முதலில் போதிக்க வேண்டியது எது? அகீதாவா? கிலாஃபத்தா?

அஷ்ஷெய்க். M.S.M. இம்தியாஸ் ஸலபி

மக்கள் மத்தியில் இஸ்லாமிய பிரச்சாரப் பணியினை கொண்டு செல்லும்போது மக்களுக்கு முதலில் போதிக்க வேண்டிய அம்சம் எது? என்பதில் சிலர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

“இஸ்லாமிய அரசாங்கம்” (கிலாஃபத்) நிறுவுவது பற்றியே முதலில் மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதைக்கொண்டே முஸ்லிம்களை வழிநடத்த வேண்டும்.இஸ்லாமிய அரசாங்கம் உருவானால்தான் நம்மால் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்ற முடியும். இன்னும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கக்கூடிய பணியையும் நம்மால் முழுவீச்சில் செய்ய முடியும். எனவே நாம் கிலாஃபத் அமைப்பது பற்றிய போதனைகளையும் சிந்தனைகளையுமே முதலில் முஸ்லிம்களுக்கு போதிக்கவேண்டும் என்று கிலாஃபாவாதிகள் வாதிடுகிறார்கள்.

மார்க்க விவகாரங்கள் சம்பந்தமான முரண்பாடுகளைப் பற்றியோ, இஸ்லாமியக் கொள்கை (அகீதா)யின் சீர்குலைவுகளைப் பற்றியோ, இஸ்லாத்தின் ஏனைய முக்கிய விஷயங்களின்  விளக்கங்களைப் பற்றியோ பேசி மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தாமல், மக்கள் எந்தெந்த நம்பிக்கைகளில் ,கொள்கைகளில் இருந்து செயல்படுகிறார்களோ சமுதாய ஒற்றுமைக்காக அதைக் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட வேண்டும் என்றும் வாதிக்கிறார்கள் இந்த கிலாஃபாவாதிகள்!

அகீதா பற்றியும் ஸுன்னாஹ்வுக்கு முரணான விஷயங்கள் பற்றியும் பேசி அவைகளை அடையாளம் காட்டி தஃவா செய்தால் சமூகம் பிளவுபட்டுவிடும். ஒற்றுமையும் குலைந்துவிடும். ஒற்றுமையின் முக்கியத்துவம் கருதி ஷிர்க், பித்அத்கள் மற்றும் பாவங்களைப் பற்றி விமர்சிக்காமல் விலகி நிற்க வேண்டும். அவரவர் விரும்புகின்ற போக்கில் அவர்களை அப்படியே விட்டுவிடவேண்டும் என்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

முஸ்லிம்கள் எல்லோரும் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபடக்கூடிய பொதுவான விஷயங்களுக்கு முன்னுரிமை வழங்கி தஃவாவை முன்னெடுத்துச்  செல்ல வேண்டும். கொள்கைக் குழப்பங்களைப் பற்றி பேசாமல் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். இஸ்லாமிய அரசாங்கத்தை நிருவினால்தான் சரியான ஒரே கொள்கையின் கீழ் மக்கள் அனைவரையும் வழிநடத்த முடியும் என்றும் இந்த கிலாஃபாவாதிகள் வாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் இந்தக் கொள்கையும் அணுகுமுறையும் சரியானதா என்றால் நிச்சயமாக இல்லை! கேட்பதற்கு இனிமையாகவும் பார்பதற்கு அழகாகவும் இருந்தாலும் இது இஸ்லாமிய அடிப்படைக்கு அப்படியே முரணானதாகும்.

ஒரு முஸ்லிமுடைய இம்மை மறுமையின் வெற்றிக்கு முதல் மற்றும் பிரதான அடிப்படையாக இருப்பது அகீதாவாகும். அல்லாஹ் மனிதர்களைப் படைத்ததன் அடிப்படை நோக்கமே கலப்படமற்ற தூய எண்ணத்துடனும், கலப்பில்லாத வணக்க வழிமுறைகளுடனும் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்பதற்காகத்தான்.

அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பாமல், அல்லாஹ்வுக்கு செலுத்த வேண்டிய வணக்கத்தில் பலரையும் கூட்டு சேர்த்து ஷிர்க் செய்வது அல்லாஹ்வுடைய வல்லமையை சிதைப்பதாகும்.

