அத்தியாயம் 63 அன்சாரிகளின் சிறப்புகள்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 63

அன்சாரிகளின் சிறப்புகள்
பகுதி 1

அன்சாரிகளின் சிறப்புகள்

அல்லாஹ் கூறினான்:

மேலும் (அந்த 'ஃபய்உ' என்னும் செல்வம்) இந்த முஹாஜிர்களின் வருகைக்கு முன்பே நம்பிக்கைக் கொண்டு தாருல் ஹிஜ்ரத்தில் (மதீனாவில்) வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கும் (உரியதாகும்). ஹிஜ்ரத் செய்து தங்களிடம் வந்திருப்பவர்களை இவர்கள் நேசிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல அவர்களுக்கு அளிக்கப்பட்டவை தங்களுக்கும் தேவையானவையே என்று மனத்தளவில் கூட அவர்கள் நினைப்பதில்லை. (திருக்குர்ஆன் 59:09)

3776. ஃகைலான இப்னு ஜாரீர்(ரஹ்) அறிவித்தார்

நான் அனஸ்(ரலி) அவர்களிடம், '(அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரான உங்களுக்கு) 'அன்சார் - உதவியாளர்கள்' என்னும் பெயர் வந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். உங்களுக்கு அந்தப் பெயர் (குர்ஆனுக்கு முன்பே) சூட்டப்பட்டிருந்ததா? அல்லது அல்லாஹ் உங்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினானா?' என்று கேட்டேன். அவர்கள், 'அல்லாஹ் தான் எங்களுக்கு ('அன்சார்' என்று திருக்குர்ஆன் 9:100-ம் வசனத்தில்) பெயர் சூட்டினான். (பஸராவில்) நாங்கள் அனஸ்(ரலி) அவர்களிடம் (வந்து) சென்று கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் அன்சாரிகளின் சிறப்புகளையும் அவர்களின் (தியாக) நிகழ்ச்சிகளையும் எங்களுக்கு எடுத்துரைப்பார்கள். என்னை அல்லது 'அஸ்த்' குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை... நோக்கி, 'உன் குலத்தார் இன்னின்ன நாளில் இன்னின்னவாறு செய்தார்கள்'' என்று சொல்வார்கள்.

3777 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

'புஆஸ்' போர் நாள், தன் தூதருக்காக அல்லாஹ் (சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில்) முன்கூட்டியே நிகழச் செய்த நாளாக அமைந்தது. (அந்தப் போரின் காரணத்தால்) மதீனாவாசிகளின் கூட்டமைப்பு (குலைந்து) பிளவுபட்டிருந்த நிலையிலும் அவர்களில் முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்பட்டும் காயமுற்றும் இருந்த நிலையிலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அங்கு) வந்தார்கள். எனவே, மக்கள் இஸ்லாத்தை ஏற்க (ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதற்காக) அல்லாஹ்தான், தன் தூதர்(ஸல்) அவர்களுக்குச் சாதகமாக அந்த நாளை முன் கூட்டியே நிகழச் செய்தான்.2

3778. அனஸ்(ரலி) அறிவித்தார்

மக்கள் வெற்றியடைந்த ஆண்டில் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) நபி(ஸல்) அவர்கள் (அன்சாரிகளுக்கு வழங்காமல், புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்கா குறைஷிகளுக்கு கொடுத்தபோது அன்சாரிகள் 'அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மையில், இது வியப்பாகத் தான் இருக்கிறது. எங்கள் வாட்களில் குறைஷிகளின் இரத்தம் கொட்டிக் கொண்டிருக்க, எங்கள் போர்ச் செல்வங்கள் அவர்களுக்கல்லவா கொடுக்கப்படுகின்றன?' என்று பேசிக் கொண்டார்கள். 3 அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டது. நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அன்சாரிகளை அவர்கள் அழைத்து, 'உங்களைப் பற்றி எனக்கெட்டிய செய்தி என்ன?' என்று கேட்டார்கள். அவர்கள் (நபித் தோழர்கள்) பொய் சொல்லாதவர்களாய் இருந்தனர். எனவே, அவர்கள், '(உண்மையில் நாங்கள் பேசிக் கொண்டதும்) உங்களுக்கு எட்டியதே தான்'' என்று பதிலளிதார்கள். நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் போர்ச் செல்வங்களைப் பெற்றுக் கொண்டு தம் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல, நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடனேயே உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா? அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ ஒரு கணவாயிலோ நடந்து சென்றால் அவர்கள் செல்கிற பள்ளத்தாக்கிலோ கணவாயிலோ தான் நானும் நடந்து செல்வேன்'' என்று கூறினார்கள்.

பகுதி 2

''ஹிஜ்ரத் மட்டும் நடைபெறாதிருந்தால் நான் அன்சாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னது. 4

இதை அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி), நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்.

3779 ' என்று அபுல் காசிம் (இறைத்தூதர்(ஸல்)) அவர்கள் கூறினார்கள்''

அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ ஒரு கணவாயிலோ நடந்து சென்றால் அன்சாரிகள் நடந்து செல்லும் பள்ளத்தாக்கில் தான் நானும் நடந்து செல்வேன். ஹிஜ்ரத் மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால் நான் அன்சாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்.

இதை அறிவித்த அபூ ஹுரைரா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் மிகச் சரியாகவே, இப்படிக் கூறினார்கள் (என்று கூறிவிட்டு) - என் தந்தையும் என் தாயும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும் (நபியவர்கள் இப்படிச் சொன்னதற்குக் காரணம்) அன்சாரிகள் நபி(ஸல்) அவர்களுக்கும் புகலிடம் அளித்து அவர்களுக்கு உதவினார்கள்' என்றோ... (இவ்விரு வாக்கியங்களுடன் சேர்த்து) வேறொரு வாக்கியத்தையோ கூறினார்கள். 6

பகுதி 3

நபி(ஸல்) அவர்கள் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்குமிடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தியது. 7

3780. இப்ராஹீம் இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப்(ரஹ்) அறிவித்தார்

(முஹாஜிர்களான) நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என் தந்தை) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களுக்கும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) என்னும் அன்சாரித் தோழர்) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். (என் தந்தை) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி), 'நான் அன்சாரிகளில் அதிக செல்வம் உடையவன். என் செல்வத்தை இரண்டு பாதிகளாக்கிப் பங்கிட்டு நான் (ஒரு பாதியை உங்களுக்குக் கொடுத்து) விடுகிறேன். எனக்கு இரண்டு மனைவிமார்கள் உள்ளனர். அவ்விருவரில் உங்களுக்கு அதிகமாகப் பிடித்திருப்பவளைப் பார்த்து என்னிடம் சொல்லுங்கள். நான் அவளைத் தலாக் (மண விலக்கு) செய்து விடுகிறேன். அவளுடைய 'இத்தா' காலம் முடிந்தபின் அவளை நீங்கள் மணந்து கொள்ளுங்கள்” என்று சொன்னார்.  (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) , 'அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டாரிலும் உங்கள் செல்வத்திலும் அருள்வளத்தை வழங்கட்டும். உங்கள் கடைவீதி எங்கே?' என்று கேட்டார்கள். மக்கள் அவர்களுக்கு 'பனூகைனுகா' கடை வீதியைக் காட்டினார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அங்கு சென்று வியாபாரம் செய்து) தம்முடன் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்றுத்தான் திரும்பினார்கள். பிறகு அடுத்த நாள் காலையும் தொடர்ந்து சென்றார்கள். (இப்படியே தொடர்ந்து சென்று வியாபாரம் செய்து சம்பாதித்தார்கள்.) ஒரு நாள் தம் மீது (நறுமணப் பொருள் தடவிக் கொண்டிருந்ததால்) மஞ்சள் அடையாளத்துடன் (நபி - ஸல் - அவர்களிடம்) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்களை நோக்கி, 'என்ன இது?' என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'நான் மணம் புரிந்து கொண்டேன்'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவளுக்கு எவ்வளவு (மஹ்ர்) கொடுத்தீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்கள், 'ஒரு பேரீச்சம் கொட்டையளவு தங்கம்... அல்லது ஒரு பேரீச்சம் கொட்டையின் எடையளவு தங்கம்..'' என்று பதிலளித்தார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'ஒரு பேரீச்சம் கொட்டையளவு தங்கம்'' என்று கூறினார்களா, 'ஒரு பேரீச்சம் கொட்டை எடையளவு தங்கம்'' என்று கூறினார்களா என அறிவிப்பாளர் இப்ராஹீம்(ரஹ்) சந்தேகப்படுகிறார்கள். 8

3781. அனஸ்(ரலி) அறிவித்தார்

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு) எங்களிடம் வந்தார்கள். அவர்களுக்கும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள். ஸஅத் இப்னு ரபீஉ அவர்கள் அதிக செல்வமுடையவராக இருந்தார்கள். - ஸஅத்(ரலி), 'அன்சாரிகள், நான் அவர்களில் அதிக செல்வமுடையவன் என்று அறிந்திருக்கின்றனர். என் செல்வத்தை எனக்கும் உங்களுக்குமிடையே இரண்டு பாதிகளாகப் பங்கிட்டு (கொடுத்து) விடுவேன். எனக்கு இரண்டு மனைவியர் உள்ளனர். அவர்களில் உங்களுக்கு அதிகமாகப் பிடித்தவளைப் பாருங்கள். நான் அவளை விவாகரத்துச் செய்து விடுகிறேன். அவள் ஹலால் (இத்தா முடிந்து பிறரை மணந்து கொள்ளத் தகுதியுடையவள்) ஆனதும் அவளை நீங்கள் மணந்து கொள்ளுங்கள்'' என்று (தம் முஹாஜிர் சகோதரரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபிடம்) கூறினார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டார் விஷயத்தில் அருள் வளம் வழங்கட்டும்'' என்று கூறி (கடைவீதி சென்று)விட்டார்கள். சிறிது நெய்யையும் பாலாடைக் கட்டியையும், இலாபமாகச் சம்பாதித்த பின்னரே அன்று திரும்பி வந்தார்கள். சிறிது காலம் தான் சென்றிருக்கும். அதற்குள் அவர்கள் தம் மீது (நறுமணப் பொருளின்) மஞ்சள் அடையாளம் தோய்ந்திருக்க இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என்ன இது?' என்று கேட்க, 'நான் அன்சாரிப் பெண் ஒருத்தியை மணந்தேன்'' என்று அவர்கள் பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவளுக்கு என்ன (மஹ்ர்) கொடுத்தீர்கள்?' என்று கேட்டதற்கு அவர்கள், 'ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கம்... அல்லது ஒரு பேரீச்சங் கொடையளவு தங்கம்'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஒரேயோர் ஆட்டையேனும் (அறுத்து) வலீமா (மண விருந்து) கொடு'' என்று கூறினார்கள். 9

3782. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

(நபி - ஸல் - அவர்களிடம்) அன்சாரிகள், 'எங்களுக்கும் (முஹாஜிர்களான) அவர்களுக்குமிடையே (எங்கள்) பேரீச்ச மரங்களைப் பங்கிடுங்கள்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'வேண்டாம்'' என்று சொல்ல அவர்கள், '(அப்படியென்றால்) அவர்கள் (முஹாஜிர் சகோதரர்கள்) எங்களுக்காக உழைக்கட்டும்; எங்களுடன் விளைச்சலில் (இலாபப்) பங்கு பெறட்டும்'' என்று கூறினார்கள். முஹாஜிர்கள், (அதற்கு சம்மதித்து) 'நாங்கள் செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம் என்று கூறினார். 10

பகுதி 4

அன்சாரிகளை நேசிப்பது இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.

3783. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்க மாட்டார்கள்; அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும் மாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.

என பராஉ(ரலி) அறிவித்தார்.

3784. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

இறை நம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்; நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 11

பகுதி 5

நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம், 'நீங்கள் எனக்கு மக்களிலேயே மிகவும் பிரியமானவர்கள்'' என்று சொன்னது.

3785. அனஸ்(ரலி) கூறினார்

(அன்சாரிப்) பெண்களும், குழந்தைகளும் திரும்பி வருவதை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்; இதை எனக்கு அறிவித்தவர்'' ஒரு மணவிழாவிலிருந்து வருவதை'' என்று சொன்னதாக நினைக்கிறேன் - உடனே நின்று கொண்டு, 'இறைவா! (நீயே சாட்சி! அன்சாரிகளே!) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்'' என்று கூறினார்கள். இந்த வாக்கியத்தை அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

3786. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தம் குழந்தையொன்றைத் தம்முடன் எடுத்துக் கொண்டு அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அவரிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பேசினார்கள். அப்போது அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்'' என்று இரண்டு முறை கூறினார்கள்.

பகுதி 6

அன்சாரிகளைப் பின்தொடர்ந்த (நட்புக் கூட்டங்கள் மற்றும் அவர்களால் விடுதலை செய்யப்பட்ட)வர்கள்.

3787. ஸைத் இப்னு அர்கம்(ரலி) கூறினார்

அன்சாரிகள் (நபி - ஸல் - அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! இறைத்தூதர்களை ஒவ்வொருவருக்கும் அவர்களைப் பின்தொடர்ந்த (சார்பு நிலை கொண்ட)வர்கள் இருந்தனர். நாங்கள் உங்களைப் பின் பற்றினோம். எனவே, எங்களுக்கும் எங்களைப் பின்தொடரும் சார்பு நிலையாளர்களை எங்களிலிருந்தே உருவாக்கித் தரும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்று கேட்டுக் கொண்டனர். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

3788. அன்சாரிகளில் ஒரவரான அபூ ஹம்ஸா(ரலி) அறிவித்தார்

அன்சாரிகள் (நபி - ஸல் அவர்களிடம்), 'ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களைப் பின்தொடரும் சார்பு நிலையாளர்கள் உண்டு. எங்களைப் பின்பற்றும் சார்பு நிலையாளர்களை எங்களிலிருந்தே உருவாக்கித் தரும்படி நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! இவர்களுடைய சார்பாளர்களை இவர்களிலிருந்தே உருவாக்கித் தருவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். 12

பகுதி 7

அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களின் சிறப்பு

3789. அபூ உஸைத்(ரலி)அவர்கள் அறிவித்தார்

''அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனூ நஜ்ஜார்13 குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும். 14 பிறகு பனூ ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் குடும்பமாகும். 15 பிறகு பனூ சாஇதா குடும்பமாகும். 16 அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் எங்களை விட (வேறு சில குலங்களைச்) சிறப்பித்துக் கூறினார்கள் என்றே காண்கிறேன்'' என்று கூறினார்கள். 17 அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் (இங்கே குறிப்பிடப்படாத மற்ற) பலரையும் விட உங்களைச் சிறப்பித்துக் கூறினார்கள்'' என்று சொல்லப்பட்டது.

மற்றோர் அறிவிப்பில், 'ஸஅத் இப்னு உபாதா' என்று (முழுமையாகப் பெயர்) குறிப்பிட்டு அறிவிப்பாளர் கூறினார்.

3790. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அன்சாரிகளில் சிறந்தோர்... அல்லது அன்சாரிகளின் கிளைக்குடும்பங்களில் சிறந்தது. பனூ நஜ்ஜார் குடும்பமும், பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமும் மற்றும் பனூ ஹாரிஸ், பனூ சாஇதா குடும்பங்களும் ஆகும்.

என அபூ உஸைத்(ரலி) அறிவித்தார். 18

3791. அபூ ஹுமைத்(ரலி) அறிவித்தார்

''அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது. பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல், பிறகு பனுல் ஹாரிஸ், பிறகு பனூ சாஇதா குடும்பங்கள் ஆகும். அன்சாரிக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி) எங்களிடம் வந்து சேர்ந்தார். அப்போது (அவரிடம்) அபூ உஸைத்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளைச் சிறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு (அப்படிக் குறிப்பிட்டவர்களில்) நம்மைக் கடைசியானவர்களாகக் குறிப்பிட்டுள்ளதை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்டார்கள். (இதைக் கேட்ட) உடனே ஸஅத் இப்னு உபாதா(ரலி) நபி(ஸல்) அவர்களை அடைந்து, 'இறைத்தூதர் அவர்களே! அன்சாரிகளின் கிளைக் குடும்பங்கள் (தங்களால்) சிறப்பித்துக் கூறப்பட்டபோது (அன்சாரிகளில் ஒரு குடும்பத்தினரான) நாங்கள் கடைசியாகக் குறிப்பிடப்பட்டுள்ளோமே (ஏன்?)'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் மிகச் சிறந்(குடும்பத்)தவர்களில் இடம் பெற்றிருப்பதே உங்களுக்குப் போதுமானதல்லவா?' என்று கூறினார்கள்.19

பகுதி 8

நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம், 'என்னை (மறுமையில்) தடாகத்தின் அருகே சந்திக்கும் வரை பொறுமையாயிருங்கள்'' என்று சொன்னது.

இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். 20

3792. உஸைத் இப்னு ஹுளைர்(ரலி) அறிவித்தார்

அன்சாரிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! இன்னாரை நீங்கள் அதிகாரியாக நியமித்தது போல் என்னையும் அதிகாரியாக நியமிக்கமாட்டீர்களா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'எனக்குப் பிறகு (உங்களை விட) மற்றவர்களுக்கு (ஆட்சியதிகாரத்தில்) முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். எனவே, (மறுமையில் எனக்குச் சிறப்புப் பரிசாகக் கிடைக்கும் 'ஹவ்ளுல்கவ்ஸர்' என்னும்) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள்'' என்று கூறினார்கள்.

3793. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம், 'எனக்குப் பிறகு (உங்களை விட ஆட்சியதிகாரத்தில் மற்றவர்களுக்கு) முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். எனவே, (மறுமையில்) என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுமையாக இருங்கள். என்னைச் சந்திக்க உங்களுக்குக் குறித்துள்ள இடம் (மறுமையில் எனக்கு சிறப்புப் பரிசாக இறைவன் வழங்கிவருக்கும் ஹவ்ளுல் கவ்ஸர் எனும்) தடாகமேயாகும். 21

3794. யஹ்யா இப்னு ஸயீத்(ரலி) அறிவித்தார்

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவாக்ள் என்னுடன் பயணமாகி வலீத் இப்னு அப்தில் மலிக்கைச் சந்தித்தபோது (வலீத் இடம்) கூறினார்கள். 22

நபி(ஸல்) அவர்கள் பஹ்ரைனுடைய நிலங்களை வருவாய் மானியமாக எங்களுக்குத் தருவதற்காக அழைத்தார்கள். அன்சாரிகள், 'எங்கள் முஹாஜிர் சகோதரர்களுக்கும் இதே போன்று மானியம் தந்தாலே தவிர நாங்கள் இதை ஏற்க மாட்டோம்'' என்று கூறினர். 'நீங்கள் இதை ஏற்க மாட்டீர்கள் என்றால், என்னை (மறுமையில் ஹவ்ளுல் கவ்ஸர் தாடாகத்தின் அருகே) சந்திக்கும் வரை பொறுத்திருங்கள். ஏனெனில், எனக்குப் பின் (ஆட்சியதிகாரத்தில்) உங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் நிலை உங்களுக்கு நேரும்'' என்று கூறினார்கள். 23

பகுதி 9

நபி(ஸல்) அவர்கள், 'அன்சாரிகளின் நிலையையும் முஹாஜிர்களின் நிலையையும் செம்மைப்படுத்து'' என்று பிரார்த்தித்து.

3795. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நித்தியமான) வாழ்க்கை இல்லை; அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிரந்தர மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக'' என்று (பாடியபடி) சொன்னார்கள். 24

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 'அன்சாரிகளுக்கு(ம் முஹாஜிர்களுக்கும்) நீ மன்னிப்பு அளிப்பாயாக'' என்று பாடியபடி கூறினார்கள் என உள்ளது.

3796. அனஸ் இப்னு மாலிக் அவர்கள் அறிவித்தார்

அகழ்ப்போர் நாளில் அன்சாரிகள், 'நாங்கள் (எத்தயைவர்கள் எனில்), 'நாங்கள் உயிரோடியிருக்கும் காலம் வரை அறப்போர் புரிவோம்' என்று முஹம்மத்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்திருக்கிறோம்'' என்று (பாடியபடிக்) கூறிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை எதுவுமில்லை; எனவே, அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் கண்ணியப்படுத்துவாயாக!'' என்று (பாடிய படியே) கூறினார்கள். 25

3797. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

நாங்கள் அகழ் தோண்டிக் கொண்டும் எங்கள் தோள்களின் மீது மண்ணைச் சுமந்து எடுத்துக் சென்று கொண்டும் இருந்தபோது எங்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள், 'இறைவா! மறுமை வாழ்க்கையத் தவிர வேறு வாழ்க்கை எதுவுமில்லை. எனவே, முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக!'' என்று (பாடியபடி) கூறினார்கள். 26

பகுதி 10

அல்லாஹ் கூறினான்:

தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். (திருக்குர்ஆன் 59:09)

3798. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், 'எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), 'இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?.''.. அல்லது 'இவருக்கு விருந்தளிப்பவர் யார்?.''.. என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நான் (விருந்தளிக்கிறேன்)'' என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் விருந்தாளியைக் கண்ணியப்படுத்து'' என்று கூறினார். அதற்கு அவரின் மனைவி, 'நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை'' என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், 'உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு'' என்று கூறினார். அவ்வாறே அவரின் மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றிவிட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார். பிறகு விளக்கைச்சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்துவிட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான் அல்லது வியப்படைந்தான்'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், 'தமக்கே தேவை இருந்தும் கூடு, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், தம் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களே வெற்றியாளர்கள்'' என்றும் (திருக்குர்ஆன் 59:9ம்) வசனத்தை அருளினான்.

பகுதி 11

நபி(ஸல்) அவர்கள், 'அன்சாரிகளில் நன்மை புரிவோரிடமிருந்து ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களில் தவறிழைப்பவர்களை மன்னித்து விடுங்கள்'' என்று சொன்னது.

3799. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

(நபி - ஸல் - அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த சமயம்) அன்சாரிகள் தம் சபைகளில் ஒன்றில் (அமர்ந்தபடி) அழுது கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் அந்த வழியாகச் சென்றார்கள். அப்போது, அப்பாஸ்(ரலி) (அல்லது அபூ பக்ர்(ரலி), 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (கூடி) அமர்ந்திருந்த அவையை நினைத்துப் பார்த்தோம். (அதனால் அழுகிறோம்)'' 27 என்று பதிலளித்தார்கள்.

அப்பாஸ்(ரலி) (அல்லது அபூ பக்ர்(ரலி)), நபி(ஸல்) அவர்களிடம் சென்று, இந்த விஷயத்தைத் தெரிவித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தம் சால்வையின் ஓரத்தைத் தம் தலையில் கட்டியிருந்த நிலையில் வெளியே வந்து, (உரை நிகழ்த்துவதற்காக) மிம்பரில் (மேடையில்) ஏறினார்கள் - அந்த நாளுக்குப் பிறகு அவர்கள் மிம்பரில் ஏறவில்லை - அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றிய பிறகு, 'அன்சாரிகளின் விஷயத்தில் (நல்லவிதமாக நடந்துக் கொள்ளும்படி) உங்களுக்கு நான் அறிவுரை கூறுகிறேன். ஏனெனில், அவர்கள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். 28 தம் மீதிருந்த பொறுப்பை, அவர்கள் நிறைவேற்றிவிட்டார்கள். இனி அவர்களுக்குரிய உரிமை தான் எஞ்சியுள்ளது. 29 எனவே, அவர்களில் நன்மை புரிவோரிடமிருந்து (அந்த நன்மையை) ஏற்றுக் கொண்டு, அவர்களில் தவறிழைப்பவரை மன்னித்து விடுங்கள்'' என்று கூறினார்கள்.

3800. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நோய்வாய்ப்பட்டிருந்தபோது) தம் தோள்களின் மீது ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு (வீட்டிலிருந்து பள்ளி வாசலுக்குப்) புறப்பட்டார்கள். அப்போது அவர்களின் மீது கருப்புக் கட்டு ஒன்று (போடப்பட்டு) இருந்தது. மிம்பரிம் (மேடை) மீது சென்று அமர்ந்து, அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனைப் போற்றிப் பிறகு கூறினார்கள்; பிறகு, மக்களே! (இஸ்லாத்தில் இணையும்) மக்கள் (எண்ணிக்கையில்) அதிகமாவார்கள். (ஆனால் இறைமார்க்கத்திற்கு) உதவி புரிவோர் (அன்சார்) உணவில் உப்பைப் போன்று ஆகி விடும். அளவிற்கு குறைந்து போய்விடுவார்கள். எனவே, ஒருவருக்கு நன்மையளிக்கக் கூடிய, அல்லது தீங்கு செய்யக் கூடிய (அளவிற்குள்ள) ஓர் அதிகாரப் பொறுப்பை உங்களில் ஒருவர் ஏற்றால் அன்சாரிகளில் நன்மை புரிந்தவரின் நன்மையை ஏற்றுக் கொண்டு அவர்களில் தவறிழைத்தவரை மன்னித்து விடட்டும். 30

3801. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''அன்சாரிகள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். இனி (அன்சாரிகள் அல்லாத) மக்கள் பெருகுவார்கள்; (அன்சாரிகள்) குறைந்து போய் விடுவார்கள். எனவே, அவர்களில் நன்மை புரிபவர்களிடமிருந்து (அதை) ஏற்றுக் கொள்ளுங்கள்; அவர்களில் தவறிழைப்பவர்களை (பெருந்தன்மையுடன்) மன்னித்து விடுங்கள்.''

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பகுதி 12

ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் சிறப்புகள். 31

3802. பராஉ(ரலி) அறிவித்தார்

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களுக்கு பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் அதைத் தொட்டுப் பார்த்து அதன் மென்மையைக் கண்டு வியப்படையலானார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இதன் மென்மையைக் கண்டு நீங்கள் வியக்கிறீர்களா? (சொர்க்கத்தில்) ஸஅத் இப்னு முஆத் அவர்களின் கைக்குட்டைகள் இதை விடச் சிறந்தவை அல்லது இதை விட மென்மையானவை ஆகும்'' என்று கூறினார்கள். 32

இந்த ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 33

3803. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறைசிம்மாசனம் அசைந்தது. 34

என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

ஜாபிர்(ரலி) அவர்களிடமிருந்து இதே ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது...

ஒருவர் ஜாபிர்(ரலி) அவர்களிடம், 'பராஉ(ரலி), 'ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களைச் சுமந்து சென்ற (ஜனாஸாப்) பெட்டி தான் அசைந்தது' என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள்'' என்று சொன்னதற்கு ஜாபிர்(ரலி), 'இந்த (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்) இரண்டு குடும்பங்களுக்கிடையே குரோதங்கள் இருந்தன. நபி(ஸல்) அவர்கள், 'ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காகக் கருணையாள(னான இறைவ)னின் சிம்மாசனம் அசைந்தது' என்று சொல்ல கேட்டிருக்கிறேன்'' என்று பதிலளித்தார்கள். 35

3804. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்

ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக் கொண்டு (பனூ குறைழா யூத) மக்கள் (கைபரிலுள்ள கோட்டையிலிருந்து) இறங்கி வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஸஅத் இப்னு முஆத் அவர்களுக்கு ஆளனுப்பிட அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீயிலிருந்து) கழுதையின் மீது (சவாரி செய்தபடி) வந்தார்கள். (நபியவர்கள் தற்காலிமாக அமைத்திருந்த) தொழுமிடத்திறகு அருகே அவர்கள் வந்து சேர்ந்ததும், நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் சிறந்தவரை... அல்லது உங்கள் தலைவரை.. நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கி விடு)ங்கள்'' என்று கூறினார்கள். பிறகு, 'சஅதே! இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறீர்கள்?)'' என்று கேட்டார்கள். ஸஅத்(ரலி), 'இவர்களில் போரிடும் வலிமையுடையவர்கள் கொல்லப்படவேண்டும் என்றும், இவர்களுடைய பெண்களும் குழந்தைகளும் கைது செய்யப்படவேண்டும் என்றும் நான் இவர்களிடையே தீர்ப்பளிக்கிறேன்'' என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தீர்ப்புப் படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்.''. அல்லது 'அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்'' என்று கூறினார்கள். 36

பகுதி 13

உசைத் இப்னு ஹுளைர்(ரலி) மற்றும் அப்பாத் இப்னு பிஷ்ர்(ரலி) ஆகியோரின் சிறப்பு. 37

3805. அனஸ்(ரலி) அறிவித்தார்

(நபித் தோழர்களில்) இரண்டு மனிதர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (விடை பெற்றுக் கொண்டு) இருண்ட ஓர் இரவில் (தம் இல்லங்களுக்குப்) புறப்பட்டார்கள். அப்போது அவ்விருவருக்கும் முன்னால் ஒளி ஒன்று பிரகாசித்தபடி அவர்கள் ஒருவரை ஒருவர் பிரியும் வரை சென்று கொண்டேயிருந்தது. (அவர்கள்) ஒருவரையொருவர் பிரிந்து சென்றவுடன்) அந்த ஒளியும் அவர்களுடன் பிரிந்து சென்றுவிட்டது.

அனஸ்(ரலி) அவர்களிடமிருந்தே ஸாபித்(ரஹ்) வழியாக மஅமர்(ரஹ்) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'இரண்டு மனிதர்கள்' என்பதற்கு பதிலாக, 'உசைத் இப்னு ஹுளைர்(ரலி) அவர்களும் அன்சாரிகளில் ஒரு மனிதரும்' என்று இடம் பெற்றுள்ளது.

அனஸ்(ரலி) அவர்களிடமிருந்தே ஸாபித்(ரஹ்) வழியாக ஹம்மாத்(ரஹ்) அறிவிக்கும் இன்னோர் அறிவிப்பில், 'உசைத் இப்னு ஹுளைர்(ரலி) அவர்களும் அப்பாத் இப்னு பிஷ்ர்(ரலி) அவர்களும் நபி(ஸல் அவர்களிடம் இருந்தனர். (இருவரும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து புறப்பட்டு தம் இல்லங்களுக்குச் சென்ற போது)'' என்று இடம் பெற்றுள்ளது.

பகுதி 14

முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களின் சிறப்புகள். 39

3806. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

இப்னு மஸ்வூத்(ரலி), அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப் மற்றும் முஆத் இப்னு ஜபல் ஆகிய நான்கு போரிடமிருந்து குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்.

என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். 40

பகுதி 15

ஸஅத் இப்னு உபாதா - ரலி அவர்களின் சிறப்பு. 41

(ஸஅத்(ரலி) அவர்களைப் பற்றி) 'அவர்கள் அதற்கு முன் நல்ல மனிதராக இருந்தார்கள்'' என்று ஆயிஷா(ரலி) கூறினார். 42

3807. அனஸ்(ரலி) அறிவித்தார்

''அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது. பனூ நஜ்ஜார் குடும்பம் ஆகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பம் ஆகும். பிறகு பனூல் ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் குடும்பம் ஆகும். பிறகு பனூ சாஇதா குடும்பம் ஆகும். அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ உசைத்(ரலி) அறிவித்தார்.

