அத்தியாயம் 2 ஈமான் எனும் இறைநம்பிக்கை

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 2
ஈமான் எனும் இறைநம்பிக்கை


அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பகுதி 1

''இஸ்லாம் ஐந்தின் மீது நிறுவப்பட்டுள்ளது'' என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று

நம்பிக்கை என்பது சொல்லும் செயலுமாகும். அது கூடலாம் குறையலாம். (இதற்கான ஆதாரங்கள் வருமாறு:)

அல்லாஹ் கூறினான்:

''தம் நம்பிக்கையுடன் அவர்கள் (மேலும்) நம்பிக்கையை அதிகமாக்குவதற்காக...'' (திருக்குர்ஆன் 48:04)

அல்லாஹ் கூறினான்:

''நாம் அவர்களுக்கு (அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும்) நேர்வழியை அதிகமாக்கினோம்.'' (திருக்குர்ஆன் 18:13)

அல்லாஹ் கூறினான்:

''(ஈமான் எனும் இறைநம்பிக்கையின் மூலம்) நேர்வழி பெற்றவர்களுக்கு நேர்வழியை (மேலும்) அல்லாஹ் அதிகமாக்குகிறான்.'' (திருக்குர்ஆன் 19:76)

அல்லாஹ் கூறினான்:

(ஈமான் எனும் இறைநம்பிக்கையின் மூலம்) நேர்வழியடைந்தவர்களுக்கு (அல்லாஹ் மேலும்) நேர்வழியை அதிகமாக்குகிறான். மேலும் அவர்களுக்கு அவர்களின் இறையச்சத்தையும் வழங்குகிறான்'' (திருக்குர்ஆன் 47:17)

''இறைநம்பிக்கையாளர்கள் தங்களின் நம்பிக்கையை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக...'' (திருக்குர்ஆன் 74:31)

அல்லாஹ் கூறினான்:

''ஏதேனும் ஓர் அத்தியாயம் அருளப்பட்டால் 'இது நம்பிக்கையை யாருக்கு அதிகரிக்கும்?' என்று (கிண்டலாக) கேட்பவர்களும் (நயவஞ்சகர்களான) அவர்களில் உண்டு. நம்பிக்கை கொண்டிருபோருக்கு அது நம்பிக்கையை அதிகமாக்கும்'' (திருக்குர்ஆன் 09:124)

''(உங்கள் பகைவர்களான) அவர்களை அஞ்சிக் கொள்ளுங்கள் என்று (சில) மக்கள் யாரிடம் கூறினார்களோ அவர்களுக்கு நம்பிக்கையை அல்லாஹ் அதிகரித்தான்.'' (திருக்குர்ஆன் 03:173)

அல்லாஹ் கூறினான்:

''அது அவர்களின் நம்பிக்கையையும் அர்ப்பணிக்கும் தன்மையையும் தவிர (வேறெதனையும்) அதிகமாக்கிடவில்லை'' (திருக்குர்ஆன் 33:22)

மேலும் அல்லாஹ்வுக்காக (ஒருவரை) நேசிப்பதும் அல்லாஹ்வுக்காக (ஒருவரை) கோபிப்பதும் நம்பிக்கையைச் சார்ந்ததுதான். (என்பது ஒரு நபி மொழியின் கருத்தாகும்).

உமர் இப்னு அப்தில் அஸீஸ் (தங்களின் ஆளுநர்) அதி இப்னு அதி என்பவருக்கு எழுதியதாவது: 'ஈமானுக்குச் சில கடமைகளும் சில சட்ட திட்டங்களும் சில வரையறைகளும் சில நியதிகளும் (ஸுன்னத்களும்) உள்ளன. எனவே அவற்றை முழுமையாக நிறைவேற்றுகிறவர் (தம்) நம்பிக்கையை முழுமைப்படுத்தியவராவார். அவற்றை முழுமையாக நிறைவேற்றாதவர் (தம்) நம்பிக்கையை முழுமைப்படுத்திக் கொள்ளவில்லை. நான் (மேலும் சில காலம் இவ்வுலகில்) வாழ்வேனானால் நீங்கள் (அதன் படி) செயல்படுவதற்காக அவற்றை உங்களுக்கு விளக்குவேன். (ஒரு வேளை) நான் அதற்குள் இறந்துவிட்டால் (காலமெல்லாம்) நான் உங்களுடனேயே இருக்க வேண்டுமென்ற பேராசை பிடித்தவனல்லன்'.

இப்ராஹீம்(அலை) அவர்கள் கூறினார்கள் என அல்லாஹ் கூறினான்: '...என்றாலும் என் உள்ளம் அமைதி பெறுவதற்காகவே (இறந்தவர்களை உயிர்ப்பிக்கச் செய்து காட்டுமாறு உன்னிடம் வேண்டினேன்)'' (திருக்குர்ஆன் 02:260)

(அஸ்வத் இப்னு ஹிலால் என்ற நபித் தோழரிடம்) முஆது(ரலி) கூறினார். 'எம்முடன் நீங்களும் அமருங்கள். நாம் சிறிது நேரம் ஈமான் கொள்வோம்'.

''யகீன் (சந்தேகமற்ற நிலை) என்பது முழுமையான நம்பிக்கையாகும்.'

'தம் நெஞ்சில் (இது தவறாக இருக்குமோ என்று) உறுத்துவதைக் கூடவிட்டு விடும் வரை உண்மையான இறையச்சத்தை ஓர் அடியான் அடைய முடியாது'' என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.

''நூஹுக்கு உபதேசித்த மார்க்கத்தையே அவன் உங்களுக்கும் விதியாக்கியுள்ளான்.'' (திருக்குர்ஆன் 42:13) என்ற குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் தரும்போது, 'முஹம்மதே! உமக்கும் (நூஹ் நபியாகிய) அவருக்கும் நாம் ஒரே மார்க்கத்தையே உபதேசித்திருக்கிறோம்' என்று இறைவன் நபி(ஸல்) அவர்களை நோக்கிக் கூறினான்'' என முஜாஹித்(ரஹ்) கூறினார்.

''உங்களில் ஒவ்வொருவருக்கும் நாம் ஒரு ஷாபிஅத்தையும் ஒரு மின்ஹாஜையும் ஏற்படுத்தியிருக்கிறோம்.'' (திருக்குர்ஆன் 05:48) என்ற இறைவசனத்திற்கு, 'முன்சென்ற சமுதாயத்தினருக்கு மார்க்கத்தின் துணைப் பிரிவுச் சட்டங்களில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு வழியையும் பாதையையும் ஏற்படுத்தியிருக்கிறோம்'' என இப்னு அப்பாஸ்(ரலி) விளக்கம் கூறினார்.

பகுதி 2

(திருக்குர்ஆன் 25:77வது வசனத்தில் கூறப்பட்டுள்ள) உங்களின் துஆ என்பதன் கருத்து உங்களின் ஈமான் என்பதாகும்.

8. 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 3

ஈமான் எனும் இறைநம்பிக்கையின் காரியங்கள்.

அல்லாஹ் கூறினான்:

''மேற்குப் பக்கமோ கிழக்குப் பக்கமோ உங்களின் முகங்களை நீங்கள் திருப்புவது மட்டும் நன்மையாகாது. எனினும், அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், தூதர்களையும் நம்பித் தம் செல்வத்தை, விருப்பத்திற்குரியதாயினும் அதை (அல்லாஹ்வுக்காக) உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும் பரம ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், அடிமை (விடுதலை)க்கும் வழங்கி, தொழுகையையும் நிலைநிறுத்தி, ஸகாத்தும் கொடுத்து வரும்வோரும், உடன்படிக்கை செய்தால் அதை நிறைவேற்றுவோரும் வறுமையிலும், சிரமங்களிலும் நோய் நொடிகளிலும் யுத்தத்தின் கடுமையிலும் பொறுமையைக் கடைபிடித்தவர்களும் செய்யும் நன்மையே நன்மையாகும். இவர்களே நேர்மையாய் வாழ்ந்தவர்கள். மேலும் இவர்களே இறையச்சமுடையவர்கள்.'' (திருக்குர்ஆன் 02:177)

மேலும் அல்லாஹ் கூறினான்: 'தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருக்கும் இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்'' (திருக்குர்ஆன் 23: 1,2)

9. 'ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 4

''பிற முஸ்லிம்களுக்குத் தம் நாவினாலும் கையினாலும் தொல்லை தராதவரே முஸ்லிம்''

10. 'பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 5

இஸ்லாத்தில் சிறந்தது எது?

11. 'இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு 'எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

பகுதி 6

உணவளிப்பதும் இஸ்லாத்தின் ஓரம்சம்

12. 'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 7

''ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்புவது ஈமான் எனும் நம்பிக்கையைச் சேர்ந்ததே''

13. 'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 8

நபி(ஸல்) அவர்களை நேசிப்பது ஈமாம் எனும் இறைநம்பிக்கையில் ஓரம்சம்.

14. 'என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

15. 'உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 9

ஈமாம் எனும் இறைநம்பிக்கையின் சுவை.

16. 'எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 10

அன்சாரிகளை நேசிப்பது ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சம்.

17. 'ஈமான் எனும் இறைநம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 11

18. 'அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை திருடுவதில்லை விபச்சாரம் செய்வதில்லை உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களில், (அவற்றை) நிறைவேற்றுகிறவரின் நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையாவது ஒருவர் செய்து, (அதற்காக) இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாகி விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். அவன் நாடினால் அவரை மன்னிப்பான் அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றித் தோழர்களில் ஒரு குழு அமர்ந்திருக்கும்போது கூறினார்கள்.

உடனே நாங்களும் அவ்வாறு நடப்போம் என்று அவர்களிடம் உறுதிமொழி எடுத்தோம்'' என பத்ருப் போரில் பங்கெடுத்தவரும் அகபா உடன்பாடு நடந்த இரவில் பங்கெடுத்த தலைவர்களில் ஒருவருமான உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.

பகுதி 12

குழப்பங்களைவிட்டு ஒதுங்கிவிடுவது மார்க்கத்தின் ஓரம்சம்.

19. 'ஒரு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அன்று முஸ்லிமின் செல்வங்களில் ஆடுதான் சிறந்தது. குழப்பங்களிலிருந்து மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஆட்டைக் கூட்டிக் கொண்டு அவன் மலைகளின் உச்சியிலும் மழை பெய்யும் இடங்களிலும் சென்று வாழ்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

பகுதி 13

''நான் உங்கள் அனைவரிலும் இறைவனைப் பற்றி மிக அதிகமாக அறிந்தவன்'' என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று.

(அல்லாஹ்வைப் பற்றி) அறிதல் என்பது உள்ளத்தின் செயலே!

ஏனெனில் அல்லாஹ் கூறினான்: 'வேடிக்கையாகச் செய்துவிடும் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் (குற்றம்) பிடிக்க மாட்டான் எனினும் உங்கள் உள்ளங்கள் (உறுதியுடன்) செய்பவற்றிற்காகவே உங்களை அவன் குற்றம் பிடிப்பான்''

20. 'நல்லவற்றை(ச் செய்யுமாறு) நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டால் அத்தோழர்களால் இயன்ற செயல்களையே ஏவுவார்கள். இதனை அறிந்த நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தங்களின் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான். ஆனால், எங்கள் நிலையோ தங்களின் நிலையைப் போன்றதன்று' என்றார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முகத்தில் கோபத்தின் அறிகுறி தெரியும் அளவு கோபப்பட்டார்கள். பின்னா, 'நிச்சயமாக உங்கள் அனைவரையும் விட நான் அல்லாஹ்வை நன்கு அறிந்தவனும் அவனை அதிகம் அஞ்சுபவனுமாவேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பகுதி 14

நெருப்பில் எறியப்படுவதை வெறுப்பது போல் ஒருவர் இறைமறுப்பின் பால் திரும்புவதை வெறுப்பது ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சம்.

