இமாம் அபுல் ஹஸன் அலீ பின் இஸ்மாயீல் அல்அஷ்அரி (ரஹ்) அவர்களின் தோழர்களுக்குத் தான் அஷ்அரிய்யாக்கள் என்று பெயர்.
இமாம் அபுல் ஹஸன் அலீ பின் இஸ்மாயீல் அல்அஷ்அரி (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 260 ல் பிறந்தார். இவர் அதிக புத்திகூர்மையானவராகவும், நல்ல ஞானமிக்கவராகவும் இருந்தார். ஆரம்பத்தில் முஃதஸிலாக்களின் ஆதாரத்தை விட அறிவை முற்படுத்தும் வழிமுறையில் இருந்தார். அதன் பின்னர் முஃதஸிலாக்களின் கொள்கையை மீள் ஆய்வு செய்து பின்னர் தனக்கென புதிய ஒரு வழிமுறையை தேர்ந்தெடுத்தார். அதன் அடிப்படையில் குர்ஆன் வசனங்களுக்கு மாற்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார். அவரது சிந்தனைப்போக்கு அஹ்லுஸ்ஸுன்னாவின் சிந்தனைக்கு நெருக்கமாக இருந்தது. ஆனாலும் அவர் தனது பெரும்பான்மையான கருத்துக்களை குர்ஆன் வசனங்களுக்கு மாற்று விளக்கம் கொடுப்பதன் மூலம் அமைத்துக்கொண்டார் என்பது அவரை குறைகூற காரணமானது.
இவரது கடைசி காலகட்டத்தில் அவரது தவறை உணர்ந்து ஸலஃப் வழிமுறையின் பக்கம் திரும்பி இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்களின் அறிவை விட ஆதாரத்தை முற்படுத்தவேண்டும் என்ற வழிமுறையை பற்றிப்பிடித்தார். அல் இபானா என்ற நூலை எழுதினார் இந்த நூலில் ஸலஃபுகளின் வழிமுறையை பின்பற்றுவதைக் குறித்து வெளிப்படையாக எழுதினார். அவர்கள் கூறினார்கள் குர்ஆனையும், சுன்னாவையும், நபித்தோழர்கள், தாபீஊன்கள் ஆகியோர்கள் அறிவித்ததையும் உறுதியாக பின்பற்றுகிறோம் என்று கூறினார்கள். மேலும் கூறினார்கள் நாம் அபூ அப்துல்லாஹ் கூறிய விஷயங்களை பற்றிப்பிடிக்கக்கூடியவர்களாக, அவர்கூறியவற்றை கூறுபவர்களாக, இன்னும் அவருடைய கூற்றிற்க்கு முரண்படுவோர்களுடன் முரண்படக்கூடியவர்களாக உள்ளோம் என்றார்கள். (இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்களைத்தான் இங்கே அபூ அப்துல்லாஹ் என்று கூறினார்கள்). (அல் இபானா ஃபி உஸூலில் தியானா - 20)
இதன் மூலம் இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரி (ரஹ்) அவர்கள் ஆரம்பத்தில் முஃதஸிலா கொள்கையில் இருந்தார். அதன் பின்னர் அவரே வகுத்துக்கொண்ட புதிய வழிமுறையின் பால் திரும்பினார். அந்த வழிமுறைதான் பின்னர் அல் அஷ்அரிய்யா என்று அறியப்பட்டது. அதன் பின்னர் தனது இறுதி காலகட்டத்தில் அஹ்லுஸ்ஸுன்னாவின் கொள்கையின் பால் மீண்டு அதில் உறுதியாக இருந்தார் என்பதை அறியமுடிகிறது. (பார்க்க: அல் மவ்சூஆ அல் முயஸ்ஸிர ஃபில் அத்யானி வல் மதாஹிபி வல் அஹ்ஸாபில் முஆஸிரா - 1/83)
நாற்பது வருடம் முஃதஸிலா கொள்கையில் இருந்ததால் ஸலஃப் கொள்கையின் பால் திரும்பிய பின்னரும் அவரிடம் சில தவறுகள் நிகழ்ந்தது என்பதை மறுக்கமுடியாது. இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரி (ரஹ்) ஹிஜ்ரி 324 ஆம் ஆண்டு பாக்தாதில் மரணித்தார்கள்.
இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரி (ரஹ்) அவர்களுக்கு பின்னர் அவர் ஸலஃபுகளின் கொள்கையின் பால் மீள்வதர்க்கு முன் உருவாக்கிய அஷ்அரிய்யா கொள்கையை சில இமாம்கள் கடைபிடித்தார்கள். அதனால் இமாம் அவர்களின் மறைவிற்கு பின்னரும் இக்கொள்கை சமுதாயத்தில் வேரூன்றியது இக்கொள்கையை பரப்புவதிலும் அதற்குரிய வரையறையை நிர்ணயிப்பதிலும் இமாம் பாகிலானி (ரஹ்), இமாம் பக்தாதி (ரஹ்), இமாம் ஜுவைனி (ரஹ்), இமாம் கஸ்ஸாலி (ரஹ்), இமாம் ஷஹ்ருஸ்தானி (ரஹ்), இமாம் ராஸி (ரஹ்) போன்றோர்கள் பங்களிப்பாற்றினார்கள். அதிலும் குறிப்பாக இமாம் பாகிலானி (ரஹ்) அவர்களின் நூற்களின் மூலம் ஐந்தாம் நூற்றாண்டில் தான் இக்கொள்கை சமுதாயத்தில் பரவியது.
ஆரம்பகாலகட்டத்தில் அஹ்லுஸ்ஸுன்னாவினரின் கொள்கைக்கு மிகவும் நெருக்கமான கொள்கையுடையவர்களாக அஷ்அரிய்யாக்கள் இருந்தனர். அவர்களுக்கு மத்தியிலான கருத்துவேறுபாடுகள் மிகவும் குறைவாக இருந்தன. அதிலும் பெரும்பான்மையான விஷயங்கள் நம்பிக்கைச் சார்ந்த விஷயங்களில் தான் இருந்தன. அதிலும் குறிப்பாக தவ்ஹீதுல் அஸ்மாயி வஸிஃபாத் தொடர்பானவற்றில் தான் இருந்தது. ஆனாலும் அதன் பின்னர் காலங்கள் செல்லச் செல்ல இக்கொள்கையில் பல முன்னேற்றங்கள் கண்டன ஏனைய பிரிவுகளின் கொள்கையின் தாக்கத்தால் அஷ்அரிய்யா கொள்கை என்பது பல கொள்கையின் கலவையாக மாறியது.
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
அஷ்அரியாக்கள் சட்டங்கள் மற்றும் அல்லாஹ்வின் பெயர்கள் பற்றிய பாடத்தில் முர்ஜியாக்களின் நிலைபாடு உடையவர்களாகவும், விதி விஷயத்தில் ஜபரியாக்களின் நிலைப்பாடு உடையவர்களாகவும் உள்ளனர். ஆனாலும் அல்லஹ்வின் பண்புகள் பற்றிய பாடத்தில் அவர்கள் முழுக்க முழுக்க ஜஹ்மியாக்களின் நிலைபாட்டை கடைப்பிடிக்கவில்லை என்றாலும் அவர்களிடம் சில விஷயங்களில் ஜஹ்மியாக்களின் போக்கும் இருந்தன. (மஜ்மூல் ஃபதாவா - 6/55)
அஷ்அரிய்யாக்களின் மூலாதாரம்:
1.மார்க்கத்தின் மூலாதாரமாக அறிவையே முற்படுத்துகிறார்கள்:
இதனை அஷ்அரிய்யாக்களின் பிரபல இமாம்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். இமாம் ஜுவைனி (ரஹ்), இமாம் ராஸி (ரஹ்), இமாம் பக்தாதி (ரஹ்), இமாம் கஸ்ஸாலி (ரஹ்), இமாம் ஆமிதி (ரஹ்), இமாம் சனூஸி (ரஹ்), போன்றோர் இவ்வாறு கூறியுள்ளார்கள்.
இமாம் சனூஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆன், சுன்னா தான் சத்தியத்தை அறிவதற்கான வழி இந்த இரண்டை தவிர மற்றவை ஹராம் என்று யார் வாதிடுவாரோ அவருக்கான நமது மறுப்பாக, குர்ஆன், சுன்னாவின் ஆதாரத்தை அறிவின் மூலம் அறியமுடியும் என்றார்கள்.
சுன்னாவைப் பொறுத்தவரை அதன் மூலம் அகீதாவை உறுதி செய்ய முடியாது. முதவாதிரான ஹதீஸிற்கு மாற்று விளக்கம் கொடுக்க வேண்டும். அஹாதான ஹதீஸ்களை அகீதாவில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதும் தான் அஷ்அரிய்யாக்களின் நிலை.