அப்போது ஸஅத் இப்னு உபாதா(ரலி) இஸ்லாத்தில் செல்வாக்கு உடையவர்களாக அன்னார் இருந்தார்கள். 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நம்மை விட (மற்ற குடும்பங்களை) சிறப்புக்குரியவர்களாக ஆக்கிவிட்டதை நான் பார்க்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'உங்களை நபி(ஸல்) அவர்கள் நிறைய மக்களை விடச் சிறப்பித்துக் கூறினார்கள்'' என்று சொல்லப்பட்டது.43

பகுதி 16

உபை இப்னு கஅப்(ரலி) அவர்களின் சிறப்புகள். 44

3808. மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) குறித்துக் கூறப்பட்டது. அப்போது அவர்கள் கூறினார்கள்: அவர் நான் நேசித்துக கொண்டேயிருக்கும் ஒருவர். (ஏனெனில்,) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமை சாலிம், முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅப் ஆகிய நான்கு போரிடமிருந்து குர்ஆனை (ஓதும் முறையை) எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்ல கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களையே முதலில் குறிப்பிட்டார்கள். 45

3809. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம் அல்லாஹ் உங்களுக்கு, 'வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பவர்களிலும் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை தங்களின் நிராகரிப்பிலிருந்து விலகி கொள்வோராய் இருக்கவில்லை..'' என்றும் (திருக்குர்ஆனின் 98-ம்) அத்தியாயத்தை ஓதிக் காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்'' என்று கூறினார்கள். அதற்கு உபை இப்னு கஅப்(ரலி), 'என் பெயரைக் குறிப்பிட்டா. (அப்படிச்) சொன்னான்?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை இப்னு கஅப் அவர்கள் (ஆனந்தம் மேலிட்டு) அழுதார்கள்.

பகுதி 17

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் சிறப்புகள். 46

3810. கதாதா(ரஹ்) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோர் தாம் அவர்கள்'' என்று அனஸ்(ரலி) கூறினார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'அபூ ஸைத் என்பவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்'' என்று பதிலளித்தார்கள்.

பகுதி 18

அபூ தல்ஹா(ரலி) அவர்களின் சிறப்புகள். 47

3811. அனஸ்(ரலி) அறிவித்தார்

உஹுதுப் போரின்போது நபி(ஸல்) அவர்களை(த் தனியே)விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி)விட்டனர். அபூ தல்ஹா(ரலி) நபி(ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.

மேலும், அபூ தல்ஹா(ரலி) வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். (அப்படி வேகமாக இழுத்து அம்பெய்கையில்) இரண்டு அல்லது மூன்று விற்களை அவர்கள் அன்று உடைத்து விடுவார்கள். எவரேனும் ஒருவர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி(ஸல்) அவர்கள், 'அதை அபூ தல்ஹாவிடம் போடு'' என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் மேலேயிருந்து (தலையை உயர்த்தி) மக்களை எட்டிப் பார்க்க, அபூ தல்ஹா அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால் என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும்'' என்று கூறினார்கள்.

அபூ பக்ர்(ரலி) அவர்களின் மகள் ஆயிஷா(ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு (காயமுற்றவர்களுக்குப் பணிவிடைகள் செய்து) இருப்பதை கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து அவர்களின் வாய்களில் மீண்டும் உற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கால் கொலுசுகளை கண்டேன். அபூ தல்ஹா(ரலி) அவர்களின் சுரத்திலிருந்து இரண்டு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது. 48

பகுதி 19

அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களின் சிறப்புகள். 49

3812. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் பூமியின் மீது நடந்து செல்லும் எவரையும், 'இவர் சொர்க்கவாசி'' என்று சொல்லி நான் கேட்டதில்லை; அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களைத் தவிர, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களைக் குறித்தே, 'மேலும், இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து சாட்சி சொல்பவர் ஒருவர் இது போன்ற வேதத்திற்கு சாட்சி கூறினார். அவர் நம்பிக்கையும் கொண்டிருந்தார்'' என்னும் (திருக்குர்ஆன் 46:10) இறைவசனம் அருளப்பட்டது.

அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு யூசுஃப்(ரஹ்) கூறினார்:

(இதை அறிவித்த இமாம்) மாலிக்(ரஹ்) இந்த இறைவசனம் அருளப்பட்டதால் (தாமாகவே) கூறினார்களா அல்லது இந்த ஹதீஸிலேயே (இந்த இறைவசனம்) இடம் பெற்றிருக்கிறதா என்று எனக்குத் தெரியாது

3813. கைஸ் இப்னு உபாத்(ரஹ்) அறிவித்தார்

நான் மதீனாவின் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் (நபித்தோழர்கள் சிலருடன்) அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் தம் முகத்தில் சிரம் பணிந்(து சஜ்தா செய்)ததற்கான அடையாளத்துடன் உள்ளே வந்தார். மக்கள், 'இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்'' என்று கூறினார்கள். அவர் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்; அவற்றை (அதிக நேரம் எடுக்காமல்) சுருக்கமாகத் தொழுதார். பிறகு அவர் வெளியேற, நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று, 'நீங்கள் பள்ளி வாசலுக்குள் நுழைந்தபோது மக்கள், 'இவர் சொர்க்கவாசி' என்று கூறினர்'' என்றேன். அதற்கு அவர் கூறினார்: அல்லாஹ்வீன் மீதாணையாக! தமக்குத் தெரியாததைக் கூறுவது எவருக்கும் முறையல்ல. ஏன் அவ்வாறு (மக்கள் பேசிக்கொள்கிறார்கள்) என்று உங்களுக்கு இதோ தெரிவிக்கிறேன். அதாவது, நான் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கனவொன்று கண்டேன். அதை அவர்களிடம் விவரித்தேன். நான் ஒரு பூங்காவில் இருப்பது போன்று கண்டேன் - அறிவிப்பாளர் கூறுகிறார்: அம்மனிதர் அதன் விசாலத்தையும் பசுமையையும் வர்ணித்தார் - அதன் நடுவே இரும்பாலான தூண் இருந்தது. அதன் அடிப்பகுதி பூமியில் இருந்தது. மேற்பகுதி வானத்தில் இருந்தது. அதன் மேற்பகுதியில் பிடி ஒன்று இருந்தது. என்னிடம், 'இதில் ஏறு'' என்று சொல்லப்பட்டது. நான், 'என்னால் இயலாதே'' என்று சொன்னேன். அப்போது என்னிடம் பணியாள் ஒருவர் வந்து என் ஆடையைப் பின்னாலிருந்து உயர்த்திவிட்டார். உடனே நான் (அதில்) ஏறினேன். இறுதியில் அதன் மேற்பகுதிக்கு நான் சென்றுவிட்டபோது அந்தப் பிடியை நான் பற்றினேன். உடனே என்னிடம், 'நன்கு பற்றிப் பிடித்துக் கொள்'' என்று சொல்லப்பட்டது. (நான் அதைப் பற்றினேன்.) அந்தப் பிடி என் கையில் இருக்க (திடுக்கிட்டு) நான் விழித்தெழுந்தேன். நபி(ஸல்) அவர்களிடம் அதை நான் விவரித்தபோது, 'அந்தப் பூங்கா இஸ்லாமாகும். அந்தத் தூண் இஸ்லாம் எனும் தூணாகும். அந்தப் பிடி பலமான (இறை நம்பிக்கை என்னும்) பிடியாகும். எனவே, நீங்கள் இறங்கும் வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள்'' என்று நபியவர்கள் பதிலளித்தார்கள் (இப்படிச் சொன்ன) அந்த மனிதர் அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) தாம்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 'பணியாள்' என்பதற்கு பதிலாக 'சிறிய பணியாள்' என்னும் சொல் இடம் பெற்றுள்ளது.

3814. அபூ புர்தா ஆமிர்(ரஹ்) அறிவித்தார்

நான் மதீனாவுக்கு வந்து அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் (என்னிடம்), 'நீங்கள் (என்னுடன்) வர மாட்டீர்களா? உங்களுக்கு நான் மாவையும் பேழீச்சம் பழத்தையும் உண்ணத் தருவேன். நீங்கள் நபி(ஸல்) அவர்கள் வருகை தந்த என் வீட்டிற்கு வந்ததாகவும் இருக்குமே'' என்று கேட்டார்கள். பிறகு, 'நீங்கள் வட்டி மலிந்துள்ள (இராக்) நாட்டில் வசிக்கிறீர்கள். உங்களுக்கு ஒருவர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்து. அவர் ஒரு வைக்கோல் போரையோ, வாற்கோதுமை மூட்டையையோ, கால்நடைத் தீவன மூட்டையையோ அன்பளிப்பாகக் கொடுத்தாலும் அதுவும் வட்டியாகும்'' என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில், '(என்) வீட்டிற்கு' என்னும் சொல் இடம் பெறவில்லை.

பகுதி 20

கதீஜா(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் மணமுடித்துக் கொண்டதும் கதீஜா(ரலி) அவர்களின் சிறப்பும். 50

3815. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உலகின் பெண்களிலேயே (அன்று) சிறந்தவர் மர்யம் ஆவார். (இன்று) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார்.

என அலீ(ரலி) அறிவித்தார். 51

3816. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

கதீஜா(ரலி) அவர்களின் மீது நான் ரோஷம் கொண்டதைப் போல் நபி(ஸல்) அவர்களின் (இதர) மனைவிமார்களில் வேறெவரின் மீதும் நான் ரோஷப்பட்டதில்லை. ஏனெனில், அவர்களை நபி(ஸல்) அவர்கள் (அடிக்கடி) நினைவு கூர்வதை நான் கேட்டு வந்தேன். என்னை நபி(ஸல்) அவர்கள் மணம் புரிந்து கொள்வதற்கு முன்பே கதீஜா இறந்து விட்டிருந்தார். மேலும், முத்து மாளிகை ஒன்று (சொர்க்கத்தில்) கதீஜாவுக்கு கிடைக்கவுள்ளது என்று அவர்களுக்கு நற்செய்தி சொல்லும்படி அல்லாஹ், நபி(ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இன்னும் நபி(ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்து (அதன் இறைச்சியில்) சிறிது கதீஜா அவர்களின் தோழிகளிடையே அவர்களுக்குப் போதுமான அளவிற்கு அன்பளிப்பாகப் பங்கிட்டு விடுவது வழக்கம் (இதனாலெல்லாம் எனக்குள் ரோஷம் பிறந்தது.)

3817. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

கதீஜா(ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் வேறெந்தப் பெண்ணின் மீதும் ரோஷப்பட்டதில்லை. ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள். கதீஜா அவர்கள் இறந்து மூன்றாண்டுகள் கழித்து நபி(ஸல்) அவர்கள் என்னை மணந்தார்கள். கதீஜா அவர்களுக்கு சொர்க்கத்தில் முத்து மாளிகை ஒன்று கொடுக்கப்படும் என்று அவர்களுக்கு நற்செய்தி கூறும்படி நபியவர்களுக்கு அவர்களின் இறைவன் கட்டளையிட்டான்... அல்லது (இவ்வாறு நற்செய்தி சொல்லும்படி இறைவன் கட்டளையிட்டதை) ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறினார்கள்.

3818. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

கதீஜா(ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி(ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் (நபி(ஸல்) அவர்களிடம்) அவரைப் பார்த்ததில்லை. ஆனால், நபி(ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பால துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் நான் நபி(ஸல்) அவர்களிடம், 'உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களோ'' என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், 'அவர் (புத்திசாலியாக) இருந்தார்; (சிறந்த குணமுடையவராக) இருந்தார். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்.) மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது'' என்று பதில் கூறினார்கள். 52

3819. இஸ்மாயீல் இப்னு அபீ காலித்(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் கதீஜா(ரலி) அவர்களுக்கு நற்செய்தி எதுவும் கூறினார்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆம்! (சொர்க்கத்தில்) கூச்சல் குழப்பமோ, களைப்போ இல்லாத, துளையுள்ள முத்து மாளிகை ஒன்றை (இறைவன் அவர்களுக்கு அளிக்க இருப்பது) கொண்டு (நற்செய்தி கூறினார்கள்)'' என்று பதிலளித்தார்கள்.

3820. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு.. அல்லது உணவு... அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள்.

3821. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஹாலா பின்த்து குவைலித் - கதீஜா(ரலி) அவர்களின் சகோதரி - இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள் (கதீஜா - ரலி - அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா(ரலி) அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, 'இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள். உடனே நான் ரோஷமடைந்து, ‘எப்போதோ மறைந்துவிட்ட, தாடைகள் சிவந்த ஒரு குறைஷிக் கிழவியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்கு பதிலாக அவரைவிடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்துவிட்டானே (அப்படியிருக்க, இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.)'' என்று கேட்டேன். 53

பகுதி 21

ஜாரீர் இப்னு அப்தில்லாஹ் அல் பஜலீ(ரலி) பற்றிய குறிப்பு. 54

3822. ஜாரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நான் இஸ்லாதை ஏற்றதிலிருந்து (நான் சந்திக்க அனுமதி கேட்ட எந்தச் சமயத்திலும்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; சிரித்த முகத்துடனே தவிர அவர்கள் என்னைக் கண்டதில்லை.

என கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்.

3823. ஜாரீர்(ரலி) அறிவித்தார்

அறியாமைக் காலத்தில் 'துல்கலஸா'55 என்னும் ஆலயம் ஒன்று இருந்தது. அது யமன் நாட்டு கஅபா.. அல்லது ஷாம் நாட்டு கஅபா 56 என்று அழைக்கப்பட்டு வந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'துல்கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீ விடுவித்து விடுவாயா?' என்று கேட்டார்கள். எனவே நான் 'அஹ்மஸ்' என்னும் (என்) குலத்தாரிலிருந்து நூற்றி ஐம்பது குதிரை வீரர்களுடன் அதை நோக்கிப் புறப்பட்டேன். அதை நாங்கள் உடைத்து விட்டோம். அதனருகே இருந்த(பகை)வர்களை நாங்கள் கொன்று விட்டோம். 57 பிறகு நபி(ஸல்) அவர்களிடம் வந்து விவரத்தைத் தெரிவித்தோம். அப்போது, நபி(ஸல்) அவர்கள் எங்களுக்காகவும் 'அஹ்மஸ்' குலத்தாருக்காகவும் பிரார்த்தனை புரிந்தார்கள். 58

பகுதி 22

ஹுதைஃபா இப்னு யாமன் அல் அப்ஸீ(ரலி) பற்றிய குறிப்பு. 59

3824. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

உஹுதுப் போரின் (ஆரம்பத்தின்)போது இணைவைப்பாளர்கள் அப்பட்டமாகத் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது இப்லீஸ், 'அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்'' என்று கத்தினான். உடனே, முஸ்லிம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி,) பின் அணியினரை நோக்கித் திரும்பிச் செல்ல, பின் அணியினருடன் (மோதலேற்பட்டுப்) போரிட்டுக் கொண்டனர். அப்போது ஹுதைஃபா(ரலி), தம் தந்தை அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார். எனவே, 'அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!'' என்று உரக்கக் கூவினார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டும்) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா(ரலி), 'அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) கூறினார்:

''அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா(ரலி) மன்னித்ததால் (அவர்களின் வாழ்க்கையில்) அவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை நல்ல பலன் இருந்து கொண்டேயிருந்தது'' என்று என் தந்தை (உர்வா - ரஹ் - அவர்கள்) கூறுகிறார்கள். 60

பகுதி 23

ஹிந்த் பின்த் உத்பா(ரலி) பற்றிய குறிப்பு. 61

3825. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஹிந்த் பின்த் உத்பா, (நபி - ஸல் - அவர்களிடம்) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (நான் இஸ்லாத்தை எதிர்த்து வந்த பொழுது) பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும் விட உங்கள் வீட்டார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட) பிறகு இன்று பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் பெறுவதையும் விட உங்கள் வீட்டார் கண்ணியம் பெறுவதே எனக்கு அதிக விருப்பமானதாக மாறிவிட்டது' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (இந்த உன்னுடைய விருப்பம்) இன்னும் (அதிகமாகும்)'' என்று பதிலளித்தார்கள். ஹிந்த் பின்த் உத்பா, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் மிகவும் கருமியான ஒருவர். எனவே, அவருக்குரிய பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் பிள்ளை குட்டிகளுக்கு நான் உண்ணக் கொடுத்தால் என் மீது குற்றமாகுமா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நியாயமான அளவிற்கு எடுத்(து உண்ணக் கொடுத்)தால் குற்றமில்லை'' என்று பதிலளித்தார்கள்.

பகுதி 24

ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல் அவர்களைப் பற்றிய செய்தி. 62

3826. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், தமக்கு வேத வெளிப்பாடு (வஹீ) அருளப்படுவதற்கு முன்பு கீழ் 'பல்தஹில்63 ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல் அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது (குறைஷிகளின்) பயண உணவு ஒன்று நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் பரிமாறப்பட்டது. அந்த உணவை ஸைத் இப்னு அம்ர் உண்ண மறுத்துவிட்டார். பிறகு ஸைத் (உணவைப் பரிமாறிய குறைஷிகளிடம்), 'நீங்கள் உங்கள் (சிலைகளுக்கு பலியிடும்) பலிபீடக் கற்களில் வைத்து அறுப்பவற்றை நான் உண்ண மாட்டேன்'' என்று கூறினார்கள். ஸைத் இப்னு அம்ர் அவர்கள், குறைஷிகளால் (சிலைகளுக்காக) அறுக்கப்பட்டவற்றைக் குறை கூறிவந்தார்கள். மேலும், 'ஆட்டை அல்லாஹ்வே படைத்தான்; அதற்காக, வானத்திலிருந்து தண்ணீரைப் பொழிந்தான்; அதற்காக பூமியிலிருந்து (புற் பூண்டுகளை முளைக்கச் செய்தான். (இத்தனைக்கும்) பிறகு நீங்கள் அல்லாஹ்வின் பெயரால்லாத மற்ற (கற்பனைத் தெய்வங்களின்) பெயர் சொல்லி அதை அறுக்கிறீர்கள்; இறைவனின் அருட் கொடையை நிராகரிக்கும் விதத்திலும் அல்லாஹ் அல்லாதவரை கண்ணியப்படுத்தும் விதத்திலும் இப்படிச் செய்கிறீர்கள்'' என்று கூறி வந்தார்கள்.

3827. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல், (நபித்துவ காலத்திற்கு முன்பு) ஏகத்துவ மார்க்கத்தைப் பற்றி விசாரித்துப் பின் பற்றுவதற்காக ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார். அப்போது யூத அறிஞர் ஒருவரைச் சந்தித்து யூதர்களின் மார்க்கதைப் பற்றி அவரிடம் விசாரித்தார். அந்த அறிஞரிடம், 'நான் உங்கள் மார்க்கத்தை ஏற்றுப் பின்பற்றக் கூடும். எனவே, எனக்கு (அதைப் பற்றித்) தெரிவியுங்கள்'' என்று கூறினார். அதற்கு அந்த அறிஞர், 'அல்லாஹ்வின் கோபத்தில் உனக்குள்ள பங்கை நீ எடுத்துக் (கொண்டு அதற்காக வேதனையை அனுபவித்துக்) கொள்ளாத வரை நீ எங்கள் மார்க்கத்தில் இருக்க முடியாது'' என்று கூறினார். ஸைத் அவர்கள், 'நான் அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தானே வெருண்டோடி வருகிறேன்! மேலும், அல்லாஹ்வின் கோபத்தில் சிறிதளவைக் கூட ஒருபோதும் நான் தாங்க மாட்டேன். என்னால் எப்படி அதைத் தாங்க முடியும்? வேறெந்த மார்க்கத்தையாவது எனக்கு அறிவித்துத் தரமுடியுமா?' என்று கேட்டார். அந்த அறிஞர், 'அது (ஏகத்துவ மார்க்கமான) நேரிய மார்க்கமாகத் தவிர இருக்க முடியாது என்பதை நான் நன்கறிவேன்'' என்று பதிலளித்தார். ஸைத் அவர்கள், 'நேரிய மார்க்கம் என்பதென்ன?' என்று கேட்டதற்கு அந்த அறிஞர், 'இது இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மார்க்கம். அவர்கள் யூதராகவும் இருக்கவில்லை. கிறிஸ்தவராகவும் இருக்கவில்லை. மேலும், அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் அவர்கள் வணங்க மாட்டார்கள்'' என்று கூறினார். (மீண்டும்) புறப்பட்டுச் சென்று கிறிஸ்தவ அறிஞர் ஒருவரைச் சந்தித்தார். அவரும் யூத அறிஞரைப் போன்றே, 'அல்லாஹ்வின் (கருணையைவிட்டு அப்புறப்படுத்தப்படும்) சாபத்தில் உனக்குள்ள பங்கை நீ எடுத்துக் கொள்ளாத வரை நீ எங்கள் மார்க்கத்தில் இருக்க முடியாது'' என்று கூறினார். ஸைத் அவர்கள், 'அல்லாஹ்வின் சாபத்திலிருந்து தானே நான் வெருண்டோடி வருகிறேன். அல்லாஹ்வின் சாபத்திலிருந்தும அவனுடைய கோபத்திலிருந்தும் சிறிதளவைக் கூட ஒருபோதும் நான் தாங்க மாட்டேன். (அவற்றை) எப்படி என்னால் தாங்க முடியும்? வேறெந்த மார்க்கத்தையாவது எனக்கு நீங்கள் அறிவித்துத் தருவீர்களா?' என்று கேட்க, அதற்கு அவர், 'நேரிய (ஏகத்துவ) மார்க்கமாகத் தான் அது இருக்குமென்பதை நான் நன்கறிவேன்'' என்று கூறினார். ஸைத் அவர்கள், 'நேரிய மார்க்கம் என்பதென்ன?' என்று கேட்டதற்கு அந்த அறிஞர், 'இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்கம், அவர்கள் யூதராகவோ, கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. மேலும், அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் அவர்கள் வணங்க மாட்டார்கள்'' என்று பதிலளித்தார்கள். ஸைத் அவர்கள் அந்த அறிஞர்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தைப் பற்றிக் கூறியதைக் கண்டபோது, (அவர்களிடமிருந்து) புறப்பட்டு வெளியே வந்ததும் தம் கைகளை உயர்த்தி, 'இறைவா! நான் இப்ராஹீம்(அலை) அவர்களின் (ஏகத்துவ) மார்க்கத்தில் உள்ளேன் என்று உறுதி கூறுகிறேன்' எனக் கூறினார்.

3828. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்

ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல் அவர்கள் (நபித்துவ காலத்திற்கு முன்பு) இறையில்லம் கஅபாவின் மீது சாய்ந்து கொண்டு நின்றபடி, 'குறைஷிக் குலத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைத் தவிர உங்களில் எவரும் இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்கத்தின் படி நடக்கவில்லை'' என்று சொல்லிக் கொண்டிருந்ததை பார்த்தேன். மேலும், அவர் உயிரோடு புதைக்கப்படவிருந்த பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வாழவைத்து வந்தார். எவரேனும் தன் பெண்மகவைக் கொல்ல நாடினால் அவரிடம், 'அவளைக் கொல்லாதே. அவளுடைய செலவுக்கு உன்னிடம் நான் பொறுப்பேற்கிறேன்'' என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் குழந்தையை (தாமே வளர்க்க) எடுத்துக் கொள்வார். அவள் வளர்ந்ததும் அவளுடைய தந்தையிடம் (சென்று), 'நீ விரும்பினால் இவளை உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன்; நீ விரும்பினால் அவளுடைய செலவுக்குப் பொறுப்பேற்று (பழையபடி நானே பராமரித்து)க் கொள்கிறேன்'' என்று சொல்வார்.

பகுதி 25

கஅபாவைக் கட்டுதல் 64

3829. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

(நபியவர்களின் காலத்தில் குறைஷிகளால்) கஅபா (புதுப்பித்துக்) காட்டப்பட்டபோது நபி(ஸல்) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் கற்களை(ச் சுமந்து) எடுத்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அப்பாஸ்(ரலி) (சிறுவரான) நபி(ஸல்) அவர்களிடம், 'உங்கள் வேட்டியை (கழற்றி) உங்கள் கழுத்துக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள். கல்லி(ன் சுமையால் ஏற்படும் வலியி)லிருந்து அது உங்களைக் காப்பாற்றும்'' என்று கூறினார்கள். (நபி(ஸல்) அவர்கள் அப்படிச் செய்ய முனைந்த போது) அவர்கள் பூமியில் (மூர்ச்சித்து) விழுந்துவிட்டார்கள். அவர்களின் இரண்டு கண்களும் வானத்தை நோக்கியபடி நிலைகுத்தி நின்றுவிட்டன. பிறகு மூர்ச்சை தெளிந்ததும், 'என் வேட்டி, என் வேட்டி'' என்று கேட்கலானார்கள். (வேட்டி தரப்பட்ட) உடனே அதை இறுக்கமாக கட்டிக் கொண்டார்கள். 65

3830. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களும் உபைதுல்லாஹ் இப்னு அபீ யஸீத்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்கள்:

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (இறையில்லமான) பைத்துல் ஹராமைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் இருந்ததில்லை. 66 மக்கள் இறையில்லத்தைச் சுற்றிலும் தொழுது வந்தார்கள். உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலம் வந்தபோது அதைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் கட்டினார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ்(ரஹ்), 'அந்தச் சுவர் குட்டையாக இருந்தது. பிறகு அதை (அப்துல்லாஹ்) இப்னு ஸுபைர்(ரலி) (உயர்த்திக்) கட்டினார்கள்'' என்று கூறுகிறார்கள்.

பகுதி 26

அறியாமைக் காலம். 67

3831. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஆஷூரா (முஹர்ரம் 10-ம் நாள் என்பது அறியாமைக் காலத்தில் குறைஷிகள் நோன்பு நோற்கிற நாளாக இருந்து வந்தது. நபி(ஸல்) அவர்களும் அந்த நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்றபோது அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்கும் படி (முஸ்லிம்களுக்கும்) உத்தரவிட்டார்கள். ரமளான் (நோன்பின் கட்டளை) வந்தபோது 68 ஆஷூரா தினம், விரும்பியவர்கள் நோன்பு நோற்கவும் செய்யலாம்; விரும்பாதவர்கள் நோன்பு நோற்காமலும் இருக்கலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டது. 69

3832. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

'ஹஜ்ஜுடைய மாதங்களில் (ஹஜ் மட்டுமே செய்ய வேண்டும்: அம்மாதங்களில்) உம்ரா செய்வது பூமியில் நடக்கும் பாவகரமான செயல்களில் ஒன்று' என (அறியாமைக் கால) மக்கள் கருதிக் கொண்டிருந்தார்கள். (போரிடுதல் தடை செய்யப்பட்ட நான்கு மாதங்களில் துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய மூன்று மாதங்கள் தொடர்ந்து வந்ததால் சலிப்புற்று முஹர்ரம் மாதத்திற்கான தடையை அவர்கள் ஸஃபர் மாதத்திற்குமாற்றி) ஸஃபருக்கு முஹர்ரம் என்று பெயர் சூட்டி வந்தார்கள். (ஹஜ் பயணத்தில்) ஒட்டகங்களின் முதுகிலுள்ள சுமைகளின் வடு காய்ந்து மறைந்து (ஸஃபர் மாதமும் கழிந்து)விட்டால் உம்ரா செய்ய நாடுபவருக்கு உம்ரா செய்ய அனுமதியுண்டு'' என்று கூறி வந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலை, ஹஜ்ஜுககாக இஹ்ராம் அணிந்து கொண்டு (மதீனாவிலிருந்து) மக்கா நகருக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள், மக்கள் தம் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எச்செயல்கள் அனுமதிக்கப்படும்?' எனக் கேட்டனர். அதற்கு, 'இஹ்ராம் அணிந்தவருக்கு விலக்கப்பட்டிருந்த) அனைத்து செயல்களும் அனுமதிக்கப்படும்''70 என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

3833. ஹஸன் இப்னு அபீ வஹ்ப் அல் முஹாஜிரீ(ரலி) அறிவித்தார்

(இஸ்லாத்திற்கு முந்திய) அறியாமைக் காலத்தில் (ஒரு முறை) பெருவெள்ளம் ஒன்று (பெருக்கெடுத்து) வந்து (மக்காவின்) இரண்டு மலைகளையும் மூடிக் கொண்டது.

இதை ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) தம் தந்தை முஸய்யப் இப்னு ஹஸ்ன்(ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்.

சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:

''இது பெரியதொரு நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்பாகும்'' என்று அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார். 71

3834. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்

அபூ பக்ர்(ரலி) 'ஸைனப்' என்றழைக்கப்படும் 'அஹ்மஸ்' குலத்துப் பெண்ணொருத்தியிடம் சென்றார்கள். அவளை (மௌன விரதம் பூண்டு) பேசாமலிருப்பவளாகக் கண்டார்கள். உடனே, 'இவளுக்கென்ன ஆயிற்று? ஏன் பேசாமலிருக்கிறாள்?' என்று கேட்டார்கள். மக்கள், '(இவள் ஹஜ் செய்யும் வரை) எவருடனும் பேச மாட்டேன் என்று நேர்ச்சை செய்திருக்கிறாள்'' என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவளிடம், 'நீ பேசு. ஏனெனில் இ(வ்வாறு மௌனவிரதம் பூணுவ)து அனுமதிக்கப்பட்ட காரியமல்ல. இது அறியாமைக் காலச் செயலாகும்'' என்று கூறினார்கள். எனவே, அவள் (மௌன விரதத்தைக் கலைத்துப் பேசினாள். 'நீங்கள் யார்?' என்று கேட்டாள். அபூ பக்ர்(ரலி), 'முஹாஜிர்களில் ஒருவன்'' என்று பதிலளித்தார்கள். அப்பெண், 'முஹாஜிர்களில் நீங்கள் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்?' என்று கேட்க, அபூ பக்ர்(ரலி), 'குறைஷிகளின் குலத்தைச் சேர்ந்தவன்'' என்று பதிலளித்தார்கள். அப்பெண், 'குறைஷிகளில் நீங்கள் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்?' என்று கேட்க, அபூ பக்ர்(ரலி), 'நீ அதிகமாகக் கேள்வி கேட்கிறாயே? நானே அபூ பக்ர்'' என்று பதிலளித்தார்கள். அப்பெண், 'அறியாமைக் காலத்திற்குப் பிறகு எங்களிடம் வந்த இந்த (இஸ்லாம் எனும்) நல்ல நிலையில் நாங்கள் நீடித்து நிலைத்திருக்க வழி யாது?' என்று கேட்டாள். அபூ பக்ர்(ரலி), 'உங்கள் தலைவர்கள் உங்களைச் சீராக நிர்வகித்து வரும் வரை அதில் நீங்கள் நீடித்து நிலைத்திருப்பீர்கள்'' என்று பதிலளித்தாள் அபூ பக்ர்(ரலி), 'அவர்கள் தாம் மக்களின் தலைவர்கள்'' என்று கூறினார்கள்.

