அத்தியாயம் 67 திருமணம்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 67

திருமணம்

பகுதி 1

மணமுடித்துக்கொள்ள ஆர்வமூட்டுதல்

அல்லாஹ் கூறினான்: உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்துகொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 04:03)

5063. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர்.2 அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), 'முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், '(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், 'நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் 'நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணந்துகொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, 'இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள்.

5064. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'அநாதை(ப் பெண்களை மணந்து அவர்)களின் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணமுடித்துக கொள்ளலாம். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணந்துகொள்ளுங்கள்; அல்லது உங்கள் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்ணையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே ஏற்றதாகும்'' எனும் (திருக்குர்ஆன் 04:3 வது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்.

என் சகோதரியின் (அஸ்மாவின்) புதல்வரே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண் தன் காப்பாளரின் மடியில் (பொறுப்பில்) வளர்கிற அநாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தின் மீதும், அழகின் மீதும் ஆசைப்பட்டு அவளை (கர்ப்பளாரான) அவர், மற்றவர்கள் அவளுக்கு வழங்குவது போன்ற (விவாகக் கொடையான) மஹ்ரை விடக் குறைவானதை வழங்கி அவளை மணந்துகொள்ள விரும்புகிறார் (எனும் நிலையில் இருப்பவள் ஆவாள்.) இவ்விதம் காப்பாளர்கள் (தம் பொறுப்பிலிருக்கும்) அநாதைப் பெண்களுக்கு நிறைவான மஹ்ரை அளித்து அந்தப் பெண்களுக்கு நீதி செய்யாமல் அவர்களை மணந்துகொள்ள (இந்த வசனத்தின் மூலம்) அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்ற (மனதுக்குப் பிடித்த) பெண்களை மணமுடித்துக்கொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது'' என்று பதிலளித்தார்கள். 3

பகுதி 2

''தாம்பத்தியம் நடத்த சக்தியுள்ளவர் திருமணம் செய்து கொள்ளட்டும்! ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும்'' எனும் நபிமொழியும், திருமண ஆசை இல்லாதவர் திருமணம் செய்து கொள்ளலாமா என்பதும்.

5065. அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்

நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது 'மினா'வில் அன்னாரை உஸ்மான்(ரலி) சந்தித்து, 'அபூ அப்தில் ரஹ்மானே! (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களே!) தங்களிடம் எனக்கு ஒரு தேவை இருக்கிறது'' என்று கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும் ஒரு தனியான இடத்திற்குச் சென்றார்கள். அங்கே உஸ்மான்(ரலி) (அப்துல்லாஹ்(ரலி) அவர்களிடம்) 'அபூ அத்திர் ரஹ்மானே! உங்களின் இளமைக் காலத்தை நினைவுபடுத்துகிற ஒரு கன்னிப் பெண்ணை உங்களுக்கு நான் மணமுடித்துத் தருவதில் தங்களுக்கு விருப்பமுண்டா?' என்று கேட்டார்கள். திருமணம் தமக்குத் தேவையில்லை என்று அப்துல்லாஹ்(ரலி) கருதியபோது என்னை நோக்கி அவர்கள் சுட்டிக்காட்டி 'அல்கமாவே!'' என்று அழைத்தார்கள். நான் அவர்களை அடைந்தேன். அப்போது (உஸ்மான்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ்) அவர்கள், நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் பின்வருமாறு அல்லவா கூறினார்கள்:

''இளைஞர்களே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணந்துகொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்'' என்று தெரிவித்தார்கள். 4

பகுதி 3

தாம்பத்தியம் நடத்த சக்திபெறாதோர் நோன்பு நோற்கட்டும்!

5066. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்

நானும் அல்கமா மற்றும் அஸ்வத்(ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் 'இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று கூறினார்கள்.

பகுதி 4

பலதார மணம் 5

5067. அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அறிவித்தார்

(அன்னை) மைமூனா(ரலி) அவர்களின் ஜனாஸாவில் (இறுதிப் பிரார்த்தனையில்) நாங்கள் 'சரிஃப்' எனும் இடத்தில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுடன் கலந்து கொண்டோம். 6 அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:

இவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் துணைவியாராவார்.

இவரின் (உடல் வைக்கப்பட்டுள்ள) கட்டிலைத் தூக்கும்போது குலுக்கவோ அசைக்கவோ செய்யாதீர்கள்; மென்மையுடன் (எடுத்துச்) செல்லுங்கள். நபி(ஸல்) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். எட்டுப்பேருக்கு இரவைப் பங்கிட்டு வந்தார்கள். ஒரேயொருவருக்கு மட்டும் பங்கிட்டுத் தரவில்லை.7

5068. அனஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் ஒரே இரவில் தம் துணைவியர் அனைவரிடமும் சென்று வந்து விடுவார்கள். (அப்போது) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். 8

இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

5069. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

என்னிடம் இப்னு அப்பாஸ்(ரலி), 'மணமுடித்தீரா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை'' என்றேன். அவர்கள் 'மணந்துகொள்ளுங்கள்! ஏனெனில், இந்தச் சமுதாயத்திலேயே சிறந்தவர் (ஆன முஹம்மத்(ஸல்) அவர்கள்) அதிகமான பெண்களை மணமுடித்தவராவார்'' என்று கூறினார்கள்.

பகுதி 5

ஒருவர் ஒரு பெண்ணை மணந்து கொள்வதற்காக ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) மேற்கொண்டாலோ, ஏதேனும் நல்லறம் புரிந்தாலோ அவர் எண்ணியதே அவருக்குக் கிடைக்கும்.

5070. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

எண்ணத்தைப் பொறுத்தே செயல் அமைகிறது:

ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்பதிப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக(ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்கவிரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும்.

என உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார். 9

பகுதி 6

குர்ஆனையும் இஸ்லாத்தையும் தம்முடன் வைத்துள்ள ஓர் ஏழைக்கு மணமுடித்து வைத்தல்.

இது குறித்து நபி(ஸல்) அவர்களிடமிருந்து ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்துள்ள ஹதீஸ் உண்டு. 10

5071. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் துணைவியர் எவரும் இருக்கவில்லை. எனவே, நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா?' என்று கேட்டோம். அப்போது நபி(ஸல்) அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள். 11

பகுதி 7

ஒருவர் தம் சகோதரிடம், 'என் இரண்டு மனைவியரில் யாரை நீ விரும்புகிறாயோ கூறு, உனக்காக அவளை விவாக விலக்குச் செய்து (திருமணம் முடித்துத்) தருகிறேன்'' என்று சொல்வது.

இது குறித்து அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார். 12

5072. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (நாடு துறந்து மதீனாவுக்கு) வந்தார்கள். அப்போது அவருக்கும் ஸஅத் இப்னு ரபீஉஅல் அன்சாரி(ரலி) அவர்களுக்கும் இடையே நபி(ஸல்) அவர்கள் சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். இந்த ஸஅத் இப்னு ரபீஉ அல்அன்சாரி(ரலி) அவர்களுக்கு இரண்டு துணைவியர் இருந்தனர். எனவே ஸஅத்(ரலி) தம் வீட்டாரிலும் தம் செல்வத்திலும் சரிபாதியை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'அல்லாஹ் உங்களுக்கு, உங்கள் வீட்டாரிலும் செல்வத்திலும் சுபிட்சத்தை அருள்வானாக! எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்!'' என்று கூறினார்கள்.

பிறகு கடைவீதிக்கு வந்து (வியாபாரம் செய்து) சிறிது பாலாடைக் கட்டியையும் சிறிது நெய்யையும் இலாபமாகப் பெற்றார்கள். சில நாள்களுக்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் அடையாளத்தைக் கண்டு, 'என்ன இது அப்துர் ரஹ்மானே?' என்று கேட்டார்கள். அதற்கு அப்துர்ரஹ்மான்(ரலி), 'நான் அன்சாரிப் பெண் ஒருவரை மணந்தேன்'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவளுக்கு (மஹ்ராக) என்ன கொடுத்தாய்?' என்று கேட்க, 'ஒரு பேரீச்சங்கொட்டையின் எடையளவு தங்கத்தை'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா - மணவிருந்து கொடு!'' என்று கூறினார்கள். 13

பகுதி 8

துறவறமும் (ஆண்மை நீக்கம் செய்து கொள்ள) காயடித்துக் கொள்வதும் வெறுக்கத்தக்கவை ஆகும்.

5073. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்

உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) துறவம் மேற்கொள்ள (விரும்பி அனுமதி கேட்டபோது) நபி(ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவருக்கு (மட்டும்) நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.

5074. ஸஅத் இப்னு ஆபி வக்காஸ்(ரலி) அறிவித்தார்

உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) துறவறம் மேற்கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதியளிக்கவில்லை. (அப்படி) துறவறம் மேற்கொள்ள அவருக்கு (மட்டும்) நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்துகொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.

5075. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) 'நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் (எங்கள் துணைவியரோ, வேறு பெண்களை மணந்துகொள்ளத் தேவையான செல்வமோ) ஏதும் இருக்கவில்லை. எனவே நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், '(ஆண்மை நீக்கம் செய்துகொள்ள) நாங்கள் காயடித்துக் கொள்ளலாமா?' என்று கேட்டோம். அவ்வாறு செய்யவேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். அதன் பின்னர் ஆடைக்கு பதிலாகப் பெண்களை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்'' என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்:

இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள தூய்மையான பொருட்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 05:87)14

5076. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

நான் (ஒருமுறை) 'இறைத்தூதர் அவர்களே! நான் ஓர் இளைஞன்; பெண்களை மணந்துகொள்ளத் தேவையான பொருள் ஏதும் என்னிடம் இல்லை. (இந்நிலையில்) நான் தவறான வழிக்குச் சென்றுவிடுவேனோ என என்னைப் பற்றி நானே அஞ்சுகிறேன். (நான் காயடித்துக்கொள்ளலாமா?)'' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) மௌனமாக இருந்தார்கள். மீண்டும் நான் முன் போன்றே கேட்டேன். அப்போதும் மௌனமாகவே இருந்தார்கள். பிறகும், நான் முன் போன்றே கேட்டேன். அப்போதும் மௌனமாகவே இருந்தார்கள். பிறகு (நான்காது முறையாக) முன்போன்றே நான் கேட்டபோது, 'அபூ ஹுரைரா! நீங்கள் (வாழ்க்கையில்) சந்திக்கவிருக்கிற அனைத்தையும் (ஏற்கெனவே எழுதியாயிற்று அவற்றை) எழுதிய எழுதுகோலும் கூட காய்ந்துவிட்டது. எனவே, நீங்கள் காயடித்துக் கொள்ளுங்கள்; அல்லது சும்மா இருங்கள். (எல்லாம் ஒன்று தான். )'' என்று கூறினார்கள்.

பகுதி 9

கன்னிப்பெண்ணை மணமுடித்தல்.

இப்னு அப்பாஸ்(ரலி) ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'உங்களைத் தவிர வேறு எந்தக் கன்னிப் பெண்ணையும் நபி(ஸல்) அவர்கள் மணந்துகொள்ளவில்லை'' என்று கூறினார்கள்.

என இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். 15

5077. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(ஒருமுறை) நான் நபி(ஸல்) அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் இறங்குகிறீர்கள். அதில் (கால்நடைகளினால்) உண்ணப்பட்டுப்போன ஒரு மரத்தையும் உண்ணப்படாத ஒரு மரத்தையும் காண்கிறீர்கள். இந்த இரண்டில் எந்த மரத்தில் தங்கள் ஒட்டகத்தை மேயவிடுவீர்கள்? கூறுங்கள்!'' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் 'எதில் ஏற்கெனவே மேயவிடப்படவில்லையோ அதில்தான் (நான் என் ஒட்டகத்தை மேய்ப்பேன்)'' என்று பதிலளித்தார்கள்.

தம்மைத் தவிர வேறு எந்த கன்னிப் பெண்ணையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மணக்கவில்லை என்ற கருத்தில் தான் ஆயிஷா(ரலி) இவ்வாறு கூறினார்கள்:

5078. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்'' என்று சொல்லிக்கொண்டேன்.

பகுதி 10

கன்னிகழிந்த பெண்ணை மணமுடித்தல்.

(அன்னை) உம்மு ஹபீபா(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியாரான) என்னிடம், '(முந்தைய கணவன்மார்களின் மூலம் உங்களுக்குப் பிறந்த) உங்களுடைய பெண் மக்களையோ, உங்களுடைய சகோதரிகளையோ திருமணம் செய்து கொள்ளும்படி என்னிடம் கோராதீர்கள்'' என்று கூறினார்கள். 16

5079. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நாங்கள் (தபூக்) போரிலிருந்து நபி(ஸல்) அவர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது நான் மெதுவாகச் செல்லக்கூடிய என்னுடைய ஒட்டகத்தின் மீது இருந்துகொண்டு அவசரப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் எனக்குப் பின்னாலிருந்து வாகனம் ஒன்றில் வந்து சேர்ந்து தம்மிடமிருந்த கைத்தடியால் என்னுடைய ஒட்டகத்தைக் குத்தினார். உடனே என்னுடைய ஒட்டகம் நீ காணுகிற ஒட்டகங்களிலேயே மிக உயர் ரகமானது போன்று ஓடலாயிற்று. (உடனே நான் திரும்பிப் பார்த்தேன்.) அங்கு நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்,) 'என்ன அவரசம் உனக்கு?' என்று கேட்டார்கள். 'நான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்ணையா? (மணந்தாய்)?' என்று கேட்டார்கள். நான் 'கன்னி கழிந்த பெண்ணைத் தான் (மணந்தேன்)'' என்று சொன்னேன். 'கன்னிப் பெண்ணை மணந்துகொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக்குலவி மகிழ்ந்திருக்கலாமே!'' என்று கேட்டார்கள்.

பிறகு நாங்கள் (மதீனா வந்து சேர்ந்து ஊருக்குள்) நுழையப் போனபோது நபி(ஸல்) அவர்கள், '(நீங்கள் ஊர் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இரவு இஷா - நேரம் வரும் வரை சற்று பொறுத்திருங்கள்! தலைவிரிகோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக்கொள்ளட்டும் (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க் கொள்ளட்டும்'' என்று கூறினார்கள். 17

5080. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நான் திருமணம் செய்துகொண்டேன். (சில நாள்களுக்குப் பின்) என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'யாரை மணமுடித்தாய்?' என்று கேட்டார்கள். நான் 'கன்னி கழிந்த ஒரு பெண்ணை மணமுடித்தேன்'' என்று பதிலளித்தேன். அதற்கவர்கள், 'உனக்கென்ன நேர்ந்தது? கன்னிப் பெண்களும் அவர்களின் உமிழ்நீரும் உனக்கு வேண்டாமா?' என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹாரிப் இப்னு திஸார்(ரஹ்) கூறினார்:

நான் இந்த ஹதீஸை அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள், ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் செவியேற்றேன் என்று கூறினார்கள்: என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கன்னிப் பெண்ணை மணந்துகொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக்குலவி மகிழ்ந்திருக்கலாமே!'' என்று கேட்டார்கள்.

பகுதி 11

(வயதில்) சிறியவர்களைப் பெரியவர்களுக்கு மணமுடித்து வைத்தல்.

5081. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள்.

பகுதி 12

யாரை மணமுடிப்பது? பெண்களில் சிறந்தவர் யார்? தன் வாரிசைச் சுமப்பதற்காக (நல்ல பெண்ணை)த் தேர்ந்தெடுப்பது விரும்பத்தக்கது - இவையெல்லாம் கட்டாயமின்றி (விருப்பத்தின்பாற்பட்டவை).

5082. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒட்டகங்களில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள், நல்ல குறைஷிக்குல பெண்களாவர். அவர்கள் குழந்தைகளின் மீது அதிகப் பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள். 18

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 13

அடிமைப் பெண்களை அமர்த்திக்கொள்வதும் ஒருவர் தம் அடிமைப் பெண்ணை விடுதலை செய்து மணந்துகொள்வதும்.

5083. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒரு மனிதரிடம் அடிமை(பணி)ப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் கல்லி கற்பித்து, அதையும் நன்கு கற்பித்து, அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதையும் அழகுற (நழினமாகக்) கற்பித்து, பிறகு அவளை (அடிமைத்தளையிலிருந்து) விடுதலையும் செய்து, திருமணமும் செய்தால் அவருக்கு (விடுதலை செய்தது மற்றும் மணந்ததற்காக) இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.

வேதக்காரர்களில் உள்ள ஒருமனிதர் தம் (சமூகத்திற்கு நியமிக்கப்பட்டிருந்த) இறைத்தூதரையும் நம்பிக்கை கொண்டு என்னையும் (இறைத்தூதரென) நம்பிக்கை கொள்வாராயின் அவருக்கும் இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.

மேலும், ஓர் அடிமை தன் எஜமானுக்குச் செய்யவேண்டிய கடமையையும் தன் இறைவனின் கடமையையும் (ஒழுங்காக) நிறைவேற்றுவாராயின் அவருக்கும் இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.

என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சாலிஹ் இப்னு சாலிஹ்(ரஹ்) கூறினார்:)

(இந்த நபிமொழியை எனக்கு அறிவித்த) ஷஆபி(ரஹ்), 'பிரதிபலன் ஏதுமின்றி (உங்களுக்கு நான் அறிவித்த) இவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள். இதைவிடச் சிறிய விஷயங்களை அறிந்துகொள்வதற்காகவெல்லாம் சிலர் மதீனா வரை பயணம் சென்றதுண்டு'' என்றார்கள்.

இன்னோர் அறிவிப்பில் (அடிமைப் பெண்ணின் எசமான் குறித்து), 'அவளை அவர் விடுதலை செய்து, பின்னர் அவளுக்கு மஹ்ரும் கொடுத்(து மணமுடித்)தால் (...இரண்டு நற்பலன்கள் உண்டு)'' என்று காணப்படுகிறது. 19

5084. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் மூன்று முறையே உண்மைக்குப் புறம்பாகப் பேசினார்கள். தம்முடன் (துணைவியார்) சாரா இருக்க இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒரு சர்வாதிகார அரசனைக் கடந்து சென்றார்கள்.

இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு, இந்த ஹதீஸை முழுமையாக அறிவித்தார்கள். அதில், 'ஹாஜர் அவர்களை சாரா அவர்களுக்கு (பணியாளாகக்) கொடுத்தான்'' என்றும், 'அல்லாஹ் அந்த இறைமறுப்பாள(னான அரச)னின் கரத்தைத் தடுத்து, ஆஜரை எனக்குப் பணியாளாகக் கொடுத்தான்'' என சாரா கூறினார்கள் என்றும் காணப்படுகிறது.

அபூ ஹுரைரா(ரலி) கூறினார்: வான் மழை (பிரதேச) மக்களே! அவர்(ஹாஜர்)தாம் உங்கள் அன்னை. 20

5085. அனஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (உள்ள 'சத்துஸ் ஸஹ்பா' எனுமிடத்தில் 'ஸஃபிய்யா பின்த் ஹுயை' அவர்களை மணமுடித்து) மூன்று நாள்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா(ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவுகொண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' -மணவிருந்துக்கு முஸ்லிம்களை அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை.

நபி(ஸல்) அவர்கள் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டு (அவ்வாறே அது கொண்டு வந்து விரிக்கப்பட்டபோது) அதில் பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் ஆகியவற்றை இட்டார்கள். ('ஹைஸ்' எனும் எளிய உணவு துரிதமாகத் தயாரானது.) இதுவே நபி(ஸல்) அவர்களின் வலீமா 'மணவிருந்தாக அமைந்தது.

அப்போது முஸ்லிம்கள், 'ஸஃபிய்யா(ரலி) இறைநம்பிக்கையாளர்களின் அன்னை (-நபியவர்களின் துணைவி-)யாரில் ஒருவரா? அல்லது நபி(ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா?' என்று பேசிக் கொண்டனர். அப்போது 'ஸஃபிய்யா(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் 'ஹிஜாப்' -திரையிட்(டுக் கொள்ளும்படி கட்டளையி)ட்டால், அவர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் (-நபி(ஸல்) அவர்களின் துணைவியரில்-) ஒருவர்; அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை)யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர்'' என்று (மக்களில் சிலர்) கூறினர்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் புறப்பட்டபோது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கையமைத்து இடம்கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) ஸஃபிய்யா(ரலி) அவர்களுக்கும் மக்களுக்குமிடையே திரையிட்டு இழுத்து (மூடி)விட்டார்கள். 21

பகுதி 14

ஒருவர் தம் அடிமைப்பெண்ணை விடுதலை செய்வதையே 'மஹ்ர்' ஆக்குவது.

5086. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

(கைபர் போர்க் கைதியான) ஸஃபிய்யாவை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விடுதலை செய்தார்கள். மேலும், அவர்களை விடுதலை செய்ததையே மஹ்ர் (விவாகக் கொடையாக) ஆக்கி (தாமே அவர்களை மணந்து) கொண்டார்கள். 22

பகுதி 15

ஏழைக்கு மணமுடித்து வைத்தல்.

அல்லாஹ் கூறினான்:

(ஆணாயினும் பெண்ணாயினும்) உங்களில் எவருக்கு வாழ்க்கைத் துணை இல்லையோ அவர்களுக்குத் திருமணம் செய்துவிடுங்கள். (அவ்வாறே வாழ்க்கைத் துணையில்லாத) உங்கள் அடிமைகளிலுள்ள நல்லவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தால், அல்லாஹ் தன்னுடைய அருளைக்கொண்டு அவர்களைச் சீமானாக்கிவைப்பான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக விசாலாமானவனும் (மனிதர்களின் நிலைமையை) நன்கு அறிந்தோனுமாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 24:32)

5087. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்

ஒரு பெண்மணி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-) வந்துள்ளேன்'' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணை நோக்கி தம் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக்கொண்டார்கள். பிறகு, தம் தலையைத் தொங்கவிட்டார்கள்.

தம் விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண்மணி, (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இவர் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துவையுங்கள்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் (அவரிடம்) '(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் பொருள் ஏதேனும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அதற்கவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என்னிடம் ஏதும்) இல்லை, இறைத்தூதர் அவர்களே!'' என்று பதில் கூறினார்.

நபி(ஸல்) அவர்கள், 'உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!'' என்றார்கள்.

அவர் போய் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, 'இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை'' என்றார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இரும்பாலான ஒரு மோதிரமாவது (கிடைக்குமா எனப்)பார்!'' என்றார்கள்.

அவர் மீண்டும் சென்றுவிட்டுத் திரும்பி வந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! (ஒன்றும்) கிடைக்கவில்லை, இறைத்தூதர் அவர்களே! இரும்பாலான மோதிரம் கூடக் கிடைக்கவில்லை; ஆனால், இதோ இந்த என்னுடைய வேட்டி உள்ளது'' என்றார்.

-அறிவிப்பாளர் ஸஹ்ல்(ரலி) கூறினார்: அவரிடம் ஒரு மேல் துண்டு கூட இல்லை; எனவேதான் தம் வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகக் கூறினார்.

அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உம்முடைய வேட்டியை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்? அந்த வேட்டியை நீ உடுத்திக் கொண்டால் அவளின் மீது அதில் ஏதும் இருக்காது. அதை அவள் உடுத்திக் கொண்டால் உன் மீது அதில் ஏதும் இருக்காது. (உம்முடைய வேட்டியை கொடுத்துவிட்டு என்ன செய்யப்போகிறாய்?)'' என்று கேட்டார்கள். பிறகு அவர் நெடுநேரம் (அங்கேயே) அமர்ந்திருந்துவிட்டு எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கண்டபோது அவரை அழைத்து வருமாறு கட்டளையிட்டார்கள்.

அவ்வாறே அவர் அழைத்துவரப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயம் மனப்பாடமாக) உள்ளது'' என்று கேட்டார்கள்.

அவர், '(குர்ஆனில்) இன்ன இன்ன அத்தியாயங்கள் என்னுடன் உள்ளன'' என்று எண்ணி எண்ணிக் கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அவற்றை நீ மனப்பாடமாக ஓதுவாயா?' என்று கேட்டார்கள். 'ஆம் (ஓதுவேன்)'' என்று அவர் பதிலளித்தார்.

நபி(ஸல்) அவர்கள், 'உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன். நீர் செல்லலாம்!'' என்று கூறினார்கள். 23

பகுதி 16

(மணமக்களிடையே) மார்க்கப் பொருத்தம் (பார்த்தல்.) 24

அல்லாஹ் கூறினான்:

மேலும், (ஒருதுளி) நீரிலிருந்து மனிதனைப் படைத்தவன் அவனே! பிறகு, (பிறப்பினால் வந்த) இரத்த உறவையும், (திருமணத்தால் வந்த) சம்பந்தி உறவையும் அவன் ஏற்படுத்தினானன். உம்முடைய இறைவன் பெரும் ஆற்றல் மிக்கவனாய் இருக்கிறான். (திருக்குர்ஆன் 25:54)

5088. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களுடன் பத்ருப்போரில் பங்கெடுத்தவர்களில் ஒருவரான அபூ ஹுதைஃபா இப்னு உத்பா(ரலி), (பாரசீகரான மஅகில் என்பவரின் புதல்வர்) சாலிம் அவர்களைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கினார்கள். மேலும், அவருக்குத் தம் சகோதரர் வலீத் இப்னு உத்பாவின் மகள் ஹிந்த் என்பாரைத் திருமணமும் செய்து வைத்தார்கள். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். 25 நபி(ஸல்) அவர்கள் ஸைதைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டது போல் (சாலிமை அபூ ஹுதாஃபா(ரலி) வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டார்கள்.

மேலும், அறியாமைக் காலத்தில் ஒருவரை அவரின் வளர்ப்புத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைக்கும் வழக்கமும், அவரின் சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) நியமிக்கும் வழக்கமும் இருந்தது.

எனவே, 'நீங்கள் (வளர்த்த) அவர்களை அவர்களின் (உண்மையான) தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடம் மிக நீதியாக இருக்கிறது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் உங்களுடைய மார்க்கச் சகோதரர்களாகவும் உங்கள் மார்க்க சிநேகிதர்களாகவும் இருக்கிறார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 33:5 வது) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்த வழக்கம் நீடித்தது.)

பின்னர் வளர்ப்புப் பிள்ளைகள் அவர்களின் சொந்தத் தந்தையாருடன் இணைக்கப்பட்டனர். எவருக்குத் தந்தை (இருப்பதாக) அறியப்படவில்லையோ அவர் மார்க்க சிநேகிதராகவும் மார்க்கச் சகோதராகவும் ஆனார்.

பிறகு, அபூ ஹுதைஃபா இப்னு உத்பா(ரலி) அவர்களின் துணைவியார் சஹ்லா பின்த் சுஹைல்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் சாலிமை (எங்களுடைய) பிள்ளையாகவே கருதிக்கொண்டிருந்தோம். (வளர்ப்பு மகனான) அவர் விஷயத்தில் அல்லாஹ் தாங்கள் அறிந்துள்ள (திருக்குர்ஆன் 33:5 வது) வசனத்தை அருளிவிட்டான்'' என்று தொடங்கும் ஹதீஸை (அறிவிப்பாளர் அபுல் யமான் இப்னு ஹகம்(ரஹ்) முழுமையாகக்) கூறினார்கள். 26

5089. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் ஸுபைர்(ரலி) அவர்களிடம் சென்று, 'நீ ஹஜ் செய்ய விரும்புகிறாய் போலும்! என்றார்கள். அதற்கு அவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாளியாகவே இருக்கிறேன்'' என்று கூறினார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரிடம், 'நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக 'இஹ்ராம்' கட்டி, இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்'' என்று சொல்லிவிடு!' எனக் கூறினார்கள்.

