படுக்கைக்குச் செல்லும் முன்…
“உங்களில் ஒருவர் படுக்கைக்கு வந்தால் அவர் தமது ஆடையின் ஒரு ஓரத்தால் தமது படுக்கையைத் தட்டிக் கொள்ளட்டும். ஏனெனில் அவர் போன பின் அதில் என்ன வந்தது என அறிய மாட்டார். பின்பு,
‘பிஸ்மிகல்லாஹூம்ம வழஃத்து ஜன்பீ வபிஸ்மிக அர்ஃபவுஹூ இன் அம்ஸக்த நஃப்ஸீ ஃபர்ஹம்ஹா வஇன் அர்ஸல் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பிமா தஹ்ஃபழு பிஹி இபாதகஸ் ஸாலிஹீன்’
என்று கூறவும்” என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பொருள் : இறைவா! உன் பெயரால் எனது விலாப்புறத்தைக் கீழே வைக்கிறேன். மேலும் உன் பெயரால் எழுவேன். (தூக்கத்தில்) என் உயிரைக் கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ அருள் புரிந்திடு. அதை விட்டுவிட்டால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போலப் பாதுகாப்பாயாக! (ஆதாரம் : புகாரி)
ஆயத்துல் குர்ஸியின் மகத்துவம்!
‘நீங்கள் படுக்கைக்கு சென்றால் ஆயத்துல் குர்ஸியை ஓதிக்கொள்ளுங்கள்.அவ்வாறு செய்தால் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குத் தொடர்ந்து ஒரு பாதுகாவலர் இருந்துக் கொண்டேயிருக்கிறார். மறுநாள் காலை வரை உங்களை ஷைத்தான் நெருங்கவே மாட்டான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் :புகாரி)
ஆயத்துல் குர்ஸி : –
‘அல்லாஹூ லாஇலாஹ இல்லாஹூவல் ஹய்யுல் கய்யூம், லாதஃகுதுஹூ ஸினதுவ் வலா நவ்ம், லஹூ மாஃபிஸ்ஸமா வாத்தி வமாஃபில் அர்ழ், மன்தல்லதீ யஷ்ஃபவு இன்தஹூ இல்லா பிஇத்னிஹ், யஃலமு மாபய்ன அய்தீஹிம் வமா கல்ஃபஹூம் வலா யுஹீதூன பிஷையிம் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹூஸ் ஸமாவாத்தி வல் அர்ழ வலா யஊதுஹூ ஹிஃப்ழுஹூமா வஹூவல் அலிய்யுல் அழீம்’ (2:255)
ஆயத்துல் குர்ஸியின் பொருள் : –
அல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் நித்திய ஜீவனும் (பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவனும் ஆவான். தூக்கமும் சிற்றுறக்கமும் அவனைப் பிடிப்பதில்லை. வானங்களிலும் பூமியிலுனுள்ள அனைத்தும் அவனுடையவையே. அவன் அனுமதியின்றி அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னாள் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின்னாள் (மறைவாக) இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் (அறிவித்துக் கொடுக்க) நாடுவதைத் தவிர அவன் ஞானத்திலிருந்து வேறெதையும் எவரும் அறிந்துக் கொள்ள முடியாது. அவனது அரசாட்சி வானங்கள், பூமி அனைத்திலும் பரந்து நிற்கின்றது. அவற்றைப் பாதுகாப்பது அவனைச் சோர்வுறச் செய்வதில்லை. அவன் மிக உயர்ந்தவன். மகத்துவ மிக்கவன்.
அல்-குர்ஆனின் இறுதி மூன்று அத்தியாயங்களை ஓதுதல்!
நபி (ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’, ‘குல் அஊது பிரப்பில் ஃபலக்’, ‘ குல் அஊது பிரப்பின்னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி.
