முஃமின்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள்!



நாம் இன்று மிகவும் வலிமையிழந்தவர்களாக இருப்பதற்கும், அவமானப்படுத்தப் படுவதற்கும், நம் சகோதர, சகோதரிகள் சித்திரவதைக்குள்ளாக்கப் படுவதற்கும், நம் கண்கள் முன்னே படுகொலை செய்யப்பட்டு சிதைக்கப் படுவதற்கும், நம்முடைய முஸ்லிம் நாடுகள் கொள்ளையடிக்கப்பட்டு, இறை நிராகரிப்பாளர்களின் (முஷ்ரிக்குகளின்) விருப்பத்திற்கேற்ப கைப்பற்றப்படுவதற்கும், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தும் ஒன்றும் கூற முடியாமல் சக்தியற்றவர்களாக இருப்பதற்கும் காரணம் என்ன வெனில்:-

நாம் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழி காட்டுதல்களை கைவிட்டு விட்டு முஷ்ரிக்குகளை அவர்களின் ஒவ்வொரு செயல்களிலும் பின்பற்ற முயற்சிப்பதுதான். நம்முடைய வலிமையை நாமே முறித்து நிறம், மொழி, குலம், கோத்திரங்கள், பிரிவுகள், நாடுகள் ஆகியவைகளின் அடிப்படைகளில் பிரிந்து சின்னா பின்னமாகி இருக்கிறோம். மேலும் ஒரு உம்மத்தாக இருந்து ஒரே இறைவனை வணங்க வேண்டிய முஸ்லிம் சமுதாயம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து ஆட்சி அதிகாரத்திற்காகவும், செல்வத்திற்காகவும் மற்றும் பதவி சுகத்திற்காகவும் நமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றோம். நாம் நிரந்தரம் இல்லாத இந்த உலகத்தின் கவர்ச்சியிலும், ஆடம்பரத்திலும் மயங்கி இதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸில் வருகிறது: –

“முஃமின்கள் இந்த உலக வாழ்வை நேசித்து மரணத்தை வெறுக்கும் போது, அல்லாஹ் எதிரிகளுக்கு முஸ்லிம்களின் மீதுள்ள பயத்தை போக்கிவிட்டு, முஸ்லிம்களின் உள்ளத்தில் எதிரிகளைப் பற்றிய பயத்தைப் போட்டுவிடுவான்”

நிச்சயமாக இது தான் நடந்திருக்கிறது.

ஆனால்,

– முஸ்லிம்கள் ஒன்றுபடும் நாளில்,

– நிரந்தரமற்ற இந்த உலகத்தின் ஆடம்பர வாழ்க்கையை விட மறுமையை அதிகமாக நேசிக்கும் போது,

– தற்போதைய அவமானத்தை விட மரணத்தை விரும்பும் போது,

– மனம் திருந்தி அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு அவைகளை பின்பற்றி நடக்க ஆரம்பிக்கும் போது,

– ஒரே இறைவணை மட்டும் வணங்கக் கூடிய உண்மையான முஸ்லிம்களாக மாறும் போது,

– அல்லாஹ்வின் கட்டளைகளை, சட்டங்களை இந்த உலகத்தில் மேலோங்கச் செய்ய முயற்சிக்கும் போது …

அப்போது அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றி முஸ்லிம்கள் இழந்த தங்களின் கவுரவத்தை மீட்க உதவி செய்வான்.

ஆகையால், இன்று ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்னவெனில்,

– மனம் திருந்தி அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு கட்டளைக்கும் கட்டுப்பட்டு நடப்பது.

– தன்னால் முடிந்த அனைத்து செயல்களையும் செய்து பிரிந்து பல்வேறு கூறுகளாக போன இந்த சமுதாயத்தை ஒன்று சேர்க்க முயற்சிப்பது

இது தான் இந்த உலகில் அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள் மேலோங்கச் செய்யப்பட நாம் அளிக்கும் நம்முடைய பங்களிப்பாகும்.

முஃமின்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள்!

அல்லாஹ் கூறுகிறான்: –

“நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்” (அல்-குர்ஆன் 49:10)

உங்களுக்குள் கேலி, கிண்டல் செய்து கொள்ளாதீர்கள்!

“முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்” (அல்-குர்ஆன் 49:11)

முஃமின்களே!பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராயாதீர்கள்!

“முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்” (அல்-குர்ஆன் 49:12)

முஃமின்களே! தீயவனின் செய்தியை அப்படியே நம்பிவிடாதீர்கள்!

“முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்” (அல்-குர்ஆன் 49:6)

முஸ்லிம் சகோதரனுக்கு கெடுதல் செய்வர் சாபத்திற்குரியவர் ஆவார்!

‘ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு கெடுதல் செய்பவனும், அவருக்கு எதிராக சதி செய்பவனும் சாபத்திற்குரியவர்கள்’ அறிவிப்பவர் : அபூபக்கர் (ரலி), ஆதாரம் : திர்மிதி.

சகோதர முஸ்லிமை கேவலமாகக் கருதுவது கெட்ட செயலாகும்!

ஒரு முஸ்லிம் (மற்ற முஸ்லிமுக்கு) சகோதரராகும். அந்த சகோதரரை மோசடி, பொய் மூலம் ஏமாற்றாதீர்கள். அவருடைய மானத்தைக் கெடுத்து பொருளை அபகரித்து கொலை செய்வது தடுக்கப்பட்டதாகும். அவரை கேவலமாகவும் மதிப்பது கெட்ட செயலாகும். ஆதாரம் : திர்மிதி.

உன்னைத் திட்டினால் நீ அவனைத் திட்டாதே!

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: – ‘எவரேனும் சரி உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால் நீ அவனுடைய குறைகளைச் சொல்லி திட்டாதே! காரணம் அந்த பாவம் அவனையே சாரும்’ ஆதாரம் : அபூதாவுத்.

உண்மையான வீரன் யார்?

“மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.ஆதாரம் : புகாரி.

முஸ்லிம்கள் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது!

முஃமின்கள் மூன்று இரவு மூன்று பகல்களுக்கு மேல் பகைமைக் கொண்டு பேசாதிருப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைசெய்திருப்பதாக வரும் பல நபிமொழிகள் புகாரி போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் காணமுடிகிறது.

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள்!

“அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.

‘தனது முஸ்லிம் சகோதரனுடன் மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருப்பது கூடாத செயலாகும். எனவே மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருக்கும் நிலையில் மரணிப்பவன் நரகம் நுழைவான்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : அஹ்மது, அபூதாவுத்.

பினக்கிற்குப் பிறகு முதலில் பேசுபவர் தாம் சிறந்தவராவார்: –

ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி), ஆதாரம் : புகாரி.

பகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா?

“நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 41:34-35)

Previous Post Next Post