மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி
உலகத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். நபி (ஸல்) அவர்கள் மீதும் நபித்தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதனமும் உண்டாவதாக!
இஸ்லாமிய சமூகம் நடைமுறை வாழ்விலும் வணக்க வழிபாடுகளிலும் கொள்கைக் கோட்பாட்டிலும் தூய்மையானதாக தனித்து விளங்குகின்றது. நபி (ஸல்) அவர்கள் உள்ளத்தை அமைதியின்மையாக்கக் கூடிய்வற்றை விட்டும் பிரிவினையையும் கோபத்தையும் உருவாக்காக் கூடியவற்றை விட்டும் தடுத்திருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நீங்கள் ஒருவருக்கொருவர் கோபித்துக் கொள்ள வேண்டாம்; பொறாமை கொள்ள வேண்டாம்; உறவினரை துண்டித்து நடக்க வேண்டாம்; தீமையின்பால் அலோசனை செய்து கொள்ள வேண்டாம், அல்லாஹ்வை வழிப்படக்கூடிய சகோதரர்களாக இருந்து கொள்ளுங்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரனுடன் மூன்றி நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது ஹராமாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)
மக்களுக்கு மத்தியில் அன்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தக்கூடிய விடயங்களை ஏவியிருக்கின்றார்கள்.
“என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரை சுவர்க்கம் நுழைமாட்டீர்கள்; மேலும் ஒருவருகொருவர் விரும்பிக் கொள்ளாதவரை விசுவாசம் கொள்ள மாட்டீர்கள்” (ஆதாரம்: முஸ்லிம்)
“நபி (ஸல்) அவர்களிடத்தில் மனிதர்களில் சிறந்தவர் யார்? என்று வினவப்பட்டார். தனது உள்ளத்தில் இருப்பவற்றை அகற்றுபவனும் உண்மை பேசுபவனும் ஆவான் என்றார்கள். அதற்கு நபித்தோழர்கள், ‘உண்மை பேசுபவனை நாம் அறிவோம்; உள்ளத்தில் இருப்பவற்றை அகற்றுபவன் என்றால் யார்?’ என்று கேட்டார்கள். (அதற்கு நபி {ஸல்} அவர்கள்) ‘உள்ளத்தில் இருப்பதை அகற்றுபவர் என்பது இறையச்சமுள்ள பிறருடைய குறைகளை கூறுவதை விட்டும் தூய்மையாக இருப்பவன் ஆவான்; அவனிடம் எந்த பாவமும் கோபமும் குரோதமும் பொறாமையும் இருக்காது.”(ஆதாரம்: இப்னு மாஜா)
அமைதியான உள்ளம் என்பது அல்லாஹ்வின் அளப்பரிய அருட்கொடைகளிலிருந்தும் உள்ளவையாகும். சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் நுழையும் போது அவர்களுக்கு கொடுக்கப்படக் கூடியவையும் ஆகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“அவர்களின் உள்ளங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம். அவர்கள் சகோதரர்களாக கட்டில்களின் மீது ஒருவரை ஒருவர் முன்னோக்கியிருப்பர்.” (அல்குர் ஆன் 15:47)
அமைதியான உள்ளமுடையவர்கள் உலகிலேயே நிம்மதியாக வாழ்வார்கள். மறுமையில் அதனை கனீமத்தாக பொற்றுக் கொள்வார்கள் சுவர்கம் நுழைவதற்கு காரணியாகவும் அமையும்.