21. 'எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியராவது ஒருவர் மற்றொரு வரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது குப்ரிலிருந்து அல்லாஹ் அவரை விடுத்த பின், நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 15

இறை நம்பிக்கையாளர்களிடையே செயல்களில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள்.

22. '(மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்க வாசிகள் சொர்க்கத்திலும் நரக வாசிகள் நரகத்திலும் நுழைந்து விடுவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் எனும் இறைநம்பிக்கை இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு 'ஹயாத்' என்ற ஆற்றில் போடப்படுவார்கள். இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக், ஆற்றின் பெயர் 'ஹயா' என்று நபி(ஸல்) கூறினார்களோ என்று சந்தேகப்படுகிறார்... அவ்வாறு அவர்கள் அந்த ஆற்றில் போடப்பட்டதும் பெரும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் விதைகள் முளைப்பது போன்று பொலிவடைவார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறமாக இருப்பதை நீர் பார்த்ததில்லையா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

(குறிப்பு:) இதே ஹதீஸை உஹைப் அறிவிக்கும்போது (ஹயா அல்லது ஹயாத் என்று) சந்தேகத்தோடு அறிவிக்காமல் 'ஹயாத்' என்னும் ஆறு என்று உறுதியாகக் குறிப்பிடுகிறார். மேலும் கடுகளவேனும் ஈமான் எனும் இறைநம்பிக்கை என்பதற்குப் பதிலாகக் கடுகளவேனும் நன்மை என்ற வார்த்தையையும் குறிப்பிடுகிறார்.

23. 'நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன் இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்? எனக் கேட்டதற்கு 'மார்க்கம்' ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்'' என அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பகுதி 16

வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சம்.

24. 'அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 17

''(அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கும்) அவர்கள் பாவமன்னிப்புக் கோரி, தொழுகையையும் நிலைநிறுத்தி ஜகாத்தையும் வழங்கி வந்தால் அவர்களை அவர்களின் வழியில்விட்டு விடுங்கள்'' என்ற வசனம். (திருக்குர்ஆன் 09:05)

25. 'மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி18

ஈமான் எனும் இறைநம்பிக்கை என்றாலே நற்செயல் என சிலர் வாதிடுகிறார்கள்.

ஏனெனில், அல்லாஹ் கூறினான்: 'இதுதான் நீங்கள் (உலகில்) செய்து கொண்டிருந்ததற்காக உங்களுக்கு வழங்கப்பட்ட சொர்க்கமாகும்.'' (திருக்குர்ஆன் 43:72)

உம்முடைய இறைவன் மீது ஆணையாக அவர்கள் அனைவரிடமும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி விசாரிப்போம்''(திருக்குர்ஆன் 15:92) என்ற இறைவசனத்திற்கு விளக்கம் தரும்போது அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி'' என்பதற்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவைப் பற்றி விசாரிப்போம்' என்று இஸ்லாமிய அறிஞர்களில் பலர் விளக்கம் கூறினார்கள். சுவர்க்கத்திலுள்ள பேறுகளைப் பற்றி அல்லாஹ் கூறிவிட்டு இது போன்றவற்றிற்காகவே (உலகில்) செயல்படுபவர்கள் செயல்படட்டும்'' என்று கூறுகிறான். (திருக்குர்ஆன் 37:61)

26. 'செயல்களில் சிறந்தது எது?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது' என்றார்கள். 'பின்னர் எது?' என வினவப்பட்டதற்கு, 'இறைவழியில் போரிடுதல்' என்றார்கள். 'பின்னர் எது?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அங்கீகரிக்கப்படும் ஹஜ்' என்றார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி : 19

மனப்பூர்வமாக அன்றி, உயிருக்குப் பயந்தோ தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவோ இஸ்லாத்தை ஏற்றால் (அது அல்லாஹ்விடம்) அங்கீகரிக்கப்படாது.

ஏனெனில், அல்லாஹ் கூறினான்: நாங்களும் ஈமான் எனும் நம்பிக்கை கொண்டோம் என்று கிராமவாசிகளில் சிலர் (உம்மிடம்) கூறினார்கள். நீர் கூறும்: 'நீங்கள் உண்மையில் ஈமான் எனும் நம்பிக்கை கொள்ளவில்லை ஆயினும் நாங்கள் (இஸ்லாத்தை ஏற்காவிட்டால் ஏற்படும் இழிவிலிருந்து) தப்பித்துக் கொண்டோம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்.'' (திருக்குர்ஆன் 49:14) மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றால் அது அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படும். ஏனெனில், அல்லாஹ் கூறினான் நிச்சயமாக அல்லாஹ்விடம் (அங்கீகரிக்கப்பட்ட ஒரே) மார்க்கம் இஸ்லாம்தான்.'' (திருக்குர்ஆன் 03:19)

27. 'நபி(ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தபோது, நபி(ஸல்) ஒரு குழுவினருக்குக் கொடுத்தார்கள். ஒருவரைவிட்டுவிட்டார்கள். அவர் எனக்கு மிகவும் வேண்டியவராவார். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! ஏன் அவரைவிட்டு விட்டீர்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரை நான் இறைநம்பிக்கையாளர் என்றே கருதுகிறேன்' என கேட்டதற்கு, 'அவரை முஸ்லிம் என்றும் சொல்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' சிறிது நேரம் நான் மவுனமாக இருந்தேன். தொடர்ந்து நான் அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயத்தை என்னையும் மீறி மீண்டும் மீண்டும் கூறினேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பழைய பதிலையே கூறிவிட்டு, 'ஸஅதே! நான் ஒரு மனிதருக்குக் கொடுக்கிறேன் ஆனால் நான் கொடுக்காதவர் என்னிடம் மிக நேசமானவராக இருக்கிறார். (அவருக்கு நான் கொடுத்ததற்கு) காரணம், ஏதும் கொடுக்காதிருந்தால் (குற்றம் இழைத்து அதனால்) அவரை இறைவன் நரகில் முகம் குப்புறத் தள்ளி விடுவானோ என்ற அச்சம் தான்' என்றார்கள்'' என ஸஅத்(ரலி) அறிவித்தார்.

