ஷஃபான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

-ஷைய்க் இன்திகாப் உமரீ

இஸ்லாம் காலங்களை பற்றி கூறுகின்ற போது ஒரு வருடத்துக்கு பன்னிரெண்டு மாதங்கள் என்று கூறுகின்றது அவற்றில் நான்கு மாதங்களை இஸ்லாம் புனிதமான மாதங்களாக கூறுகின்றது ரமழான் மாதத்தை கூட இஸ்லாம் புனிதமாதமாக கூற வில்லை ஆனால் இன்று எம் சமூகம் வரம்பு மீறி ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் நாளை புனித நாளாக எடுத்து கொண்டாடுவதை காணமுடிகின்றது எனவே நபி ஸல் அவர்கள் ஷஃபான் மாதத்தை எப்படி கழித்தார்கள்? இந்த மாதத்துக்கு நபி ஸல் அவர்கள் கூறிய சிறப்புக்கள் என்ன..? இன்று சமூகத்தில் நடந்தேரும் வணக்கங்களின் நிலை என்ன ..? என்ற தகவல்களை ஆதார பூர்வமாண ஹதீஸ்களில் இருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

அல்லாஹு தஆலா சொல்கின்றான்:

اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ‌ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ ۙ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ‌ وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَآفَّةً كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً‌  وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ‏

உண்மையாக, அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். வானங்களையும் பூமியையும் அவன் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் இவ்வாறே உள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. இதுதான் சரியான நெறிமுறையாகும். எனவே, இம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள்! எவ்வாறு, இணை வைப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களோடு போரிடுகிறார்களோ அவ்வாறே நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுடன் போர்புரியுங்கள்! மேலும் இறையச்சம் உள்ளவர்களோடு அல்லாஹ் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
(அல்குர்ஆன் : 9:36)

புனிதமிக்க அந்த நான்கு மாதங்கள் எவை..?

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை – துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.
என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹ் புகாரி: 3197 அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்)

நபி ஸல் அவர்கள் ஷஃபானில் செய்த விஷேட அமல் என்ன..?

ஆயிஷா(ரலி) அறிவித்தார்: ‘(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: ‘(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டுவிடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!’
(ஸஹீஹ் புகாரி:1969 அத்தியாயம் : 30. நோன்பு)
ஆயிஷா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில ஆண்டுகளில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். ‘உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!’ என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையே விருப்பமானதாக இருந்தது.ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.
(ஸஹீஹ் புகாரி:1970 அத்தியாயம் : 30. நோன்பு)
ஷஃபான் மாதம் முழுவதும் நோன்பு நோற்க்க முடியுமா..?

நபி ஸல் அவர்கள் மாதம் முழுவதும் நோன்பு நோற்றார்கள் என்றால் அது ரமளான் மாதத்தில் மாத்திரமே என்று ஆயிஷா ரலி அவர்கள் தெளிவாக கூறிய செய்தியை மேலே பார்தோம் அதே போல் நபி ஸல் அவர்கள் அதிகமாக நோன்பு நோற்ற மாதம் ஷஃபான் மாதமாகும் எனவே இம்மாதத்தில் அதிகமாக நாம் நோன்பு நோற்க்க முடியும் மாதம் முழுக்க நோன்பு நோற்பது தடை செய்யப்பட்ட காரியமாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ إِلَّا أَنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمَهُ فَلْيَصُمْ ذَلِكَ الْيَوْمَ (البخاري, ومسلم)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளானுக்கு முந்தைய நாளும் அதற்கு முந்தைய நாளும் நோன்பு நோற்காதீர்கள். (வழக்கமாக அந்த நாளில்) ஏதேனும் நோன்பு நோற்கும் மனிதரைத் தவிர! அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும். – இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது)
(ஸஹீஹ் முஸ்லிம்:1976 அத்தியாயம் : 13. நோன்பு)

ஒருவர் திங்கள் வியாழன் பிடிக்கும் வழக்கமான நோன்பு அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பிடிக்கும் நபி தாவூத் அலை அவர்கள் நோற்ற நோன்பு இந்நாளில் வந்தால் அவர் ஷஃபான் பிறை 28’29 நோன்பு நோற்பது தவறு கிடையாது அடுத்தவர்கள் இந்நாற்களில் நோன்பு நோற்பது தடை செய்யப்பட்ட காரியமாகும் என்பதை இந்த நபி மொழி எமக்கு தெளிவாக விளக்குகின்றது இதன் மூலம் ஷஃபான் முழுவதும் ஒருவர் நோன்பு நோற்க்க அனுமதி கிடையாது என்பதை தெளிவாக நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

ஷஃபான் பிறை பதினைந்துக்கு பின் நோன்பு நோற்பதை நபி ஸல் அவர்கள் தடை செய்துள்ளார்களா ..?

