இஸ்லாம் ஓர் அறிமுகம்



அஷ்ஷேய்க் A.J.M மக்தூம் இஹ்ஸானி

முன்னுரை

அகிலத்தைப் படைத்துப் பரிபாலிக்கும் அந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தாகும், அகிலத்திற்கோர் அருட்கொடையாய் அவனியில் வந்துதித்த அருமைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களைப் பின்பற்றிய தோழர்கள், நல்லடியார்கள் அனைவர் மீதும் அல்லாஹ் காலமெல்லாம் இறை அருளையும், சாந்தியையும் சொரிந்தருள் வானாக. ஆமீன்

இஸ்லாம் என்பது மனித சமூகத்தைப் படைத்த இறைவனால் அவர்களுக்காகத் தெரிவு செய்யப் பட்ட வாழ்வு நெறியாகும். அந்த இஸ்லாம் பற்றிய சிறு குறிப்புக்களை எளிய நடைமுறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் இங்கே நூல் வடிவில் தருகிறோம். பொதுவாக இஸ்லாத்தைப் பற்றி சுருக்கமாக அறிந்துக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த நூல் இன்ஷா அல்லாஹ் மிக பயனுள்ளதாக அமையும் என  நம்புகிறோம். இஸ்லாம் பற்றிய மேலதிக விவரங்களைப் புரிந்துக் கொள்ள அது சம்மந்தப் பட்ட நூல்களையோ, அறிஞர்களையோ அணுகி தெளிவுப் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

இதனை நூல் வடிவில் கொண்டுவர உதவிய எல்லாம் வல்ல அல்லாஹ்வை புகழ்வதோடு, இந்த முயற்சியை பலன் மிக்கதாக ஆக்கியருள வேண்டிப்  பிரார்த்திக்கின்றேன்.

தெரிவு எங்கள் கைகளிலேயே இருக்கிறது, எதைத் தெரிவு செய்யப் போகிறோம்?

பூமி, செடிகொடிகள், பூச்சி இனங்கள், மிருகங்கள், பறவைகள், மீன் வகைகள், ஆகியவற்றோடு  ஏனைய படைப்புக்களும் எப்படி சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன? என்பது பற்றி நீங்கள் சற்று சிந்தித்துப் பார்த்ததுண்டா?

அவற்றின் வாழ்வுக்கான வழிகாட்டலும், முறையான நிர்வாகக் கட்டமைப்பும் பற்றியெல்லாம் தெளிவு பெற்றிருக்கிறீர்களா?

சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள், மேகங்கள், வீசும் காற்று ஆகியவற்றோடு ஏனைய சிருஷ்டிப்புகளும் எவ்வாறு உலக வாழ்வுக்கான பங்களிப்பை உரிய முறையில் அளிக்கின்றன என்பதை அறிவீர்களா?

தக்க முறையில் அமைந்துள்ள உங்கள் உடல் அமைப்பைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள், அவற்றின் உறுப்புக்கள் எப்படி இணைந்து செயற் படுகின்றன?.

இத்தகைய சிந்தனைக்கு எட்டாத படைப்புக்களை சிருஷ்டித்தது யார்? அவற்றின் திட்டமான ஒருங்கிணைப்பை நிர்மாணித்தது யார்? சிக்கல்கள் நிறைந்த இப்பிரமாண்டமான அமைப்பை முழுமையாக நிர்வகிப்பது யார்?

இந்தப் படைப்புக்களின் சிருஷ்டிப்பு விவகாரத்தில் யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஏன் முடி போன்ற ஓர் சிறிய படைப்பைக் கூட வேறு எவராலும் உருவாக்க முடியாது!

படைத்தவனும், ஆளுபவனும் ஒரே இறைவனே, அவனே உண்மை இறைவனாவான். ஒரு இறைவனுக்கும் அதிகமாகப் பல இறைவன்கள் இருந்தால் வானங்களிலும், பூமியிலும் குழப்பங்கள் ஏற்பட்டு விடும். எனவே, ஒருவனான அல்லாஹ்வே உண்மையான இறைவனாவான்.