பகுதி 20

ஸலாமைப் பரப்புவதும் இஸ்லாத்தின் ஓரம்சம்.

''தம் மனசாட்சியுடன் நீதியாக நடப்பது உலகெங்கும் ஸலாமைப் பரப்புவது வறுமையிலும் செலவு செய்வது ஆகிய மூன்று பண்புகளை தம்மிடம் ஒன்று சேரப் பெற்றிருக்கிறவர் நிச்சயமாக நம்பிக்கையையே ஒன்று சேரப் பெற்றவராவார்'' என்று அம்மார்(ரலி) கூறினார்.

28. 'ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீர் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 21

கணவனின் உதவிகளுக்கு நன்றி மறப்பவளாக நடப்பது நிராகரிப்பு என்பது ஏற்றத் தாழ்வுடையது.

இது பற்றிய ஒரு நபிமொழியை அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

29. 'எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்' என்றார்கள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 22

பாவங்கள் அறியாமைக் காலச் செயல்களாகும்.

அல்லாஹ்வுக்கு இணைவைப்பதைத் தவிர, மற்ற பாவங்களைச் செய்வதால் ஒருவர் இறைமறுப்பாளராக ஆகிவிட மாட்டார். ஏனெனில், அபூ தர்(ரலி) அவர்களிடம், 'அறியாமைக் காலத்து மூடப் பழக்க வழக்கங்கள் குடி கொண்டிருக்கும் ஒரு மனிதராகவே நீர் இருக்கிறீர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், 'தனக்கு இணை கற்பிக்கப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அதைத் தவிர ஏனைய குற்றங்களை அவன் நாடியவர்களுக்கு மன்னித்து விடுவான்'' (திருக்குர்ஆன் 04:48) என்ற இறைவசனமும் அதற்குச் சான்றாக உள்ளது.

30. 'நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்'' என அபூதர் கூறினார்'' என மஃரூர் கூறினார்.

பகுதி 23

'இறைநம்பிக்கையாளர்களில் இரண்டு சாரார் தங்களுக்குள் சண்டையிட்டால் அவ்விருவருக்குமிடையே சமரசம் செய்து வையுங்கள்' (திருக்குர்ஆன் 49:09) என்ற இறைவசனம். அப்படிச் சண்டையிட்டுக் கொள்ளக் கூடியவர்களையும் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்கள் என்றே குறிப்பிட்டிருக்கிறான்.

31. இவருக்கு (அலீ(ரலி)க்கு) உதவுவதற்காகப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அபூ பக்ரா(ரலி) என்னைச் சந்தித்து 'எங்கே செல்கிறீர்?' எனக் கேட்டார். நான் இவருக்கு உதவப் போகிறேன் என்றேன். அதற்கவர் 'நீர் திரும்பிச் செல்லும் ஏனெனில், 'இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அப்போது, 'இறைத்தூதர் அவர்களே! இவரோ கொலை செய்தவர் (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?) என்று கேட்டதற்கு, 'அவர் அவரைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார்' என்று கூறினார்கள்' என கூறினார்' என அஹ்னஃப் இப்னு கைஸ் அறிவித்தார்.

பகுதி 24

அக்கிரமங்களில் ஏற்றத் தாழ்வு உண்டு.

32. 'இறைநம்பிக்கை கொண்டு அதில் அக்கிரமத்தைக் கலக்காதவர்களுக்கே (இம்மையிலும் மறுமையிலும்) அச்சமற்ற நிலை உண்டு. மேலும் அவர்களே நேர்வழி பெற்றவர்களுமாவார்'' (திருக்குர்ஆன் 06:82) என்ற இறைவசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள் 'நம்மில் யார் அக்கிரமம் செய்யாமலிருக்க முடியும்?' எனக் கேட்டனர். அப்போது, 'நிச்சயமாக (அல்லாஹ்வுக்கு எவரையும்) இணையாக்குவதுதான் மிகப் பெரும் அக்கிரமம்' (திருக்குர்ஆன் 31:13) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்'' என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.

பகுதி 25

நயவஞ்சகனின் அறிகுறிகள்.

33. 'நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான் வாக்களித்தால் மீறுவான் நம்பினால் துரோகம் செய்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

34. 'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான் பேசினால் பொய்யே பேசுவான் ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான் விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 26

லைலத்துல் கத்ர் எனும் கண்ணியமிக்க இரவில் நின்று வணங்குவது ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சம்.

35. 'நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ர் எனும் புனித இரவில் நின்று வணங்குகிறவரின் முந்தைய குற்றங்கள் மன்னிக்கப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 27

அறப்போரிடுவதும் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சம்.

36. 'இறைவனையும் இறைத்தூதர்களையும் நம்பியதற்காக மட்டும் இறைவழியில் போரிடுவதற்குப் புறப்பட்டுச் சென்றவரைக் கூலியைப் பெற்றவராகவோ, போர் ஆதாயங்களைப் பெற்றவராகவோ திரும்பக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை அல்லது அவரைச் சொர்க்கத்தில் சேர்க்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுள்ளான். என்னுடைய சமுதாயத்திற்கு நான் சிரமத்தைக் கொடுத்து விடுவேனோ என்று (அச்சம்) மட்டும் இல்லையானால் (நான்) அனுப்பும் எந்த இராணுவத்திற்குப் பின்னரும் (நானும் போகாமல்) உட்கார்ந்திருக்கமாட்டான். நிச்சயமாக நான் இறைவழியில் கொல்லப்பட்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்படுவதையே விரும்புகிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 28

ரமலானில் உபரியாகத் தொழுவதும் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சம்.