3835. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஓர் அரபுக் கோத்திரத்திற்குச் சொந்தமான கருப்பு (நிற அடிமைப்) பெண் ஒருத்தி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாள். அவளுக்குப் பள்ளி வாசலில் சிறிய (தங்கும்) அறையொன்று இருந்தது. அவள் எங்களிடம் வந்து பேசிக் கொண்டிருப்பாள். அவள் பேசி முடிக்கும்போது, 'அரையணித் தோள் பட்டிகை72 (காணாமல் போன) நாள் எம் இறைவனின் விந்தைகளில் ஒன்றாகும். அந்த நாள் இறை மறுப்பு (மேலோங்கி) இருந்த ஊரிலிருந்து என்னை (வெளியேற்றிக்) காப்பாற்றிவிட்டது'' என்று பாடுவாள். இவ்வாறு அவள் அதிகமாகப் பாடுவதைக் கேட்ட நான், 'அரையணித் தோள் பட்டிகை நாள்' என்றால் என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவள் சொன்னாள்: என் (எஜமானியர்) குடும்பத்தாரில் ஒருவருக்குரிய சிறுமி ஒருத்தி (மணப் பெண்ணாக இருந்ததால்) பதனிடப்பட்ட தோலால் ஆன (சிவப்பு) அரையணித் தோள் பட்டிகை ஒன்றை அணிந்து கொண்டு (குளியலறைக்குச்) சென்றாள். அப்போது அந்தப் பட்டிகை (எதிர்பாராத விதமாக) அவளிடமிருந்து (கழன்று) விழுந்து விட, அதைப் பருந்து ஒன்று இறைச்சி என்று நினைத்துக் கவ்வி எடுத்துச் சென்றுவிட்டது. (என் எஜமானர்கள் நானே அதைச் திருடினேன் என்று) என் மீது குற்றம் சாட்டிச் என்னைச் சூழ்ந்திருக்க, நான் கடும் வேதனையில் (துடித்தபடி) இருந்தபோது, அந்தப் பருந்து எங்கள் தலைகளுக்கு நேராக வந்து அந்தப் பட்டிகையை(க் கீழே) போட்டது. உடனே, அதை அவர்கள் எடுத்துக் கொண்டனர். அப்போது நான் அவர்களிடம், 'நான் குற்றமற்றவளாயிருக்க, நான் திருடிவிட்டதாக நீங்கள் குற்றம் சாட்டினீர்களே அந்தப் பட்டிகை தான் இது'' என்று சொன்னேன். 73

3836. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

''சத்தியம் செய்ய விரும்புகிறவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்களின் மீது சத்தியம் செய்து வந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் முன்னோர்களின் மீது சத்தியம் செய்யாதீர்கள்'' என்று கூறினார்கள். 74

3837. அப்துர் ரஹ்மான் இப்னு காஸிம்(ரஹ்) அறிவித்தார்

(என் தந்தை) காஸிம்(ரஹ்) ஜனாஸாவுக்கு (பிரேதத்திற்கு) முன்னால் நடந்து செல்வார்கள். அதற்காக எழுந்து நிற்கமாட்டார்கள்.

மேலும், ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து இப்படியும் அறிவிப்பார்கள்:

ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பதும் அதைக் கண்டால், '(உன் வாழ் நாளில்) நீ எப்படி இருந்தாயோ அப்படியே இப்போதும் இருப்பாய்'' என்று இருமுறை கூறுவதும் அறியாமைக் கால மக்களின் வழக்கமாகும். 75

3838. உமர்(ரலி) அறிவித்தார்

(ஹஜ்ஜின் போது) 'ஸபீர்' மலை மீது சூரியன் ஒளிராத வரை, இணைவைப்பவர்கள் முஸ்தலிஃபாவைவிட்டுப் புறப்பட மாட்டார்கள். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் மாறு செய்து சூரியன் உதிக்கும் முன்பாகப் புறப்பட்டார்கள். 76

3839. (இப்னு அப்பாஸ் - ரலி - அவர்களின் முன்னாள் அடிமையான) இக்ரிமா(ரஹ்) அறிவித்தார்

திருக்குர்ஆனில் (திருக்குர்ஆன் 78: 34-ல்) இடம் பெற்றுள்ள 'கஃஸன் திஹாக்கன் - நிரம்பிய கிண்ணமும்' என்பதற்கு '(தீரத்தீரத்) தொடர்ந்து நிரம்பிக் கொண்டிருக்கக் கூடிய கிண்ணமும் (சொர்க்கத்தில் உண்டு)' என்று பொருளாகும்.

3840. மேலும், இப்னு அப்பாஸ்(ரலி), 'என் தந்தை (அப்பாஸ் - ரலி - அவர்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு முன் அவர்களின்) அறியாமைக் காலத்தில் 'எங்களுக்குத் தொடர்ந்து நிரம்பும் கிண்ண(திலிருப்ப)தை அருந்தச் செய்' என்று (தம் பணியாளரிடம்) கூற கேட்டேன்'' எனக் கூறினார்கள்.

3841. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(கவிஞர்) லபீத் அவர்கள் 77 சொன்ன 'அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே'' என்றும் சொல்தான், கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல்லாகும். (கவிஞர்) உமய்யா இப்னு அபிஸ் ஸல்த் 78 (தன் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்துவிட்டார்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

3842. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு (ஓர் எஜமானனுக்கு அடிமை செலுத்த வேண்டிய சம்பாத்தியத்தில்) நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தி வந்த அடிமையொருவன் இருந்தான். அபூ பக்ர்(ரலி) அவன் செலுத்தும் தொகையிலிருந்து உண்டு வந்தார்கள். ஒரு நாள் அவன் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தான். அதிலிருந்து அபூ பக்ர்(ரலி) சிறிது உண்டார்கள். அப்போது அந்த அடிமை அவர்களிடம், 'இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டான். அபூ பக்ர்(ரலி), 'இது என்ன?' என்று கேட்டார்கள். அவன், 'நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லிவந்தேன்; எனக்கு நன்றாகக் குறிசொல்லத் தெரியாது. ஆயினும் (குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து) அவரை நான் ஏமாற்றி விட்டேன். அவர் அதற்காக எனக்குக் கூலி கொடுத்தார். நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக) எனக்குக் கூலியாகக் கிடைத்த அந்தப் பொருளிலிருந்து தான்'' என்று சொன்னான். உடனே அபூ பக்ர்(ரலி) தம் கையை (வாய்க்குள்) நுழைத்துத் தம் வயிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியெடுத்துவிட்டார்கள்.

3843. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

அறியாமைக் கால மக்கள் ஹபலுல் ஹபலாவுக்காக - கருவிலுள்ள ஒட்டகக் குட்டி பிறந்து அந்தக் குட்டி சுமந்து பெறவிருக்கும் குட்டிக்காக - ஒட்டகத்தின் இறைச்சிகளை விற்று வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இத்தகைய வியாபாரம் செய்யக் கூடாது என்று அவர்களுக்குத் தடைவிதித்தார்கள். 79

3844. ஃகைலான இப்னு ஜாரீர்(ரஹ்) அறிவித்தார்

நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் செல்வோம். அவர்கள் அன்சாரிகளைக் குறித்து எங்களிடம் பேசுவார்கள். அவர்கள், “(அறியாமைக் காலத்தில்) உங்கள் (அன்சாரி) சமுதாயத்தார் இன்ன இன்ன நாளில் இப்படி இப்படியெல்லாம் செய்துவந்தார்கள். (அறியாமைக் காலத்தில்) உங்கள் (அன்சாரி) சமுதாயத்தார் இன்ன இன்ன நாளில் இப்படி இப்படியெல்லாம் செய்துவந்தார்கள்” என்று என்னிடம் சொல்வார்கள்.80

பகுதி 27

'அல் கஸாமா' என்னும் அறியாமைக் காலச் சத்தியம் 81

3845. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

அறியாமைக் காலத்தில் நடைபெற்ற முதல் 'கஸாமா' (எனும் சத்தியம் தொடர்பான சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்ட சம்பவம்) எங்கள் பனூ ஹாஷிம் குலத்தினரிடையே தான் நிகழ்ந்தது. (அதன் விவரம் வருமாறு:) பனூ ஹாஷிம் குலத்தில் (அம்ர் இப்னு அல்கமா என்னும்) ஒருவர் இருந்தார். அவரைக் குறைஷிகளில் மற்றொரு கிளையைச் சேர்ந்த (கிதாஷ் இப்னு அப்தில்லாஹ் என்னும்) ஒருவர் கூலிக்கு அமர்த்திக் கொண்டார். அந்தக் கூலிக்காரர் தம் முதலாளியுடன் அவரின் ஒட்டகத்தில் (வாணிபக் குழுவினருடன் ஷாம் நோக்கிச்) சென்றார். அப்போது பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த இன்னொருவர் அந்தக் கூலிக்காரரின் அருகே சென்று கொண்டிருந்தார். அந்த பனூ ஹாஷிம் குலத்தவருடைய (ஒட்டகத்தின் இரண்டு பக்கங்கிளலும் தொங்க விடப்படும்) பையின் பிடி அறுந்து விட்டிருந்தது. அவர் அந்தக் கூலிக்காரைப் பார்த்து, 'என்னுடைய ஒட்டகம தப்பியோடாமல் இருக்க, (அறுந்து போன) என்னுடைய பையின் பிடியை (இணைத்து)க் கட்டுவதற்கு ஒரு கயிறு கொடுத்தார். உடனே அவர், அதன் மூலம் தன்னுடைய பையின் பிடியை (இணைத்து)க் கட்டிக் கொண்டார். அவர்கள் அனைவரும் (ஓய்வெடுப்பதற்காக ஓரிடத்தில்) தங்கியபோது எல்லா ஒட்டகங்களும் (அவற்றுக்குரிய கயிறுகளால்) கட்டிப் போடப்பட்டன. ஒரேயோர் ஒட்டகம் மட்டும் (அதன் கயிற்றை பனூ ஹாஷிம் குலத்தவருக்கு அந்தக் கூலிக்காரர் கொடுத்து விட்டிருந்ததால்) கட்டிப் போடப்படாமல் இருந்தது. அப்போது (கூலிக்காரை நோக்கி) அந்தக் குறைஷி (முதலாளி), 'இந்த ஒட்டகத்திற்கென்ன? பிற ஒட்டகங்களுக்கிடையே இது மட்டும் ஏன் கட்டிப் போடப்படவில்லை?' என்று கேட்டதற்கு அந்தக் கூலிக்காரர், 'அதற்குக் கயிறு இல்லை'' என்று கூறினார். முதலாளி, '(ஏன்)? அதன் கயிறு எங்கே (போனது)?' என்று கேட்டார். பிறகு அந்தக் கூலிக்காரரின் மீது (கோபம் கொண்டு) ஒரு தடியை (எடுத்து) எறிந்தார். அந்த அடியே அந்தக் கூலிக்காரரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்தது. அப்போது (அடிபட்டுக் குற்றுயிராய்க் கிடந்த) அந்தக் கூலிக்காரரை யமன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கடந்து சென்றார். அவரை நோக்கி (அந்தக் கூலிக்காரர்), 'ஹஜ் பருவத்தில் நீங்கள் (ஹஜ்ஜில்) கலந்து கொள்வீர்களா?' என்று கேட்டார். அந்த வழிப்போக்கர், 'நான் கலந்து கொள்ளமாட்டேன். ஒரு கால் நான் கலந்து கொள்ளவும் செய்யலாம்'' என்று கூறினார். அந்தக் கூலிக்காரர், 'என் சார்பாக ஒரு செய்தியை எப்போதாவது (நான் சொல்லும் குலத்தாரிடம்) தெரிவித்து விடுவாயா?' என்று கேட்டதற்கு அவர், 'ஆம் (செய்கிறேன்)'' என்று கூறினார். உடனே, அந்தக் கூலிக்காரர், 'நீ ஹஜ் பருவத்தில் பங்கெடுத்தால் 'குறைஷிக் குலத்தாரே!' என்று கூப்பிடு! அவர்கள் பதில் தந்தால் உடனே (குறைஷிக் கிளையான) 'பனூ ஹாஷிம் குலத்தாரே! என்று கூப்பிடு! அவர்கள் உனக்கு பதிலளித்தால் (பனூ ஹாஷிம் குடும்பத் தலைவரான) 'அபூ தாலிப்' பற்றி விசாரி! (அவரைச் சந்தித்து) அவரிடம் 'இன்னான் ஒரு கயிற்றுக்காக என்னைக் கொன்றுவிட்டான்' என்று தெரிவித்து விடு'' என்று கூறினார். பிறகு அந்தக் கூலிக்காரர் இறந்தும் விட்டார். அவரைக் கூலிக்கு அமர்த்திச் சென்ற அந்த குறைஷி முதலாளி (மக்காவிற்குத்) திரும்பி வந்தபோது அவரிடம் அபூ தாலிப் வந்து, '(கூலிக்காரரான) எங்கள் ஆள் என்ன ஆனார்?' என்று கேட்டார். 'அவர் நோய் வாய்ப்பட்டார். அவரை நல்ல முறையில் நான் கவனித்து வந்தேன். (ஆனாலும் அவர் இறந்துவிட்டார்.) அவரை அடக்கும் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொண்டேன்'' என்று கூறினார். 'உம்மிடமிருந்து (இந்த உதவிகளைப் பெறுவதற்கு) அவர் தகுதியானவரே.'' என்று அபூ தாலிப் கூறினார். பின்னர் சிறிது காலம் கழிந்தது. தன்னைப் பற்றிய செய்தியைத் தெரிவித்து விடும்படி அந்தக் கூலிக்காரர் இறுதி உபதேசம் செய்து அனுப்பிய (யமன் நாட்டைச் சேர்ந்த) அந்த மனிதர் ஹஜ் பருவத்தில் (ஹஜ்ஜுக்கு) வந்தார். அவர், 'குறைஷிக் குலத்தினரே!' என்று அழைத்தார். '(சிலரைக் காட்டி) இவர்கள் தாம் குறைஷிகள்'' என்று மக்கள் கூறினார்கள். 'பனூ ஹாஷிம் குலத்தினரே!'' என்று அவர் அழைத்தார். 'இவர்கள் தாம் பனூ ஹாஷிம் குலத்தினர்'' என்று மக்கள் தெரிவித்தனர். அவர், 'அபூ தாலிப் எங்கே?' என்று கேட்டார். 'இவர்தான் அபூ தாலிப்'' என்று கேட்டார். 'இவர்தான் அபூ தாலிப்'' என்று மக்கள் கூறினார்கள். 'ஒரு கயிற்றுக்காக இன்னான் என்னைக் கொன்றுவிட்டான் என்ற செய்தியை உங்களிடம் தெரிவித்து விடும்படி இன்னார் எனக்கு உத்தரவிட்டார்'' என்ற அவர் (அபூ தாலிபிடம்) கூறினார். அந்த முதலாளியிடம் அபூ தாலிப் சென்று, 'எங்களிடமிருந்து மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்'' என்று கூறி(விட்டு அறியாமைக் கால வழக்கப்படி பின்வருமாறு சொன்)னார்: 1. நீ விரும்பினால், எங்கள் ஆளை நீ கொலை செய்ததற்காக (நம்முடைய மரபுப்படி) நூறு ஒட்டகத்தை (நஷ்டயீடாக) செலுத்தலாம். 2. நீ விரும்பினால் உன்னுடைய சமுதாயத்திலிருந்து ஐம்பது பேர் 'நீ அவரைக் கொலை செய்யவில்லை' என்று சத்தியம் செய்யலாம். 3. (இந்த இரண்டையும் செய்ய) நீ மறுத்தால் உன்னை நாங்கள் அவருக்குப் பதிலாகக் கொன்று விடுவோம்'' (என்று கூறினார்.) அந்தக் குறைஷி (முதலாளி) தம் சமுதாயத்தினாரிடம் சென்றார். அப்போது அவர்கள், 'நாங்கள் சத்தியம் செய்கிறோம்'' என்று கூறினர். அபூ தாலிபிடம் பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்82 வந்தாள். பனூ ஹாஷிம் குலத்(தில் கொலையாளியின் குடும்பத்)தைச் சேர்ந்த ஒருவரின் மனைவியாக அவள் இருந்தாள். அவருக்காக ஒரு குழந்தையையும் அவள் பெற்றெடுத்திருந்தாள். அவள் கூறினான்: 'அபூ தாலிப் அவர்களே! (சத்தியம் செய்ய வேண்டிய) ஐம்பது பேர்களில் இந்த என்னுடைய மகனும் ஒருவனாக இருக்க அனுமதிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், சத்தியம் மேற்கொள்ளப்படும் (கஅபாவிலுளள ருக்ன் மகாமு இப்ராஹீம் இடையிலான) இடத்தில் இவனை சத்தியம் செய்யும்படி கட்டாயப்படுத்தாதீர்கள்'' (அவளுடைய கோரிக்கைப்படி) அபூ தாலிப் செயல்பட்டார். அப்போது பனூ ஹாஷிம் குலத்தாரில் (கொலையாளியின் குடும்பத்தைச் சேர்ந்த) இன்னொரு மனிதரும் வந்து, 'அபூ தாலிப் அவர்களே! (கொலைக் குற்றத்திற்குப் பரிகாரமாகத் தரப்படும்) நூற ஒட்டகங்களுக்கு பதிலாக ஐம்பது ஆண்கள் சத்தியம் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்பினீர்கள். ஒவ்வோர் ஆணுக்கும் இரண்டு ஒட்டகங்கள் (விகிதம்) ஏற்படும். இதோ, இந்த இரண்டு ஒட்டகங்களை எனக்காக ஏற்றுக் கொள்ளுங்கள். சத்தியம் செய்யுமாறு (அவர்களை) நீங்கள் கட்டாயப்படுத்தும்போது என்னையும் கட்டாயப்படுத்தாதீர்கள்'' என்று கூறினார். அந்த இருவரின் கோரிக்கையையும் அபூ தாலிப் ஏற்றார். ஆக, நாற்பத்தியெட்டுப் பேர் வந்து, (''எங்கள் குலத்தைச் சேர்ந்த கிதாஷ் கொலை செய்யப்பட்டவரின் உயிரீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டிய பொறுப்பிலிருந்து விடுபட்டுவிட்டார்'' என்று) சத்தியம் செய்தனர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! (அவர்கள் சத்தியம் செய்து) ஓராண்டு கூடக் கழியவில்லை; (பொய்ச் சத்தியம் செய்த) அந்த நாற்பத்தி எட்டுப் பேரின் கண்ணும் (எப்போதும்) துடிக்கும் படி (ஒரு தண்டனையாக) ஆக்கப்பட்டது.

3846. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

'புஆஸ்' போர் நாள், தன் தூதருக்காக அல்லாஹ் (சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில்) முன் கூட்டியே நிகழ்த்திக் காட்டிய நாளாகும். மதீனா வாசிகளின் கூட்டமைப்பு (குலைந்து) பிளவுபட்டிருந்த நிலையிலும், அவர்களில் முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்பட்டும் காயமுற்றும் இருந்த நிலையிலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள்(அங்கு) வந்தார்கள். எனவே, மக்கள் இஸ்லாத்தை ஏற்க (ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதற்காக) அல்லாஹ் தான், தன் தூதர்(ஸல்) அவர்களுக்குச் சாதகமாக அந்த நாளை முன் கூட்டியே நிகழச் செய்தான். 83

3847. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

'ஸஃபர்' மற்றும் 'மர்வா' (குன்றுகளுக்கு) இடையே பள்ளத்தாக்கின் மையப்பகுதியில் (வேகமாகத்) தொங்கோட்டம் ஓடுவது நபி(ஸல்) வழியன்று. அறியாமைக் காலத்தவர் தாம் அவ்வாறு (வேகமாகத்) தொங்கோட்டம் ஓடி வந்தனர்; மேலும், 'நாங்கள் அந்தப் பள்ளத்தாக்கை வேகமாகவே கடப்போம்'' என்று கூறியும் வந்தார்கள். 84

3848. அபுஸ் ஸஃபர்(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி), 'மக்களே! நான் உங்களுக்குச் சொல்வதை என்னிடமிருந்து (காது கொடுத்து கவனமாகக்) கேளுங்கள். நீங்கள் சொல்வதை நான் (கவனமாகக்) கேட்க விடுங்கள். (என்னிடமிருந்து அரைகுறையாகக் கேட்டுக் கொண்டு) போய், 'இப்னு அப்பாஸ் கூறினார்; இப்னு அப்பாஸ் கூறினார்'' என்று (தப்பும் தவறுமாகச்) சொல்லாதீர்கள். இறையில்லம் கஅபாவை வலம் வருபவர் 'ஹிஜ்ர்' என்னும் (வளைந்த) பகுதிக்கு அப்பாலிருந்து சுற்றட்டும்! 'அல் ஹத்தீம்' என்று (அதற்குப்) பெயர் சொல்லாதீர்கள். ஏனெனில், அறியாமைக் காலத்தில் ஒருவர் சத்தியம் செய்துவிட்டு (சத்தியம் செய்ததற்கு அடையாளமாக) தன் சாட்டையையோ, தன் செருப்பையோ, தன் வில்லையோ அங்கே போட்டு விடுவார் (எனவேதான் அதற்கு 'ஹத்தீம்' (வீழ்த்தக் கூடியது) என்ற பெயர் வந்தது)'' என்று சொல்வதை கேட்டேன்.

3849. அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார்

அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன்.

3850. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

பிறர் வமிசத்தைக் குறை கூறுவதும் ஒப்பாரி வைத்து அழுவதும் அறியாமைக் காலத்துப் பண்புகளாகும்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் இப்னு அபீ யஸீத்(ரஹ்) மூன்றாவது பண்பொன்றை மறந்துவிட்டார்கள்.

''சந்திரனின் இன்னின்ன ராசிகளால் தான் எங்களுக்கு மழை பெய்தது என்று சொல்லுவதே (இறைவனுக்கு இணை கற்பிக்கும்) அந்த மூன்றாவது பண்பாகும்'' என சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார். 86

பகுதி 28

நபி(ஸல்) அவர்கள் (இறைத்தூதராக) நியமிக்கப்படுதல்.

(இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வமிசப் பரம்பரை பற்றிய விபரமாவது:) அத்னானின் மகன் மஅத்தும், மஅத்துடைய மகன் நிஸாரும், நிஸாருடைய மகன் முளரும் முளருடைய மகன் இல்யாஸும், இல்யாஸுடைய மகன் முத்ரிகாவும், முதாரிகாவின் மகன் குஸைமாவும், குஸைமாவின் மகன் கினானாவும், கினானாவின் மகன் நள்ரும், நள்ரின் மகன் மாலிக்கும், மாலிக்கின் மகன் ஃபிஹ்ரும், ஃபிஹ்ரின் மகன் ஃகாலிபும், ஃகாலிபின் மகன் லுஅய்யும், லுஅய்யின் மகன் கஅபும், கஅபின் மகன் முர்ராவும், முர்ராவின் மகன் கிலாபும், கிலாபின் மகன் குஸய்யும், குஸய்யின் மகன் அப்து மனாஃபும், அப்து மனாஃபின் மகன் ஹாஷிமும், ஹாஷிமின் மகன் அப்துல் முத்தலிபும், அப்துல் முத்தலிபின் மகன் அப்துல்லாஹ்வும், அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத்(ஸல்) அவர்களும் ஆவார்கள். 87

3851. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நாற்பது வயதுடையவர்களாக இருக்கும்போது அவர்களுக்கு (வஹீ எனும்) வேத வெளிப்பாடு அருளப்பட்டது. அதன் பிறகு அவர்கள் மக்கா நகரில் பதின் மூன்றாண்டுகள் தங்கியிருந்தார்கள். பிறகு, (இறைமார்க்கத்திற்காகத் தாயகம் துறந்து) ஹிஜ்ரத் செய்து செல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. எனவே, அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து சென்றார்கள்; அங்கே பத்தாண்டுகள் தங்கினார்கள்; பிறகு இறப்பெய்தினார்கள்.

பகுதி 29

நபி(ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் மக்கா நகரில் இணை வைப்பாளர்களால் அடைந்த (துன்பம், தொல்லை முதலிய)வை.

3852. கப்பாப் (இப்னுல் அரத் (ரலி) அவர்கள் அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் ஒரு சால்வையைத் தலையணையாக வைத்து சாய்ந்து கொண்டிருக்க, நான் அவர்களிடம் சென்றேன். அப்போது நாங்கள் இணைவைப்பவர்களால் கடும் துன்பங்களைச் சந்தித்திருந்தோம். எனவே, நான் 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்காக நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க மாட்டீர்களா?' என்று கேட்டேன். உடனே அவர்கள் முகம் சிவந்து போய், (எழுந்து) உட்கார்ந்து கொண்டு கூறினார்கள்: உங்களுக்கு முன் (இந்த ஏகத்துவ மார்க்கத்தைத் தழுவி) இருந்தவர் (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் கோதப்பட்டு (கொடுமைப்படுத்தப்பட்டு) வந்தார். அது அவரின் எலும்புகளையும் கடந்து சென்று அதன் கீழுள்ள இறைச்சியையும் நரம்பையும் அடைந்து விடும். (ஆனால்,) அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து (திசை) திருப்பி விடவில்லை. மேலும், அவரின் தலையின் வகிட்டில் ரம்பம் வைக்கப்பட்டு இரண்டு கூறுகளாக அவர் பிளக்கப்படுவார். ஆனால், அதுவும் அவரை அவரின் மார்க்கத்திலிருந்து திருப்பி விடவில்லை. நிச்சயம் அல்லாஹ் இந்த மார்க்கத்தை முழுமைப்படுத்தியே தீருவான். எந்த அளவிற்கென்றால், (தன் வாகனத்தில்) சவாரி செய்து வரும் ஒருவன், (யமன் நாட்டிலுள்ள) 'ஸன்ஆ'விலிருந்து 'ஹளரமவ்த்' வரை பயணம் செய்து செல்வான். (வழியில்) அவனுக்கு அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தைப் தவிர வேறெந்த அச்சமும் இருக்காது.

வேறோர் அறிவிப்பில், 'தன் ஆடுகளின் விஷயத்தில் ஓநாய் பற்றிய அச்சத்தையும் தவிர'' என்னும் வாக்கியத்தை பயான்(ரஹ்) அதிகப்படியாக அறிவித்தார்கள். 88

3853. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) 'அந்நஜ்கி' என்னும் (56-வது) அத்தியாயத்தை ஓதினார்கள். (ஓதி முடித்த) பிறகு (இறுதியில் ஓதலுக்குரிய) சஜ்தா செய்தார்கள். ஒரேயொரு மனிதனைத் தவிர (நபி - ஸல் அவர்களுடன் சேர்ந்து) சஜ்தா செய்யாதவர்கள் எவரும் இருக்கவில்லை. அந்த மனிதன் (தரையில் சிரம் பணியாமல்) ஒரு கைப்பிடியளவு சிறு கூழாங்கற்களை எடுத்து (முகத்தருகே) உயர்த்தி (அப்படியே) அதன் மீது சஜ்தா செய்து, 'இது எனக்குப் போதும்'' என்று சொல்லிக் கொண்டிருந்ததை கண்டேன். பின்னால், அவன் அல்லாஹ்வை நிராகரித்தவனாகக் கொல்லப்பட்டதையும் பார்த்தேன்.89

3854. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

ஒரு முறை (கஅபா அருகில்) நபி(ஸல்) அவர்கள் (தொழுது) சிர வணக்கம் (சஜ்தா) செய்து கொண்டிருக்க, அவர்களைச் சுற்றிலும் குறைஷிகளில் சிலர் இருந்தனர். அப்போது (குறைஷித் தலைவன்) உக்பா இப்னு அபீ முஐத், ஒட்டகக் கருவைச் சுற்றியுள்ள மெல்லிய சவ்வைக் கொண்டு வந்து, நபி(ஸல்) அவர்களின் முதுகின் மீது எறிந்தான். நபி(ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்தவில்லை. உடனே ஃபாத்திமா(ரலி) வந்து, அதை நபி(ஸல்) அவர்களின் முதுகிலிருந்து எடுத்துவிட்டு, அதைச் செய்தவனுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! குறைஷித் தலைவர்களான அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, உமய்யா இப்னு கலஃப் அல்லது உபை இப்னு கலஃப்... ஆகியோரை நீ கவனித்துக் கொள்'' என்று பிரார்த்தித்தார்கள். (அதன்படியே) இவர்கள் அனைவரும் பத்ருப்போரில் கொல்லப்பட்டு ஒரு (பாழுங்) கிணற்றில் போடப்பட்டிருக்கக் கண்டேன்; உமய்யா இப்னு கலஃப் அல்லது உபையைத் தவிர. அவனுடைய மூட்டுகள் துண்டாகி (தனித்தனியாகி) விட்டிருந்த காரணத்தால் அவன் மட்டும் கிணற்றில் போடப்படவில்லை.

உமய்யா இப்னு கலஃப் அல்லது உபை இப்னு கலஃப் (இந்த இருவரில் நபி(ஸல்) அவர்கள் எவரைக் கூறினார்கள்) என்று சந்தேகப்படுவர் அறிவிப்பாளர்களில் ஒருவரனா ஷுஅபா(ரஹ்) அவர்களாவார்.90

3855. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) கூறியாதவது:

அப்துர் ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி), '(தக்க காரணமின்றிக் கொல்வதைத் தடைசெய்து) 'அல்லாஹ் கண்ணியத்திற்குரியதாக்கிய எந்த (மனித) உயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்'' என்னும் இந்த (திருக்குர்ஆன் 06:151, 17:33) இரண்டு (குர்ஆன்) வசனங்களுக்கும், 'ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகமாகும். மறுமை நாளில் அவனுக்கு இருமடங்கு தண்டனை அளிக்கப்படும். என்றென்றும் இழப்புக்குரியவனாய் அவன் அதில் வீழ்ந்து கிடப்பான்' என்னும் (திருக்குர்ஆன் 04:93) வசனத்திற்குமிடையே இணக்கமான கருத்துக் காண்பது எப்படி என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நீ கேள்'' என்று எனக்குக் கட்டளையிட்டார்கள். 91 நான் (சென்று) இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், 'திருக்குர்ஆனில், 'கருணையாளனின் உண்மையான அடியார்கள் எத்தகையவர்கள் எனில், .. (தக்க காரணமின்றி) கொல்லக் கூடாதென்று தடைசெய்து) அல்லாஹ் கண்ணியத்திற்குரிய தாக்கியுள்ள மனித உயிரை நியாயத்துடனே தவிர கொல்ல மாட்டார்கள்..'' என்னும் அத்தியாயம் அல் ஃபுர்கானின் 68-ம் வசனம் அருளப்பட்டபோது மக்காவாசிகளில் இணைவைப்போராயிருந்தவர்கள், 'அல்லாஹ் கண்ணியத்திற்குரியதாய் ஆக்கிய மனித உயிரை நாங்கள் கொன்றிருக்கிறோம்; அல்லாஹ்வுடன் மற்ற தெய்வத்தையும் அழைத்திருக்கிறோம்; மேலும், தீய செயல்களையும் செய்திரக்கிறோம் (நாங்கள் நரகத்தில் தான் வீழ்ந்து கிடக்க வேண்டுமா? எங்களுக்கு இஸ்லாம் எப்படிப் பயன்தரும்?)'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், 'பாவமன்னிப்புக் கோரி நம்பிக்கை கொண்டு நற்செயலும் புரிகிறவர் தவிர! இத்தகையோரின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றிவிடுவான். மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனும் கிருபையாளனும் ஆவான்'' என்றும் (திருக்குர்ஆன் 25:70-ம்) வசனம் அருளினான். இது குற்றம் புரிந்த நிராகரிப்பாளர்களுக்கான சட்டமாகும். அத்தியாயம் அந்நிஸாவில் (93-ம் வசனத்தில்) கூறப்பட்டிருப்பது இஸ்லாத்தையும் அதன் சட்டதிட்டங்களையும் அறிந்த (முஸ்லிமான) ஒரு மனிதன் விஷயத்தில் ஆகும். அவன் அறிந்த பிறகும் எவரையாவது வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகமாகும். அதில் அவன் நிரந்தரமாக விழுந்து கிடப்பான்'' என்று பதிலளித்தார்கள். 92

அப்துர் ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி) கூறினார்:

நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் இந்தக் கருத்தை முஜாஹித்(ரஹ்) அவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள், 'தன் குற்றத்திற்காக வருந்தி (பாவமன்னிப்புக்கோரி)யவனைத் தவிர (மற்றவர்கள் தாம் நிரந்தரமாக நரகம் புக வேண்டியிருக்கும்)'' என்று பதிலளித்தார்கள்.