எனவே இத்தகைய அடிப்படைகளின் படி எம்மைப் படைத்துப் பரிபாலிப்பவனுக்கு மகிமை கூறவும், எம்மை அர்ப்பணிக்கவும், சிறப்பும் அருளும் மிக்க அவனது வழிகாட்டலை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.

எமது புத்தி நுட்ப விளக்கத்துக்காக சிருஷ்டிப்பாளன் அருள் புரிந்து, நேர்வழியைத் தெரிவு செய்ய சுதந்திரமும் தந்துள்ளான்.

தனது தூதர்கள் மூலமும், வேதங்கள் மூலமும் அல்லாஹ் எமக்கு நேர்வழி காட்டியுள்ளான். முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)  அவர்களுக்குப் பின் தூதுத்துவத்தை நிறைவு செய்ததோடு, அல்குர்ஆனோடு வேதங்களும் முற்றுப் பெற்றது.

வாழ்வில் தனித்தனியே இரு வழிகள் உள்ளன. ஒன்று இவ்வாழ்விலும், மறு உலக வாழ்விலும் இனிமைப் பயக்கும், இதுவே ஒரே இறைவனுக்கு கட்டுப் படுதலா (இஸ்லாமா) கும். மற்றது இவ்வுலகிலும் துன்பம் விளைவிப்பதோடு மறுமையிலும் தண்டனையைப் பெற்றுத்தரும்.

 (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 2:256)

தெரிவு எங்கள் கைகளிலேயே இருக்கிறது; எதைத் தெரிவு செய்யப் போகிறோம்?

அல்லாஹ் எங்களை நேர்வழியில் நடத்துவானாக! ஆமீன்.


எதற்காக இஸ்லாம் (ஓரிறைக் கொள்கை)?

மனித சமூகத்துக்காக அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,

ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) முதல் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் வரை அனைத்து நபிமார்களினதும் ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,

இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மற்றும் ஏனைய நபிமார்கள் அனைவரும் அழைப்பு விடுத்த மார்க்கமும் இஸ்லாமே என்பதாலும்,

அல்லாஹ்வின் வசனங்கள் அடங்கிய இறுதி வேதமாகிய அல் குர்ஆன் மற்றும் ஏனைய இறை வேதங்களின் மூலம் அங்கீகாரம் பெற்ற ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,

மேலும் தனி மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, அரசியல், பொருளாதாரம் போன்ற அனைத்து துறைகளுக்குமான உயரிய வாழ்வு நெறிகளைக் கற்றுத்தருவதோடு மற்றுமின்றி அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளை வழங்கும் உன்னத மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,

பாரபட்சமின்றி எத்தரத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, எக்குலத்தை சார்ந்திருந்தாலும் சரி, அனைவருக்கும், அனைத்து காலங்களுக்கும் பொருந்தும் விதமான நேர்மையான சட்டங்களையும், தீர்வுகளையும் கொண்டு சர்வதேச தன்மையுடன் விளங்கும் ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,

அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும். (அல் குர்ஆன் 3:83)

இன்னும் இஸ்லாம் (ஒரே இறைவனுக்கு வழிப்படுதல்) அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல் குர்ஆன் 3:85)

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் (ஒரே இறைவனுக்கு வழிப்படுதல்) தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான். (அல் குர்ஆன் 3:19) என இறைவன் அல்குர்ஆனில் கூறியிருப்பதாலும்

இஸ்லாத்தையே எமது மார்க்கமாக தெரிவு செய்து கொள்வோம்!


யாருக்காக இஸ்லாம் (ஓரிறைக் கொள்கை)?