37. 'நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 29

நன்மையை எதிர்பார்த்தவராக ரமலானில் நோன்பு நோற்பது ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சம்.

38. 'நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமலான் மாதம் நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 30

இஸ்லாமிய மார்க்கம் எளிதானது. அசத்தியத்தைவிட்டு சத்தியத்தில் நிலைத்து நிற்கிற இலகுவான மார்க்கமே அல்லாஹ்வுக்கு மிக்க விருப்பமான மார்க்கம் என்ற நபிமொழி.

39. 'நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள் நற்செய்தியையே சொல்லுங்கள் காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 31

தொழுகையும் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சம்.

''உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் வீணாக்கமாட்டான்'' (திருக்குர்ஆன் 02:143) என்ற இறைவனின் கூற்று. 'பைத்துல் முகத்தஸ் ஆலயத்தை நோக்கி நீங்கள் தொழுத தொழுகையை அல்லாஹ் வீணாக்கமாட்டான்'' என்பதே இதன் கருத்தாகும்.

40. 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த ஆரம்பத்தில் அவர்களின் பாட்டனார்களி(ன் வம்சா வழியினரி)டம் அல்லது அன்சாரிகளைச் சேர்ந்த அவர்களின் மாமன்மார்களி(ன் வம்சா வழியினரி)டம் தங்கியிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கியே தொழுது வந்தார்கள். (இருப்பினும்) தொழுகையில் தாம் முன்னோக்கித் தொழும் திசை (மக்காவிலுள்ள) கஅபா ஆலயமாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (கஅபாவை நோக்கி) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுத முதல் தொழுகை அஸர் தொழுகையாகும். அவர்களுடன் மற்றவர்களும் தொழுதார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுதவர்களில் ஒருவர் அங்கிருந்து புறப்பட்டு வேறு ஒரு பள்ளிவாசலுக்கருகே சென்றார். அங்கே பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது கொண்டிருந்தவர்களிடம், 'நான் இறைவன் மீது ஆணையாக மக்காவை (கஅபாவை) முன்னோக்கி இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுதுவிட்டு வருகிறேன்' என்று கூறினார். உடனே மக்கள் (தொழுகையில்) அப்போதிருந்த நிலையிலிருந்த படியே கஅபாவை நோக்கித் திரும்பினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்தது யூதர்களுக்கும் ஏனைய வேதக்காரர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தது. (தொழுகையில்) தம் முகத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபா நோக்கித் திரும்பினார்கள். நபி(ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்தது யூதர்களுக்கும், மற்ற வேதக்காரர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தது. (தொழுகையில்) தம் முகத்தை நபி(ஸல்) அவர்கள் கஅபா நோக்கித் திருப்பிக் கொள்ள ஆரம்பித்ததும் அவர்கள் அதை வெறுக்க ஆரம்பித்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில், தொழுகையில் முன்னோக்கித் தொழும் திசையான கிப்லா மாற்றப்படுவதற்கு முன்னர் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுத காலத்திலேயே சிலர் இறந்துவிட்டனர் சிலர் கொல்லப்பட்டுவிட்டனர். நாங்கள் அவர்களைப் பற்றி என்ன கூறுவது? என்று அறியாதவர்களாயிருந்தோம். அப்போது, 'உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் வீணாக்க மாட்டான்' என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்! என்று காணப்படுகிறது'' என பராவு அறிவித்தார்.

இங்கே ஈமான் எனும் நம்பிக்கை என்பது தொழுகையைக் குறிக்கிறது.

பகுதி 32

ஒரு மனிதரின் இஸ்லாம் அழகு பெறுவது.

41. 'ஓர் அடியார் இஸ்லாத்தைத் தழுவி, அவரின் இஸ்லாம் அழகு பெற்றுவிட்டால் அவர் அதற்கு முன் செய்த அனைத்துத் தீமைகளையும் அல்லாஹ் மாய்த்து விடுகிறான். அதன் பின்னர் 'ம்ஸாஸ்' (உலகில் சக மனிதனுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்குரிய தண்டனை) உண்டு! (அவர் செய்யும்) ஒவ்வொரு நல்லறத்திற்கும் அது போன்ற பத்து முதல் எழுநூறு வரை நன்மைகள் பதியப்படும். (அவர் புரியும்) ஒவ்வொரு தீமைக்கும் (தண்டனையாக) அதைப் போன்றதுதான் உண்டு. அதையும் அல்லாஹ் அவருக்கு மன்னித்து விட்டால் அதுவும் கிடையாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

42. 'உங்களில் ஒருவர் தம் இஸ்லாத்தை அழகாக்கினால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் பத்து மடங்கிலிருந்து எழு நூறு மடங்கு வரை பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அது போன்றே பதிவு செய்யப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 33

நிரந்தரமாகச் செய்யப்படும் நல்லறங்களே அல்லாஹ்விற்கு விருப்பமானவை.

43. 'என்னிடம் ஒரு பெண் அமர்ந்திருக்குகிபோது நபி(ஸல்) அவர்கள் அங்கே வந்தார்கள். 'யார் இந்தப் பெண்மணி?' என்று கூறிவிட்டு அவள் (அதிகமாக) தொழுவது பற்றிப் புகழ்ந்து கூறினேன். அப்போது நபி(ஸல்) 'போதும் நிறுத்து! நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்து வாருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை! மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம்' என்று கூறினார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பகுதி 34

ஈமான் எனும் இறைநம்பிக்கை அதிகரிப்பதும், குறைவதும்

அல்லாஹ் கூறினான்: 'அவர்களுக்கு நாம் நேர்வழியை அதிகமாக்கினோம்.'' (திருக்குர்ஆன் 18:13)

மேலும் அல்லாஹ் கூறினான்: 'இறைநம்பிக்கையாளர்கள் தம் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே..'' (திருக்குர்ஆன் 74:31)

மேலும் அல்லாஹ் கூறினான்: 'இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நான் நிறைவுபடுத்தி விட்டேன்'' (திருக்குர்ஆன் 05:03) அதாவது அந்த நிறைவான நிலையில் இருந்து ஏதேனும் ஒன்றை ஒருவர்விட்டுவிட்டால் அது குறைவுடையதாகும்.