பணியாளைவிடச் சிறந்தவைகள்: –
ஒரு பணியாள் இருந்து உங்களுக்குப் பணிவிடை செய்வதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்குச் சொல்லித் தரட்டுமா? நீங்கள் படுக்கச் செல்லும் போது ‘சுப்ஹானல்லாஹ் 33 முறை, அல்ஹம்துலில்லாஹ் 33 முறை, அல்லாஹூ அக்பர் 34 முறை ஓதிக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு ஒரு பணியாளை விடச் சிறப்பானது என்று நபி (ஸல்) அவர்கள் அலி (ரலி), ஃபாத்திமா (ரலி) ஆகிய இருவரிடமும் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)
தூக்கத்திற்குச் செல்லுமுன் : –
‘பிஸ்மிகல்லாஹூம்ம அமூத்து வஅஹ்யா’
பொருள் : இறைவா உன் பெயராலேயே நான் மரணிக்கிறேன், வாழ்கிறேன்.’
இறுதியாக ஓதும் துஆ!
பர்ரா பின் ஆஸிப் (ரலி) அறிவிக்கிறார்கள்: ‘நீ தூங்குவதற்காக உனது படுக்கைக்குச் சென்றால் தொழுகைக்கு உளூச் செய்வது போல உளூச் செய்துகொள். பின்பு ஒருக்களித்துப்படுத்துக் கொண்டு,
‘அல்லாஹூம்ம அஸ்லம்து நஃப்ஸி இலைக வவஜ்ஜஹ்த்து இலைக வஃபவ்வழ்து அம்ரீ இலைக வஅல்ஜஃது ழஹ்ரீ இலைக ரஃக்பதன் வரஹ்பதன் இலைக லாமல்ஜஅவலா மன்ஜஅ மின்க இல்லா இலைக ஆமன்து பிகிதாபிகல்லதீ அன்ஸல்த வநபிய்யிகல்லதீ அர்ஸல்த’
என்று ஓது. அன்றிரவு நீ இறந்து விட்டால் இஸ்லாத்தின் இயல்பு நிலையின் மீதே நீ இறந்தவனாவாய். அன்று காலையில் நீ எழுந்தால் நலமாக எழுவாய். இவற்றை உனது பேச்சுக்களில் இறுதியாக ஆக்கிக் கொள் (அதன்பின் பேசாமல் உறங்கிவிடு) என நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)
பொருள் : இறைவா! என்னை நான் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முகத்தை உன் பக்கம் திருப்பிவிட்டேன். எனது காரியங்களை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். உன்பால் ஆர்வம் கொண்டும் அச்சம் கொண்டும் என் முதுகை உன்பக்கம் சாய்த்து விட்டேன். உன்னையன்றி எனக்கு ஒதுங்குமிடமோ தப்பிக்குமிடமோ வேறில்லை. இன்னும் நீ இறக்கியருளிய உனது வேதத்தின் மீதும் நீ அனுப்பிய உன் நபியின் மீதும் நான் விசுவாசம் கொண்டேன்.
தூக்கத்தில் கணவு கண்டால்…
“நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானின் புறத்தில் இருந்து வருவதாகும். உங்களில் யாரேனும் தனக்குப் பிரியமான கனவு கண்டால் தமக்குப் பிரியமானவரிடம் மட்டுமே
அதைச் சொல்ல வேண்டும். தாம் வெறுக்கின்ற கெட்ட கனவைக் கண்டால் இடது புறம் மூன்று முறை துப்பவும். ஷைத்தானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். அவர் படுத்திருந்த நிலையிலிருந்து மாறிப் படுக்கவும். அதை அவர் யாரிடமும் சொல்ல வேண்டாம். அது அவருக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (ஆதாரம் : முஸ்லிம்)
தூக்கத்திலிருந்து விழித்ததும் ஓதும் துஆ: –
‘அல்ஹம்துலில்லாஹில்லதீ அஹ்யானா பஃத மா அமா(த்)தனா வ இலைஹின் நுஷூர்’
பொருள் : ‘எம்மை மரணிக்கச் செய்தபின் உயிர்பித்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். அவனிடமே மீண்டும் எழுப்பப்படல் உள்ளது. (ஆதாரம் : புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா, திர்மிதி)