3856. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களிடம், 'இணைவைப்பாளர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது என்று எனக்கு அறிவியுங்கள்'' என்று கேட்டேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் 'ஹிஜ்ர்' பகுதியில் தொழுது கொண்டிருந்தபோது, உக்பா இப்னு அபீ முஐத் என்பவன் முன்னோக்கி வந்து, தன் துணியை நபி(ஸல்) அவர்களின் கழுத்தில் வைத்து (முறுக்கி), அவர்கள் மூச்சுத் திணறும்படி (அவர்களின் கழுத்தைக்) கடுமையாக நெறித்தான். அப்போது அபூ பக்ர்(ரலி) முன்னால் வந்து அவனுடைய தோளைப் பிடித்து நபி(ஸல்) அவர்களை விட்டு விலக்கினார்கள். மேலும், 'என் இறைவன் அல்லாஹ் தான்' என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்'' (திருக்குர்ஆன் 40:28) என்று கேட்டார்கள்.

இதே போன்று இன்னும் சில அறிவிப்புகள் ஆரம்பத்தில் சிறு சிறு மாற்றங்களுடன் வந்துள்ளன. 93

பகுதி 30

அபூ பக்ர் அஸ்ஸித்தீக்(ரலி) இஸ்லாத்தை ஏற்றது. 94

3857. அம்மார் இப்னு யாசிர்(ரலி) அறிவித்தார்

(இஸ்லாத்தின் ஆரம்பக்காலத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூ பக்ர்(ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன். 95

பகுதி 31

ஸஅத் இப்னு அபீ ' வக்காஸ்(ரலி) இஸ்லாத்தை ஏற்றது.

3858. ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார்

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), 'நான் இஸ்லாத்தை ஏற்ற நாளில் (தான் மற்றவர்களும் இஸ்லாத்தை ஏற்றனர். அந்நாளில்) தவிர, (அதற்கு முன்பு) வேறெவரும் இஸ்லாத்தை ஏற்றிடவில்லை. நான் இஸ்லாத்தில் மூன்றிலொரு பாகமாக ஏழு நாள்கள் (வரை) இருந்தேன்'' என்று சொல்லக் கேட்டேன். 96

பகுதி 32

ஜின்கள் பற்றிய குறிப்பு 97

அல்லாஹ் கூறினான்:

(நபியே!) நீங்கள் சொல்லுங்கள்: எனக்கு இவ்வாறு வஹீ (இறைச்செய்தி) அனுப்பப்பட்டுள்ளது: ஜின்களில் ஒரு குழுவினர் கவனமாகக் கேட்டனர். (திருக்குர்ஆன் 72:1-15)98

3859. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களிடமிருந்து ஜின்கள் குர்ஆனை செவிமடுத்த இரவில், நபியவர்களை (இன்னாரென்று) அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தவர் யார்?' என்று நான் மஸ்ரூக்(ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஜின்களுக்கு நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதர் தாம் என்று அவர்களை அறிவித்துக் கொடுத்தது ஒரு மரம் தான் என உங்கள் தந்தை - அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) எனக்கு அறிவித்தார்கள்'' என்று கூறினார்கள். 99

3860. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

உளூச் செய்யும் தண்ணீரும் (இயற்கைத்) தேவைக்கான தண்ணீரும் வைத்திருக்கும் குவளையை நபி(ஸல்) அவர்களுடன் நான் சுமந்து செல்வேன். (ஒரு நாள்) அவற்றைச் சுமந்து கொண்டு நான் நபி(ஸல்), அவர்களைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது, 'யார் அது?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நான் அபூ ஹுரைரா(ரலி) தான் (வருகிறேன்)'' என்று நான் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'நான் (இயற்கைக் கடன் முடித்தபின்) துப்புரவு செய்வதற்காக எனக்குச் சில கற்களைத் தேடி (எடுத்து)க் கொண்டு வா. நீ என்னிடம் எலும்பையோ கெட்டிச் சாணத்தையோ கொண்டு வந்து விடாதே'' என்று கூறினார்கள். நான் என் ஆடையின் ஓரத்தில் கற்களை வைத்துச் சுமந்து கொண்டு வந்து அவர்களுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டுத் திரும்பி விட்டேன். அவர்கள் (இயற்கைக் கடனை) முடித்ததும் அவர்களுடன் நடந்து சென்றேன். அப்போது, 'எலும்பும் கெட்டிச் சாணமும் வேண்டாம். என்று ஏன் சொன்னீர்கள்?' என்று வேண்டாம். அதற்கு அவர்கள், 'அவ்விரண்டும் ஜின்களின் உணவாகும். என்னிடம் 'நஸீபீன்'100 என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜினகளாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், 'அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற வேண்டும்'' என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்'' என்று பதிலளித்தார்கள். 101

பகுதி 33

அபூ தர் கிஃபாரீ -(ரலி) இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி. 102

3861. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

அபூ தர்(கிஃபாரீ) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டியபோது தம் சகோதரரிடம், 'இந்த (மக்கா) பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்து, 'வானத்திலிருந்து (இறைச்) செய்தி தம்மிடம் வருகிற ஓர் இறைத்தூதர்' என்று தம்மை வாதிடுகிற இந்த மனிதரைக் குறித்த விவரத்தை (திரட்டி) எனக்கு அறிவி. அவரின் சொல்லைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு என்னிடம் வா!'' என்று கூறினார்கள். உடனே அச்சகோதரர் புறப்பட்டுச் சென்று நபி(ஸல்) அவர்களை அடைந்து அவர்களின் சொல்லைக் கேட்டார். பிறகு, அபூ தர்ரிடம் திரும்பிச் சென்று, 'அவர் நற்குணங்களைக் கைக் கொள்ளும்படி (மக்களுக்குக்) கட்டளையிடுவதை பார்த்தேன். ஒரு வாக்கையும், (செவியுற்றேன்) அது கவிதையாக இல்லை'' என்று கூறினார். அபூ தர், 'நான் விரும்பியதை நீ திருப்திகரமாகச் செய்யவில்லை'' என்று கூறிவிட்டு, பயணஉணவு எடுத்துக் கொண்டு, நீர் நிரம்பிய தன்னுடைய தோல்பை ஒன்றைச் சுமந்து கொண்டு (அபூ தர்) புறப்பட்டார். மக்காவை வந்தடைந்து (கஅபா) பள்ளிவாசலுக்குச் சென்றனர். நபி(ஸல்) அவர்களை அவர் அறியாதவராயிருந்த காரணத்தால் அவர்களைத் தேடினார். (அங்கிருந்த குறைஷிகள் தமக்கு தொல்லை தரக்கூடும் என்பதால் அவர்களிடம்) நபியவர்களைப் பற்றிக் கேட்க அவர் விரும்பவில்லை. இரவில் சிறிது நேரம் கழிந்துவிட்டது. அப்போது அலீ(ரலி) அவரைக் கண்டு, அவர் அந்நியர் என்று புரிந்து கொண்டார்கள். அலீயைக் கண்டவுடன் (அலீ - ரலி - அவர்கள் அபூ தர்ரிடம், 'வீட்டுக்கு வாருங்கள்'' என்று சொல்ல) அபூ தர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். விடியும் வரை அவர்களில் ஒருவரும் (தம்முடனிருந்த) மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. பிறகு அபூ தர் தம் தோல்பையையும் தம் பயண உணவையும் சுமந்து கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார். அன்று மாலையாகும் வரை நபி(ஸல்) அவர்கள் தம்மைப் பார்க்காத நிலையிலேயே அன்றைய பகலைக் கழித்தார். பிறகு (மாலையானதும்) தம் படுக்கைக்குத் திரும்பினார். அப்போது அலீ(ரலி) அவரைக் கடந்து சென்றார்கள். 'தம் தங்குமிடத்தை அறிந்து கொள்ள மனிதருக்கு வேளை இன்னும் வரவில்லையா?' என்று கேட்டுவிட்டு அவரை(ப் படுக்கையிலிருந்து) எழுப்பித் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். ஒருவர் மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. இறுதியில் மூன்றாம் நாள் வந்தபோது அலீ(ரலி) அதே போன்று திரும்பச் செய்தார்கள். தம்முடன் அவரைத் தங்கவைத்துக் கொண்டு பிறகு, (அபூ தர்ரிடம்), 'நீங்கள் எதற்காக (இங்கே) வந்தீர்கள் என்று எனக்குச் சொல்லக் கூடாதா?' என்று கேட்டார்கள். அவர், '(நான் விரும்பி வந்ததை அடைய) எனக்குச் சரியான வழிகாட்டுவதற்கு நீங்கள் உறுதி மொழியளித்தால் நான் (எதற்காக வந்தேன் என்று சொல்லச்) செய்கிறேன்'' என்று பதிலளித்தார். அலீ(ரலி) அவர்களும் அவ்வாறே உறுதிமொழியளிக்க, அபூ தர் (தாம் வந்த காரணத்தை) அவர்களுக்குத் தெரிவித்தார். அலீ(ரலி), 'அவர்கள் உண்மையானவர்களே! அவர்கள் இறைத்தூதர் தாம். காலையானதும் நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் உங்களுக்குத் தீங்கு நேரும் என்று அஞ்சுகிற எதையாவது கண்டால் நான் தண்ணீர் ஊற்றுவதைப் போன்று நின்று கொள்வேன். 103 நான் போய்க் கொண்டேயிருந்தால் நான் நுழைய வேண்டிய இடத்தில் நுழையும் வரை என்னைப் பின்தொடருங்கள்'' என்று கூறினார்கள். அபூ தர்ரும் அவ்வாறே செய்தார். அலீ அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தார். இறுதியில், அலீ(ரலி), நபி(ஸல்) அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நுழைந்தபோது அவர்களுடன் அவரும் நுழைந்தார். நபி(ஸல்) அவர்களின் சொல்லைக் கேட்டு அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரிடம், 'நீங்கள் உங்கள் (ஃகிஃபார்) சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்து சேரும் வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள்'' என்று கூறினார்கள். அபூ தர், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் இச்செய்தியை (இறைமறுப்பாளர்களான) அவர்களிடையே உரக்கக் கூவிச் சொல்வேன்'' என்று சொல்லிவிட்டு வெளியேறி, பள்ளிவாசலுக்கு வந்து, உரத்த குரலில், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) என்றும் உறுதி சொல்கிறேன்'' என்று கூறினார். உடனே, அங்கிருந்த (இறைமறுப்பாளர்களின்) கூட்டத்தார் எழுந்து அவருக்கு வலி ஏற்படும் அளவிற்கு அவரை அடித்தார்கள். அப்பாஸ்(ரலி) வந்து, அவரின் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க் கொண்டார்கள். 'உங்களுக்குக் கேடுண்டாகட்டும். இவர் கிஃபார் குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், உங்கள் வணிகர்கள் செல்லும்வழி (கிஃபார் குலத்தாரின் ஆதிக்கத்திற்குட்பட்ட) ஷாம் நாட்டுப் பாதையில் தான் உள்ளது என்பதும், உங்களுக்குத் தெரியாதா?' என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூ தர்ரைக் காப்பாற்றினார்கள். அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அபூ தர் அதே போன்று செய்ய குறைஷிகளும் அடித்தபடி அவரின் மீது பாய்ந்தார்கள். உடனே (முன் போன்றே) அப்பாஸ்(ரலி) அபூ தர்ரின் மீது கவிழ்ந்து படுத்தார்கள். 104.

பகுதி 34

ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது. 105

3862. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரலி) அறிவித்தார்

''அல்லாஹ்வின் மீதாணையாக! உமர் அவர்கள், நான் இஸ்லாத்தை ஏற்றதைக் கண்டித்து அவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு என்னைக் கட்டி வைத்(து தண்டித்)த (அனுபவத்)தை நான் கண்டிருக்கிறேன். நீங்கள் உஸ்மான்(ரலி) விஷயத்தில் (அன்னாரைக் கொலை செய்து) நடந்து கொண்டதைக் கண்டு (மனம் தாளாமல்), உஹுது மலை தன்னுடைய இடத்தைவிட்டுப் பெயர்ந்துவிட்டால் அதுவும் சரியானதே'' என்று ஸயீத் இப்னு ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல்(ரலி) கூஃபாவின் மஸ்ஜிதில் வைத்துக்கூற கேட்டேன்.

பகுதி 35

உமர் இப்னு கத்தாப்(ரலி) இஸ்லாத்தை ஏற்றது.

3863. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

உமர்(ரலி) இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து நாங்கள் வலிமையும் கண்ணியமும் உடையவர்களாகத் திகழலானோம்.

இதை கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார். 106

3864. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

(என் தந்தை உமர் - ரலி - அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால் தம்மைக் குறைஷிகள் கொல்ல வந்தார்கள் என்று) அஞ்சியவர்களாக(த் தம்) இல்லத்தினுள் அவர்கள் இருந்தபோது, ஆஸ் இப்னு வாயில் அஸ்ஸஹ்மீ அபூ அம்ர் (எனும் குறைஷித் தலைவர்)107 கோடு போட்ட சால்வை ஒன்றைப் போட்டுக் கொண்டு பட்டினால் தைக்கப்பட்ட சட்டையொன்றை அணிந்து கொண்டு வந்து, 'என்ன விஷயம்!'' என்று கேட்டார் - அவர் அறியாமைக் காலத்தில் எங்கள் நட்புக் குலமாயிருந்த 'பனூ சஹ்கி' குலத்தைச் சேர்ந்தவர் - உமர் அவர்கள், 'உங்கள் குலத்தார் நான் இஸ்லாத்தை ஏற்றதற்காக என்னைக் கொல்ல எண்ணுகிறார்கள்'' என்று அவரிடம் சொல்ல அதற்கவர், 'உன்னிடம் (நெருங்க அவர்களுக்கு) வழியில்லை'' என்று கூறினார். (உமர் - ரலி - கூறுகிறார்கள்:) 'இவ்வாறு அவர் சொன்ன பிறகு நான் அமைதியடைந்தேன்.'' உடனே, 'ஆஸ் இப்னு வாயில்' வெளியே சென்று (மக்கா) பள்ளத்தாக்கே நிரம்பி வழியும்படி திரண்டு நின்ற மக்களைச் சந்தித்து, 'நீங்கள் எங்கே நாடிப் போகிறீர்கள்?' என்று கேட்டார். அவர்கள், 'மதம் மாறி (நமக்கு துரோகம் செய்து)விட்ட இந்த கத்தாபின் மகனைத் தான் நாடிச் செல்கிறோம்'' என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், 'அவரிடம் (நெருங்க அவர்களுக்கு) வழியில்லை'' என்று கூறினார். (உமர் - ரலி - கூறுகிறார்கள்:) 'இவ்வாறு அவர் சொன்ன பிறகு நான் அமைதியடைந்தேன்'' உடனே, 'ஆஸ் இப்னு வாஇல்' வெளியே சென்று (மக்கா) பள்ளத்தாக்கே நிரம்பி வழியும்படி திரண்டு நின்ற மக்களைச் சந்தித்து, 'நீங்கள் எங்கே நாடிப் போகிறீர்கள்?' என்று கேட்டார். அவர்கள், 'மதம் மாறி (நமக்கு துரோகம் செய்து)விட்ட இந்த கத்தாபின் மகனைத் தான் நாடிச் செல்கிறோம்'' என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், 'அவரிடம் (நெருங்க உங்களுக்கு) வழியில்லை'' என்று சொல்ல, (வேறு வழியின்றி) மக்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.

3865. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

உமர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவியபோது மக்கள் அவர்களின் வீட்டருகே ஒன்று திரண்டு, 'உமர் மதம் மாறிவிட்டார்'' என்று சொல்லலானார்கள். அப்போது நான் சிறுவனாக என் வீட்டுக் கூரை மீது அமர்ந்து கொண்டிருந்தேன் - அப்போது ஒருவர் பட்டு அங்கி ஒன்றை அணிந்து கொண்டு வந்து, 'உமர் மதம் மாறிவிட்டார். அதனால் என்ன? நான் அவருக்கு அபயம் அளித்திருக்கிறேன் (எனவே, அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது)'' என்று கூறினார். மக்கள் (அவர் சொன்னதைக் கேட்டு) அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டதைப் பார்த்தேன். நான், 'யார் இவர்?' என்று கேட்டேன். மக்கள், '(இவர்தான்) ஆஸ் இப்னு வாஇல்'' என்று பதிலளித்தார்கள்.

3866. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

உமர்(ரலி) (ஒரு விஷயத்தைப் பற்றி) 'நான் இதைக் குறித்து இப்படிக் கருதுகிறேன்'' என்று சொல்ல நான் கேட்பேனாயின், அந்த விஷயம் அவர்கள் கூறியதைப் போன்றுதான் இருக்கும். ஒரு முறை உமர்(ரலி) (தம் இடத்தில்) அமர்ந்திருந்த பொழுது அழகான ஒருவர் அவர்களைக் கடந்து சென்றார். அப்போது உமர்(ரலி), 'ஒன்று நான் (இவர் அஞ்ஞானக் கலாசாரத்தில் இருப்பவர் என்று) நினைத்து தவறாயிருக்க வேண்டும்; அல்லது (நான் நினைத்தது சரியாக இருக்குமானால்) இந்த மனிதர் தம் (பழைய) அஞ்ஞானக் காலத்து மார்க்கத்திலேயே இருக்கவேண்டும்; அல்லது (அஞ்ஞானக் கால) அம்மக்களுக்குக் குறிசொல்பவராக (சோதிடராக) இருந்திருக்க வேண்டும். அந்த மனிதரை என்னிடம் அழைத்து வாருங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவர், உமர்(ரலி) அவர்களிடம் அழைத்து வரப்பட்டார். உமர்(ரலி), தாம் (முன்பு சந்தேகத்துடன்) கூறியதையே அந்த மனிதரிடமும் கேட்டார்கள். அந்த மனிதர், (தன்னைப் பற்றி உமர் முன் வைத்த சந்தேகத்தினால் வெறுப்படைந்தவராய்) 'இன்று ஒரு முஸ்லிமான மனிதருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு போன்று நான் (எப்போதும்) பார்த்ததில்லை'' என்று கூறினார். உமர்(ரலி), 'நீ எனக்கு (அறியாமைக் காலத்தில் நடந்த) செய்தியைச் சொல்லத் தான் வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்று கூறினார்கள். அதற்கு அவர், 'நான் அஞ்ஞானக் காலத்தில் அம்மக்களின் சோதிடனாக (குறிகாரனாக) இருந்தேன்'' என்று கூறினார். உமர்(ரலி), 'உன்னுடைய பெண் ஜின் உன்னிடம் கொண்டு வந்த செய்திகளிலேயே மிகவும் வியப்புக்குரியது எது?' என்று கேட்டார்கள். அம்மனிதர், 'நான் ஒரு நாள் கடைவீதியில் இருந்தபோது, பெட்டை ஜின் என்னிடம் வந்தது. அதனிடம் பீதியைக் கண்டேன். அப்போது 'ஜின்கள் அடைந்துள்ள அச்சத்தை நீங்கள் பார்க்கவில்லையா? அவை (மேலுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்க முடியாமல்) தோல்வியுற்றுத் திரும்புவதால் அடைந்துளள நிராசையையும் நீங்கள் பார்க்கவில்லையா? அவை வாலிப ஒட்டகங்களையும் அவற்றின் (சேண இருக்கையின் கீழே விரிக்கப்படும்) துணியையும் பின்பற்றிச் செல்வதைக் காணவில்லையா?' 108 என்று கேட்டது'' என்று கூறினார். உமர்(ரலி), 'இவர் உண்மை கூறினார். நான் (கஅபாவில்) இணைவைப்பவர்களின் கடவுள் (சிலை)களுக்கு அருகே தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒருவர் காளைக் கன்று ஒன்றைக் கொண்டு வந்து (பலி கொடுத்து) அதை அறுத்தார். அப்போது அசரீரிக் குரல் ஒன்று வந்தது. அதை விடக் கடுமையான குரலில் குரல் கொடுப்பவர் எவரையும் நான் செவிமடுத்ததேயில்லை. அது, 'பகிரங்கமாகப் பகைத்துக் கொண்டவரே! வெற்றிகரமான ஒரு விஷயம். பேச்சுத் திறனுள்ள ஒருவர், '(அல்லாஹ்வே!) வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர வேறெவருமில்லை' என்று சொல்வார்'' என்று குரல் கொடுத்தது. உடனே (இணை வைக்கும்) மக்கள் குதித்தெழுந்தார்கள். நான், 'இந்த மர்மக் குரலுக்குப் பின்னால் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்ளாமல் விட மாட்டேன்'' என்று சொன்னேன். பிறகு (மீண்டும்) அந்த அசரீரி 'பகிரங்கமாகப் பகைத்துக் கொண்டவரே! வெற்றிகரமான ஒரு விஷயம். பேச்சுத் திறனுள்ள ஒருவர், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று சொல்வார்'' என்று குரல் கொடுத்தது. நான் எழுந்து சென்று விட்டேன். சிறிது காலத்திற்குள்ளாகவே 'இதோ ஒரு நபி (வந்துவிட்டார்)'' என்று சொல்லப்பட்டது.

3867. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்

''உமர் அவர்கள், நானும் அவரின் சகோதரியும் இஸ்லாத்தை ஏற்றதற்காக என்னைக் கட்டி வைத்(து தண்டித்)த (அனுபவத்)தை நான் கண்டிருக்கிறேன் - அப்போது அவர் முஸ்லிமாயிருக்கவில்லை. - உஸ்மான்(ரலி) விஷயத்தில் (அன்னாரைக் கொலை செய்து) நீங்கள் நடந்து கொண்ட (விதத்)தைக் கண்டு (மனம் தாளாமல்) உஹுது மலை தன்னுடைய இடத்தைவிட்டுப் பெயர்ந்துவிட்டால் அதுவும் சரியானதே'' என்று (கூஃபாவின் மஸ்ஜிதில் கூடியிருந்த) மக்களிடம் ஸயீத் இப்னு ஸைத்(ரலி) கூற கேட்டிருக்கிறேன். 109

பகுதி 36

சந்திரன் பிளவுண்ட நிகழ்ச்சி

3868 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (அவர்கள் இறைத்தூதர் தாம் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில்) தங்களுக்கு ஒரு சான்றைக் காட்டும்படி மக்காவாசிகள் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் சந்திரனை இரண்டு துண்டுகளாக (பிளந்திருக்கக்) காட்டினார்கள். எந்த அளவிற்கென்றால், மக்கா வாசிகள் அவ்விரு துண்டுகளுக்கிடையே 'ஹிரா' மலையைக் கண்டார்கள். 110

3869. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் மினாவில் இருந்தபோது சந்திரன் (இரண்டு துண்டுகளாகப்) பிளவுபட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் (இதைப் பார்த்து நினைவில் இருத்தி) சாட்சியாக இருங்கள்'' என்று கூறினார்கள். (அதன்) இரண்டு துண்டுகளில் ஒன்று (ஹிரா) மலையின் திசையில் சென்றது. 111

அறிவிப்பாளர் மஸ்ரூக்(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில் 'மக்காவில் (சந்திரன்) பிளந்தது'' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.

3870. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டு துண்டுகளாகப்) பிளவுபட்டது. 112

3871. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்

(நபி - ஸல் அவர்கள் காலத்தில்) சந்திரன் (இரண்டு துண்டுகளாகப்) பிளவுபட்டது.

பகுதி 37

அபிசீனிய ஹிஜ்ரத் 113

ஆயிஷா(ரலி) கூறினார்: நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் தாயகம் (மக்காவைத்) துறந்து (ஹிஜ்ரத் செல்லுகிற நாடு (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கிடையே பேரீச்ச மரங்கள் கொண்டதாக எனக்கு (கனவில்) காட்டப்பட்டது. 114

(முஸ்லிம்களில்) சிலர் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்தனர். அப்போது அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்றிருந்தவர்கள் மதீனாவுக்குத் திரும்பினர்.

இது குறித்து அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அவர்களும் அஸ்மா பின்த் உமைஸ்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர். 115

3872. உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னி கியார்(ரஹ்) அறிவித்தார்

மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னு அப்தி யகூஸ்(ரஹ்) அவர்களும் என்னிடம், 'நீங்கள் உங்களுடைய (குலவழி) மாமா உஸ்மான்(ரலி) அவர்களிடம், அவர்களின் தாய் வழிச் சகோதரர் வலீத் இப்னு உக்பா பற்றிப் பேசாமலிருப்பது ஏன்? மக்கள் வலீதின் செயல்பாடுகள் குறித்து அதிகமாகக் குறை கூறுகிறார்களே!'' என்று கேட்டார்கள். எனவே, நான் உஸ்மான்(ரலி) தொழுகைக்காக காத்திருந்தேன். அவர்களிடம் 'எனக்கு உங்களிடம் சற்று(ப் பேச வேண்டிய) தேவை உள்ளது. அது (உங்களுக்கு நான் கூற விரும்பும்) அறிவுரை'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'மனிதரே! உம்மிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்'' என்று கூறினார்கள். உடனே, நான் திரும்பி (அவ்விருவரிடமும்) வந்தேன். நான் தொழுது முடித்தபோது மிஸ்வர்(ரலி) அவர்களுக்கும் இப்னு அப்தி யகூஸ்(ரஹ்) அவர்களுக்கும் அருகில் (சென்று) அமர்ந்து, உஸ்மான்(ரலி) அவர்களிடம் நான் (வலீத் இப்னு உக்பா விஷயமாகக்) கூறியதையும் அதற்கு அவர்கள் என்னிடம் சொன்ன பதிலையும் தெரிவித்தேன். அப்போது அவர்கள் இருவரும், 'உங்கள் மீதிருந்த கடமையை நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்.'' என்று கூறினார்கள். அவ்விருவருடனும் நான் அமர்ந்திருந்தபோது உஸ்மான்(ரலி) அவர்களின் தூதுவர் (என்னைத் தேடி) வர, அவ்விருவரும், 'அல்லாஹ் உங்களை சோதனைக்குள்ளாக்கிவிட்டான்.'' என்று கூறினர். உடனே நான் (தூதுவருடன் புறப்பட்டு) உஸ்மான்(ரலி) அவர்களிடம் சென்றேன். உஸ்மான்(ரலி), 'நீங்கள் சற்று முன் கூறி(ட விரும்பி)ய உங்கள் அறிவுரை என்ன?' என்று கேட்டார்கள். அதற்கு நான் ஏகத்துவ உறுதி மொழியைக் கூறி (இறைவனைப் புகழ்ந்துவிட்டு) 'அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை (சத்திய மார்க்கத்துடன்) அனுப்பி அவர்களின் மீது இறை வேதத்தையும் இறக்கியருளினான். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்புக்கு பதிலளித்து அவர்களின் மீது நம்பிக்கை கொண்டவர்களில் நீங்களும் ஒருவராயிருந்தீர்கள். மேலும், முதல் இரண்டு ஹிஜ்ரத்துகளை மேற்கொண்டீர்கள். 116 நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டு அவர்களின் வழிமுறையைப் பார்த்திருக்கிறீர்கள். மக்களோ வலீத் பின் உக்பாவைப் பற்றி நிறைய குறைபேசுகிறார்கள். எனவே, அவரை (இஸ்லாமியச் சட்டப்படி) தண்டிப்பது உங்கள்மீது கடமையாகிவிட்டது” என்று சொன்னேன்.  அதற்கு அவர்கள், “என் சகோதரர் மகனே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?”  என்று கேட்க நான், 'இல்லை. ஆனால், திரைக்கப்பால் இருக்கும் கன்னிப் பெண்களிடம் (கூட) அல்லாஹ்வின் தூதருடைய கல்வி சென்றடைந்து கொண்டிருக்கும் (போது, அந்த) அளவு கல்வி என்னிடம் வந்து சேர்ந்துள்ளது (குறித்து வியப்பில்லை.)'' என்று பதில் சொன்னேன். உடனே உஸ்மான்(ரலி), ஏகத்துவ உறுதி மொழியைக் கூறி, 'அல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி அவர்களுக்கு வேதத்தையும் அருளினான். அப்போது, அல்லாஹ்வின் அழைப்புக்கும் அல்லாஹ்வின் தூதருடைய அழைப்புக்கும் பதிலளித்தவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். மேலும், அவர்கள் எந்த வேதத்தைக் கொடுத்தனுப்பப்பட்டார்களோ அதை நான் நம்பி ஏற்றுக் கொண்டேன். நான் முதல் இரண்டு ஹிஜ்ரத்துகளையும் மேற்கொண்டேன். - நீங்கள் சொன்னதைப் போல் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தோழமை கொண்டேன்; அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். எனவே, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் அவர்களை இறக்கச் செய்யும் வரை நான் அவர்களுக்கு மாறு செய்யவுமில்லை; அவர்களை ஏமாற்றவுமில்லை. பிறகு அல்லாஹ் அபூ பக்ர் அவர்களை கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கினான். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களுக்கு மாறு செய்யவுமில்லை; அவர்களை ஏமாற்றவுமில்லை. பிறகு நான் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டேன். எனவே, அவர்களுக்ககிருந்தது போன்ற அதே உரிமை எனக்கில்லையா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம் (உங்களுக்கும் அதே போன்ற உரிமை இருக்கிறது)'' என்றேன். அவர்கள், 'அப்படியென்றால் உங்களைக் குறித்து எனக்கு எட்டுகிற (என்னைக் குறை கூறும்) இந்தப் பேச்சுகளெல்லாம் என்ன? நீங்கள் வலீத் இப்னு உக்பா தொடர்பாக சொன்னவற்றில் இறைவன் நாடினால் விரைவில் நான் சரியான நடவடிக்கையை எடுப்பேன்.'' என்று கூறினார்கள். பிறகு வலீத் இப்னு உக்பாவுக்கு (எதிராக சாட்சிகள் கிடைத்ததால் அவருக்கு) நாற்பது கசையடிகள் தண்டனையாக அறிவித்து, அவருக்கு கசையடிகள் கொடுக்கும் படி அலீ(ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அலீ(ரலி) தாம் வலீதுக்கு கசையடி வழங்கினார்கள். 117

3873. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

உம்மு ஹபீபா அவர்களும் உம்மு ஸலமா அவர்களும் அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். 118 மேலும், அவ்விருவரும் நபி(ஸல்) அவர்களிடம் (அதைப் பற்றிக்) கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது அவரின் மண்ணறையின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள் தாம், மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்'' என்று கூறினார்கள். 119

3874. உம்மு காலித் பின்த் காலித்(ரலி) அறிவித்தார்

அபிசீனியா நாட்டிலிருந்து நானும் ஜுவைரிய்யா அவர்களும் வந்தோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்குப் பட்டுத் துணி ஒன்றைக் உடுத்தக் கொடுத்தார்கள். அதில் அடையாளக் குறிகள் சில இருந்தன. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கரத்தால் அந்த அடையாளங்களைத் தடவியபடி, 'அழகாயிருக்கிறதே! அழகாயிருக்கிறதே!'' (என்பதைக் குறிக்க அபிசீனிய மொழியில் 'சனா, சனா') என்று கூறலானார்கள். 120

3875. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது நாங்கள் அவர்களுக்கு சலாம் சொல்லுவோம். உடனே, அவர்கள் எங்களுக்கு பதில் சலாம் சொல்வார்கள். நாங்கள் (அபிசீனிய மன்னர்) நஜாஷீயிடமிருந்து திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களுக்கு (அவர்கள் தொழுகையிலிருக்கும் போது) சலாம் சொன்னோம். அப்போது அவர்கள் எங்களுக்கு பதில் சலாம் சொல்லவில்லை. நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நீங்கள் தொழும் போது) நாங்கள் உங்களுக்கு சலாம் சொல்ல, நீங்களும் அதற்கு பதில் சலாம் சொல்லி வந்தீர்களே'' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'நிச்சயமாக! தொழுகையில் கவனம் தேவைப்படுகிறது'' என்று பதிலளித்தார்கள். 121

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் அல் அஃமஷ்(ரஹ்) (தமக்கு முந்திய அறிவிப்பாளரான) இப்ராஹீம் நகயீ(ரஹ்) அவர்களிடம், '(நீங்கள் தொழும்போது எவரேனும் சலாம் சொல்லிவிட்டால்) நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு இப்ராஹீம்(ரஹ்), 'என் மனத்திற்குள் நான் பதில் சலாம் சொல்லிவிடுகிறேன்'' என்று கூறினார்.

