ஸகாத்தின் முக்கியத்துவம்

بسم الله الرحمن الرحيم


- S.H.M. இஸ்மாயில் ஸலபி

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஸகாத்தும் ஒன்றாகும். பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட இக்கடமை, உரிய முறையில் நிறைவேற்றப்படும்போது சமூகம் சார்ந்த பல்வேறு சவால்களைச் சமாளிக்கும் சாத்தியம் ஏற்படுகின்றது. இக்கடமையின் முக்கியத்துவம், சிறப்பு என்பவற்றையும், இதனைக் கூட்டு முறையில் நடைமுறைப் படுத்துவதின் அவசியத்தையும் இங்கு சுருக்கமாக நோக்குவோம்.

அடிப்படைக் கடமை:

‘இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிர்மாணிக்கப் பட்டுள்ளது.

(1) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வை அன்றி வேறு யாரும் இல்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுதல்.

(2) தொழுகையை நிலைநாட்டுதல்.

(3) ஸகாத்தைக் கொடுத்தல்.

(4) ஹஜ் செய்தல்.

(5) ரமழானில் நோன்பு நோற்றல். என்பனவே அவை யாகும் என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்’ (புகாரி).

இந்தக் கருத்தில் வரக்கூடிய ஏராள மான அல்குர்ஆன் வசனங்களும்; ஹதீஸ்களும் ஸகாத் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமை என்பதை உணர்த்துகின்றன.

ஸகாத் தூய்மைப்படுத்தும்:

ஸகாத் என்றால், தூய்மை, வளர்த்தல் என்ற அர்த்தங்களைத் தரும்.

‘இன்னும் அவ்விருவருக்கும் பரிசுத்தத்திலும், (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்கக்கூடிய ஒரு மகனை, அவ்விருவருடைய இறைவன் கொலை யுண்டவனுக்குப் பதிலாகக் கொடுப்பதை நாம் விரும்பினோம்’ (18:81).

இங்கே ‘சகாதன்’ என்ற சொல் பரிசுத்தமான என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘அவர்களின் செல்வங்களிலிருந்து, ஸகாத்தை நீர் எடுத்து அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி பரிசுத்தப் படுத்துவீராக’ (9:103)

என்ற வசனமும் ஸகாத் தூய்மையை வழங்கும் என்று கூறுகின்றது.

ஸகாத் வழங்கும் தூய்மை
‘ஸகாத்’ அதைக் கொடுப்போரிடம் பல் வேறுபட்ட தூய்மை நிலையை ஏற்படுத்துகின்றது. அவற்றைச் சுருக்கமாக நோக்குவோம்.

1- பொருள்வெறி நீங்கல்
மனிதனிடம் இயல்பாகவே பொருளாதாரத்தில் மோகம் இருக்கின்றது. பொருளாதாரத்தைத் தேடி, திரட்டி அதைப் பார்த்து மகிழ்வடையும் மனநிலை காணப்படுகின்றது. தொடராக ஸகாத் வழங்கிவரும் ஒருவனிடம், பொருளாதாரத்தின் மீதான வெறித்தனம் தணிந்து அதிலே ஓரளவு தாராளத்தன்மை ஏற்படும். இது ஏற்பட்டு விட்டால் நியாயமான முறையில் பணம் திரட்டும் பக்குவம் ஏற்பட்டுவிடும்.

2- கஞ்சத்தனம் நீங்கல்
தான் தேடிய செல்வத்தை, தான் கூட அனுபவிக்காமல், அதனைப் பார்த்துப் பார்த்து ரசிக்கும் தன்மை பலரிடம் காணப்படுகின்றது. தனக்கே செலவழிக்காதவன் பிறருக்கு எப்படிக் கொடுப்பான்? இந்தக் கட்டாய தர்மத்தைச் செய்பவனிடம் கஞ்சத்தனம் விடுபட்டுவிடும். அதன் பின் அவன் தாராளத் தன்மையுடன் உபரியான தர்மங்களைச் செய்பவனாக மாறிவிடுவான். கஞ்சத்தனம் இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்ட குற்றமாகும்.

‘அத்தகையோர் உலோபித்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் உலோபித்தனம் செய்யும் படி தூண்டி அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம் ‘ (4:37).

‘நான் கஞ்சத்தனத்தை விட்டும் உன்னிடம் பாது காவல் தேடுகின்றேன், என நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள்’ (புகாரி).