ளுபாஆ(ரலி) மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) அவர்களின் துணைவியாராவார். 27

5090. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

1. அவளுடைய செல்வத்திற்காக

2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக.

3. அவளுடைய அழகிற்காக

4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

5091. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

ஒரு (பணக்கார) மனிதர் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), 'இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்'' என்று கூறினர். பிறகு நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்தார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்'' என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்' எனக் கூறினார்கள்.

பகுதி 17

பொருளாதாரத்தில் பொருத்தம் பார்ப்பதும், ஏழைக்குப் பணக்காரியை மணமுடித்து வைப்பதும்.

5092. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'அநாதை(ப் பெண்களை மணந்துகொண்டு அவர்)களின் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால்..'' எனும் (திருக்குர்ஆன் 04:3 வது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:

என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண் தன் காப்பாளரின் மடியில் (பொறுப்பில்) வளர்ந்து வருகிற அநாதைப் பெண் ஆவாள்.

அப்பால் அவளுடைய அழகையும் செல்வத்தையும் கண்டு ஆசைப்பட்டு (காப்பாளரான) அவர் அவளை மணமுடித்துக்கொள்ள) விரும்புகிறார். (ஆனால்) அவளுக்குரிய (தகுதியான) மஹ்ரை (விவாக கொடையை)க் குறைத்துவிட விரும்புகிறார். இத்தகைய பெண்களுக்குரிய உரிய மஹ்ரை நிறைவாகச் செலுத்தும் விஷயத்தில் நீதி தவறாது நடந்தால் தவிர, அவர்களை மணந்து கொள்ளக்கூடாது என்று (காப்பாளர்களுக்கு இவ்வசனத்தின் மூலம்) தடைவிதிக்கப்பட்டது. மேலும், இதரப் பெண்கள் அல்லாத (மனதுக்குப் பிடித்த) இதரப் பெண்களை மணந்துகொள்ளும்படியும் கட்டளையிடப்பட்டது.

இதற்குப் பின்பும் மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டார்கள். உயர்ந்தவனான அல்லாஹ் அப்போது, 'பெண்களின் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி (நபியே!) உங்களிடம் கோருகின்றனர்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 04:127 வது) வசனத்தை அருளினான். அதாவது 'ஓர் அநாதைப் பெண் அழகும் செல்வமும் உள்ளவளாக இருந்தால் நிறைவான மஹ்ரை (விவாகக் கொடையை) அளித்து அவளை மணந்துகொள்ளவும் அவளுடன் உறவு முறையை ஏற்படுத்திக் கொள்ளவும் காப்பாளர்கள் விரும்புகின்றனர். (அதே சமயம்) அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருப்பதால் விரும்பத்தகாதவளாக இருப்பின், அவளைவிட்டுவிட்டு வேறு பெண்களைப் பிடித்துக்கொள்கின்றனர்' என்று அல்லாஹ் அவர்களுக்கு அருளினான்.

''அவர்கள் அப்பெண்ணை விரும்பாத நேரம் (மணந்துகொள்ளாமல்)விட்டு விடுவது போல், அவளை விரும்பும் நேரம் மஹ்ர் விஷயத்தில் அவளுடைய உரிமையை நிறைவாக வழங்கி, அவளிடம் நீதியுடன் நடந்துகொண்டாலே ஒழிய அவளை மணந்து கொள்ளும் உரிமை அவர்களுக்கு இல்லை'' என்று இவ்வசனத்தின் மூலம் இறைவன் தெரிவித்தான். 28

பகுதி 18

பெண்ணின் அப சகுனத்திலிருந்து தவிர்ந்து கொள்ளல்.

அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையாளர்களே! உங்களுடைய துணைவியரிலும், பிள்ளைகளிலும் (உங்களை இறைவழியிலிருந்து திருப்பிவிடும்) பகைவர்கள் உங்களுக்கு உள்ளனர். (திருக்குர்ஆன் 64:14)

5093. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அபசகுனம் என்பது (எதிலாவது இருக்கமுடியும் என்றால்) பெண், வீடு, குதிரை ஆகிய மூன்று விஷயங்களில் தான் (இருக்க முடியும்).

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 29

5094. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் மக்கள் அப சகுனம் குறித்துப் பேசினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் அப சகுனம் எதிலேனும் இருக்குமானால், வீட்டிலும் பெண்ணிலும் குதிரையிலும் தான் இருக்கும்'' என்று கூறினார்கள்.

5095. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(அப சகுனம் எனும்) அது எதிலாவது இருக்குமானால் குதிரையிலும் பெண்ணிலும் குடியிருப்பிலும் தான்.

என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

5096. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யும் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான்விட்டுச் செல்லவில்லை.

என உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

பகுதி 19

ஓர் அடிமை, சுதந்திரமான பெண்ணை மணந்து கொள்வது.

5097. ஓர் அடிமை, சுதந்திரமான பெண்ணை மணந்து கொள்வது.

5097. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(அடிமையாயிருந்து விடுதலை பெற்ற) பாரீராவினால் மூன்று வழிமுறைகள் (நமக்கு) கிட்டின:

1. அவர் விடுதலைசெய்யப்பட்டபோது (தம் அடிமைக் கணவருடனான உறவைத் தொடரவும் முறித்துக் கொள்ளவும்) அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. 30

2. இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'விடுதலை செய்வதவருக்கே அடிமையின் வாரிசுரிமை கிட்டும்'' என்றார்கள்.

3. நெருப்பின் மேல் பாத்திரம் இருக்கும் நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் வைக்கப்பட்டது. உடனே அவர்கள், 'நான் (நெருப்பின் மேல்) பாத்திரத்தைக் கண்டேனே (அது என்ன வாயிற்று?)'' என்று கேட்டார்கள். அதற்கு, 'அது பாரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி, தர்மப் பொருளைத் தாங்கள் உண்ணமாட்டீர்களே!'' என்று செல்லப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அது பாரீராவிற்குத் தான் தர்மம். நமக்கு அது அன்பளிப்பு!'' என்று கூறினார்கள். 31

பகுதி 20

ஒருவர் நான்கு பெண்களைவிட அதிகமானவர்களை மணக்கக் கூடாது. 32

அல்லாஹ் கூறினான்: உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்துகொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 04:03)

அதாவது 'இரண்டிரண்டாக, அல்லது மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் என அலீ இப்னு ஹுசைன்(ரஹ்) கூறினார்கள்.

இதைப் போன்றுதான் 'இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு இறக்கைகளை உடைய வானவர்களை'' எனும் (திருக்குர்ஆன் 35:1 வது) வசனமும்.

5098. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஓர் அநாதைப் பெண் ஒரு மனிதரிடம் (அவரின் பொறுப்பில்) இருப்பாள். அவரே அவளுடைய காப்பாளராவார். அவளை அவர் அவளுடைய செல்வத்திற்காக மணந்த அவளுடன் மோசமான முறையில் உறவாடுவார்; அவளுடைய செல்வம் தொடர்பான விஷயத்தில் நீதி செலுத்தமாட்டார். இத்தகைய பெண்ணைக் குறித்தே இந்த (திருக்குர்ஆன் 04:3 வது) வசனம் பேசுகிறது. அந்தக் காப்பாளர், (இவளைவிட்டுவிட்டு) இவளல்லாத அவரின் மனதுக்குப் பிடித்த வேறு பெண்களை இரண்டிரண்டாக, அல்லது மும்மூன்றாக, அல்லது நான்கு நான்காக மணக்கட்டும் (என்று இவ்வசனத்தில் இறைவன் கூறுகிறான்) 33

பகுதி 21

''உங்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய்மார்களையும் (நீங்கள் மணப்பது விலக்கப்பட்டுள்ளது)'' (எனும் 4:23 வது இறைவசனம்)

இரத்த உறவினால் மணமுடிக்கக் கூடாதவர்களைப் பால்குடி உறவினாலும் மணமுடிக்கக் கூடாது.

5099. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(ஒருநாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒருவர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைக் கேட்டேன். அப்போது நான் (நபி(ஸல்) அவர்களிடம்) இறைத்தூதர் அவர்களே! இதோ உங்கள் (துணைவியார் ஹஃப்ஸாவின்) வீட்டுக்குள் செல்ல ஒருவர் அனுமதி கேட்கிறார்'' என்று சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவர் இன்னார் என கருதுகிறேன்'' என்று ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் குறித்துக் கூறினார்கள். நான் 'இன்னார் உயிருடன் இருந்தால் அவர் என்னைத் திரையின்றி சந்தித்திருக்க முடியும்தானே!'' என்று என்னுடைய பால்குடித் தந்தயைரின் சகோதரர் குறித்துக கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஆம்! (முடியும்.) பிறப்பு (இரத்த உறவு) எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் பால் குடியும் நெருங்கியவையாக ஆக்கிவிடும்'' என்று கூறினார்கள். 34

5100. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களிடம் 'தாங்கள் ஹம்ஸா(ரலி) அவர்களின் புதல்வியை மணந்துகொள்ளக் கூடாதா?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'அவள் பால்குடி உறவு முறையினால் எனக்குச் சகோதரர் மகள் ஆவாள்'' என்று கூறினார்கள். 35

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

5101. உம்மு ஹபீபா பின்த் அபீ சுஃப்யான்(ரலி) கூறினார்

நான் (என் கணவர்) நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியான அபூ சுஃப்யானின் மகளை தாங்கள் மணந்துகொள்ளுங்கள்!'' என்று கூறினேன். அதற்கவர்கள், 'இதை நீயே விரும்புகிறாயா?' என்று (வியப்புடன்) கேட்டார்கள். நான், 'ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்'' என்றேன்.

அதற்கு அவர்கள், 'என்னை அ(வளை மணப்ப)து அனுமதிக்கப்பட்டதன்று'' என்றார்கள். நான் 'தாங்கள் அபூ ஸலமாவின் புதல்வியை மணக்க விரும்புவதாக எங்களுக்குச் சொல்லப்பட்டதே!'' என்று கேட்டேன். '(அதாவது என் துணைவியார்) உம்முஸலமாவிற்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளையா?' என நபியவர்கள் கேட்க, நான் 'ஆம்' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அவள் (-உம்முஸலமாவின் மகள்-) என்னுடைய மடியில் வளர்ப்பு மகளாக இருந்து வருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும் கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனென்னில்) அவள் பால்குடி உறவு முறையில் என் சகோதரரின் புதல்வியாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூ ஸலமாவுக்கும் ஸுபைவா பாலூட்டினார். எனவே, என்னிடம் உங்கள் பெண் மக்களையோ, உங்கள் சகோதரிகளையோ (மணந்துகொள்ளுமாறு) பரிந்துரைக்க வேண்டாம்'' என்று கூறினார்கள். 36

அறிவிப்பாளர் உர்வா(ரஹ்) கூறினார்:

ஸுவைபா, அபூ லஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூ லஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி(ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூ லஹப் இறந்தபோது அவரின் குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூ லஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூ லஹபிடம், '(மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன?' என்று அவர் கேட்டார். உங்களைவிட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது'' என்று கூறினார்.

பகுதி 22

'பால்குடி என்பது இரண்டு வயதுக்குப் பின் கிடையாது' என்போரின் கருத்து.

(அல்லாஹ் கூறினான்:) தம் குழந்தைகளுக்குப்) பால்குடியை முழுமையாக்க விரும்புகிற(கண)வர்களுக்காகத் தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு நிறைவான இரண்டாண்டுகள் அமுதூட்டுவார்கள். (திருக்குர்ஆன் 02:233)

பால்குடியில் சிறிதளவும் அதிகளவும் நெருங்கிய உறவை (மஹ்ரம்) ஏற்படுத்தும்.

5102. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஓர் ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறிவிட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், 'இவர் என் (பால்குடி) சகோதரர்'' என்றேன். அதற்கு நபி(ஸல) அவர்கள், 'உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில், பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளைப்பால் அருந்தியிருந்தால்) தான்'' என்று கூறினார்கள். 37

பகுதி 23

ஆணின் பால்குடி உறவு. 38

5103. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

அபுல் குஐஸின் சகோதரர் அஃப்லஹ்(ரலி) வந்து என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். அவர் என் பால்குடித் தந்தையின் சகோதரராவார். ஹிஜாப் (பர்தா) சட்டம் அருளப்பட்ட பின் இந்தச் சம்பவம் நடைபெற்றது. அப்போது நான் அவருக்கு அனுமதியளிக்க மறுத்து விட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்ததும் நான் செய்தது குறித்து அவர்களிடம் தெரிவித்தேன். நான் அவருக்கு அனுமதியளிக்க வேண்டும் என அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள். 39

பகுதி 24

பாலூட்டிய செவிலித் தாயின் சாட்சியம்.

5104. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்

நான் (உம்மு யஹ்யா பின்த் அபி இஹாப் எனும்) ஒரு பெண்ணை மணந்துகொண்டேன். பின்னர் ஒரு கறுப்பு நிற (அடிமைப்) பெண் எங்களிடம் வந்து நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும் உன் மனைவிக்கும் உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டினேன். (இந்த வகையில் நீங்கள் இருவரும் சகோதரத்துவ உறவுடையவர்கள்)'' என்று கூறினாள். எனவே (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து மதீனாவிற்கு) நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'நான்' இன்னவர் மகள் இன்னவளை மணந்துகொண்டேன். அப்பால் ஒரு கறுப்பு நிறப்பெண் எங்களிடம் வந்து என்னை நோக்கி 'நான் உங்கள் இருவருக்கும் பாலூட்டியிருக்கிறேன்' என்று பொய் சொல்கிறாள்'' என்று சொன்னேன். (அதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் (முகம் திருப்பிக்கொண்டு என்னைப் புறக்கணித்தார்கள். மீண்டும் நான் நபியவர்களின் முகத்துக்கு நேராக வந்து 'அவள் பொய் தான் சொல்கிறாள்'' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'அவள் உங்கள் இருவருக்கும் பாலூட்டியதாக சொல்லிவிட்ட நிலையில் அந்தப் பெண்ணுடன் நீ எப்படி (இல்லறம் நடத்த முடியும்)? அவளை உன்னிடமிருந்து பிரித்துவிட்டுவிடு!'' என்று (யோசனை) கூறினார்கள். 40

அறிவிப்பாளர் அலீ இப்னு அப்தில்லாஹ் அல்மதீனி(ரஹ்) கூறினார்:

(எனக்கு இதை அறிவித்த) இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம்(ரஹ்) (நபி(ஸல்) அவர்கள் 'விட்டுவிடு' என்று கூறி சைகை செய்ததை) அறிவிப்பாளர் அய்யூப்(ரஹ்) எடுத்துரைத்தபடி தம் சுட்டுவிரல் மற்றும் நடுவிரலால் சைகை செய்து காட்டினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல்லாஹ் இப்னு அபீ முலைக்கா(ரஹ்) கூறினார்:

இந்த அறிவிப்பை நான் (சம்பவத்தில் நேரடித் தொடர்புடைய) உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அவர்களிடமிருந்தே செவியுற்று விட்டேன். ஆயினும், நான் உபைத் இப்னு அபீ மர்யம்(ரஹ்) அவர்களின் அறிவிப்பையே நன்கு நினைவில் நிறுத்தியுள்ளேன்.

பகுதி 25

(மணமுடிக்க) அனுமதிக்கப்பட்ட பெண்களும் அனுமதிக்கப்படாதவர்களும்.

அல்லாஹ் கூறினான்: (பின்வரும் பெண்களை மணப்பது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது: உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள்; மேலும் சகோதரனின் புதல்வியர்; சகோதரியின் புதல்வியர்..(திருக்குர்ஆன் 04:23)

அனஸ்(ரலி) கூறினார்: (திருக்குர்ஆன் 04:24 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வல் முஹ்ஸனாத்து மினன் னிஸா' என்பதன் கருத்தாவது: (ஏற்கெனவே திருமணமாகி கணவன்மார்கள் இருக்கும் (அடிமையல்லாத) சுதந்திரமான பெண்களை மணமுடிப்பது விலக்கப்பட்டதாகும். 'இல்லா மா மலக்கத் அய்மானுக்கும்' (உங்கள் கைவசம் வந்துவிட்ட அடிமைப் பெண்களைத் தவிர என்பதன் கருத்தாவது: ஒருவர் தம் அடிமைப் பெண்ணை (அவளுடைய கணவரான) தம் அடிமையின் மண பந்ததிலிருந்து விலக்கிவிடுவது குற்றமன்று.

மேலும், அல்லாஹ் கூறினான்: இறைவனுக்கு இணைவைக்கும் பெண்களை அவர்கள் ஈமான் (ஏகத்துவ நம்பிக்கை) கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். (திருக்குர்ஆன் 02:221)

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: ஒருவர் தம் தாய், தம் புதல்வி, மற்றும் தம் சகோதரியை மணமுடிப்பது விலக்கப்பட்டிருப்பது போன்றே நான்கை விட அதிகமான பெண்களை மணமுடிப்பதும் விலக்கப்பட்டதாகும்.

5105. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

''இரத்த உறவினால் ஏழு பேரும், திருமண உறவினால் ஏழு பேரும் மணமுடிக்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டுள்ளனர்.41 என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறிவிட்டு, '(பின்வரும் பெண்களை மணப்பது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது: உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள்..'' எனும் (திருக்குர்ஆன் 04:23 வது) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு 'அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி), அலீ(ரலி) அவர்களின் புதல்வியையும், அலீ(ரலி) (அவர்களுக்குப் பின்) அவர்களின் மனைவியையும் ஒரே நேரத்தில் மணந்தார்கள்'' என்றும் கூறினார்கள். 42

''ஒருவர், ஒரு பெண்ணையும் அவளுடைய கணவரின் (இன்னொரு மனைவிக்குப் பிறந்த) மகளையும் ஒரே நேரத்தில் மணமுடிப்பது குற்றமன்று'' என இப்னு சீரீன்(ரஹ்) கூறினார்கள்.

இது வெறுக்கப்பட்ட செயலாகும் என முதலில் கூறிவந்த ஹஸனுல் பஸரீ(ரஹ்), பின்னர் (தம் கருத்தை மாற்றிக் கொண்டு) இதனால் குற்றமில்லை என்று கூறினார்கள்.

(அலீ(ரலி) அவர்களின் பேரரான) ஹஸன் இப்னு ஹஸன் இப்னி அலீ(ரஹ்) தம் தந்தையின் இரண்டு சகோதரர்களின் புதல்வியரை ஒரே இரவில் மணந்துகொண்டார்கள். 43

இதனால் (சக்களத்தி சண்டை ஏற்பட்டு) உறவு முறிய வாய்ப்புண்டு என்பதால் இத்திருமணத்தை ஜாபிர் இப்னு ஸைத்(ரஹ்) வெறுத்தார்கள். ஆனால், (இத்திருமணம்) தடை செய்யப்பட்டதன்று. ஏனெனில், அல்லாஹ் (மணமுடிக்கத் தகாத பெண்களின் பட்டியலைச் சொல்லிவிட்டு) 'இவர்களைத் தவிர மற்ற பெண்களை (மஹ்ர் கொடுத்து) அடைந்து கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது'' (திருக்குர்ஆன் 04:24) என்று கூறுகிறான்.

இக்ரிமா(ரஹ்) கூறினார்

''ஒருவன் தன் மனைவியின் சகோதரியை விபசாரம் செய்வதால், அவனுடைய மனைவி அவனுக்கு விலக்கப்பட்டவளாக, (ஹராமாக) ஆகிவிடமாட்டாள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். 44

ஒருவன் ஒரு சிறுவனுடன் ஓரினச் சேர்க்கை செய்தால், அச்சிறுவனுடைய தாயை மணமுடிப்பது செல்லாது என ஷஅபீ (ரஹ்) அவர்களும், அபூ ஜஅஃபர்(ரஹ்) அவர்களும் கூறினார்கள்கள் என யஹ்யா(ரஹ்) கூறினார்கள். இந்த யஹ்யா நேர்மையானவரா என்பது அறியப்படவில்லை. இந்த அறிவிப்புக்கு பக்கபலமாக அமையும் மற்ற அறிவிப்புகளும் கிடையாது.

இக்ரிமா(ரஹ்) கூறினார்: 'ஒருவன் தன் மனைவியின் தாயுடன் விபசாரம் புரிந்துவிட்டால், மனைவி அவனுக்கு விலக்கப்பட்டவளாக ஆகமாட்டாள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். ஆனால், 'விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள்'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் என அபூ நஸ்ர்(ரஹ்) வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபூ நஸ்ர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்து செவியேற்றாரா என்பது அறியப்படவில்லை.

'விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள்’  என்பதே இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி), ஜாபிர் இப்னு ஸைத்(ரஹ்), ஹஸன் அல்பஸாரீ(ரஹ்) மற்றும் இராக் அறிஞர்களில் சிலர் ஆகியோரின் கருத்தாகும்.

அபூ ஹுரைரா(ரலி) கூறினார்: ஒரு பெண்ணை உடலுறவு கொண்டால் மட்டுமே அவளுடைய மகள் இவனுக்கு விலக்கப்பட்டவள் ஆவாள். (வெறுமனே தொடுவதற்கும், கட்டி அணைப்பதற்கும் இச்சட்டம் பொருந்தாது.) (''இந்நிலையில் அப்பெண்ணின்) மகளை மணமுடிப்பது செல்லும்' என இப்னுல் முஸய்யப், உர்வா, ஸுஹ்ரீ(ரஹ்) ஆகியோர் கூறினர்.

'அவளை மணமுடிப்பது விலக்கப்படவில்லை' என அலீ(ரலி) சொன்னதாக ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசை முறிவு கண்டது (முர்சல் எனும் முன்கத்திஉ) ஆகும்.

பகுதி 26

நீங்கள் உடலுறவுகொண்ட மனைவியர் (தம் முன்னாள் கணவர் மூலம்) பெற்றெடுத்து, உங்கள் மடிகளில் வளர்ந்துள்ள புதல்வியர் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளனர் (எனும் 4:23 வது வசனத் தொடர்.)

இப்னு அப்பாஸ்(ரலி), '(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள 'தகல்த்தும்' எனும் சொல்லின் வேர்ச் சொல்லான) 'துகூல்' எனும் சொல்லுக்கும் 'மஸீஸ்' எனும் சொல்லுக்கும், 'லிமாஸ்' எனும் சொல்லுக்கும் 'உடலுறவு கொள்ளுதல்' என்று பொருள்' எனக் கூறினார்கள்.

''மனைவிக்கு (மற்றொரு கணவன் மூலம்) பிறந்த பிள்ளையின் புதல்வியரும் (பேத்திகளும்) அவளுடைய புதல்விகளைப் போன்றே கணவனுக்கு விலக்கப்பட்டவர்கள் ஆவர்'' என்று கூறுவோர் பின்வரும் நபிமொழியை ஆதாரம் காட்டுகின்றனர்:

''உங்களுடைய பெண் மக்களையோ, சகோதரிகளையோ (மணமுடித்துககொள்ளுமாறு) என்னிடம் பரிந்துரைக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியானரா) உம்மு ஹபீபா(ரலி) அவர்களிடம் கூறினார்கள். 45 (பேத்திகளும் பெண்மக்களைப் போன்றவர்களே!)

(ஒருவருக்கு மகன் வழிப்பேரர்களின் மனைவிமார்களும் புதல்வர்களுடைய மனைவியரை (மருமகள்களை)ப் போன்றே மணமுடிக்க விலக்கப்பட்டுள்ளனர்.

(ஒருவரின் மனைவிக்கு முந்தைய கணவர் மூலம் பிறந்த மகள்) அவரின் பொறுப்பில் வளராவிட்டாலும் அவளை 'வளர்ப்பு மகள்' (ரபீபத்) என்று குறிப்பிடலாமா? (என்பதில் கருத்து வேறுபாடு உண்டு.) 46

நபி(ஸல்) அவர்கள், தம் வளர்ப்பு மகளைக் காப்பாளர் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள். 47

நபி(ஸல்) அவர்கள் தங்களின் புதல்வியின் மகனை (பேரனை) 'மகன்' என்று குறிப்பிட்டார்கள். 48

5106. (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான) உம்மு ஹபீபா(ரலி) அறிவித்தார்

நான் (ஒருமுறை) 'இறைத்தூதர் அவர்களே! (என் சகோதரியான) அபூ சுஃப்யானின் மகளின் விஷயத்தில் தங்களுக்கு விருப்பம் உண்டா?' என்று கேட்டேன். அவர்கள், 'நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டார்கள். நான், '(அவளை) நீங்கள் மணந்துகொள்ள வேண்டும்'' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'இதை நீயே விரும்புகிறாயா?' என்று கேட்டார்கள். நான், '(ஆம்!) மனைவியென்று உங்களுக்கு நான் ஒருத்தி மட்டுமில்லையே! தங்களை அடைந்து கொள்ளும் பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்'' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அவள் எனக்கு (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவள் இல்லையே!'' என்று கூறினார்கள். நான், 'தாங்கள் பெண் கேட்டதாக எனக்குச் செய்தி எட்டியதே!'' என்று சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(என் துணைவியார்) உம்மு ஸலமாவின் மகளையா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்'' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அவள் என் மடியில் வளர்ந்த வளர்ப்பு மகளாக (இருக்கிறாள். அப்படி) இல்லாவிட்டாலும் கூட, அவள் எனக்கு (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவள் அல்லள். (ஏனெனில்,) எனக்கும் அவளுடைய தந்தை ('அபூ ஸலமா')வுக்கும் ஸுவைபா அவர்களே பாலூட்டினார்கள். எனவே, உங்களுடைய பெண்மக்களையோ, சகோதரிகளையோ என்னிடம் (மணந்துகொள்ளுமாறு) பரிந்துரைக்காதீர்கள்'' என்றார்கள். 49

லைஸ் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார்:

(அறிவிப்பாளர்) ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்), உம்மு ஸலமா(ரலி) அவர்களின் மகளின் பெயர் 'துர்ரா பின்த் அபீ ஸலமா' என்றே நமக்கு அறிவித்தார்கள்.