44. 'தம் உள்ளத்தில் ஒரு வால் கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று கூறியவர் நரகிலிருந்து வெளியேறி விடுவார். மேலும், தம் இதயத்தில் ஒரு கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' சொன்னவரும் நரகிலிருந்து வெளியேறி விடுவார். மேலும், தம் உள்ளத்தில் ஓர் அணு அளவு நன்மை இருக்கும் நிலையில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' கூறியவரும் நரகிலிருந்து வெளியேறி விடுவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) 'நன்மை' என்று கூறினார்கள் என மேற்கண்ட நபி மொழியில் குறிப்பிட்டிருக்கும் இடங்களிலெல்லாம் ஈமான் எனும் நம்பிக்கை என்று குறிப்பிட்டதாக அனஸ்(ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.

45. 'யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் 'அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்' என்றார். அதற்கு உமர்(ரலி) 'அது எந்த வசனம்?' எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார்.

''இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவுபடுத்திவிட்டேன். உங்களின் மீது என்னுடைய அருள் கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி (யுடன் அங்கிகரித்துக்) கொண்டேன்'' (திருக்குர்ஆன் 05:03) (இந்தத் திருவசனம்தான் அது). அதற்கு உமர்(ரலி) 'அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி(ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போதுதான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்'' என தாரிக் இப்னு ஷிஹாப்(ரலி) அறிவித்தார்.

பகுதி 35

'ஸகாத்' இஸ்லாத்தின் ஓரம்சம்.

அல்லாஹ் கூறினான்: 'அசத்திய வழிகளிலிருந்து விலகி சத்திய மார்க்கத்தில் சாய்ந்தவர்களாகவும் தம் எண்ணத்தை இறைவனுக்காகத் தூய்மையாக்கியவர்களாகவும் அல்லாஹ்வை வணங்க வேண்டும் தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தி வர வேண்டும் ஸகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்று மட்டும் அவர்களுக்கு கட்டளையிடப்பட்டது. மேலும் அதுவே நேரான மார்க்கமுமாகும்'' (திருக்குர்ஆன் 98:05)

46. 'நஜ்த் என்ற ஊரைச் சார்ந்த ஒருவரை தலை பரட்டையாக நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவரின் குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. நபி(ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளைத் தொழுகைகள்'' என்றார்கள். உடனே அவர் 'அத்தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?' என்றார். அதற்கவர்கள் 'நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை'' என்றார்கள். அடுத்து 'ரமலான் மாதம் நோன்பு நோற்பதுமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் 'அதைத்தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமையுண்டா?' என்றார். அதற்கவர்கள் 'நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை'' என்றார்கள். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் கூறினார்கள். அதற்கவர் 'அதைத் தவிர வேறு தர்மங்கள் கடமையில்லை'' என்றார்கள். உடனே அம்மனிதர் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன் குறைக்கவும் மாட்டேன் என்று கூறியவாறு திரும்பிச் சென்றார். அப்போது 'இவர் கூறியதற்கேற்ப நடந்தால் வெற்றியடைந்துவிட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 36

இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காகப் பின்தொடர்ந்து செல்வது ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சம்.

47. 'நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர் பார்த்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்று அதற்காகப் பிரார்த்தனைத் தொழுகை நடத்தப்பட்டு, அது அடக்கம் செய்யப்படும் வரை அதனுடன் இருந்தவர் நிச்சயமாக நன்மையின் இரண்டு குவியலைப் பெற்றுத் திரும்புவார். ஒவ்வொரு குவியலும் உஹது மலை போன்றதாகும். அதற்காகப் பிரார்த்தனை தொழுகையை மட்டும் முடித்துவிட்டு அதனை அடக்கம் செய்யும் முன்னர் திரும்பி விடுகிறவர் ஒரு குவியல் நன்மையை மட்டும் பெற்றுத் திரும்புவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 37

தான் அறியாத விதத்தில் தன்னுடைய நல்லறங்கள் பாழ்பட்டுப் போய் விடுமோ என இறைநம்பிக்கையாளர் அஞ்சுவது.

இப்ராஹீம் அத் தய்மீ கூறினார். என்னுடைய சொல்லை என்னுடைய செயலோடு நான் ஒப்பிட்டு நான் பொய் சொல்லி விட்டேனோ என அஞ்சாமல் இருந்ததில்லை.

இப்னு அபீ முலைக்கா கூறுகிறார்: நான் நபித் தோழர்களில் முப்பது பேரைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் தமக்குள் நயவஞ்சகத்தனம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுபவர்களாகவே இருந்தார்கள். மேலும் அவர்களில் யாரும் ஜிப்ரீல், மீக்காயில்(அலை) ஆகியோரின் ஈமான் எனும் இறைநம்பிக்கை தமக்கு இருப்பதாகக் கூறியதில்லை.

ஹஸன் அல் பஸரீ கூறினார்கள் என அறிவிக்கப்படுகிறது: உண்மை இறைநம்பிக்கையாளனைத் தவிர வேறு எவரும் இறைவனை அஞ்சுவதில்லை. நயவஞ்சகனைத் தவிர வேறு யாரும் அவன் விஷயத்தில் அச்சமற்று இருப்பதில்லை.

