நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தான் காரணகாரியங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. ஆகவே இபாதத்தில் ஷிர்க்கின் பக்கம் அழைத்துச் செல்கின்றவற்றையும், மார்க்கத்தில் பித்அத் உருவாகக் காரணமாக இருப்பவற்றையும் தடுப்பதும், அதைத் தவிர்த்து கொள்வதும் கடமையாகும்.
வரும் முன் காப்போம் என்று கூறுவதைப் போன்று மார்க்கம் வழிகாட்டிய அடிப்படைதான் سد الذرائع காரணகாரியங்களை தடுப்பது. ஒரு செயல் தற்சமயம் அது ஷிர்க்காக இல்லாவிட்டாலும், பிற்காலத்தில் ஷிர்க்கின் பால் கொண்டுச் செல்லும் என்று இருக்குமானால் அதனையும் தவிர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு தான் سد الذرائع காரணகாரியங்களை தடுப்பது என்று கூறுகிறோம். மனித சமுதாயத்தில் இணைவைப்பு எனும் பாவச்செயல் தோன்ற காரணகாரியம் என்ன என்பதைக் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று இதனை உறுதிப்படுத்துகிறது.
நூஹ் அவர்களின் சமுதாயத்தில் இருந்த நல்லடியார்களின் பெயர்கள் தான் இவைகள் (வத்து, ஸுவாஃ,யகூஸ்,யஊக், நஸ்ர்) இவர்கள் மரணித்தபோது ஷைத்தான் மக்கள் அமரும் அவையில் அவர்களின் சிலைகளை நிறுவுவதற்கும் அதற்கு அவர்களின் பெயர்களை சூட்டுவதற்கும் ஏவினான் அவர்களும் அதனை செய்தார்கள் அப்போது அவைகள் வணங்கப்படவில்லை பின்னர் அத்தலைமுறையினர் மரணித்து அவர்களைக்குறித்த அறிவு மழுங்கியபோது அவைகள் வணங்கப்பட்டன என்று சூரத்துன் நூஹ் என்ற அத்தியாயத்தின் 23 வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கமளித்தார்கள்.
நூல்: ஸஹீஹுல் புகாரி 4920
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்:
உம்மு ஹபீபா அவர்களும் உம்மு ஸலமா அவர்களும் அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும், அவ்விருவரும் நபி(ஸல்) அவர்களிடம் (அதைப் பற்றிக்) கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது அவரின் மண்ணறையின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள் தாம், மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்' என்று கூறினார்கள்.
நூல்: ஸஹீஹுல் புகாரி : 3873.
நபி(ஸல்) அவர்களும் ஷிர்க்கின் வாசலை அடைக்கும் விதமாக தம் சமுதாயத்திற்கு உபதேசம் செய்தார்கள். முன்சென்ற தூதர்களை வரம்புமீறி புகழ்ந்த சமுதாயம் வழிகேட்டிற்கு சென்றார்கள் என்பதால் அதே போன்று தன்னையும் வரம்புமீறி புகழ்ந்து வழிகேட்டிற்கு சென்று விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு உபதேசம் செய்தார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்:
'நபி(ஸல்) அவர்கள், 'கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும் 'இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்' என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன்.
நூல்: ஸஹீஹுல் புகாரி : 3445.
நபி(ஸல்) அவர்களிடம் பனு ஆமிர் கூட்டத்தார்கள் வந்தபோது நானும் அவர்களுடன் இருந்தேன். அப்போது நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் தான் எங்கள் எஜமான் எனக் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தான் எஜமான், உயர்வானவன் என கூறினார்கள். அதற்கு நாங்கள் நீங்கள் தான் எங்களில் மிகச் சிறந்தவரும், கண்ணியத்திற்குரியவரும் என கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வார்த்தையையோ இதற்கும் குறைவானதையோ கூறுங்கள். ஆனாலும் ஷைத்தான் உங்களை உட்கொள்ளாமல் இருக்கட்டும் எனக் கூறினார்கள்.
நூல்: அபூதாவூத்
மேற்சொன்ன நபிமொழிகளின் மூலம் சமுதாயம் வழிகெடாமல் இருப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் سد الذرائع காரணகாரியங்களின் வாசல்களை எவ்வாறு அடைத்தார்கள் என்பதை அறிய முடிகிறது.
- உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி