றமழானில் நபிகளார்

-ARM. ரிஸ்வான் (ஷர்கி)

மனித குலம் முழுவதற்கும் வழிகாட்டியாக, முன்மாதிரியாக வல்ல அல்லாஹ்வினால் அனுப்பபப்பட்ட நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை, அவர்களது வணக்க வழிபாடுகளை, வாழ்வொழுங்கை, சொற்களை, செயல்களை அறிந்திருப்பது, அறிந்தவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவது, பிறருக்கும் அவற்றை எடுத்துரைப்பது, பகிர்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் பொறுப்பும் கடமையுமாகும். 

இவ்வகையில் றமழானில் நபிகளாரின் நடைமுறைகள் குறித்த விடயங்களை முடியுமானவரை சிறு சிறு துணுக்குகளாக நோக்குவோம் :


றமழானில் நபிகளார் : 01

றமழான் உதயமானவுடன்  நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களுக்கு அதுகுறித்து  நற்செய்தி கூறி நோன்பு நோற்று நற்செயல்கள் புரிய ஆர்வமூட்டுவார்கள். 

1. " உங்களிடம் றமழான் மாதம் வந்துள்ளது. அதில் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள். இம்மாதத்தில் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. முரட்டுத்தனமிக்க ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது. இம்மாதத்தில்தான் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவு இருக்கிறது. அவ்விரவின் நன்மைகளை அடைய முடியாமற் போனவன் (அனைத்து நன்மைகளையும்) இழந்தவனாவான்" (நஸாஈ).

2. " றமழான் மாதத்தின் முதலாவது இரவு வந்துவிட்டால் ஷைத்தான்களும் முரட்டுத்தனமிக்க ஜின்களும் விலங்கிடப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. அதன் எந்தவொரு வாயிலும் (றமழான் முடியும் வரை) திறக்கப்படுவதில்லை. சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. அதன் எந்தவொரு வாயிலும் மூடப்படுவதில்லை. (அந்த முதலாவது இரவில்) ஓர் அழைப்பாளர், ' நன்மை செய்ய நினைப்பவனே! நீ முன்னோக்கி வா! தீமை செய்ய நினைப்பவனே! நீ உன்னை கட்டுப்படுத்திக்கொள்! ' என்று அறைகூவல் விடுப்பார். அல்லாஹ் இம்மாதத்தில் நரகிலிருந்து அதிகமானோரை விடுதலை செய்கிறான். அவ்வாறு விடுதலை செய்வது ஒவ்வோர் இரவிலுமாகும்" (திர்மிதி).


றமழானில் நபிகளார் : 02

றமழான் தொடர்பான சட்ட திட்டங்களையும் ஒழுக்கங்களையும் நபிகளார் தமது தோழர்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள்.

அவர்கள் கற்றுகொடுத்த சில றமழானிய ஒழுக்கங்கள் :

1. " (நோன்பு நோற்ற நிலையிலும்) யார் பொய்யான பேச்சையும் பொய்யான செயலையும் விடவில்லையோ அவர் பசித்தும் தாகித்தும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை " (ஸஹீஹுல் புஹாரி). 

2. " உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் தீய செயல்களில் ஈடுபட வேண்டாம். கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம். அவரை யாரேனும் ஏசினால் அல்லது சண்டைக்கு அழைத்தால் 'நான் நோன்பாளி' என்று கூறிவிடவும் (புஹாரி, முஸ்லிம்).


றமழானில் நபிகளார் : 03

ஸஹர் உணவை உட்கொள்ளுமாறு நபி வலியுறுத்துவார்கள் :

1. ஸஹர் உணவை உட்கொள்ளுங்கள். ஸஹர் உணவில் பரகத் இருக்கிறது (புஹாரி, முஸ்லிம்).

2. நமது நோன்புக்கும் வேதம் வழங்கப்பட்டோரின் நோன்புக்குமிடையிலான வேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்ளலாகும் (முஸ்லிம்).

நீரை அருந்தியேனும் ஸஹர் செய்யுமாறு வலியுறுத்துவார்கள் :

ஸஹர் உணவு பரகத் நிறைந்ததாகும்.  உங்களில் ஒருவர் ஒரு மிடர் நீரை அருந்தியேனும் ஸஹர் செய்துகொள்ளவும் (ஸஹீஹுல் ஜாமிஃ).

ஸஹர் உணவு உட்கொள்வதை பிற்படுத்துவார்கள் :

அனஸ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள்:  நபி அவர்களும் ஸைத் இப்னு ஸாபித் (றழி) அவர்களும் ஸஹர் செய்தனர். ஸஹர் செய்து முடித்ததும், நபி அவர்கள் (ஸுப்ஹ்) தொழுகைக்கு தயாராகித் தொழுதார்கள்.  அவர்கள் ஸஹர் செய்ததற்கும் தொழுததற்கும் இடையே எவ்வளவு நேரம் இருந்தது என்று அனஸ்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள் “ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதக்கூடிய நேரம்“ என்று பதிலளித்தார்கள் (புஹாரி).

* நபிகளார் பெரும்பாலும் அன்றைய பிரதான உணவுகளுள் ஒன்றான பேரீத்தம் பழத்தை ஸஹர் உணவாக உட்கொள்வார்கள் :

1. அனஸ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள் : என்னிடம் நபியவர்கள் 'நான் நோன்பு நோற்க விரும்புகிறேன், எனக்கு ஏதும் உணவுகொண்டு வாருங்கள்' என்றார்கள். நான் அவர்களுக்கு பேரீத்தம் பழமும் ஒரு பாத்திரத்தில் நீரும் கொண்டுவந்து கொடுத்தேன் (நஸாஈ).

2. ஒரு முஃமினின் ஸஹர் உணவுக்கு பேரீத்தம் பழம் நல்லது (அபூதாவூத்).


றமழானில் நபிகளார் : 04

நபிகளார் நோன்பு நோற்ற நிலையிலும் மிக அதிகமாக பற் துலக்கியுள்ளார்கள் என பின்வரும் செய்தி குறிப்பிடுகிறது :

ஆமிர் இப்னு ரபீஆ (றழி) கூறுகிறார்கள் : 'நபியவர்கள் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் கணக்கற்ற தடவைகள் பற் துலக்குவதை நான் கண்டேன்' (புஹாரி, திர்மிதி). இது 'ஹஸன்' தரத்திலான ஆதாரபூர்வமான ஹதீஸ் என இமாம் திர்மிதி (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.

'எனது சமூகம் சிரமப்படும் என்று நான் கருதியிருக்காவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் (மற்றொரு அறிவிப்பின் படி, ஒவ்வொரு வுழூவின் போதும்) பற் துலக்குமாறு அவர்களை பணித்திருப்பேன்' (புஹாரி, முஸ்லிம்).

மேற்படி ஹதீஸ் நோன்பாளி, நோன்பில்லாதவர் அனைவரையும் விளித்துப் பேசுகின்ற அதே நேரம் காலை, பகல், மாலை என்று வேறுபடுத்தாமல் அனைத்து வேளைகளிலும் பற் துலக்கலாம் என்பதையும் தெளிவாக உணர்த்துகிறது. 