பகுதி 27

இரண்டு சகோதரிகளை ஒருசேர நீங்கள் மனைவியராக்குவதும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது; ஏற்கெனவே (அறியாமைக் காலத்தில்) நடந்துவிட்டதைத் தவிர (எனும் 4:23 வது) வசனத் தொடர்.)50

5107. உம்மு ஹபீபா பின்த் அபீ சுஃப்யான்(ரலி) அறிவித்தார்

நான் (என் கணவர்) நபி(ஸல்) அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியான அபூ சுஃப்யானின் மகளைத் தாங்கள் மணந்துகொள்ளுங்கள்!'' என்று கூறினேன். அதற்கவர்கள், 'இதை நீயே விரும்புகிறாயா?' என்று (வியப்புடன்) கேட்டார்கள். நான், 'ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்'' என்றேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'எனக்கு அ(வளை மணப்ப)து அனுமதிக்கப்பட்டதன்று'' என்று கூறினார்கள். நான், இறைத்தூதர் அவர்களே, அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அபூ ஸலமாவின் மகள் துர்ராவை மணக்க விரும்புவதாக எங்களிடையே பேச்சு நடைபெறுகிறதே!'' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், '(என் துணைவியார்) உம்மு ஸலமாவிற்கு (மூத்த கணவன் மூலம்) பிறந்த மகளையா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'ஆம்'' என்று பதிலளித்தேன். நபியவர்கள், 'அவள் என்னுடைய மடியில் (வளர்ப்பு மகளாக இருந்துவருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும் கூட, எனக்கு அவள் (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவள் அல்லள். (ஏனெனில்) அவள் பால்குடி உறவு முறையில் என் சகோதரரின் மகளாவாள். எனக்கும் (அவளின் தந்தை) அபூ ஸலமாவுக்கும் ஸுவைபா அவர்களே பாலூட்டினார்கள். எனவே, என்னிடம் உங்கள் பெண் மக்களையோ, உங்கள் சகோதரிகளையோ (மணந்துகொள்ளுமாறு) பரிந்துரைக்க வேண்டாம்'' என்று கூறினார்கள். 51

பகுதி 28

(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் (அத்தையையும்) சேர்த்து மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.

5108. ஜாபிர்(ரலி) அறிவித்தார்

(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது தாயின் சகோதரியையும் (சேர்த்து) மணமுடிப்பதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். 52

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

5109. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் ஒரு சேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது. (இதைப் போன்றே) ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

5110. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் (ஒருசேர) மணமுடிப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (அறிவிப்பாளர் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்:) இதை வைத்து, ஒரு பெண்ணுடைய தாயின் சகோதரியைப் போன்றே, அவளுடைய தந்தையின் தாயுடைய சகோதரியையும் நாங்கள் கருதுகிறோம்.

5111. ஏனெனில், ஆயிஷா(ரலி), 'இரத்த பந்த உறவால் யாரை மணப்பது கூடாதோ அவர்களை மணப்பதைப் பால்குடி உறவாலும் தடைசெய்யுங்கள்'' என்று கூறினார்கள். 53

பகுதி 29

மஹ்ரின்றி பெண் கொடுத்து பெண் எடுத்தல். 54

5112. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

'ஷிஃகார்' முறைத் திருமணத்திற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

ஒருவர் மற்றெவாருவரிடம் 'நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தரவேண்டும்'' என்று (முன் நிபந்தனை) விதித்து மணமுடித்து வைப்பதற்கே 'ஷிஃகார்' எனப்படும். இதில் இரண்டு பெண்களுக்கும் 'மஹ்ர்' (விவாகக் கொடை) இராது.

பகுதி 30

ஒரு பெண், தன்னை ஒருவருக்கு 'அன்பளிப்பது (அதாவது மஹ்ரின்றி அவரை மணக்க முன்வருவதோ, தன்னை அன்பளித்தேன்' என்று கூறி திருமணம் செய்து கொள்வதோ) செல்லுமா?

5113. உர்வா வின் ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக வழங்க முன் வந்த பெண்களில் கவ்லா பின்த் ஹகீம்(ரலி) அவர்களும் ஒருவராவார். (இது குறித்து) ஆயிஷா(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:

ஒரு பெண் தம்மைத் தாமே ஓர் ஆணுக்கு கொடையாக வழங்க வெட்கப்படமாட்டாளா? பின்னர் '(நபியே! உங்கள் துணைவியராகிய) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம் வரை) ஒதுக்கி வைக்கலாம்'' எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) வசனம் அருளப்பட்டதுபோது 'இறைத்தூதர் அவர்களே! தங்களின் விருப்பத்தைத் தங்களின் இறைவன் விரைவாக பூர்த்தி செய்வதையே காண்கிறேன்'' என்று (நபியவர்களிடம்) கூறினேன். 55

இதே ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர்கள் வழியாகவும் சற்று கூடுதல் குறைவுடன் வந்துள்ளது.

பகுதி 31

(ஹஜ் அல்லது உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்துகொள்வது.

5114. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இஹ்ராம் கட்டியிருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் (மைமூனா(ரலி) அவர்களை) மணந்தார்கள். 56

பகுதி 32

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அல்முத்ஆ' (தவணை முறைத்) திருமணத்தை இறுதியாகத் தடைசெய்தது. 57

5115. முஹம்மத் இப்னு அலீ(ரஹ்) அவர்களும், அப்துல்லாஹ் இப்னு அலீ(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்

(எம் தந்தை) அலீ(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'அல்முத்ஆ' (தவணை முறைத்) திருமணத்திற்கும், நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கும், கைபர் போரின்போது நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்'' என்று கூறினார்கள். 58

5116. அபூ ஜம்ரா நஸ்ர் இப்னு இம்ரான்(ரஹ்) அறிவித்தார்

'அல்முத்ஆ' (தவணை முறைத்) திருமணம் குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அவர்கள், 'அதற்கு அனுமதி உண்டு' என்றார்கள். அப்போது அவர்களின் முன்னாள் அடிமை ஒருவர் '(பயணத்தில் மனைவி இல்லாத) நெருக்கடியான சூழ்நிலை, பெண்கள் குறைவாக இருத்தல் போன்ற சமயங்களில் தான் இத்திருமணத்திற்க அனுமதியுண்டாமே!'' என்று கேட்டதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), 'ஆம்!'' என்று பதிலளித்தார்கள்.

5117 / 5118 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களும் ஸலமா இப்னு அக்வஉ(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்

நாங்கள் ஒரு போர் படையில் இருந்தோம். 59 அப்போது எங்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தூதர் ஒருவர் வந்து, 'அல்முத்ஆ' (தவணைமுறை)த் திருமணம் உங்களுக்கு (தாற்காலிமாக) அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் 'அல்முத்ஆ' திருமணம் செய்துகொள்ளலாம்' என்று அறிவித்தார்.

5119. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணை முறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்த பட்சம்) மூன்று நாள்களாவது இல்லறம் நடந்திடவேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள் அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக் கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட விரும்பினாலும் பிரிந்துவிடலாம்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஸலமா இப்னு அக்வஉ(ரலி) கூறினார்:

இந்த(த் தவணை முறை)த் திருமணம் (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டும் (நெருக்கடி நிலையில்) அனுமதிக்கப்பட்டதா? அல்லது மக்கள் அனைவருக்கும் உள்ள பொது அனுமதியா என்று எனக்குத் தெரியவில்லை. 60

அபூ அப்தில்லாஹ் புகாரீ(யாகிய நான்) கூறுகிறேன்:

இத்திருமணத்திற்கான அனுமதி விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

பகுதி 33

ஒரு பெண் தன்னை மணந்துகொள்ளுமாறு ஒரு நல்ல மனிதரிடம் கோருதல்.

5120. ஸாபித் அல் புனானி(ரஹ்) அறிவித்தார்

நான் அனஸ்(ரலி) அருகில் இருந்தேன். அன்னாருடன் அவர்களின் புதல்வியார் ஒருவரும் இருந்தார். (அப்போது) அனஸ்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தன்னை மணந்து கொள்ளுமாறு கோரியபடி ஒரு பெண் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (மணந்துகொள்ள) நான் தங்களுக்கு அவசியமா?' எனக் கேட்டார்'' என்று கூறினார்கள்.

அப்போது அனஸ்(ரலி) அவர்களின் புதல்வி, 'என்ன வெட்கங்கெட்டத் தனம்! என்ன அசிங்கம்! என்ன அசிங்கம்!'' என்று கூறினார். அனஸ்(ரலி), 'அந்தப் பெண்மணி உன்னைவிடச் சிறந்தவர்; அந்தப் பெண் நபியவர்களை (மணந்து கொள்ள) ஆசைப்பட்டார். எனவே, தன்னை மணந்து கொள்ளுமாறு கோரினார்'' என்று கூறினார்கள்.

5121. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் தன்னை மணந்துகொள்ளுமாறு கோரினார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர், 'இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(இவருக்கு மஹ்ர் கொடுக்க) உம்மிடம் என்ன உள்ளது?' என்று கேட்டார்கள். அவர், என்னிடம் ஒன்றுமில்லை'' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'நீர் சென்று, இரும்பினாலான ஒரு மோதிரத்தையாவது தேடு!'' என்று கூறினார்கள்.

அவர் போய் (தேடிப் பார்த்து)விட்டுத் திரும்பி வந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை; இரும்பாலான மோதிரம் கூட கிடைக்கவில்லை. ஆனால், இதோ என்னுடைய இந்த வேட்டி உண்டு. இதில் பாதி அவளுக்கு (மஹ்ர்) என்றார். - அவரிடம் ஒரு மேல்துண்டு கூட இல்லை. (அதனால்தான், வேட்டியில் பாதியைத் தருவதாகக் கூறினார்.)

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உம்முடைய வேட்டியை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்? அதை நீர் உடுத்திக்கொண்டால் அவளின் மீது (அதில்) ஏதும் இருக்காது; அதை அவள் உடுத்திக்கொண்டால் அதில் உம்மீது ஏதும் இருக்காது. (உம்முடைய வேட்டியை கொடுத்துவிட்டு என்ன செய்யப்போகிறாய்?)'' என்று கூறினார்கள். பிறகு அவர் நெடுநேரம் (அங்கேயே) அமர்ந்திருந்துவிட்டு எழுந்தார். அவர் செல்வதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'அவரை அழைத்தார்கள்' அல்லது 'அவர் அழைக்கப்பட்டார்' (அவர் வந்தவுடன்) அவரிடம், 'உம்முடன் குர்ஆனில் என்ன உள்ளது?' என்று நபியவர்கள் கேட்டார்கள்.

அதற்கு அவர் நபியவர்களிடம், '(குர்ஆனில்) இன்ன அத்தியாயம் இன்ன அத்தியாயம் என்னுடன் (மனப்பாடமாக) உள்ளது'' என்று சில அத்தியாயங்களை எண்ணி எண்ணிக் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக அவளை உமக்கு மணமுடித்து கொடுத்துவிட்டேன்'' என்று கூறினார்கள். 61

பகுதி 34

ஒருவர் தம் மகளையோ சகோதரியையோ மணந்துகொள்ளுமாறு நல்லோரிடம் கோருவது.

5122. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்

(என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) (தம் மருமகன்) குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவரை வேறொருவருக்கு மணமுடித்து வைக்க எண்ணினார்கள்.)

-குனைஸ்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவராவார். மேலும், அவர் மதீனாவில் இறந்தார்.

உமர் இப்னு கத்தாப்(ரலி) கூறினார்.

எனவே, நான் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் சென்று, (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறினேன். அதற்கு உஸ்மான்(ரலி), '(தங்கள் மகளை நான் மணந்துகொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)'' என்று கூறினார்கள்.

சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மான்(ரலி) என்னைச் சந்தித்து 'இப்போது திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என்றே எனக்குத் தோன்றியது'' என்று கூறினார்கள்.

எனவே, நான் அபூ பக்ர் ஸித்தீக்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) 'நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்'' என்று கூறினேன். அபூ பக்ர்(ரலி) அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான்(ரலி) அவர்களை விட அபூ பக்ர்(ரலி) மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன்.

பிறகு(ஒருநாள்) அபூ பக்ர்(ரலி) என்னைச் சந்தித்து, 'நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்கு பதிலேதும் கூறாததால், உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக்கூடும்'' என்று கூறினார்கள். நான், 'ஆம்'' என்று சொன்னேன். (அதற்கு) அபூ பக்ர்(ரலி), 'நீங்கள் கூறியபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணப்பது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்கு பதிலோதும் கூறவில்லை). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருப்பேன்.

5123. ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்

(அன்னை) உம்மு ஹபீபா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'அபூ ஸலமாவின் மகள் 'துர்ரா'வைத் தாங்கள் மணக்கப் போவதாக செய்தியறிந்தோம். (இது உண்மையா?)'' என்று கேட்டார்கள் அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(என் துணைவியார்) உம்முஸலமா இருக்கவா (அவர் மகளை நான் மணப்பேன்?' என்று கேட்டுவிட்டு, 'உம்மு ஸலமாவை நான் மணந்திருக்காவிட்டாலும் (அவரின் மகள்) துர்ரா எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டவளல்லள். ஏனெனில், அவளுடைய தந்தை (அபூ ஸலமா) என் பால்குடி சகோதரராவார்'' என்று கூறினார்கள். 63

பகுதி 35

''('இத்தா'வில் இருக்கும்) பெண்களிடம் திருமணப் பேச்சை மறைமுகமாக எடுத்துரைப்பதிலோ, (அதனை) உங்கள் உள்ளங்களில் மறைத்துவைப்பதிலோ உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை...'' எனும் (திருக்குர்ஆன் 02:235 வது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'அக்னன்த்தும்' எனும் சொல்லுக்கு, 'உங்கள் உள்ளங்களில் மறைத்துவைப்பது' என்று பொருள். (பொதுவாக) நீ பாதுகாத்து மறைத்து வைக்கும் யாவற்றுக்கும் (அரபி மொழி வழக்கில்) 'மக்னூன்' எனப்படுகிறது.

5124. முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்

''('இத்தா'வில் இருக்கும்) பெண்களிடம் திருமணப் பேச்சை மறைமுகமாக எடுத்துரைப்பதில் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை'' எனும் (திருக்குர்ஆன் 02:235 வது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இப்னு அப்பாஸ்(ரலி), 'ஒருவர், '(இத்தா'விலிருக்கும் ஒரு பெண்ணிடம்) 'நான் மணமுடித்துக்கொள்ள விரும்புகிறேன்' என்றோ 'ஒரு நல்ல பெண் எனக்கு விரைவில் கிடைப்பாள் என நம்புகிறேன்' என்றோ (சாடையாகக்) கூறுவதாகும்'' என்று கூறினார்கள்.

காசிம் இப்னு முஹம்மத்(ரஹ்) கூறினார்: நீ என்னிடம் மதிப்புக்குரியவள்; நான் உன்னை விரும்புகிறேன்; அல்லாஹ் உனக்கு நன்மைபுரிவான் என்பன போன்ற வார்த்தைகளைக் கூறுவதாகும்.

அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்கள்: (இத்தாவில் இருக்கும் பெண்ணிடம் தம் திருமண விருப்பத்தை) ஒருவர் மறை முகமாகச் சொல்ல வேண்டும்; வெளிப்படையாகச் சொல்லக் கூடாது. (உதாரணமாக) 'எனக்கு ஒரு தேவை உள்ளது' என்றோ அல்லது 'ஒரு மகிழ்ச்சியான செய்தி உனக்கு (காத்திருக்கிறது)' என்றோ, 'அல்லாஹ்வின் அருளால் நீ கடைத்தேறிவிடுவாய்' என்றோ கூறுவார். அதற்கு (பதிலாக) அவள், 'நீங்கள் சொல்வதை நான் செவியேற்றேன்'' என்று மட்டும் சொல்வாள். அவனுக்கு எந்த வாக்குறுதியையும் அவள் அளிக்கக் கூடாது. (இதைப்போன்றே) அவளுடைய காப்பாளரும் அவளுக்குத் தெரியாமல் (யாருக்கும்) வாக்குக் கொடுக்கக் கூடாது. 'இத்தா'க் காலத்தில் வைத்தே ஒரு பெண் ஒரு மனிதருக்கு (மணமுடிக்க) வாக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு (வாக்குக் கொடுத்தபடி) இருவரும் மணந்தால் இருவருக்கு மத்தியில் மணமுறிவு ஏற்படுத்தப்படாது.

''(திருக்குர்ஆன் 02:235 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'அஸ்ஸிர்ரு' (இரகசியம்) எனும் சொல்லுக்கு 'விபசாரம்' என்று பொருள்' என ஹஸன் அல் பஸாரீ(ரஹ்) கூறினார்கள்.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ஹத்தா யப்லுஃகல் கிதாபு அஜலஹு (குறித்த தவணை முடிகிற வரை) என்பது 'இத்தா' முடிவதைக் குறிக்கும் என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி 36

திருமணத்திற்கு முன் மணப் பெண்ணைப் பார்ப்பது. 64

5125. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். ஒரு வானவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர், 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்'' என்று சொல்லிக்கொண்டேன். 65

5126. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

ஒரு பெண்மணி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-) வந்துள்ளேன்'' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு அதைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு தம் தலையைத் தொங்கவிட்டார்கள்.

தம் விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அப்பெண்மணி, (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இவர் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துவையுங்கள்!'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் (அவரிடம்), '(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் பொருள் ஏதேனும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என்னிடம் ஏதும்) இல்லை, இறைத்தூதர் அவர்களே!'' என்று பதில் கூறினார்.

நபி(ஸல்) அவர்கள், 'உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!'' என்றார்கள்.

அவர் போய் பார்த்துவிட்டு பிறகு திரும்பி வந்து, 'இல்லை. இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! (ஏதும் கிடைக்கவில்லை)'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இரும்பாலான ஒரு மோதிராமாவது (கிடைக்குமா எனப்) பார்!'' என்றார்கள்.

அவர் (மீண்டும்) சென்றுவிட்டுத் திரும்பி வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! (ஏதும் கிடைக்கவில்லை)'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இரும்பாலான ஒரு மோதிராமாவது (கிடைக்குமா எனப்) பார்!'' என்றார்கள்.

அவர்(மீண்டும்) சென்றுவிட்டுத் திரும்பி வந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! (ஒன்றும்) கிடைக்கவில்லை. இறைத்தூதர் அவர்களே! இரும்பாலான மோதிரம் கூட கிடைக்கவில்லை; ஆனால், இதோ இந்த என்னுடைய வேட்டி உள்ளது'' என்றார்.

-அறிவிப்பாளர் ஸஹ்ல்(ரலி) கூறினார்: அவரிடம் ஒரு மேல்துண்டு கூட இல்லை; எனவேதான் தம் வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகக் கூறினார்.

அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'உம்முடைய (இந்த ஒரு) வேட்டியை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்? அந்த வேட்டியை நீர் உடுத்திக்கொண்டால், அவளின் மீது அதில் ஏதும் இருக்காது. அதை அவள் உடுத்திக் கொண்டால் உம் மீது அதில் ஏதும் இருக்காது. (உம்முடைய வேட்டியைக் கொடுத்து)விட்டு என்ன செய்யப்போகிறாய்?)'' என்று கேட்டார்கள். அவர் நெடுநேரம் (அங்கேயே) அமர்ந்திருந்துவிட்டுப் பிறகு எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதைக் கண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரை அழைத்து வருமாறு உத்தரவிட்டார்கள்.

அவ்வாறே அவர் அழைத்துவரப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயம் மனப்பாடமாக) உள்ளது?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், '(குர்ஆனில்) இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னுடன் உள்ளன'' என்று அவற்றை அவர் எண்ணி எண்ணிக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?' என்று கேட்டார்கள். 'ஆம் (ஓதுவேன்)'' என்று அவர் பதிலளித்தார்.

நபி(ஸல்) அவர்கள், 'உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக அவளை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன். நீர் செல்லலாம்!'' என்று கூறினார்கள். 66

பகுதி 37

'(மணப் பெண்ணின்) காப்பாளர் இல்லாத திருமணம் செல்லாது' என்று கூறியோரின் கருத்து. 67

ஏனெனில், அல்லாஹ் கூறினான்:

நீங்கள் (உங்களுடைய) துணைவியரை விவாகரத்துச செய்து அவர்கள் தங்களின் (இத்தா) தவணையின் இறுதியை அடைந்தால், அவர்கள் தங்களுக்குரிய துணைவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் மணந்துகொள்வதை (காப்பாளர்களே!) நீங்கள் தடுக்கவேண்டாம்! (திருக்குர்ஆன் 02:232)

இதில் கன்னிகழிந்த பெண்களும், அவ்வாறே கன்னிப் பெண்களும் அடங்குவர்.

அல்லாஹ் கூறினான்:

இணைவைக்கும் ஆண்கள் (ஏக) இறை நம்பிக்கைகொள்ளும் வரை (காப்பாளர்களே!) அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்து வைக்காதீர்கள். (திருக்குர்ஆன் 02:221)

மேலும் அல்லாஹ் கூறினான்:

''உங்களில் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள்.'' (திருக்குர்ஆன் 24:32)

5127. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்

அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன:

முதல் வகை:

இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும்: ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவரின் மகளையோ பெண் பேசி 'மஹ்ர்' (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.

இரண்டாம் வகைத் திருமணம்:

ஒருவர் தம் மனைவியிடம், 'நீ உன் மாதவிடாயிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குக் தூதனுப்பி (அவர் மூலம் கருத்தரித்துக் கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொள்!' என்று கூறிவிட்டு, அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளைவிட்டு அந்தக் கணவர் விலகி இருப்பார். அவள் உடலுறவுகொள்ளக் கேட்டுக்கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகிறவரை கணவர் அவளை ஒருபோதும் தீண்டமாட்டார். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாளெனத் தெரியவந்தால், விரும்பும்போது அவளுடைய கணவர் அவளுடன் உடலுறவு கொள்வார். குலச் சிறப்புமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற (அற்ப) ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்து வந்தனர். இந்தத் திருமணத்திற்கு 'நிகாஹுல் இஸ்திப்ளாஉ' (விரும்பிப் பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.

மூன்றாம் வகைத் திருமணம்:

பத்துப்பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்து பிரசவமாகி சில நாள்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம் 'நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்துவிட்டது'' என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) 'இவன் உங்கள் மகன், இன்னாரே!'' என்றே விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.

நான்காம் வகைத் திருமணம்:

நிறைய மக்கள் (ஓரிடத்தில்) ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்கமாட்டாள்.

இந்தப் பெண்கள் விலைமாதுகள் ஆவர். அவர்கள் தங்களின் வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்து குழந்தை பிறந்தால், அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்றுகூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை - பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் (தந்தையெனக்) கருதிய ஒருவனுடன் அந்தக்குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு 'அவரின் மகன்' என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்கமுடியாது.

சத்திய(மார்க்க)த்துடன் முஹம்மத்(ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டபோது இன்று மக்களின் வழக்கிலுள்ள (முதல் வகைத்) திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள்.

5128. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

''அந்த அநாதைப் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதை நீங்கள் கொடுக்காமல், அவர்களை நீங்களே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 04:127 வது) இறைவசனம், ஒரு மனிதரின் பாதுகாப்பில் இருக்கும் அநாதைப் பெண்ணைக் குறிக்கிறது. அவள் அவரின் செல்வத்தில் பங்காளியாக இருக்கலாம். அவரே (மற்றவர்களைவிட) அவளுக்கு(க் காப்பாளராக இருக்க)த் தகுந்தவராகவும் இருக்கலாம். எனவே, அவளுடைய சொத்தில் வேறு யாரும் தம்முடன் பங்காளியாவதை விரும்பாமல் அவளைத் தாமே மணந்துகொள்ளவிரும்பி வேறு யாருக்கும் அவளை மணமுடித்துக் கொடுக்காமல் தம்மிடமே அவளை முடக்கிவைத்துக் கொண்டிருப்பார். 68

5129. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

(என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) (தம் மருமகன்) குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவரை வேறொருவருக்கு மணமுடித்து வைக்க எண்ணிலானார்கள்.)

-குனைஸ்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ருப் போரில் கலந்துகொண்டவருமாயிருந்தார்கள். மேலும், அன்னார் மதீனாவில் இறந்தார்கள்.

உமர் இப்னு கத்தாப்(ரலி) கூறினார்:

எனவே, நான் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களைச் சந்தித்து (என் மகள் ஹஃப்ஸா குறித்து) எடுத்துரைத்து, 'நீங்கள் விரும்பினால் ஹஃப்ஸாவைத் தங்களுக்கு மணமுடித்து வைக்கிறேன்'' என்று சொன்னேன். அதற்கு உஸ்ஸமான்(ரலி), '(தங்கள் மகளை நான் மணந்துகொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)'' என்று கூறினார்கள்.

சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மான்(ரலி) என்னைச் சந்தித்து, 'இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றே எனக்குத் தோன்றுகிறது'' என்று கூறினார்கள்.

எனவே, நான் அபூ பக்ர்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) 'நீங்கள் விரும்பினால், (என் மகள்) ஹஃப்ஸாவைத் தங்களுக்கு திருமணம் முடித்துவைக்கிறேன்'' என்று கூறினேன். 69

5130. மஅகில் இப்னு யஸார்(ரலி) அறிவித்தார்

அந்த (திருக்குர்ஆன் 02:232 வது) வசனம் என்னைக் குறித்தே அருளப்பட்டது: என்னுடைய ஒரு சகோதரி ஒருவருக்கு நான் மணமுடித்துக் கொடுத்திருந்தேன். அவளை அவர் விவாக விலக்குச் செய்துவிட்டார். அவளுடைய 'இத்தா'க் காலத் தவணை முடிந்தபோது, அவர் அவளை மீண்டும் பெண் கேட்டு வந்தார். அப்போது நான் அவரிடம், 'நான் (என் சகோதரியை) உங்களுக்கு மணமுடித்துக் கொடுத்து மஞ்சத்திலே உங்களை இருக்கச் செய்து கண்ணியப்படுத்தினேன். ஆனால், அவளை நீங்கள் விவாகரத்துச் செய்துவிட்டு, இப்போது (மீண்டும்) அவளை பெண் கேட்டு வந்துள்ளீர்கள். இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! இனி ஒருபோதும் அவள் உங்களிடம் திரும்பமாட்டாள்'' என்று சொன்னேன். அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார். என் சகோதரி அவரிடமே திரும்பச் சென்று வாழ விரும்பினாள். அப்போதுதான் அல்லாஹ், '...அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 02:232 வது) வசனத்தை அருளினான். எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம், 'இப்போது நான் (அல்லாஹ் கூறியபடியே) செய்கிறேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறிவிட்டு, மீண்டும் அவருக்கே என் சகோதரியை மணமுடித்து வைத்தேன். 70

பகுதி 38

காப்பாளரே பெண் கேட்பவராயிருந்தால் (அவரே காப்பாளராகவும் இருந்து மணந்துகொள்வாரா? அல்லது பிறரைக் காப்பாளராக்கி, மணந்துகொள்வாரா?) 71

முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி), தம் பாதுகாப்பில் இருந்த ஒரு பெண்ணைப் பெண் பேசி மணந்துகொள்ள விரும்பினார்கள். எனவே, (உஸ்மான் இப்னு அபில் ஆஸ் என்ற தூரத்து உறவினர்) ஒருவருக்கு அன்னார் உத்தரவிட, அவர் (காப்பாளராக) இருந்து) முஃகீராவுக்கு (அப்பெண்ணை) மணமுடித்து வைத்தார்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (இடம் 'நீங்கள் விரும்பிய ஒருவருக்கு என்னை மணமுடித்து வையுங்கள்'' என்று கோரிய) உம்மு ஹகீம் பின்த் காரிழ் என்ற பெண்மணியிடம் '(மணமகனைத் தேர்ந்தெடுக்கும்) உன்னுடைய அதிகாரத்தை என்னிடம் ஒப்படைத்துவிடுகிறாயா?' என்று கேட்டார்கள். அப்பெண், 'ஆம் (ஒப்படைக்கிறேன்).'' என்று கூறினார். அதற்கு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'நானே உன்னை மணந்து கொள்கிறேன்'' என்றார்கள்.

