தக்ஃபீர் செய்வதன் வரம்பு என்ன?

தக்ஃபீர் என்பது மார்க்கத்தின் சட்டங்களில் ஒன்றாகும். அதற்கான அடிப்படை குர்ஆனும், ஸுன்னாவும் தான். மார்க்கத்தின் ஆதாரம் எதனை குஃப்ர் என்று தெரிவிக்கிறதோ அவை அல்லாத செயலையோ, சொல்லையோ கூறுவதானால் ஒரு முஸ்லிமை தக்ஃபீர் செய்யக் கூடாது. அதே போன்று தனி நபர் விஷயத்திலும், நிபந்தனைகள் முழுமை பெறாமலும், தடைகள் நீங்காமலும் இருக்கும் போது பொத்தம் பொதுவாக "குஃப்ர்" என்று தீர்மானிக்கக் கூடாது. தக்ஃபீர் செய்வது மிகவும் ஆபத்தானது. ஒரு முஸ்லிமை தக்ஃபீர் செய்வதில் எச்சரிக்கையாகவும், தெளிவாகவும் இருப்பது கட்டாயமாகும். 
                                                
 தக்ஃபீர் என்றால் ஒரு முஸ்லிமை "நிராகரிப்பாளன்" என்று கூறுவதாகும். 
                                                
 இமாம் தஹாவி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

 கிப்லாவை முன்னோக்கி தொழக்கூடியவர்களில் யார் ஒருவர் ஒரு பாவச் செயலை, அச்செயல் ஆகுமானது என்று நம்பிக்கை கொள்ளாமல் செய்யும் போது அவரை நாம் காஃபிர் என தீர்ப்பளிக்க மாட்டோம். ஈமான் கொண்டு பாவம் புரியும் ஒருவருக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்றும் நாம் கூறமாட்டோம். 

 நூல்: ஷரஹ் தஹாவியா - 303. 
                                                
 மேலும் கூறினார்கள், நமது கிப்லாவை முன்னோக்கி தொழக்கூடியவரை, அவர் நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை அங்கீகரிக்கக்கூடியவராக இருக்கும் வரை அவரை முஸ்லிம் என்றும், முஃமின் என்றும் அழைப்போம். 

 நூல்: ஷரஹ் தஹாவியா - 299 
                                                
 'நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பதைப் புசித்து வருகிறவர்தாம் முஸ்லிம். அப்படிப்பட்டவர் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப்பில் இருக்கிறார். எனவே அவரின் பொறுப்பு விஷயத்தில் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை முறிக்காதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

 அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக்(ரலி) 
 நூல்: ஸஹீஹுல் புகாரி : 391. 
                                                
 இமாம் தஹாவி (ரஹ்) அவர்களின் கூற்றுக்கு விளக்கமளிக்கையில் இமாம் இப்னு அபுல் இஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

 இதனை இமாம் அவர்கள் ஹவாரிஜ்களுக்கும், முர்ஜியாக்களும்  மறுப்பு தெரிவிக்கும் விதமாக பதிவு செய்கிறார். 

 முர்ஜியாக்களை பொறுத்த வரையில் ஈமான் கொண்டு ஒருவர் பாவம் புரிவதனால் அவரது ஈமானுக்கு அதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று கூறுகிறார்கள். 

 ஹவாரிஜ்களை பொறுத்தவரையில் பாவம் புரிபவருடைய ஈமான் அவருக்கு எவ்வித பலனும் அளிக்காது என்று கூறி இவர்கள் முஸ்லிம்களை காஃபிராக்குவார்கள். 

 நூல்: ஷரஹ் தஹாவியா - 303,304. 
                                                
 மார்க்கம், குஃப்ர் என்று தீர்ப்பளிக்காத பாவத்தை ஒருவர் செய்வதனால் அவரை காஃபிர் என்று சொல்வதற்கு ‌இஸ்லாம் யாருக்கும் அனுமதியளிக்கவில்லை. அப்படி ஒருவர் செய்தால் அவர் வரம்பு மீறிய பாவியாவார். 
                                                
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

 பனூ இஸ்ராயில் சமுதாயத்தில் இரண்டு நபர்கள் பரஸ்பரம் சந்தித்து கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் பாவச் செயலில் ஈடுபடுபவராகவும், இன்னொருவர் இபாதத்து விஷயத்தில் ஈடுபாடுள்ளவராகவும் இருந்தார். இவர் பாவம் புரியும் நபரை சந்திக்கும் போது நீ தீமைகளை குறைத்துக் கொள் என்று கூறுவார். இவ்வாறாக ஒரு நாள் பாவம் புரிபவரை அவர் பாவம் செய்யும் நிலையில் கண்டார். அப்போது அவரிடம் பாவத்தை குறைத்துக் கொள் என்று கூறினார். அதற்கு அம்மனிதர் என்னையும், எனது ரப்பையும் விட்டு விடு; நீர் என் மீது கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாயா? என்று கேட்டார். 