இதனால்தான் இமாம் இப்னு ஹுஸைமா (ரஹ்) மேற்படி ஹதீஸை தனது நூலில் பதிவுசெய்துவிட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள் :

 ' ஒவ்வொரு தொழுகைக்காகவும் பற் துலக்குவது மிகப் பெரும் சிறப்புக்குரியதென இந்த ஹதீஸில் கூறப்பட்டிருப்பது நோன்பில்லாதவரை மட்டுமன்றி நோன்பாளியையும்  உள்ளடக்குகிறது' (3/247).

மேற்படி ஹதீஸ்களின் அடிப்படையில் நோன்பாளிகள் எவ்வேளையாயினும் தமது வயிற்றினுள் சென்றுவிடாதவாறு பற்பசை பயன்படுத்தி பற்துலக்குவதற்கும் மார்க்கத்தில் எந்த தடையுமில்லை என சமகால இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.


றமழானில் நபிகளார் : 05

நோன்பு துறக்கும் நேரம் வந்தவுடன் நபிகளார் தாமதியாமல் விரைந்து நோன்பு துறப்பது மட்டுமன்றி, அவ்வாறே நடந்துகொள்ளுமாறு தனது சமூகத்துக்கு ஏவுவார்கள். நோன்பு துறப்பதை பிற்படுத்துவது முஸ்லிம்களின் வழிமுறையல்ல என்றும் விழிப்பூட்டுவார்கள்: 

1. அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் : நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது மஸ்ரூக், ஆயிஷா (ரலி) அவர்களிடம்  ” நபியவர்களின் தோழர்களில் இருவர் நன்மையில் குறைவைப்பவர்கள் அல்லர். அவ்விருவரில் ஒருவர் மஃரிப் தொழுகையையும் நோன்பு துறப்பதையும் விரைவாகவே செய்கிறார். மற்றொருவர் அவ்விரண்டையுமே தாமதப்படுத்துகிறார்” என்று கூறினார். அப்போது ”மஃரிபையும் நோன்பு துறப்பதையும் விரைவுபடுத்துபவர் யார்?” என்று ஆயிஷா (ரலி) அவர்கள்  கேட்டார்கள். அதற்கு  அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்” என்றார் மஸ்ரூக். ஆயிஷா (ரலி) அவர்கள், ”இவ்வாறே அல்லாஹ்வின் தூதர்  அவர்கள் செய்வார்கள்” என்று விடையளித்தார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்).

2. நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் போதெல்லாம் மக்கள் நலவில் நிலைத்திருப்பார்கள் (புஹாரி, முஸ்லிம்).

3. மக்கள் நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் போதெல்லாம் இந்த மார்க்கம் நிலைத்திருக்கும். ஏனெனில் நோன்பு துறப்பதை யூதர்களும் கிறிஸ்தவர்களுமே பிற்படுத்துவார்கள் (ஸஹீஹுத் தர்ஹீப்).

பெரும்பாலும் பேரீத்தம் பழங்களின் மூலமும் கிடைக்காவிட்டால் நீரை அருந்தி நோன்பு துறப்பார்கள் :

நபிகளார் மஃரிப் தொழுகைக்கு முன்னர் பழுத்த பேரீத்தம் பழங்களை உண்டு நோன்பு துறப்பார்கள். கிடைக்காவிட்டால் உலர்ந்த பேரீத்தம் பழங்களை உண்டும் அதுவும் கிடைக்காவிட்டால்  சில மிடர் தண்ணீரை அருந்தி நோன்பு துறப்பார்கள் (திர்மிதி).

 மஃரிப் நேர ஆரம்பத்திலேயே நோன்பை துறந்துவிட வேண்டும் என்பதை பின்வரும் ஹதீஸ் வலியுறுத்துவதோடு, நபிகளார் கஞ்சி போன்ற மாவு கரைசலை உட்கொண்டு நோன்பு துறந்திருக்கிறார்கள் என்ற தகவலையும் தருகிறது :

அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(றழி) அறிவிக்கிறார்கள் :  நாங்கள் நபி அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் கூட்டத்தில் ஒருவரிடம், " எழுந்து நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர் “இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். நபியவர்கள், “இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக! எனறார்கள். அதற்கவர் “இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டும்!” என்றார். நபியவர்கள் மீண்டும்,  “இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர், “இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். மீண்டும் நபியவர்கள், “இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கவர் “பகல் (வெளிச்சம்) இன்னும் (எஞ்சி) இருக்கிறதே?“ என்று கேட்டதற்கும் நபியவர்கள் “இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். உடனே அவர் இறங்கி, அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபியவர்கள் அருந்திவிட்டு, “இரவு இங்கிருந்து (கிழக்கிலிருந்து) முன்னோக்கி வந்துவிட்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!” என்றார்கள் 
(புஹாரி, முஸ்லிம்).


றமழானில் நபிகளார்: 06

அல்குர்ஆன் அருளப்பட்ட மாதமான றமழானில் நபிகளார் அல்குர்ஆனுக்கு வழங்கிய முக்கியத்துவம் அளப்பரியதாகும். முழு குர்ஆனையும் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் ஒப்புவித்து சரிபார்த்துக்கொள்ளும் காலமாக றமழானை நபியவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள். 

ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து  அல்குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாக அல்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்... ஒவ்வொரு வருடமும் றமழானில்  ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒரு தடவை முழு குர்ஆனையும் நபியவர்களுக்கு  ஓதிக்காட்டி ஒப்புவிப்பார்கள். நபிகளார் மரணித்த வருடம் இரு தடவைகள் ஒப்புவித்தார்கள் (புஹாரி, முஸ்லிம்).

றமழான் உட்பட எல்லாக் காலங்களிலும் நபிகளார் கியாமுல் லைல் தொழுகையில் அல்குர்ஆனின் நீண்ட ஸூறாக்களை ஓதி நீண்ட நேரம் நின்று வணங்குவார்கள். ஓதும் வசனங்களின் பொருள் உணர்ந்து நிறுத்தி நிதானமாக உணர்வுப் பெருக்கோடு ஓதுவார்கள் :

ஹுதைபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் நபி  அவர்களுடன் ஓர் இரவில் (கியாமுல்லைல்) தொழுதேன். அதில் அவர்கள் 'அல்பகரா' அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். நான் அவர்கள் நூறு வசனம் முடிந்ததும் ருகூஉ செய்துவிடுவார்கள் என்று எண்ணினேன். ஆனால், அவர்கள் (நூறு வசனம் முடிந்த பின்னும்) தொடர்ந்து ஓதினார்கள். நான் அந்த அத்தியாயத்தை (இரண்டாகப் பிரித்து ஓதி இரண்டாவது) ரக்அத்தில் முடித்துவிடுவார்கள் என்று எண்ணினேன். ஆனால் (அதை முதல் ரக்அத்திலேயே) தொடர்ந்து ஓதினார்கள். நான் அவர்கள் அந்த அத்தியாயம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள் என்று எண்ணினேன். அவர்கள் (அந்த அத்தியாயம் முடிந்ததும்) 'அந்நிசா' எனும்  அத்தியாயத்தை ஆரம்பித்து ஓதினார்கள்; பிறகு 'ஆலு இம்ரான்' எனும்  அத்தியாயத்தை ஆரம்பித்து நிறுத்தி நிதானமாக ஓதினார்கள். அவற்றில் இறைவனைத் துதிப்பது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச்செல்லும்போது (ஒதுவதை நிறுத்திவிட்டு), 'சுப்ஹானல்லாஹ்' என கூறி இறைவனைத் துதித்தார்கள்; (இறையருளை) வேண்டுவது பற்றிக்கூறும் வசனத்தைக் கடந்து செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு), (இறையருளை) வேண்டினார்கள். (இறை தண்டனையிலிருந்து) பாதுகாப்புக் கோருவது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச் செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு, இறைவனிடம்) பாதுகாப்புக் கோரினார்கள்...(முஸ்லிம்).