இப்னு ஹஸம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
“சிலர் தப்பான எண்ணங்களை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு தீய விஷயங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பெரும் பாவங்களை செய்கின்றனர். மறுமையில் நரகிலும் நுழைய கிற்கு வழிகோலுகின்றனர். இதனால் எந்தவித தப்பும் செய்யாத பெரியவர்களையும் சிறியவர்களையும் அழிக்கின்றனர். அவர்களுக்கு சோதனைகளையும் ஏற்படுத்துகின்றனர். இத்தகையவர்கள் இதன் மூலம் தனக்கு எந்த நன்மையும் இல்லை என்பதை அறிந்தால் இத்தகைய தீய செயல்களில் ஈடுபட மாட்டார்கள். இவர்கள் தங்களது எண்ணத்தை தூய்மைப்படுத்தி தீயவற்றை விட்டுவிட்டு நல்ல விஷயங்களை முற்படுத்தி செய்தால் சந்தோஷமானவர்களாக இவ்வுலகில் வாழ்வார்கள்; மறுமையில் சுவர்கத்துக்கும் நுழைவார்கள். ”
தற்காலத்தில் அதிகமானவர்கள் தீய விஷயங்களை பார்ப்பதை விட்டும், ஹராமானவற்றை சாப்பிடுவதை விட்டும் பேணுதலாக இருக்கின்றனர். ஆனாலும் தனது உள்ளத்தினால் பிறரை பொறாமை, மனக்கோபம் போன்றவற்றில் பராமுகமாக இருக்கின்றனர். நான்கு விஷயங்களை நாம் பேணிக்கொள்ள வேண்டும். மனிதனது கண்ணினால் ஆகுமானவற்றை மாத்திரம் பார்வையிட வேண்டும், உள்ளத்தில் பிறரைப் பற்றி பொறாமை, கோபம் இருக்கின்றதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு தீய விஷயங்களை செய்வதனை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய நான்கும் ஒருவரிடத்தில் இருந்தால் நிச்சயமாக அவர் அமைதியான உள்ளம் கொண்டவராவார்.
அமைதியான உள்ளம் கொண்டவர் சுவர்க்கம் நுழைவதற்குரிய காரணிகளுடையவராவர். அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“நாம் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கின்ற போது நபி (ஸல்) அவர்கள் தற்போது சுவர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடத்தில் வருவார்கள் என்று கூறினார்கள். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வுழூ செய்ததன் பின்னர் தனது தாடியினால் தண்ணீர் வடிகின்ற நிலையில் இடது கையில் தனது பாதணிகளை தூக்கிய நிலமையில் வந்தார். இரண்டாவது நாளும் முதலாம் நாள் கூறியதைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதே மனிதர் அவ்வாறே வந்தார். முன்றாவது நாளும் நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது நாள் கூறியதை போன்றே கூறினார்கள். அதே மனிதர் முன்றாவது நாளும் அதே நிலையில் வந்தார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் சென்றபோது அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அந்த மனிதரை பின்தொடர்ந்து சென்று அவருடைய நிலவரத்தை அறிய அவரிடம் மூன்று நாட்கள் தங்குவதற்கு அனுமதி கோரினார். அதற்கவர் அனுமதி வழங்கினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்: மூன்று நாட்களும் அவர் இரவில் நின்று வணங்கவில்லை; ஆனால் இரவில் படுக்கைக்கு செல்கின்றபோது அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள்; துஆவை ஓதுவார்கள்; பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறுவார்கள்; பின்னர் பஜ்ரு வரையும் தூங்குவார்கள். பிறரைப் பற்றி நல்லவற்றையே கூறுவார்கள்; மூன்று நாட்களும் இவ்வாறே நாம் அவரை அவதானித்தேன். இதன் பின்னர் அவரின் நல்லமல்களை குறைவாக மதிப்பிட எனக்கு நேரிட்டது. அப்துல்லாஹ் இப்னி அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அந்த மனிதரை பார்த்து, ‘நபி (ஸல்) அவர்கள் எம்மைப் பார்த்து சுவர்க்கவாசிகளில் ஒருவர் வருவார் என்று கூறினார்கள்; மூன்று முறையும் நீங்களே வந்தீர்கள். இதனால் நீங்கள் விஷேஷமாக எந்த நல்லமலை செய்ய வேண்டும் என்பதனை பார்க்கவே நான் உங்களிடத்தில் தங்கினேன். ஆனாலும் எந்தவித அமல்களையும் அதிகமாக நீங்கள் செய்ததாக காணவில்லை’ என்று கூறிவிட்டு அவ்வாறு ‘நபி (ஸல்) அவர்கள் உங்களை சுவர்க்கவாசி என்று கூறுவதற்கு காரணம் என்னவென்று’ அவரிடம் வினவினார். அதற்கு அம்மனிதர் கூறினார், “நான் எந்த முஸ்லிமுக்கும் தீங்கிழைக்கவும், மோசடி செய்யவும் மாட்டேன். அவ்வாறே என்னைவிட எவரையெல்லாம் அல்லாஹ் உயர்த்தி நல்லவற்றை கொடுத்திருக்கின்றானோ அவற்றில் நான் பொறாமை கொள்ள மாட்டேன்.” என்று கூறினார்.
அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள், ‘இந்தவிஷயமே எம்மால் செய்ய முடியாத காரியமாகும். (ஹதீஸின் சுருக்கம்) (ஆதாரம் :அஹ்மத்)
கோபத்தையும், குரோதத்தையும் உருவாக்கக்கூடிய காரணிகள்:
1) ஷைத்தானுக்கு வழிப்படல்:
அல்லாஹ் கூறுகின்றான்:
“மிக நல்லதையே பேசுமாறு எனது அடியார்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் பகைமையை உண்டு பன்னுவான். ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்க விரோதியாகவே இருக்கின்றான்” (அல்குர் ஆன் 17:53)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அரேபியத் தீபகற்பத்தில் அல்லாஹ்வை வழிப்படுகின்றவர்களை தடுப்பதற்கு ஷைத்தானுக்கு முடியாது; ஆனாலும் அவர்களுக்கு மத்தியில் கோபத்தையும் குரோதத்தையும் ஏற்படுத்துகின்றான்” (ஆதாரம்: முஸ்லிம்)
2) கோபம்:
அனைத்து தீமைகளின் திறவுகோல் கோபமாகும். நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு கோபத்தை விட்டும் தூரமாகுமாறு வஸிய்யத் செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நீங்கள் கோபிக்க வேண்டாம்; அம்மனிதரோ எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள் என்று மீண்டும் மீண்டும் வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நீங்கள் கோபிக்க வேண்டாம்’ என்று பதிலளித்தார்கள்”
கோபம் ஒருவனை பரிகசிப்பதற்கும், நோவினை செய்வதர்கும், அழித்துவிடுவதற்கும் இட்டுச்செல்வதோடு, அனைத்து பிரிவுகளுக்கும் பிரிவினைகளுக்கும் முதன்மை காரணியாகவும் அமைகின்றது.
3) கோள் கூறுவது:
இது குரோதத்தை உருவாக்குவதற்கு மிக முக்கிய காரணியாகும். இதனால் உறவுகள் துண்டிக்கப்படுகின்றன. மனிதர்களது உள்ளங்கள் பிளவுபடுகின்றன. அல்லாஹ் இவர்களைப் பற்றி இழிவாக அல்-குர்ஆனிலே சுட்டிக் காட்டுகின்றான்.
“(அவன்) குறை கூறி, கோள் சொல்லித்திரிபவன்”(அல்குர் ஆன் 68:11)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“கோள் கூறி திரிபவன் சுவர்க்கம் நுழையமாட்டான்”
4) பொறாமை:
இது ஒரு மனிதனுக்கு கொடுக்கப் பட்டிருக்கக்கூடிய அருட்கொடைகளை நீக்குவதற்கு மிக முக்கிய காரணியாகும். இதனால் ஒரு முஸ்லிம் துன்பப்படுவதற்கு நேரிடுகிடுகின்றது. இதனை அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் தடுத்திருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“பொறாமை கொள்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன்! நிச்சயமாக நெருப்பு எவ்வாறு விறகை எரிக்குமோ அதே போன்று பொறாமை நல்லமல்களை எரித்துவிடும்” (ஆதாரம்: அபூதாவூத்)
பொறாமை என்கின்ற இத்தீய செயல், ‘பிறரை குறைகூறுதல், கோள் சொல்லுதல், பிற முஸ்லிம்கள் மீது பலி சுமத்துதல், பிறருக்கு அநியாயம் செய்தல், பெருமையடித்தல்’ போன்ற பெரும் பாவங்களுக்கு வழிவகுக்கும்.