இந்த வகையில் உள்ளத்தில் உள்ள கஞ்சத்தனத்தை நீக்கும் மருந்தாக ஸகாத் அமைந்துள்ளது.

3- பொறாமை நீங்குதல்
‘தனக்குக் கிடைத்தது அடுத்தவனுக்குக் கிடைத்து விடக்கூடாது, அல்லது அடுத்தவனுக்குக் கிடைத்தது அவனிடமிருந்து அழிந்துவிட வேண்டும்’ என்ற உணர்வே பொறாமையாகும். ஸகாத் கொடுப்பவன் தன்னைப் போல் அடுத்தவனும் பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று விரும்புவதால் அவனிடமிருந்து இயல்பாகவே பொறாமைக் குணம் எடுபட்டு விடுகின்றது. ஏழைகள்கூட செல்வந்தர்கள் மீது பொறாமை கொள்ளலாம். அதே செல்வந்தர்கள் ஸகாத் மூலம் தமக்கு உதவும் போது தமக்கு உதவுபவர்கள் மீது அவர்களுக்கு பொறாமை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, ஸகாத் கொடுப்பவர், எடுப்பவர் இருவரிடமும் பொறாமை என்ற தீய குணம் ஏற்படுவதைத் தவிர்க்கின்றது.

4- கர்வம் அற்றுப்போதல்
சிலரிடம் பெருமை, கர்வம் என்ற தீய குணம் இருக்கலாம். தன்னைப் போல அடுத்தவனும் உயர்வடைவதை, கர்வம் கொண்டவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால், ஸகாத் நடைமுறை செல்வந்தர்களிடம் இந்த கர்வ உணர்வை ஒழிக்கின்றது. ஏழைகளும் செல்வந்த நிலையை அடைவதை விரும்புபவனிடம் கர்வம் அற்றுப்போகும்.

5- சமூக உணர்வு அதிகரித்தல்:
செல்வந்தர்களில் அதிகமானோர் சமூக உணர்வு அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் ஸகாத் வழங்குபவர்களாக மாறும் போது சமூகத்தில் நலிவடைந்தவர்களின் வாழ்க்கை நிலவரத்தைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் விடயத்தில் கரிசனை காட்டவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இவர்கள் ஏழைகளின் விடயத் தில் அக்கறை செலுத்தும் போது, இயல்பாக சமூக உணர்வு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு நோக்கும் போது ஸகாத் பல்வேறு விதத்திலும் மனித மனங்களைத் தூய்மைப்படுத்தி நல்ல மாற்றங்களை விளை விக்கின்றது.

ஸகாத்தின் பயன்கள்:
ஸகாத் வழங்குவதால் பல்வேறு பட்ட
பயன்களை அடையலாம் எனக் குர்ஆன் குறிப் பிடுகின்றது. ஸக்காத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்காக அதன் பயன்கள் குறித்து நோக்குவோம்.

1- ஸகாத் வளரும்
ஸக்காத் வழங்குபவரின் பொருளாதாரத் தில் அபிவிருத்தி ஏற்படும் என்பதைச்
‘அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான். இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துக்களைக் கொண்டு) பெருகச் செய்வான். (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை’ (2:276)
என்ற வசனம் உணர்த்துகின்றது.

2- மறுமைக்கான சேமிப்பு
இங்கு வழங்கப்படும் ஸக்காத் மறுமைக்கான சேமிப்பு என்பதை,
‘இன்னும், தொழுகையை முறையாகக் கடைபிடித்தும் ஸகாத்தைக் கொடுத்தும் வாருங்கள். ஏனெனில், உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் உற்று நோக்கி யவனாகவே இருக்கிறான்’ (2:110).

3- அச்சமற்ற வாழ்வு:
‘யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களையும் செய்து, தொழுகையையும் நிலையாகக் கடைபிடித்து, ஸகாத்தும் கொடுத்து வருகின்றார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’ (2:277).
ஸக்காத் மூலம் இம்மை, மறுமை அச்சமும் துக்கமும் அற்ற வாழ்வைப் பெறலாம்.

4- தண்டனையிலிருந்து பாதுகாப்பு:
தர்மம் தலைகாக்கும் என்பர். ஸகாத் வழங்குவது தண்டனைகளில் இருந்து நம்மைக் காக்கும் செயல்பாடாகும்.
‘என்னுடைய வேதனையைக் கொண்டு நான் நாடியவரைப் பிடிப்பேன். ஆனால், என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது. எனினும், அதனைப் பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஸகாத்து கொடுத்து வருவோருக் கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக் கும் நான் விதித்தருள் செய்வேன்” என்று (அல்லாஹ்) கூறினான்’ (7:156).
என்ற வசனம் இதனை உணர்த்து கின்றது.