3876. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்

நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து மக்காவிலிருந்து) வெளியேறிய செய்தி எங்களுக்கு எட்டியது. உடனே நாங்கள் ஒரு கப்பலில் ஏறிப் பயணம் புறப்பட்டோம். எங்கள் கப்பல் (திசைமாறி) எங்களை அபிசீனியாவில் மன்னர் நஜாஷீ அவர்களிடம் கொண்டு (போய் இறக்கிவிட்டுச்) சென்றுவிட்டது. நாங்கள் ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் அவர்களை(த் தற்செயலாக அங்கே) சந்தித்தோம். நாங்கள் அங்கிருந்து வரும் வரை ஜஅஃபர்(ரலி) அவர்களுடனேயே தங்கினோம். கைபரை நபி(ஸல்) அவர்கள் வெற்றிகொண்டிருந்த வேளையில் சென்று அவர்களை அடைந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், (எங்களை நோக்கி), 'கப்பல்காரர்களே! உங்களுக்குத் தான் இரண்டு ஹிஜ்ரத்துகள்'' என்று கூறினார்கள். 122

பகுதி 38

(அபிசீனிய மன்னர்) நஜாஷீயின் மரணம். 123

(மன்னர்) நஜாஷீ இறந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'இன்று (ஒரு) நல்ல மனிதர் இறந்துவிட்டார். எனவே, எழுந்து நின்று உங்கள் சகோதரர் 'அஸ்ஹமா'வுக்காக (ஃகாயிப் ஜனாஸாத் தொழுகை) தொழுங்கள்'' என்று கூறினார்கள். 124

3878. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அல் அன்சாரீ(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (அபிசீனிய மன்னர்) நஜாஷீ (இறந்துவிட்டபோது) அவருக்காக (ஃகாயிப் ஜனாஸாத்) தொழுகை தொழுதார்கள். நாங்கள் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னே வரிசையாக நின்று கொண்டோம். நான் இரண்டாவது வரிசையில் அல்லது மூன்றாவது வரிசையில் இருந்தேன். 125

3879. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் 'அஸ்ஹமா' அந்நஜாஷீக்காக (ஃகாயிப்) ஜனாஸாத் தொழுகை தொழுதார்கள். அப்போது அவரின் மீதான தொழுகையில் நான்கு தக்பீர்கள் கூறினார்கள். 126

3880. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபிசீனியாவின் அதிபர் நஜாஷீ அவர்கள் இறந்துவிட்ட செய்தியை அவர் இறந்த நாளன்றே எங்களுக்கு அறிவித்தார்கள். மேலும், 'உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்'' என்று கூறினார்கள்.

3881. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை (ஜனாஸாத் தொழுகை) தொழுமிடத்தில் வரிசையாக நிற்க வைத்து நஜாஷீக்காக ஜனாஸாத் தொழுகை தொழு(வித்)தார்கள்; (அதில்) நான்கு தக்பீர்கள் கூறினார்கள்.

பகுதி 39

நபி(ஸல்) அவர்களுக்கு(ம் அவர்களின் கிளையினருக்கும்) எதிராக, இணை வைத்தோர் எடுத்த சூளுரை. 127

3882. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுனைன் போருக்குச் செல்ல விரும்பியபோது, 'நாளை நாம் (போருக்காக) முகாமிடப் போகும் இடம் - இறைவன் நாடினால் - 'பனூகினானா' குலத்தாரின் (முஹஸ்ஸப்) பள்ளத்தாக்கிலாகும். அது அவர்கள், 'நாங்கள் குஃப்ரில் (இறைமறுப்பில்) நிலைத்திருப்போம்'' என்று சூளுரைத்த இடமாகும். 128

பகுதி 40

அபூ தாலிப் அவர்கள் குறித்த சம்பவம் 129

3883. அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) அறிவித்தார்

நான் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம், 'உங்கள் பெரிய தந்தை (அபூ தாலிபு)க்கு (அவர் செய்த உதவிகளுக்குக் கைமாறாக) நீங்கள் என்ன பயனை அளித்தீர்கள்? ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக, அவர் உங்களை (எதிரிகளின் தாக்குதலிருந்து) பாதுகாப்பவராகவும், உங்களுக்காக (உங்கள் எதிரிகளிடம்) கோபப்படுபவராகவும் இருந்தாரே'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அவர் இப்போது (கணுக்கால் வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பில் தான் இருக்கிறார். நான் மட்டும் இல்லையென்றால் அவர் நரகத்தின் அடித்தட்டில் இருந்திருப்பார்'' என்று பதிலளித்தார்கள்.

3884. முஸய்யப் இப்னு ஹஸ்ன் இப்னி அபீ வஹ்ப்(ரலி) அறிவித்தார்

அபூ தாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்துவிட்டபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூ ஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி(ஸல்) அவர்கள், 'என் பெரிய தந்தையே! 'லா இலாஹ இல்லல்லாஹ்' - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று சொல்லுங்கள். இச்சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்'' என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும், 'அபூ தாலிபே! (பெரியவர், உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்?' என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், '(என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்)'' என்று அவர்களிடம் கூறினார். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரக்கூடாது என்று) எனக்குத் தடைவிதிக்கப்படும் வரை'' என்று கூறினார்கள். அப்போதுதான், 'இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது தெளிவாகிவிட்ட பின்பும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர்களாயிருந்தாலும் கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை'' என்னும் (திருக்குர்ஆன் 09: 113) திருக்குர்ஆன் வசனமும, '(நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்களால் நேர்வழியில் செலுத்தி விட முடியாது'' என்னும் (திருக்குர்ஆன் 28:56) திருக்குர்ஆன் வசனமும அருளப்பட்டன. 130

3885. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களிடம் அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டபோது அவர்கள், 'அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரின் (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள் வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவரின் மூளை (தகித்துக்) கொதிக்கும்'' என்று சொல்ல கேட்டேன்.

மற்றோர் அறிவிப்பில் 'அவரின் மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதித்துக் கொண்டிருக்கும்'' என்று காணப்படுகிறது.

பகுதி 41

இஸ்ராஉ பற்றிய நபிமொழியும் அது பற்றிய (திருக்குர்ஆன் 17:01) இறைவசனமும் 131

அல்லாஹ் கூறினான்:

ஓர் இரவி(ன் ஒரு சிறு பகுதியி)ல் தன் அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (வெகு தொலைவில் அமைந்த) அல் மஸ்ஜிதுல் அக்ஸா வரையில், தன்னுடைய சான்றுகளை அவருக்குக் காட்டுவதற்காக, அழைத்துச் சென்ற (இறை)வன் மிகத் தூயவன். ('அல் அக்ஸா' பள்ளியான) அதன் சுற்றுப்புறங்களை நாம் அருள்வளம் மிக்கதாய் ஆக்கினோம். (திருக்குர்ஆன் 17:01)

3886. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(நான் இரவின் சிறு பகுதியில் கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ் வரை சென்றதாகச் சொன்ன சமயம்) என்னை குறைஷிகள் நம்ப மறுத்தபோது நான் கஅபாவின் 'ஹிஜ்ர்' என்னும் (வளைந்த) பகுதியில் நின்றேன். அல்லாஹ் எனக்கு பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். அப்போது அதைப் பார்த்தபடியே நான் அவர்களுக்கு அதன் அடையாளங்களை விவரிக்கலானேன். 132

என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 42

மிஅராஜ் - விண்ணுலகப் பயணம் 133

நான் (இறையில்லாம் கஅபா அருகில்) ஹத்தீமில்... அல்லது ஹிஜ்ரில்... படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் ஒருவர் (வானவர் ஜிப்ரீல்) வந்து (என் நெஞ்சைப்) பிளந்தார்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அனஸ்(ரலி), 'இங்கிருந்து இது வரையில் அவர் பிளந்தார்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறினார்கள்.

அறிவிப்பாளர் கத்தாதா(ரஹ்) கூறினார்:

நான் என்னருகிலிருந்து (அனஸ்(ரலி) அவர்களின் நண்பர்) ஜாரூத்(ரஹ்) அவர்களிடம், 'அனஸ்(ரலி), 'இங்கிருந்து, இது வரையில்... என்று எதைக் கருத்தில் கொண்டு கூறினார்கள்?' என்று கேட்டேன். அதற்கு ஜாரூத்(ரஹ்), 'நபி(ஸல்) அவர்களின் நெஞ்சின் காறை யெலும்பிலிருந்து அடிவயிறு வரை... அல்லது நெஞ்சின் ஆரம்பத்திலிருந்து அடிவயிறு வரை... என்ற கருத்தில் அனஸ்(ரலி) கூறினார்'' என்று பதிலளித்தார்கள்.

பிறகு அ(ந்த வான)வர் (ஜீப்ரீல்) என்னுடைய இதயத்தை வெளியிலெடுத்தார். பிறகு, இறை நம்பிக்கையால் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது, என்னுடைய இதயம் கழுவப்பட்டு, (அதில்) அந்த இறை நம்பிக்கை நிரப்பட்டது. பிறகு பழையபடி மீண்டும் (என்னுடைய இதயம், மூடி) வைக்கப்பட்டது. பிறகு கோவேறு கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது.

-(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அனஸ்(ரலி) அவர்களிடம் ஜாரூத்(ரஹ்), 'அது புராக் எனும் வாகனம் தானே அபூ ஹம்ஸா அவர்களே!'' என்று கேட்டார்கள். அதற்கு அனஸ்(ரலி), 'ஆம், (அது புராக் தான்.) அந்த வாகனம் பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கும்'' என்று கூறினார்கள்.

பிறகு நான் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டேன். என்னை ஜிப்ரீல் முதல் வானத்திற்கு அழைத்துச் சென்று அதன் கதவைத் திறக்கும்படி கூறினார். அப்போது, 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது'' என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவரிடம் ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்'' என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை'' என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. அப்போது (அந்த வானத்தின் காவலர்) கதவைத் திறந்தார். நான் அங்கு சென்றடைந்தபோது அங்கு ஆதம்(அலை) அவர்கள் இருந்தார்கள். (என்னிடம் ஜிப்ரீல்) 'இவர்கள் உங்கள் தந்தை ஆதம், இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்'' என்று கூறினார். அவர்களுக்கு நான் சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் கூறினார்கள். பிறகு, ஆதம்(அலை) அவர்கள், '(என்) நல்ல மகனும், நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!'' என்று கூறினார்கள். பிறகு (என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல்) இரண்டாம் வானத்திற்கு உயர்ந்து அதைத் திறக்கும்படி கூறினார். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்'' என்று பதிலளிக்க, உங்களுடன் (இருப்பவர்) யார்?' என்று வினவப்பட்டது. (அதற்கு) அவர், 'முஹம்மது'' என்று பதிலளித்தார், '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்தா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்'' என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை'' என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. பிறகு (அந்த வானத்தின் காவலர் கதவைத்) திறந்தார். நான் அங்கு சென்றடைந்தபோது, அங்கு யஹ்யா (அலை) அவர்களும், ஈசா(அலை) அவர்களும் இருந்தனர் - அவ்விருவரும் சிற்றன்னையின் மக்களாவர். 134 இது யஹ்யா அவர்களும், ஈசா அவர்களும் ஆவர். இவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள்'' என்று ஜிப்ரீல் கூறினார். நான் (அவர்கள் இருவருக்கும்) சலாம் சொன்னபோது அவர்கள் சலாமிற்கு பதில் கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும், 'நல்ல சகோதரரும், நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று (வாழ்த்துக்) கூறினர். பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு மூன்றாம் வானத்திற்கு உயர்ந்தார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படி கூறினார். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். 'உங்களுடன் (இருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது'' என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்'' என்று பதிலளித்தார். 'அவர் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை'' என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. பிறகு (அந்த வானத்தின் கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் சென்றடைந்தபோது அங்கு யூசுஃப்(அலை) அவர்கள் இருந்தார்கள். 'இவர்கள் தாம் (இறைத்தூதர்) யூசுஃப் இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்'' என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்களும் எனக்கு பதில் சலாம் கூறினார்கள். பிறகு, 'நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று (வாழ்த்தும்) கூறினார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் ஐந்தாம் வானத்திற்கு வந்து சேர்ந்து அதைத் திறக்கும்படி கூறினார். 'யார் அது'' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். 'உங்களுடன் (இருப்பவர்) யார்?' என்று வினவப்பட்டது. அவர், 'முஹம்மது'' என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வருமாறு) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்'' என்றார். 'அவர் வரவு நல்வரவாகட்டும். அவர் வருகை மிக நல்ல வருகை'' என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. நான் அங்கு சென்றடைந்தபோது ஹாரூன்(அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். 'இவர்கள் தாம் ஹாரூன் இவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள்'' என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் கூறினார்கள். பிறகு அவர்கள், 'நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று (வாழ்த்துச்) கூறினார்கள். பிறகு என்னுடன் அவர் ஆறாம் வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படிக் கூறினார். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். 'உங்களுடன் யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்'' என்றார். (அந்த வானத்தின் காவலர்,) 'அவர் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை'' என்று (வாழ்த்துச்) கூறினார். அங்கு சென்றடைந்தபோது மூஸா (அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். 'இவர்கள் தாம் மூஸா இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்'' என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் கூறினார்கள். பிறகு, 'நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று (வாழ்த்துச்) கூறினார்கள். நான் (மூஸா - அலை - அவர்களைக்) கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'தங்கள் அழுகைக்கு என்ன காரணம்?' என்று அவர்களை நோக்கிக் கேட்கப்பட்டது. அவர்கள், 'என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள், எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திலிருந்து சொர்க்கம் புகுவார்கள் என்பதால் தான் அழுகிறேன்'' என்று பதிலளித்தார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் ஏழாவது வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படி ஜிப்ரீல் கூறினார். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று வினவப்பட்டபோது அவர், 'முஹம்மது'' என்று பதில் கூறினார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்'' என்றார். (அந்த வானத்தின் காவலர்,) 'அவரின் வரவு நல்வரவாகட்டும், அவரின் வருகை மிக நல்ல வருகை'' என்று (வாழ்த்துச்) கூறினார். நான் அங்கு சென்றடைந்தபோது, இப்ராஹீம்(அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். 'இவர்கள் தாம் உங்கள் தந்தை. இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்'' என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் உரைத்தார்கள். அவர்கள், 'நல்ல மகனும், நல்ல இறைத் தூதருமான இவரின் வரவு நல்வரவாகட்டும்'' என்று வாழ்த்துக் கூறினார்கள். பிறகு, (வான எல்லையில் அமைந்துள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' என்னும் இடத்திற்கு நான் கொண்டு செல்லப்பட்டேன். அதன் (இலந்தைப்) பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜர்' என்னுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகள் போலிருந்தன. 'இதுதான் சித்ரத்துல் முன்தஹா'' என்று ஜிப்ரீல் (அறிமுகப்படுத்திக்) கூறினார். அங்கு (அந்த மரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து ஓடி வருகின்ற) நான்கு ஆறுகள் இருந்தன. இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. 'ஜிப்ரீலே! இவ்விரண்டு ஆறுகள் எவை?' என்று கேட்டேன். அவர், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகியவை)வையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்'' என்று பதிலளித்தார்கள். பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' (எனும் 'வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும் இறையில்லம்') எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. பிறகு என்னிடம் ஒரு பாத்திரத்தில் மதுவும், ஒரு பாத்திரத்தில் பாலும் இன்னொரு பாத்திரத்தில் தேனும் கொண்டு வரப்பட்டது. நான் பாலை (தேர்ந்து) எடுத்தேன். (பிறகு அதைக் குடித்தேன்.) அப்போது ஜிப்ரீல், 'இதுதான் நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இருக்கும் (இஸ்லாம் எனும்) இயற்கை நெறியாகும்'' என்று கூறினார்கள். பிறகு என் மீது ஒவ்வொரு தினத்திற்கு ஐம்பது (வேளைத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் திரும்பி வந்தபோது மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், 'உங்களுக்கு என்ன உத்தரவிடப்பட்டது?' என்று கேட்டார்கள். 'ஒவ்வொரு நாளும் ஐம்பது (வேளைத்) தொழுகை (கட்டாயக் கடமையாக நிறை வேற்றும்படி) எனக்கு உத்தரவிடப்பட்டது'' என்று நான் பதிலளித்தேன். உங்கள் சமுதாயத்தார் ஒரு தினத்திற்கு ஐம்பது வேளைத் தொழுகையைத் தாங்க மாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுக்கு முன் மக்களிடம் அனுபவப்பட்டுள்ளேன்'' பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு பக்குவப்பட்டுள்ளேன். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் உங்கள் சமுதாயத்தினருக்காக (தொழுகையின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்'' என்று கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். (இறைவனிடம் குறைத்துத் தரும்படி கேட்டேன்) இறைவன் (ஐம்பதிலிருந்து) பத்தை எனக்குக் குறைத்தான். நான் மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். முன் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். அப்போது (நாற்பதிலிருந்து) பத்தைக் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போதும் முன் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும் படி) கூறினார்கள். நான் (இறைவனிடம்) திரும்பிச் சென்றேன். எனக்கு (முப்பதிலிருந்து) பத்தைக் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் முன்போன்றே (குறைத்து கேட்கும்படி) கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். எனக்கு (இருபதிலிருந்து பத்து குறைக்கப்பட்டு) தினந்தோறும் பத்து (வேளைத்) தொழுகைகள் (தொழும்படி) உத்தரவிடப்பட்டது. நான் (மூஸா - அலை - அவர்களிடம்) திரும்பி வந்தேன். அப்போதும் அவர்கள் முன் போன்றே கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். ஒவ்வொரு நாளும் ஐந்து (வேளைத்) தொழுகைகள் (நிறைவேற்றும்படி) எனக்கு உத்தரவிடப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போது 'உங்களுக்கு என்ன உத்தரவிடப்பட்டது?' என்று கேட்டார்கள். ஒவ்வொரு நாளைக்கும் ஐந்து (நேரத்) தொழுகைகள் எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று சொன்னேன். 'ஒவ்வொரு நாளும் ஐந்து (நேரத்) தொழுகைகளை உங்கள் சமுதாயத்தினர் தாங்கமாட்டார்கள். உங்களுக்கு முன்பே மக்களுடன் பழகி நான் நன்கு அனுபவப்பட்டுள்ளேன். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று உங்கள் சமுதாயத்தினருக்காக இன்னும் குறைத்துத் தரும்படிக் கேளுங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு நான், '(கடமையான தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைத்துத் தரும்படி பலமுறை இறைவனிடம்) எனக்கே வெட்கமேற்படும் வரையில் நான் கேட்டு விட்டேன். எனவே, நான் திருப்தியடைகிறேன்; (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொள்கிறேன்'' என்று கூறினேன். பிறகு (அந்த இடத்தை) நான் கடந்தபோது, (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) 'நான் என் (ஐந்து நேரத்தொழுகை எனும்) விதியை நடைமுறைப்படுத்திவிட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து நேரமாகக் குறைத்துக் கடமையை) எளிதாக்கி விட்டேன்'' என்று ஒரு (அசரீரிக்) குரல் ஒலித்தது. 135

3888. இக்ரிமா(ரஹ்) அறிவித்தார்

''(நபியே! இப்போது) நாம் உங்களுக்குக் காண்பித்த (அந்த இரவுக்) காட்சியையும், குர்ஆனில் சபிக்கப்பட்டுள்ள மரத்தையும் (இந்த) மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியுள்ளோம்'' என்ற (திருக்குர்ஆன் 17:60) இறை வசனத்திற்கு விளக்கம் தரும்போது இப்னு அப்பாஸ்(ரலி), 'இது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பைத்துல் மக்திஸுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அவர்களுக்குக் காட்டப்பட்ட காட்சிகளைக் குறிக்கும். குர்ஆனில் சபிக்கப்பட்டுள்ள மரம் என்பது 'ஸக்கூம்' என்னும் (நரகத்திலுள்ள கள்ளி) மரத்தைக் குறிக்கும்'' என்று கூறினார்கள். 136

பகுதி 43

மக்காவில் நபி(ஸல்) அவர்களிடம் வந்த அன்சாரிகளின் தூதுக் குழுக்களும், அல் அக்பா உடன்படிக்கையாகும். 137

3889. அப்துர் ரஹ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னி அகப்(ரஹ்) கூறினார்

கஅப் இப்னு மாலிக்(ரலி) (முதுமையடைந்து) கண்பார்வையிழந்துவிட்டபோது அவர்களைக் கரம் பிடித்து அழைத்துச் செல்பவர்களாயிருந்த (அவர்களின் மகனும் என் தந்தையுமான) அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) என்னிடம் கூறினார்கள்.

என் தந்தை கஅப் இப்னு மாலிக்(ரலி), தபூக் போரின்போது, நபி(ஸல்) அவர்களுடன் செல்லாமல் (அசிரத்தை காரணமாக) தாம் பின் தங்கிவிட்ட வேளை குறித்து என்னிடம் பேசியதை நான் செவிமடுத்தேன்... என்று கூறிவிட்டு முழு ஹதீஸையும் கூறினார்கள். 138

இப்னு புகைர்(ரஹ்) உகைல்(ரஹ்) வாயிலாக அறிவிக்கும் அறிவிப்பில், கஅப் இப்னு மாலிக்(ரலி) கூறுவதாக அறிவித்தார்கள்:

'அகபா' (எனுமிடத்தில் உறுதிமொழி அளித்த நிகழ்ச்சி நடந்த) இரவில் இஸ்லாத்தை ஏற்பதாக (மதீனாவாசிகளான) நாங்கள் பிரமாணம் செய்த வேளையில் நான் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். இதற்குப் பதிலாகப் பத்ருப் போரில் கலந்து (கொள்கிற வாய்ப்பைப் பெற்றுக்) கொள்ளுதல் எனக்கு இருந்திருக்க வேண்டும் என நான் விரும்பியதில்லை; 'அல் அகபா' பிரமாணத்தை விட 'பத்ர்' மக்களிடையே பெயர் பெற்றதாக இருந்தாலும் சரியே!

3890. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

''என் இரண்டு மாமன்மார்களும் அகபா உடன்படிக்கையில் பங்கெடுத்தனர்'' சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்), 'அந்த இருவரில் ஒருவர் பராஉ இப்னு மஃரூர்(ரலி) அவர்களாவார்'' 139 என்று கூறினார் என அபூ அப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகிறேன்.

3891. ஜாபிர்(ரலி) அறிவித்தார்

அகபா உடன்படிக்கையில் பங்கெடுத்தவர்கள் நானும், என் தந்தையும், என் இரண்டு தாய் மாமன்மார்களும் அடங்குவோம்.

3892. இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் பங்கெடுத்தவரும், இரவில் நடந்த 'அகபா' உடன் பாட்டில் பங்கெடுத்த நபித் தோழர்களில் ஒருவருமான உபாதா இப்னு ஸாமித்(ரலி) கூறினார்

(அகபா இரவில்) தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'வாருங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்க மாட்டீர்கள் என்றும், விபசாரம் புரிய மாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், உங்கள் தரப்பிலிருந்து நீங்களே இட்டுக்கட்டும் அவதூறு எதனையும் புனைந்து கொண்டு வரமாட்டீர்கள் என்றும், எனக்கு நல்ல விஷயங்களில் மாறு செய்ய மாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள். உங்களில் (இந்த உறுதிமொழியை) நிறைவேற்றுகிறவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற் சொன்ன குற்றங்களில்) எதையேனும் ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலேயே (இஸ்லாமியச் சட்டப்படி) தண்டிக்கப்பட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகி விடும். இவற்றில் எதையேனும் ஒருவர் செய்து அல்லாஹ் அவரின் குற்றத்தை (உலக வாழ்வில்) மறைத்துவிட்டால் (அவரின் மறுமை நிலை குறித்த) அவரின் விவகாரம் அல்லாஹ்விடம் உண்டு. (மறுமையில்) அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; என்று கூறினார்கள் நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் அவற்றுக்காக உறுதிமொழி கொடுத்தோம். 140

3893. உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்த (மதீனாவின்) தலைவர்களில் நானும் ஒருவனாவேன். நாங்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்க மாட்டோம் என்றும், திருட மாட்டோம் என்றும், விபச்சாரம் புரிய மாட்டோம் என்றும், அல்லாஹ் புனிதப் படுத்தியுள்ள (மனித) உயிரை நியாயமின்றிக் கொல்லமாட்டோம் என்றும், நாங்கள் (பிறர் பொருளை) அபகரிக்க மாட்டோம் என்றும், இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றினால் (எங்களுக்கு) சொர்க்கம் உண்டு என நாங்களாகத் தீர்ப்பளித்துக் கொள்ள மாட்டோம்; (இறைவனிடமே ஒப்படைத்து விடுவோம்) என்றும், இக்குற்றங்களில் எதையேனும் நாங்கள் செய்தால் அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே உண்டு என்றும் நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தோம்.

பகுதி 44

நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களை மணம் முடித்துக் கொண்டதும் ஆயிஷா மதீனாவுக்கு வருகை தந்ததும் நபியவர்கள் ஆயிஷாவுடன் வீடு கூடியதும்.

3894 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்துகொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்குக் காய்ச்சல் கண்டுவிடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என்) முடி வளர்ந்து அதிகமாகிவிட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தபோது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து என்னைச் சப்தமிட்டு அழைத்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையயும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரி பெண்கள் இருந்தார்கள். அவர்கள், “நன்மையுடனும் அருள்வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின்) நற்பேறு உண்டாகட்டும்” என்று (வாழ்த்துக்) கூறினர். உடனே என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க, அவர்கள் என்னை அலங்கரித்து (தாம்பத்தியத்தைத் துவங்கு வதற்காகத் தயார்படுத்தி)விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன்.

3895. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

''நான் உன்னைக் கனவில் இரண்டு முறை கண்டேன். உன்னைப் பட்டுத் (துணியின்) துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, 'இது உங்கள் மனைவி தான்; (முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்' என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், 'இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்' என்று சொல்லிக் கொண்டேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

3896. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) வெளியேறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு கதீஜா(ரலி) இறப்பெய்திவிட்டார்கள். (அதன்பின்னர்) நபி(ஸல்) அவர்கள் இரண்டு ஆண்டுகள்... அல்லது கிட்டத்தட்ட இரண்டாண்டுகள்... (மக்காவில்) தங்கியிருந்தார்கள். ஆயிஷா(ரலி) ஆறுவயதுடையவர்களாயிருக்கம்போது அவர்களை மணந்தார்கள் பிறகு ஆயிஷா(ரலி) ஒன்பது வயதுடையவர்களாக இருக்கும்போது அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் வீடு கூடினார்கள்.

பகுதி 45

நபி(ஸல்) அவர்களும், அவர்கள் தம் தோழர்களும் (மக்காவைத் துறந்து) மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து சென்றது. 142

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறை மார்க்கத்தைப் பாதுகாக்க மக்காவைத் துறந்து மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து செல்ல வேண்டியிருந்திராவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாய் இருந்திருப்பேன்.

இதை அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள். 143

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பேரீச்ச மரங்கள் நிறைந்த ஒரு பூமிக்கு நான் ஹிஜ்ரத் செய்து செல்வதாகக் கனவில் கண்டேன். யமாமா அல்லது ஹஜராக இருக்கும் என்று கருததினனேன். ஆனால், (இறைக்கட்டளை வந்த) பிறகு தான் அது 'யஸ்ரிப்' எனப்படும் மதீனா நகரம் என்று தெரிய வந்தது.

என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

3897. அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார்

நாங்கள் கப்பாப் இப்னு அரத்(ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனையளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. எங்களில் ஹிஜ்ரத் செய்ததற்கான (இவ்வுலகப்) பிரதிபலனில் சிறிதையும் பெறாமல் சென்றுவிட்டவர்களும் உண்டு. அவர்களில் ஒருவர் தாம் முஸ்அப் இப்னு உமைர்(ரலி) அவர் உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டார். கோடிட்ட வண்ணத் துணி ஒன்றை அவர்விட்டுச் சென்றிருந்தார். நாங்கள் (அவருக்குக் கஃபனிடுவதற்காக) அவரின் (சடலத்தின்) தலையை அதனால் மூடியபோது அவரின் கால்கள் இரண்டும் வெளியே தெரியலாயின. அவரின் கால்களை மூடினால் அவரின் தலை தெரியலாயிற்று. எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், முஸ்அப்(ரலி) அவர்களின் தலையை மூடி விடும்படியும் அவர்களின் இரண்டு கால்களிலும் இத்கிர் புல்லைச் சிறிது போட்டு (மறைத்து) விடும்படியும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்தததற்கான) பலன் கனிந்து அதைப் பறித்து (அனுபவித்து)க் கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர். 145

3898. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒருவரின் ஹிஜ்ரத் அவர் அடையவிருக்கும் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்ததால், அல்லது அவர் மணக்கவிருக்கும் ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டிருந்தால், அவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும். ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்தியுறச் செய்வதைக்) குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோக்கியதாகவே அமைந்திருக்கும்.