5) உலக விவகாரத்தில் போட்டி போட்டுக்கொள்ளுதல்:
குறிப்பாக இக்காலத்தில் இந்த விஷயம் அதிகரித்து விட்டது. மக்களது உள்ளங்கள் பிளவுபட்டு விட்டன. ஒருவன் தனது சகோதரனாகிய மற்றவரைப் பார்த்து பொறாமை கொள்கின்றான். ஏனொனில் அவனை விட இவன் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதாலும், பொருளாதாரத்தில் மிக வசதியாக இருப்பதாலுமே. இவ்வாறு ஆண்களும், பெண்களுமாக மற்றவர்கள் முன்னேறுவதை தீய நோக்கோடுப் பார்த்து அவர்களை விட்டும் உலக விவகாரத்தில் முந்தியடிக்க போட்டிபோட்டுக் கொள்கின்றனர்.
6) உயர் பதவிகளையும், பிரபல்யம் அடைவதையும் விரும்புவது:
இது மிக மோசமான பழக்கமாகும். புழைல் இப்னு இயால் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“எவனொருவன் உயர் பதவிகளை விரும்புகின்றானோ அவன் பிறர் மீது பொறாமை கொள்வான், அவர்களுடன் மோஷசமான முறையில் நடந்து கொள்வதோடு குறைகளை ஆராய்பவனாக மாறிவிடுகின்றான்.”
இந்த நிகழ்வை வேலை செய்பவர்களுக்கு மத்தியில் அதிகமாக அவதானிக்கலாம்”
7) அதிகம் பரிகசித்தல்:
அதிகம் பரிகசிப்பதால் மனிதனை கோபத்தின் பால் இட்டுச் செல்லும்; அது அவனை அசிங்கமான நிலையை அடையச் செய்யும். உணவுக்கு எவ்வாறு அளவோடு உப்பு அவசியமோ அதே போன்று பரிகாசம் குறைவாக அளவோடு இருக்க வேண்டும். எவ்வாறு ஒரு உணவுக்கு உப்பு அதிகரித்தால் அந்த உணவை உண்ண முடியாதோ அதே போன்று தான் பரிகாசம் அதிகரித்தால் கோபமும், பிரிவினையும் தானாகவே வந்துவிடும்.
ஒரு முஸ்லிம் தனது உள்ளத்தை தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியமான விஷயமாகும். பொறாமை பொய் போன்றவற்றிலிருந்து விளகிக்கொள்ள வேண்டும்.
அமைதியான உள்ளத்தைப் பெறுவதற்கு கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை பின்வருமாறு பார்ப்போம்.
அ) உளத்தூய்மை (இஹ்லாஸ்):
எவர் உளத்தூய்மையுடன் தனது செயல்பாட்டை அமைத்துக் கொள்கின்றாரோ அவர் எந்தவித மனக்கசப்பையும் பிறருடன் வைத்துக் கொள்ள மாட்டார்; அவர் பிறருக்கு நன்மையே செய்ய நாடுவார்; பிறருக்கு துன்பம் நேர்கின்ற போது கவலைப்படுவார், பிறருக்கு சந்தோசமான நிகழ்வு ஏற்படுகின்ற போது மகிழ்ச்சியடைவார், அவைகள் உலக விவகாரமாக இருந்தாலும் மறுமையோடு சம்பந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரியே!
