உளத்தூய்மையின் முக்கியத்துவம்!

 அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

நம்முடைய எந்த ஒரு வணக்க வழிபாடாக இருந்தாலும் அவை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில் அவைகள் மூன்று வித நிபந்தனைகளுக்குட்பட்டு செய்யவேண்டும். 

அவைகளாவன: –

  1. அமல்களை செய்பவர் ஈமான் கொண்ட முஸ்லிமாக இருக்க வேண்டும்.
  2. அல்லாஹ்வுக்காகவே செய்கின்றேன் என்ற உளத்தூய்மையுடன் செய்ய வேண்டும்
  3. அமல்களைச் செய்யும் போது அவற்றை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையின்படி செய்யவேண்டும்.

நாம் அரும்பாடுபட்டு செய்கின்ற சொற்ப அமல்களும் வல்ல இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முக்கிய காரணிகளுள் ஒன்றாகயிருக்கிற இந்த ‘இஃலாஸ்’ என்கிற உளத்தூய்மையில் சில நேரங்களில் நாம் கவனக்குறைவாக இருந்து விட்டால் அல்லது ஷைத்தானின் சூழ்ச்சியால் நாம் நற்கருமங்களைச் செய்தால் நம்மை பலர் பாராட்டக் கூடுமே என்ற என்ற எண்ணத்தில் செய்தால் அவற்றிற்கு பலனில்லாமல் போய்விடக் கூடும். அல்லாஹ் நம் அனைவரையும் இத்தகைய எண்ணங்களிலிருந்து காப்பாற்றுவானாகவும்.

அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்கின்றோம் என்ற உளத்தூய்மையுடன் மட்டுமே அனைத்து வணக்கங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்று அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் கூறியுள்ளனர்.

அல்லாஹ் கூறுகிறான் :

‘அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்” (அல்-குர்ஆன் 98:5)

(நபியே!) இன்னும் கூறுவீராக: ‘என் மார்க்கத்தில் அந்தரங்க சுத்தியாக அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன். (அல்-குர்ஆன் 39:14)

நம் உள்ளத்தில் மறைத்து வைத்திருப்பதையும் அல்லாஹ் அறிகிறான்: –

அல்லாஹ் கூறுகிறான் :

(நபியே!) நீர் கூறும்: ‘உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான். (அல்-குர்ஆன் 3:29)

வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை. (அல்-குர்ஆன் 3:5)

செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றது: –

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கும்’ அறிவிப்பவர் : உமர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

இறைவன் பார்ப்பது உள்ளங்களையே! உருவத்தை அல்ல!

‘நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையுமே பார்க்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

இறைவன் நம்முடைய வணக்கங்கள் மற்றும் இதர நற்கருமங்களை அல்லாஹ்வுக்காக மடடுமே செய்கின்றோம் என்ற உளத்தூய்மையோடு நிறைவேற்றிட அருள் புரிவானாகவும். ஆமின்.

Previous Post Next Post