என உமர்(ரலி) அறிவித்தார். 146

3899. முஜாஹித் இப்னு ஜபர் அல் மக்கீ(ரஹ்) கூறிதாவது:

3900. அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அறிவித்தார்

நான் உபைத் இப்னு உமைர் அல் லைஸீ(ரஹ்) அவர்களுடன் ஆயிஷா(ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அப்போது ஆயிஷா(ரலி) 'ஸபீர்' என்னும் மலைக்கருகில் தங்கியிருந்தார்கள்.)148 அவர்களிடம் ஹிஜ்ரத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள், 'இன்று (மக்கா வெற்றி கொள்ளப்பட்டுவிட்ட பிறகு) ஹிஜ்ரத் கிடையாது. இறைநம்பிக்கையாளர்கள் (தம் மார்க்கத்தைப் பின்பற்ற முடியாதவாறு) தாம் சோதிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சி தம் மார்க்கத்துடன் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்தியுறச் செய்வதை) குறிக்கோளாகக் கொண்டு (தம் தாய் நாட்டைத் துறந்து ஒரு காலத்தில்) ஓடி வந்தார்கள். ஆனால், இன்றோ அல்லாஹ் இஸ்லாதை ஓங்கச் செய்துவிட்டான். இன்று இறை நம்பிக்கையாளர், தான் விரும்பிய இடத்தில் தன் இறைவனை வணங்கலாம். ஆயினும் (ஹிஜ்ரத் தான் இனி இல்லையே தவிர) ஜிஹாத் (எனும் அறப்போர்) புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்களுக்காகவும்) நாட்டம் கொள்வதும் (இன்றும்) உண்டு'' என்று பதிலளித்தார்கள். 149

3901. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஸஅத் இப்னு முஆத்(ரலி), 'இறைவா! உன் பாதையில் எதிர்த்துப் போர் புரிய நான் மிகவும் விரும்புகிறவர்கள் உன் தூதரை நம்ப மறுத்து அவர்களை (மக்காவிலிருந்து) வெளியேற்றிய சமுதாயத்தினர் தாம் என்பதை நீ அறிவாய். இறைவா! எங்களுக்கும் அவர்களுக்குமிடையிலான போரை நீ முடித்து வைத்துவிட்டாய் என்று எண்ணுகிறேன்'' என்று (தம் மரணத்தருவாயில்) கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) வழியாகவே வரும் மற்றோர் அறிவிப்பில், 'உன் தூதரை நம்ப மறுத்து அவர்களை வெளியேற்றிய குறைஷிச் சமுதாயத்தினர் தாம்'' என்று ஸஅத்(ரலி) கூறினார் என இடம் பெற்றுள்ளது.

3902. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் நாற்பதாம் வயதில் நபியாக நியமிக்கப்பட்டார்கள். தமக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் மக்காவில் பதின்மூன்றாண்டுகள் தங்கியிருந்தார்கள். பிறகு ஹிஜ்ரத் செய்யும் படி அவர்களுக்கக் கட்டளையிடப்பட, ஹிஜ்ரத் செய்து (மதீனாவில்) பத்தாண்டுகள் வாழ்ந்து வந்தார்கள். தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறப்பெய்தினார்கள். 150

3903. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நபியாக்கப்பட்ட பின்) மக்காவில் பதின் மூன்றாண்டுகள் தங்கியிருந்தார்கள். தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறப்பெய்தினார்கள்.

3904. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் மரண நோயின் போதும்) மிம்பரின் மீதமர்ந்து, (மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில்), 'அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவ(து எதுவாயினும் அ)தைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமுள்ள (மறுமைப் பெரு வாழ்வு) தனை எடுத்துக் கொள்ளும்படியும் (இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள) வாய்ப்பளித்தான். அப்போது அந்த அடியார் அல்லாஹ்விடமிருப்பதையே தேர்ந்தெடுத்தார்'' என்று கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி) அழுதார்கள். மேலும் (நபியவர்களை நோக்கி), 'தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும அர்ப்பணமாகட்டும்'' என்று கூறினார்கள். நாங்கள் அபூ பக்ரு(டைய அழுகை)க்காக வியப்படைந்தோம். மக்கள், 'இந்த முதியவரைப் பாருங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவதைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமிருப்பதை எடுத்துக் கொள்ளும்படியும் இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கிய (மகிழ்ச்சியான விஷயத்)தைத் தெரிவித்துக் கொண்டிருக்க இவர், 'தங்களுக்கு என் தந்தையரும் தாய்களும் அர்ப்பணமாகட்டும்' என்று (அழுதபடி) கூறுகிறாரே'' என்று கூறினார்கள் - இறைத்தூதர்(ஸல்) அவர்களே இப்படி வாய்ப்பு வழங்கப்பட்டவராவார் - அபூ பக்ர்(ரலி) தாம் எங்களில் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி அதிகம் அறிந்தவராக இருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'தம் தோழமையாலும் தம் செல்வத்தாலும் எனக்குப் பேருபகாரம் புரிந்தவர் அபூ பக்ர் அவர்கள் தாம். என் சமுதாயத்தாரிலிருந்து எவரையேனும் என் உற்ற நண்பராக நான் ஆக்கிக் கொள்வதாயிருந்தால் அபூ பக்ரையே ஆக்கிக் கொண்டிருப்பேன்; எனினும், இஸ்லாத்தின் (காரணத்தால் உள்ள) நட்பே (சிறந்ததாகும்;) போதுமானதாகும். (என்னுடைய இந்தப்) பள்ளிவாசலில் உள்ள சாளரங்களில் அபூ பக்ரின் சாளரம் தவிர மற்றவை நீடிக்க வேண்டாம்'' என்று கூறினார்கள். 151

3905. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

என் பெற்றோர் (அபூ பக்ரும், உம்மு ரூமானும்) எனக்கு விவரம் தெரிந்தது முதல் (இஸ்லாமிய) மார்க்கத்தை கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தனர். பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும் மாலையிலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வருகை தராமல் எங்களின் எந்த நாளும் கழிந்ததில்லை. (மக்கா நகரில் வாழ்ந்த) முஸ்லிம்கள் (இணை வைப்பவர்களால் பல்வேறு துன்பங்கள்) சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டபோது, அபூ பக்ர் அவர்கள் அபிசீனிய நாட்டை நோக்கி, நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். அவர்கள் (யமன் செல்லும் வழியில்) 'பர்குல் கிமாத்' 152 என்னும் இடத்தை அடைந்தபோது இப்னு தஃம்னா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் 'அல்காரா' எனும் (பிரபல) குலத்தின் தலைவராவார் - அவர் 'அபூ பக்ரே எங்கே செல்கிறீர்?' என்று கேட்டார். 'என் சமுதாயத்தினர் என்னை (நாடு துறந்து) வெளியேறிச் செல்லும் நிலைக்குத் தள்ளிவிட்டனர். எனவே, நான் பூமியில் பரவலாகப் பயணம் செய்து (நிம்மதியாக) என் இறைவனை வணங்கப் போகிறேன்'' என்று அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது இப்னு தஃம்னா, 'அபூ பக்ரே! தங்களைப் போன்றவர்கள் (தாமாகவும்) வெளியேறக் கூடாது, (பிறரால்) வெளியேற்றப்படவும் கூடாது. (ஏனெனில்) நீங்கள் ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். இரத்த பந்த உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள். (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள். விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள். சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள் என்று (அவர்களின் அறச் சேவைகளைப் புகழ்ந்து) கூறிவிட்டு, 'தங்களுக்கு அடைக்கலம் தருகிறேன். நீங்கள் (மக்காவிற்கே) திரும்பிச் சென்று உங்களின் (அந்த) ஊரிலேயே உங்களுடைய இறைவனை வணங்குங்கள்'' என்று கூறினார். அபூ பக்ர் (அபிசீனிய பயணத்தை ரத்துச் செய்துவிட்டு மக்காவிற்குத்) திரும்பினார்கள். அவர்களுடன் இப்னு தஃம்னாவும் பயணமா(கித் திரும்பி)னார். மாலையில் இப்னு தஃம்னா குறைஷிக்குல பிரமுகர்களைப் போய்ச் சந்தித்து அவர்களிடம் (நாட்டு மக்களுக்காகப் பாடுபடும்) அபூ பக்ரைப் போன்றவர்கள் (நாட்டிலிருந்து தாமாக) வெளியேறுவதோ, (பிறரால்) வெளியேற்றப்படுவதோ கூடாது. ஏழைகளுக்காக உழைக்கும், உறவுகளைப் பேணிவாழும், (சிரமப்படுவோரின்) பாரம் சுமந்து வரும், விருந்தினர்களை உபசரித்து வரும், சத்திய சோதனைகளில் (ஆட்படுத்தப்பட்டோருக்கு) உதவி வரும் ஒரு (ஒப்பற்ற) மனிதரையா (நாடு துறந்து) வெளியேறிச் செல்லும் நிலைக்கு உள்ளாக்குகிறீர்கள்?' என்று கேட்டார். (அபூ பக்ர் - ரலி - அவர்களுக்குத் தாம் அடைக்கலம் தரப் போவதாகக் கோரிய) இப்னு தஃம்னாவின் அடைக்கலத்தை குறைஷிகள் மறுக்கவில்லை. அவர்கள் இப்னு தஃம்னாவை நோக்கி, 'அபூ பக்ர், தம் இல்லத்திற்குள்ளேயே தம் இறைவனை வணங்கவோ, தொழுகவோ, தாம் விரும்பியதை ஒதவோ செய்யட்டும். ஆனால், இவற்றின் மூலம் எங்களுக்கு இடையூறு செய்யவோ இவற்றை பகிரங்கமாகச் செய்வதோ கூடாது. ஏனெனில் எங்கள் மனைவி மக்கள் (புதிய மத நம்பிக்கை மற்றும் வணக்க வழிபாட்டு முறைகளைப் பார்த்து) குழப்பமடைந்து விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று அவரிடம் கூறிவிடுங்கள்'' என்று கூறினார்கள். அ(வர்கள் கூறிய)தை இப்னு தஃம்னா அபூ பக்ர்(ரலி) தம் இல்லத்திற்கு தம் இறைவனை வணங்கியும், தம் தொழுகையை பகிரங்கப்படுத்தாமலும் தம் வீட்டுக்கு வெளியில் (திருக்குர்ஆன் வசனங்களை) ஓதாமலும் (அவர்கள் விதித்த நிபந்தனைப்படி) இருந்து வந்தார்கள் பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு (மாற்று யோசனை) தோன்றியது. தம் வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் திருக்குர்ஆனை ஓதியும் வந்தார்கள். அப்போது, இணைவைப்பவர்களின் மனைவி மக்கள் அபூ பக்ர் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு (அவர்களைச் சூழ்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதற்காக) அவர்களின் மீது முண்டியடித்து விழுந்தனர். அபூ பக்ர்(ரலி) குர்ஆன் ஓதும்போது தம் கண்களை கட்டுப்படுத்த முடியாமல் (கண்ணீர் உகுத்த வண்ணம்) அதிகமாக அழக்கூடியவராக இருந்தார்கள். (அபூ பக்ர் அவர்களின்) இந்த நடவடிக்கை (எங்கே தங்களின் இளகிய இதயம் படைத்த மனைவி மக்களை மதம் மாறச் செய்து விடுமோ என்ற அச்சம்) இணைவைப்பவர்களான குறைஷிகளை பீதிக்குள்ளாக்கியது. 153 அதனால் அவர்கள் இப்னு தஃம்னாவிடம் ஆளப்பினர். அவரும் குறைஷிகளிடம் வந்தார். அப்போது அவர்கள், 'அபூ பக்ர் தம் இல்லத்திற்குள்ளேயே தம் இறைவனை வழிபட்டுக் கொள்ளட்டும் என்று (நிபந்தனையிட்டு) அவருக்கு நீங்கள் அடைக்கலம் தந்ததன் பேரிலேயே நாங்கள் அவருக்கு அடைக்கலம் தந்தோம். அவர் அதை மீறிவிட்டு தம் வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அந்த இடத்தில் பகிரங்கமாக தொழுது கொண்டும், (குர்ஆனை) ஓதிக் கொண்டும் இருக்கிறார். நாங்கள் எங்கள் மனைவி மக்கள் குழப்பத்திற்குள்ளாகி விடுவார்களோ என்று அஞ்சுகிறோம். எனவே, அபூ பக்ரைத் தடுத்துவையுங்கள். அவர் அவரின் இறைவனை தம் இல்லத்தில் வணங்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள விரும்பினால் அவ்வாறு செய்யட்டும். அவர் அதை மறுத்து பகிரங்கப்படுத்தவே செய்வேன் என்றால் அவரிடம் உம்முடைய (அடைக்கலப்) பொறுப்பைத் திரும்பத் தருமாறு கேளுங்கள். ஏனெனில், (உங்களின் உடன்பாட்டை முறித்து) உங்களுக்கு நாங்க்ள் மோசடி செய்வதை வெறுக்கிறோம். (அதே சமயம்) அபூ பக்ர் (அவற்றை) பகிரங்கமாகச் செய்ய நாங்கள் அனுமதிப்போராகவும் இல்லை'' என்று கூறினார்.

ஆயிஷா(ரலி) கூறினார்: இப்னு தஃம்னா அபூ பக்ர் அவர்களிடம் வந்து, 'நான் எ(ந்)த (நிபந்தனையி)ன் பேரில் உங்களிடம் ஒப்பந்தம் செய்தேன் என்பதை தாங்கள் அறிவீர்கள். எனவே ஒன்று, அதனோடு மட்டும் நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும், அல்லது என்னுடைய (அடைக்கலப்) பொறுப்பை என்னிடம் திரும்பத் தந்து விடவேண்டும். ஏனென்றால் நான் உடன்படிக்கை செய்த ஒரு மனிதரின் விஷயத்தில் நான் ஏமாற்றப்பட்டேன் என்று அரபுகள் கேள்விப்படுவதை நான் விரும்பமாட்டேன் 'என்று கூறினார். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'உம்முடைய அடைக்கலத்தை உம்மிடமே திரும்பத் தந்து விடுகிறேன். வல்லவனும் கண்ணியமிக்கவனுமான அல்லாஹ்வின் அடைக்கலம் குறித்து நான் திருப்திபடுத்துகிறேன்'' என்று கூறினார்கள். அன்றைக்கு நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களைப் பார்த்து, 'இரண்டு கருங்கல் மலைகளுக்கிடையே பேரீச்ச மரங்கள் நிறைந்த (மதீனா) பகுதியை நீங்கள் ஹிஜ்ரத் செல்கிற நாடாக நான் (கனவில்) காட்டப்பட்டேன்'' என்று கூறினார்கள். எனவே, மதீனா நோக்கி ஹிஜ்ரத் சென்றவர்கள் சென்றார்கள். (ஏற்கெனவே) அபிசீனிய நாட்டிற்கு ஹிஜ்ரத் சென்றிருந்தவர்கள் பலர் (முஸ்லிம்கள் மதீனாவில் குடியேறுவதைக் கேள்விப்பட்டு) மதீனாவுக்குத் திரும்பினார்கள். (மக்காவிலிருந்து) அபூ பக்ர் அவர்களும் மதீனா நோக்கி (ஹிஜ்ரத் புறப்பட) ஆயத்தமானார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'சற்று பொறுங்கள். எனக்கு (ஹிஜ்ரத்திற்கு) அனுமதி வழங்கப்படுவதை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்று (அபூ பக்ர் அவர்களிடம்) கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'என் தந்தை தங்களுக்கு அர்ப்பணம்; அனுமதியை(த்தான்) எதிர் பார்க்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு, 'ஆம் (எதிர்பார்க்கிறேன்)'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். எனவே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் (ஹிஜ்ரத்) செல்வதற்காகத் தன் (பயணத்தி)னை நிறுத்தினார்கள். மேலும், அபூ பக்ர் அவர்கள் (இந்தப் பயணத்திற்காகவே) தம்மிடம் இருந்த இரண்டு வாகன (ஒட்டக)ங்களுக்கு நான்கு மாதம் கருவேலந்தழையைத் தீனிபோட்டு (வளர்த்து) வந்தார்கள். 154

ஆயிஷா(ரலி) (தொடர்ந்து) கூறுகிறார்கள்:

நாங்கள் ஒரு நாள் அபூ பக்ர்(ரலி) அவர்களின் இல்லத்தில் உச்சிப் பொழுதில் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் அபூ பக்ர் அவர்களிடம் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் தலையை மூடிய வண்ணம் - நம்மிடம் வருகை தராத நேரத்தில் (வழக்கத்திற்கு மாற்றமாக) இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்'' என்று கூறினார். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'என் தந்தையும் என் தாயும் நபி(ஸல்) அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதோ (முக்கிய) விஷயம் தான் அவர்களை இந்த நேரத்தில் (இங்கு) வரச் செய்திருக்கிறது'' என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'உங்களிடம் இருப்பவர்களை வெளியே போகச் சொல்லுங்கள். (உங்களிடம் ஒரு ரகசியம் பேச வேண்டும்)'' என்று கூறினார்கள். அதற்கு, அபூ பக்ர் அவர்கள் (இல்லத்திற்குள் இருக்கும்) இவர்கள் உங்களுடைய (துணைவியின்) குடும்பத்தினர் தாம். என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத்) புறப்பட்டுச் செல்ல எனக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது'' என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர் அவர்கள், 'தங்களுடன் நானும் வர விரும்புகிறேன்! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் இறைத்தூதர் அவர்களே! என்று கேட்டார்கள். 'சரி! (நீங்களும் வாருங்கள்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த என்னுடைய இரண்டு வாகன (ஒட்டக)ங்களில் ஒன்றைத் தாங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'விலைக்கு தான் (இதை நான் எடுத்துக் கொள்வேன்)'' என்று கூறினார்கள்:

ஆயிஷா(ரலி) கூறினார்: அவர்கள் இருவருக்காகவும் வேண்டிப் பயண ஏற்பாடுகளை வெகுவிரைவாக நாங்கள் செய்து முடித்தோம். ஒரு தோல்பையில் பயண உணவை நாங்கள் தயார் செய்து வைத்தோம். அப்போது அபூ பக்ரின் மகள் (என் சகோதரி) அஸ்மா தன்னுடைய இடுப்புக் கச்சிலிருந்து ஒரு துண்டை(க் கிழித்து) அதனை அந்தப் பையின் வாய் மீது வைத்துக் கட்டினார்கள். இதனால் தான் அவர்களுக்கு 'கச்சுடையாள்' என்று பெயர் வந்தது. பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் (பயணம் புறப்பட்டு) 'ஸவ்ர்' மலையில் உள்ள ஒரு குகைக்கு வந்து சேர்ந்து அதில் மூன்று நாள்களில்) அவர்கள் இருவருடன் அப்துல்லாஹ் இப்னு அபீ பக்ரும் இரவில் வந்து தங்கியிருப்பார் - அவர் சமயோசித அறிவு படைத்த, புத்திக் கூர்மையுள்ள இளைஞராக இருந்தார் பின்னிரவு (சஹர்) நேரத்தில் அவர்கள் இருவரைவிட்டும் புறப்பட்டு மக்கா குறைஷிகளுடன் இரவு தங்கியிருந்தவர் போன்று அவர்களுடன் காலையில் இருப்பார். அவர்கள் இருவரைப் பற்றி (குறைஷிகளால் செய்யப்படும்) சூழ்ச்சிகளைக் கேட்டு, அவற்றை நினைவில் இருத்திக் கொண்டு இருள் சேரும் நேரத்தில் அவர்கள் இருவரிடமும் அச்செய்திகளைக் கொண்டு வந்து விடுவார்.

அவர்கள் இருவருக்காக அபூ பக்ர்(ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமை ஆமிர் இப்னு ஃபுஹைரா (அபூ பக்ர் அவர்களின்) மந்தையிலிருந்து ஒரு பால் தரும் ஆட்டை மேய்த்து வருவார். இரவின் சிறிது நேரம் கழிந்தவுடன் அதனை அவர்கள் இருவரிடமும் ஓட்டி வருவார். அந்தப் பாலிலேயே இருவரும் இரவைக் கழித்து விடுவார்கள் - அது புத்தம் புதிய, அடர்த்தி அகற்றப்பட்ட பாலாகும் - அந்த ஆட்டை ஆமிர் இப்னு ஃபுஹைரா இரவின் இருட்டு இருக்கும் போதே விரட்டிச் செல்வார். இதை (அவர்கள் இருவரும் அந்தக் குகையில் தங்கியிருந்த) மூன்று இரவுகளில் ஒவ்வோர் இரவிலும் அவர் செய்து வந்தார். மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி) அவர்களும் பனூ அப்து இப்னு அதீ குலத்தில் 'பனூ அத்தீல்' என்னும் கிளையைச் சேர்ந்த கை தேர்ந்த ஒருவரை 155 பயண வழி காட்டியாக இருக்கக் கூலிக்கு அமர்த்தினர். அவர் ஆஸ்பின் வாயில் அஸ்ஸஹ்மீ என்னும் குலத்தாருடன் நட்புறவு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார். (ஆனாலும்) அவர் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் மதத்தில் இருந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி) அவர்களும் அவரை நம்பி, தங்களின் இரண்டு வாகன (ஒட்டக)ங்களை ஒப்படைத்து மூன்று இரவுகளுக்குப் பின் 'ஸவ்ர்' குகைக்கு வந்து விடுமாறு வாக்குறுதி வாங்கியிருந்தனர். மூன்றாம் (நாள்) அதிகாலையில் அந்த இருவாகனங்களுடன் (அவர் ஸவ்ர் குகைக்கு வந்து சேர்ந்தார்.) அவர்கள் இருவருடன் ஆமிர் இப்னு ஃபுஹைராவும் பயண வழிகாட்டியும் சென்றனர். பயண வழிகாட்டி அவர்களைக் கடற்கரைப் பாதையில் அழைத்துச் சென்றார். 156

3906. சுராகா இப்னு (மாலிக் இப்னி) ஜுஃஷும்(ரலி) அறிவித்தார்

குறைஷிக்குலத்தின் தூதுவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களையும், அபூ பக்ர்(ரலி) அவர்களையும் கொலை செய்பவருக்கு, அல்லது (உயிருடன்) கைது செய்து வருபவருக்கு இருவரில் ஒவ்வொருவருக்கும் (நூறு ஒட்டகம் என்று) பரிசை நிர்ணயம் செய்(து அறிவித்)தவர்களாக எங்களிடம் வந்தனர். அப்போது நான் எங்களின் பனூ முத்லிஜ் சமுதாயத்தின் அவைகளில் ஒன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களில் ஒருவர் எழுந்து வந்து, அமர்ந்து கொண்டிருந்த எங்களிடையே நின்று கொண்டு, 'சுராகாவே! சற்று முன் நான் கடலோரத்தில் சில உருவங்களைப் பார்த்தேன். அவர்கள் முஹம்மதும் அவரின் தோழர்களும் தாம் என்று கருதுகிறேன்'' என்று கூறினார். அவர்கள் முஹம்மதும் தோழர்களும் தாம் என்று அறிந்து கொண்டேன். (இருப்பினும் அவரைத் திசை திருப்புவதற்காக) 'அவர்கள் முஹம்மதும் அவர்களின் தோழர்களும் அல்லர். மாறாக, இன்னார் இன்னாரைத்தான் நீ பார்த்திருப்பாய். அவர்கள் எங்கள் கண்ணெதிரே தான் (தங்களின் காணாமல் போன ஒட்டகங்களைத் தேடிப்) போனார்கள்'' என்று நான் அவரிடம் கூறினேன். பிறகு அந்த அவையிலேயே சிறிது நேரம் இருந்தேன். அதற்குப் பிறகு எழுந்து (என்னுடைய இல்லத்திற்குள்) நுழைந்து என் அடிமைப் பெண்ணிடம் என்னுடைய குதிரையை வெளியே கொண்டு வரும்படி உத்தரவிட்டேன் - அப்போது குதிரை ஒரு மலைக்குன்றுக்கு அப்பால் இருந்தது. - எனக்காக அதை அவள் (அங்கே) கட்டிவைத்திருந்தாள். பின்பு, நான் என்னுடைய ஈட்டியை எடுத்துக் கொண்டு வீட்டின் பின் புற வாசல் வழியாக வெளியேறினேன். (ஈட்டியை நான் தாழ்த்திப் பிடித்திருந்ததால்) அதன் கீழ் முனையால் (என்னையும் அறியாமலேயே) தரையில் கோடு கிழித்தேன். மேலும் அதன் மேல் நுனியை தாழ்த்திக் கொண்டு என் குதிரையிடம் வந்து அதன் மீது ஏறிக் கொண்டேன். அதன் முன்னங்கால் இரண்டையும் ஒரே நேரத்தில் உயர்த்தி ஒரே நேரத்தில் பூமியில் வைக்குமாறு செய்து மிக வேகமாகப் புறப்பட்டு அவர்களை நெருங்கினேன். அப்போது என்னுடைய குதிரை காலிடறி அதிலிருந்து நான் விழுந்து விட்டேன். உடனே நான் எழுந்து தன்னுடைய கையை அம்புக்கூட்டை நோக்கி நீட்டி, அதிலிருந்து (சகுனச் சொற்கள் எழுதப்பட்ட) அம்புகளை எடுத்தேன். அவற்றின் மூலம் என்னால் அவர்களுக்கு பாதிப்பை உருவாக்க முடியுமா அல்லது முடியாதா என்று குறிபார்த்தேன். நான் விரும்பாத (வகையில், என்னால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியாது என்ப)தே வந்தது. என்னுடைய அம்புகளுக்கு மாறு செய்துவிட்டு என்னுடைய குதிரையில் ஏறினேன். அது பாய்ந்த வண்ணம் சென்றது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (திருக்குர்ஆன்) ஓதியதை கேட்டேன். அவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. அபூ பக்ர் அவர்கள் அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். (அப்போது) என்னுடைய குதிரையின் முன்கால்கள் இரண்டும் முட்டுக்கால்கள் வரையிலும் பூமியில் புதைந்து கொண்டன. நான் குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டேன். பிறகு (அதை எழச் செய்வதற்காக) அதை நான் அரற்றினேன். அது எழுந்(திருக்க முயற்றித்)தது. (ஆனால்,) அதன் கால்களை அதனால் வெளியே எடுக்க முடியவில்லை. அது நேராக எழுந்து நின்றபோது இரண்டு முன்னங்கால்களின் அடிச் சுவட்டிலிருந்து புகை போன்று வானத்தில் பரவலாகப் புழுதி கிளம்பிற்று. உடனே நான் (என்னுடைய) அம்புகளைக் கொண்டு (சகுனக்) குறிபார்த்தேன். நான் விரும்பாததே வந்தது. உடனே, நான் எனக்கு (உயிர்) பாதுகாப்பு நல்கும்படி அவர்களை அழைத்தேன். உடனே, அவர்கள் நின்றுவிட்டனர். நான் என்னுடைய குதிரையிலேறி அவர்களிடம் வந்து சேர்ந்தேன். அவர்களைவிட்டும் (என்னுடைய குதிரை) தடுக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியை நான் கண்டபோது என்னுடைய மனதிற்குள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (மார்க்க) விஷயம் மேலோங்கும் என்று தோன்றியது. நான் அல்லாஹ்வின் தூதரிடம், 'உங்களுடைய (குறைஷி) சமுதாயத்தினர் உங்களுக்காகப் பரிசை நிர்ணயித்துள்ளனர்'' என்று கூறிவிட்டு அந்த (குறைஷி) மக்கள் முஸ்லிம்களைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்ற தகவல்களை அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். மேலும், என்னுடைய பயண உணவுப் பொருள்களை எடுத்துக் காட்டினேன். அவர்கள் என்னிடமிருந்து ஒன்றையும் (எடுத்து) எனக்கு குறைவு செய்யவுமில்லை. மேலும், (என்னிடமிருந்த எதையும்) அவர்கள் இருவரும் என்னிடம் கேட்கவுமில்லை. ஆயினும், நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'எங்களைப் பற்றி(ய செய்தியை) மறைத்து விடு'' என்று கூறினார்கள். உடனே, நான் நபி(ஸல்) அவர்களிடம் எனக்கு ஒரு பாதுகாப்புப் பத்திரம் எழுதித்தரும்படி வேண்டினேன். அப்போது, நபி(ஸல்) அவர்கள் ஆமிர் இப்னு ஃபுஹைராவுக்கு உத்தரவிட அவர் பாடமிடப்பட்ட தோல் துண்டில் (பாதுகாப்புப் பத்திரத்தின் வாசகத்தை) எழுதினார். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சகாக்களுடன் மதீனா நோக்கிச்) சென்றார்கள். 157

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்:

ஷாம் நாட்டிலிருந்து (வியாபாரத்தை முடித்துக் கொண்டு) திரும்பிக் கொண்டிருந்த முஸ்லிம்களின் வணிகக் குழுவிலிருந்த ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும், அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும், வெண்ணிற ஆடைகளைப் போர்த்தினார்கள். மதீனாவிலிருந்த முஸ்லிம்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டதைக் கேள்விப்பட்டு, ஒவ்வொரு நாள் காலையிலும் (மதீனாவின் புறநகர்ப் பகுதியிலிருந்த கருற்கற்கள் நிறைந்த) 'ஹர்ரா' எனுமிடத்திற்கு வந்து நண்பகலின் வெப்பம் அவர்களைத் திருப்பியனுப்பும் வரையில் நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்திருந்தனர். அப்படி ஒரு நாள் நீண்ட நேரம் நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்துவிட்டு (ஊருக்குள்) அவர்கள் திரும்பித் தத்தம் வீட்டுக்குள் ஒதுங்கியபோது யூதர்களில் ஒருவர் அவர்களின் கோட்டைகளில் ஒன்றின் மீது எதையோ பார்ப்பதற்காக ஏறியிருந்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் வெண்ணிற ஆடையில், கானல் நீர் விலக வருவதைப் பார்த்தார். அந்த யூதரால் (தம்மைக்) கட்டுப்படுத்த இயலாமல் உரத்த குரலில், 'அரபுக் குழாமே!'' இதோ நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த உங்களுடைய நாயகர்.''... என்று கூவினார். உடனே, முஸ்லிம்கள் (நபி - ஸல் - அவர்களைப் பாதுகாப்புடன் வரவேற்பதற்காக). ஆயுதங்களை நோக்கி கிளர்ந்தெழுந்தனர். அந்த (கருங்கற்கள் நிறைந்த) ஹர்ராவின் பரப்பில் இறைத்தூதர்(ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் வலப்பக்கமாகத் திரும்பி ('குபா'வில் உள்ள) பனூ அம்ர் இப்னு அவ்ஃப் குலத்தாரி(ன் குடியிருப்புப் பகுதியி)ல் தங்கினார்கள். இது ரபீஉல் அவ்வல் மாதம் திங்கள் கிழமை நடந்தது. அப்போது மக்களை நோக்கி அபூ பக்ர்(ரலி) எழுந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மௌனமாக அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கு வந்திருந்த நபி(ஸல்) அவர்களைப் பார்த்திராத - அன்சாரிகளில் சிலர் (அபூ பக்ர்(ரலி) அவர்களை இறைத்தூதர் என்று எண்ணிக் கொண்டு) அபூ பக்ர்,(ரலி) அவர்களுக்கு முகமன் கூறிக் கொண்டிருந்தனர். இறுதியில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது வெயில் பட்டபோது உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் சென்று தமது துண்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது நிழலிட்டார்கள். அப்போதுதான் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அறிந்து கொண்டனர். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பனூ அம்ர் இப்னு அவ்ஃபினரிடையே (குபாவில்) பத்துக்கும் மேற்பட்ட நாள்கள் தங்கியிருந்து 'இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட (மஸ்ஜித் குபா) பள்ளிவாசலை' நிறுவினார்கள். (தாம் தங்கியிருந்த நாள்களில்) அந்தப் பள்ளியில் தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பிறகு தம் வாகனத்திலேறி பயணமானார்கள். அவர்களுடன் மக்களும் நடந்து சென்றனர். முடிவாக (அவர்களின்) ஒட்டகம் மதீனாவில் (தற்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் (அமைந்துள்ள இடம்) அருகே மண்டியிட்டு படுத்துக் கொண்டது. அந்த நாளில் முஸ்லிம்களில் சிலர் அங்கு தான் தொழுது கொண்டிருந்தனர். அது ஸஅத் இப்னு ஸுராரா(ரலி) அவர்களின் பொறுப்பிலிருந்த ஸஹ்ல், சுஹைல் என்ற இரண்டு அனாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமான பேரீச்சம் பழம் (உலர வைக்கப்படும்) களமாக இருந்தது. அந்த இடத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாகனம் மண்டியிட்டுப் படுத்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இன்ஷா அல்லாஹ் இதுதான் (நம்முடைய) தங்குமிடம்'' என்று கூறினார்கள். பிறகு அந்த இரண்டு சிறுவர்களையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைத்து அந்தக்களத்தை பள்ளிவாயில் அமைப்பதற்காக விலைக்குக் கேட்டார்கள். அவர்கள் இருவரும், 'இல்லை. அதை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறோம் இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிறுவர்களிடமிருந்து அதை அன்பளிப்பாகப் பெற மறுத்து இறுதியில் அதை அவர்களிடமிருந்து விலைக்கே வாங்கினார்கள். பிறகு அதில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டும்போது அவர்களுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் செங்கல் சுமக்கலானார்கள். (அப்போது,) 'இந்தச் சுமை கைபரின் சுமையல்ல. இது எங்களின் இறைவனிடம் (சேமித்து வைக்கப்படும்) நீடித்த நன்மையும் (கைபரின் சுமையை விடப் பரிசுத்தமானதுமாகும்'' என்று ('ரஜ்ஸ்' எனும் யாப்பு வகைப் பாடலைப் பாடியபடி) கூறிக் கொண்டிருந்தார்கள். மேலும், 'இறைவா (உண்மையான) பலன் மறுமையின் பலனே. எனவே (மறுமைப் பலனுக்காக பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் கருணையன்பு காட்டுவாயாக'' என்று கூறினார்கள்.