 அதற்கு அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான் அல்லது அவன் உன்னை சுவனத்தில் நுழைவிக்க மாட்டான் என்றும் கூறினார். பின்னர் இருவருடைய உயிரையும் அல்லாஹ் கைப்பற்றினான். அகிலங்களின் அதிபதியின் முன்னர் இருவரும் ஒன்று சேர்ந்தார்கள். இபாதத்து விஷயத்தில் ஈடுபாடுள்ளவரிடமும் என்னை குறித்து நீ அறிந்திருக்கிறாயா அல்லது என்னிடமுள்ளவற்றில் நீர் அதிகாரமுடையவனா? என்று அல்லாஹ் கேட்டான். பின்னர் பாவியாக இருந்தவரிடம் எனது கருணையின் மூலம் நீ சுவனத்தில் நுழை என்று கூறுவான். பின்னர் மற்றவரை குறித்து இவனை நரகில் கொண்டு சேருங்கள் என்று கூறுவான். 

 அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக அவன் பேசிய வார்த்தை அவனது இம்மையையும், மறுமையையும் பாழாக்கிவிட்டது என்று கூறினார்கள். 

 நூல்: முஸ்னது அஹ்மது - 8292, சுனனு அபிதாவூது - 4901. 
                                                
 'அறிந்து கொள்ளுங்கள். உங்களின் இந்த நகரத்தில், உங்களின் இந்த மாதத்தில் உங்களின் இந்த நாள் எப்படிப் புனிதமானதாக விளங்குகிறதோ அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இரத்தங்களையும் உங்கள் செல்வங்களையும் புனிதமானவையாக ஆக்கியுள்ளான்' என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லிவிட்டு, 'நான் (இறைச்செய்தியை உங்களிடம்) சேர்த்துவிட்டேனா?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம் (சேர்த்து விட்டீர்கள்)' என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! நீ சாட்சியாக இரு' என்று மும்முறை கூறிய பின், 'உங்களுக்கு என்ன நேரப் போகிறதோ!' அல்லது 'அந்தோ பரிதாபமே!' கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறைமறுப்பாளர்க(ளைப் போன்றவர்க)ளாய் நீங்கள் மாறிவிடாதீர்கள்' என்று கூறினார்கள். 

 நூல்: ஸஹீஹுல் புகாரி : 4403,6103,6104,6166,6785,7077. 
                                                
 குஃப்ர்: 
                                                
 குஃப்ர் என்பது மார்க்கம் வகுத்துள்ள சட்டமாகும். குர்ஆனும், ஸுன்னாவும் எதனை குஃப்ர் என்று கூறி உள்ளதோ அது தான் நிராகரிப்புச் செயலாகும். எதனை குர்ஆனும், ஸுன்னாவும் குஃப்ர் என்று கூறவில்லையோ அது குஃப்ர் அல்ல. 
                                                
 இதன் அடிப்படையில் ஒரு செயலையோ அல்லது நபரையோ தக்ஃபீர் செய்வதற்கு நான்கு நிபந்தனைகள் உள்ளன. 
                                                
 1. ஓர் செயல் அல்லது சொல் அல்லது ஒன்றை விடுவது குஃப்ர் என்று ஆதாரத்தின் மூலம் உறுதி செய்ய வேண்டும். 
                                                
 2. அதனை மனிதன் செய்தது உறுதியாக வேண்டும். 
                                                
 3. ஆதாரம் அவரை அடைந்திருக்க வேண்டும். 
                                                
 4. அவரை தக்ஃபீர் செய்வதற்குரிய‌ தடைகள் நீங்கியிருக்க வேண்டும். 
                                                
 மேற்கூறப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தியாகும் போது தான் தக்ஃபீர் செய்ய முடியும். 

 நூல்: ஷைஹ் ஸாலிஹ் அல் உஸைமின் எழுதிய மஜ்மூஃ ஃபதாவா வ ரஸாயில் - 3/52. 
                                                
 

- உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி. 
                                                
Previous Post Next Post