இவ்வுலக வாழ்கையின் நோக்கத்தை புரிந்து கொண்டு, உண்மையான இலக்கை நோக்கி பயணிப்போர் அனைவருக்காகவும்,

இறைவனால் வழங்கப் பட்ட புத்திநுட்பத்தை செயல்படுத்தி இறைவனை புரிந்துக் கொண்டோர் அனைவருக்காகவும்,

இறைவனுக்கு  கட்டுப்பட்டு அவனின் அருளை காண விரும்புவோர் அனைவருக்காகவும்,

இறைவனின் வார்த்தைகளை புரிந்து கொண்டு அதன் படி நடக்க விரும்புவோர்  அனைவருக்காகவும்,

இறைவன் அருளியுள்ள அருட்கொடைகளைப் புரிந்து கொண்டு அதற்கான நன்றி உணர்வையும், இறை நேசத்தையும் உள்ளத்தில் கொள்வோருக்காகவும்,

படைத்து பரிபாளிக்கும் இறைவனுக்கு தனது செயற்பாடுகள் அனைத்தையும் அர்ப்பணம் செய்ய விரும்புவோர் அனைவருக்காகவும்,

இறைவேதங்கள், இறை தூதர்கள் அனைவரையும் ஏற்றுக் கொண்டோருக்காகவும்,

வாழ்க்கைப் படலத்தை முன்னெடுத்துச் செல்வதில் சிரமங்களை எதிர் கொண்டு தீர்வுத் திட்டத்தை தேடுவோருக்காகவும்,

நான், நீங்கள் உட்பட ஈருலகிலும் நிம்மதியான வாழ்வையும், இறைவன் சித்தப் படுத்தி வைத்துள்ள பேரின்பங்களையும் அடைய விரும்புவோர் அனைவருக்காகவும்,

ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல் குர்ஆன் 22:34)

ஆணாயினும், பெண்ணாயினும் இறை நம்பிக்கையாளராக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (அல் குர்ஆன் 16:97)


மனித சமூகத்தின் இயல்பு மார்க்கம் இஸ்லாம்;

இறைவன் இப்பிரபஞ்சத்தைப் படைத்து, அதில் மனிதர்கள் மற்றும் ஜின்னினங்களை அவனை வணங்குவதற்காகவே படைத்துள்ளான்.

அந்த நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றும் பொருட்டு தேவையான எல்லா வளங்களையும், வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளான்.

 இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.    அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.  நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன். (அல் குர்ஆன் 51: 56, 57,58)
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; (அல் குர்ஆன் 2:29)

 இப்படியாக படைக்கப் பட்ட மனிதனின் உள்ளத்திலும் இறை நம்பிக்கையையும், இறை  நேசத்தையும் இறைவன் இயல்பாகவே விதைத்துள்ளான்.

மனிதர்கள் அவர்கள் படைக்கப் பட்டுள்ள இயல்பு நிலையில் அப்படியே விடப்பட்டார்கள் என்றால் இறைவனை இயல்பாகவே நம்பிக்கைக் கொள்வார்கள், அவனுக்கு அடி பணிவார்கள், அவனை நேசிப்பார்கள், அவனுக்கு யாதொன்றையும் இணை கற்பிக்க மாட்டார்கள்.

ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலை நிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.  நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல் குர்ஆன் 30:30,31)

ஒவ்வொரு குழந்தைகளும் அதன் இயல்பு மார்க்கத்திலேயே பிறக்கின்றன; அக்குழந்தைகளை திசைத் திருப்பி சிலை வணங்கிகளாக, இணைவைப்பாளார்களாக மாற்றுகின்றவர்கள் அவர்களை சூழவுள்ள பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களே.

மனிதர்கள் இவ்வுலகில் படைக்கப் பட்டபோது ஆரம்பத்தில் அனைவரும்  தூய மார்கத்திலேயே இருந்தனர். அனைவரும் ஓரிறைக் கொள்கையையே கடைப்பிடித்துக் கொண்டிருந்தனர். எனினும் காலவோட்டத்தில் பிளவு பட்டுக் கொண்டு வெவ்வேறு கொள்கைகளை கடைப் பிடிக்க ஆரம்பித்தனர். இதன்போதே சரியான மார்கத்தை தெளிவு படுத்தும் பொருட்டு இறைவன் இவ்வுலகில் தனது தூதர்களை இறக்கிவைத்தான். அப்படி அனுப்பப் பட்டவர்களில் முதல் தூதரே நூஹ் (அலை) அவர்கள்.

மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறில்லை; பின்னர் அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர்.  (அல் குர்ஆன் 10:19)

(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்து விட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.  (அல் குர்ஆன் 2:213)


இஸ்லாம் என்றால் என்ன?

சிலர் கருதுவது போன்று இஸ்லாம் சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன் முஹம்மத் என்பவரால் தோற்றுவிக்கப் பட்ட வெற்று மதம் அன்று. மாற்றமாக மனித குலத்தைப் படைத்த கடவுளினால் அவர்களின் வாழ்வு சீர்பெற அவர்கள் படைக்கப் பட்ட நாள் முதல் கொடுக்கப் பட்ட முழுமையான வாழ்வு நெறியே இஸ்லாம். இஸ்லாம் என்ற அரபு வார்த்தை, பணிவு, கட்டுப்படல், வழிப்படல் என்ற அர்த்தத்தோடு, சாந்தி சமாதானம் என்ற கருத்தையும் பொதிந்துள்ளது. எனவே எவர் இறைவனின் கட்டளைகளுக்கு முழுமையாக கட்டுப் பட்டு நடக்கின்றாரோ, அவர் ஈருலகிலும் நிம்மதியையும், சாந்தத்தையும் அடைவார். ஒருவன் முஸ்லிமாக கருதப் படுவதற்கு, முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்து இருக்க வேண்டும் அல்லது முஸ்லிம் மத்தியில் அறிமுகமான பெயர் வைத்திருக்க வேண்டும் என்ற எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லை. முஸ்லிம் என்றால் தன்னைப் படைத்த கடவுளுக்கு வழிப்படுபவன் என்பதே அர்த்தம். எனவே ஒருவன் தன்னைப் படைத்த இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு, அவன் தனது செய்தியை கூறுவதற்காக அனுப்பிய தூதர்களையும், அவர்களில் இறுதியாக அனுப்பப்பட்ட முஹம்மத் (அவர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்) அவர்களையும் ஏற்றுக் கொண்டு அவர்களின் போதனைகளை தன் வாழ்வில் எடுத்து நடந்தால்   போதும் அவன் முஸ்லிமாக மாறிவிடுவான்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள், மற்றும் நம்பிக்கைக் கொள்ள வேண்டிய அம்சங்களின் சுருக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது:


இஸ்லாத்தின் கடமைகள்;

“அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு”

 மொழி பெயர்ப்பு:
“வணங்கத்தக்க நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுவதோடு, முஹம்மத் (ஸல்லல்லாஹு அளைஹிவஸல்லம்) அவர்கள் அவனின் அடிமையும், தூதருமாவார் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்”

ஒருவன் மேற்கூறப்பட்ட வசனங்களை உள்ளத்தினால் ஏற்றுக்கொண்டு நாவினால் மொழிந்தால் முஸ்லிமாக மாறிவிடுவான்.

அதனைத் தொடர்ந்துள்ள இஸ்லாத்தின் அடிப்படை செயற்பாட்டுத் தூண்கள்: அவை:
தொழுகை (சலாஹ்),
நோன்பு (சவ்ம்),
ஏழைவரி (சகாத்),


நம்பிக்கைக்கான தூண்கள்;

இஸ்லாமிய நம்பிக்கையின் தோற்றமும், உருவாக்கமும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)  அவர்களின் பின் நிகழவில்லை. ஏற்கனவே அருளப்பட்ட இறை வேதங்கள் பொதிந்ததும், இறைத்தூதர்கள் கூறிய தூதையுமே அன்னாரும் தொடர்ந்தார்கள். இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடு எப்போதும் எவ்வித மாற்றங்களும் இன்றி அழியாமல் நிலைத்திருக்கும் உண்மையாகும். அது இறைவனைப் பற்றிய உண்மைகளையும், அவனது சிருஷ்டிகளோடுள்ள தொடர்ப்பையும், எமக்குப் போதிக்கிறது. இவ்வுலக வாழ்வின் உண்மை இதில் பொதிந்திருக்கிறது. அதில் மனிதனின் பங்களிப்பு என்ன? மறுமையில் அவனின் நிலை என்னவாகும்? அவன் படைக்கப் பட்ட நோக்கம் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் பேசுகிறது..

இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடுகள் பின்வரும் ஆறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு விளங்குகின்றன, அவை:
அல்லாஹ்,
மலக்குகள்,
வேதங்கள்,
தூதர்கள்,
மறுமை நாள்,
விதி என்பனவற்றை நம்புவதாகும்.


இஸ்லாத்தில் இறைக் கோட்பாடு;

அல்லாஹ் ஒருவனென்றும், அவனது இறைத்தன்மையிலும், படைத்து பரிபாலிப்பதிலும் அவனுக்கு நிகராக யாரும் இல்லை என்றும் நம்புதல், அல்லாஹ் ஒரே ஒருவனே, அவனது அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் எவருக்கும் பங்கு இல்லை.

அல்லாஹ்வே அனைத்தையும் சிருஷ்டித்தவன், அவனைத் தவிர உள்ள அனைத்தும் அவனால் சிருஷ்டிக்கப் பட்டவையே, சிருஷ்டிப்பில் அவனுக்கு பங்காளியாக எவரும் இல்லை,

அல்லாஹ் இல்லாமையில் இருந்து உருவாக்கும் ஆற்றல் மிக்கவன், அவனது படைப்பினங்களுக்கு உபகாரம் செய்பவன், வாழ்வாதாரம் வழங்குபவன், அவர்களது அனைத்து செயற்பாடுகளையும் அறிபவன், அவர்களின் செயலுக்கேற்ப கூலி வழங்குபவன் என நம்புவது,

வணங்கி வழிப்பட தகுதி வாய்ந்த இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என நம்புதல், அவனைத்தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது,

மலக்கு (வானவர்) களும், நபிமார்களும் அல்லாஹ்வுக்கு பணிபுரியவும், வழிப்படவுமே படைக்கப் பட்டுள்ளனர்,

அவன் மனித சமூகத்துக்கான வாழ்வு நெறியை அவனது தூதர்களினூடாகவும், வேதங்களின் மூலமும் அறிவித்துக் கொடுத்தான்,

அல்லாஹ் என்றும் இருப்பவன், அவனுக்கு பெற்றோர் கிடையாது, குழந்தைகள் கிடையாது, அந்தம், ஆதி இல்லாதவன், யாரிடமும் எந்த தேவையும் அற்றவன், முதலுக்கு முதலானவன், முடிவுக்கு முடிவானவன்,

அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அவனுக்கு இணைக் கற்பித்தலைத் தவிர அனைத்து குற்றங்களையும் மன்னிப்பவன்,

அவனுக்கு அழகிய திருநாமங்களும், பூரண வருணனைகளும் உள்ளன, அதில் அவனுக்கு நிகராக யாருமில்லை,

அவன் எம்மை எந்தவொன்றுமின்றி அனைத்து வளங்களோடும் அழகிய உருவில் சிருஷ்டித்து அநேக அருள்களைப் பாலித்திருக்கிறான்,

எவரேனும் தொழுகைகள், பிற வணக்கங்கள், வணக்க சாஷ்டாங்கங்கள் போன்றவற்றை அல்லாஹ்வுக்கன்றி வேறு எவருக்கேனும் (ஒரு மலக்காகவோ, தெரிவு செய்யப் பட்ட நபியாகவோ இருந்தாலும் சரியே) நிறைவேற்றுவார்களாயின், தான் ஒரு முஸ்லிமென உரிமைக் கோரிக்கொண்ட போதும் அவன் ஒரு முஸ்லிமே அல்ல.

“மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்” என  (நபியே!) நீர் கூறுவீராக”  (அல் குர்ஆன் 6:162)

(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்திலும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (அல் குர்ஆன் 112:1-4)


ஒரு முஸ்லிமின் பண்புகள்;

ஒரு முஸ்லிம் தனது வாழ்வை முழுமையாக இறைவனுக்காக அர்ப்பணித்து, தனது அனைத்து காரியங்களையும் இறை பொருத்தத்தை நாடியே செயலாற்ற வேண்டும்.