அஷ்அரிய்யாக்களின் அகீதா நூற்களை படிக்கும் ஒருவர் அதில் 100 பக்கத்தை படித்தாலும் குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ பார்க்கமாட்டார். மாறாக ஞானிகள், அல்லது தத்துவவாதிகள் இவ்வாறு கூறினார்கள் என்பதாக்கத்தான் அதில் காணமுடியும். இதற்கு உதாரணமாக, இமாம் ஜுவைனி அவர்களின் அல் இர்ஷாத் என்கிற நூலைக்கூறலாம். அதே போன்று அஷ்அரிய்யாக்கள் ஸுஃபிக் கொள்கையில் இரண்டற கலந்து விடவில்லை என்றாலும் இமாம் கஸ்ஸாலியைப் போன்ற ஸுஃபிகளும் அதில் இருந்தார்கள். அவர்களின் மூலாதாரம் உதிப்பு, விருப்பம் ஆகியவைகள் தான் இருந்தன. ஆதாரங்களை அவர்களின் விருப்பங்களுக்கு இணங்க மாற்றி அமைத்துக் கொள்வார்கள். அவர்களின் விருப்பத்திற்கு இணங்க சில ஹதீஸ்களை ஸஹீஹ் ஆக ஆக்குவார்கள் வேறு சிலதை ளயீஃப் ஆக்குவார்கள் . இவர்களின் அறிவு ரீதியாண ஆதாரங்களுக்கு ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் தனது தர்உ தாஅருளில் அக்லி வந்நக்லி என்ற நூலில் முழுமையான மறுப்பை வழங்கியுள்ளார்கள்.
2.அல்லாஹ்வின் உள்ளமையை உறுதிபடுத்துவது:
அல்லாஹ் இருக்கிறான் என்பது இயல்பாக அறியக்கூடிய விஷயம். அதனை நிறுவவேண்டிய தேவையில்லை. அல்லாஹ்வின் உள்ளமையை உறுதிபடுத்தும் ஆதாரங்கள் உலகிலும், உயிரிலும், உணர்விலும், பிரபஞ்சத்திலும் இன்னும் வரையருக்க முடியாதவாறு நிரப்பமாக உள்ளது.
ஆனாலும் அஷ்அரிய்யாக்களைப் பொறுத்தவரை அல்லாஹ் இருக்கிறான் என்பதை நிலைநாட்ட வினோதமான வழிமுறையை கடைப்பிடிக்கிறார்கள். அதற்கு அவர்கள் ஆதாரம் என்று பெயர் சூட்டியுள்ளார்கள். புதியது, பழமையானது என்றும் கூறுகிறார்கள்.
உலகம் புதிதாகத் தோன்றியது. புதிதாக தோன்றியதை உறுவாக்கிய பழையது ஒன்று இருக்க வேண்டும். இந்த பழையதின் பிரத்யோகமான பண்பு புதிதாக தோன்றியதற்கு முரணாக இருப்பதாகும். புதிதாக தோன்றியதற்கு முரணாக இருப்பது என்பதால் அல்லாஹ் ஒரு பொருள் அல்ல. அவன் உருவமோ, உடலோ உள்ளவனல்ல. இன்னும் அவனுக்கு இடமும், திசையுமில்லை என்பதை அவர்கள் உறுதிசெய்கிறார்கள். இவர்களின் இந்த மோசமான அடிப்படையின் மூலம் அல்லாஹ்வின் ஏராளமான பண்புகளை மறுக்கிறார்கள். அல்லாஹ்வின் பொருத்தம், கோபம், இஸ்திவா போன்ற பண்புகளை பழைய ஒன்றில் புதிதானது ஏற்படுகிறது என்ற சந்தேகத்தைக் கூறி மறுக்கிறார்கள்.
இவ்வளவு நீளமான விளக்கத்திற்கு பதிலாக இந்த உலகம் படைக்கப்பட்டது. நிச்சயமாக படைக்கப்பட்டதற்கு படைப்பாளன் ஒருவன் இருப்பது அவசியமாகும் என்று அவர்கள் கூறியிருந்தால் அது புரிவதற்கு இலகுவாகவும், சரியானதாகவும் இருந்திருக்கும்.