தனக்கு இணைவைப்பதை மன்னிக்க முடியாத பாவமாக அல்லாஹ் கூறுகிறான்.

ஓரிறைக் கொள்கையை மட்டுமே பின்பற்றி வந்த மனிதர்களிடம் எப்போது ஷிர்க் நுழைந்ததோ அப்போதுதான் அல்லாஹ் இறைத் தூதர்களை அனுப்பிவைத்தான்.

மனித ஆத்மாக்களைப் படைத்து “நானல்லவா உங்கள் ரப்பு” என்று அல்லாஹ் கேட்டபோது “ஆம்! நீயே எங்கள் ரப்பு” என்றே ஆன்மாக்கள் எல்லாம் பதில் கூறின. உலகிற்கு வந்தபின் அல்லாஹ்வை ரப்பாக ஏற்று அசல் வடிவில் அவனை வணங்காமல் வாழந்தபோதுதான்  இறைத்தூதர்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான்.

இறைநம்பிக்கை ஒழுங்கில்லாமல் ஒரு முஸ்லிம் வாழும் காலமெல்லாம் அவன் புரிகின்ற அத்தனை அமல்களும் பயனற்று பாழாகிவிடும்.

அதே நிலையில் மரணித்தால் அல்லாஹ்வின் தண்டனைக்குரியவனாக அவன் மாறிவிடுவான். எனவே பிரச்சாரப் பணியில் முதலிடம் கொடுக்க வேண்டியது அகீதாதான்.அதைச் சீர்படுத்துவதற்கும் பின்பற்றுவதற்குமே மக்களைத் தூண்டவேண்டும்.

அல்லாஹ் தன்னைப் பற்றி குர்ஆனில் எப்படி வர்ணித்துள்ளானோ, நபியவர்கள் அல்லாஹ்வைப் பற்றி என்ன வர்ணனைகளை சொன்னார்களோ அதை அப்படியே ஒவ்வொரு முஸ்லிமும் ஏற்று அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும். அதுதான் ஈமானுக்கு பாதுகாப்பாகும்.

*அல்லாஹ் எங்கும் நிறைந்தவனா?*

அல்லாஹ் எல்லாப் பொருட்களிலும் வஸ்துகளிலும் இருக்கிறான்.தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்.

அல்லாஹ் எங்கள் ஷைக்கிடத்தில் சூஃபியிடத்தில் காட்சியளிக்கிறான். அவர்களுடன் பேசுகிறான்.

அந்த அல்லாஹ்வை அமல்கள் செய்து நெருங்க முடியாது. அல்லாஹ்வை நெருங்குவதற்கு ஒரு புரோகிதர் (அவ்லியா) தேவை. மறுமையின் வெற்றிக்கு அந்த அவ்லியாவின் சிபாரிசு தேவை என்று ஒரு முஸ்லிம் நம்பினால்

அவன், அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் காட்டிய ஈமானுக்கு மாற்றமான நம்பிக்கை கொண்டவனாகவே இருப்பான்.

பள்ளிக்குச் சென்று தொழுது அல்லாஹ்விடம் முறையிடுவதை விட கப்ருகளுக்குச் சென்று அங்கே அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் கையேந்தி கஷ்டங்களை முறையிட்டு காணிக்கைகள் செலுத்தி பிள்ளை வரம் கேட்டு அதைச் சுற்றி வந்து மண்டியிடுதல் என்பது குர்ஆன் சுன்னாஹ் கூறும் இறைநம்பிக்கைக்கு முற்றிலும் எதிரானது.

தகடு தாயத்துக்கள் எழுதி மேனியிலும் வீடுகளிலும் வியாபார ஸ்தலங்களிலும் தொங்க விடுவதும் பாதுகாப்பு தேடுவதும் இறை நம்பிக்கைக்கு விரோதமானது.

அல்லாஹ்வுடைய இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றாமல் முன்மாதிரியாகக் கொள்ளாமல் அல்லாஹ்வுடைய தூதரின் ஸுன்னாக்களை வழிமுறைகளை சரிவர செயற்படுத்தாமல் அல்லாஹ்வுடைய தூதரின் ஸுன்னாக்களுக்கு மாற்றமாக சமுதாயத்தின் செயல்பாடுகளுக்கும் சடங்கு சம்பிரதாயங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் ஆதரவு கொடுத்து செயல்படுத்துதல் என்பது இறைத்தூதரை நிராகரிப்பதற்கு சமமானதாகும்.