அத்தாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்), '(காப்பாளரே தம் பொறுப்பிலுள்ள பெண்ணை மணந்து கொள்ள விரும்பினால்) 'உன்னை மணந்தேன்'' என்று அவர் கூறும்போது சாட்சி வைத்துக்கொள்ளட்டும்! அல்லது அவள் குடும்பத்தில் ஒருவரை (மணமுடித்துத் தர) அவா உத்தரவிடட்டும்!'' என்று கூறினார்கள்.

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்

ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள) வந்துள்ளேன்'' என்று கூறினார். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! இந்தப் பெண் தங்களுக்குத் தேவையில்லையாயின் எனக்கு இவளை மணமுடித்துத் தாருங்கள்'' என்று கேட்டார். 72

5131. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

''(நபியே!) பெண்களின் விஷயத்தில் தீர்ப்பு வழங்குமாறு உங்களிடம் அவர்கள் கோருகிறார்கள். நீங்கள் கூறுங்கள்: அவர்களின் விஷயத்தில் அல்லாஹ் (இவ்வாறு) தீர்ப்பளிக்கிறான்..'' எனும் (திருக்குர்ஆன் 04:127 வது) இறைவசனம், ஓர் அநாதைப் பெண்ணைக் குறிக்கிறது. அவள் ஒரு மனிதரின் பாதுகாப்பில், அவரின் சொத்தில் பங்காளியாக இருந்து வருவாள். இந்நிலையில், அவளைத் (தாமே மணந்து கொள்ள விரும்பினாலும், அவளுடன் அவர் முறையாக இல்லறம் நடத்தமாட்டார். அல்லது) தாமும் மணந்துகொள்வதை விரும்பமாட்டார். பிறருக்கு அவளை மணமுடித்துக் கொடுத்து தம் சொத்தில் அவர் தலையிடுவதையும் விரும்பமாட்டார். (இவ்வாறு) தம்மிடம் அவளை முடக்கி வைத்துக் கொள்வார். ஆனால், அல்லாஹ் இதற்குத்தடை விதித்தான். 73

5132. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண்மணி அவர்களிடம் வந்து தம்மை மணந்து கொள்ளுமாறு கோரினார். அவளைவிட்டும் தம் பார்வையைத் தாழ்த்திக் கொண்ட நபி(ஸல்) அவர்கள், பிறகு பார்வையை உயர்த்தினார்கள். ஆனால், அந்தப் பெண்ணை நபி(ஸல்) அவர்கள் (மணந்துகொள்ள) விரும்பவில்லை. அப்போது நபியவர்களின் தோழர்களில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்!'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(மஹ்ராகச் செலுத்த) உன்னிடம் (பொருள்) ஏதேனும் உள்ளதா?' என்று கேட்டார்கள். அவர், 'என்னிடம் ஏதும் இல்லை'' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'இரும்பினால் ஆன மோதிரம் கூட இல்லையா?' என்று கேட்டார்கள். அவர், '(இரும்பு) மோதிரம் கூட இல்லை. ஆயினும், (நான் கீழாடையாக உடுத்திக் கொள்ளும்) என்னுடைய இந்தப் போர்வையை இரண்டாகக் கிழித்து அவளுக்குப் பாதியைக் கொடுத்துவிட்டு மீதிப் பாதியை நான் எடுத்துக் கொள்கிறேன்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'இல்லை! குர்ஆனில் ஏதேனும் (உமக்கு மனனம்) உண்டா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(அப்படியானால்) நீர் செல்லலாம்! உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துவைத்தேன்'' என்றார்கள். 74

பகுதி 39

ஒருவர் தம் சிறு பிள்ளைகளுக்கு மணமுடித்துவைப்பது (செல்லும்).

ஏனெனில், அல்லாஹ் (திருக்குர்ஆன் 65:4 வது வசனத்தில்), 'பருவம் அடையாத பெண்ணின் 'இத்தா' வரம்பு மூன்று மாதம்'' என்று கூறுகிறான். 75

5133. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நான் ஆறு வயதுடையவளாய் இருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது ஆண்டுகள் (மனைவியாக) வாழ்ந்தேன். 76

பகுதி 40

தந்தை தம் மகளைத் தலைவருக்கு மணமுடித்து வைப்பது.

உமர்(ரலி) கூறினார்

என்னிடம் நபி(ஸல்) அவர்கள் (என் மகள்) ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். நான் (அவர்களுக்கு) மணமுடித்துக கொடுத்தேன். 77

5134. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நான் ஆறு வயதுடையவளாய் இருந்தபோது, என்னை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது, என்னுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) கூறினார்கள்:

ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்று எனக்குச் செய்தி எட்டியது.

பகுதி 41

(காப்பாளர் இல்லாதோருக்கு) ஆட்சியாளரே காப்பாளராவார். ஏனெனில், உம்முடன் (மனப்பாடமாக) உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு நான் மணமுடித்துத் தந்தேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

5135. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, 'என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்'' என்று கூறிவிட்டு, நீண்ட நேரம் நின்றிருந்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'தங்களுக்கு இவள் அவசியமில்லையானால், இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'இவளுக்கு மஹ்ராகக் கொடுக்க உன்னிடம் ஏதேனும் உள்ளதா?' என்று கேட்டார்கள். அவர், 'என்னுடைய வேட்டியைத் தவிர என்னிடம் வேறொன்றுமில்லை'' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவளுக்கு நீர் இதைக் கொடுத்துவிட்டால், வேட்டியில்லாமல் நீர் உட்கார்ந்து கொள்ள வேண்டியதுதான். எனவே, (இவளுக்கு மஹ்ர் செலுத்த) ஏதேனும் தேடுக!'' என்றார்கள். 'அவர் (தேடிவிட்டு வந்து) 'ஒன்றும் கிடைக்கவில்லை'' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இரும்பினாலான ஒரு மோதிரத்தையாவது தேடுக'' என்று கூறினார்கள். அப்போதும அவருக்கு எதுவும்கிடைக்கவில்லை. பிறகு நபி(ஸல்) அவர்கள், 'குர்ஆனில் ஏதேனும் உம்முடன் (மனனமாக) உள்ளதா?' என்று கேட்டார்கள். அதற்கவர், 'ஆம் இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம்'' எனச் சில அத்தியாயங்களின் பெயரைக் குறிப்பிட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உம்முடன் (மனனமாய்) உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துத் தந்தேன்'' என்று கூறினார்கள். 78

பகுதி 42

தந்தையோ, மற்ற காப்பாளரோ கன்னிப்பெண்ணிற்கோ, கன்னி கழிந்த பெண்ணிற்கோ அவர்களின் விருப்பமில்லாமல் மணமுடித்து வைக்கக் கூடாது.

5136. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், 'கன்னிகழிந்த பெண்ணை, அவளுடைய (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்கவேண்டாம்'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)'' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவள் மௌனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்) என்று கூறினார்கள். 79

5137. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நான், 'இறைத்தூதர் அவர்களே! கன்னிப் பெண் வெட்கப்படுவாளே?' என்று கேட்டேன்.

அதற்கு, 'அவளுடைய மௌனமே சம்மதம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பகுதி 43

ஒருவர் தம் மகளுக்கு அவளுடைய விருப்பமின்றி மணமுடித்து வைத்தால், அத்திருமணம் செல்லாது.

5138. கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா(ரலி) கூறினார்

கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்துவைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.

5139. காசிம் இப்னு முஹம்மத்(ரஹ்) அறிவித்தார்

அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) அவர்களும், முஜம்மிஉ இப்னு யஸீத்(ரஹ்) அவர்களும், கிதாம் என்றழைக்கப்படும் ஒருவர் தம் புதல்வி ஒருவரை மணமுடித்து வைத்தார்'' என்று ஆரம்பித்து மேற்கண்ட ஹதீஸைப போன்றே அறிவித்தனர்.

பகுதி 44

அநாதைப் பெண்ணிற்கு மணமுடித்து வைப்பது (செல்லும்).

ஏனெனில், அல்லாஹ், 'நீங்கள் அநாதை(ப் பெண்களை மணந்துகொண்டு அவர்)களின் விஷயத்தில் நீதிசெலுத்த இயலாது என அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்துகொள்ளுங்கள்'' (திருக்குர்ஆன் 04:03) என்று கூறுகிறான்.

மேலும், ஒருவர் காப்பாளரிடம் '(உம்முடைய பொறுப்பிலுள்ள) இன்ன பெண்ணை எனக்கு மணமுடித்து வை'' என்று கூறினார். அப்போது காப்பாளர் சிறிது நேரம் பொறுத்திருந்தார். அல்லது '(மஹ்ர் செலுத்த) உன்னிடம் என்ன உள்ளது?' என்று கேட்டார். பெண் கேட்டவர் என்னிடம் இன்ன இன்னது உள்ளது என்று கூறினார். அல்லது அவர்கள் இருவருமே (சிறிது நேரம்) அமைதியாக இருந்தனர். பிறகு காப்பாளர், 'அவளை உனக்கு மணமுடித்துத் தந்தேன்'' என்று கூறினால், இத்திருமணம் செல்லும். இது குறித்து நபி(ஸல்) அவர்களிடமிருந்து ஸஹ்ல்(ரலி) அவர்களின் அறிவிப்பு வந்துள்ளது. 80

5140. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'என் அருமைத் தாயார் அவர்களே! (என விளித்து,) 'அநாதை(ப் பெண்)களின் விஷயத்தில் நீதிசெலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக்கொள்ளுங்கள்.' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 04:3 வது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:

என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனம் குறிப்பிடும்) அநாதைப் பெண் ஒரு காப்பாளரின் பொறுப்பில் இருந்து வருவாள். அவரோ, இவளுடைய அழகிலும் செல்வத்திலும் ஆசை(ப்பட்டு இவளைத் திருமணம் செய்ய விருப்பம்) கொள்வார். ஆனால், அவளுக்குரிய மஹ்ரைக் குறைத்திட நினைப்பார். அப்போதுதான் 'நிறைவான மஹ்ரைத் தந்து அவர்களுடன் நீதியாக நடந்து கொள்ளாமல், அவர்களை நீங்கள் மணக்கக் கூடாது' என்று அவர்கள் தடைவிதிக்கப்பட்டனர். (அநாதையல்லாத) மற்ற பெண்களை மணந்துகொள்ளுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதற்குப் பிறகு மக்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தீர்ப்புக் கேட்டனர். அப்போது அல்லாஹ் '(நபியே!) பெண்களின் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி உங்களிடம் அவர்கள் கோருகின்றனர்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 04:127 வது) வசனத்தை அருளினான்.

இந்த வசனத்தில் அல்லாஹ் கூறியிருப்பதன் கருத்தாவது:

ஓர் அநாதைப் பெண்ணிடம் செல்வமும் அழகுமிருந்தால் அவளை மணந்து கொள்ளவும் அவளுடன் உறவு முறையை ஏற்படுத்திக் கொள்ளவும் 'மஹ்ர்' (விவாகக் கொடை) கொடுக்கவும் மக்கள் முன்வந்தனர். அதே சமயம் அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாய் இருந்தால் அவளைவிட்டுவிட்டு வேறு பெண்களை மணந்துகொண்டனர். அவளை விரும்பாதபோது (மணந்து கொள்ளாமல்)விட்டுவிடுவதைப் போல் அவளை அவர்கள் விரும்பும்போது மஹ்ர் விஷயத்தில் அவளுடைய உரிமையை நிறைவாக வழங்கி, அவளிடம் நீதியுடன் நடந்துகொண்டால் ஒழிய அவளை மணந்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு இல்லை. 81

பகுதி 45

பெண்கேட்பவர் காப்பாளரிடம், 'இன்ன பெண்ணை எனக்கு மணமுடித்துவையுங்கள்!'' என்று கேட்க, அதற்கவர், 'இன்னின்னவற்றிற்குப் பகரமாக உனக்கு அவளை நான் மணமுடித்துவைத்தேன்' என்று கூறினால் திருமணம் செல்லும். மணமகனிடம் காப்பாளர் 'இதில் உமக்கு விருப்பமுண்டா' என்றோ, 'சம்மதமா' என்றோ கேட்காவிட்டாலும் சரியே!

5141. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை' எனக் கூறினார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது?' என்று கேட்டார்கள். அவர், 'என்னிடம் எதுவுமில்லை'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு!'' என்று கூறினார்கள். அவர், 'என்னிடம் ஏதுமில்லை!'' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா?' என்று கேட்டார்கள். அவர், 'இன்னது இன்னது (மனனமாய்) உள்ளதா?' என்று கேட்டார்கள். அவர், 'இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன்'' என்று கூறினார்கள். 82

பகுதி 46

தம் சகோதர (இஸ்லாமிய)ன் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை மற்றவர் பெண் கேட்கலாகாது. ஒன்று, அவர் மணந்து கொள்வார்; அல்லது கைவிட்டுவிடுவார். (அதுவரை இவர் பொறுத்திருக்கவேண்டும்.)

5142. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்வதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். மேலும், ஒருவர் தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண்பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டு (தமக்காக அவளைப்) பெண்பேசலாகாது. தமக்கு முன் பெண்கேட்டவர் அதைக் கைவிடும்வரை; அல்லது இவருக்கு அவர் அனுமதியளிக்கும் வரை (இவர் பொறுத்திருக்க வேண்டும்) என்றும் கூறினார்கள்.

5143. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்த உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங் குறைகளை) துருவித் தருவி ஆராயாதீர்கள். ஒட்டுக்கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள்.

5144. (ஒரு பெண்ணை) தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண்பேசிக் கொண்டிருக்கும்போது மற்றவர் (அவளை) மணந்து கொள்வார்; அல்லது அவர் கைவிட்டு விடுவார். (அதுவரை இவர் பொறுத்திருக்க வேண்டும்.)

இதைஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 47

பெண் கேட்பதைக் கைவிடுவதன் விளக்க (மாய் அமைந்த சம்பவ)ம்.

5145. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

(என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) (தம் மருமகன் குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) இறந்துவிட்டதால் மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவரை வேறொருவருக்கு மணமுடித்து வைக்க எண்ணினார்கள்.

உமர்(ரலி) கூறினார்:

நான் அபூ பக்கர்(ரலி) அவர்களைச் சந்தித்து, 'நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்கு திருமணம் முடித்து வைக்கிறேன்'' என்று கூறினேன். (அவர்கள் பதிலேதும் கூறவில்லை.) எனவே, சிலநாள்கள் காத்திருந்தேன். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். (இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன்.

பிறகு (ஒருநாள்) அபூ பக்ர்(ரலி) என்னைச் சந்தித்து, 'நீங்கள் (என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச்) சொன்னபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணப்பது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை (எனவேதான், உங்களுக்கு பதிலேதும் கூறவில்லை). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொணடிருந்திருப்பேன்'' என்று கூறினார்கள். 83

பகுதி 48

(திருமண) உரை (குத்பா).

5146. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

(மதீனாவிற்கு) கிழக்கிலிருந்து இரண்டு மனிதர்கள் வந்து (எங்களிடையே சொற்பொழிவும் கருத்துச் செறிவும் மிக்கதோர்) சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாகப் பேச்சில் கவர்ச்சி உள்ளது'' என்று கூறினார்கள். 84

பகுதி 49

திருமணத்திலும் 'வலீமா' (எனும் மண)விருந்திலும் (சலங்கையில்லா) கஞ்சிரா (தஃப்) அடிப்பது.

5147. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா(ரலி) (காலித் இப்னு ஃதக்வான்(ரஹ்) அவர்களிடம்) கூறினார்

எனக்குக் கல்யாணம் நடந்த நாள் (காலை) நபி(ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டுக்கு) வந்தார்கள். எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்தார்கள். (அங்கு) சில (முஸ்லிம்) சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக்கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட எம் முன்னோரைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒரு சிறுமி, 'எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்'' என்று கூறினாள். உடனே, நபி(ஸல்) அவர்கள், '(இப்படிச் சொல்லாதே!) இதைவிட்டுவிட்டு முன்பு நீ சொல்லிக்கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்!'' என்று கூறினார்கள். 85

பகுதி 50

''மேலும், பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹ்ரை மனமுவந்து அளித்துவிடுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 04:4 வது) இறைவசனமும், அதிகபட்ச மஹ்ர் மற்றும் அனுமதிக்கப்பட்ட குறைந்த பட்ச மஹ்ரும்.

அல்லாஹ் கூறினான்:

நீங்கள் அவர்களில் ஒருத்திக்கு செல்வக் குவியலையே (மஹ்ராகக்) கொடுத்திருந்தாலும் கூட, அதிலிருந்து எதனையும் நீங்கள் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள். (திருக்குர்ஆன் 04:20)

மேலும், அல்லாஹ் கூறினான்:

நீங்கள் உங்கள் மனைவியரைத் தீண்டாமலேயே, அல்லது அவர்களுக்கு மஹ்ரை நிர்ணயிக்காமலேயே அவர்களை விவாகரத்துச் செய்விடுவீர்களாயின் உங்களின் மீது குற்றமேதுமில்லை. (திருக்குர்ஆன் 02:236)

ஸஹ்ல்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள், 'இரும்பினாலான மோதிரத்தையேனும் (மஹ்ராகக் கொடுக்கத்) தேடுக!'' என்று கூறினார்கள். 86

5148. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) ஒரு பேரீச்சங்கொட்டையின் எடையளவை (மஹ்ராகக்) கொடுத்து ஒரு (அன்சாரிப்) பெண்ணை மணந்தார்கள். (அவரின் முகத்தில்) திருமணத்தின் மகிழ்ச்சி(யின் ரேகை)யைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அவரிடம் அது குறித்துக் கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான்(ரலி), ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவை (மஹ்ராக)க் கொடுத்து ஒரு பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்'' என்று பதிலளித்தார்கள்.

அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து கத்தாதா(ரஹ்) அறிவித்துள்ள தகவலில் 'அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) ஒரு பேரீச்சங்கொட்டையின் எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து ஒரு பெண்ணை மணமுடித்துக்கொண்டார்கள்'' என்று காணப்படுகிறது.

பகுதி 51

குர்ஆனை கற்றுத் தருவதற்கு பதிலாகவோ மஹ்ர் ஏதும் குறிப்பிடாமலோ மணமுடித்து வைப்பது.

5149. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஅதீ(ரலி) கூறினார்

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்த மக்களிடையே இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண்மணி (வந்து) நின்று, 'என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக (-மஹ்ரின்றி மணந்துகொள்வதற்காக) வழங்கிவிட்டேன்; தங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்!'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதிலேதும் சொல்லவில்லை. பிறகு மீண்டும் எழுந்து நின்று 'என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்; என்று கூறினார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்கு பதிலேதும் சொல்லவில்லை. மூன்றாவது முறையாக அப்பெண்மணி எழுந்து 'என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்; தங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்'' என்றார். அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! இவரை எனக்கு மணமுடித்துவையுங்கள்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(இவருக்கு மஹ்ராகக் கொடுக்க) உம்மிடம் ஏதேனும் பொருள் உள்ளதா?' என்று கேட்டார்கள். அவர், 'இல்லை'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'நீர் சென்று (இவருக்கு மஹ்ராகச் செலுத்த) இரும்பினானலான ஒரு மோதிரத்தையாவது தேடுக'' என்று கூறினார்கள். அவர் போய்த் தேடிவிட்டு பிறகு (திரும்பி) வந்து, 'ஏதும் கிடைக்கவில்லை. இரும்பாலான மோதிரம் கூட கிடைக்கவில்லை'' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'குர்ஆனில் ஏதேனும் உம்முடன் (மனனமாக) உள்ளதா?' என்று கேட்டார்கள். அதற்கவர், 'ஆம் இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னிடம் (மனப்பாடமாக) உள்ளது'' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உம்முடன் (மனனமாய்) உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துத் தந்தேன், நீர் செல்லலாம்!'' என்று கூறினார்கள். 87

பகுதி 52

இரும்பு மோதிரம் உள்ளிட்ட பொருட்களை மஹ்ராக வழங்குதல்.

5150. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், 'இரும்பாலான மோதிரத்தையாவது கொடுத்து மணந்துகொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். 88

பகுதி 53

திருமணத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) முன் நிபந்தனைகள்

''முன் நிபந்தனைகள் விதிக்கப்படும்போது உரிமைகள் துண்டிக்கப்படுகின்றன'' என்று உமர்(ரலி) கூறினார். 89

மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் தம் மருமகன் ஒருவரை (அபுல் ஆஸ்(ரலி) அவர்களை) நினைவு கூர்ந்து, (அவரின் மாமனாரான) தம்(முடன் அவர் வைத்திருந்த) உறவு முறையில் நல்லவிதமாக நடந்துகொண்டதாக மிகவும் புகழ்ந்துரைத்தார்கள். 'அவர் பேசியபோது உண்மையே பேசினார். எனக்கு வாக்களித்தபோது, அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார்'' என்று கூறினார்கள். 90

5151. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நீங்கள் நிறைவேற்றவேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களுக்குத்) தரும் மஹ்ர் (விவாகக் கொடை)தான்.

என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். 91

பகுதி 54

திருமணத்தில் அனுதிக்கப்படா நிபந்தனைகள்.

இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்:

ஒரு பெண் (தன்னை மணக்கவிரும்புகிறவரிடம் அவரின் முதல் மனைவியான) மற்றொரு பெண்ணை விவாகவிலக்குச் செய்துவிடவேண்டும் என நிபந்தனை விதிக்கக் கூடாது.

5152. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒரு பெண், மற்றொரு பெண்ணின் பாத்திரத்தை (வாழ்வாதாரத்தை)க் காலி செய்(துவிட்டு அதைத் தன்னுடையாக்கிக் கொள்)வதற்காக அவளை விவாகவிலக்குச் செய்திடுமாறு (தம் மணாளரிடம்) கோர அனுமதியில்லை. ஏனெனில், அவளுக்கென விதிக்கப்பட்டது நிச்சயம் அவளுக்கே கிடைக்கும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 55

மணமுடித்தவர் மஞ்சள் நிற வாசனைத் திரவியத்தைப் பூசிக்கொள்வது.

இது குறித்து அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்புச் செய்துள்ளார்கள். 92

5153. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) தம் மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளம் இருக்க, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது (அது குறித்து) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வினவியபோது, தாம் ஓர் அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக்கொண்டதாக அப்துர் ரஹ்மான்(ரலி) நபியவர்களிடம் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு மஹ்ர் (விவாகக் கொடை) செலுத்தினீர்?' என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான்(ரலி), 'ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை'' என்று பதிலளித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா-மணவிருந்து அளிப்பீராக!'' என்று கூறினார்கள்.

பகுதி 56

5154. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டபோது முஸ்லிம்களுக்கு நல்ல விசாலமான மணவிருந்து கொடுத்தார்கள். வழக்கம் போல் மணமுடித்த கையோடு (தம் துணைவியரான) இறைநம்பிக்கையாளர்களுடைய அன்னையரின் இல்லங்களுக்குச் சென்று அவர்களுக்கு (சலாம் கூறி) பிரார்த்தித்தார்கள். அன்னையரும் நபியவர்களுக்காகப் பிரார்த்தித்தனர். பிறகு (புது மணப் பெண் ஸைனப் இருந்த இல்லத்திற்கு) திரும்பி வந்தார்கள். அப்போது இருவர் (எழுந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்து பேசிக்கொண்டு) இருப்பதைக் கண்டார்கள். எனவே, (இல்லத்தினுள் நுழையாமல்) திரும்பிச் சென்றார்கள்.

பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டது குறித்து நபியவர்களுக்கு நான் தெரிவித்தேனா, அல்லது (பிறர் மூலம்) தெரிவிக்கப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. 93

பகுதி 57

மணமகனுக்காக எவ்வாறு பிரார்த்திப்பது?

5155. அனஸ்(ரலி) அறிவித்தார்

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களின் (ஆடையின்) மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'இது என்ன?' என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து, ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன்'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'பாரக்கல்லாஹ் - அல்லாஹ் உங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவானாக!'' என்று பிரார்த்தித்துவிட்டு, 'ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா - மணவிருந்து அளியுங்கள்'' என்று கூறினார்கள். 94

பகுதி 58

மணமகளை மணமகனிடம் அனுப்பி வைக்கும் பெண்கள் மக்களுக்காகச் செய்யும் பிரார்த்தனை.

5156. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(நான் ஆறு வயதுடையவளாக இருந்த போது) என்னை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள். பின்னர் (ஒன்பது வயதில் தாம்பத்திய உறவைத் தொடங்கிய போது) என் தாயார் (உம்மு ரூமான்) என்னிடம் வந்து, என்னை வீட்டினுள் அனுப்பி வைத்தார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தனர். அவர்கள் 'நன்மையுடனும் சுபிட்சத்துடனும் வருக! (அல்லாஹ்வின்) நற்பேறு உண்டாகட்டும்!'' என்று (வாழ்த்துக்) கூறினர். 95

பகுதி 59

புனிதப் போருக்குச் செல்வதற்கு முன் (மணமகன்) தாம்பத்திய உறவைத் தொடங்க விரும்புவது.

5157. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

இறைத்தூதர்களில் ('யூஷஉ இப்னு நூன்' எனும்) ஒருவர் புனிதப் போருக்குச் சென்றார். அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம், 'ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்ற ஒருவர், அவளுடன் தாம்பத்திய உறவைத் தொடங்க விரும்பி (இதுவரை) தாம்பத்திய உறவு கொள்ளாதிருப்பின் அவர் என்னைப் பின்பற்றி (போருக்கு) வரவேண்டாம்'' என்று கூறினார்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 96

பகுதி 60

(பூப்பெய்திவிட்ட) ஒன்பது வயது மனைவியுடன் தாம்பத்திய உறவைத் தொடங்குவது.

5158. நான் ஆறு வயதுடையவளாய் இருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது ஆண்டுகள் (மனைவியாக) வாழ்ந்தேன். 97

பகுதி 61

பயணத்தில் தாம்பத்திய உறவைத் தொடங்குவது.

5159. அனஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் ('சத்துஸ் ஸஹ்பா' எனுமிடத்தில் 'ஸஃபிய்யா பின்த் ஸுயை' அவர்களை மணமுடித்து) மூன்று நாள்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அப்போது நபியவர்களின் வலீமா - மணவிருந்துக்காக முஸ்லிம்களை அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை.

நபி(ஸல்) அவர்கள் (பிலால்(ரலி) அவர்களிடம்) தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட, (அவ்வாறே அது கொண்டுவந்து விரிக்கப்பட்டது.) அதில் பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் போன்றவை இடப்பட்டன. இதுவே அன்னாரின் வலீமா - மணவிருந்ததாக அமைந்தது.

