1) அடிப்படையற்ற ஹதீஸ்:
اختلاف أمتي رحمة
(الشيخ الألباني في "سلسلة الأحاديث الضعيفة والموضوعة" وقال: لا أصل له)
கருத்து முரண்பாடு எனது சமூகத்துக்கு அருளாகும்.
இந்தக் கருத்தில் வரும் செய்தி பிழையான, அடிப்படையற்ற செய்தியாகும். ஹதீஸ்கலை வல்லுநர்கள் இச்செய்தியை இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியாக விமர்சனம் செய்துள்ளார்கள்.
2) சரியான ஹதீஸ்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை விரும்புகின்றான்; உங்களுக்கு மூன்று விஷயங்களை வெறுக்கின்றான்.
1: அல்லாஹ் ஒருவனையே வணங்குவதையும்
2: அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையும் விரும்புகின்றான்.
3: நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடிப்பதையும் பிரிந்துவிடாமலிருப்பதையும் விரும்புகின்றான்.
1: (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமில்லாததை)ப் பேசுவதையும்,
2: (தேவையின்றி) அதிகமாகக் கேள்விகள் கேட்பதையும்,
3: செல்வத்தை வீணாக்குவதையும் அவன் வெறுக்கின்றான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 3533)
அல்லாஹ் சொல்கிறான்:
وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ ۚ وَأُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ
தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள்! அவர்களுக்கே கடும் வேதனை உண்டு. (அல் குர்ஆன் 3:105)
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்துப் பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! (அல் குர்ஆன் 3:103)
وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.
(அல் குர்ஆன் 8:46)
விளக்கம்:
அல் குர்ஆன், அல் ஹதீஸின் கீழ் அனைவரும் கொள்கையில் ஒன்றுபட வேண்டும் என்பதே இறைக்கட்டளையாகும். இதற்கு மாற்றமாக கொள்கைரீதியாக ஆளுக்கொரு பிரிவை உருவாக்கி அல் குர்ஆன், அல் ஹதீஸை விட்டும் பிரிந்து செல்வதை இஸ்லாம் தடை செய்கின்றது. (இஜ்திஹாதுக்கு இடம்பாடான மஸ்அலாக்களில் கருத்து முரண்பாடு ஏற்படுவது தவறில்லை) இன்று முஸ்லிம்களுக்கென அதிகாரம் மிக்க ஒரு ஜமாஅத் (அமீர்) இல்லாத காரணத்தால் நபி (ஸல்) அவர்கள் ஹுதைபா (ரழி) அவர்களுக்கு வழங்கிய உபதேசத்தின் அடிப்படையில் இன்றுள்ள இயக்கவெறி கொண்ட எந்த அமைப்புக்களிலும் உறுப்பினராக சேராது, சத்தியத்தை நடைமுறைப் படுத்துவோருக்கு உதவுவதுடன், தனித்து நின்று சத்தியத்தைப் பின்பற்றுவதே சிறந்த வழிமுறையாகும்.
(இயக்க வெறியின்றி சமூக சேவைகளுக்காக, சமூக நலனைக் கருத்தில் கொண்டு குழுக்களாகப் பிரிந்து செயல்படுவது தடை கிடையாது.)
அல்லாஹ் மிக அறிந்தவன்.
நட்புடன் :
அல் ஹாபில் இன்திகாப் உமரீ
இலங்கை