கலிமாவுக்கு மாற்றமாக மக்கள் செயல்பட்டாலும் சமுதாய ஒற்றுமை கருதி அந்தத் தவறான பாதையிலேயே பயணிக்க வேண்டும் என்ற கோஷம் இறை நிராகரிப்பில் கொண்டு போய் சேர்க்கும். இஸ்லாமிய அரசாங்கம் இருந்தாலும் இத்தகைய தவறான வழிகள் எல்லாம் கண்டிப்பாக களையப்பட வேண்டும். இஸ்லாமிய அரசாங்கம் இல்லாவிட்டாலும் களையெடுக்கப் பாடுபட வேண்டும்.

இறைத்தூதர்களை அல்லாஹ் அனுப்பும்போது முதலில் அரசாங்கத்தை (கிலாஃபத்தை) அமைத்து பிறகு அகீதா பற்றிப் பேச அனுப்பவில்லை. மாறாக அரசாங்கத் தலைவர்கள், மன்னர்கள் புரிகின்ற ஈமானுக்கெதிரான செயல்பாடுகளையும் சமூக விரோத செயல்பாடுகளையும் கண்டித்து தவ்ஹீதை எடுத்துச் சொல்லி அந்த போதனை பிரகாரம் மக்களை வழிநடத்தவே நபிமார்களை அல்லாஹ் அனுப்பி வைத்தான்.”அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்! அவனைத்தவிர வேறு கடவுள் இல்லை” என்ற உண்மையான தவ்ஹீதை போதிப்பதற்காகவே இறைத்தூதர்களை அல்லாஹ் அனுப்பினான். அதனோடு சேர்த்து சமூக அவலங்களையும், சீர்கேடுகளையும் இறைத்தூதர்கள் கண்டித்துப் பேசினார்கள்.

மூஸா நபி இஸ்ரவேல் மக்களின் விடுதலைக்காக போராடிய போதும்

லூத் நபி ஓரினச்சேர்க்கைக்கு எதிராக போராடிய போதும்

ஷூஹைப் நபி அளவை நிலுவை மோசடிக்கு எதிராகப் போராடியபோதும்

தவ்ஹீத் பிரச்சாரத்தை முன்வைத்தே சமூக முன்னேற்றத்தை நோக்கி பயணமானார்கள்.

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரப் பணியினை ஆரம்பித்தபோது தவ்ஹீதை முதன்மைப்படுத்தியே 13 வருடங்கள் பாடுபட்டார்கள். எதிரிகள் இப்பிரச்சாரப் பணியினை தடுக்கும் முகமாக சமரசம் செய்ய முனைந்தபோதும் நபிகளார்(ஸல்) அவர்கள் கடுகளவும் விட்டுக் கொடுக்கவில்லை. நபிகளாருடைய பிரச்சாரப்பணி மதீனாவில் தாக்கம் செலுத்தி மதீனத்து மக்கள் இஸ்லாத்தைத் தழுவியபின் கிலாஃபாவிற்கான சாத்தியங்கள் தென்பட்டபின் மதீனாவை தளமாகக் கொண்டு படிப்படியாக கிலாஃபத்தை நோக்கி மக்களை நகர்த்தினார்கள். மதீனாவில் அருளப்பட்ட வசன அமைப்புகளும் இதனை நன்கு தெளிவுப்படுத்துகின்றன.

எனவே பிரசாரப் பணியில் நபிகளாரின் இந்த வழிமுறைதான் பின்பற்றப்பட வேண்டும். ஈமானுக்கு எதிராக, தூதுத்துவத்துக்கு எதிராக ஷிர்க், பித்அத்களை மக்கள் பற்றிப்பிடித்து வாழ்கின்றபோது அகீதாவைப் பற்றியோ ஸுன்னாஹ்வைப் பற்றியோ பேசாமல், கிலாஃபத்தை பற்றித்தான் பேசவேண்டும் கிலாஃபத் சிந்தனையையே முதலில் விதைக்க வேண்டும் என்பது அல்லாஹ் விதித்த நியதிக்கே முரணானது.