அப்போது முஸ்லிம்கள், 'ஸஃபிய்யா(ரலி) இறைநம்பிக்கையர்களின் அன்னை (-நபியவர்களின் துணைவி-)யாரில் ஒருவரா? அல்லது நபி(ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா?' என்று பேசிக்கொண்டனர். அப்போது 'ஸஃபிய்யா அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் திரையிட்(டுக் கொள்ளும்படி கட்டளையிட்)டால், அவர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் (-நபியவர்களின் துணைவியரில்) ஒருவர்; அப்படி அவருக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை)யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர்'' என்று (சிலர்) கூறினர். நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் புறப்பட்டபோது, தமக்குப் பின்னல் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கையமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) அவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் திரையிட்டு இழுத்து மூடிவிட்டார்கள். 98

பகுதி 62

நெருப்பின்றி, வாகனமின்றி பகல் வேளையில் தாம்பத்திய உறவைத் தொடங்குவது. 99

5160. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் என்னை (ஆறு வயதில்) மணந்தார்கள். பின்னர் (ஒன்பது வயதில் தாம்பத்திய உறவைத் தொடங்கியபோது) என் தாயார் (உம்மு ரூமான்) என்னிடம் வந்து என்னை வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் தான் என்னிடம் வந்து என்னை அதிர்ச்சிக் குள்ளாக்கினார்கள். 100

பகுதி 63

மென்பட்டு விரிப்புகள் போன்றவற்றைப் பெண்களுக்காகப் பயன்படுத்துவது.

5161. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

(எனக்குத் திருமணமான பொழுது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மென்பட்டு விரிப்புகளை அமைத்துவீட்டீர்களா?' என்று கேட்டார்கள். நான், 'எங்களிடம் எவ்வாறு மென்பட்டு விரிப்புகள் இருக்கும்?' என்றேன். அதற்கு அவர்கள், 'விரைவில் (உங்களிடம்) மென்பட்டு விரிப்புகள் இருக்கும்'' என்று பதிலளித்தார்கள். 101

பகுதி 64

மணப்பெண்ணை மாப்பிள்ளையிடம் அனுப்பி வைக்கும் (தோழிப்) பெண்களும், அவர்கள் சுபிட்சம் வேண்டி பிரார்த்திப்பதும்.

5162. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நான் ஒரு பெண்ணை அன்சாரிகளில் ஒருவ(ருக்கு மணமுடித்து வைத்து அவளை அவ)ரிடம் அனுப்பிவைத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஆயிஷாவே! உங்களுடன் பாடல் (பகுதி சிறுமியர்) இல்லையா? ஏனெனில், அன்சாரிகளுக்குப் பாடலென்றால் மிகவும் பிடிக்குமே'' என்றார்கள்.102

பகுதி 65

மணமகனுக்கு அன்பளிப்பு வழங்குதல்.

5163. அபூ உஸ்மான் அல்ஜஅத் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார்

(பஸராவிலுள்ள) பனூ ரிஃபாஆ பள்ளி வாசலில் (நாங்கள் இருந்துகொண்டிருந்த போது) அனஸ்(ரலி) எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்:

நபி(ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) இருக்கும் பகுதியைக் கடந்து சென்றால் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுவது வழக்கம்.

நபி(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணமுடித்து மணாளராக இருந்தபோது உம்முசுலைம்(ரலி) என்னிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஏதாவது ஒன்றை நாம் அன்பளிப்பாக வழங்கினால் நன்றாயிருக்குமே!'' என்று கூறினார்கள். அதற்கு நான், '(அவ்வாறே) செய்யுங்கள்!'' என்று அவர்களிடம் கூறினேன். எனவே, அவர்கள் பேரீச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றை எடுத்து 'ஹைஸ்' எனும் ஒருவகைப் பண்டத்தை ஒரு பாத்திரத்தில் தயாரித்தார்கள். அதை என்னிடம் கொடுத்து நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதை நான் எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களை நோக்கி நடந்(து சென்று கொடுத்)தேன். அப்போது அவர்கள் என்னிடம், 'அதைக் கீழே வைக்குமாறு கூறிவிட்டு, சிலரின் பெயரைக் குறிப்பிட்டுவிட்டு, அவர்களைத் தம(து மணவிருந்து)க்காக அழைத்து வருமாறும், நான் சந்திக்கிறவர்களையும் தமக்காக அழைத்து வருமாறும என்னைப் பணித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்ட பணியைச் செய்து (முடித்து)விட்டு, நான் திரும்பி வந்தேன்.

அப்போது (நபியவர்களின்) அந்த இல்லம் மக்களால் நிரம்பியிருந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிரு கைகளையும் அந்தப் பண்டத்தின் மீது வைத்து அல்லாஹ் நாடிய (பிரார்த்னைச் சொற்கள் முதலிய)வற்றை மொழியக் கண்டேன். பிறகு அதனை உண்பதற்காக அங்கிருந்த மக்களைப் பத்துப் பத்துப் பேராக அழைக்கலானார்கள். அவர்களிடம், 'அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! ஒவ்வொருவரும் அவரவர்(கைக்கு) அருகிலிருக்கும் பகுதியிலிருந்து உண்ணுங்கள்!'' என்று கூறினார்கள். அவர்கள் அனைவரும் அதனைச் சாப்பிட்டுவிட்டு கலைந்து சென்றனர். அவர்களில் வெளியே சென்றுவிட்டவர்கள் போக ஒரு சிலர் மட்டும் (அங்கேயே) பேசிக்கொண்டு இருந்துவிட்டார்கள். (அவர்கள் எழுந்து செல்லாமல் இருப்பது குறித்து) நான் வருந்தலானேன். பிறகு, நபி(ஸல்) அவர்கள் (வழக்கம் போல்) தம் துணைவியரின்) அறைகளை நோக்கி (அவர்களுக்கு சலாம் கூறிப் பிரார்த்திப்பதற்காக)ப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் போனேன். '(எழுந்து செல்லாமல் பேசிக்கொண்டிருக்கும்) அவர்கள் போய்விட்டிருப்பார்கள்'' என்று கூறினேன். எனவே, நபி(ஸல்) அவர்கள் திரும்பி வந்து (ஸைனப்(ரலி) அவர்களின்) அந்த இல்லத்திற்குள் சென்று திரையைத் தொங்கவிட்டார்கள். நான் அந்த அறையிலேயே இருந்து கொண்டிருந்தேன்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) பின்வரும் (திருக்குர்ஆன் 33:53 வது) வசனத்தை ஓதினார்கள்: இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தாயராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்று விடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. 103

அனஸ்(ரலி) கூறினார்: நான் (சிறுவயதில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பத்தாண்டுகள் பணிவிடை செய்தேன்.

பகுதி 66

மணப்பெண்ணுக்காக ஆடை அணிகலன்களை இரவல் வாங்குதல்.

5164. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(என் சகோதரி) அஸ்மாவிடம் நான் கழுத்தணி ஒன்றை இரவல் வாங்கினேன். அது (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில்) காணாமல் போய்விட்டது. எனவே, அதைத் தேடுவதற்காகத் தம் தோழர்களில் சிலரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். (அவர்கள் அதைத் தேடச் சென்றனர்.) அப்போது (வழியில்) அவர்களுக்குத் தொழுகை நேரம் வந்துவிட்டது. அந்த நேரம் (உளூச் செய்யாமலேயே அவர்கள் தொழுதார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது (உளூச் செய்யாமல் தொழுதது குறித்து) நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். அப்போதுதான் 'தயம்மும்' தொடர்பான (திருக்குர்ஆன் 05:6 வது) இறைவசனம் அருளப்பட்டது. எனவே, (ஆயிஷா(ரலி) அவர்களிடம்) உசைத் இப்னு ஹுளைர்(ரலி), 'தங்களுக்கு அல்லாஹ் நற்பலன் வழங்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! ஓர் (இக்கட்டான) சம்பவம் நேரும்போதெல்லாம் அதிலிருந்து விடுபடுவதற்கான முகாந்திரத்தைத் தங்களுக்கும், அதில் ஒரு சுபிட்சத்தை முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் ஏற்படுத்தாமல் இருந்ததில்லை'' என்று கூறினார்கள். 104

பகுதி 67

ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளும்போது செய்யவேண்டிய பிரார்த்தனைகள்.

5165. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ளும்போது 'பிஸ்மில்லாஹி; அல்லாஹும்ம ஜன்னிப்னிஷ்ஷைத்தான் வ ஜன்னிபிஷ் ஷைத்தான் மா ரஸக்த்தனா' (அல்லாஹ்வின் திருப்பெயரால்! இறைவா! என்னை விட ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எனக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!') என்று பிரார்த்தித்து அதன்பின்னர் அந்தத் தம்பதியருக்கு விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை.

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 105

பகுதி 68

'வலீமா' எனும் மணவிருந்து (மார்க்கத்தில்) உள்ளதுதான்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'ஓர் ஆட்டையாவது (அறுத்து) மணவிருந்து அளியுங்கள்'' என்றார்கள். 106

5166. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவிற்கு வந்தபோது நான் பத்து வயதுடைய (சிறு)வனாய் இருந்தேன். என் அன்னையர் (-என் அன்னையும் அன்னையின் சகோதரிகளும்-) என்னை நபி(ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்யுமாறு வற்புறுத்திக் கொண்டேயிருந்தனர். எனவே, நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பத்தாண்டு காலம் பணிவிடைகள் சென்றேன். நான் இருபது வயதுடையவனாய் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள். 'பர்தா' தொடர்பான வசனம் அருளப்பெற்றது குறித்து மக்களில் நானே மிகவும் அறிந்தவனாயிருந்தேன். (அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் திருமணம் செய்து தாம்பத்திய உறவைத் தொடங்கியபோது தான் ஆரம்பமாக அந்த வசனம் அருளப்பெற்றது. நபி(ஸ) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணந்தபோது (வலீமா - மணவிருந்திற்காக) மக்களை அழைத்தார்கள். மக்கள் வந்து சாப்பிட்டுவிட்டு (நபியவர்களின் வீட்டிலிருந்து) வெளியேறிச் சென்றனர். ஆனால், அவர்களில் ஒரு குழுவினர் (மட்டும் எழுந்து செல்லாமல்) அங்கேயே நீண்ட நேரம் நபி(ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்கள் வெளியேறட்டும் என்பதற்காக நபி(ஸல்) அவர்கள் எழுந்து வெளியே சென்றார்கள். நானும் அவர்களுடன் வெளியேறிவிட்டேன்.

(பிறகு நேராக) ஆயிஷா(ரலி) அவர்களின் அறையின் நிலைப்படிக்கு வந்தார்கள். நானும் அவர்களுடன் நடந்தேன். பிறகு (வீட்டில் அமர்ந்திருந்த) அக்குழுவினர் வெளியேற்றியிருப்பார்கள் என்று எண்ணியவாறு (வீட்டிற்குத்) திரும்பி வந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பி வந்தேன். (தம் துணைவியார்) ஸைனப்(ரலி) அவர்களின் அறைக்கு அவர்கள் வந்தபோது அப்போதும் அந்தக் குழுவினர் எழுந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்த வண்ணம் (பேசிக் கொண்டு) இருந்தனர். உடனே, நபி(ஸல்) அவர்கள் திரும்பிவிட்டார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். மீண்டும் அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களின் அறையின் நிலைப்படிக்கு வந்துவிட்டு அந்த மூவரும் வெளியேறியிருப்பார்கள் என்று எண்ணி (ஸைனபின் அறைக்குத்) திரும்பி வந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் (மூவரும் எழுந்து) வெளியே சென்றுவிட்டிருந்தார்கள். அப்போது எனக்கும் (தம் துணைவியாரான) ஸைனப்(ரலி) அவர்களுக்குமிடையே நபியவர்கள் திரையிட்டார்கள். இவ்வேளையில்தான் 'பர்தா' தொடர்பான (திருக்குர்ஆன் 33:53 வது) இறைவசனம் அருளப்பெற்றது. 107

பகுதி 69

ஓர் ஆட்டை அறுத்தேனும் வலீமா - மணவிருந்து அளிப்பது.

5167. அனஸ்(ரலி) அறிவித்தார்

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணந்துகொண்டபோது அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'அவளுக்கு எவ்வளவு மஹ்ர் (விவாகக் கொடை) கொடுத்தாய்?' என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'ஒரு பேரீச்சங் கொட்டை எடை அளவுத் தங்கத்தை'' என்று கூறினார்கள்.

ஹுமைத்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் அனஸ்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.

(மக்கா முஸ்லிம்களான) முஹாஜிர்கள் (மக்காவைத் துறந்து) மதீனா வந்தபோது அவர்கள் அன்சாரிகளிடம் தங்கினார்கள். அதன்படி அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) ஸஅத் இப்னு ரபீஉ அல்அன்சாரி(ரலி) அவர்களிடம் தங்கினார்கள். அப்போது (அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம்) ஸஅத் இப்னு ரபீஉ(ரலி), 'நான் தங்களுக்கு என் சொத்தை (சரிபாதியாக)ப் பங்கிட்டுத் தருகிறேன். என் இரண்டு மனைவியரில் ஒருவரை விவாகவிலக்குச் செய்து உங்களுக்கு அவரை மணமுடித்து வைக்கிறேன்'' என்று கூறினார்கள். (அதை மறுத்துவிட்ட) அப்துர்ரஹ்மான்(ரலி) 'அல்லாஹ் உங்கள் குடும்பத்திலும் செல்வத்திலும் சுபிட்சத்தை வழங்குவானாக!'' என்று பிரார்த்தித்துவிட்டு, கடைத் தெருவை நோக்கிச் சென்று வியாபாரத்தில் ஈடுபடலானார்கள். (முதன் முதலில்) பிறிது பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (இலாபமாக) அடைந்தார்கள். பின்னர் (அன்சாரிப் பெண்மணியை) மணந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா - மணவிருந்து அளியுங்கள்'' என்று கூறினார்கள். 108

5168. அனஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஸைனப்(ரலி) அவர்களை மணந்துகொண்டபோது அளித்த (வலீமா) மணவிருந்ததைப் போன்று தம் மனைவியரில் வேறெவரை மணந்தபோதும் அளிக்கவில்லை; ஸைனப்(ரலி) அவர்களை மணந்தபோது நபி(ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை (அறுத்து) மணவிருந்தளித்தார்கள்.

5169. அனஸ்(ரலி) அறிவித்தார்

(கைபர் போரில் கைது செய்யப்பட்ட) ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விடுதலை செய்து, தாமே அவர்களை மணமுடித்தும் கொண்டார்கள்; (ஸஃபிய்யா(ரலி) அவர்களின் விடுதலையையே அவர்களுக்குரிய மஹ்ராகவும் (விவாகக் கொடையாகவும்) ஆக்கினார்கள். அ(வர்களை மணந்த)தற்காக (விதை நீக்கப்பட்ட பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும்) 'ஹைஸ்' எனும் பண்டத்தை வலீமா (மணவிருந்தில் அளித்தார்கள்.109

5170. அனஸ்(ரலி) அறிவித்தார்

தம் (புதிய) மனைவி ஒருவருடன் நபி(ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தொடங்கியபோது (வலீமா விருந்திற்காக மக்களை அழைக்க) என்னை அனுப்பி வைத்தார்கள். நான் (தயாராயிருந்த) அந்த விருந்துக்காகச் சிலரை அழைத்தேன்.

பகுதி 70

ஒருவர் தம் மனைவியரில் சிலருக்காகச் சிலரைவிடப் பெரிய அளவில் 'வலீமா' விருந்தளிப்பது.

5171. ஸாபித் அல்புனானீ(ரஹ்) அறிவித்தார்

(அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் திருமணம் குறித்து அனஸ்(ரலி) முன்னிலையில் பேசப்பட்டது. அப்போது அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ஸைனப்(ரலி) அவர்களுக்காக (அன்னாரை மணந்து பின்) வலீமா - மணவிருந்தளித்த அளவு வேறு எவரை மணந்தபோதும் அவர்கள் மணவிருந்தளிக்க நான் கண்டதில்லை; நபி(ஸல்) அவர்கள் (ஸைனப்(ரலி) அவர்களை மணந்ததற்காக) ஓர் ஆட்டை (அறுத்து) வலீமா விருந்தளித்தார்கள்.

பகுதி 71

ஓர் ஆட்டைவிடக் குறைந்ததைக் கொண்டு 'வலீமா' விருந்தளிப்பது.

5172. ஸஃபிய்யா பின்த் ஷைபா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலருக்காக (அவர்களை மணந்ததன் பின்) வாற்கோதுமையில் இரண்டு 'முத்து' அளவில் வலீமா விருந்தளித்தார்கள். 110

பகுதி 72

வலீமா உள்ளிட்ட விருந்து அழைப்புகளை ஏற்பது கடமை; ஏழு நாள்கள் அல்லது அது போன்ற சில நாள்கள் வலீமா விருந்தளிப்பது; நபி(ஸல்) அவர்கள் (வலீமா விருந்துக்கென) ஒன்றிரண்டு நாள்கள் என்று காலம் குறிப்பிட்டதில்லை.

5173. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உங்களில் ஒருவர் வலீமா (மண) விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதனை ஏற்றுச் செல்லட்டும்!

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

5174. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், '(போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; (வலீமா - மணவிருந்து முதலியவற்றிற்காக) அழைத்தவருக்கு (அவரின் அழைப்பை ஏற்று) பதிலளியுங்கள்; நோயாளியை நலம் விசாரியுங்கள்'' என்று கூறினார்கள். 111

5175. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களை(க் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டு, ஏழு விஷயங்களை எங்களுக்குத் தடைசெய்தார்கள்.

நோயாளியிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -உங்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக என) பதில் சொல்லும்படியும், (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், 'சலாம்' எனும் முகமனைப் பரப்புப்படியும், விருந்து அழைப்பை ஏற்கும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

மேலும், (ஆண்கள்) தங்க மோதிரங்களை அணிய வேண்டாமென்றும், வெள்ளிப்பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்றும் 'மைஸரா' எனும் பட்டுமெத்தை, பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, தடித்த பட்டு, (கலப்படமில்லாத) சுத்தப்பட்டு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. 112

5176. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அஸ்ஸா இதீ(ரலி), தம் திருமணத்திற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களை அழைத்தார்கள். (அதில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்தார்கள்.) மணப் பெண்ணாயிருந்த அபூ உசைதுடைய துணைவியார் (உம்மு உசைத் சலாமா பின்த் வஹ்ப்) அவர்களே அன்றைய தினம் மக்களுக்குப் பணிவிடை செய்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு மணப்பெண் (உம்மு உசைத்) பருகுவதற்கு என்ன தந்தார் தெரியுமா?

அவர் நபி(ஸல்) அவர்களுக்கென்றே இரவில் பேரீச்சம் பழங்களைத் தண்ணீரில் ஊறப்போட்டு வைத்திருந்தார். நபி(ஸல்) அவர்கள் (வலீமா - மணவிருந்தை) சாப்பிட்டு முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழச் சாற்றை அவர் நபி(ஸல்) அவர்களுக்குப் பருகத் தந்தார்.

பகுதி 73

விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்.

5177. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

ஏழைகளைவிட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா - மணவிருந்து உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார். 113

பகுதி 74

ஆட்டுக்காலின் கீழ்ப்பகுதியை (வலீமா - மணவிருந்தாக வழங்கப்பட்டாலும் அதை) ஒருவர் (மனதார) ஏற்றுக் கொள்வது.

5178. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஓர் ஆட்டுக் காலின் கீழ்ப்பகுதி(யை விருந்தாக்கி, அந்த விருந்து)க்கு நான் அழைக்கப்பட்டாலும் நிச்சயம் நான் (அந்த அழைப்பை) ஏற்றுக் கொள்வேன். ஆட்டுக்காலின் கீழ்ப்பகுதி எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் நிச்சயம் நான் அதைப் பெற்றுக் கொள்வேன்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 114

பகுதி 75

மணவிருந்து முதலியவற்றுக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்வது.

5179. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

இந்த (மண) விருந்திற்கு நீங்கள் அழைக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ(ரஹ்) கூறினார்:

இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) ('நஃபில்' எனும் கூடுதல்) நோன்பு நோற்றிருந்த நிலையில் கூட மணவிருந்து உள்ளிட்ட அழைப்புகளை ஏற்றுச் சென்று வந்தார்கள்.

பகுதி 76

மணவிருந்திற்குப் பெண்களும் சிறுவர்களும் செல்வது.

5180. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

திருமண விருந்தொன்றுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த (அன்சாரிப்) பெண்களையும் சிறுவர்களையும் நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே (அவர்களை நோக்கி) மகிழ்ச்சியுடன்) எழுந்து சென்று, 'இறைவா! (நீயே சாட்சி' என்று கூறிவிட்டு, அவர்களைப் பார்த்து,) மக்களிலேயே நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்'' என்று கூறினார்கள். 115

பகுதி 77

விருந்து நடக்கும் இடத்தில் வெறுக்கத்தக்கச் செயல் ஏதேனும் நடைபெறக் கண்டால், திரும்பி வந்துவிடவேண்டுமா?

(வலீமா - மணவிருந்து நடைபெற்ற) வீட்டில் உருவப்படமிருப்பதைக் கண்ட இப்னு மஸ்வூத்(ரலி) திரும்பி வந்துவிட்டார்கள்.

இப்னு உமர்(ரலி) (தம் புதல்வர் சாலிமின் மணவிருந்திற்கு) அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அவர்களை அழைத்திருந்தார்கள். (இப்னு உமர்(ரலி) அவர்களின் அழைப்பை ஏற்று அவர்களின் இல்லத்திற்கு வந்த) அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அந்த இல்லத்தின் சுவரில் (ஆடம்பரமான) திரை (தொங்கவிடப்பட்டு) இருப்பதைக் கண்டார்கள். (அதைக் கண்ணுற்ற இல்லத்தின் உரிமையாளர்) இப்னு உமர்(ரலி) உடனே, '(சுவரில் திரையைத் தொங்கவிடும்) இந்த விஷயத்தில் எங்களைப் பெண்கள் மிகைத்துவிட்டார்கள். (எனவேதான் இந்தத்திரையை இங்கு காண்கிறீர்கள்)'' என்று கூறினார்கள். அதற்கு அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி), (இது போன்ற வெறுக்கத்தக்கச் செயலை செய்துவிடுவார்களோ என) யார் விஷயத்தில் நான் அஞ்சினேனோ (இல்லையா,) உங்களின் விஷயத்தில் எனக்கு அந்த அச்சம் ஏற்பட்டதில்லை. (ஆனால், நீங்களே இப்படிச் செய்துவிட்டீர்களே!) அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் உணவை உண்ணமாட்டேன்'' என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்றார்கள். 116

5181. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நான் சிறியமெத்தை ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதில் உருவப் படங்கள் வரையப்பட்டிருந்தன. (வீட்டுக்கு வந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதைக் கண்டதும் வாசற்படியிலேயே நின்றுவிட்டார்கள்; உள்ளே வரவில்லை. அவர்களின் முகத்தில் அதிருப்தியி(ன் அறிகுறி)யினை நான் அறிந்து கொண்டு, 'இறைத்தூதர் அவர்களே! நான் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்?' என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இது என்ன மெத்தை?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'தாங்கள் இதில் அமர்ந்துகொள்வதற்காகவும், தலை சாய்த்துக் கொள்வதற்காகவும் இதைத் தங்களுக்காகவே நான் விலைக்கு வாங்கினேன்'' என்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இந்த உருவப் படங்களை வரைந்தவர்கள் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்கள். மேலும் அவர்களின் 'நீங்கள் படைத்தவற்றுக்கு (நீங்களே) உயிர் கொடுங்கள்' என (இறைவன் தரப்பிலிருந்து இடித்து)க் கூறப்படும்'' என்று சொல்லிவிட்டு, 'உருவப்படங்கள் உள்ள வீட்டில் நிச்சயமாக (இறைவனின் கருணையைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழைவதில்லை'' என்று கூறினார்கள். 117

பகுதி 78

மணவிருந்தின்போது ஆண்களுக்குப் பணிவிடைசெய்யும் பொறுப்பினைப் பெண்கள் தாமே ஏற்பது.

5182. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) கூறினார்

அபூ உசைத் அஸ்ஸாஇதீ(ரலி) (தம்) மணவிருந்தின்போது நபி(ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் அழைத்தார்கள். இவர்களுக்காக அபூ உசைத்(ரலி) அவர்களின் துணைவியார் (மணப்பெண்) உம்மு உசைத்(ரலி) அவர்களே உணவு தயாரித்துப் பரிமாறவும் செய்தார்கள். உம்மு உசைத்(ரலி) (முந்தைய நாள்) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் பேரீச்சங்கனிகள் சிலவற்றை ஊறப்போட்டு வைத்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் அவர்களுக்காக உம்மு உசைத்(ரலி) அந்தப் பேரீச்சங்கனிகளை(த் தம் கரத்தால்) பிழிந்து அன்பளிப்பாக ஊட்டினார்கள்.

பகுதி 79

போதையளிக்காத பேரீச்சம் பழச்சாறு போன்ற பானங்களை மணவிருந்திற்காகத் தயாரித்தல்.

5183. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

அபூ உசைத் அஸ்ஸாஇதீ(ரலி), தம் திருமணத்திற்கு இறைத்தூதர்(ஸல் அவர்களை அழைத்தார்கள். (அதில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்தார்கள்.) மணப்பெண்ணாயிருந்த அபூ உசைதுடைய துணைவியார் (உம்மு உசைத்) அவர்களே அன்றைய தினம் மக்களுக்குப் பணிவிடை செய்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்(குப் பருகக் கொடுப்பதற்)காக மணப்பெண் (உம்மு உசைத்) என்ன ஊறவைத்தார் தெரியுமா?

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குகென்றே (தண்ணீரில்) பேரீச்சம் பழங்களை (முந்தைய) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் ஊறப்போட்டு வைத்திருந்தார். (நபி(ஸல்) அவர்கள் மணவிருந்தைச் சாப்பிட்டு முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழச்சாற்றை அவர் நபி(ஸல்) அவர்களுக்குப் பருகத் தந்தார்.)118

பகுதி 80

பெண்களுடன் நளினமாக நடந்து கொள்வதும், 'பெண்கள் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவர்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் (உவமித்துக்) கூறியதும்.

5184. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

பெண், (வளைந்த) விலா எலும்பைப் போன்றவளாவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஓடித்தேவிடுவாய். (அதற்காக அப்படியே) அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்க அனுபவிக்க வேண்டியதுதான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 81

பெண்களுக்கு நலம் நாடுதல்.

5185. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

5186. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பெண்கள் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ (பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீவிட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். எனவே, பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 120

5187. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எங்கள் பெண்களுடன் (அதிகமாகப்) பேசுவதையும் சகஜமாகப் பழகுவதையும் தவிர்த்து வந்தோம். (அவ்வாறு பழகி, தவறு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால்) எங்கள் தொடர்பாக (குர்ஆன் வசனம்) ஏதேனும் இறங்கி (தடை விதிக்கப்பட்டு) விடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம். நபி(ஸல்) அவர்கள் இறந்த பிறகு (பெண்களுடன் தாராளமாகப்) பேசினோம்; சகஜமாகப் பழகினோம்.

பகுதி 82

உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 66:06)

5188. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உங்களில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவருக்கும் (அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: ஆட்சித்தலைவரும் பொறுப்பாளரே. அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (-குடும்பத்தலைவன்-) தன் மனைவி மக்களின் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி) விசாரிக்கப்படுவான். பெண் (-மனைவி-), தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் (அந்தப் பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் (தனக்குரிய பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவான்.

அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள்.

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 121

பகுதி 83

மனைவியுடனான நல்லுறவு.

5189. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி) அமர்ந்து கொண்டு ஒவ்வொரு வரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடி மறைக்காமல் (உள்ளதை உள்ளபடி) எடுத்துரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக்கொண்டனர்.

முதலாவது பெண் கூறினார்:

என் கணவர், (உயரமான) மலைச் சிகரத்தில் வைக்கப்பட்டுள்ள மிகவும் இளைத்துப்போன ஒட்டகத்தின் இறைச்சிக்கு நிகரானவர். (இளைத்த ஒட்டகத்தின் இறைச்சியாயினும், அதை எடுக்க) மேலே செல்லலாம் என்றால் (அதை மலைப்பாதை) சுலபமானதாக இல்லை. (சிரமத்தைத் தாங்கி) மேலே ஏற (அது ஒன்றும்) கொழுத்த (ஒட்டகத்தின்) இறைச்சியுமில்லை.122

இரண்டாவது பெண் கூறினார்:

நான் என் கணவர் பற்றிய செய்திகளை அம்பலப்படுத்தப் போவதில்லை. (அப்படி அம்பலப்படுத்த முயன்றாலும்) அவரைப் பற்றிய செய்திகளை ஒன்று கூட விடாமல் சொல்ல முடியுமா என்ற அச்சமும் எனக்கு உண்டு. அவ்வாறு கூறுவதானாலும் அவரின் வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான குற்றங் குறைகளைத் தான் கூறவேண்டியதிருக்கும்.

மூன்றாவது பெண் கூறினார்:

என் கணவர் மிகவும் உயரமான மனிதர் அவரைப் பற்றி நான் (ஏதேனும்) பேசி (அது அவரின் காதுக்கு எட்டி)னால். நான் விவாகரத்துச் செய்யப்பட்டு விடுவேன்; (அதே நேரத்தில் அவரிடம் எதுவும் பேசாமல்) நான் மௌனமாயிருந்தால் அந்தரத்தில் விடப்படுவேன். (என்னுடன் நல்லபடி வாழவுமாட்டார்; என்னை விவாகரத்தும் செய்யமாட்டார்.)

நான்காவது பெண் கூறினார்.

என் கணவர் (மக்கா உள்ளிட்ட) 'திஹாமா' பகுதியின் இரவு நேரத்தைப் போன்ற (இதமான)வர். (அவரிடம்) கடும் வெப்பமும் இல்லை; கடுங்குளிருமில்லை. (அவரைப் பற்றி எனக்கு) அச்சமும் இல்லை; (என்னைப் பற்றி அவரும்) துச்சமாகக் கருதியதுமில்லை.

ஐந்தாவது பெண் கூறினார்:

என் கணவர் (வீட்டுக்குள்) நுழையும்போது சிறுத்தை போல் நுழைவார். வெளியே போனால் சிங்கம் போலிருப்பார். (வீட்டினுள்) தாம் கண்டுபிடித்த (குறைபாடுகள் முதலிய)வை பற்றி எதுவும் கேட்கமாட்டார். 123

ஆறாவது பெண் கூறினார்:

என் கணவர் உண்டாலும் வாரி வழித்து உண்டு விடுகிறார். குடித்தாலும் மிச்சம் மீதி வைக்காமலும் குடித்துவிடுகிறார். படுத்தாலும் (விலகி) சுருண்டு போய்ப் படுத்துக்கொள்கிறார். என் சஞ்சலத்தை அறிய தம் கையைக் கூட அவர் (என் ஆடைக்குள்) நுழைப்பதில்லை. 124

ஏழாவது பெண் கூறினார்:

என் கணவர் 'விவரமில்லாதவர்' அல்லது 'ஆண்மையில்லாதவர்', சற்றும் விவேகமில்லாதவர். எல்லா நோய்களும் (குறைகளும்) அவரிடம் உண்டு. (அவரிடம் பேசினால் உன்னை ஏசுவார். கேலி செய்தால்) உன் தலையைக் காயப்படுத்துவார். (கோபம் வந்துவிட்டால்) உன் உடலைக் காயப்படுத்துவார். அல்லது இரண்டையும் செய்வார்.

எட்டாவது பெண் கூறினார்:

என் கணவர் தொடுவதற்கு முயலைப் போன்ற (மிருதுவான மேனி உடைய)வர்; முகர்வதற்கு மரிக்கொழுந்து போல் மணக்கக் கூடியவர்.

ஒன்பதாவது பெண் கூறினார்:

என் கணவர் (அவரை நாடி வருவோரைக் கவரும் வகையில்) உயரமான தூண்(கள் கொண்ட மாளிகை) உடையவர். நீண்ட வாளுறை கொண்ட (உயரமான)வர். (விருந்தினருக்குச் சமைத்துப் போட்டு வீட்டுமுற்றத்தில்) சாம்பலை நிறைத்துவைத்திருப்பவர். (மக்கள் அவரைச் சந்திப்பதற்கு வசதியாக) சமுதாயக் கூடத்திற்கு அருகிலேயே வீட்டை அமைத்துக் கொண்டவர்.

பத்தாவது பெண் கூறினார்:

என் கணவர் செல்வந்தர் எத்துணை பெரும் செவ்வந்தர் தெரியுமா? எல்லா செல்வந்தர்களையும் விட மேலான செல்வந்தர். அவரிடம் ஏராளமான ஒட்டகங்கள் உள்ளன. (அவற்றை அறுத்து விருந்தினருக்குப் பரிமாறுவதற்கு வசதியாகப்) பெரும்பாலும் அவை தொழுவங்களிலேயே (தயார் நிலையில்) இருக்கும். (விருந்தினர் வராத சில நாள்களில் மட்டும்) குறைவாகவே மேய்ச்சலுக்கு விடப்படும். (விருந்தினர் வருகையை முனனிட்டு மகிழ்ச்சியில் ஒலிக்கப்படும்) குழலோசையை அந்த ஒட்டகங்கள் கேட்டுவிட்டால் தாம் அழிந்தோம் என அவை உறுதிசெய்து கொள்ளும்.

பதினொன்றாவது பெண் கூறினார்:

என் கணவர் (பெயர்) அபூ ஸர்உஅபூ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். (ஆசையாசையாக உணவளித்து) என் கொடுங்கைகளை கொழுக்கச் செய்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது. ஒரு மலைக் குகையில் (அல்லது) 'ஷிக்' எனுமிடத்தில்) சிறிது ஆடுகளுடன் (திரிந்துகொண்டு) இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர், என்னை (மனைவியாக ஏற்று) குதிரைகளும் ஒட்டகங்களும் உள்ள, தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த (அவரின் பண்ணை) வீட்டில் என்னை வாழச் செய்தார். நான் அவரிடம் எதையும் பேசுவேன்; நான் அலட்சியப்படுத்தப்பட்டதில்லை. நான் தூங்கினாலும் (நிம்மதியாக) முற்பகல் வரைத் தூங்குகிறேன். (என் தூக்கத்தை யாரும் கலைப்பதில்லை.) நான் (உண்டாலும்) பருகினாலும் பெருமிதப்படும் அளவிற்கு (உண்ணுகிறேன்) பருகுகிறேன்.

(என்கணவரின் தாயார்) உம்மு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரின் வீட்டுக்கு களஞ்சியம் (எப்போதும்) கனமாகவே இருக்கும் அவரின் வீடு விசாலமானதாகவே இருக்கும்.

(என் கணவரின் புதல்வர்) இப்னு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரின் படுக்கை, உருவப்பட்ட கோரை போன்று (அல்லது உறையிலிருந்து எடுக்கப்பட்ட வாளைப் போன்று (சிறியதாக) இருக்கும். (அந்த அளவிற்குக் கச்சிதமான உடலமைப்பு உள்ளவர்.) ஓர் ஆட்டுக் குட்டியின் ஒரு சப்பை(இறைச்சி) அவரின் பசியைத் தணித்துவிடும். (அந்த அளவிற்குக் குறைவாக உண்ணுவர்.)

(என் கணவரின் புதல்வி) பின்த் அபீ ஸர்உ எத்தயைவர் தெரியுமா? தம் தாய் தந்தைக்கு அடங்கி நடப்பவர். (கட்டான உடல் கொண்ட) அவரின் ஆடை நிறைவானதாக இருக்கும். அண்டை வீட்டுக்காரி அவரைக் கண்டு பொறாமை கொள்வாள்.

(என் கணவர்) அபூ ஸர்உ உடைய பணிப்பெண் எத்தகையவள் தெரியுமா? அவள் எங்கள் (இரகசிய) செய்திகளை அறவே வெளியிடுவதில்லை. வீட்டிலுள்ள உணவுப் பொருள்களைச் சேதப்படுத்துவதுமில்லை. வீட்டில் குப்பை கூளங்கள் சேர விடுவதுமில்லை. (அவ்வளவு நம்பிக்கையானவள்; பொறுப்புமிக்கவள்; தூய்மை விரும்பி.)

(ஒருநாள்) பால் பாத்திரங்களில் (மோர் கடைந்து) வெண்ணெய் எடுக்கப்படும் (வசந்த கால அதிகாலை) நேரம் (என் கணவர்) அபூ ஸர்உ வெளியே சென்றார். (வழியில்) ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவளுடன் சிறுத்தைகள் போன்ற அவளுடைய இரண்டு குழந்தைகள் இருந்தனர். அந்தக் குழந்தைகள் அவளுடைய இடைக்குக் கீழே இரண்டு மாதுகளங் கனிகளை வைத்து விளையாட்டிக் கொண்டிருந்தனர். எனவே, (அவளுடைய கட்டழகில் மனதைப் பறி கொடுத்து) என்னை விவாக விலக்குக் செய்துவிட்டு, அவளை மணந்தார். அவருக்குப் பின் இன்னொரு நல்ல மனிதருக்கு நான் வாக்கப்பட்டேன். அவர் வேகமாகச் செல்லும் குதிரையில் ஏறி, (பஹ்ரைன் நாட்டிலுள்ள) 'கத்' எனும் இடத்தைச் சேர்ந்த ஈட்டி ஒன்றை எடுத்தார். மாலையில் வீடு திரும்பியபோது ஏராளமான கால்நடைகளை என்னிடம் கொண்டு வந்தார். மேலும், எனக்கு ஒவ்வொரு பொருட்களிலும் ஒரு ஜோடியை வழங்கி, 'உம்மு ஸாஉவே! (நன்றாக) நீயும் சாப்பிடு! உன்(தாய்) வீட்டாருக்கும் சாப்பிடக் கொடு'' என்றார்.

(ஆனாலும்,) அவர் எனக்கு (அன்புடன்) வழங்கிய எல்லாப் பொருள்களையும் நான் ஒன்றாய்க் குவித்தாலும் (என் முதல் கணவரான) அபூ ஸர்உவின் சின்னஞ்சிறு பாத்திரத்தைக் கூட அவை நிரப்பமுடியாது (என்று கூறி முடித்தார்.)

ஆயிஷா(ரலி) கூறினார்:

(என்னருமைக் கணவரான) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்), '(ஆயிஷாவே!) உம்மு ஸர்விற்கு அபூ ஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (அன்பாளனாக) இருப்பேன்' என்றார்கள். 125

அபூ அப்தில்லாஹ் (புகாரி ஆகிய நான்) கூறுகிறேன்.

மற்ற சில அறிவிப்புகளில் சிற்சில வார்த்தைகள் மாறியுள்ளன.

5190. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

அபிசீனியர்கள் தம் ஈடடிகளால் (வீர விளையாட்டு) விளையாட்டிக் கொண்டிருந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை மறைத்தபடி (வீட்டு வாசலில் நின்று கொண்டு) இருக்க, நான் (அவர்களின் விளையாட்டைப்) பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக (ரசித்து முடித்து, சலிப்புற்று) திரும்பிச் செல்லும்வரை நான் (அதைப்) பார்த்துக்கொண்டேயிருந்தேன். வயது குறைந்த இளம்பெண் எவ்வளவு நேரம் கேளிக்கை (விளையாட்டு)களைக் கேட்டுக் கொண்டு(ம் பார்த்துக்கொண்டும்) இருப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள். 126

பகுதி 84

ஒருவர் தம் மகளுக்கு, அவளுடைய கணவரின் நிலை குறித்து புத்திமதி சொல்வது.

5191. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நான் நீண்ட நாள்களாக நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் இருவரைப் பற்றி உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களிடம் கேட்கவேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தேன். (ஏனெனில், அவ்விருவரைப் பற்றித் தான்) அல்லாஹ் (குர்ஆனில்), 'நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால் (அது உங்களக்குச் சிறந்ததாகும்.) ஏனெனில், உங்கள் உள்ளங்கள் (நேரிய வழியிலிருந்து சற்றே) பிறழ்ந்து விட்டிருக்கின்றன'' (திருக்குர்ஆன் 66:04) என்று கூறியிருந்தான்.

(ஒரு முறை) உமர்(ரலி) ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். நானும் (அந்த ஆண்டு) அவர்களுடன் ஹஜ் செய்தேன். (ஹஜ்ஜை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில்) உமர்(ரலி) (தம்) இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) ஒதுங்கினார்கள். அவர்களுடன் நானும் தண்ணீர்க் குவளையுடன் சென்றேன். அவர்கள் இயற்கைக் கடனை முடித்துவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் அவர்களின் கைகளில் (குவளையிலிருந்த) தண்ணீரை ஊற்றினேன். (அதில்) அவர்கள் 'உளூச் செய்தார்கள். அப்போது நான் அன்னாரிடம், 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் இருவரைக் குறித்து, 'நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால் (அது உங்களுக்குச் சிறந்ததாகும்). ஏனெனில், உங்கள் உள்ளங்கள் (நேரிய வழியிலிருந்து சற்றே) பிறழ்ந்து விட்டிருக்கின்றன' என்று அல்லாஹ் கூறியுள்ளானே, அந்த இருவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு உமர்(ரலி), 'இப்னு அப்பாஸே! உங்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (உங்களுக்குமா இது தெரியாமல் போயிற்று!) ஆயிஷா(ரலி) அவர்களும் ஹஃப்ஸா(ரலி) அவர்களும் தாம் அந்த இருவர்'' என்று பதிலளித்தார்கள்.

பிறகு உமர்(ரலி) நடந்த நிகழ்ச்சி முழுவதையும் கூறலானார்கள். அப்போது அவர்கள் கூறினார்

நான் அன்சாரியான என் பக்கத்து வீட்டுக் காரர் ஒருவருடன் பனூ உமய்யா இப்னு ஸைத் குலத்தாருடன் வசித்து வந்தேன். இவர்கள் மதீனாவின் மேடான பகுதிகளில் ஒன்றில் குடியிருப்பவர்களாவர்.

நாங்கள் இருவரும் முறை வைத்துக் கொண்டு (அங்கிருந்து) இறங்கிவந்து நபி(ஸல்) அவர்களுடன் இருப்போம். அவர் ஒரு நாள் நபியவர்களுடன் இருப்பார். நான் ஒரு நாள் நபியவர்களுடன் இருப்பேன். நான் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும் அன்றைய நாளின் வேத அறிவிப்புகள் (நபியவர்களின் சொல், செயல்) முதலானவற்றை நான் அவரிடம் வந்து தெரிவிப்பேன். அவர் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தால் இதைப் போன்றே அவரும் செய்வார்.

குறைஷிக் குலத்தினராகிய நாங்கள் (மக்காவிலிருந்தபோது) பெண்களை மிஞ்சி விடுபவர்களாக இருந்து வந்தோம். (பெண்களை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்.) நாங்கள் (மக்காவைத் துறந்து) அன்சாரிகளிடம் (மதீனா நகருக்கு) வந்தபோது பெண்கள் ஆண்களை மிஞ்சிவிடக் கூடியவர்களாக இருந்தனர். (பெண்கள் ஆண்களைக் கட்டுப்படுத்துபவர்களாக, தம் மனத்திற்குப் பிடிக்காதவற்றைக் கூறும்போது ஆண்களை எதிர்த்துப் பேசக் கூடியவர்களாக இருந்தனர். (இதைக் கண்ட) எங்களுடைய பெண்களும் அன்சாரிப் பெண்களின் வழக்கத்தைக் கையாளத் தொடங்கினர்.

(ஒரு நாள்) நான் என் மனைவி (ஸைனப் பின்த் மழ்வூன்) இடம் (கோபத்துடன்) இரைந்து பேசினேன். உடனே என் மனைவியும் என்னை எதிர்த்துச் பேசினார். அவர் என்னை எதிர்த்துப் பேசிய(து (எனக்குப் பிடிக்கவில்லை; அ)தை நான் வெறுத்தேன். அதற்கு அவர், 'நான் உங்களை எதிர்த்துப் பேசியதற்காக நீங்கள் ஏன் (என்னை) வெறுக்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களின் துணைவியர் கூட (அன்னாரின் பேச்சுக்கு) மறு பேச்சு பேசத்தான் செய்கிறார்கள். அவர்களில் சிலர் நபியவர்களிடம் பகலில் இருந்து இரவு வரை பேசுவதில்லை'' என்று கூறினார். இது என்னை அதிர்ச்சி அடையச் செய்யவே, 'அவர்களில் இப்படிச் செய்தவர் பெரும் இழப்புக்கு ஆளாகிவிட்டார்'' என்று என் மனைவியிடம் கூறினேன்.

பிறகு உடை அணிந்து கொண்டு (அங்கிருந்து) இறங்கி, (நபியவர்களுடைய துணைவியரில் ஒருவராயிருந்த என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். 'ஹஃப்ஸாவேஸ உங்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம் பகலில் இருந்து இரவு வரை கோபமாக இருக்கிறார்களா?' என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, 'ஆம்'' என்று பதிலளித்தார். நான் 'அப்படியானால், நீ நஷ்டப்பட்டுவிட்டாய்; இழப்புக்குள்ளாம்விட்டாய். இறைத்தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அதனால் அல்லாஹ்வும் கோபமடைந்து நீ அழிந்து போய்விடுவாய் எனும் அச்சம் உனக்கில்லையா? நபி(ஸல்) அவர்களிடம் அதிகமாக(த் தேவைகளை)க் கேட்காதே. எதற்காகவும் அவர்களை எதிர்த்துப் பேசாதே. அவர்களிடம் பேசாமல் இருக்காதே. உனக்கு (அவசியத் தேவையென்று) தோன்றியதை என்னிடம் கேள். உன் அண்டை வீட்டுக்காரர் - ஆயிஷா - உன்னை விட அழகு மிக்கவராகவும் நபி(ஸல்) அவர்களுக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் சற்று கூடுதல் உரிமை எடுத்துக் கொண்டு ஊடலும் கோபமும் கொள்வதைப் பார்த்து) நீ ஏமாந்து போய் (அவரைப் போல் நடந்து கொண்டு) விடாதே'' என்று நான் (என் மகளுக்குப் புத்திமதி) கூறினேன்.

அந்தக் காலகட்டத்தில் நாங்கள், (ஷாம் நாட்டில் வாழும்) 'ஃகஸ்ஸான்' குலத்தார் எங்களின் மீது போர் தொடுப்பதற்காக, (தங்கள்) குதிரைகளுக்கு லாடம் அடித்து(த் தயாராம்)க் கொண்டிருக்கின்றனர் என்று ஒரு (வதந்தியான) செய்தியைப் பேசிக்கொண்டிருந்தோம்.

(இவ்வாறிருக்க ஒருநாள்) என் அன்சாரித் தோழர் தம் முறைக்குரிய நாளில் (எங்கள் பகுதியிலிருந்து) இறங்கி நபி(ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு, இஷா நேரத்தில் திரும்பி வந்தார். என் வீட்டுக் கதவை மிக பலமாகத் தட்டினார். (கதவைத் திறக்க நான் சற்று தாமதித்தபோது) 'அவர் (உமர்) இங்கே இருக்கிறாரா? அல்லது வெளியில் சென்றுவிட்டாரா?' என்று கேட்டார். (வழக்கத்திற்கு மாறாக அவர் கதவைத் தட்டியதால்) நான் கலக்கமுற்று அவரைப் பார்க்க வெளியே வந்தேன். அவர், 'இன்று மிகப் பெரிய சம்பவமொன்று நடந்துவிட்டது'' என்று கூறினார். நான், 'என்ன அது? ஃகஸ்ஸான் குலத்தார் (படையெடுத்து) வந்துவிட்டனரா?' என்று கேட்டேன். 'இல்லை. அதைவிடப் பெரிய, அதை விட அதிர்ச்சியான சம்பவம் நடந்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரை விவாகரத்துச் செய்துவிட்டார்கள்!'' என்று கூறினார்.

நான், '(என் மகள்) ஹஃப்ஸா நஷ்டமடைந்து இழப்புக்குள்ளாகிவிட்டார். நான் இப்படி (கூடிய விரைவில்) நடக்கத்தான் போகிறது என்று எண்ணியிருந்தேன்' எனக் கூறிவிட்டு, உடை அணிந்துகொண்டு புறப்பட்டேன். நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகை தொழுதேன். (தொழுகை முடிந்த) உடனே நபி(ஸல்) அவர்கள் தமக்குரிய மாடியறைக்குச் சென்று அங்கே தனியே இருந்தார்கள். நான் ஹஃப்ஸாவிடம் சென்றேன். அப்போது அவர் அழுதுகொண்டிருந்தார். நான், 'ஏன் அழுகிறாய்? இது குறித்து உன்னை நான் எச்சரித்திருக்கவில்லையா? நபி(ஸல்) அவர்கள் உங்களை விவாகரத்துச செய்துவிட்டார்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'எனக்கு (ஒன்றும்) தெரியாது. அதோ அவர்கள் அந்த மாடி அறையில் தனியாக இருக்கிறார்கள்'' என்று கூறினார்.

உடனே நான் (அங்கிருந்து) புறப்பட்டு சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகில் சென்றேன். அதைச் சுற்றி ஒரு கூட்டத்தினர் இருந்தனர். அவர்களில் சிலர் (கேள்விப்பட்ட செய்தியை எண்ணி) அழுதுகொண்டிருந்தனர். அவர்களுடன் நான் சிறிது நேரம் தாளாமல் நபியவர்கள் இருந்த மாடி அறைக்க அருகே வந்தேன். (அங்கிருந்த) நபி(ஸல்) அவர்களின் கறுப்பு அடிமை (ரபாஹ் அவர்கள்) இடம், 'உமருக்காக (நபியவர்களின் அறைக்குள் வர) அனுமதி கேள்'' என்று சொன்னேன்.

அந்த அடிமை அறைக்கு உள்ளே சென்று நபி(ஸல்) அவர்களிடம் பேசிவிட்டுப் பிறகு வெளியே வந்து, 'நபி(ஸல்) அவர்களிடம் பேசினேன். உங்களைப் பற்றி அவர்களிடம் கூறினேன். அவர்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள்'' என்று கூறினார். எனவே, நான் திரும்பி வந்து மிம்பருக்கு அருகில் இருந்த கூட்டத்தினருடன் அமர்ந்துகொண்டேன். பின்னர், அங்கு நிலவிய (துக்ககரமான) சூழ்நிலையைத் தாங்க முடியாமல் (மீண்டும்) அந்த அடிமையிடம் சென்று, 'உமருக்காக அனுமதிகேள்'' என்று கூறினேன். அவர் உள்ளே சென்றுவிட்டுத் திரும்பி வந்து, 'உங்களைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் (பதிலேதும் சொல்லாமல்) மௌனமாக இருந்துவிட்டார்கள்'' என்று (முன் போன்றே) கூறினார். நான் (மறு படியும்) திரும்பிவந்து மிம்பருக்கருகில் இருந்த கூட்டத்தாருடன் அமர்ந்து கொண்டேன். மறுபடி அங்கு நான் கண்ட (கவலையான) சூழ்நிலையைத் தாங்க முடியாமல் (மூன்றாம் முறையாக) அந்த அடிமையிடம் சென்று, 'உமருக்காக அனுமதி கேள்!'' என்று சொன்னேன். அவர் உள்ளே சென்றுவிட்டு என்னிடம் திரும்பி வந்து, 'நான் உங்களைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் (பதிலேதும் சொல்லாமல்) மௌனமாக இருந்துவிட்டார்கள்'' என்று கூறினார்.

நான் திரும்பிச் செல்ல இருந்தபோது அந்த அடிமை என்னை அழைத்து, 'உங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்துவிட்டார்கள்'' என்று கூறினார். உடனே, நான் நபி(ஸல்) அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அங்கு அவர்கள் ஓர் ஈச்சம் பாயில், ஈச்ச நார்கள் அடைந்த தோல் தலையணை ஒன்றின் மீது சாய்ந்தபடி படுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் (அவர்கள் படுத்திருந்த) அந்தப் பாய்க்குமிடையே விரிப்பு ஏதும் இருக்கவில்லை. எனவே, அவர்களின் விலாவில் அந்த ஈச்சம் பாய் அடையாளம் பதித்திருந்தது. அவர்களுக்கு நான் சலாம் சொன்னேன். பிறகு நான் நின்று கொண்டே, 'இறைத்தூதர் அவர்களே! தங்கள் துணைவியரைத் தாங்கள் விவாகரத்துச் செய்துவிட்டீர்களா?' என்று கேட்டேன்.

நபிவர்கள் தம் பார்வையை என்னை நோக்கி உயர்த்தி, 'இல்லை (விவாக விலக்குச் செய்யவில்லை)'' என்று கூறினார்கள். உடனே நான் 'அல்லாஹு அக்பர்'' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னேன். (அவர்களின் கோபத்தைக் குறைத்து) அவர்களைச் சாந்தப்படுத்த விரும்பி, நின்றபடியே (பின்வருமாறு) சொல்லத் தொடங்கினேன்.

இறைத்தூதர் அவர்களே! நான் சொல்வதைச் சற்று கேளுங்கள்! குறைஷிக் குலத்தினராகிய நாங்கள் பெண்களை எங்கள் அதிகாரத்திற்குள் வைத்திருந்தோம். நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது பெண்கள் ஆண்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டத்தாரைக் கண்டோம். (எங்கள் பெண்களும் அவர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டு எங்களிடம் எதிர்த்துப் பேசத் தொடங்கிவிட்டனர்)'' என்று சொன்னேன். (அதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள்.

பிறகு நான் 'இறைத்தூதர் அவர்களே! நான் கூறுவதைச் சற்று கேளுங்கள்! நான் ஹஃப்ஸாவிடம் சென்று, 'உன் அண்டை வீட்டுக்காரர் - ஆயிஷா - உன்னை விட அழகானவராகவும் அல்லாஹ்வின் தூதருக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு ஊடலும் கோபமும் கொள்வதைக் கண்டு) நீ ஏமாந்து போய் (அவரைப் போன்று நடந்து கொண்டு) விடாதே' என்று கூறியதைச் சொன்னேன். (இதை நான் சொல்லக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் இன்னொரு முறை புன்கைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் புன்னகைத்ததைக் கண்ட நான் (அங்கு) அமர்ந்து கொண்டேன். பிறகு, நான் என்னுடைய பார்வையை உயர்த்தி அவர்களின் அறையை நோட்டமிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! கண்ணைக் கவருகிற பொருள் எதையும் நான் அவர்களின் அறையில் காணவில்லை; மூன்றே மூன்று தோல்களைத் தவிர அப்போது நான், 'தங்கள் சமுதாயத்தினருக்கு (உலகச் செல்வங்களை) தாராளமாக வழங்கும்படி தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். ஏனெனில், பாரசீகர்களுக்கும் ரோமர்களுக்கும் - அவர்கள் (ஏக இறைவன்) அல்லாஹ்வை வணங்காதவர்களாக இருந்தும் - உலகச் செல்வங்கள் தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றனவே'' என்று கூறினேன்.