3. தௌஹீத்:
அஹ்லுஸ்ஸுன்னாவினரிடத்தில் தௌஹீத் என்பது மூன்று வகையாகும் தௌஹீது ருபூபிய்யா, தௌஹீதுல் உலூஹிய்யா, தௌஹிதுல் அஸ்மாயி வ ஸிஃபாத் ஆகியவையாகும். இது தான் அஹ்லுஸ்ஸுன்னாவினரிடத்தில் அடியார் மீதுள்ள முதல் கடமையாகும்.
அஷ்அரிய்யாக்களைப் பொறுத்தவரை தௌஹீத் என்பது இரண்டு அல்லது பல எண்ணிக்கையை மறுப்பதும், கொஞ்சம் கூட்டாக இருப்பது, கூறுபோடுவது ஆகியவற்றை மறுப்பதும் தான். அவர்களின் வார்த்தையில் சொல்வதாக இருந்தால் தௌஹீத் என்பது கூட்டு அளவையும், தனித்த அளவையும் மறுப்பதாகும். இதன் அடிப்படையில் இலாஹ் என்பதை ஹாலிக் படைப்பாளன், காதிர் புதிதாக உருவாக்க ஆற்றலுடையவன் என்பதாகும். உண்மையில் தௌஹீத் என்பது ஷிர்க்கிற்கு எதிராகும். ஷிர்க்கை விட்டும் எச்சரிப்பதும் தான். ஆனால் அவர்களின் நூல்களில் இதைக்குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.
அஷாயிரக்களிடம் அடியார்களின் மீதுள்ள முதல் கடமை தௌஹீத் அல்ல. மாறாக சிந்திப்பது தான் முதல் கடமையாகும். ஒரு மனிதன் பருவம் அடைந்ததும், அவர் சிந்திப்பது கடமையாகும். அதன் பின்னர் ஈமான் கொள்ள வேண்டும்.
இயல்பான அறிவை அஷ்அரிய்யாக்கள் மறுக்கிறார்கள். மேலும் அவர்கள் கூறினார்கள், சிந்தித்து ஆராயாமல் யார் அல்லாஹ்வை ஈமான் கொள்வாரோ அவர் தக்லீத் செய்கிறார். சில அஷ்அரிய்யாக்கள் அவ்வாறு ஈமான் கொள்வோரை காஃபிர் என்றும் கூறியுள்ளார்கள்.
இமாம் ஜுவைனி அவர்கள் தனது இர்ஷாத் என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்:
பருவ வயதை அடைந்த அறிவுள்ள ஒருவர் மீதுள்ள மார்க்க ரீதியான முதல் கடமை உலகம் புதிதாக தோன்றியது என்பதை சரியான ரீதியில் சிந்தித்து அறிவதுதான். (அல் இர்ஷாத் இலா கவாதிஃஇல் அதில்லா ஃபீ உஸூலில் இஃதிகாத், பக்கம் - 25)
4. அல் ஈமான்:
ஈமான் என்ற பாடத்தில் அஷ்அரிய்யாக்கள் முர்ஜியா, ஜஹ்மியா ஆகியோர்கள் கருத்தைக் கொண்டுள்ளார்கள். ஈமான் என்பது உள்ளத்தால் உண்மைப்படுத்துவது தான் என்று கூறுகிறார்கள். இதில் அவர்களிடம் இஜ்மா உள்ளது. ஷஹாதாவை மொழிவது தொடர்பாக அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்கள். சிலர் உள்ளத்தால் உண்மைப்படுத்தினால் போதுமானது என்றும், வேறு சிலர் நாவினால் மொழியவேண்டும் என்றும் கூறுகிறார்கள். அவர்களில் சிலர் ஷஹாதாவை மொழியாமல் உள்ளத்தால் உண்மைப்படுத்தியவன் அல்லாஹ்விடத்தில் தப்பித்துகொள்வான் என்று கூறுகிறார்கள். சமகாலத்தவர்களில் ஹஸன் அய்யூப், மற்றும் பூத்தி ஆகியோர்கள் இக்கருத்தைக் கொண்டுள்ளார்கள். இவர்கள் கூறுவது சரியாக இருந்திருந்தால் நபி (ஸல்) அவர்கள், அவரது சிறிய தந்தை லா இலாஹ் இல்லா அல்லாஹ் என்று கூறவேண்டுமென்று ஆர்வம் காட்டியது தேவையற்றதாக இருந்திருக்கும் எனவே இவர்களின் வாதம் தவறானதாகும்.