றமழானில் நபிகளார் : 07

றமழானில் நபியவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து செயற்படுத்தி வந்த வணக்கம் கியாமுல் லைல் எனப்படும் இரா வணக்கமாகும். அல்குர்ஆனின்  நீண்ட ஸூறாக்களை நிதானமாக ஓதி, றுகூஃ, ஸுஜூத் நிலைகளில் நெடுநேரம் தரித்திருந்து இறைவனை துதித்து, அவனோடு நெருக்கமாகி,  பிரார்த்தனையில் மூழ்கி,  அவர்கள் நிறைவேற்றிய இரா வணக்கம் தனிச்சிறப்பு மிக்கது. 

நபிகளாரின் இரா வணக்கம் பல்வேறு வடிவங்களில் அமையப் பெற்றிருந்தது என்பதை பல்வேறு ஹதீஸ்கள் உணர்த்துகின்றன. 
அநேகமாக அனைத்து ஹதீஸ் நூல்களிலும் பல ஸஹாபாக்களினூடாக நபிகளாரின் இரா வணக்கம் குறித்த பல எண்ணிக்கையான ஹதீஸ்கள் பதியப்பட்டிருந்தாலும் ஆயிஷா (றழி) அவர்களின் பின்வரும் ஹதீஸ் நபியவர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கடைப்பிடித்த இரா வணக்க முறையை தெளிவுபடுத்துகிறது :

அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவிக்கிறார்:  நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், “றமழான் மாத இரவுகளில் இறைத்தூதர் அவர்களின் தொழுகை எப்படியிருந்தது?“ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “றமழானிலும் ஏனைய மாதங்களிலும் அவர்கள் பதினொரு ரக்அத்துகளுக்கு அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் வர்ணிக்க வார்த்தையில்லை. பின்னர் நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் வர்ணிக்க வார்த்தையில்லை. பிறகு மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். நான் “இறைத்தூதர் அவர்களே! நீங்கள் வித்ரு (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா?“ என்று கேட்டேன். அவர்கள், “என் கண் தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை“ என்று பதிலளித்தார்கள்” என்று கூறினார்கள்.  (புஹாரி).

நபிகளார் றமழானில் இரா வணக்கத்தை தனிமையாகவே நிறைவேற்றுவார்கள். ஆயினும் தனக்கு பின்னால் தனது தோழர்கள் தன்னை பின்பற்றி தொழுவதை அவர்கள் தடைசெய்யவில்லை :

அனஸ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபியவர்கள் றமழான் மாதத்தில் (தனியாக) தொழுவார்கள். (ஒரு நாள்) நான் சென்று அவர்களுக்கு அருகில் நின்றுகொண்டேன். இன்னொரு மனிதர் வந்து அவரும் நின்றுகொண்டார். இறுதியில் நாங்கள் ஒரு கூட்டமாகவே ஆகிவிட்டோம். தமக்குப் பின்னால் நாங்கள் நிற்பதை நபி அவர்கள் உணர்ந்ததும் தொழுகையைச் சுருக்கலானார்கள். பிறகு தமது இல்லத்திற்குள் சென்று, எங்களுடன் தொழாத விதத்தில் (நீளமாகத்) தொழுதார்கள்... (முஸ்லிம்).

ஆயினும் நபியவர்கள் இரவு முழுவதையும் இரா வணக்கத்தில் கழிக்கவில்லை. இரவின் பெரும் பகுதியை இரா வணக்கத்தில் கழித்தாலும் தூங்குவதற்கும் நேரம் ஒதுக்கிகொள்வார்கள் :

ஆயிஷா (றழி) அவர்கள் கூறுகிறார்கள் : நபியவர்கள் ஒரு இரவில் முழு குர்ஆனையும் ஓதி முடித்ததாகவோ, ஸுப்ஹ் வரை இரவு முழுவதும்  இரா வணக்கம் புரிந்ததாகவோ நான் அறியவில்லை (முஸ்னத் அஹ்மத்).


றமழானில் நபிகளார் : 08

நபிகளார் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் சில காரியங்களை தான் செய்ததனூடாக, அல்லது பிறருக்கு அங்கீகாரம் வழங்கியதனூடாக அனுமதித்தார்கள். அவை :

1. குளிப்பு கடமையாக இருந்த போதும் அதே நிலையில் நோன்பு நோற்றார்கள். இதன் மூலம் தொழுகைக்கு குளிப்பு அவசியம் என்பது போல் நோன்பு நோற்பதற்கு குளிப்பு அவசியமில்லை என்பதை உணர்த்தினார்கள் :

அபூபக்ர் இப்னு அப்திர் ரஹ்மான்  (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் ”பெருந்தொடக்குடன்  ஸுப்ஹ் நேரத்தை அடைந்தவருக்கு நோன்பு கூடாது” என்று அறிவிப்பதை நான் செவியுற்றேன். இதை நான் (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அதை அவர்கள் மறுத்தார்கள். பின்னர் ஆயிஷா (ரலி) மற்றும் உம்மு ஸலமா (ரலி) ஆகியோரை நோக்கி நடந்தார்கள். அவர்களுடன் நானும் நடந்தேன். அவ்விருவரிடம் நாங்கள் போய்ச் சேர்ந்தோம். அதைப் பற்றி அவர்களிடம் என் தந்தை கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும், ”நபி  அவர்கள் (இரவில் தாம்பத்திய உறவு கொண்டு) குளிப்புக் கடமையான நிலையில் -உறக்க ஸ்கலிதத்தினால் அல்ல- ஸுப்ஹை அடைவார்கள். பிறகு நோன்பு நோற்பார்கள்” என்று கூறினர்...பின்னர் இது பற்றி  அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கூறப்பட்ட போது, அவர்கள்  ”நபி  அவர்களின் துணைவியரான அவர்கள் இருவருமே (இதுகுறித்து) நன்கறிந்தவர்கள்” என்று கூறினார்கள்  (நீண்ட ஹதீஸின் சுருக்கம்.. : ஸஹீஹ் முஸ்லிம்).

2. நோன்பு நோற்றிருக்கும் நிலையில் தம் மனைவியரை முத்தமிட்டிருக்கிறார்கள் :

உம்மு ஸலமா (ரலி) கூறுகிறார்கள் : நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடுவார்கள் (புஹாரி).

3. உஷ்ணம் அல்லது தாகத்தை தணிக்க தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள் : 

நபியவர்கள் மக்காவை வெற்றிகொள்ள சென்றுகொண்டிருந்த போது நோன்புடன் இருந்ததனால் 'அல்அர்ஜ்' என்ற இடத்தில் வைத்து தாகத்தின் காரணமாக அல்லது உஷ்ணத்தின் காரணமாக தனது தலையில் தண்ணீரை ஊற்றிகொண்டார்கள் (அபூதாவூத்).

அதே நேரம் நோன்பாளி வுழு செய்யும் போது மூக்கினுள் நீர் செலுத்துகையில் கூடுதலாக நீர் செலுத்த வேண்டாமென நபித் தோழரான லகீத் இப்னு ஸப்ரா (றழி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள் (அபூதாவூத்).


றமழானில் நபிகளார் : 09

பிரயாணங்களின் போது நோன்பு நோற்காமல் விடுவதையே நபிகளார் அதிகமாக விரும்பியிருக்கிறார்கள்.

குறிப்பாக நோன்பு நோற்பது சிரமத்தை தருகின்ற பயணங்களின் போது நோன்பு நோற்க கூடாது என்று வலியுறுத்தியிருப்பதோடு, நோன்பு நோற்பதை குற்றமாக கூட நபிகளார் கருதியிருக்கிறார்கள் என்பதற்கு பின்வரும் ஹதீஸ்கள் சான்றாக உள்ளன:

1. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் றமழான் மாதத்தில் மக்காவை வெற்றிகொள்ள புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். மக்களும் அவர்களுடன் நோன்பு நோற்றிருந்தனர். 'குராஉல் கமீம்' எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி மக்கள் பார்க்கும் அளவுக்கு உயர்த்திக் காட்டிய பின்  அதை அருந்தினார்கள். அதன் பிறகு அவர்களிடம், ”மக்களில் சிலர் நோன்புடனேயே இருக்கின்றனர்” என்று சொல்லப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர்  அவர்கள், ”அவர்கள் (எனக்கு) மாறுசெய்தவர்கள், அவர்கள் எனக்கு மாறுசெய்தவர்கள்” என்று கூறினார்கள் ( புஹாரி,  முஸ்லிம்).

2. நபியவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு அவரைச் சூழ மக்கள்  குழுமியிருந்ததைக் கண்டார்கள். “இவருக்கு என்ன நேர்ந்தது?“ என்று கேட்டார்கள். “இவர் நோன்பு நோற்றிருக்கிறார்!” என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபியவர்கள் “ பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் உள்ளதல்ல” என்று கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்). 

பயணிகள் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு ஏனைய காலங்களில் விடுபட்டவற்றை கழா செய்யுமாறு அல்குர்ஆனும் போதிக்கிறது :

"(றமழான் காலத்தில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை விட்டுவிட்டு) ஏனைய நாட்களில் நோற்க வேண்டும்" (2:184).

எனவே பயணத்தின் போது நோன்பை விடுவதே வலியுறுத்தப்பட்டதும் மிகச் சிறப்பானதுமாகும் என்பதில் ஐயமில்லை. எனினும் பயணத்தில் நோன்பு நோற்பதற்கான *சக்தியும் உடல் வலிமையும்* உள்ளவர் பயணத்தில் நோன்பு நோற்றால் குற்றமில்லை என்பதையும் பின்வரும் ஹதீஸ்கள் உணர்த்துகின்றன :

1. அபுத்தர்தா(ரலி) கூறுகிறார்கள் : ”நாங்கள் வெயில் மிகுந்த ஒரு நாளில் நபியவர்களுடன் பயணம் சென்றோம். கடும் வெப்பத்தின் காரணமாக சிலர் தம் கையைத் தம் தலையில் வைத்தனர். அப்பயணத்தில் நபி அவர்களையும் இப்னு ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர எங்களில் வேறு எவரும் நோன்பு நோற்றிருக்கவில்லை (புஹாரி, முஸ்லிம்).

2. ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர்ந்து நோன்பு நோற்கும் மனிதன் ஆவேன். பயணத்திலும் நான் நோன்பு நோற்கலாமா?” என்று கேட்டார்கள். அதற்கு, ”நீர் நாடினால் நோன்பு நோற்பீராக! நீர் நாடினால் நோன்பை விட்டுவிடுவீராக' என்று கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்)


றமழானில் நபிகளார் : 10

றமழானில்  -  விசேடமாக ஜிப்ரீல் (அலை) அவர்கள் தரிசிக்கும் போது - இறைத் தூதர் அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்த ஒரு செயல் தான தர்மம் வழங்குதலாகும். 

வறுமை ஏற்பட்டு விடுமே என்ற அச்சம் சற்றும் இல்லாதவர் போன்று ஏழைகளுக்கும் தேவையுடையோருக்கும் வாரி வழங்கும் இயல்பினை வழக்கமாகவே கொண்டவர்கள் இறைத் தூதர் அவர்கள் :

1. அல்லாஹ்வின் தூதர்  அவர்களிடம் இஸ்லாத்தை முன்வைத்து எது கேட்கப் பட்டாலும் அவர்கள் அதைக் கொடுக்காமல் இருந்ததில்லை. இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து கேட்டபோது, இரு மலைகளுக்கு இடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை அவருக்கு வழங்கினார்கள். அந்த மனிதர் தம் சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று, ”என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், முஹம்மத் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்” என்று கூறினார்.
(ஸஹீஹ் முஸ்லிம்)

2. உஹுத் மலை அளவுக்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில்  மூன்று நாட்கள் கழிவது கூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது (ஸஹீஹுல் புஹாரி).

3. இறைத் தூதர் அவர்கள் மக்களுக்கான நற்காரியங்களுக்கு செலவிடாமல் எதையும் தனக்கென சேமித்துவைக்கும் வழக்கத்தை கொண்டிருக்கவில்லை (புஹாரி).

ஏனைய காலங்களில் நபியவர்களின் தர்மம் இத்தகையதெனில் றமழானிலோ அது பன்மடங்கைத் தொட்டிருக்கும் :

நபியவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (ஏனைய நாட்களை விட) ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள்.... தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபிகளார் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்
(ஸஹீஹுல் புஹாரி).

தர்மம் செய்வதன் ஓர் அங்கமாகவே பிற நோன்பாளிகள் நோன்பு துறப்பதற்காக ஏற்பாடு செய்வதையும் அதற்காக செலவிடுவதையும் அதிகமாக இறைத்தூதர் அவர்கள் ஆர்வமூட்டுவார்கள் :

'யார் ஒரு நோன்பாளியை நோன்பு துறக்க வைக்கிறாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்கு கிடைக்கும் நற்கூலி போன்று கிடைக்கும். ஆனாலும் இதன் மூலம் நோன்பாளிக்கு கிடைக்கும் நற்கூலியில் எதுவும் குறைந்துவிடாது' (அஹ்மத், திர்மிதி).