(தலையணையில்) சாய்ந்து அமர்ந்திருந்த நபி(ஸல்) அவர்கள் (இதைக் கேட்டவுடன்) நிமிர்ந்து அமர்ந்துகொண்டு, 'கத்தாபின் புதல்வரே! நீங்கள் இன்னும் இந்த எண்ணத்தில் தான் இருக்கிறீர்களா? அவர்களின் (நற்செயல்களுக்கான) பிரதிபலன்கள் அனைத்தும் இந்த உலக வாழ்விலேயே (மறுமை வாழ்வுக்கு) முன்னதாக அவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன'' என்று கூறினார்கள். உடனே நான், 'இறைத்தூதர் அவர்களே! (அவரசப்பட்டு இப்படிக் கேட்ட) எனக்காகப் பாவமன்னிப்புக்கோரிப் பிராத்தியுங்கள்'' என்று கூறினேன்.

நபி(ஸல்) அவர்களின் அந்த இரகசியத்தை ஹஃப்ஸா, ஆயிஷா அவர்களிடம் கூறி வெளிப்படுத்திவிட்டபோது, அதன் காரணத்தால் தான் நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரிடமிருந்து விலகி, இருபத்தொன்பது நாள்கள் தனிமையில் இருக்கத் தொடங்கினார்கள். மேலும், நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் (திருக்குர்ஆன் 66:1 வது வசனத்தின் மூலம்) கண்டித்தபோது தம் துணைவியர் மீது ஏற்பட்ட கடும் வருத்தத்தின் காரணத்தினால் '(என் துணைவியரான) அவர்களிடம் ஒரு மாத காலத்திற்கு நான் செல்லமாட்டேன்'' என்றும் கூறியிருந்தார்கள். இருபத்தொன்பது நாள்கள் கழிந்துவிட்ட பொழுது? நபி(ஸல்) அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றார்கள். (அதற்குப் பின் மற்ற மனைவிமார்களிடம் சென்றார்கள்.) அப்போது ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! எங்களிடம் ஒரு மாத காலத்திற்கு வரப் போவதில்லை என்று நீங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே! நீங்கள் இருபத்தொன்பது இரவுகளைத்தானே கழித்திருக்கிறீர்கள்! (ஒரு நாள் முன்னதாக வந்துவிட்டீர்களே!) அதை நான் ஒவ்வொரு நாளாக எண்ணிக் கொண்டே வருகிறேனே!'' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'மாதம் என்பது (குறைந்தபட்சம்) இருபத்தொன்பது நாள்களும் தான்'' என்று பதில் கூறினார்கள். அந்த மாதமும் இருபத்தொன்பது நாள்களாகவே இருந்தது.

ஆயிஷா பதில் அவர்கள் கூறினார்கள்:

பிறகு (நபி(ஸல்) அவர்களின் துணைவியருக்கு, அவர்கள் விரும்பினால் நபியுடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்து விடலாம் என) உரிமை அளித்திடும் (திருக்குர்ஆன் 33:28 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு) தம் துணைவியரில் முதலாவதாக என்னிடமே (கூறத்) தொடங்கினார்கள். நான் நபி(ஸல்) அவர்களை(ச் சேர்ந்து வாழும் வாழ்க்கையை)யே தேர்ந்தெடுத்தேன். பிறகு தம் துணைவியர் அனைவருக்கும் நபி(ஸல்) அவர்கள் இதே உரிமையை வழங்கினார்கள். துணைவியர் அனைவரும் நான் சொன்னது போன்றே சொல்லிவிட்டார்கள். 127

பகுதி 85

ஒரு பெண் தன் கணவரின் அனுமதியுடன் தான் கூடுதலான (நஃபில்) நோன்பு நோற்கலாம்.

5192. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

கணவர் உள்ளூரில் இருக்கும் நிலையில் ஒரு பெண் அவரின் அனுமதி இல்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்கக் கூடாது. 128

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 88

கணவனுடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்து ஒரு பெண் (தனியாக) இரவைக் கழித்தால்...?

5193. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 129

5194. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒரு பெண் தன் கணவருடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும் வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றனர்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 87

ஒரு பெண் தன் கணவரின் இசைவின்றி யாரையும் அவரின் இல்லத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.

5195. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒரு பெண் தன் கணவர் உள்ளூரில் இருக்க, அவரின் அனுமதியில்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவரின் அனுமதியில்லாமல் (யாரையும்) அவரின் இல்லத்திற்குள் அவள் அனுமதிக்கலாகாது. கணவர் கட்டளையிடாமலேயே ஒரு பெண் (அறவழியில் கணவரின் பொருளைச்) செலவிட்டால் (அதன் பலனில்) பாதி அவருக்கும் கிடைக்கும். 130.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இந்த ஹதீஸிலுள்ள (கூடுதல்) நோன்பு பற்றிய தகவல் (மட்டும்) மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பகுதி 88

5196. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நான் சொர்க்கத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர். செல்வர்கள், (சொர்க்கத்தின் வாசலில் விசாரணைக்காக) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும், (அவர்களில்) நரகவாசிகள் (எனத் தீர்மானிக்கப்பட்டோர்) ஏற்கெனவே) நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டனர். நான் நரகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தனர்.

என உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

பகுதி 89

கணவருக்கு மாறு செய்தல்.

(கணவர் என்பதைச் சுட்ட மூலத்தில் ஆளப்பட்டுள்ள) 'அல்அஷீர்' எனும் சொல்லுக்குத் துணைவன் என்று பொருள். (திருக்குர்ஆன் 22:13 வது இறைவசனத்தின் மூலத்திலுள்ள இதே சொல்லுக்கு) 'வாழ்க்கைக் கூட்டாளி' என்று பொருள்.

இது குறித்து நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். 131

5197. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (கிரகணத் தொழுகை) தொழுதார்கள். அவர்களுடன் (சேர்ந்து) மக்களும் தொழுதார்கள். அத்தொழுகையில் 'அல்பகரா' எனும் (2 வது) அத்தியாயம் ஓதுமளவுக்கு வெகு நேரம் நின்றார்கள். பின்பு நீண்ட நேரம் (குனிந்து) 'ருகூஉ' செய்தார்கள். பின்பு ('ருகூஉ'விலிருந்து) நிமிர்ந்து (நிலைக்கு வந்து) நீண்ட நேரம் நின்றார்கள்.

இ(ந்த நிலையான)து, முதலாம் நிலையை விடக் குறைவானதாகவே இருந்தது. பின்னர் நீண்ட நேரம் 'ருகூஉ' செய்தார்கள்.

இ(ந்த இரண்டாம் ருகூஉவான)து, முதலாம் 'ருகூஉ'வை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு 'சஜ்தா' (சிரவணக்கம்) செய்தார்கள். பின்னர் (சஜ்தாவிலிருந்து) எழுந்து (நிலையில்) நீண்ட நேரம் நின்றார்கள்.

இ(ந்த நிலையான)து, முந்தைய நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் 'ருகூஉ' செய்தார்கள்.

இ(ந்த 'ருகூஉ'வான)து, முந்தைய 'ருகூஉ'வை விடக் குறைவானதாக இருந்தது.

பிறகு நீண்ட நேரம் 'ருகூஉ' செய்தார்கள். இ(ந்த 'ருகூஉ''வான)து முந்தைய 'ருகூஉ'வை விடக் குறைவானதாக இருந்தது.

பிறகு, 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். எவருடைய இறப்பிற்காகவோ பிறப்பிற்காகவோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே, இ(த்தகைய கிரகணத்)தை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் (தொழுது கொண்டிருக்கையில்) இதோ இந்த இடத்தில் எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியிலிருந்து) பின்வாங்கியதையும் கண்டோமே! (அது ஏன்?)'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்), 'நான் (தொழுது கொண்டிருக்கையில்) 'சொர்க்கத்தைக் கண்டேன்'' அல்லது 'சொர்க்கம் எனக்குக் காட்டப்பட்டது'. அதிலிருந்து (பழக்) குலையொன்றை எடுக்க முயன்றேன். அதை நான் எடுத்திருந்தால் இந்த உலகம் உள்ளவரை நீங்கள் அதிலிருந்(தப் பழத்திலிருந்)து புசித்திருப்பீர்கள்.

மேலும் நான் (தொழுது கொண்டிருக்கையில்) நரகத்தையும் கண்டேன். இன்றைய தினத்தைப் போல் (ஒரு பயங்கரமான) காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. மேலும், நரகவாசிகளில் அதிகமாகப் பெண்களையே கண்டேன்'' என்று கூறினார்கள்.

மக்கள், 'ஏன் (அது?) இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'பெண்களின் நிராகரிப்பே காரணம்'' என்றார்கள். அப்போது 'பெண்கள் அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்?' என வினவப்பட்டது. அதற்கு 'கணவன்மார்களை நிராகரி(த்து நிந்தி)க்கிறார்கள். (கணவன் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவி, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால் 'உன்னிடமிருந்து எந்த நலனையும் நான் கண்டதேயில்லை' என்று சொல்லிவிடுவாள்'' என்று பதிலளித்தார்கள். 132

5198. நபி(ஸல்) அவர்கள் அவர்கள் கூறினார்கள்:

நான் (மிஅராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்.

என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். 133

இது இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி 90

உன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உண்டு.

இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். 134

5199. அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்

என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ்வே! நீ பகல் எல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்குவதாகக் கேள்விப்பட்டேனே! (உண்மைதானா?)'' என்று கேட்டார்கள். நான், 'ஆம் (உண்மைதான்) இறைத்தூதர் அவர்களே!'' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறு செய்யாதே! (சில நாள்) நோன்பு நோற்றுக்கொள். (சில நாள்) நோன்பைவிட்டு விடு! (இரவில் சிறிது நேரம்) நின்று வணங்கு! (சிறிது நேரம்) உறங்கு! உன் உடலுக்கென (நீ செய்ய வேண்டிய) கடமைகள் உனக்கு உண்டு. உன்னுடைய கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உண்டு. உன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உண்டு'' என்று கூறினார்கள். 135

பகுதி 91

ஒரு பெண் தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள்.

5200. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 136

பகுதி 92

''ஆண்கள், பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம், அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கிறான் என்பதும், ஆண்கள் தங்களின் செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும்... நிச்சயமாக அல்லாஹ் உயர்வானவனும் பெரியோனுமாய் இருக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 04:34 வது) இறைவசனம்.

5201. அனஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் துணைவியரிடம் செல்லமாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டுத் தம் மாடி அறைக்குச் சென்று அமர்ந்துகொண்டார்கள். இருபத்தொன்பதாம் நாள் (அங்கிருந்து) இறங்கி வந்தார்கள். அப்போது, 'ஒரு மாதம் (துணைவியரை) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்தீர்களே, இறைத்தூதர் அவர்களே! (இன்னும் ஒரு நாள் மீதி இருக்கிறதே அதற்குள் வந்துவிட்டீர்களே?)'' என்று வினவப்பட்டது. அதற்கு, 'இந்த மாதம் இருபத்தொன்பது நாள்கள் தாம்'' என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். 137

பகுதி 93

நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரிடமிருந்து விலகி, துணைவியரின் இல்லம் அல்லாத வேறு இடத்தில் இருந்தது.

நபி(ஸல்) அவர்களிடமிருந்து முஆவியா இப்னு ஹைதர்(ரலி) அறிவிக்கும் ஹதீஸில் (மனைவியரைவிட்டும் விலகியிருப்பதானால் அவர்களின்) வீட்டுக்குள்தான் விலகியிருக்க வேண்டுமெனக் காணப்படுகிறது. ஆனால், முதல் அறிவிப்பே சரியானதாகும். 138

5202. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலரிடம் ஒருமாதம் செல்லமாட்டேன் எனச் சத்தியம் செய்தார்கள். இருபத்தொன்பதாம் நாள் 'காலையில்' அல்லது 'மாலையில்' துணைவியரிடம் சென்றார்கள். அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! அவர்களிடம் ஒரு மாதம் செல்ல மாட்டேன் எனச் சத்தியம் செய்(திருந்)தீர்களே?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம்'' என்று பதிலளித்தார்கள். 139

5203. அபூ யஅஃபூர் அப்துர் ரஹ்மான் இப்னு உபைத் அல்கூஃபீ(ரஹ்) அறிவித்தார்

நாங்கள் அபுள்ளுஹா(ரஹ்) அவர்களிடம் (ஒரு மாதத்திற்கு எத்தனை நாள் என்பது குறித்து) விவாதித்துக கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் என (பின்வரும் ஹதீஸை)க் கூறினார்கள்:

ஒரு நாள் காலை நபி(ஸல்) அவர்களின் துணைவியர் அழுதுகொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அருகில் அவரவர் குடும்பத்தினரும் இருந்தனர். நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்றேன். பள்ளிவாசல் மக்களால் நிரம்பியிருந்தது. அப்போது உமர் இப்னு கத்தாப்(ரலி) வந்து, நபி(ஸல்) அவர்கள் தங்கியிருந்த மாடியறைக்க ஏறிச் சென்றார்கள். (நபி(ஸல்) அவர்களுக்கு) சலாம் (முகமன்) கூறினார்கள். ஆனால் யாரும் உமருக்கு பதில் சலாம் சொல்லவில்லை. மீண்டும் 'சலாம்' கூறினார்கள். அப்போதும் யாரும் (உமர்(ரலி) அவர்களுக்கு) யாரும் (உமர்(ரலி) அவர்களுக்கு) பதில் சலாம் சொல்லவில்லை. அப்போது உமர்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'தங்கள் துணைவியரை (தாங்கள்) 'விவாக ரத்துச் செய்துவிட்டீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இல்லை. ஆனால், ஒரு மாதகாலம் (அவர்களை) நெருங்கமாட்டேன். எனச் சத்தியம் (ஈலா உ) செய்துவிட்டேன்'' என்று பதிலளித்தார்கள்.

அங்கு நபி(ஸல்) அவர்கள் இருபத்தொன்பது நாள்கள் தங்கியிருந்துவிட்டுப் பிறகு தம் துணைவியரிடம் சென்றார்கள்.

பகுதி 94

மனைவியரை அடிப்பது வெறுக்கப்பட்ட செயலாகும்.

''(அறிவுரை கூறி, படுக்கையில் ஒதுக்கி வைத்த பிறகும் திருந்தாதபோது உங்கள் (துணைவியரான) அவர்களை அடியுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 04:34 வது) வசனத் தொடர்.

இதன் பொருளாவது: வலி ஏற்படாதவாறு (காயமின்றி இலேசாக) அடியுங்கள்.

5204. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போன்று அடிக்க வேண்டாம். (ஏனெனில்,) பிறகு அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுடனேயே (நாணமில்லாமல்) உறவுகொள்வீர்கள்.

என அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ(ரலி) அறிவித்தார். 140

பகுதி 95

ஒரு பெண் பாவமான காரியத்தில் தன் கணவருக்குக் கீழ்ப்படியலாகாது.

5205. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

அன்சாரிகளில் ஒரு பெண் தம் மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரின் மகளின் தலைமுடி உதிர்ந்துவிட்டது. அவள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்து தெரிவித்துவிட்டு, 'என் கணவர், என்னுடைய தலையில் ஒட்டுமுடி வைத்துக்கொள்ளுமாறு பணிக்கிறார்'' என்று கூறினாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேண்டாம்! (ஒட்டுமுடிவைக்காதே) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்'' என்று கூறினார்கள்.

பகுதி 96

ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்துகொள்ளமாட்டான் என்றோ, புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால் கணவன் - மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதும் இல்லை (எனும் 4:128 வது இறைவசனம்).

5206. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஒரு பெண் ஒருவரின் மனைவியாக இருந்து வருகிறாள். (அவளுடைய முதுமை, நோய் போன்ற காரணத்தினால்) அவளை அவருக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது; அவளை விவாகரத்துச் செய்துவிட்டு மற்றொருத்தியை மணமுடிக்கவும் அவர் விரும்புகிறார். (இந்நிலையில்) அவள் 'என்னை (மனைவியாக) இருக்கவிடுங்கள்; என்னை விவாகரத்துச் செய்துவிடாதீர்கள். பின்னர் (வேண்டுமானால்) மற்றொரு பெண்ணை மணந்துகொள்ளுங்கள். எனக்காகச் செலவழிப்பதிலிருந்தும்  இரவைப் பகிர்ந்தளிப்பதிலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளலாம்'' என்று தம் கணவரிடம் கூறுகிறாள். இதையே இவ்வசனம் கூறுகிறது: ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ளமாட்டான் என்றோ, புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால், கணவன் - மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ்பரம்விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில தவறேதும் இல்லை. (திருக்குர்ஆன் 04:128)141

பகுதி 97

'அஸ்ல்' (புணர்ச்சி இடைமுறிப்பு) 142

5207. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் 'அஸ்ல்' (புணர்ச்சி இடைமுறிப்பு) செய்து வந்தோம்.

5208. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, நாங்கள் 'அஸ்ல்' (புணர்ச்சி இடைமுறிப்பு) செய்துகொண்டிருந்தோம்.

5209. ஜாபிர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் 'அஸ்ல்' (புணர்ச்சி இடைமுறிப்பு) செய்து கொண்டிருந்தோம்.

5210. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரஹ்) அறிவித்தார்

நாங்கள் (பனூ முஸ்தலிக் போரில்) சில (அரபு) போர்க கைதிகளைப் பெற்றோம். (அவர்களிடையே இருந்த பெண் கைதிகளுடன் உடலுறவுகொள்ளவும்) 'அஸ்ல்' செய்து கொள்ளவும் விரும்பினோம். (அது குறித்து) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவினோம். அப்போது அவர்கள் '(இந்த அஸ்லை) நீங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறீர்கள்?' என்று கேட்டுவிட்டு, 'மறுமை நாள் வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்'' என்று கூறினார்கள். 143

பகுதி 98

கணவன் பயணம் செய்யவிரும்பும்போது தம் துணைவியரிடையே (யாரை அழைத்துச் செல்வது என்பதைக்) குலுக்கல் முறையில் முடிவு செய்வது.

5211. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால் தம் துணைவியரிடையே சீட்டுக் குலுக்குவார்கள். (யாருடைய பெயர் வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள்.) (ஒரு முறை) என்னுடைய பெயரும் ஹஃப்ஸாவின் பெயரும் (குலுக்கலில்) வந்தது. இரவு நேரப் பயணத்தில் நபி(ஸல்) அவர்கள் என்னுடன் பேசிக்கொண்டே வருவார்கள். (ஒரு நாள்) ஹஃப்ஸா (என்னிடம்), 'இந்த இரவு நீங்கள் என்னுடைய ஒட்டகத்தில் பயணம் செய்து பாருங்கள்; நான் உங்களின் ஒட்டகத்தில் பயணம் செய்து பார்க்கிறேன்'' என்று கூறினார்கள். நான், 'சரி'' என்று (சம்மதம்) கூறினேன். எனவே, (நாங்களிருவரும்) ஒருவர் மற்றவரின் ஒட்டகத்தில்) ஏறிப் பயணிக்கலானோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் (நான் முதலில் ஏறி வந்த) என்னுடைய ஒட்டகத்தை நோக்கி வந்தார்கள். (அதில் நானிருப்பதாக நினைத்தார்கள். ஆனால்,) அதில் ஹஃப்ஸா இருந்தார். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் 'சலாம்' (முகமன்) கூறினார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்தார்கள். (பயணத்தினிடையே) அவர்கள் ஓர் இடத்தில் இறங்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களை(க் காணாததால் அவர்களை (நான் தேடினேன். அவர்கள் இறங்கிய அந்த நேரம் நான் என்னுடைய இரண்டு கால்களையும் 'இத்கிர்' புற்களுக்கிடையே (புகுத்தி) வைத்துக்கொண்டு, 'இறைவா! ஒரு தேளையோ அல்லது பாம்பையோ என் மீது ஏவிவிடு! அது என்னைத் தீண்டட்டும்'' என்று சொன்னேன். (இப்படி என்னை நானே கடிந்துகொள்ளத்தான் முடிந்ததே தவிர,) நபி(ஸல்) அவர்களை (ஹஃப்ஸாவுடன் தங்கியதற்காக) என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

பகுதி 99

ஒரு பெண் தன் கணவரிடமிருந்து தனக்குக் கிடைக்கும் நாளை தன் சக்களத்திக்காக விட்டுக்கொடுப்பதும், அது எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்பதும்.

5212. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான) சவ்தா பின்த் ஸம்ஆ(ரலி), (நபி(ஸல்) அவர்கள்) தம்மிடம் தங்கும் நாளை எனக்கு அன்பளிப்பாக (விட்டு)க் கொடுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் என்னுடைய நாளையும் 'சவ்தா' அவர்களின் நாளையும் எனக்கே ஒதுக்கிவந்தார்கள். 144

பகுதி 100

மனைவியரிடையே நீதி செலுத்துவது.

(அல்லாஹ் கூறினான்:) பல மனைவியரிடையே நீதி செலுத்த வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டாலும் ஒருபோதும் உங்களால் அது முடியாது. அதற்காக (ஒரே மனைவியிடம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில்விட்டுவிடாதீர்கள்... அல்லாஹ் பரந்த ஆற்றலுடையவனும் அறிவார்ந்தவனுமாவான். (திருக்குர்ஆன் 04:129, 130) 145

பகுதி 101

கன்னிகழிந்த பெண்(ணான மனைவி) இருக்க கன்னிப் பெண்ணை ஒருவர் மணந்தால்..?

5213. அனஸ்(ரலி) அறிவித்தார்

கன்னிப் பெண்ணை ஒருவர் மணந்தால் அவளிடம் ஏழு நாள்கள் தங்குவார். கன்னி கழிந்த பெண்ணை ஒருவர் மணந்திருந்தால் அவளிடம் மூன்று நாள்கள் தங்குவார். இதுவே நபிவழியாகும்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் (காலித், அல்லது அபூ கிலாபா) கூறுகிறார்: இதை நபி(ஸல்) அவர்களே கூறினார்கள் என்று நான் சொன்னால் (அது தவறாகாது; எனினும், அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதன்படி 'நபிவழி' என்று கூறியுள்ளேன்.)

பகுதி 102

கன்னிப் பெண்(ணான மனைவி) இருக்க, கன்னிகழிந்த பெண்ணை ஒருவர் மணந்தால்...?

5214. அனஸ்(ரலி) அறிவித்தார்

ஒருவர் கன்னிகழிந்த பெண் (ஒருத்தி மனைவியாக) இருக்க, கன்னிப் பெண்ணை மணந்துகொண்டால் முதலில் கன்னிப் பெண்ணிடம் ஏழு நாள்கள் தங்குவார். பிறகு (மற்ற மனைவிக்கு இரவை) ஒதுக்குவார்.

ஒருவர் கன்னிப் பெண் (ஒருத்தி மனைவியாக) இருக்க, கன்னிகழிந்த பெண்ணை மணந்தால் (முதலில்) கன்னிகழிந்த பெண்ணிடம் மூன்று நாள்கள் தங்கிவிட்டு பிறகு தான் (மற்ற மனைவிக்கு இரவை) ஒதுக்குவார். இதுவே நபிவழியாகும்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ கிலாபா(ரஹ்) கூறினார்:

நான் நினைத்தால், இதை நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக அனஸ்(ரலி) கூறினார் என்று சொல்ல முடியும். (அது தவறாகாது. ஆயினும், முறைப் படி அனஸ் அவர்கள் கூறிய பிரகாரமே அறிவித்துள்ளேன்.)

மற்றோர் அறிவிப்பில், காலித்(ரஹ்) கூறினார்: நான் நினைத்தால் இதை நபி(ஸல்) அவர்களே கூறினார்கள் என்று சொல்லமுடியும்.

பகுதி 103

ஒரே குளியலில் ஒருவர் தம் மனைவியர் அனைவரிடமும் சென்றுவருவது. 146

5215. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஒரே இரவில் தம் எல்லா துணைவியரிடமும் சென்றுவிட்டு வந்துவிடுவார்கள். அப்போது அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். 147

பகுதி 104

ஒருவர் தம் துணைவியரைச் சந்திக்க பகலில் செல்வது.

5216. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகை முடிந்தவுடன் தம் துணைவியரிடம் செல்வார்கள். அப்போது அவர்களில் சிலருடன் நெருக்கமாக இருப்பார்கள். அவ்வாறே (ஒருநாள்) தம் துணைவியாரான ஹஃப்ஸாவிடம் சென்று வழக்கமாகத் தங்கும் நேரத்தைவிட அதிக நேரம் தங்கினார்கள்.

பகுதி 105

ஒருவர் தம் துணைவியரில் குறிப்பிட்ட ஒருவரின் இல்லத்தில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற (மற்றவர்களிடம்) அனுமதி கோரி, அவர்களும் அவருக்கு அனுமதியளித்தால் (அது செல்லும்).

5217. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, 'நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?' என்று என்னுடைய (முறைவரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள். எனவே, அவர்களின் (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி(ஸல்) அவர்கள் தாங்கிக் கொள்ளலாம் என அவர்களுக்கு அனுமதியளித்தனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை என்னுடைய வீட்டிலேயே தங்கி இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் தான் என் வீட்டில் வைத்து இறப்பெய்தினார்கள். என்னுடைய நெஞ்சுக்கும் நுரையீலுள்ள பகுதிக்கும் இடையே அவர்களின் தலை இருந்தபோது, (மிஸ்வாக் குச்சியை என் வாயால் கடித்து மென்மைப்படுத்திக் கொடுத்திருந்தால்) அவர்களின் உமிழ்நீர் என் உமிழ் நீருடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக் கொண்டார்கள். 148

பகுதி 106

ஒருவர் தம் துணைவியரில் ஒருவரை மற்றவரை விட அதிகமாக நேசிப்பது.

5218. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்

(என் அண்டை வீட்டு அன்சாரி நண்பர், நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரை விவாகவிலக்குச் செய்துவிட்டதாகத் தந்த தவறான தகவலையடுத்து நான் என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று, என்னருமை மகளே! தம் அழகும், தம் மீது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கொண்டுள்ள அன்பும் யாரைக் குதூகலப்படுத்தியுள்ளதோ அவர் - ஆயிஷா - (நபியவர்களிடம்) சற்று கூடுதல் உரிமை எடுத்துக் கொள்வது) கண்டு நீ ஏமாந்து விடாதே!'' என்று கூறினேன். பிறகு இந்தச் சம்பவத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் எடுத்துரைத்தபோது அவர்கள் புன்னகைத்தார்கள். 149

பகுதி 107

தம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டிக் கொள்வதும், தடை செய்யப்பட்ட சக்களத்திப் பெருமையும்.

5219. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்

ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! எனக்குச் சக்களத்தி ஒருவர் இருக்கிறார். நான் (அவரிடம்) என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாகக் காட்டிக் கொண்டால், அது குற்றமாகுமா?' என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கிடைக்கப் பெறாத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக் கொள்கிறவர், போலியான இரண்டு ஆடைகளை (அதாவது இரவல் மற்றும் அமானித ஆடைகளை, அல்லது போலியான மேல் மற்றும் கீழ் ஆடைகளை) அணிந்துகொண்டவர் போலாவார்'' என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ளது.

பகுதி 108

ரோஷம் கொள்வது.

முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) கூறினார்

ஸஅத் இப்னு உபாதா(ரலி), 'என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், என் வாளின் கூர்மையான பகுதியாலேயே நிச்சயம் நான் அவனை வெட்டுவேன்'' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஸஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு வியப்படைகிறீர்களா? நான் சஅதை விட ரோஷக்காரன்; அல்லாஹ் என்னைவிடவும் ரோஷக்காரன்'' என்று கூறினார்கள்.

5220. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ்வை விட அதிக ரோஷமுள்ளவர் யாருமில்லை. எனவேதான் மானக்கேடான செயல்கள் அனைத்திற்கும் அவன் தடை விதித்துள்ளான். அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகிறவர் வேறெவருமிலர்.

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 150

5221. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

முஹம்மதின் சமுதாயமே!

தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபடுவதைக் கண்டாலும் அல்லாஹ்வைவிடக் கடுமையாக ரோஷம் கொள்பவர் வேறெவருமிலர்.

முஹம்மதின் சமுதாயமே!

நான் அறிவதையெல்லாம் நீங்களும் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்.

என ஆயிஷா(ரலி) அறிவித்தார். 151

5222 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுடையவர் யாருமில்லை.

என அஸ்மா(ரலி) அறிவித்தார்.

5223. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறைநம்பிக்கையாளர் செய்வதுதான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

5224. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்

என்னை ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) (மக்காவிலிருக்கும் போதே) மணந்துகொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரின் குதிரையையும் தவிர வேறு எச்சொத்துபத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரின் தோல் சுமலையைத்தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டைவீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து - நானே பேரீச்சங்கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலை மீது வைத்துச் சுமந்துவருவேன். அந்த நிலம் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது. 152

(ஒரு நாள்) நான் என் தலை மீது பேரீச்சங்கொட்டைகளை வைத்து வந்து கொண்டிருந்தேன். (வழியில்) நான், இறைத்தூதர்(ஸல்) அவர்களை, (அவர் தம் தோழர்களான அன்சாரிகளில் சிலர் அவர்களுடன் இருக்கச் சந்தித்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். எனக்குத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக 'இஃக், இஃக்' என்ற சொல்லித் தம் ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால்,) நான் ஆண்களுடன் செல்ல வெட்கப்பட்டேன். மேலும், நான் (என் கணவர்) ஸுபைர்(ரலி) அவர்களையும், அவரின் ரோஷத்தையும் நினைத்துப் பார்த்தேன். அவர் மக்களில் மிகவும் ரோஷக்காரராக இருந்தார். நான் வெட்கப்படுவதைப் புரிந்துகொண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். நான் (என் கணவர்) ஸுபைரிடம் வந்து '(வழியில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தலையில் பேரீச்சங்கொட்டைகளிருக்க என்னைச் சந்தித்தார்கள். அவர்களுடன் அவர்களின் தோழர்கள் சிலரும் இருந்தனர். நான் ஏறிக்கொள்வதற்காக(த் தம் ஒட்டகத்தை) மண்டியிடச் செய்தார்கள். நான் அவர்களைக் கண்டு வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தை நான் அறிந்துள்ளேன்'' என்று கூறினேன். அதற்கு என் கணவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதைவிட பேரீச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்தது தான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது'' என்று கூறினார்.

(இவ்வாறாக வீட்டுப் பணிகளில் பெரும் பகுதியை நானே மேற்கொண்ட வந்தேன்.) அதற்குப் பிறகு (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) எனக்கு ஓர் அடிமையை (உதவிக்காக) அனுப்பி வைத்தார்கள். அந்த அடிமை குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார். என்னவோ எனக்கு விடுதலை கிடைத்தது போல் இருந்தது.

5225. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் இருந்(து கொண்டிருந்)தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவ(ரான நபியவர்களுடைய மற்றொரு துணைவியா)ர் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை (நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம்) கொடுத்தனுப்பினார்கள். 153 (அப்போது) நபி(ஸல்) அவர்கள் எவருடைய வீட்டில் தங்கியிருந்தார்களோ அந்தத் துணைவியார் (ரோஷத்தில்) அந்தப் பணியாளரின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது. உடனே (ஆத்திரப்படாமல்) நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள். மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி), 'உங்கள் தாயார் ரோஷப்பட்டுவிட்டார்'' என்று கூறினார்கள். பின்னர் அந்தப் பணியாளை (அங்கேயே) நிறுத்திவிட்டு தாமிருந்த வீட்டுக்கார (துணைவியா)ரிடமிருந்து மற்றொரு தட்டைக்கொண்டு வரச் செய்து, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டை (மாற்றாக)க் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள். 154

5226. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், '(கனவில்) 'நான் சொர்க்கத்தினுள் நுழைந்தேன்' அல்லது 'சொர்க்கத்திற்குச் சென்றேன்' அங்கு ஒரு மாளிகையைக் கண்டேன். நான், 'இது யாருடையது?' என்று கேட்டன். அவர்கள் (வானவர்கள்), 'இது உமர் இப்னு கத்தாப் அவர்களின்து'' என பதிலளித்தார்கள். அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன். ஆனால், (உமரே!) உம்முடைய ரோஷம் குறித்து நான் அறிந்திருந்தது என்னை (உள்ளே செல்லவிடாமல்) தடுத்துவிட்டது'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உமர் இப்னு கத்தாப்(ரலி), 'என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்டார்கள். 155

5227. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

நாங்கள் (ஒருநாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள், 'நான் தூங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) மாளிகை ஒன்றின் அருகில் ஒருபெண் (உலகில் தான் இறைவணக்கம் புரிபவளாய் இருந்துவந்ததைக் குறிக்கும் வகையிலும் தன் அழகையும் பொலிவையும் மெருகேற்றிக் கொள்ளவும்) 'உளூச் செய்து கொண்டிருந்தாள். அப்போது நான், 'இந்த மாளிகை யாருக்குரியது?' என்று கேட்டேன். (வானவர்) ஒருவர், 'இது உமக்குரியது'' என பதிலளித்தார். (அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன். உமர் அவர்களின் ரோஷம் என் நினைவுக்கு வந்தது. உடனே அங்கிருந்து திரும்பி வந்துவிட்டேன்'' என்று கூறினார்கள். அங்கு அவையிலிருந்த உமர்(ரலி) (இதைக்கேட்டு) அழுதார்கள். பிறகு, 'தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்டார்கள். 156

பகுதி 109

பெண்களின் ரோஷமும் கோபமும். 157

5228. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்'' என்று கூறினார்கள். அதற்கு நான், 'எப்படி நீங்கள் அறிந்துகொள்வீர்கள்?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), 'முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக' என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், 'இப்ராஹீம்(அலை) அவர்களின் அதிபதி மீது சத்தியமாக' என்று கூறுவாய்'' என்று கூறினார்கள். நான், 'அல்லாஹ்வீன் மீதாணையாக! ஆம் (உண்மைதான்,) இறைத்தூதர் அவர்களே! நான் தங்களின் பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்களின் மீதுன்று)'' என்று கூறினேன்.

5229. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

கதீஜா(ரலி) அவர்களின் மீது நான் ரோஷம் கொண்டதைப் போல் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (இதர) துணைவியர் எவர் மீதும் நான் ரோஷப்பட்டதில்லை. ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கதீஜாவை அதிகமாக நினைவுகூர்ந்து, அவரை (அடிக்கடி) புகழ்ந்து பேசிவந்தார்கள். கதீஜா அவர்களுக்கென சொர்க்கத்தில் முத்து மாளிகை ஒன்று கொடுக்கப்படும் என்று அவருக்கு நற்செய்தி கூறும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்க 'வஹீ' மூலம் உத்தரவிடப்பட்டது. 158

பகுதி 110

ஒருவர் தம் புதல்வியின் தன்மான உணர்வைக் காக்கவும், நீதி கோரியும் வாதிடுவது.

5230. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்த படி, 'ஹிஷாம் இப்னு முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூ ஜஹ்லுடைய) மகளை அலீ இப்னு அபீ தாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்கமாட்டேன். அலீ இப்னு தாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்குச் செய்துவிட்டு, அவர்களின் மகளை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்கமாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்; அவரை என் வேதனைப்படுவது என்னை மன வேதனைப்படுத்துவதாகும்'' என்று கூறினார்கள். 159

பகுதி 111

(இறுதிக் காலத்தில்) ஆண்கள் குறைந்து விடுவர்; பெண்கள் அதிகரித்துவிடுவர்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமைநாள் நெருங்கும் இறுதிக் காலத்தில்) ஓர் ஆணை நாற்பது பெண்கள் பின்தொடர்வதை நீ காண்பாய்! ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகரித்துவிடுவதனால் ஆண்களிடம் அபயம் தேடியே இவ்வாறு செல்வர்.

என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். 160

5231. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

என் அல்லாத வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியேற்ற செய்தி ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கப் போகிறேன், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கல்வி அகற்றப்பட்டுவிடுவதும், அறியாமை மலிந்துவிடுவதும், விபசாரம் அதிகரித்து விடுவதும், மது அருந்துதல் அதிகரித்து விடுவதும், ஐம்பது பெண்களுக்கு - அவர்களை நிர்வகிக்க ஒரே ஆண் என்ற நிலைமைவரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து, ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும். 161

பகுதி 112

(மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினர் தவிர (வேறு) எந்த (அன்னிய) ஆணும் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கலாகாது; கணவன் இல்லாத நேரத்தில் ஒரு பெண்ணிடம் செல்லலாகாது.

5232. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் '(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள். 162

5233. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

''ஒரு பெண்ணுடன் எந்த (அன்னிய) ஆடவனும் தனிமையில் இருக்கலாகாது; (மணமுடிக்காத தகாத) நெருங்கிய உறவினருடன் (அவள்) இருக்கும்போது தவிர!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! என் மனைவி ஹஜ் செய்யப் புறப்பட்டுவிட்டாள். இன்ன இன்ன போரில் என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்நிலையில்) நான் என்ன செய்வது?)'' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், '(போருக்குச் செல்வதிலிருந்து பெயரை) திரும்பப் பெற்றுக்கொண்டு, நீர் உம்முடைய மனைவியுடன் ஹஜ் செய்வீராக!'' என்று கூறினார்கள். 163

பகுதி 113

மக்கள் அருகிலிருக்க, அந்நியப் பெண்ணுடன் ஓர் ஆண் தனியாக(ப் பேசிக்கொண்டு) இருப்பது அனுமதிக்கப்பட்டதே!

5234. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

அன்சாரிகளில் ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவருடன் தனியாக (எங்கள் காதில் விழாத விதத்தில்) நபியவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், அந்தப் பெண்மணியிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரிகளாகிய) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்'' என்று கூறினார்கள்.

பகுதி 114

பெண்களைப் போல் நடந்துகொள்கிறவர்(களான அலி)கள் ஒரு பெண்ணிடம் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

5235. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்

(ஒரு நாள் என் கணவர்) நபி(ஸல்) அவர்கள் என் அருகில் இருந்து கொண்டிருந்தார்கள். அங்கு எங்கள் வீட்டில் (பெண்களைப் போல் நடந்து கொள்ளும்) 'அலி' ஒருவனும் இருந்துகொண்டிருந்தான். அந்த 'அலி' என் சகோதரர் அப்துல்லாஹ் இப்னு அபீ உமைய்யாவிடம், 'நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால், ஃகைலானுடைய 164 மகளை உனக்கு நான் அடையாளம் காட்டுகிறேன். (அவளை நீ மணந்துகொள்.) ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும் பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்'' என்று (அவளுடைய மேனி அழகை வர்ணித்துக்) கூறினான். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'இவன் உங்களிடம் ஒருபோதும் வரக்கூடாது'' என்று கூறினார்கள். 165

பகுதி 115

(அந்நிய ஆடவர்களான) அபிசீனியர்கள் போன்றவர்களைக் குழப்பத்திற்கிடமில்லாதிருப்பின் ஒரு பெண் பார்க்கலாம்.

5236. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் என்னைத் தம் மேல் துண்டால் மறைத்துக்கொண்டிருக்க பள்ளிவாசல் வளாகத்தில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் (என் வீட்டிலிருந்தபடி) பார்த்துக் கொண்டிருந்தேன். நானாகச் சடைந்துவிடும் வரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகளின் மீது பேராவல் கொண்ட இளம் வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்.166

பகுதி 116

தம் தேவைகள் நிமித்தம் பெண்கள் வெளியே செல்லலாம்.

5237. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான) சவ்தா பின்த் ஸம்ஆ(ரலி) (பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின் ஒரு நாள்) இரவு நேரத்தில் வெளியே சென்றார்கள். அவர்களைப் பார்த்து உமர்(ரலி) அடையாளம் புரிந்து கொண்டு, 'சவ்தாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை'' என்று கூறினார்கள். உடனே சவ்தா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, அது குறித்து அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய அறையில் உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அந்தச் சமயத்தில் அவர்களுக்கு (வஹீ - வேத அறிவிப்பு) அருளப்பெற்று (வழக்கம் போல் அதனால் ஏற்படும் சிரம நிலை) அகற்றவும் பட்டது. அப்போது அவர்கள், '(என் துணைவியரே!) நீங்கள் உங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல அல்லாஹ் அனுமதியளித்துவிட்டார்கள்'' என்றார்கள். 167

பகுதி 117

பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல பெண் தன் கணவரிடம் அனுமதி கோருவது.

5238. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 168

பகுதி 118

பால்குடி உறவு முறையுள்ள ஒரு பெண்ணிடம் செல்வதும், அவளைப் பார்ப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும்.

5239. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(ஒருநாள்) என் பால்குடித் தந்தை (அபுல் குஐஸ்) அவர்களின் சகோதரர் (அஃப்லஹ் என்பார்) வந்து என் வீட்டுக்குள்ளே வர அனுமதி கேட்டார். அல்லாஹ்வின் தூதரிடம் கேட்காமல் அவருக்க அனுமதியளிப்பதில்லை என்று நான் இருந்துவிட்டேன். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் நான் அது குறித்துக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் தாமே! அவருக்கு உள்ளே வர அனுமதி கொடு!'' என்று கூறினார்கள். உடனே நான், இறைத்தூதர் அவர்களே! அந்தப் பெண்தானே எனக்குப் பாலூட்டினார். இந்த ஆண் எனக்குப் பாலூட்டவில்லையே! (பாலூட்டிய தாயின் கணவரும் அவரின் சகோதரரும் எனக்கு எந்த வகையில் உறவினராவார்கள்)?' என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவர் உன்னுடைய (பால் குடித்) தந்தையின் சகோதரர் தாம். எனவே, அவர் உன்னிடம் (உன் வீட்டுக்குள்) வரலாம்'' என்று கூறினார்கள்.

-இது எங்களுக்கு 'பர்தா' அணியும் சட்டம் விதியாக்கப்பட்ட பின்னால் நடந்தது.

(மேலும்,) இரத்த உறவின் காரணத்தால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படுவது போன்றே பால் குடியினாலும் நெருங்கிய உறவு ஏற்படும். 169

பகுதி 119

ஒரு பெண் மற்றொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவுவதும், அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம் வர்ணித்துக் கூறுவதும் கூடாது.

5240. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்றுமேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம் - அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணணை செய்ய வேண்டாம்.

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

5241. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம் - அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம்.

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 170

பகுதி 120

ஒருவர் 'நான் இன்றிரவு என் துணைவியர் அனைவரிடம் (தாம்பத்திய உறவுக்காகச்) சென்றுவருவேன்'' என்று கூறுவது.

5242. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

(ஒருமுறை இறைத்தூதர்) தாவூத்(அலை) அவர்களின் புதல்வர் சுலைமான்(அலை) அவர்கள், 'நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அப்பெண்களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது (சுலைமான் -அலை) அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) 'இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால்'' என்று (சேர்த்துச்) சொல்லுங்கள்'' என்றார். (ஆனால்,) சுலைமான்(அலை) அவர்கள், 'இன்ஷா அல்லாஹ்' என்று கூறிவில்லை; மறந்துவிட்டார்கள். அவ்வாறே சுலைமான் (அலை) அவர்களும் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஒரே ஒரு மனைவியைத் தவிர வேறெவரும் குழந்தை பெற்றெடுக்கவில்லை. அந்த ஒரு மனைவியும் (ஒரு புஜமுடைய) அரை மனிதரைத்தான் பெற்றெடுத்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர் 'இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால்' என்று கூறியிருந்தால் அவர் தம் சத்தியத்தை முறித்திருக்கமாட்டார். (சபதத்தை நிறைவேற்றியிருப்பார்.) தம் தேவை நிறைவேறுவதைப் பெரிதும் அவர் நம்பியிருப்பார்'' என்று கூறினார்கள். 171

பகுதி 121

நீண்ட பயணத்திலிருந்து திரும்புகிறவர் இரவில் திடீரென தம் வீட்டினுள் நுழையலாகாது. தம் வீட்டார் மீது துரோகக் குற்றச்சாட்டு சுமத்திடவும், அவர்களின் குற்றங்க குறைகளைக் கண்டுபிடிக்கவும் வாய்ப்பு நேர்ந்திடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம்.

5243. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

ஒருவர் (வெளியிலிருந்து) இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் வருவதை நபி(ஸல்) அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாயிருந்தார்கள்.

5244. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உங்களில் ஒருவர் நீண்ட நாள்கள் கழித்து ஊர் திரும்பினால் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்ல வேண்டாம். 172

என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 122

குழந்தைத் தோட்டம். 173

5245. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நான் ஒரு போரில் (தபூக்கில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தேன். நாங்கள் (போரை முடித்து) திரும்பிக் கொண்டிருந்தபோது, மெதுவாகச் செல்லக் கூடிய ஒட்டகத்தின் மீது இருந்தவாறு நான் அவசரப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் எனக்குப் பின்னாலிருந்து வாகனமொன்றில் வந்து சேர்ந்தார். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்,) 'உமக்கு என்ன அவசரம்?' என்று கேட்டார்கள். 'நான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்'' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'கன்னிப் பெண்ணை மணந்தாயா. அல்லது கன்னி கழிந்த பெண்ணை மணந்தாயா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை. கன்னிகழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)'' என்றேன். நபி(ஸல்) அவர்கள், அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக் குலாவி மகிழ்ந்திருக்கலாமே!'' என்றார்கள்.

பிறகு நாங்கள் (மதீனா) வந்து சேர்ந்து (ஊருக்குள்) நுழையப் போனபோது நபி(ஸல்) அவர்கள், (நீங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இஷா நேரம் வரை சற்றுப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக் கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க் கொள்ளட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹுஷைம் இப்னு பஷீர்(ரஹ்) கூறுகிறார்கள்:

நபி(ஸல்) அவர்கள் ஜாபிர்(ரலி) அவர்களிடம், 'புத்திசாலித்தனமாக நடந்துகொள்'' என்றார்கள். அதாவது 'குழந்தையைத் தேடிக்கொள்'' என்றார்கள் என நம்பத் தகுந்த (அறிவிப்பாளர்) ஒருவர் என்னிடம் கூறினார்.

5246. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

(தபூக் போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த என்னிடம்) நபி(ஸல்) அவர்கள், 'நீ இரவில் (மதீனாவுக்குள்) நுழைந்த கையோடு உன் வீட்டாரிடம் சென்றுவிடாதே! (வெளியூர் சென்ற கணவரைப்) பிரிந்திருக்கும் பெண் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தன்னை ஆயப்பத்தப்படுத்தி)க் கொள்ளும் வரை, தலைவிரி கோலமாயிருக்கும் பெண் தலைவாரிக்கொள்ளும் வரை (பொறுமையாயிரு!'') என்று கூறிவிட்டு, 'புத்திசாலித்தனமாக நடந்து (குழந்தையைத் தேடிக்)கொள்; புத்திசாலித்தனமாக நடந்துகொள்'' என்று கூறினார்கள்.

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.

பகுதி 123

(கணவனைப்) பிரிந்திருந்த பெண் சவரக்கத்தியைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்; தலைவிரி கோலமாக இருந்தவள் தலைவாரிக் கொள்ள வேண்டும்.

5247. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (தபூக் எனும்) ஒரு போரில் இருந்தோம். (போர் முடிந்து) திரும்பி வந்து நாங்கள் மதீனாவை நெருங்கிக் கொண்டிருந்தோம். அப்போது நான் மெதுவாகச் செல்லும் என் ஒட்டகத்தில் இருந்தவாறு அவசரப்பட்டுக்கொண்டிருந்தேன். அந்த நேரம் எனக்குப் பின்னால் இருந்து வாகனத்தில் ஒருவர் என்னை வந்தடைந்து தம்மிடமிருந்த கைத் தடியால் என்னுடைய ஒட்டகத்தைக் குத்தினார். உடனே என்னுடைய ஒட்டகம் நீ கண்ட ஒட்டகங்களிலேயே அதிவிரைவாக ஓடக் கூடியது போன்று ஓடியது. நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களே இருந்தார்கள்.

நான், 'இறைத்தூதர் அவர்களே! நான் புதிதாகத் திருமணம் ஆனவன்'' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'திருமணம் செய்துகொண்டுவிட்டாயா?' என்று கேட்க, நான், 'ஆம்'' என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், 'கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை. கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)'' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'கன்னிப் பெண்ணை மணந்து, அவளோடு நீயும், உன்னோடு அவளுமாய்க் கூடிக் குலாவி மகிழ்ந்திருக்கலாமே!'' என்றார்கள். பிறகு நாங்கள் (மதீனாவுக்கு) வந்து (ஊருக்குள்) நுழைய முற்பட்டோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், (நீங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களை சென்றடைய) இஷா நேரம் வரைப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக் கொள்ளட்டும். (கணவனைப்) பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க் கொள்ளட்டும்'' என்றார்கள். 175

பகுதி 124

தங்கள் கணவன்மார்கள், தங்களின் தந்தையர்கள், தங்கள் கணவன்மார்களின் தந்தையர், தங்களின் புதல்வர்கள், தங்கள் கணவன்மார்களின் புதல்வர்கள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், தங்கள் (உடன் நெருங்கிப் பழகும்) பெண்கள், தங்களின் அடிமைகள், (பெண்களின் மீது) வேட்கையில்லாத தம்மை அண்டி வாழுகிற ஆண்கள், பெண்களின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி ஏதும் தெரிந்திராத சிறுவர்கள் ஆகிய இவர்கள் முன்னிலையிலன்றி (வேறு எவரிடமும்) தங்களின் அழகை இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் வெளிக்காட்ட வேண்டாம் (எனும் 24:31 வது இறைவசனம்)

5248. அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார்

உஹுத் போர் நாளில் (காயமுற்ற) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காயத்திற்கு என்ன மருந்திடப்பட்டது என்பது தொடர்பாக மக்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். எனவே, சஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதி(ரலி) அவர்களிடம் (சென்று அது பற்றிக்) கேட்டார்கள். -ஸஹ்ல்(ரலி) மதீனாவில் கடைசியாக எஞ்சியிருந்த நபித்தோழர்களில் ஒருவராய் இருந்தார்கள் - அதற்கு ஸஹ்ல்(ரலி) (பின்வருமாறு) பதிலளித்தார்கள்.

மக்களிலேயே இது குறித்து என்னை விட நன்கறிந்தவர் எவரும் (இப்போது) எஞ்சியிருக்கவில்லை. (உஹுத் போரில் காயமடைந்த) நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்து (அவர்களின் புதல்வி) ஃபாத்திமா(ரலி) அவர்களே இரத்தத்தைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். அலீ(ரலி) தம் கேடயத்தில் தண்ணீர் கொண்டுவந்து கொண்டிருந்தார்கள். பின்பு ஒரு பாய் எடுத்துக் கரிக்கப்பட்டது. பிறகு (கரிக்கப்பட்ட பாயின்) சாம்பலை நபியவர்களின் காயத்தில் வைத்து அழுத்தப்பட்டது. 176

பகுதி 125

உங்களில் பருவ வயதை அடையாத (சிறு)வர்கள் (உங்களிடம் வருவதற்கு மூன்று நேரங்களில் மட்டும் அனுமதி பெறட்டும்! எனும் 24:58 வது வசனத்தொடர்.)

5249. அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ்(ரலி) அறிவித்தார்

ஒருவர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'தாங்கள் (பெரு நாள்களான) ஈதுல் அள்ஹாவிலோ, ஈதுல் ஃபித்ரிலோ இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். இப்னு அப்பாஸ்(ரலி), 'ஆம் (இருந்திருக்கிறேன்.) (உறவின் காரணத்தினால்) அவர்களுடன் எனக்கு நெருக்கம் இல்லாதிருந்திருப்பின் சிறுவனாக இருந்த நான் (பெரு நாள் தொழுகையில்) அவர்களுடன் பங்கெடுத்து (பெண்கள் பகுதிவரை சென்று) இருக்கமுடியாது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று (மக்களுடன் பெருநாள்) தொழுகையை நிறைவேற்றினார்கள். பிறகு உரை நிகழ்த்தினார்கள்.

இந்த இடத்தில் இப்னு அப்பாஸ்(ரலி) (அத்தொழுகைக்கு முன்) பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதாகக் கூறவில்லை.

பிறகு நபி(ஸல்) அவர்கள் பெண்கள் இருந்த பகுதிக்கு வந்து (மார்க்க விஷயங்களையும், மறுமை நாளையும்) நினைவூட்டி உபதேசம் புரிந்தார்கள். மேலும், (ஏழை எளியோருக்கு) தர்மம் செய்யுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே அப்பெண்கள், தங்களின் காதுகளுக்கும் கழுத்துகளுக்கும் தங்களின் கைகளைக் கொண்டுசென்று (அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றி) பிலால்(ரலி) அவர்களிடம் கொடுப்பதை கண்டேன். பிறகு நபி(ஸல்) அவர்களும் பிலால்(ரலி) அவர்களும் வீட்டிற்குத் திரும்பிச் சென்றனர். 177

பகுதி 126

ஒருவர் தம் நண்பரிடம் 'இன்றிரவு தாம்பத்திய உறவைத் தொடங்கினீர்களா?' என்று கேட்பதும், 178 ஒருவர் தம் புதல்வியைக் கண்டிக்கும்போது இடுப்பில் குத்துவதும்.

5250. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(ஒரு நாள் என் தந்தை) அபூ பக்ர்(ரலி) என்னைக் கண்டித்தார்கள். என் இடுப்பில் தம் கரத்தால் குத்தலானார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் தலைவைத்து படுத்திருந்தது தான் என்னை அசையவிடாமல் (அடிவாங்கிக் கொண்டிருக்கும்படி) செய்துவிட்டது. 179

5வது பாகம் முற்றிற்று.
Previous Post Next Post