பாவ மன்னிப்புக் கேளாமல், பாவத்திலும் நயவஞ்சகத்தனத்திலும் நிலைத்து இருப்பதற்குக் கடும் எச்சரிக்கை. ஏனெனில் அல்லாஹ் கூறினான்:

''தெரிந்து கொண்டே தாங்கள் செய்த (தீமையான)வற்றில் நிலைத்து இருக்கமாட்டார்கள்.'' (திருக்குர்ஆன் 03:135)

48. 'நான் அபூ வாயிலிடம் முர்ஜிஆ பற்றிக் கேட்டபோது, 'ஒரு முஸ்லிமை ஏசுவது பாவம் அவனுடன் போரிடுவது, கொலை செய்வது இறை நிராகரிப்பாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் வழியாக என்னிடம் கூறினார்'' என ஜுபைத் அறிவித்தார்.

(குறிப்பு) இறை நம்பிக்கையாளர் செய்யும் எந்தப் பாவத்திற்கும் தண்டனை கிடையாது என்று சொல்லும் வழி கெட்ட பிரிவினர் முர்ஜிஆ எனப்படுவர்.

49. 'நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரு பற்றி (அது எந்த இரவு என்று) அறிவிப்பதற்காகத் (தம் வீட்டிலிருந்து) வெளியே வந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ணுற்ற நபி(ஸல்) அவர்கள்) 'லைலத்துல் கத்ர் பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் (வீட்டைவிட்டு) வெளியேறினேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாக இருக்கலாம். (ரமலான் மாதத்தின் இருபத்து) ஏழு (இருபத்து) ஒன்பது (இருபத்து) ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயலுங்கள்' என்று கூறினார்கள்'' என உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.

பகுதி 38

ஈமான், இஸ்லாம், இஹ்ஸான், மறுமை நாளின் ஞானம் ஆகியவற்றைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) கேட்டதும் அதற்கு நபி(ஸல்) அவர்கள் வழங்கிய பதிலும்.

அதில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களின் மார்க்கத்தை உங்களுக்குக் கற்றுத் தருவதற்காக ஜிப்ரீல்(அலை) வந்திருந்தார்கள்''

நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களுக்கு வழங்கிய பதில் அனைத்தையும் மார்க்கமாகவே கருதியிருக்கிறார்கள்.

அப்துல் கைஸ் குழுவினருக்கு நம்பிக்கையைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விளக்கியது. 'இஸ்லாம் அல்லாத வேறொரு வழியைத் தம் மார்க்கமாகத் தேடியவரிடமிருந்து அது அங்கீகரிக்கப்பட மாட்டாது'' (திருக்குர்ஆன் 03:85) என்ற அல்லாஹ்வின் கூற்று.

50. 'நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டதற்கு 'ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது' எனக் கூறினார்கள். அடுத்து 'இஸ்லாம் என்றால் என்ன?' என்று கேட்டதற்குவர்கள் கூறினார்கள். 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும் தொழுகையை நிலை நிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதம் நீர் நோன்பு நோற்பதுமாகும்'' என்று கூறினார்கள்.

அடுத்து 'இஹ்ஸான் என்றால் என்ன?' என்று அவர் கேட்டதற்குவர்கள் கூறினார்கள்: '(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்' அடுத்து 'மறுமை நாள் எப்போது?' என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கிற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானார்) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல் மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்'' என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். 'மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.'' (திருக்குர்ஆன் 31:34) பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்றார். 'அவரை அழைத்து வாருங்கள்'' என்றார்கள். சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. அப்போது, 'இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஜிப்ரீல்(அலை) அவர்களின் கேள்விகளுக்கு நபி(ஸல்) அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தும் நம்பிக்கையைச் சேர்ந்தது என்று புகாரி ஆகிய நான் கூறுகிறேன்.

பகுதி 39

51. 'நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவோர் அதிகமாக்கிக் கொண்டு செல்கிறார்களா? அல்லது குறைந்து போகிறார்களா? என நான் உம்மிடம் கேட்டேன். இல்லை அவர்கள் அதிகமாகிக் கொண்டே செல்கிறார்கள் என நீர் கூறினீர்! அப்படித்தான் ஈமான். அது முழுமையடையும் வரை (அதிகமாக்கிக் கொண்டே) இருக்கும். அவரின் மார்க்கத்தில் நுழைந்த பின் அதன் மீது அதிருப்தியுற்று எவராவது மதம் மாறியிருக்கின்றனரா? என்று நான் உம்மிடம் கேட்டேன். அவ்வாறெல்லாம் ஒன்றுமில்லை என நீர் கூறினீர். ஈமான் என்பது அப்படித்தான்! அதன் தெளிவு இதயங்களில் கலந்து விடும்போது அதனை எவரும் வெறுக்க மாட்டார்கள்' என்று ஹெர்குலிஸ் தம்மிடம் கேட்டதாக அபூ சுஃப்யான்(ரலி) கூறினார்'' என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 40

தன்னுடைய மார்க்கத்திற்காகப் பாவமான காரியங்களிலிருந்து விலகியிருப்பதன் சிறப்பு.

52. 'அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன அவற்றை மக்களில் பெரும்பாலானோர் அறிய மாட்டார்கள். எனவே, சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தம் மார்க்கத்திற்கும் தம் மானம் மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலகி விடுகிறார். சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறவர் வேலியோரங்களில் (கால் நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எச்சரிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள் அவனால் தடை செய்யப்படடவையாகும். எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 41

கனீமத் (போரில் கிடைத்த) பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை வழங்குதல் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓர் அம்சம்.