றமழானில் நபிகளார் : 15

றமழானின் பிந்திய பத்து நாட்களை நபியவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து பேணி வந்தார்கள். இதற்கு முக்கிய காரணம் ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு என அல்லாஹ்வினால் வர்ணிக்கப்படும் லைலதுல் கத்ர் பிந்திய பத்து நாட்களில் அடங்கியிருப்பதாகும்.

வேறு நாட்களை விட மிக அதிகமாக இறுதிப் பத்து தினங்களில் வணக்க வழிபாடுகளில் திளைத்திருப்பார்கள்.

1. ஆயிஷா (றழி) அவர்கள் கூறுகிறார்கள் : ' இறைத்தூதர் அவர்கள் ஏனைய நாட்களில் வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்தவதை விட  றமழான் இறுதிப் பத்து தினங்களில் அதிகமாக கவனம் செலுத்துவார்கள்' (முஸ்லிம்).

2. 'பிந்திய பத்து நாட்கள் வந்துவிட்டால் நபிகளார் இரவுகளை (வணக்கங்களால்) உயிர்ப்பிப்பார்கள். தமது குடும்பத்தாரையும் எழுப்பிவிடுவார்கள். குடும்பத்தாரிடமிருந்து பிரிந்து விடுவார்கள்' (முஸ்லிம்).


றமழானில் நபிகளார் : 16

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவான லைலதுல் கத்ரை அடைந்துகொள்வதற்காக  நபிகளார் றமழானில் தனது மஸ்ஜிதில் இஃதிகாப் இருப்பார்கள். ஆரம்ப காலத்தில்  முந்திய பத்து நாட்கள் இஃதிகாப் இருந்த போது அந்த பத்து நாட்களில் லைலதுல் கத்ர் இல்லை என தெரிய வந்ததும் பின்னர் நடுப் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். அதிலும் லைலதுல் கத்ர் இல்லை என்றும் பிந்திய பத்து நாட்களிலேயே லைலதுல் கத்ர் உள்ளதெனவும் உறுதியான போது ஒவ்வொரு வருடமும் பிந்திய பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பதை வழக்கமாக்கி கொண்டார்கள். அவர்கள் மரணித்த ஆண்டில் பிந்திய இருபது நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். ஸஹாபாக்கள் பலரும் நபியுடன் இஃதிகாப் இருந்த அதே வேளை தமது மனைவியர் சிலருக்கும் இதற்கு அனுமதி வழங்கினார்கள். இது குறித்து பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன :

1. அபூ ஸஈத் அல்குத்ரீ (றழி) கூறுகிறார்கள் : நபி அவர்கள் றமழானின் முதல் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாப்  இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) வந்து “நீங்கள் தேடக் கூடியது (லைலத்துல் கத்ர்) உங்களுக்கு இனி வரும் (நாட்களிலுள்ளது)“ என்றார்கள். உடனே நபி அவர்கள் நடுப் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) வந்து, “நீங்கள் தேடக் கூடியது உங்களுக்கு இனி வரும் (நாட்களிலுள்ளது)“ என்றார்கள்...  (புஹாரி).

2. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி  அவர்கள் றமழான் மாதத்தின் இறுதிப்பத்து நாட்களில் இஃதிகாப் இருந்து வந்தார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்).

3. நபி அவர்கள் ஒவ்வொரு றமழானிலும் பத்து நாட்களே இஃதிகாஃப இருப்பார்கள். அவர்கள் மரணித்த ஆண்டில் இருபது நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் (புஹாரி).

4. ஆயிஷா(றழி) அறிவிக்கிறார்கள்: நபி அவர்கள் பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள்; நான் அதை வாருவேன், இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்கு வரமாட்டார்கள் (புஹாரி).


றமழானில் நபிகளார் : 17
                  
வானவர்களும் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களும் இறையருளோடு பூமிக்கு இறங்குகின்ற, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த, முன் பாவங்களெல்லாம் மன்னிக்கப்படுகின்ற புனிதமிகு லைலதுல் கத்ர் இரவை றமழான் பிந்திய பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் - அதிலும் குறிப்பாக பிந்திய ஏழு இரவுகளில் -  தேடி அடைந்துகொள்ளுமாறு நபிகளார் தம் தோழர்களை அடிக்கடி தூண்டுவார்கள் :

1. 'றமழானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள்' (புஹாரி).

2. 'நபி அவர்கள் லைலதுல் கத்ர் பற்றி (அது எந்த இரவு என்று) அறிவிப்பதற்காகத் (தம் வீட்டிலிருந்து) வெளியே வந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ணுற்ற நபி அவர்கள்) “லைலதுல் கத்ர் பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் (வீட்டைவிட்டு) வெளியேறினேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாக இருக்கலாம். (றமழான் மாதத்தின்) இருபத்து ஏழு, இருபத்து ஒன்பது,  இருபத்து ஐந்து ஆகிய இரவுகளில் அதனை அடைய முயலுங்கள்' (புஹாரி, முஸ்லிம்).

3. ' நீங்கள் லைலதுல் கத்ர் இரவை (றமழானின்) இறுதிப்பத்து இரவுகளில்  தேடிக்கொள்ளுங்கள். உங்களில் ஒருவருக்குப் பலவீனம், அல்லது இயலாமை ஏற்பட்டால், எஞ்சிய (இறுதி) ஏழு இரவுகளில் (ஒன்றிலாவது அதைத் தேடும் முயற்சியில்) தளர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுவிட வேண்டாம்' (முஸ்லிம்).

- சில ஸஹாபாக்கள் இருபத்து ஏழாம் இரவில் லைலதுல் கத்ர் இருப்பதாக கனவு கண்டதை நபியவர்களிடம் கூறிய போதும் பிந்திய பத்து நாட்களில் அதை தேடி அடையுமாறுதான் நபி வழிகாட்டினார்கள் :

நபித்தோழர்கள் லைலத்துல் கத்ர் இரவு இருபத்து ஏழாம் இரவு என்று கனவு கண்டு நபி  அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி  அவர்கள் “உங்கள் கனவைப் போல் நானும் கனவு கண்டேன். அது கடைசிப் பத்து நாள்களில்தான் அமைந்துள்ளது. லைலத்துல் கத்ர் இரவை அடைய முயல்கிறவர் கடைசிப் பத்தில் தேடட்டும்“ என்று கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்).


றமழானில் நபிகளார் : 18

புனிதமிகு இரவான லைலதுல் கத்ரை றமழான் பிந்திய பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் முயற்சித்து அடையுமாறு கூறிய நபிகளார், தமது வாழ்நாளில் ஒரு தடவை 21வது இரவில் அடைந்துகொண்டார்கள் (புஹாரி, முஸ்லிம்).

மற்றொரு தடவை 23 வது இரவில் அடைந்துகொண்டார்கள்  (முஸ்லிம்).