5. அல்லாஹ்வின் பண்புகள்:
அல்லாஹ்வின் ஏழு பண்புகளைத் தவிர ஏனைய பண்புகளுக்கு இவர்கள் மாற்று விளக்கம் கொடுத்தார்கள். அந்த ஏழு பண்புகளை தாத்துடன் கூடியது என்றும் கூறினார்கள். அவை அறிவு, ஆற்றல், நாட்டம், செவிபுலன், பார்வை, பேசுதல், உயிர் ஆகியவையாகும். இவையல்லாத இஸ்திவா, உயர்ந்திருத்தல், இறங்குதல் போன்ற ஏனைய பண்புகளுக்கு அவர்கள் மாற்று விளக்கமளிக்கிறார்கள்.
அதே நேரத்தில் அவர்கள் உறுதிபடுத்திய பண்புகளைக்கூட குர்ஆன், சுன்னாவில் சொல்லப்பட்டுள்ளதை ஸலஃபுகள் எவ்வாறு உறுதிசெய்தார்களோ அவ்வாறு அவர்கள் உறுதி செய்யவில்லை. மாறாக அதனையும் அறிவின் மூலம் தான் உறுதி செய்கிறார்கள்.
அவர்கள் கூறுகிறார்கள், ஒவ்வொரு நேரத்திலும் நிகழும் காரியங்கள் புதிது புதிதாக உள்ளது. உயிர்பித்தல், மரணிக்கச்செய்தல் போன்ற செயல் அல்லாஹ்விற்கு ஆற்றல் உள்ளது என்பதை தெரிவிக்கிறது. எனவே குத்ரத்து என்ற பண்பு அல்லாஹ்விற்கு இருக்கிறது. ஒருவரை அறிவாளியாகவும், இன்னொருவனை முட்டாளாகவும், ஒருவரை செல்வந்தனாகவும், இன்னொருவனை ஏழையாகவும் தேர்ந்தெடுப்பது என்பது அல்லாஹ்விற்கு நாட்டாம் உள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. எனவே அல்லாஹ்விற்கு அல் இராதா என்ற பண்புள்ளது. அதே போன்று செவியேற்பது, பார்ப்பது, பேசுவது போன்ற பண்புகளையும் அறிவின் மூலம் உறுதிபடுத்துகிறார்கள்.
6. அல்குர்ஆன்:
அஹ்லுஸ்ஸுன்னாவினரிடம் அல்குர்ஆன் என்பது அல்லாஹ்வின் கலாம் ஆகும். அது படைக்கப்பட்டதல்ல அல்லாஹு தஆலா பேசுவதை மலாயிக்கவை கேட்கச் செய்வான் அல்லாஹ் பேசியதை ஜிப்ரீல் (அலை) அவர்கள் செவிமடுத்துள்ளார்கள். மூஸா (அலை) அவர்களும் செவிமடுத்துள்ளார்கள். மறுமையில் படைப்புகள் அனைவரையும் அல்லாஹ் பேசுவதை கேட்கச் செய்வான்.
முஃதஸிலாக்களைப் பொறுத்தவரை அல்குர்ஆன் படைக்கப்பட்டதாகும்.
அஷ்அரிய்யாக்கள் இந்த இரண்டு கருத்திற்கு மத்தியிலும் இனணப்பை ஏற்படுத்த முயற்சித்தார்கள். அவர்களின் முயற்சி வினோதமானதாக இருந்தது. முதலில் அவர்கள் பொருள், வார்த்தை என்று பிரித்தார்கள். பின்னர் அல்லாஹ்வின் கலாம் என்பது பொருள் ரீதியாக ஆதியிலிருந்தே அல்லாஹ்விடம் இருந்து கொண்டிருக்கிறது, அது எழுத்தாகவோ, சப்தமாகவோ இல்லை. இன்னும் அதனை செய்தி என்றோ அதனை ஒரு கருத்துருவாக்கம் என்றோ வர்ணிக்க முடியாது. இதற்கு அஹ்தல் என்ற கிருஸ்தவர் கூறிய கவிதையை ஆதாரமாகக் கட்டுகிறார்கள்.
அஹ்தல் கூறினார்:
நிச்சயமாக பேச்சு என்பது உள்ளத்தில் உள்ளது. நாவு உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்த அமைக்கப்பட்டுள்ளது.