‘செல்வந்தர்கள் தமது செல்வங்களுக் கான ஸகாத்தை வழங்காவிட்டால், வானத்தில் இருந்து பொழியும் மழையை விட்டும் அவர்கள் தடுக்கப்படுவார்கள். கால்நடைகள் மட்டும் இல்லையென்றால் மழையே பொழியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), நூல் : இப்னு மாஜா

5- அல்லாஹ்வின் அருள்:
‘முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் ஒருவருக்கு ஒருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லதைச் செய்யத் தூண்டுகிறார்கள். தீயதை விட்டும் விலக்குகிறார் கள். தொழுகையைக் கடைபிடிக்கிறார்கள். (ஏழை வரியாகிய) ஸகாத்தை (முறையாகக்) கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப்படுகிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்’ (9:71).
அல்லாஹ்வின் அருளைப் பெற்றவரால் தான் சுவனம் செல்ல முடியும். அல்லாஹ்வின் அருளைப் பெற ஸகாத் ஒரு வழியாகும்.

6- அல்லாஹ்வின் உதவி:
‘நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன். நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்’ (5:12)
‘அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்குத் திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான்’ (22:40).
இந்த வசனங்கள், தொழுகையும் ஸகாத்தும் இருந்தால் அல்லாஹ்வின் உதவி கிட்டும் என்பதை உணர்த்துகின்றன.

7- இஸ்லாமிய சகோதரத்துவம்:
ஸக்காத் இஸ்லாமிய சகோதரத்துவத்தின் அடிப்படையாகும்.
ஆயினும், அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைபிடித்து, ஸகாத்தையும் (முறையாகக்) கொடுத்து வருவார்களா னால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே! நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்’ (9:11).
இவ்வசனம், ஸக்காத்தை வழங்க மறுப்பவர்கள் காபிர்கள் என்ற கருத்தைத் தருகின்றது.

‘அவர்கள்தாம் ஸகாத்தைக் கொடுக்காதவர்கள். மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!’
(41:7).
என்ற வசனமும் இதை உறுதி செய்கின்றது.

8. வெற்றியாளர்கள்:
‘இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள். மேலும், இவர்களே வெற்றியாளர்கள்’ (2:5).
இந்த வசனம் ஸகாத் வழங்குவது நேர்வழி என்பதையும், அதை நிறைவேற்றுவோர்தான் வெற்றியாளர்கள் என்ற கருத்தையும் தருகின்றது.

எப்போது கொடுக்க வேண்டும்?

‘நிஸாப்’ எனப்படும் குறிப்பிட்ட அளவையுடைய பணமோ பொருளோ ஒருவரிடம் ஒரு வருடம் இருந்தால் அதற்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.

ரமழானில்தான் ஸகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகின்றது. ரமழானில் ‘ஸதகா’ வலியுறுத்தப்படுகின்றது. எனினும், ஸகாத்தைப் பொறுத்தவரையில் ஒரு வருடம் பூர்த்தியானால் வழங்க வேண்டும் எனும் போது, இந்த ஜனவரிக்குக் கொடுத்தவர் அடுத்த ஜனவரிக்கு மறுமுறை கணக்குப்பார்க்க வேண்டும் என்று கூற முடியாது. ஏனெனில், நாள், மாத, வருட கணிப்பு அனைத்தும் ‘சந்திர’ கணக்கு அடிப்படையில் கணித்தே இஸ்லாமிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். சூரிய வருடத்திற்கும், சந்திர வருடத்திற்கும் இடையே நாட்கள் அடிப்படையில் வேறுபாடு உள்ளது. எனவே, சந்திர கணக்கு அடிப்படையில் வருடத்தைக் கணித்து கொடுக்க வேண்டும். இன்று பலருக்கு இது சாத்தியப்படாததாக இருப்பதனால், ரமழான் மாதத்தை வருடத்தைத் தீர்மானிப்பதற்கான அளவீடாகக் கொள்வது அவரவர் கணக்கு வைத்துக்கொள்ள வசதியாக அமையலாம். எனினும் ரமழானில் தான் ஸகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்து தவறானதாகும்.