அப்போது முஸ்லிம்களில் ஒருவரின் கவிதையை நபியவர்கள் பாடிக்காட்டினார்கள். அவரின் பெயர் என்னிடம் கூறப்படவில்லை (என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப்(ரஹ்) கூறிவிட்டு தொடர்ந்து) இப்னு ஷிஹாப்(ரஹ்) கூறினார்கள்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்தப் பாடல்(வரி)களைத் தவிர ஒரு முழுமையான கவிதையின் பாடலைப் பாடியதாக எனக்கு ஹதீஸ்களில் (செய்தி) எட்டவில்லை.

3907. அஸ்மா(ரலி) அறிவித்தார்

(ஹிஜ்ரத்தின் போது) நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் மதீனா செல்ல நாடிய சமயம் நான் அவர்கள் இருவருக்கும் பயண உணவைத் தயாரித்தேன். என் தந்தை (அபூ பக்ர் (ரலி)யிடம், 'இதைக் கட்டுவதற்கு என்னிடம் என் இடுப்புக் கச்சுத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று சொன்னேன். அவர்கள், 'அப்படியென்றால் அதை இரண்டாகக் கிழி'' என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்(து என் இடுப்புக் கச்சை இரண்டாகக் கிழித்துப் பயண உணவைக் கட்டி முடித்)தேன். எனவே நான், 'இரண்டு கச்சுடையாள்'' என்று (புனைப் பெயர்) சூட்டப்பட்டேன். 158

இப்னு அப்பாஸ்(ரலி) 'அஸ்மா கச்சுடையாள்' என்று கூறினார்கள்.

3908. பராஉ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கி (ஹிஜ்ரத்) சென்றபோது சுராக்கா இப்னு மாலிக் இப்னி ஜுஃஷும் என்பவர் அவர்களைப் (பிடித்து வரப்) பின்தொடர்ந்து சென்றார். நபி(ஸல்) அவர்கள் அவருக்கெதிராக (அவரைச் செயலிழக்கச் செய்யும் படிப்) பிரார்த்தித்தார்கள். உடனே, அவரின் குதிரை அவருடனேயே பூமியில் அழுந்திவிட்டது. சுராக்கா (நபியவர்களிடமே), 'எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். நான் உங்களுக்குத் தீங்கு செய்ய மாட்டேன்'' என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் அவருக்காகப் பிரார்த்தித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாகத்துடனிருக்க, ஓர் ஆட்டிடையன் அவ்வழியே சென்றான். உடனே, அபூ பக்ர்(ரலி) ஒரு கிண்ணத்தை எடுத்து (ஆடு ஒன்றிலிருந்து) சிறிது பாலை அதில் கறந்து அதை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அபூ பக்ர் அவர்கள் திருப்தியடையும் வரை நபி(ஸல்) அவர்கள் (அதிலிருந்து) அருந்தினார்கள். 159

3909. அஸ்மா(ரலி) அறிவித்தார்

நான் (என் மகன்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைரை (மக்காவில்) சூலுற்றிருந்தேன். சூல்காலம் பூர்த்தியானதும் நான் (ஹிஜ்ரத்) புறப்பட்டேன். மதீனா வந்தேன் (வழியில்) குபாவில் தங்கி, குபாவிலேயே அவனைப் பெற்றெடுத்தேன். பிறகு, நபி(ஸல்) அவர்களிடம் அவனைக் கொண்டு சென்று அவர்களின் மடியில் அவனை வைத்தேன். பிறகு அவர்கள் பேரீச்சம் பழம் ஒன்றைக் கொண்டு வரும்படிக் கூறி அதை மென்று அவனுடைய வாயில் உமிழ்ந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உமிழ் நீர் தான் அவனுடைய வாயில் நுழைந்த முதல் பொருளாக இருந்தது. பிறகு நபி(ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தை அவனுடைய வாயினுள் வைத்து தேய்த்துவிட்டார்கள். பிறகு அவனுக்காக துஆ செய்து, இறைவனிடம் அருள்வளம் வேண்டி இறைஞ்சினார்கள். அவன்தான் இஸ்லாத்தில் (முஹாஜிர்களுக்கு மதீனாவில்) பிறந்த முதல் குழந்தையாக இருந்தான்.

வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், 'அஸ்மா(ரலி) நபி (-ஸல் - அவர்களிடம் மதீனா) நோக்கி கர்ப்பிணியான நிலையில் ஹிஜ்ரத் செய்தார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.

3910. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(முஹாஜிர்களிலேயே) இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தை அப்துல்லாஹ் இப்னு ஸுபைராவார். (அவர் பிறந்தவுடன்) அவரை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். நபி(ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து, அதை மென்று அவரின் வாய்க்குள் நுழைத்தார்கள். அவரின் வயிற்றினுள் முதலாவதாக நுழைந்து நபி(ஸல்) அவர்களின் உமிழ் நீரேயாகும்.

3911. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தமக்குப் பின்னால் அபூ பக்ர்(ரலி) வர (மக்காவிலிருந்து) மதீனா நோக்கி (ஹிஜ்ரத்) சென்றார்கள். அபூ பக்ர்(ரலி) (இள நரையின் காரணத்தினால் தோற்றத்தினால்) மூத்தவராகவும், (மதீனாவாசிகளிடையே வியாபார நிமித்தமாக அடிக்கடி சென்றதில் அவர்களிடையே) அறிமுகமானவராகவும் இருந்தார்கள். ஆனால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (நரை விழாத காரணத்தினால் உருவத்தில்) இளையவராகவும் (வெளியூர் சென்று நீண்ட காலமாகி விட்டதால் அந்த மக்களிடையே) அறிமுகமற்றவராகவும் இருந்தார்கள். (அவர்கள் இருவரும் ஹிஜ்ரத் சென்ற அந்தப் பயணத்தின் போது) அபூ பக்ர்(ரலி) அவர்களை ஒருவர் சந்தித்து, 'அபூ பக்ரே! உமக்கு முன்னால் உள்ள இந்த மனிதர் யார்?' என்று கேட்கிறார். அதற்கு, அபூ பக்ர்(ரலி), 'இந்த மனிதர் எனக்கு வழிகாட்டுபவர்'' என்று (நபி - ஸல் அவர்களை எதிரிக்குக் காட்டிக் கொடுத்து விடாமலும், அதே சமயம் உண்மைக்குப் புறம்பில்லாமலும் இரண்டு பொருள்படும்படி) பதிலளிக்கிறார்கள். இதற்கு, (பயணத்தில்) பாதை (காட்டுபவர்)' என்றே அபூ பக்ர் பொருள் கொள்கிறார் என எண்ணுபவர் எண்ணிக் கொள்வார். ஆனால், 'நன் மார்க்கத்திற்கு (வழிகாட்டுபவர்)' என்ற பொருளையே அபூ பக்ர் கொண்டிருந்தார்கள்.

அப்போது, அபூ பக்ர்(ரலி) திரும்பிப் பார்த்தார்கள். அங்கு (அவர்களுக்குப் பின்னால்) ஒரு குதிரை வீரர் (சுராகா) அவர்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். உடனே அபூ பக்ர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! (இதோ!) இந்தக் குதிரை வீரர் நம்மை (நெருங்கி) வந்தடைந்துவிட்டார்'' என்று கூறினார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்துவிட்டு, 'இறைவா! அவரைக் கீழே விழச் செய்!'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே குதிரை அவரைக் கீழே தள்ளிவிட்டது; பிறகு கனைத்துக் கொண்டே எழுந்து நின்றது. (உடனே சுராகா மனம் திருந்தி), 'இறைத்தூதர் அவர்களே!'' நீங்கள் விரும்பியதை எனக்கு உத்தரவிடுங்கள்'' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே நின்று கொள். எங்களை பின்தொடர்ந்து வரும் எவரையும்விட்டு விடாதே'' என்று கூறினார்கள். இந்த சுராகா முற்பகலில் அல்லாஹ்வின் நபிக்கெதிராகப் போரிடுபவராக இருந்தார்; பிற்பகலில் நபியைக் காக்கும் ஆயுதமாக மாறினார். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (கருங்கற்கள் நிறைந்த) 'ஹர்ரா' பகுதியில் இறங்கி(த் தங்கி)னார்கள். (அங்கே குபாவில் ஒரு பள்ளி வாசலையும் கட்டச் செய்தார்கள்.) பிறகு, (குபாவிலிருந்து கொண்டு மதீனாவாசிகளான) அன்சாரிகளிடம் ஆளனுப்பினார்கள். உடனே அன்சாரிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமும், அபூ பக்ர்(ரலி) அவர்களிடமும் வந்து, அவர்கள் இருவருக்கும் சலாம் கூறினார்கள். பிறகு, '(இப்போது) நீங்கள் இருவரும் அச்சமற்றவர்களாகவும், (ஆணையிடும்) அதிகாரம் படைத்தவர்களாவும் பயணம் செய்யலாம்'' என்று கூறினர். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி) அவர்களும் (மதீனா நோக்கிப்) பயணமாயினர். அன்சாரிகள் (அவர்களுக்குப் பாதுகாப்பாக) ஆயுதங்களுடன் (அவர்களைச்) சூழ்ந்தபடி சென்றனர். அப்போது மதீனாவில், 'இறைத்தூதர்(ஸல்) வந்துவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) வந்துவிட்டார்கள்'' என்று கூறலாயினர். நபி(ஸல்) அவர்கள் சிறிது தூரம் பயணித்த பின்னர் (தம் வாகனத்திலிருந்து) அபூ அய்யூப் (அல் அன்சாரி (ரலி) அவர்களின் வீட்டிற்குப் பக்கத்தில் இறங்கினார்கள். (அங்கே) நபியவர்கள் தம் குடும்பத்தாரிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது தம் குடும்பத்தாருக்குச் சொந்தமான பேரீச்சம் தோட்டத்தில் கனிகளைப் பறித்துக் கொண்டிருந்த (யூத அறிஞர்) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் இதைக் கேட்டுவிட்டு, குடும்பத்தாருக்காகப் பறித்தவற்றை அவர்களுக்கென எடுத்து வைக்கத் தவறி, அவற்றைத் தம்முடன் கொண்டு வந்துவிட்டார். அங்கே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்த அறிவுரைகளை) 160 அவர்களிடமிருந்து கேட்டுவிட்டு தம் வீட்டாரிடம் திரும்பிச் சென்றார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'எங்கள் குடும்பத்தாரின் வீடுகளில் அருகிலிருப்பது எது?' 161 என்று கேட்டார்கள். அதற்கு அபூ அய்யூப் அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! இது என் வீடு. இதுதான் என் (வீட்டு) வாசல். (நானே உங்கள் குடும்பத்தாரில் மிக அருகில் உள்ளவன்)'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் சென்று மதிய ஓய்வு கொள்வதற்காக (உங்கள் வீட்டை) எமக்குத் தயார் செய்யுங்கள்'' என்று கூறினார்க்ள. அபூ அய்யூப்(ரலி), 'உயர்ந்தவனான அல்லாஹ்வின் அருள்வளத்துடன் நீங்கள் இருவரும் எழுங்கள்'' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அபூ அய்யூப் அல் அன்சாரீ அவர்களின் இல்லத்திற்கு) வந்தபோது (யூத அறிஞர்) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் வந்து, (சில விளக்கங்களைக் கேட்டு உறுதி செய்த பிறகு) 'தாங்கள் இறைத்தூதர் என்றும், தாங்கள் சத்திய (மார்க்க)த்துடன் வந்துள்ளீர்கள் என்றும் நான் சாட்சியம் அளிக்கிறேன். யூதர்கள் என்னைப் பற்றி, நான் மிகவும் அறிந்தவன் என்றும், அவர்களில் மிகவும் அறிந்தவன் என்றும், அவர்களில் மிகவும் அறிந்தவரின் மகன் என்றும் அறிந்துள்ளனர். நான் முஸ்லிமாகி விட்டேன் என்பதை அவர்கள் அறியும் முன்பாக அவர்களை அழைத்து என்னைப் பற்றி அவர்களிடம் கேளுங்கள். ஏனெனில், நான் முஸ்லிமாகி விட்டேன் என்பதை அவர்கள் அறிந்தால்' என்னிடம் இல்லாத (குற்றங்களை முதலிய)வற்றை என்னிடமிருப்பதாகக் கூறுவர்'' என்று கூறினார்கள். (யூதர்களை அழைத்து வரும்படி) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். யூதர்கள் நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். (உடனே அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் ஓரிடத்தில் மறைந்து கொண்டார்கள்.) அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், யூதக் கூட்டத்தினரே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சுங்கள்! (இல்லையேல்,) உங்களுக்குக் கேடுதான். எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீதாணையாக! நான் உண்மையிலேயே இறைத்தூதர் தாம் என்றும், நான் சத்திய (மார்க்க)த்துடன் உங்களிடம் வந்துள்ளேன் என்றும் நீங்கள் அறிவீர்கள். எனவே, நீங்கள் முஸ்லிமாகி விடுங்கள்'' என்று கூறினார்கள். யூதர்கள் (ஏற்க மறுத்து), 'அ(த்தகைய தூதர் ஒரு)வரை நாங்கள் அறியமாட்டோம்'' என்று நபி(ஸல்) அவர்களிடம் கூற, நபியவர்கள் அதையே மூன்று முறை - கூறினார்கள். (பிறகு,) நபி(ஸல்) அவர்கள், 'உங்களிடையே அப்துல்லாஹ் இப்னு சலாம் எத்தகைய மனிதர்?' என்று கேட்டார்கள். அவர்கள், 'அவர் எங்களின் தலைவர்; எங்களுடைய தலைவரின் மகன்; மேலும் எங்களில் மிகப் பெரிய அறிஞர்; மிகப் பெரிய அறிஞரின் மகன்'' என்று கூறினர். 'அவர் முஸ்லிமாகி விட்டால்... (என்ன செய்வீர்கள்) கூறுங்கள்'' என்றார்கள். அவர்கள், 'அல்லாஹ் காப்பாற்றட்டும்! அவர் முஸ்லிமாக மாட்டார்'' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'அவர் முஸ்லிமாகி விட்டால் (என்ன செய்வீர்கள்) கூறுங்கள்'' என்று (மீண்டும்) கேட்க, அவர்கள் (முன்பு போன்றே), 'அல்லாஹ் காப்பாற்றட்டும்! அவர் முஸ்லிமாக மாட்டார்'' என்று கூறினர். 'அவர் முஸ்லிமாகி விட்டால். கூறுங்கள்'' என்று (மீண்டும்) நபி(ஸல்) அவர்கள் கேட்க, அவர்கள், 'அல்லாஹ் காப்பாற்றட்டும்! அவர் முஸ்லிமாக மாட்டார்'' என்று கூறினர்.

நபி(ஸல்) அவர்கள், 'இப்னு சலாமே! இவர்களிடம் வாருங்கள்'' என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் வெளியே வந்து, 'யூதர்கள் கூட்டமே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீதாணையாக! இவர்கள் இறைத்தூதர் தாம் என்பதையும் இவர்கள் சத்திய (மார்க்க)த்துடன் வந்துள்ளார்கள் என்பதையும் நீங்கள் நன்கறிவீர்கள்'' என்று கூறினார்கள். உடனே யூதர்கள், 'நீ பொய் சொன்னாய்'' என்று கூறினார்கள். உடனே யூதர்களை நபி(ஸல்) அவர்கள் (தம்மிடத்திலிருந்து) வெளியேறச் செய்தார்கள்.

3912. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

(என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) முதன் முதலாக ஹிஜ்ரத் செய்து வந்தவர்களுக்கு (பொதுநிதியிலிருந்து) நான்காண்டுகளுக்கு நான்காயிரம் (திர்ஹம்) தீனார்) கொடுக்க வேண்டுமென நிர்ணயித்தார்கள். (தம் மகனான) எனக்கு மூவாயிரத்து ஐநூறு கொடுக்க வேண்டும் என நிர்ணயித்தார்கள். அவர்களிடம், '(தங்க மகன்) இப்னு உமர் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களில் ஒருவர் தாமே! நான்காயிரம் கொடுக்காமல் அவருக்கு மட்டும் ஏன் குறைத்து நிர்ணயித்தீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அவரை அழைத்துக் கொண்டு ஹிஜ்ரத் செய்து வந்ததெல்லாம் அவரின் தாய் தந்தையர் தாம்'' என்று கூறினார்கள்.

''அவர் சுயமாக ஹிஜ்ரத் செய்து வந்தவர்களைப் போன்றவரல்லர்'' என்றும் உமர்(ரலி) சொல்வார்கள்.

3913. கப்பாப்(ரலி) அறிவித்தார்

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தோம். 162

3914. கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார்

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. அதன் (உலகப்) பலன்களில் எதையுமே அனுபவிக்காமல் சென்றுவிட்டவர்களும் எங்களிடையே உண்டு. முஸ்அப் இப்னு உமைர்(ரலி) அத்தகையவர்களில் ஒருவர் தாம். அவர் உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டார். அவரைக் கஃபனிடுவதற்கு (அவரின்) கோடிட்ட வண்ணத் துணி ஒன்றைத் தவிர வேறெதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தத் துணியினால் நாங்கள் அவரின் தலையை மூடியபோது அவரின் கால்கள் இரண்டும் வெளியே தெரியலாயின் அவரின் கால்கள் இரண்டையும் நாங்கள் மூடியபோது அவரின் தலை வெளியே தெரியலாயிற்று. எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்தத் துணியால் அவரின் தலையை மூடி விடும்படியும் அவரின் கால்கள் இரண்டின் மீதும் 'இத்கிர்' புல்லைச் சிறிது போட்டு (மறைத்து) விடும்படியும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான இவ்வுலகப்) பலன் கனிந்து அதைப் பறித்து (சுவைத்து)க் கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர். 163

3915. அபூ புர்தா இப்னு அபீ மூஸா அல் அஷ்அரீ(ரஹ்) அறிவித்தார்

என்னிடம் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), 'என் தந்தை (உமர் - ரலி - அவர்கள்) உங்கள் தந்தை (அபூ மூஸா - ரலி - அவர்கள்) இடம் என்ன கூறினார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்; என் தந்தை உங்கள் தந்தையிடம் 'அபூ மூஸாவே! நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இஸ்லாத்தை ஏற்றதும், அவர்களுடன் ஹிஜ்ரத் செய்ததும், அவர்களுடன் (சேர்ந்து) அறப்போர் புரிந்த நற்செயல்களும் (இவையெல்லாம்) நிச்சயமாகப் பலன் தரும் என்பது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா? மேலும், நபியவர்களுக்குப் பின் நாம் புரிந்த செயல்கள் அனைத்தும் (அவற்றிலுள்ள நிறைகளும் குறைகளும்) சரிக்குச் சரி நிகராகி (இறைவனின் தண்டனையிலிருந்து) நாம் தப்பித்துக் கொள்வோம் என்பதும் (உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா?)'' என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தையிடம் உங்கள் தந்தை (அபூ மூஸா), 'இல்லை; இறைவன் மீதாணையாக! நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிறகு அறப்போர் புரிந்துள்ளோம்; தொழுதுள்ளோம். நோன்பு நோற்றுள்ளோம். நற்செயல்கள் நிறையப் புரிந்துள்ளோம். மேலும், நம்முடைய கரங்களால் நிறைய மக்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். இவற்றுக்கெல்லாம் (இறைவன் நமக்குப் பிரதிபலன் அளிப்பான் என) நாம் எதிர்பார்க்கிறோம்'' என்று பதிலளித்தார்கள். உடனே என் தந்தை (உமர்,) 'ஆனால், உமரின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! நானோ, (நபியவர்களுடன் நாம் புரிந்த நற்செயல்களான) அவற்றின் பலன் நிச்சயம் நமக்குக் கிடைக்கும் என்பதும், நபிகளாருக்குப் பின் நாம் புரிந்த செயல்கள் அனைத்தும் (அவற்றிலுள்ள நிறைகளும் குறைகளும்) சரிக்குச்சரி நிகராகி (இறைவனின் தண்டனையிலிருந்து) நாம் தப்பித்துக் கொள்வோம் என்பதும் போதும் என்றே விரும்புகிறேன்'' எனக் கூறினார்கள்.

அப்போது நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் தந்தை (உமர்) என் தந்தையை விடச் சிறந்தவர்'' என்று சொன்னேன்.

3916. அபூ உஸ்மான் அந்நஹ்தீ(ரஹ்) கூறினார்

இப்னு உமர்(ரலி) அவர்களிடம், 'நீங்கள் உங்கள் தந்தையை விட முன்னதாக ஹிஜ்ரத் செய்து வந்தீர்கள்'' என்று சொல்லப்படும்போது அவர்கள் கோபமுற்றுக் கூறுவார்கள்: 'நானும் (என் தந்தை) உமர்(ரலி) அவர்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ('பைஅத்' எனும் உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்காகச்) சென்றோம். நபி அவர்கள் மதிய ஓய்வெடுத்து (உறங்கி)க் கொண்டிருக்கக் கண்டோம். எனவே நாங்கள் வீட்டிற்குத் திரும்பி விட்டோம். பிறகு உமர்(ரலி) என்னை அனுப்பி, 'நீ போய், அவர்கள் (உறக்கத்திலிருந்து) விழித்தெழுந்துவிட்டார்களா என்று பார்'' என்று கூறினார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (அவர்கள் விழித்திருந்தார்கள். எனவே,) அவர்களிடம் உறுதி மொழி கொடுத்தேன். பிறகு உமர்(ரலி) அவர்களிடம் சென்று நபி(ஸல்) அவர்கள் விழித்தெழுந்துவிட்டார்கள் என்று தெரிவித்தேன். பிறகு நாங்கள் நபி(ஸல்) அவர்களை நோக்கிப் புறப்பட்டு விரைந்தோடிச் சென்றடைந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) உறுதிமொழி கொடுத்தார்கள். பிறகு நானும் (இரண்டாம் முறையாக) உறுதிமொழி கொடுத்தேன். 164

3917. பராஉ(ரலி) அறிவித்தார்

அபூ பக்ர்(ரலி) (என் தந்தை) ஆஸிப்(ரலி) அவர்களிடமிருந்து ஒட்டகச் சேணம் ஒன்றை விலைக்கு வாங்கினார்கள். நான் அவர்களுடன் அதைச் சுமந்து சென்றேன். ஆஸிப்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (ஹிஜ்ரத்) பயணம் குறித்து அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள் கூறினார்கள். 'எங்களின் மீது (எதிரிகளால்) கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. எனவே, நாங்கள் இரவில் புறப்பட்டோம். நாங்கள் நண்பகல் நேரம் வரும் வரை இரவும் பகலும் கண் விழித்துப் பயணித்தோம். பிறகு எங்களுக்குப் பாறை ஒன்று தென்பட்டது. நாங்கள் அதனருகே சென்றோம். அதற்கு ஏதோ கொஞ்சம் நிழல் இருந்தது. நான் அல்லாஹ்வின் தூதருக்காக என்னுடன் இருந்த தோல் ஒன்றை விரித்தேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் அதன் மீது படுத்தார்கள். நான் அவர்களைச் சுற்றிலுமிருந்த புழுதியைத் தட்டிக் கொண்டே சென்றேன். அப்போது (தற்செயலாக) ஓர் ஆட்டிடையனைக் கண்டேன். அவன் தன்னுடைய சிறிய ஆட்டு மந்தை ஒன்றுடன் நாங்கள் நாடிச் சென்ற (அதே பாறை நிழல்)தனை நாடி, அதை நோக்கி வந்து கொண்டிருந்தான். நான் அவனிடம், 'இளைஞனே! நீ யாருடைய பணியாள்?' என்று கேட்டேன். அவன், 'நான் இன்னாரின் பணியாள்'' என்று சொன்னான். நான், 'உன் ஆடுகளிடம் சிறிது பால் இருக்குமா?' என்று கேட்டேன். அவன், 'ஆம்'' என்றான். நான், 'நீ (எங்களுக்குப்) பால் கறந்து தருவாயா?' என்றான். பின்னர், அவன் தன் ஆடுகளில் ஒன்றைப் பிடித்து வந்தான். நான் அவனிடம், 'அதன் மடியை (புழுதி போக) உதறு'' என்று சொன்னேன். பிறகு, 'அவன் சிறிது பாலைக் கறந்தான். என்னிடம் தண்ணீருள்ள தோல்ப் பாத்திரம் ஒன்றிருந்தது. அதில் துண்டுத் துணியொன்று (மூடி) இருந்தது. அதில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காகத் தண்ணீர் வைத்திருந்தேன். அதைப் பால் (பாத்திரத்தின்) மீது அதன் கீழ்ப்பகுதி குளிர்ந்து போகும் வரை ஊற்றினேன். பிறகு அதை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று, 'பருகுங்கள், இறைத்தூதர் அவர்களே!' என்று சொன்னேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நான் திருப்தியடையும் வரை (அதை)ப் பருகினார்கள். பிறகு, எங்களைத் தேடிவந்தவர்கள் எங்கள் தடயத்தைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்க நாங்கள் புறப்பட்டோம். 165

3918. பராஉ(ரலி) அறிவித்தார்

நான் அபூ பக்ர்(ரலி) அவர்களுடன் அவர்களின் வீட்டாரிடம் சென்றேன். அப்போது அவர்களின் மகளான ஆயிஷா(ரலி), காய்ச்சல் கண்டு (படுக்கையில்) படுத்திருந்தார்கள். அவரின் தந்தை(யான அபூ பக்ர் - ரலி அவர்கள்) அவரின் கன்னத்தில் (பாசத்தோடு) முத்தமிட்டு, 'எப்படியிருக்கிறாய்? அருமை மகளே!'' என்று கேட்டதை கண்டேன். 166

3919. நபி(ஸல்) அவர்களின் ஊழியரான அனஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்தார்கள். அப்போது அவர்கள் தம் தோழர்களில் அபூ பக்ர்(ரலி) மட்டுமே கருப்பு - வெள்ளை முடி உடையவர்களாக இருந்தார்கள். அன்னார் மருதாணியாலும், 'கத்தம்' எனும் (ஒரு வகை) இலைச் சாயத்தாலும் தம் (தாடி) முடியைத் தோய்த்து (நரையை) மறைத்துக் கொண்டார்கள்.

3920. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது, அவர்கள் தம் தோழர்களிலேயே அபூ பக்ர்(ரலி) தாம் அதிக வயதுடையவர்களாக இருந்தார்கள். பிறகு, தம் (தாடிமுடியை) அபூ பக்ர்(ரலி) மருதாணியாலும், 'கத்தம்' எனும் இலைச் சாயத்தாலும் தோய்த்து (நரையை) மறைத்துக் கொண்டார்கள். அதனால் அதன் நிறம் கருஞ்சிவப்பாகி விட்டது.

3921. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(என் தந்தை) அபூ பக்ர்(ரலி) 'பனூகல்ப்' குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணமுடித்தார்கள். 'உம்மு பக்ர்' என்று அவருக்குச் சொல்லப்படும். அபூ பக்ர்(ரலி) (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்தபோது அப்பெண்ணை விவாக விலக்கு செய்து விடவே, அவரை அவரின் தந்தையின் சகோதரர் மகன் (மறு) மணம் புரிந்து கொண்டார். அவர்தான் (பத்ருப் போரில்) கொல்லப்பட்டு, பத்ர் பாழுங்கிணற்றில் போடப்பட்ட) குறைஷிக்குல இறை மறுப்பாளர்களுக்காக இந்த இரங்கல் பாவைப் பாடிய கவிஞராவார்.

பத்ரின் பாழுங்கிணற்றுக்கு

(இப்போது)

என்ன களங்கம் நேர்ந்துவிட்டது?

ஒட்டகத் திமில்களால்

அலங்காரிக்கப்பட்ட மரத்தட்டுகளால்

(விருந்தளிக்கும் அதிபர்கள் 167

தூக்கி வீசப்பட்டதால்...)

பத்ரின் பாழுங்கிணற்றுக்கு

என்ன (களங்கமா)

நேர்ந்துவிட்டது?

அழகிய பாடகிகளால்...

மதிப்புக்குரிய

மதுபோதைப்பிரியர்களால்...

(என் காதலி)

உம்முபக்ர் எங்கள்

மனச் சாந்திக்காக

ஆறுதல் சொல்கிறாள்.

என் சமுதாயமே

(சமாதிக்குப்) போன பின்

எனக்கேது மனச்சாந்தி...?