அஷ்அரிய்யாக்களிடம் குர்ஆன் என்பது அல்லாஹ்வின் நஃப்ஸில் இருந்து வரும் வார்த்தையாகும். நஃப்ஸில் இருந்து வரும் வார்த்தை என்பது அவர்களது வாதத்தின் அடிப்படையில் அது அல்லாஹ்வின் தரத்தில் உள்ளது தான் என்றாலும் அது ஹிப்ரு மொழியில் வார்த்தையாக வெளியானால் அதற்கு தௌராத் என்றும் சுர்யானி மொழியில் வார்த்தையாக வெளியானால் அதற்கு இஞ்ஜீல் என்றும் அரபி மொழியில் வார்த்தையாக வெளியானால் அதற்கு குர்ஆன் என்றும் சொல்லப்படும். இதன் அடிப்படையில் அவர்களிடம் வேதங்கள் அனைத்தும் படைக்கப்பட்டதாகும். அதனை கலாமுல்லாஹ் என்று கூறுவது யதார்த்தத்தில் அல்ல என்றும் கூறுகிறார்கள். இதற்கும் மேலாக குர்ஆன் விஷயத்தில் அவர்கள் தங்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்கள். அவர்களில் சிலர் லௌஹில் மஹ்ஃபூளில் முதலாவதாக அல்லாஹ் குர்ஆனைப் படைத்து, பின்னர் அங்கிருந்து முதல் வானத்திர்க்கு இறக்கினான். படைக்கப்பட்ட இந்த கலாமை ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்து சேர்த்தார்கள் என்று கூறினார்கள். வேறு சிலர் அல்லாஹ் தன்னிடமிருக்கும் பேச்சை ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு விளங்கவைத்தான். அதனை அவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு விளங்க வைத்தார். எனவே குர் ஆன் இறங்கியது என்பது புரியவைக்கவும் விளங்கப்படுத்துவதற்கும் சொல்லப்படுகிறதேத் தவிர செயல் வடிவில் இறங்கியது என்ற பொருளில் அல்ல. ஏனெனில் அவர்களின் அறியாமையின் காரணமாக அஷ்அரிய்யாக்கள் அல்லாஹ் உயர்ந்திருக்கிறான் என்பதையும் மறுக்கிறார்கள்.
இது போன்ற பல்வேறு தவறான கொள்கைகள் அவர்களிடம் உள்ளன. அதைக்குறித்து அதிகம் அறிந்து கொள்ள விரும்புவோர்கள், அல் மவ்சூஆ அல் முயஸ்ஸிர ஃபில் அத்யானி வல் மதாஹிபி வல் அஹ்ஸாபில் முஆஸிரா, அல் அஷ்அரிய்யா ஃபீ மீஸானி அஹ்லிஸ்ஸுன்னா அபூ உஸ்மான் ஃபைஸல் பின் கஸ்ஸார் அல் ஜாஸிம், மன்ஹஜு அஷ்அரிய்யா ஃபில் அகீதா ஸஃபர் பின் அப்துர் ரஹ்மான் அல் ஹவாலி ஆகிய நூல்களைப் பார்வையிடவும்.
அஷ்அரிய்யாக்கள் தவறான கொள்கையுடையவர்கள் என்பதை அறிந்துக்கொள்ள ஒரு சிறிய அட்டவனண:
நபித்துவம் முதல் ஹிஜ்ரி10 வரை,
இல்லை...
ஹிஜ்ரி 10 முதல் 100வரை,
இல்லை...
இல்லை...
இல்லை...
இல்லை...
இமாம் அபுல் ஹஸன் அஷ்அரி (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 260 இல் பிறந்தார். ஏறத்தாழ நாற்பது வருடங்கள் தவறான கொள்கையில் இருந்து அதன் பின்னர் ஹிஜ்ரி முன்னூறுக்கு பிறகு அஷ்அரிய்யா என்ற கொள்கையை உருவாக்கினார். அப்படியானால் ஹிஜ்ரி முன்னூறுக்கு பிறகு இக்கொள்கை உருவாகியது என்பதை அறிய முடிகிறது. அதற்கு முன்பு இப்படியொரு கொள்கை இஸ்லாமிய சமூகத்தில் இடம்பெறவில்லை. இதுவே இக்கொள்கை வழிகேடானது என்பதற்கு சான்றாகும்.
- அஷ்ஷெய்க் M. பஷீர் ஃபிர்தவ்ஸி