கூட்டு நடைமுறையின் அவசியம்:
ஸகாத்தைத் அவரவர் தனித்தனியாக வழங்காது கூட்டாக சேகரித்து வழங்குவது அவசியமாகும்.
‘(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக,..’ (9:103).
என்ற வசனம் ஸகாத்தை வசதியுள்ளவர்களிடமிருந்து எடுங்கள் என்று கூறப்படுகின்றது.
நபி(ஸல்) அவர்கள் ஸகாத் குறித்துக் கூறும் போது,
‘அது அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு அவர்களிலுள்ள ஏழைகளுக்கு வழங்கப்படும்’ எனக் கூறியுள்ளார்கள்’
அறிவிப்பவர்: முஆத் (ரலி).,
நூல்: முஸ்லிம்

இந்த நபிமொழி ஸகாத் என்பது வசதியுள்ளவர்கள் தாமாக நேரடியாக ஏழைகளுக்கு வழங்குவதன்று. வசதியுள்ளவர்களிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு வழங்கும் ஒரு மூன்றாம் தரப்பு இதில் ஈடுபடவேண்டும் என்பதை உணர்த்துகின்றது.

ஸகாத் பெற தகுதியான எட்டு கூட்டம் பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது ஸகாத்திற்காக பணிபுரிந்தோரும் ஒரு பகுதியினர் எனக் கூறுகின்றது.

‘(ஸகாத் என்னும்) தானங்கள் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதனை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படு வதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை,..’ (9:60).
என்று கூறுகின்றது. இதுவும் ஸக்காத்தைச் சேகரிக்க ஒரு கூட்டம் இருக்கவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

இந்த அடிப்படையில் ஸகாத்தை ஒரு குழு சேகரித்து திட்டமிட்டு அது பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதனால் பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளன.

1) அதிக மூலதனம்:
ஒரு ஊரில் ஸகாத் வழங்கத் தகுதி யுள்ளவர்கள் ஐம்பது பேர் இருந்து, அவர்கள் அனைவரது ஸகாதும் ஒன்று திரட்டப்பட்டால் ஸகாத்தின் தொகை அதிகமாகின்றது. இதன் மூலம் குறைந்தது வருடத்திற்கு ஊரிலுள்ள பத்துப் பேருடைய பிரச்சினைகளாவது தீர்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இதற்கு மாற்றமாக, தனித் தனியாக நம்மிடம் வருபவர்களுக்குப் பகிர்ந்து அளிப்பதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

2) திட்டமிட்ட பகிர்ந்தளிப்பு:
கூட்டுமுறையில் ஸகாத் சேகரிக்கப் படும் போது, அதனை தொழில் வாய்ப்பு, கடன் நிவாரணம் என பகுதி பகுதியாகப் பிரித்து, தேவையுடையோர் இனங்காணப்பட்டு, திட்ட மிட்டுப் பகிர்ந்தளிக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

3) அனைவரையும் சென்றடையும்:
கூட்டுமுறையில் பகிர்ந்தளிக்கும் போது தேவையுடைய அனைவரையும் ஸகாத் சென்றடையும் வாய்ப்பு அதிகமுள்ளது. தனித் தனியாக வழங்கும் போது குறிப்பிட்ட சிலர் மட்டும் அதிக பயனடையும் வாய்ப்பு கூடுதலாகவுள்ளது.

4) சுய கௌரவம் பாதுகாக்கப்படும்:
தேவையுடையோர் தனித்தனி நபர்களையணுகி ஸகாத் பெற முயற்சிக்கும் போது ஏழைகளின் சுய கௌரவம் பாதிக்கப்படுகின்றது. ஒரு குழுவிடம் தேவையை முன்வைத்து நிர்வாக ரீதியாக தேவையைப் பெறும் போது ஏழைகளின் சுயகௌரவம் பாதுகாக்கப்படுகின்றது.

5) தற்பெருமைக்கு இடமிருக்காது
தனித்தனியாக ஸகாத் வழங்குபவர்களிடம் தற்பெருமை எழ வாய்ப்புள்ளது. தன்னிடம் ஸகாத் வாங்கியவன் தன்னைக் கண்டால் ஸலாம் சொல்லவேண்டும்; பல்லிளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் எழ வாய்ப்புண்டு. கூட்டுமுறையில், அந்த வாய்ப்புக்கள் எடுபட்டு செல்வந்தர்கள் தற்பெருமையிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர்.