மகத்தான இவ்விரவின் அடையாளங்கள் பற்றி பின்வரும் இரு ஹதீஸ்களில் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள் :

1. 'லைலதுல் கத்ரை அடுத்து வரும் காலை நேர சூரியன் ஒளிச்செறிவின்றி உதயமாகும்' (முஸ்லிம்).

2. 'லைலதுல் கத்ர் வெப்பமோ, குளிர்ச்சியோ இல்லாத சாந்தமான இரவாக இருக்கும். மறுநாள் சூரியன் ஒளி குன்றியும் செந்நிறமாகவும் உதயமாகும்' (இப்னு ஹுஸைமா, முஸ்னதுத் தயாலிஸி).

- லைலதுல் கத்ர் இரவில் நின்று வணங்குவதால் கிடைக்கும் பாக்கியம் பற்றி நபிகளார் பின்வருமாறு கூறுகிறார்கள் :

'ஈமானோடும் (அல்லாஹ்விடம்) நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலதுல் கத்ர் எனும் புனித இரவில் நின்று வணங்குபவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும்' (புஹாரி, முஸ்லிம்).

- லைலதுல் கத்ரை அடைய முயற்சிப்பவர் (றமழான் பிந்திய பத்து ஒற்றை இரவுகளில்) அடிக்கடி ஓத வேண்டிய துஆ எது என அன்னை ஆயிஷா (றழி) அவர்கள் நபிகளாரிடம் வினவிய போது பின்வரும் துஆவை கற்றுகொடுத்தார்கள் :

"அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ " 

(யா அல்லாஹ், நிச்சயமாக நீ மன்னிப்பவன், மன்னிப்பை விரும்புகிறாய், என்னை மன்னித்துவிடுவாயாக)

(அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜஹ், நஸாஈ).


றமழானில் நபிகளார் : 19

றமழான் விடைபெற்றுச் செல்லும் நாட்களில் ஸகாதுல் பித்ர் என்ற கட்டாய தர்மத்தை வழங்குமாறு நபிகளார் வழிகாட்டல்கள் வழங்குவார்கள் :

ஸகாதுல் பித்ர் பற்றிய சில சட்டங்கள் :

1.நோக்கம் :

"தீய பேச்சு, தீய நடத்தை ஆகியவற்றிலிருந்து நோன்பாளியை பரிசுத்தப்படுத்தவும் ஏழைகளுக்கு உணவாகவும் நபிகளார் ஸகாதுல் பித்ரை கடமையாக்கினார்கள்" (அபூதாவூத், இப்னு மாஜஹ்).

2. யார் கொடுக்க வேண்டும் ?

இது செல்வந்தர்கள் மட்டும் நிறைவேற்றும் கடமையல்ல. மாறாக, பெருநாளன்று தானும் தன் குடும்பத்தாரும் உண்பதற்கு போதுமான வசதியை விட மேலதிக வசதியை பெற்றிருக்கும் ஒவ்வொரு குடும்பத் தலைவரும் தனக்காகவும் தன் குடும்பத்திலுள்ள மனைவி, பிள்ளைகள் உட்பட தன் செலவில் தங்கியிருக்கும் ஒவ்வொருவர் சார்பாகவும் கொடுக்க வேண்டும். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு கொடுக்கத் தேவையில்லை என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

3. யாருக்கு கொடுக்க வேண்டும் ?

முஸ்லிம்களில் உள்ள ஏழைகளுக்கு மட்டும் கொடுக்க வேண்டும். ஸகாத் கொடுப்பது போன்று எட்டு கூட்டத்தாருக்கு கொடுப்பதல்ல. ஏனெனில் நபிகளார் மேற்படி ஹதீஸில் 'ஏழைகளுக்கு உணவாக' என்று ஏழைகளை மட்டுமே குறிப்பிடுகிறார்கள்.

4. எதை கொடுக்க வேண்டும் ?

நபிகளார் காலத்தில் பிரதான உணவு பண்டங்களாக காணப்பட்ட கோதுமை, பேரீத்தம்பழம், உலர்ந்த திராட்சை, பாலாடைக்கட்டி போன்றவற்றை ஸஹாபாக்கள் ஸகாதுல் பித்ராக வழங்கிவந்தார்கள் (புஹாரி, முஸ்லிம்).

இவ்வகையில் நமது நாட்டு பிரதான உணவுத் தானியமான அரிசியை வழங்குவது சிறந்ததாகும்.

5. அளவு என்ன ?

நபிகளார் காலத்தில் ஒரு 'ஸாஉ' (இரு கைகளாலும் நான்கு பிடி) ஸகாதுல் பித்ர் அளவாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த அளவை தற்கால முறைக்கு மாற்றும் போது ஒரு குடும்பத் தலைவர் தன் சார்பிலும் தன் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவர்  சார்பிலும் 02 கொத்து கொடுக்கமுடியும். (கிலோ கணக்கின்படி 2 1/2 கிலோ, 3 கிலோ என்ற வேறுபட்ட கருத்துகள் காணப்பட்டாலும் 03 கிலோ வழங்குவது பேணுதலானது). 

6. எப்போது கொடுக்க வேண்டும் ?

நோன்பு பெருநாளுக்கான பிறை பார்த்ததிலிருந்து மறுநாள் பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன் கொடுத்து முடித்துவிட வேண்டும். 

நபி கூறினார்கள் : "நோன்பு பெருநாள் தொழுகைக்கு முன் யார் இக்கடமையை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அது அங்கீகரிக்கப்பட்ட ஸகாத்தாக நிறைவேறும். நோன்பு பெருநாள் தொழுகைக்கு பின் யார் அதை கொடுக்கிறாரோ அது ஸதகாவாகவே கருதப்படும்" (அபூதாவூத்).

நபிகளார் காலத்தில் ஸகாதுல் பித்ர் கடமையானது ஸகாத்தைப் போன்று கூட்டாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸஹீஹுல் புஹாரியில் இடம்பெறும் ஒரு நீண்ட ஹதீஸில் அபூஹுரைரா (றழி) அவர்கள் கூறும் போது 'ஸகாதுல் பித்ர் பொருட்களை பாதுகாப்பதற்காக என்னை நபியவர்கள் பொறுப்பாக்கினார்கள்' என்று குறிப்பிடுகிறார்கள். ஸகாதுல் பித்ர் பொருட்கள் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு கூட்டாக நிறைவேற்றும் நோக்கில் வைக்கப்பட்டிருந்தமையால்தான் அவற்றை பாதுகாப்பதற்காக அபூஹுரைரா (றழி) அவர்கள் பொறுப்பாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

அத்தோடு, ஸஹாபாக்கள் நோன்பு பெருநாளைக்கு ஒரு தினம் அல்லது இரு தினங்களுக்கு முன் தமது ஸகாதுல் பித்ரை வசூலிப்பதற்காக நியமிக்கப்பட்ட பொறுப்பாளரிடம் (ஆமில்) வழங்கியுள்ளார்கள் (புஹாரி, இப்னு ஹுஸைமா). 