53. 'நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுடனிருந்தபோது அவர்கள் என்னைக் கட்டிலில் அமரச் செய்து, 'என்னிடம் நீர் (மொழி பெயர்ப்பாளராக) தங்கிவிடும். அதற்காக நான் என்னுடைய செல்வத்திலிருந்து உமக்கு ஒரு பங்கு தருகிறேன்' என்றார்கள். நான் அவர்களோடு இரண்டு மாதங்கள் தங்கினேன். பின்னர் அவர் என்னிடம், 'அப்துல் கைஸின் தூதுக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது, 'வந்திருக்கும் இம்மக்கள் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு 'அவர்கள் ரபீஆ' வசம்சத்தினர் என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் 'வருக! வருக! உங்கள் வருகை நல் வருகையாகுக' என்று வரவேற்றார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் யுத்தம் தடை செய்யப்பட்ட மாதங்களிலே தவிர (வேறு மாதங்களில்) தங்களைச் சந்திக்க முடியாது. காரணம் எங்களுக்கும் தங்களுக்குடையில் இஸ்லாத்தை இதுவரை ஏற்றுக் கொள்ளாத 'முளர்' வம்சத்தினர். வாழ்கிறார்கள். எனவே திட்டவட்டமான சில கட்டளை எங்களுக்குக் கூறுங்கள். அவற்றை நாங்கள் (இங்கே வராமலே) எங்கள் பின்னால் தங்கிவிட்டவர்களுக்கு அறிவிப்போம். அதன் மூலம் நாங்களும் சுவர்க்கம் செல்வோம்' என்றார்கள். மேலும் நபி(ஸல்) அவர்களிடம் சில வகை பானங்களைப் பற்றியும் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் நான்கு காரியங்களை அவர்களிடம் ஏவினார்கள் நான்கு காரியங்களை அவர்களுக்குத் தடை செய்தார்கள். அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு 'அல்லாஹ் ஒருவனை நம்புவது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?' என்றும் கேட்டார்கள். அதற்கவர்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தாம் நன்கு அறிந்தவர்கள்' என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வணங்கி வழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புவது தொழுகையை நிலை நிறுத்துவது மேலும் ஸகாத் வழங்குவது ரமலான் மாதம் நோன்பு நோற்பது போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை நீங்கள் வழங்குவது. மேலும் தடை செய்த நான்கு விஷயங்கள் (மது வைத்திருந்த) மண் சாடிகள், சுரைக் குடுக்கைகள், பேரீச்சை மரத்தின் அடிமரத்தைக் குடைந்து தயாரித்த மரப்பீப்பாய்கள், தார் பூசப்பட்ட பாத்திரங்கள். (பின்னர் இத்தடை அகற்றப்பட்டது) இவற்றை நன்கு மனதில் பதிய வைத்துக்கொண்டு (இங்கே வராதவர்களுக்கு) அறிவித்து விடுங்கள்' என்று கூறினார்கள்' என கூறினார்'' என அபூ ஜம்ரா அறிவித்தார்

பகுதி 42

''செயல் அனைத்தும் எண்ணத்தையும் நோக்கத்தையும் பொறுத்ததாகும்.

மேலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் எண்ணியதே கிடைக்கும்.''

இதற்குள் ஈமான் உளு தொழுகை, ஸக்காத், ஹஜ், நோன்பு உள்ளிட்ட அனைத்துச் சட்டங்களும் அடங்கும்.

அல்லாஹ் கூறினான்:

''(நபியே!) ஒவ்வொருவரும் அவரவர் போக்குக்கு ஏற்பவே செயல்படுகின்றனர்.'' (திருக்குர்ஆன் 17:84)

நன்மையை எதிர் பார்த்து ஒருவர் தம் குடும்பத்திற்குச் செலவு செய்வதும் நல்லறமாகும்.

''மக்கா வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் இல்லை. ஆயினும் அறப்போரிடுவதும் நல்ல எண்ணமுமே இருக்கிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

54. 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே எவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் கட்டளைக்கேற்ப அமையுமோ அவரின் ஹிஜ்ரத்தை அவ்வாறே அல்லாஹ் கருதுவான். மேலும் ஒருவரின் ஹிஜ்ரத் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணந்து கொள்வார். எனவே இவர்களின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அதுவாகவே அமைந்து விடுகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என உமர்(ரலி) அறிவித்தார்.

55. 'ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகிவிடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.

56. 'அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 43

''அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் மக்களுக்கும் நன்மையை நாடுவதே மார்க்கம்'' என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று.

''அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தூய்மையான எண்ணமுடையவர்களாயிருந்தால்...'' (திருக்குர்ஆன் 09:91)

57. 'நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன்'' ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

58. '(முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஆளுனராக இருந்த) முகீரா இப்னு ஷுஅபா(ரலி) இறந்த நாளில் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) எழுந்து மேடையில் நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'புதிய தலைவர் வரும் வரை இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சுவதையும், அடக்கத்தையும், அமைதியையும் கடமையாகக் கொள்ளுங்கள். இதோ இப்போது உங்களின் புதிய தலைவர் வந்து கொண்டிருக்கிறார்' என்றார்.

பின்னர் தொடர்ந்து, '(இறந்த) தலைவருக்காகப் பிழை பொறுக்கத் தேடுங்கள். ஏனெனில் அவர், பாவம் மன்னிக்கப்படுவதை விரும்பக்கூடியவராக இருந்தார்' என்றார். மேலும், 'நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் சென்று 'இஸ்லாத்தைத் தழுவுவதாகத் தங்களிடம் உறுதி மொழி எடுக்க வந்திருக்கிறேன்' என்றேன். அப்போது அவர்கள், 'முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்' என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அதன்படி உறுதி மொழி கொடுத்தேன். இந்தப் பள்ளி வாசலுக்கு உரியவன் மீது ஆணையாக நிச்சயமாக நான் உங்களுக்கு நலம் நாடுபவனாக இருக்கிறேன்' என்றார்.

பின்னர் பாவமன்னிப்புத் தேடியவர்களாக (மேடையைவிட்டு) இறங்கினார்கள்'' ஜியாத் இப்னு இலாகா அறிவித்தார்.
Previous Post Next Post