ஆ) இறைவனைப் பற்றிய பூரண திருப்தி:
இப்னு கைய்யும் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“பிறருக்கு மோசடி செய்வதனை விட்டும் குழப்பம் விளைவிப்பதை விட்டும் உள்ளத்தை தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும். எவர் ஈடேற்றமில்லாத உள்ளத்தோடு அல்லாஹ்வை சந்திக்கிறானோ நிச்சயமாக அல்லாஹ் அவனை தண்டிப்பான். இறைவனது திருப்பொருத்தமும் அவனது கோபமும் இருக்கின்ற நிலையில் அவனுக்கு ஈடேற்றமான உள்ளம் கிட்டாது. எந்தளவுக்கு இறைவனை பொருந்திக் கொள்கின்றானோ அந்தளவுக்கு உள அமையை பெற முடியும். மோசடியின் மூலம் உள அமைதியை பெற முடியாது! பிறருக்கு நன்மை செய்வதனாலும் நல்லுபதேசம் செய்வதனாலுமே உள அமைதியை பெற முடியும். ”
இ) அல்-குர்ஆனை பொருள் விளங்கி ஓதுவது:
அல்-குர்ஆன் அனைத்து நோய்களினதும் நிவாரணியாகும்! அதனை பொருள் விளங்காமல் ஓதுபவர் நிச்சயாமாக நஷ்டவாளியே!
அல்லாஹ் கூறுகின்றான்:
“இது (அல்-குர்ஆன்) நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், நிவாரணியகவும் இருக்கும் என்று (நபியே!) நீர் கூறுவீராக…” (அல்-குர்ஆன் 41:44)
மேலும் கூறுகின்றான்:
“மேலும் நம்பிக்கையாளர்களுக்கு நிவாரணியாகவும் அருளாகவும் உள்ளவற்றையே இக்குர்ஆனில் நாம் இறக்கியுள்ளோம். அது அநியாயக்காரர்களுக்கு நஷ்டத்தை தவிர வேறெதையும் அதிககிக்காது” (அல்-குர்ஆன் 17:82)
அல்லாஹ் கூறுகின்றான்:
“மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசமும் உள்ளங்களில் உள்ளவற்றிற்கு நிவாரணியாகவும் நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியும், கருணையும் நிச்சயமாக வந்துவிடும்” (அல்-குர்ஆன் 10:57)
அல்-குர்ஆன் உடல், உள, இம்மை, மறுமை இவை அனைத்குக்குமே நிவாரணி ஆகும்.
ஈ) தன்னைப் பற்றி தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்:
பிற சகோதரர்களுக்காக செய்த துன்பங்களையும் அநியாயங்களையும், பகைமையும் நினைவுபடுத்தி, பிறரைப் பற்றி பொறாமை கொண்டமை, கோள், புறம், மன வேதனையடையும் அளவுக்கு பரிகசித்தமை அனைத்தையும் நினைவு கூறி அவற்றிலிருந்து அமைதி பெற வேண்டும்.
உ) பிரார்த்தனை:
ஒரு அடியான் தனக்கும் பிற சகோதரர்களுக்கும் உள அமைதியை வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். அதுவே நல்லடியார்களது பண்பாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.”(அல்-குர்ஆன் 59:10)
ஊ) தர்மம் செய்தல்:
தர்மம் செய்வது மனிதனது உள்ளத்தை தூய்மைப்படுத்திவிடும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“அவர்களை தூய்மைப்படுத்தும் (ஸகாத் எனும் கடமையை) தர்மத்தை அவர்களின் செல்வங்களிலிருந்த்து (நபியே!) நீர் எடுத்து, அதன் மூலம் அவர்களை பரிசுத்தப்படுத்துவீராக!…” (அல்-குர்ஆன் 09:103)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“தர்மத்தினால் உங்களது உள்ளங்களை குணப்படுத்திக் கொள்ளுங்கள்” (ஆதராம்: புகாரி)
மனிதன் குணப்படுத்த வேண்டிய நோய்களில் மிக குக்கியமானது உள நோயாகும், இவற்றில் மிக முக்கியமாக தங்களது உள்ளங்களை முதன் முதலில் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
எ) சகோதரர்களுக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பிரயோகிக்காமலும். அவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தாமலும் இருப்பது:
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரனாவான்; இதன் மூலம் அவர்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டும். மாறாக, கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் எதிர்ப்ப்தைப் போன்று ஒரு முஸ்லிமாகிய சகோதரனை எதிர்க்கக் கூடாது.
அவ்வாறு செய்வதென்பது அவனுக்கு தீங்கிளைப்பதாகவே அமைகின்றது.