இமாம் புஹாரி (றஹ்) அவர்கள் கூறும் போது, 'ஸஹாபாக்கள் நோன்பு பெருநாளுக்கு ஒரு தினம் அல்லது இரு தினங்களுக்கு முன் தமது ஸகாதுல் பித்ரை வசூலிப்பாளர்களிடம் வழங்குவார்கள், ஏழைகளுக்கல்ல' என்று குறிப்பிடுகிறார்கள்.

இமாம் மாலிக் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : 'இப்னு உமர் (றழி) அவர்கள் நோன்பு பெருநாளைக்கு இரு தினங்கள் அல்லது மூன்று தினங்களுக்கு முன் தனது ஸகாதுல் பித்ரை வசூலிப்பாளர்களிடம் ஒப்படைப்பார்கள்' (முவத்தா)

இவ்வாறு பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்ட ஸகாதுல் பித்ர் பொருட்கள் பெருநாள் பிறை பார்த்ததிலிருந்து மறுநாள் பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன் ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. 
(பார்க்க : 'பத்ஹுல் பாரீ' மற்றும் 'துஹ்பதுல் அஹ்வதீ').

ஆயினும் ஒவ்வொருவரும் தமது ஸகாதுல் பித்ரை தனித்தனியாக வழங்கினாலும் கடமை நிறைவேறும் என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். அல்லாஹு அஃலம்.


றமழானில் நபிகளார் : 20

றமழான் முடிவடைந்ததும் நபிகளார் நோன்புப் பெருநாளை கொண்டாடவும் அதன் முதல் அங்கமாக பெருநாள் தொழுகையை நிறைவேற்றவும் வழிகாட்டுவார்கள்.

பிரதேசமொன்றிலுள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்றுகூடுவதன் மூலம்   முஸ்லிம்களின் ஒற்றுமையை பலப்படுத்தவும் இஸ்லாத்தின் அடையாளத்தை பறைசாற்றவும் பெருநாள் தொழுகைகளை திறந்த மைதானம் ஒன்றிலேயே வழக்கமாக நிறைவேற்றுவார்கள் :

1.' நபியவர்கள் நோன்பு பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் தொழும் மைதானத்திற்கு சென்று பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவார்கள்' (புஹாரி, முஸ்லிம்).

2. 'நபிகளார் பெருநாள் தினத்தில் திடலுக்கு செல்வார்கள். அங்கே மறைப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் அவர்கள் செல்லும் போது அரை ஈட்டி அளவான தடி கொண்டுசெல்லப்பட்டு திடலில் நடப்படும். அதை தடுப்பாக (ஸுத்ரா) கொண்டு அதை முன்னோக்கி நின்று தொழுகை நடத்துவார்கள்' (புஹாரி, முஸ்லிம்).

புனித மஸ்ஜிதுந் நபவிக்கு கிழக்கே ஆயிரம் முழம் தொலைவிலுள்ள ஒரு திறந்த வெளியே நபிகளாரும் ஸஹாபாக்களும் பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றும் இடமாக இருந்தது (பார்க்க : 'பத்ஹுல் பாரீ'- பாகம்: 3,  'அஹ்பாருல் மதீனா').

' மஸ்ஜிதுந் நபவியில் தொழப்படும் ஒரு தொழுகை மக்கா ஹரமை தவிரவுள்ள ஏனைய பள்ளிவாசல்களில் தொழப்படும் ஆயிரம் தொழுகைகளை விட சிறந்தது' (திர்மிதி, இப்னு மாஜஹ்) என்ற அளவுக்கு மஸ்ஜிதுந் நபவி சிறப்பும் புனிதமும் நிறைந்தது என்ற போதிலும் பொது மைதானத்தையே பெருநாள் தொழுகைக்கான இடமாக தேர்வுசெய்தார்கள். தனது சமூகத்துக்கும் இதை வலியுறுத்தினார்கள். 

ஆண்களையும் பெண்களையும் அதிலும் குறிப்பாக, மாதவிடாய்ப் பெண்களையும் கூட தொழும் மைதானத்திற்கு வருமாறு கட்டளையிட்டது மட்டுமன்றி, அணிந்து செல்ல ஆடையில்லாத பெண்ணுக்கு ஆடை கொடுத்து அழைத்துவரவேண்டும் எனும் அளவுக்கு இதை வலியுறுத்தினார்கள் :

'இரண்டு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்கு) அழைத்துவருமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்“ என்றும் கட்டளையிடப்பட்டோம்.  நபியவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் “இறைத்தூதர் அவர்களே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?“ எனக் கேட்டதற்கு, “அவளுடைய தோழி தன்னிடமுள்ள (மேலதிகமான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்“ என்று நபியவர்கள் பதிலளித்தார்கள்” என உம்மு அதிய்யா(றழி) அறிவிக்கிறார்கள் (புஹாரி, முஸ்லிம்).

மஸ்ஜிதுந் நபவியில் நிலவிய இடப்பற்றாக்குறை காரணமாகத்தான் நபிகளார் பொது மைதானத்திற்கு மக்களை அழைத்து செல்வார்கள் என்ற வாதம் தவறானது. மஸ்ஜிதுந் நபவியில் இடம் போதவில்லை என்றால் அன்று மதீனாவிலிருந்த ஏனைய மஸ்ஜிதுகளில் ஏனைய தொழுகைகளைப் போன்று பெருநாள் தொழுகையையும் நிறைவேற்றுமாறு நபிகளார் பணித்திருக்கலாம். ஏனெனில் நபிகளாரின் காலத்திலேயே மதீனாவை சுற்றிலும் பல பள்ளிவாசல்கள் இருந்தன. அவற்றுள் மஸ்ஜிதுல் பத்ஹ், மஸ்ஜிது குபா, மஸ்ஜிது பனீகுரைழா, மஸ்ஜிதுல் பழீஹ், மஸ்ஜிதுல் கிப்லதைன் போன்றவை முக்கியமானவை. (பார்க்க : 'பத்ஹுல் பாரீ', பா:01, 'ஸலாதுல் ஈதைன் பில் முஸல்லா ஹியஸ் ஸுன்னா').

எனவே, பெருநாள் தொழுகை என்பது ஒரு பிரதேசத்திலுள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அனைவரும் ஒரு பொது மைதானத்தில் ஒன்றுகூடி நிறைவேற்றவேண்டிய விசேட தொழுகை என்பது உறுதியாகிறது. இதன் மூலமே மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பரிமாறவும் ஒற்றுமையை பலப்படுத்தவும் பெருநாள் வழங்கப்பட்டதன் உண்மையான நோக்கத்தை நிறைவுசெய்யவும் வழியேற்படுகிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு அருள்புரிவானாக.