அவன் தன்னைப் படைத்த இறைவனையன்றி வேறு யாரையும் வணங்கக் கூடாது. தன் பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும். பிறருக்கும் முடிந்தளவு உபகாரம் புரிய வேண்டும்.

ஒரு முஸ்லிம் இறைவன் தடை செய்துள்ள கொலை, களவு, விபச்சாரம், இலஞ்சம், சூது, வட்டி, மது அருந்துதல், போதை வஸ்து பாவித்தல், ஊழல், மோசடி, போன்ற கொடிய பாவங்களில் ஒரு போதும் ஈடுபட கூடாது.

ஒருமுஸ்லிம் எப்போதும் பொய் பேசாது உண்மையே பேச வேண்டும்.

ஒரு முஸ்லிம் வாக்களித்தால் மாறு செய்யக்கூடாது. அவன் நம்பிக்கை நாணயத்துடன் நடக்க வேண்டும்.

ஒரு முஸ்லிம் மற்றவர்களைப் பற்றி புறம் பேசவோ, மற்றவர்களின் குறைகளைத் துருவித் துருவி ஆராயவோ, பிறரை மானப்பங்கப் படுத்தவோ கூடாது.

ஒரு முஸ்லிம் தைரியமுள்ளவனாக இருக்க வேண்டும், கோழையாக இருக்கக் கூடாது.

ஒரு முஸ்லிம் உண்மையை ஆதரிக்கும் விடயத்தில் நிலையானவனாகவும், உண்மையை எடுத்துக் கூறுவதில் தைரியமுள்ளவனாகவும் இருப்பான்.

அடுத்தவர் தன்னை எதிர்த்த போதும் ஒரு முஸ்லிம் நீதமாக நடந்துக் கொள்ள வேண்டும். அடுத்தவரின் உரிமையை சட்ட விரோதமாக மீறவும் கூடாது. அடுத்தவர் மூலம் அநீதம் செய்யப் படுவதை அனுமதிக்கவும் கூடாது. அவன் வலிமை உள்ளவனாகவும் தன்மானத்தை எவரிடமும் இழக்காதவனாகவும் இருக்க வேண்டும்.

ஒரு முஸ்லிம் சமாதானத்தையும், ஐக்கியத்தையும் விரும்ப வேண்டும். வதந்திகளைப் பரப்பி விடுபவனாகவோ, வன்முறைகள், குழப்பங்களைத் தூண்டுபவனாகவோ இருக்கக்  கூடாது.

ஒரு முஸ்லிம் தன் செயற்பாடுகளை இயன்றவரை நேர்த்தியாக செய்ய வேண்டும்.

ஒரு முஸ்லிம் கர்வமற்றவனாகவும், நற்குணமுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.

ஒரு முஸ்லிம் சிறியோருக்கு இரக்கம் காட்டுபவனாகவும், முதியோருக்கு மதிப்பளித்து நடப்பதோடு இறைவனின் அனைத்துப் படைப்பினங்களோடும் ஜீவகாருண்யம் பேணி  நடந்து கொள்வதும் அவசியமாகும்.

அவன் நன்மை புரிவதோடு அடுத்தவரையும் நன்மை புரியத்தூண்ட வேண்டும். அவன் தீமை புரிவதை தவிர்த்துக் கொள்வதோடு அடுத்தவரை யும் அதிலிருந்து தடுக்க வேண்டும்.

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் மார்க்கம் நிலைத்திருக்கவும், உலகம் முழுவதும் பரவுவதற்கு முயற்சிக்கவும் போராடவும் வேண்டும். இஸ்லாத்தின் வரையறையை மீறாதவனாக அனைத்து காரியங்களையும் மேற்கொள்வான், இஸ்லாத்தின் வெற்றிக்கென சட்ட விரோத செயல்கள் எதனையும் மேற்கொள்ளக் கூடாது.
أحدث أقدم