عن العلاء بن عبدالرحمن عن أبيه عن أبي هريرة عن النبي عليه الصلاة والسلام قال: ( إذا انتصف شعبان فلا تصوموا)

رواه أحمد(٩٤١٤) وأبو داود(٢٣٣٧) والترمذي(٧٣٨)

ஷஃபான் மாதத்தின் அரைவாசியை அடைந்தால் நீங்கள் நோன்பு நோற்க்க வேண்டாம் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

இந்த ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மறுக்கப்பட வேண்டிய செய்தி என இமாம் அஹ்மத் , இமாம் இப்னு ஹஜர், இமாம் இப்னு மஈன், இமாம் பைஹகீ, இமாம் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, அபூ ஸுர்ஆ அர்ராஸி, இமாம் தஹபீ, இமாம் இப்னு ரஜப் போன்ற பல ஹதீஸ்கலை வல்லுனர்கள் இதன் அறிவிப்பாளர் வரிசையை ஏற்றுக்கொள்ள முடியாத செய்தி என குறைகண்டு விமர்சனம் செய்துள்ளார்கள்.
 

நபி ஸல் அவர்கள் ரமளானுக்கு முந்திய நாளும் அதற்கு முந்திய நாளும் நோன்பு (ஷஃபானின் இறுதி இரண்டு நாள் வரை நோன்பு ) பிடிக்க வேண்டாம் என தடை செய்த செய்தி அதுவரை நோன்பு பிடிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
 

நபி ஸல் அவர்கள் ஷஃபான் மாத்தில் அதிகம் நோன்பு நோற்றார்கள் என்ற பொதுவான செய்துக்கு இந்த செய்தி முரணாக உள்ளது
இப்படி பல முக்கிய காரணங்களால் இந்த செய்தி பலஹீனமான செய்தி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஷஃபான் பதினைந்துக்கு பின் நோன்பு பிடிக்க எந்த தடையும் ஆதாரபூர்வமான செய்திகளில் வரவில்லை என்பதோடு வந்திருக்க கூடிய இந்த ஒரு செய்தியும் பலஹீனமான செய்தியாகும்.

ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பதை நபி ஸல் வலியுறுத்தி கூறி உள்ளார்களா..?

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?” என்று கேட்டார்கள். அம்மனிதர், “இல்லை” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் ரமளான் நோன்பை முடித்ததும் அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள். இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்:2155 அத்தியாயம் : 13. நோன்பு)

நபி ஸல் அவர்கள் ஷஃபானில் நோன்பு நோற்றது மற்றுமின்றி இம்மாதத்தில் நோன்பு நோற்காதவரை ரமளான் மாதம் முடிந்ததும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்கும்படி வலியுறுத்தி கூறி உள்ளார்கள்.

நபி ஸல் அவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்றமைக்கு காரணம் என்ன..? ஏதும் சிறப்புக்கள் உண்டா?

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا ثَابِتُ بْنُ قَيْسٍ أَبُو الْغُصْنِ، – شَيْخٌ مِنْ أَهْلِ الْمَدِينَةِ – قَالَ حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْمَقْبُرِيُّ، قَالَ حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ ‏.‏ قَالَ ‏ “‏ ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ ‏”‏ ‏.‏

سنن النسائي – الصيام (2357)
مسند أحمد – مسند الأنصار رضي الله عنهم (5/201)
صححة ابن خزيمة
و صححه الألباني في “إرواء الغليل” (949)

நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும்.
இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமல் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)
நூல் : நஸாஈ 2357, முஸ்னத் அஹ்மத் (5/201)

நபி ஸல் அவர்கள் இந்த சிறப்பை தவிர வேற எந்த ஒரு சிறப்பையும் ஷஃபானுடைய மாதத்துக்கு கூற வில்லை நாமும் இம்மாதத்தில் நோன்பு நோற்று எமது செயல்கள் அல்லாஹ்விடம் சமர்பிக்கப்படும் போது நோன்பாளியாக இருக்க ஆசைவைக்க வேண்டும்.

இது தவிர இந்த மாதம் பற்றியும் ஷஃபானின் பதினைந்தாம் இரவு பற்றியும் வரக்கூடிய அனைத்து செய்திகளும் பலஹீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளுமாகும். விரிவஞ்சி அவற்றை இங்கே தவிர்கின்றேன் நபி ஸல் அவர்கள் இந்த மாதத்தை எப்படி கழித்தார்களோ அந்த முறைப்படி கழித்து நாளை மறுமையில் வெற்றி பெரும் கூட்டத்தில் சேர அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும்.
Previous Post Next Post