பி.கு :

'றமழானில் நபிகளார்' என்ற இத்தொடர் இத்துடன் நிறைவுபெறுகிறது. றமழானில் நபிகளாரின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பது பற்றிய குறிப்புகளை சுருக்கமாக வழங்குவதே இத் தொடர் எழுதப்பட்டதன் நோக்கம். குறித்த தலைப்பொன்றில் நீண்ட ஆய்வை மேற்கொள்வது இதன் நோக்கமாக இருக்கவில்லை. இதற்காக பின்வரும் நூல்களை பயன்படுத்தினேன்:

1. 'ஹாகதா கானந் நபி பீ றமழான்' : பைஸல் பின் அலி அல்புஃதானி

2. 'மஅந் நபி பீ றமழான்' : கலாநிதி பாலிஹ் பின் முஹம்மத்

3. 'அந் நபி பீ றமழான்' : முஹம்மத் பின் ஷாமீ

4. 'அந் நபி பீ றமழான்' : கலாநிதி அப்துல் ஹகீம் அல்அனீஸ்

5. 'தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வஸஹீஹிஸ் ஸுன்னா' : ஆதில் பின் யூஸுப் அல்அஸ்ஸாஸி

அல்லாஹ் நூலாசிரியர்கள் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக.

இத்தொடரை வாசித்த, உற்சாகப்படுத்திய, பிரார்த்தித்த, பிறருடன் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக.


பெருநாள் தின ஒழுங்குகள் 

1. நோன்புப் பெருநாளில் ஏதேனும் சாப்பிட்ட பின்னரும் ஹஜ் பெருநாளில் எதுவும் சாப்பிடாமலும் பெருநாள் தொழுகை திடலுக்கு செல்லுதல் :

அனஸ் (றழி) மற்றும் புரைதா (றழி) அறிவிக்கிறார்கள்: 'நபிகளார் நோன்பு பெருநாளில் பேரீத்தம்பழங்களை சாப்பிட்டு விட்டும் ஹஜ் பெருநாளில் எதுவும் சாப்பிடாமலும் (பெருநாள் தொழுகைக்கு) வெளியாகிச் செல்வார்கள்' (புஹாரி, இப்னு மாஜஹ்).

2. குளித்து விட்டு பெருநாள் தொழுகைக்கு செல்லல் :

இப்னு உமர் (றழி) அவர்கள் குளித்துவிட்டு பெருநாள் தொழுகை மைதானத்துக்கு செல்வார்கள் (முவத்தா).

3. பெருநாள் தொழுகையை ஒரு பிரதேசத்திலுள்ள அனைவரும் பொது மைதானத்தில் நிறைவேற்றுதல் :

அபூஸஈத் அல்குத்ரீ (றழி) கூறுகிறார்கள் : ' நபியவர்கள் நோன்பு பெருநாளிலும் ஹஜ் பெருநாளிலும் தொழும் மைதானத்துக்கு சென்று பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவார்கள்' (புஹாரி, முஸ்லிம்).

4. தொழும் மைதானத்திற்கு செல்வதற்கும் திரும்பிவருவதற்கும் வெவ்வேறு வழிகளை பயன்படுத்தல் :

அபூஹுரைரா (றழி) கூறுகிறார்கள் : 'நபியவர்கள் பெருநாள் தொழுகைக்காக ஒரு பாதையால் சென்றால் திரும்பிவரும் போது வேறு ஒரு பாதையால் வருவார்கள்' (திர்மிதி, இப்னு மாஜஹ்).

5. புதிய அல்லது இருப்பதில் அழகிய ஆடையை அணிதல் :

நபியவர்கள் ஜும்ஆவுக்கும் பெருநாள் தினத்திலும் அணிவதற்காக ஒரு ஜுப்பா வைத்திருந்தார்கள் (இப்னு ஹுஸைமா).

6.நேரகாலத்தோடு தொழல் :

அப்துல்லாஹ் பின் புஸ்ர் (றழி)  கூறுகிறார்கள் : ' நாங்கள் நபியின் காலத்தில் சூரியன் உதயமாகி ஒரு ஈட்டி அல்லது இரு ஈட்டிகள் உயர்ந்திருக்கும் நேரத்தில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிவிடுவோம் (அபூதாவூத், இப்னுமாஜஹ்). (அதாவது சூரியன் உதயமாகி சுமார் 20 நிமிடங்கள் கடந்த பின்...)

7. ஏழைகள், தேவையுடையோருக்கு அதிகமாக ஸதகா செய்தல் :

நபியவர்கள் பெருநாள் தொழுகை நிறைவடைந்த பின் பெண்களின் பக்கம் சென்று உரைநிகழ்த்தும் போது அதிகமாக ஸதகா செய்யுமாறு தூண்டுவார்கள். அவர்கள் தமது காதுகளிலும் கைகளிலும் அணிந்திருக்கும் நகைகளை கழற்றி ஸதகா செய்வார்கள் (புஹாரி, முஸ்லிம்).

8. பெருநாள் தினத்தில் அதிகமாக தக்பீர் கூறுதல் :

ஸஹாபாக்கள் சிலர் கூறிய தக்பீர் வாசகங்கள் ஹதீஸ் நூல்களில் பதிவாகியுள்ளன :

பின்வரும் தக்பீர் வாசகங்களை இப்னு மஸ்ஊத் (றழி) கூறுவார்கள்: அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து"  (இப்னு அபீஷைபா)

9. வாழ்த்து கூறுதல் :

பெருநாள் தினத்தில் ஸஹாபாக்கள் தம்மிடையே "தகப்பலள்ளாஹு மின்னா வமின்கும்" என வாழ்த்துக் கூறுவார்கள் (நூல் : பத்ஹுல் பாரீ)
(பொருள் : 'அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நற்செயல்களை ஏற்றுக்கொள்வானாக).

10. மார்க்க வரையறைகளை பேணிய நிலையில் பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடல் :

முக்கியமாக இசை, ஆண்-பெண் கலப்பு போன்றவற்றை முற்றாக தவிர்ப்பதோடு, தொழுகை போன்ற மார்க்க கடமைகளை பாழடிக்காமலும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பங்கேற்பதை மார்க்கம் அனுமதித்துள்ளது.

ஆயிஷா(றழி) அறிவிக்கிறார்கள் : புஆஸ்(எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை மதீனாவாசிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூ பக்ர்(றழி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். “அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசையா?“ என்று அபூ பக்ர்(றழி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாளின் போதாகும். அப்போது நபி அவர்கள் “அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாட்கள் உள்ளன. இது நம்முடைய பெருநாளாகும்” என்று கூறினார்கள் (புஹாரி).

ஆயிஷா (றழி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெருநாள் தினத்தில் அபீசீனியர்கள் (ஆயுதங்களை வைத்து) குதித்து விளையாடிக் கொண்டு பள்ளிவாசலுக்குள் வந்தார்கள். உடனே நபி அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் (வந்து) எனது தலையை நபி  அவர்களது தோள்மீது வைத்துக்கொண்டு அபிசீனியர்களின் (வீர) விளையாட்டுகளைப் பார்க்கலானேன். இறுதியில் அவர்(களின் வீர விளையாட்டு)களிலிருந்து நானாகத் திரும்பிச் சென்றேன்
(புஹாரி, முஸ்லிம்).


- " ஹாகதா கானந் நபிய்யு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பீ றமழான்" என்ற அறபு நூலிலிருந்து சில பகுதிகள்...

அறபு மூலம் : அஷ்ஷெய்க் பைஸல் பின் அலி அல்பஃதானீ


أحدث أقدم