6) ஸகாத்தின் நோக்கம் நிறைவேறும்:
தனித்தனியாய் 100, 200 என வழங்குவதை விடவும் கூட்டாக இணைந்து பத்தாயிரம், இருபதாயிரம் என தொகையினை அதிகரித்து வழங்கும் போது அல்லது தொழில் செய்வதற் கான ஏற்பாடு செய்து கொடுக்கும் போது ஸகாத்தின் நோக்கம் நிறைவேறுகின்றது.

7) கணக்குப் பார்க்காத ஸகாத்:
நூற்றுக்கு இரண்டரை வீதம் என ஸகாத் கணக்குப் பார்த்து வழங்கப்பட வேண்டும். தனித்தனியாக வழங்குபவர்கள் ஏதோ சில்லறைகளை மாற்றி வைத்து வழங்கிவிட்டு, ஸகாத்தை நிறைவேற்றிவிட்டதாக எண்ணுகின்றனர். கூட்டு நடைமுறையூடாக இந்தத் தவறான நடைமுறையை நீக்க முடியும்.

8) பிச்சைக்கார சமூகத்தை உருவாக்கல்:
தனித் தனியாக ஸகாத் வழங்கும் நடைமுறைப் பிச்சைக்காரக் கூட்டத்தை உருவாக்கியுள்ளது. ரமழான் காலங்களில் ஹதியா, பித்ரா என்ற பெயரில் படையெடுக்கும் பிச்சைக்காரக் கூட்டம் இதற்கு நிதர்சன சான்றாகும்.

9) சுய கௌரவமுள்ள ஏழைகள் பாதுகாக்கப்படல்:
தனித் தனியாக ஸகாத் வழங்கும் நடைமுறையால் சுய கௌரவமுள்ள, அதே வேளை ஸகாத்தைப் பெற தகுதியுள்ள ஏழை கள் பாதிக்கப்படுகின்றனர். அடுத்தவனிடம் கையேந்தக் கூடாது என்று தன்மானத்துடன் வாழ்பவர்கள் வறுமையில் தொடர்ந்து வாழும் நிலை அல்லது தமது நிலையிலிருந்து மேலும்; தாழ்ந்து செல்லும் துர்ப்பாக்கியம் நிகழ்கின்றது. கூட்டு முறையில் வழங்கும் போது இவர்களும் அப் பங்கைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

10) குறிப்பிட்ட சிலர் பயனடையும் நிலை:
கேட்டுப் பழகியவன் எல்லோரிடமும் கேட்பான். இந்த வகையில் தனித் தனியாக ஸகாத் வழங்கும் நடைமுறையில் சிலர் நாடு பூராகச் சுற்றி பணம் சேர்க்கின்றனர். இதனால், கேட்டுப் பழகியவர்கள் எல்லோரிடமும் பெற்று கொள்ளை லாபம் பெற, இப்பழக்கமற்ற நல்லோர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

11) சொந்தப் பகுதிக்கு ஸகாத் செல்லாமை:
ஒரு ஊரிலுள்ள ஸகாத் நிதி, அவ்வூர் ஏழைகளுக்கே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். பொதுவாக ஒருவன் தனது ஊரில் தன்மானம் போய்விடக்கூடாது என எண்ணி அடுத்தடுத்த ஊர்களுக்குச் சென்று ஸகாத் பெறுகின்றான். இது ஸகாத்தின் அடிப்படைக்கே மாற்றமாகும்.

12) பரஸ்பரம் புரிந்துணர்வு:
கூட்டுமுறையில் பணம் சேகரிக்கப்பட்டு திட்டமிட்டுப் பகிரப்படும் போது, ஒரு ஊரிலுள்ள அத்தனை செல்வந்தர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பும், பரஸ்பரம் நெருக்கமும் ஏற்படுகின்றன. இந்நெருக்கம் ஊர் விவகாரங்களில் அவர் கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்களையும் உணர்வுகளையும் ஏற்படுத்தும். இவ்வடிப்படையில் ஸகாத்தை அவரவர் தனித் தனியாக அன்றி, ஒரு குழுவாக இணைந்து திட்டமிட்டு பகிர்ந்தளிக்கும் முயற்சியை ஒவ்வொரு மஸ்ஜித் நிர்வாகமும் தூய எண்ணத்துடன் முன்னெடுக்க வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!
أحدث أقدم