(மரணத்திற்குப் பின்)

நாம் மீண்டும் உயிர்தெழுவோம்

என்கிறார் இறைத்தூதர்!

(ஆனால்,)

ஆந்தைகளும் தேவாங்குகளும்

உயிர் பிழைப்பது எப்படி...? 168

3922. அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்.

(ஹிஜ்ரத் பணயித்தின்போது வழியில்) நபி(ஸல்) அவர்களுடன் நான் ('ஸவ்ர்' மலைக்குகையில் (தங்கி) இருந்தேன். நான் தலையை உயர்த்தியபோது (எங்களைத் தேடி வந்த) கூட்டத்தாரின் பாதங்கள் என் (தலைக்கு) மேலே தெரிந்தன. நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்களில் எவராவது தம் பார்வையைத் தாழ்த்தி (குகைக்குள் உற்று நோக்கி)னால் நம்பை; பார்த்து விடுவாரே! (இப்போது என்ன செய்வது?' என்று சொன்னேன். (நபி(ஸல்) அவர்கள், 'அமைதியாயிருங்கள்; அபூ பக்ரே! (நாம்) இருவர்; நம்முடன் அல்லாஹ் மூன்றாமவன். (அவன் நம்மைக் காப்பாற்றுவான்)'' என்று கூறினார்கள். 169

3923. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்

கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ஹிஜ்ரத் குறித்துக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உனக்கு என்ன கேடு?' (எனச் செல்லமாகக் கேட்டுவிட்டு) நிச்சயமாக அதன் நிலை மிகவும் கடினமானது. உன்னிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அவற்றிற்குரிய ஸகாத் கொடுத்து வருகிறாயா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அவற்றிலிருந்து (இலவசமாகப் பால் கறந்து கொள்ள, ஏழைகளுக்கு) இரவல் கொடுக்கிறாயா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அவை (நீர் நிலைகளுக்கு) நீரருந்தச் செல்லும் (முறை வரும்) நாளில் அவற்றின் பாலைக் கறந்து (ஏழைகளுக்குக்) கொடுக்கிறாயா?' என்று கேட்க அவர், 'ஆம்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், நீ கடல்களுக்கு அப்பால் சென்று கூட வேலை செய்(து வாழலாம்..) அல்லாஹ் உன் நற் செயல்(களின் பிரதிபலன்)களிலிருந்து எதையும் குறைக்க மாட்டான்'' என்று கூறினார்கள். 170

இரண்டு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி 46

நபி(ஸல்) அவர்கள் மற்றும் அவர்களின் தோழர்களின் மதீனா வருகை. 171

3924. பராஉ(ரலி) அறிவித்தார்

எங்களிடம் (மதீனாவுக்கு முஹாஜிராக) முதன் முதலில் வருகை தந்தவர்கள் முஸ்அப் இப்னு உமைர்(ரலி) அவர்களும், இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்களும் தாம். பிறகு எங்களிடம் அம்மார் இப்னு யாசிர்(ரலி) அவர்களும், பிலால்(ரலி) அவர்களும் வந்தனர். 172

3925. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

எங்களிடம் (மதீனாவுக்கு முஹாஜிராக) முதலில் வருகை தந்தவர்கள் முஸ்அப் இப்னு உமைர்(ரலி) அவர்களும் இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்களும் தாம். இவர்கள் மக்களுக்கு (குர்ஆன்) ஓதக் கற்றுக் கொடுத்து வந்தனர். பிறகு பிலால்(ரலி) அவர்களும், ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களும், அம்மார் இப்னு யாசிர்(ரலி) அவர்களும் வருகை தந்தனர். பிறகு உமர்பின் கத்தாப்(ரலி), நபித்தோழர்கள் இருபது பேர் (கொண்ட ஒரு குழு) உடன் வந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள(து வருகையால் மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் பார்க்கவில்லை. எந்த அளவுக்கென்றால் (மதீனாவின்) அடிமைப்பெண்கள், 'இறைத்தூதர் வந்துவிட்டார்கள்'' என்று பாடி (மகிழலா)னார்கள். 'ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா' என்னும் (87-வது) அத்தியாயத்தை, குர்ஆனின் (மற்ற) விரிவான (முஃபஸ்ஸல்) அத்தியாயங்கள் சிலவற்றுடன் நான் (மனப்பாடமாக) ஓதும் வரை நபி(ஸல்) அவர்கள் (மதீனா) வருகை தரவில்லை.

3926. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும் பிலால்(ரலி) அவர்களுக்கும் காய்ச்சல் கண்டிருந்தது. அவ்விருவரிடமும் நான் சென்று, 'என் தந்தையே! எப்படியிருக்கிறீர்கள்? பிலால் அவர்களே! எப்படியிருக்கிறீர்கள்'' என்று கேட்டேன். அபூ பக்ர் அவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும்போது அவர்கள் பின் வரும் கவிதையைக் கூறுவார்கள்:

காலை

வாழ்த்துக் கூறப்பெற்ற

நிலையில்

ஒவ்வொரு மனிதனும்

தம் குடும்பத்தாரோடு

காலைப் பொழுதை அடைகிறான்....

(ஆனால்,)

மரணம் - அவன் செருப்பு வாரை விட

மிக அருகில் இருக்கிறது

(என்பது -

அவனுக்குத் தெரிவதில்லை)

பிலால்(ரலி) காய்ச்சல் நீங்கியதும் வேதனைக்குரல் எழுப்பி,

'இத்கிர்' (நறுமணப்) புல்லும்

'ஜலீல்' (கூரைப்) புல்லும்

என்னைச் சூழ்ந்திருக்க..

(மக்காவின்) பள்ளத்தாக்கில்

ஓர் இராப் பொழுதையேனும்

நான் கழிப்பேனா?...

'மஜின்னா' எனும்

(மக்காவின் இனிப்புச்சுனை) நீரை

ஒரு நாள் ஒரு பொழுதாவது

நான் பருகுவேனா...?

(மக்கா நகரின்)

ஷாமா, தஃபீல் மலைகள்

(இனி எப்போதாவது)

எனக்குத் தென்படுமா?...

என்ற கவிதையைக் கூறுவார்கள்.

உடனே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, (அவர்களின் நிலையைத்) தெரிவித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல் அல்லது அதை விட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு! மேலும் இவ்வூரை ஆரோக்கியமானதாகவும் ஆக்கு! எங்களுடைய (அளவைகளான) 'ஸாவு', 'முத்து' முதலியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ அருள் வளத்தை வழங்கு! இங்குள்ள காய்ச்சலை இடம் பெயரச் செய்து அதை 'ஜுஹ்ஃபா' என்னுமிடத்தில் (குடி) அமர்த்திவிடு'' என்று பிரார்த்திதார்கள். 173

3927. உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னி கியார்(ரஹ்) அறிவித்தார்.

நான் உஸ்மான்(ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி (இறைவனைப் புகழ்ந்து)விட்டு, 'நிற்க, அல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பினான். நான் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்பை ஏற்று முஹம்மத்(ஸல்) அவர்கள் எ(ந்த வேதத்)தைக் கொண்டு அனுப்பப்பட்டார்களோ அதை நான் நம்பி ஏற்றுக் கொண்டேன். பிறகு, (மக்காவைத் துறந்து அபிசீனியாவுக்கும் அடுத்து (மதீனாவுக்குமாக) இரண்டு ஹிஜ்ரத்துகள் செய்தேன். மேலும், நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மருமகனாக இருந்தேன். அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்து (உறுதிமொழி) கொடுத்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும் வரை அவர்களுக்கு நான் மாறு செய்யவுமில்லை; மோசடி செய்யவுமில்லை'' என்று கூறினார்கள்.

''ஸுஹ்ரீ(ரஹ்) எனக்கு இதையே அறிவித்தார்கள்'' என்று இஸ்ஹாக் அல் கல்பீ(ரஹ்) என்னும் அறிவிப்பாளர் கூறுகிறார்கள். 174

3928. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

உமர்(ரலி) செய்த இறுதி ஹஜ்ஜின்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) 'மினா' பெரு வெளியில் தங்கியிருந்த சமயம் தம் (தங்குமிடத்தில் இருந்த) வீட்டாரை நோக்கித் திரும்பினார்கள். அப்போது அவர்கள் என்னைக் கண்டு, '(நான் உமர் - ரலி - அவர்களிடம்) 175 விசுவாசிகளின் தலைவரே! ஹஜ்ஜுப் பருவத்தில் (நன் மக்களுடன்) தரம் தாழ்ந்த மக்களும், (வாய்க்கு வந்தபடி பேசி) குழப்பம் செய்யும் மக்களும் ஒன்று கூடுவர். (எனவே,) தாங்கள் மதீனா சென்றடையும் வரையிலும், (அங்குள்ள) மார்க்க அறிஞர்கள், பிரமுகர்கள், ஆலோசகர்களைப் போய்ச் சேரும் வரையிலும் தாங்கள் நிதானிக்க வேண்டுமென்று கருதுகிறேன். ஏனெனில் மதீனா, ஹிஜ்ரத் பிரதேசமும், நபிவழி (நடைமுறைப்படுத்தப்படும்) நாடும், பாதுகாப்புமிக்க நாடும் ஆகும்'' என்று கூறினேன். அதற்கு உமர்(ரலி), 'இனி, நான் மதீனாவில் (உரை நிகழ்த்த) நிற்கப் போகும் முதல் கூட்டத்திலேயே (இது குறித்து எச்சரிக்க) உறுதியோடு நிற்பேன்'' என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள். 176

3929. காரிஜா இப்னு ஸைத் இப்னி ஸாபித்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்திருந்த அன்சாரிப் பெண்களில் ஒருவரான (என் தாயார்) உம்முல் அலா(ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்.

(மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த) முஹாஜிர்களின் தங்குமிடத்தி(னை முடிவு செய்வதற்)காக அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது, உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்களின் பெயர் எங்கள் பங்கில் வந்தது. எங்களிடம் (வந்து தங்கிய) உஸ்மான்(ரலி) நோய் வாய்ப்பட்டார். எனவே, அவருக்கு நான் நோய்க் காலப் பணிவிடைகள் செய்து வந்தேன். இறுதியில் அவர் இறந்தும்விட்டார். அவருக்கு அவரின் துணிகளால் கஃபனிட்டோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். நான் (இறந்த உஸ்மானை நோக்கி) 'அபூ சாயிபே! அல்லாஹ்வின் கருணை உங்களின் மீது உண்டாகட்டும்! அல்லாஹ் உங்களைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்பதற்கு நான் சாட்சியம் பகர்கிறேன்'' என்று கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அவரை கண்ணியப்படுத்திவிட்டான் என்று உனக்கெப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள். நான், 'எனக்குத் தெரியாது. என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும், இறைத்தூதர் அவர்களே! (அல்லாஹ் இவரை கண்ணியப்படுத்தாவிட்டால் பின்) யாரைத் தான் (கண்ணியப்படுத்துவான்)'' என்று நான் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'இவருக்கோ மரணம் வந்துவிட்டது; அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னிடம் (மறுமையில்) எப்படி நடந்து கொள்ளப்படும் என்பதே அல்லாஹ்வின் மீதாணையாக எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள். (இதைக்கேட்ட) நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இவருக்குப் பிறகு எவரையும் நான் தூய்மையானவர் என்று கூறமாட்டேன்'' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், இப்படிச் சொன்னது எனக்குக் கவலையளித்தது. பிறகு, நான் தூங்கியதும் (கனவில்) உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்களுக்குரிய ஓர் ஆறு (சொர்க்கத்தில்) ஓடிக் கொண்டிருப்பதாகக் கண்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தேன். நபி(ஸல்) அவர்கள், 'அது அவரின் (நற்) செயல்'' என்று கூறினார்கள். 177

3930. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

'புஆஸ்' போர் நாள், தன் தூதருக்காக அல்லாஹ் (சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில்) முன் கூட்டியே நிகழச் செய்த நாளாக அமைந்தது. (அந்தப் போரின் காரணத்தால்) மதீனாவாசிகளின் கூட்டமைப்பு (குலைந்து) பிளவுபட்டிருந்த நிலையிலும், அவர்களில் முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்பட்டு விட்டிருந்த நிலையிலும் அவர்கள் இஸ்லாத்தில் இணைய ஏதுவான நிலை உருவாகியிருந்தபோது தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனா வந்தார்கள். 178

3931. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஈதுல் பித்ர்... அல்லது ஈதுல் அள்ஹா... (பெரு) நாளில் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் அமர்ந்திருந்தபோது அபூ பக்ர்(ரலி) என்னிடம் வந்தார்கள். அப்போது 'புஆஸ்' போர் நாளில் அன்சாரிகள் பாடிய பாடல்களை (சலங்கையில்லா கஞ்சிராவை அடித்துக் கொண்டு) பாடியபடி இரண்டு பாடகிகள் என்னருகே இருந்தனர். அபூ பக்ர்(ரலி), 'ஷைத்தானின் (இசைக்) கருவி'' என்று இருமுறை கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவ்விருவரையும்விட்டுவிடுங்கள், அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பண்டிகை (நாள்) ஒன்று உண்டு. நம்முடைய பண்டிகை (நாள்) இந்த நாள் தான்'' என்று கூறினார்கள். 179

3932. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) வந்தபோது மதீனாவின் மேற்பகுதியில் 'பனூ அம்ர் இப்னு அவ்ஃப்' என்றழைக்கப்பட்டு வந்த ஒரு குடும்பத்தாரிடம் இறங்கி, அவர்களிடையே பதினான்கு நாள்கள் தங்கினார்கள். பிறகு பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு ஆளனுப்பினார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தார் (நபியவர்களை வரவேற்கும் முகமாக) தம் வாட்களைத் தொங்கவிட்டபடி வந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வாகனத்தில் அமர்ந்திருக்க, அபூ பக்ர்(ரலி), அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்க, பனூ நஜ்ஜார் கூட்டத்தார் அவர்களைச் சுற்றிலும் குழுமியிருந்த (அந்தக் காட்சி) தனை (இப்போதும்) நான் காண்பதைப் போன்றுள்ளது. இறுதியாக, நபி(ஸல்) அவர்கள் (தம் வாகனத்தை) அபூ அய்யூப் அன்சாரி(ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் நிறுத்தினார்கள். - தொழுகை நேரம் (தம்மை) வந்தடையும் இடத்திலேயே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள். ஆட்டுத் தொழுவங்களிலும் தொழுவார்கள் - பிறகு நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசல் கட்டும்படி உத்தரவிட்டார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு நபி(ஸல்) அவர்கள் ஆளனுப்ப, அவர்கள் வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! (பள்ளிவாசல் கட்டுவதற்காக) உங்களின் இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள்'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம்'' என்று பதிலளித்தார்கள். நான் உங்களிடம் சொல்பவை தாம் அந்தத் தோட்டத்தில் இருந்தன அதில் இணைவைப்பவர்களின் மண்ணறைகள் இருந்தன. அதில் இடிபாடுகளும், சில பேரீச்ச மரங்களும் இருந்தன. எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், இணைவைப்போரின் மண்ணறை களைத் தோண்டும்படி உத்தரவிட அவ்வாறே அவை தோண்டப்பட்டன. இடிபாடுகளை (அகற்றிச்) சமப்படுத்தும்படி உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப்பட்டன. பேரீச்ச மரங்களை வெட்டும்படி உத்தரவிட அவ்வாறே அவை வெட்டப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லா திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர். பள்ளிவாசலின் (கதவின்) இரண்டு நிலைக்கால்களாக கல்லை (நட்டு) வைத்தனர். 'ரஜ்ஸ்' எனும் ஒருவித யாப்பு வகைப் பாடலைப் பாடிக் கொண்டே அந்தக் கல்லை எடுத்து வரலாயினர். அப்போது அவர்களுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் இருந்தார்கள். 'இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை கிடையாது; எனவே, (மறுமை வெற்றிக்காகப் பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் உதவி செய்!'' என்று அவர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். 180.

பகுதி 47

முஹாஜிர் தம் (ஹஜ் அல்லது உம்ரா) வழிபாடுகளை நிறைவேற்றிய பின்பு மக்காவில் தங்குவது.

3933. அப்துர் ரஹ்மான் இப்னு ஹுமைத் அஸ் ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்

நமிர் அல் கிந்தீயின் சகோதரி மகனான சாயிப் இப்னு யஸீத்(ரலி) அவர்களிடம் உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்), 'முஹாஜிர், (ஹஜ் வழிபாடுகளை நிறைவேற்றிவிட்டு மினாவிலிருந்து வந்த பிறகு) மக்காவில் தங்குவது பற்றி நீங்கள் என்ன செவியுற்றிருக்கிறீர்கள்?' என்று வினவினார்கள். அதற்கு சாயிப் (ரலி) அவர்கள், “மினாவிலிருந்து வந்த பின்பு மூன்று நாட்கள் (மக்காவில் தங்க) முஹாஜிருக்கு அனுமதியுண்டு' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அலா பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்” என்று பதிலளித்தார்கள். 181

பகுதி 48

ஆண்டுக்கணக்கு; மக்கள் எப்போதிருந்து இஸ்லாமிய ஆண்டுக் கணக்கை ஆரம்பித்தார்கள். 182

3934. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

மக்கள் (ஆண்டுக்கணக்கை) நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட (அவர்களின் 40-ம் வய)திலிருந்தோ அவர்களின் மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை; மதீனாவுக்கு நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள்.

3935. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(மக்காவில் தொழுகை இரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கப்பட்டது. பிறகு நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பின் நான்கு ரக்அத்துக்களாகக் கடமையாக்கப்பட்டது. மேலும், பயணத் தொழுகை மட்டும் முன்பு கடமையாக்கப்பட்டிருந்தவாறே (இரண்டு ரக்அத்தாகவே இருக்கட்டுமென்று)விட்டு விடப்பட்டது. 183

இதே ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி 49

''இறைவா! என் தோழர்கள் தங்களின் ஹிஜ்ரத்தை முழுமையாக நிறைவேற்றும்படி செய்'' என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தும், (தம் தோழர்களில் ஹிஜ்ரத் செய்ய இயலாமல்) மக்காவிலேயே இறந்துவிட்டவர்களைக் குறித்து நபி(ஸல்) அவர்கள் இரங்கல் தெரிவித்ததும்.

3936. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்

'விடை பெறும்' ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த என்னை (நலம்) விசாரிக்க வந்தார்கள். அந்த நோயினால் நான் இறப்பின் விளிம்புக்கே சென்று விட்டிருந்தேன். (நபி-ஸல்) அவர்களைக் கண்டதும்) நான், 'இறைத்தூதர் அவர்களே! நான் ஒரு செல்வந்தன்' எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசு) எவரும் இல்லை. இந்நிலையில் நீங்கள் பார்க்கிற வேதனை என்னை வந்தடைந்துவிட்டது. எனவே, நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'வேண்டாம்'' என்று கூறினார்கள். நான், 'அப்படியென்றால் அதில் பாதியை தர்மம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'மூன்றிலொரு பங்கு (போதும்) சஅதே! மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதை விடத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் உங்களுக்கு அளித்தே தீருவான்; உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும் ஒரு கவளம் உணவாயினும் சரியே'' என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! என் தோழர்கள் (எல்லாரும் மதீனாவுக்குச்) சென்றுவிட்ட பிறகு நான் (மட்டும், இங்கே மக்காவில்) பின் தங்கிவிடுவேனா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நீங்கள் (இங்கு) பின் தங்கியிருந்து அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீங்கள் புரியும் நற்செயல் எதுவாயினும் அதனால் உங்களுக்கு அந்தஸ்தும் உயர்வும் அதிகமாகவே செய்யும். சில சமுதாயத்தார் உங்களால் பலனடைவதற்காகவும் வேறு சிலர் இழப்புக்குள்ளாவதற்காகவும் (உங்கள் ஆயுள் நீட்டிக்கப்பட்டு இங்கேயே) நீங்கள் பின்தங்கி விடக்கூடும்'' சொல்லிவிட்டு, 'இறைவா! என் தோழர்கள் தங்கள் ஹிஜ்ரத்தை முழுமையாக நிறைவேற்றும்படிச் செய். அவர்களைத் தம் கால்சுவடுகளின் வழியே (பழைய அறியாமைக் கால நிலைக்குத்) திருப்பியனுப்பி விடாதே'' என்று பிரார்த்தித்தார்கள். மேலும், 'ஆயினும் ஸஅத் இப்னு கவ்லா தான் பாவம்'' என்று கூறினார்கள். ஸஅத் இப்னு கவ்லா(ரலி) மக்காவிலேயே இறந்துவிட்டதற்காக இரங்கல் தெரிவிக்கும் விதத்தில் தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள். 184

இதன் அறிவிப்பாளர் இப்ராஹீம் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பாளரான அஹ்மத் இப்னு யூனுஸ்(ரஹ்) (உன் வாரிசுகளை என்பதற்கு பதிலாக) 'உன் சந்ததிகளை ஏழைகளாக நீ விட்டுச் செல்வது'' என்று (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என) அறிவித்தார்கள்.

பகுதி 50

நபி(ஸல்) அவர்கள் தம் (முஹாஜிர் மற்றும் அன்சார்) தோழர்களிடையே எப்படிச் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்? 185

''நாங்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) வந்தபோது நபி(ஸல்) அவர்கள், எனக்கும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களுக்குமிடையே சகோதர உறவை ஏற்படுத்தினார்கள்'' என்று அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) கூறினார். 186

''நபி(ஸல்) அவர்கள், சல்மான் (ஃபாரிஸீ (ரலி) அவர்களுக்கும் அபுத்தர்தா(ரலி) அவர்களுக்கிடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள்'' என்று அபூ ஜுஹைஃபா(ரலி) கூறினார். 187

3937. அனஸ்(ரலி) அறிவித்தார்

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (ஹிஜ்ரத் செய்து) மதீனா வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவருக்கும் ஸஅத் இப்னு ரபீஉஅல் அன்சாரிக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். ஸஅத் இப்னு ரபீஉ(ரலி), தம் குடும்பத்தாரையும் தம் செல்வத்தையும் அவருக்கு சரிபாதியாகப் பங்கிட்டுத் தருவதாகக் கூறினார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டாரிலும் செல்வத்திலும் அருள்வளத்தை வழங்குவானாக! எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்'' என்று கூறினார்கள். (அவ்வாறே அவர் கடை வீதியைக் காட்ட அங்கு வியாபாரம் செய்து) சிறிது பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்றார்கள். சில நாள்களுக்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் அவர்களின் மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள் அடையாளத்தைக் கண்டு (வியந்து,) 'என்ன இது, அப்துர் ரஹ்மான்!'' என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நான் அன்சாரிப் பெண்ணொருவரை மணம் புரிந்து கொண்டேன்''என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவளுக்கு (மஹ்ராக) என்ன கொடுத்தாய்?' என்று கேட்க, 'ஒரு பேரீச்சங் கொட்டையளவு தங்கம்'' என்று அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) பதிலளித்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'ஓர் ஆட்டை அறுத்தாவது வலீமா மண விருந்து கொடு'' என்று கூறினார்கள். 188

பகுதி 51

3938. அனஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி (யூத மதத்தில் இருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்களுக்கு எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து சில விஷயங்களைக் குறித்துக் கேட்டார். 'தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்'' என்று கூறினார். பிறகு, '1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாயலிலோ, தன் தாயின் சாயலிலோ இருப்பது எதனால்?' என்று கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள், 'சற்று முன்பு தான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்'' என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், 'ஜிப்ரீல் தான் வானவர்களிலேயே யூதர்களுக்குப் பகைவராயிற்றே!'' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்றுதிரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்பயான சதையாகும். குழந்தை(யிடம் காணப்படும் தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது'' என்று பதிலளித்தார்கள். (உடனே) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், தாங்கள் இறைத்தூதர் தாம் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்'' என்று கூறினார்கள். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். எனவே, நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட செய்தியை அவர்கள் அறிவதற்கு முன்னால் தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்'' என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் (நபி - ஸல் - அவர்களிடம்) வந்தார்கள். (உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) வீட்டினுள் புகுந்து (மறைந்து) கொண்டார்கள்.) நபி(ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), 'உங்களில் அப்துல்லாஹ் இப்னு சலாம் எத்தகைய மனிதர்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் மகனும் ஆவார்; எங்களில் சிறந்தவரும், சிறந்தவரின் மகனும் ஆவார்'' என்று பதிலளித்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு சலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!'' என்று கூறினார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் முன்பு போன்றே கேட்டார்கள். அதற்கு அவர்கள் முன்பு போன்றே பதிலளித்தார்கள். உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் வெளியே வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்'' என்று கூறினார்கள். உடனே யூதர்கள், 'இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்''என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) குறை கூறலானார்கள். (அவற்றைக் கேட்ட) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், 'இதைத் தான் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள். 189

3939 / 3940 அப்துர் ரஹ்மான் இப்னு முத்யிம்(ரஹ்) அறிவித்தார்

என் கூட்டாளி ஒருவர், சில திர்ஹம்களைக் கடைவீதியில் தவணைக்கு விற்றார். நான் (வியப்படைந்து), 'சுப்ஹானல்லாஹ்! இது சரியாகுமா? (இப்படி விற்க அனுமதியுள்ளதா?)'' என்று கேட்டேன். அதற்கு அவர், 'சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ்வின் மீதாணையாக! அதை நான் கடைவீதியில் தான் விற்றேன். அதை எவரும் குறை கூறவில்லை'' என்று பதிலளித்தார். உடனே நான் பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்களிடம் கேட்டேன் அதற்கு அவர்கள், 'நாங்கள் இந்த வியாபாரத்தை (இந்த முறையில்) செய்து வந்தபோது நபி(ஸல்) அவர்கள் (மதீனா) வந்தார்கள். 'கையோடு கையாக - (உடனுக்குடன்) செய்யும் வியாபாரம் குற்றமில்லை. கடனுக்கு விற்பதாக இருந்தால் சரியில்லை' என்று கூறினார்கள்'' என்று கூறிவிட்டு, 'ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களை நீ சந்தித்துக் கேள். ஏனென்றால், அவர்தான் நம்மில் மிகப் பெரிய வியாபாரி'' என்று கூறினார்கள். அவ்வாறே ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களைச் சந்தித்து கேட்டேன். அவர்களும் பராஉ(ரலி) சொன்னதைப் போன்றே கூறினார்கள். 190

(இதை சிறிய மாற்றத்துடன்) அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) ஒரு முறை (பின்வருமாறு) கூறினார்கள்.

நாங்கள் இந்த வியாபாரத்தைச் செய்து வந்தபோது நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தார்கள். ஹஜ் காலம் வரை கடனுக்கு (விற்பதாக இருந்தால் சரியில்லை) என்று கூறினார்கள் என பராஉ இப்னு ஆஸிப்(ரலி) தெரிவித்தார்கள்.

பகுதி 52

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது யூதர்கள் அவர்களிடம் வருதல் 191

(குர்ஆனில் 5:41-வது வசனத்தில் வரும்) 'ஹாதூ' என்னும் (அரபுச்) சொல்லுக்கு 'யூதர்களாக மாறிவிட்டார்கள்' என்று பொருள். (குர்ஆனில் 7:156-வது வசனத்தில் வரும்) 'ஹுத்னா' என்பதற்கு, 'நாங்கள் பாவமன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் திரும்பினோம்' என்றும் 'ஹாயித்' என்பதற்கு 'பாவமன்னிப்புக் கோரி (இறைவனிடம் திரும்பி)யவன்' என்றும் பொருள்.

3941. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

யூதர்களில் (முக்கியப் பிரமுகர்கள்) பத்துப் பேர் என் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்களாயின், யூதர்கள் (அனைவருமே) என் மீது நம்பிக்கை கொண்டிருந்திருப்பார்கள். 192

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

3942. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மதீனா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது யூதர்களில் சிலர் (முஹர்ரம் மாதம் 10ஆம் நாளான) ஆஷூரா நாளைக் கண்ணியப்படுத்தி அதில் நோன்பு நோற்றுவந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'அந்த நாளில் நோன்பு நோற்க நாமே அதிக உரிமையுடையவர்கள்'' என்று சொல்லி அந்த நாளில் நோன்பு நோற்கும் படி (முஸ்லிம்களுக்கு) உத்தரவிட்டார்கள். 193

3943. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது யூதர்கள் (முஹர்ரம் 10-ஆம் நாளான) ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். யூதர்களிடம் அதுபற்றிக் கேட்கப்பட்டபோது அவர்கள், 'இந்த நாள் தான் ஃபீர்அவ்னுக்கெதிராக மூஸா(அலை) அவர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் அல்லாஹ் வெற்றியளித்த நாள். எனவே, நாங்கள் மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அதில் நோன்பு நோற்கிறோம்'' என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்திட நாங்களே அதிக உரிமையுடையவர்கள்'' என்று சொல்லிவிட்டு அந்நாளில் (தாமும் நோன்பு நோற்று) நோன்பு நோற்கும்படி (முஸ்லிம்களுக்கு) உத்தரவிட்டார்கள். 194

3944. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் தம் (முன் தலை) முடியைத் (தம் நெற்றியின் மீது) தொங்கவிட்டு வந்தார்கள். இணை வைப்பவர்கள் தங்கள் தலை(முடி)களைப் பிரித்து (நெற்றியில் விழவிடாமல் இரண்டு பக்கமும் தொங்கவிட்டு) வந்தார்கள். வேதக்காரர்கள் தங்கள் தலை (முடி)களைக் (தம் நெற்றிகளின் மீது) தொங்கவிட்டு வந்தார்கள். எந்த விஷயங்களில் (இறைக்) கட்டளை எதுவும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக் காரர்களுடன் ஒத்துப் போவதை நபி(ஸல்) அவர்கள் விரும்பி வந்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தம் தலை(முடி)யை (இரண்டு பக்கங்களிலும்) பிரித்து (வம்டெடுத்து)க் கொண்டார்கள். 195

3945. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

அந்த வேதக்காரர்கள் (எத்தயைவர்கள் எனில், குர்ஆன் எனும்) அதனைப் பல பகுதிகளாகப் பிரித்துக் கொண்டார்கள். அதில் சிலவற்றை நம்பி ஏற்று, சிலவற்றை ஏற்க மறுத்துவிட்டார்கள்.

பகுதி 53

சல்மான் அல் ஃபாரிஸீ - ரலி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது. 196

3946. அபூ உஸ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அறிவித்தார்

சல்மான் அல் ஃபாரிஸீ(ரலி), 'நான் ஓர் எஜமானிடமிருந்து இன்னோர் எஜமானாகப் பத்துக்கு மேற்பட்ட எஜமானர்களின் கைக்கு (விற்கப்பட்டு) மாறிக் கொண்டிருந்தேன்'' என்று கூறினார்கள். 197

3947. சல்மான் அல் ஃபாரிஸீ(ரலி) அறிவித்தார்

நான் 'ராம ஹுர்முஸ்' என்னுமிடத்திலிருந்து வந்தவன். 198

3948. சல்மான் அல் ஃபாரிஸீ(ரலி) அறிவித்தார்

ஈசா(அலை) அவர்களுக்கும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்குமிடையிலுள்ள காலம் ஆறு நூறாண்டுகளாகும்.
Previous Post Next Post