம் வேண்டும் நமக்கு! பெருமை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. அவனது ஆடையில் கைவைக்க முயற்சிக்க வேண்டாம்! அழிவு நமக்குதான்.
ஒவ்வொரு முறை பிராத்தனை செய்யும்போதும் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பதுடன் பாவத்தை மறைக்குமாறும் அந்தக் கருணையாளனிடம் வேண்டுங்கள்!
قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ بِيَدِكَ الْخَيْرُ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; *நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.*”
(அல்குர்ஆன் : 3:26)
-muhayyuddeen