இஸ்லாமிய அகீதாவில் பிடிப்பு இல்லாமல் சுன்னாஹ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சடங்கு சம்பிரதாயக் கொள்கையில் மரணிக்கின்ற மக்களின் நிலையோ மறுமையில் படுமோசமாகிவிடும் என்பதை ஏன் இந்த கிலாஃபாவாதிகள் சிந்திக்க மறுக்கிறார்கள்?

கிலாஃபத் பேசுவதற்கு முன் தவ்ஹீத் பற்றிப் பேச பயப்படுபவர்கள் (ஒரு வாதத்திற்காக வழிகெட்ட கூட்டங்களின் ஆதரவில் இஸ்லாமிய கூட்டரசாங்கம் அமைத்து நடத்தினாலும்) கிலாஃபத் ஏற்பட்ட பின்பும் நிச்சயம் அவர்கள் தவ்ஹீதைப் பற்றி பேசவே மாட்டார்கள். ஆட்சிக் கவிழ்ப்பு நடந்துவிடுமோ பலமற்ற ஆட்சி உருவாகிவிடுமோ தலைமைப் பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தால் அகீதாவைச் சீர்படுத்தி ஆதாரபூர்வமான சுன்னாஹ்வை அமுல்படுத்துவது பற்றிய எண்ணம் அவர்களிடம் நிச்சயம் வராது. இது நமது கற்பனையல்ல! இந்த கிலாஃபாவாதிகள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் உஸ்மானிய கிலாஃபாவில் தவ்ஹீதுக்கு எதிரான ஷிர்க் பித்அத்தான கொள்கைகளும் செயல்களுமே மேலோங்கி இருந்தது என்பது வரலாறு கூறும் மறுக்க முடியாத உண்மை!

இஸ்லாமிய நாட்டுக்குள்ளே இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதாக கூறியவர்களால் கூட அகீதாவின் அஸ்திவாரத்தில் இஸ்லாமிய ஆட்சியை இன்றுவரை அங்கே ஏற்படுத்த முடியவில்லை. இளைஞர்களை ஒன்று கூட்டி கிலாஃபத் பற்றிப் பேசி தவறான உணர்வூட்டி புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வரப் போராடும் இவர்களால் அந்த இளைஞர்களுக்கு ஈமானிய உணர்வூட்டி ஆதாரப்பூர்வமான சுன்னாஹ்வின் நிழலில் அமல்கள் செய்வது பற்றிப் போதிக்க முடியவில்லை. எப்படி வேண்டுமானாலும் நம்பிக்கை கொள்ளலாம் எப்படி வேண்டுமானாலும் அமல்கள்  செய்யலாம். நமது கிலாஃபத் பயணத்திற்கு அவைகளை தடைகளாக ஆக்கிவிடக்கூடாது என்பதே இவர்களது நோக்கமாகும்.

புரட்சிகரமான கிலாஃபத் சிந்தனைகளை வழங்கி ஆயிரக்கணக்கான அப்பாவி இளைஞர்களை பலி கொடுக்க முனைவதைவிட ஈமானிய உணர்வுகளை அவர்களுக்கு ஊட்டி பல பேருடைய நேர்வழிக்கு வழிகாட்ட அவர்களைத் தூண்டலாம். அவர்களைத் தயார்படுத்தலாம். அதுதான் இம்மை மறுமை வெற்றிக்கு உகந்தது..

மக்களிடத்தில் அகீதாவுக்கெதிரான கொள்கைளையும் சுன்னாவுக்கெதிரான செயல்பாடுகளையும் பேசுவதற்கு பயப்படும் இவர்கள் குறைந்தபட்சம் தங்களுடைய வாழ்விலாவது அந்தப் பாவங்களை விட்டும் ஒதுங்கி வாழ்கிறார்களா என்றால் அதுவுமில்லை!

தங்களுடைய வீடுகளிலும் சமூகத்திலும் குர்ஆன் சுன்னாஹ்வுக்கு மாற்றமான விஷயங்களை தாராளமாக செய்துகொள்கிறார்கள். தங்களுடைய வியாபார ஸ்தலங்களிலும் தவ்ஹீதுக்கு எதிரானதை விற்பனையும் செய்கிறார்கள்.