ஏ) ஸலாத்தை பரப்புதல்:
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக.நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரை சுவர்க்கம் நுழைய மாட்டீர்கள். மேலும் நீங்கள் ஒருவரை ஒருவர் விரும்பிக் கொள்ளாத வரை விசுவாசம் கொள்ள மாட்டீர்கள். உங்களுக்கு மத்தியில் நற்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்றை சொல்லித் தரட்டுமா? என்று கூறிவிட்டு, ‘உங்களுக்கு மத்தியில் ஸலாத்தை பரப்பிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “இந்த நபிமொழி ஸலாத்தின் சிறப்பை தெளிவு படுத்துகின்றது. நற்பை ஏற்படுத்தக் கூடியவற்றை உருவாக்குகின்றது, கோபத்தை விட்டு தடுக்கின்றது.
ஐ) அதிகம் கேள்வி கேட்பதை விட்டும், மனிதனது குறைகளை ஆராய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளல்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“தனக்கு தேவையில்லாத ஒன்றை விட்டும் தவிர்ந்து கொள்வதென்பது ஒரு சிறந்த இஸ்லாமியனின் நற்குணமாகும்” (ஆதாரம்: திர்மிதி)
ஒ) சக முஸ்லிம்களுக்கு நல்லவற்றையே விரும்பவேண்டும்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இறைவன் மீது ஆனையாக ‘ஒரு சதோதரர் தான் விருப்புவதையே தான் பிற சகோதரர்களுகளுக்கும் விரும்பாதவரை உண்மையான இறைவிசுவாசியாக மாட்டான்”(ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
ஓ) தனது உள்ளம் ஈடேற்றமாகுவதற்காக வேண்டி கோள், புறம் கேட்பதை விட்டும் தவிர்ந்து கொள்ளல்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எனது தோழர்ளைப் பற்றி ஒருவரை ஒருவர் என்னிடம் சொல்ல வேண்டாம். நான் உங்ளுக்கு மத்தியில் ஈடேற்றம் உள்ளவனாக இருப்பதற்கு விரும்புகிறேன்” (ஆதாரம்: அஹ்மத்)
சமூதத்திலே ஒருவன் இன்னொருவனைப் பற்றி ஓரிரு வார்த்தைகளை பேசி இருப்பான்; அதனை இருவர் அதற்கு மேற்பட்டவர்கள் பேசிக் கொள்ளும் போது பல விஷயங்களை சேர்த்து அல்லது குறைத்து தங்களது உள்ளங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற அளவுக்கு காரணியாக அமைகின்றது. இவை பெண்களுக்கு மத்தியிலும், கணவன் மனைவியர்களுக்கு மத்தியிலும், வீடுகளிலும் அதிகம் இடம் பெருவதனை அவதானிக்கலாம்.
ஓள) /உள்ளத்தை சீர்திருத்தி அதனை சரி செய்துகொள்ள வேண்டும்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அறிந்து கொள்ளுங்கள் உள்ளத்திலே ஒரு சதைக் கட்டி இருக்கின்றது; அது சீர் பட்டுவிட்டால் முழு உடலும் சீர்பட்டுவிடும், அது சீர்கெட்டுவிட்டால் முழு உடலும் சீர்கெட்டுவிடும். அதுவே உள்ளமாகும்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
ஃ) இரண்டு பேருக்கு மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்குதல்:
அல்லாஹ் கூறுகின்றான்:
“நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி உங்களுக்கிடையில் நிலைமையைச் சீர் படுத்திக் கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 08:01)
“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நோன்பையும், தொழுகையையும், தர்மத்தையும் விட சிறந்த அந்தஸ்தில் உள்ள ஒன்றை அறிவித்துத் தரட்டுமா? என்று கூறிய போது நபித்தோழர்கள், ‘ஆமாம்’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘பிரிந்திருக்கின்றவர்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்றார்கள்”(ஆதாரம்: அபூதாவூத்)
இறைவா! எமது உள்ளத்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் எந்த வித கோபமும், குரோதமும், பிரச்சினையும் இல்லாத ஈடேற்றமான உள்ளமாக மாற்றுவாயாக! ஆமீன்.