தவறான பிரச்சாரங்கள்

உள்ஹிய்யா கொடுப்பதை விட அதன் பெறுமதியை ஏழைகளுக்கு வழங்குவோம்,

கஃபாவைத் தவாப் செய்வதற்குப் பதிலாக ஏழைகளைச் சுற்றி தவாப் செய்வோம்,

ஒரு பசித்தவனின் வாயில் வைத்துவிடும் ஒரு கவளம் ஆயிரம் பள்ளிவாயில்களை நிர்மாணிப்பதை விட சிறந்தது, 

போன்ற பிரச்சாரங்கள் அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் பரவி வருகின்றன. 

ஆனால் இப்பிரச்சாரங்களை மேற்கொள்பவர்கள் அறிந்தோ அறியாமலோ இஸ்லாத்தின் வெளிரங்கமான அடையாளங்களாகவும் ஏனையவர்களை விட்டும் முஸ்லிம்களைப் பிரித்துக்காட்டும் சின்னங்களாகவும் திகழும் காரியங்களை விட்டும் முஸ்லிம்களின் கவனத்தைத் திருப்பும் வேலையையே கனகச்சிதமாக செய்துவருகின்றனர். சிலர் நல்ல நோக்கத்தில் செய்தாலும் அதன் விளைவு இவ்வாறுதான் அமையப் போகின்றது. 

அல்லது இவ்வாறு கூறுவோருக்கு மார்க்கத்தின் தாத்பரியம், அதன் நுணுக்கமான சட்டதிட்டங்கள், முன்னுரிமை வழங்க வேண்டியவை பற்றிய தெளிவுகள் இல்லாமலிருக்க வேண்டும்.

ஏழைகள் நபியவர்களின் காலம் முதல் இருக்கின்றனர். ஆனால் இவ்வாறான விபரீத கருத்துக்களை எவரும் கூறத் துணியவில்லை.

தமக்கு அல்லாஹ் தாராளமாக வழங்கியிருப்பதை வைத்து அதிகமாக உம்ரா, ஹஜ், உள்ஹிய்யா போன்ற வணக்கங்களில் ஈடுபடுவோரில் அதிகமானோர் தானதர்மங்களில் ஈடுபடுவதைக் காணமுடியும். ஏனெனில் உள்ளத்தில் ஈமான் நிறைந்துள்ள ஒருவரால்தான் இவ்வாறு பல உம்ராக்களை பல இலட்சங்களை செலவளித்து செய்ய முடியும். இல்லாவிட்டால் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாத்தளங்களில் அவற்றைச் செலவளித்திருப்பார்கள்.

ஏன் எப்பொழுது பார்த்தாலும் இஸ்லாத்தின் புனித சின்னங்களான உம்ரா, ஹஜ், உள்ஹிய்யா, பள்ளிவாயில் போன்றவற்றுக்கும் ஏழைகளுக்குமிடையில் மாத்திரமே இந்த ஒப்பீடு நடைபெறுகின்றது எனச் சிந்தித்ததுண்டா?

வாரத்தில் ஒவ்வொரு நாளும் அல்லது பல தடவைகள் இறைச்சியை வாங்காமல் மாதத்திற்கு ஒரு முறை மாத்திரம் வாங்கிவிட்டு ஏனையவற்றை ஏழைகளுக்கு வழங்குங்கள் என ஏன் கூறப்படுவதில்லை?

புகைப் பழக்கத்தை விட்டு விட்டு அந்தப் பணத்தை ஏழைகளுக்கு வழங்குங்கள் என ஏன் கூறப்படுவதில்லை?

ஆடம்பர திருமண விருந்துகளை நிறுத்திவிட்டு அந்தப் பணத்தை ஏழைகளுக்கு வழங்குங்கள் என ஏன் கூறப்படுவதில்லை?

சுற்றுலாச் செல்வதை நிறுத்திவிட்டு அந்தப் பணத்தை ஏழைகளுக்கு வழங்குங்கள் என ஏன் கூறப்படுவதில்லை?

ஆடம்பரம், களியாட்டங்கள், சினிமாக்கள், நாடகங்கள், விளையாட்டுப் போட்டிகள், இன்டர்நெட், நவீன வசதிகளைக் கொண்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் போன்றவற்றுக்குச் செலவளிக்கும் பெரும் தொகைப் பணத்தை ஏழைகளுக்கு வழங்குங்கள் என ஏன் கூறப்படுவதில்லை?

இவ்வாறு பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

எங்கள் கேள்வி என்னவெனில்,

எமது மார்க்க விடயங்களை நிம்மதியாகச் செய்வதற்கு ஏன் முட்டுக்கட்டையாக இருக்கின்றீர்கள்?

ஏன் சிறப்புக்குரிய இரு வணக்கங்களை ஒப்பீடு செய்கின்றீர்கள்?

அனைத்து வணக்கங்களையும் விட்டு விட்டு ஒரிரு வணக்கங்களுடன் மாத்திரம் சுருக்கிக்கொள்ளுமாறு கூறுவது போன்றல்லவா இது அமைந்துள்ளது?

இவ்வாறான தவறான ஒப்பீடுகள் இஸ்லாமிய வெறுப்பாளர்களினால் உருவாக்கப்பட்டு முஸ்லிம் மக்கள் மத்தியில் பரவ விடப்பட்டவுடன் வார்த்தை ஜாலங்களுக்கு மயங்கும் சிலரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரச்சாரமாக முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால் அதற்குப் பின்னாலுள்ள இஸ்லாமிய சின்னங்கள் அவமதிப்பு, காலவோட்டத்தில் சமூகத்திலிருந்து அவை மறைந்து போய்விடும் வாய்ப்பு போன்ற விபரீத விளைவுகளை அவர்கள் அறியாமல் உள்ளார்கள். 

அது மாத்திரமின்றி இவ்வாறான பிரச்சாரங்களில் ஈடுபடுவோரில் பெரும்பாலானவர்கள் கஃபாவை வலம் வருவதுமில்லை ஏழைகளை வலம் வருவதுமில்லை!!!

சுருக்கமாக, 

அந்தத்த காலங்களில் இஸ்லாம் ஆர்வமூட்டியுள்ள உம்ரா, ஹஜ், உள்ஹிய்யா போன்ற வணக்கங்களைச் செய்வதே வரவேற்கத்தக்கதாகும். பள்ளிவாயில் தேவையுள்ள இடங்களில் அவற்றை நிறுவுவதே சிறந்ததாகும். மாறாக இது போன்ற இஸ்லாமிய சின்னங்களை முஸ்லிம் சமூகத்தை விட்டும் அப்புறப்படுத்த வழிவகுக்கும் பிரச்சாரங்களுக்குக் காதுகொடுக்க வேண்டாம்.

ஏழைகளின் நலவில் உங்களுக்கு கரிசனையிருந்தால் உள்ஹிய்யாவை நிறைவேற்றிய பின்னர் அதனை முழுமையாகவே ஏழைகளுக்கு வழங்கிவிடலாம். அல்லது மேலதிகப் பணத்தை அவர்களுக்கு வழங்கலாம்.

இதனையே

”அல்லாஹ்வின் சின்னங்களை மதித்து நடப்பது உள்ளச்சத்தின் வெளிப்பாடு”

என்பதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

குறிப்பு
சில மாற்றங்களுடன் அரபு மூல ஆக்கமொன்றின் மொழிபெயர்ப்பு.

- Abdullah Uwais Meezani.
Previous Post Next Post