தவ்ஹீதையும் பேசுவோம் ஷிர்க்கையும் செய்வோம்.

பித்அத்தையும் ஆதரிப்போம் சுன்னாவையும் தொட்டுக்கொள்வோம்.

எதையும் எதிர்க்கவுமாட்டோம். எல்லாவற்றையும் அரவணைக்கவுமாட்டோம். ஸலஃபியைக் கண்டால் நாங்களும் ஸலஃபிதான் என்போம். சூஃபியைக் கண்டால் நாங்களும் சூஃபிதான் என்போம். ஷியா மதத்தையும் ஆதரிப்போம். காதியாணிகளும் நமது சகோதரர்கள் என்போம் என்ற தடுமாற்றமான கொள்கைதான்

உண்மையில் இவர்களின் கொள்கையாகும். இந்தத் தடுமாற்றமான கொள்கை குர்ஆன் சுன்னாஹ் கூறும் ஒரு இறைவிசுவாசியின் கொள்கையாக இருக்கவே இருக்காது.

உலகாயுதமும் மக்கள் செல்வாக்கும் கௌரவமான வாழ்வும்தான் இவர்களது இலக்காகத் தெரிகிறதே தவிர அதற்குத்தான் இந்த கிலாஃபத் கோஷமே தவிர, பரிசுத்தமான தீனை பின்பற்றுவதற்கோ நிலைநாட்டுவதற்கோ அல்ல என்பதே நிதர்சனம்.

இஸ்லாத்தின் ஆணிவேரை பிடுங்கி எறியத் துடிக்கும் தீய கொள்கைகள் உடைய வழிகெட்ட கூட்டங்கள் அதிலும் குறிப்பாக ஷீஆக்களும் காதியானிகளும் முஸ்லிம் சமூகத்திற்குள் ஊடுருவல் செய்தமைக்கு தீனை விட்டுக் கொடுக்கும் இவர்களது தடுமாற்றமான, எல்லாக் கொள்கைகளையும் அங்கீகரிக்கும் தாராளமான கொள்கைகளும் அரசியல் இலாபங்களுமே முக்கியக் காரணம். படித்த மக்களோ பாமர மக்களோ இந்த வழிகேட்டின் அடையாளத்தைக் கண்டு கொள்ளாமல் அதில் போய் வீழ்ந்தமைக்கும் இந்த கிலாஃபாவாதிகளின் தவறான அணுகுமுறைகளே காரணம்.

இந்த கிலாஃபாவாதிகள் ஈரானில் ஏற்பட்ட  இஸ்லாத்திற்கெதிரான ஷீஆப் புரட்சியை இஸ்லாமியப் புரட்சியாக சித்தரித்ததன் விளைவு இன்று  உலகெங்கும் ஷிஆயிஸம் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்ற உத்தம ஸஹாபாக்களையும், மூஃமின்களின் அன்னையர்களான நபிகளாரின் மனைவிமார்களையும் தவறாகச் சித்தரிக்கும் பணியும் தாராளமாக நடந்து வருகிறது. இந்தக் கிலாஃபாவாதிகளின் தவறான போக்குகளால் இன்னும் சில காலங்களில் ஷிஆ-சுன்னி பிரச்சினை இந்த நாட்டிலும் (ஏன்..அவர்களது குடும்பத்திலும் கூட) நடக்கலாம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

எனவே குர்ஆன் சுன்னாஹ் கூறும் சரியான அகீதாவை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து இஸ்லாமிய சமுதாயத்தை சீர்திருத்தினால் கிலாஃபத் ஏற்படாவிட்டாலும் ஈமானையாவது பாதுகாத்து ஈமானுடன் மரணிப்பதற்கு வாய்ப்பாக அமையும். வழிகேட்டை அடையாளம் கண்டு அதனை விட்டுத் தவிர்ந்து கொள்ளவும் உதவியாக இருக்கும். தீனுக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் அதுவே பெரிய கிலாஃபத்தாகும். எனவே அகீதாவுக்கு முதலிடம் கொடுத்து பிரசாரப் பணியினை செய்வோமாக!.

Previous Post Next Post