இஸ்லாமிய அகராதி

அகபா:
மக்கா செல்லும் பாதையில் மினாவிற்கு அருகிலுள்ள ஓர் இடத்தின் பெயர். மதீனாவில் இஸ்லாம் பரவுவதற்கு முன், மதீனாவாசிகளில் சிலர் இந்த இடத்தில் இரு கட்டங்களாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வழங்கிய உறுதி மொழியையே 'பைஅத்துல் அகபா - அல் அகபா உறுதிப் பிரமாணம்; அல்லது அகபா உடன்படிக்கை" என்பர்.

அகழ்ப் போர்:
ஹிஜ்ரி 4-ஆம் ஆண்டு (கி.பி. 627) மதீனா நகர் மீது யூதர்கள் உள்பட அனைத்து அரபுக் குலத்தினரும் திரண்டு வந்து தொடுத்த போர். இதில் எதிரிகளை நகருக்குள் நுழைய விடாமலிருக்க அகழ்(கன்தக்) தோண்டப்பட்டது. இதையே 'அஹ்ஸாப்(பல அணியினர்) போர்" என்றும் கூறுவர்.

அத்தஹிய்யாத்து:
இது ஒருவகை வாழ்த்தும் பிரார்த்தனையும் ஆகும். நான்கு ரக்அத் மற்றும் மூன்று ரக்அத் தொழுகையின் இரண்டாவது ரக்அத் இருப்பிலும் கடைசி ரக்அத் இருப்பிலும் இரண்டு ரக்அத் தொழுகையின் கடைசி ரக்அத் இருப்பிலும் இதை ஓதுவது நபிவழியாகும். 'அத்தஹிய்யாத்து லில்லாஹி" என்பது 'சொல்வடிவிலான எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் இறைவனுக்கே உரியவை!" என்று பொருள்படும். இதனைத் 'தஷஹ்ஹீத்' (உறுதி மொழி கூறல்) என்றும் கூறப்படும்.

அபுல் காசிம்:
இது இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் குறிப்புப் பெயராகும். 'காசிமின் தந்தை" என்பது இதன் பொருள். நபி(ஸல்) 'இன்னாரின் தந்தை" என்று ஒருவரைக் குறிப்பால் உணர்த்த, அவரின் மகன் அல்லது மகளின் பெயருக்கு முன்பு அபூ-தந்தை என்னும் வார்த்தையைச் சேர்த்து அவரைக் குறிப்பிடுவது அரபுகளின் வழக்கம். நபி(ஸல்) அவர்களின் புதல்வரான காசிம் அவர்கள் இரண்டு வயதிலேயே மரணித்து விட்டார்கள்.

அபூ ஜஹ்ல்:
அம்ர் பின் ஹிஷாம் என்பது இவனது இயற்பெயர். பெருமானாரின் முக்கிய எதிரியான இவன் குறைஷிக் குலத்தில் 'பனூ மக்ஸூம்" கிளைத் தலைவன் ஆவான். கி. பி.623-ல் பத்ருப் போரில் கொலை செய்யப்பட்டு இறந்தான்.

அமல்:
அரபு மொழியில் 'அமல்" என்பது பொதுவாக செயலைக் குறிக்கும். தமிழ் முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் நற்செயலுக்கு இச்சொல் பயன்படுத்தப் படுகின்றது.

அச்ச நேரத் தொழுகை:
(ஸலாத்துல் கவ்ஃப்). போர் மூளும் முன் எதிரிகள் தாக்கும் அச்சம் இருக்கும் பட்சத்தில் ஒரேயோர் இமாமின் தலைமையின் கீழ் படைவீரர்கள் இரு அணிகளாகப் பிரிந்து தொழும் கடமையான தொழுகை.

அபிசீனியர்:
சூடான் நாட்டை சேர்ந்த கறுப்பின மக்கள்.

அய்யூப் (அலை):
நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் வழித் தோன்றல்களில் வந்த ஓர் இறைத்தூதர். நபி هசுஃப்(அலை) அவர்களுக்குப் பின் தென் பலஸ்தீனுக்கும் 'அல் அகபா" வளைகுடாவுக்கும் மத்தியில் 'அத்வம்" பகுதி மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது. பொறுமைக்குப் பெயர்பெற்றவராய் வாழ்ந்தார்கள்.

அர்ஷ்:
ஆட்சி பீடம், சிம்மாசனம், கட்டில், வீடு, முகடு போன்ற பல பொருள்கள் இதற்கு உண்டு. 'இறைவனின் ஆட்சிப்பீடம் அல்லது சிம்மாசனம்" என்னும் பொருளில் இச்சொல் ஆளப்படுகிறது.

அரஃபா:
புனித மக்காவிற்குக் கிழக்கே 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திறந்தவெளி. மக்காவிற்கு ஹஜ் செய்யச் செல்பவர்கள் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் இங்கு தங்குவது கட்டாயக் கடமையாகும்.

அல்லாஹ்:
அரபு மொழியில் ஒரே இறைவனைக் குறிக்கும் சொல்.

அல்ஹம்து லில்லாஹ்:
'புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது" என்பது இதன் பொருள். 'அல்ஹம்து லில்லாஹ்" என்று ஆரம்பமாகும் சூரத்துல் ஃபாத்திஹா, முஸ்லிம் பொதுமக்கள் வழக்கில் அல்ஹம்து சூரா என்று அழைக்கப்படுகின்றது. பார்க்க: ஃபாத்திஹா சூரா.

'அலை":
''அலைஹிஸ்ஸலாம் - அவர் மீது (இறைவனின்) சாந்தி உண்டாகட்டும்" என்பதன் சுருக்கம். இறைத்தூதர்களுக்குப் பிரார்த்தனை செய்யும் வகையில் அவர்கள் பெயர்களுடன் 'அலை" என்று தமிழில் சுருக்கமாகப் போடப்படும்.

அவ்தாஸ்:
'ஹவாஸின்" குலத்தார் குடியிருந்த பகுதியில் இருந்த ஒரு பள்ளத்தாக்கின் பெயர். ஹுனைன் போரில் தப்பியோடிய ஹவாஸின் குலத்தார் மீண்டும் போருக்குத் தயாரானார்கள். அவர்களை ஒடுக்க நடை பெற்ற போரே 'அவ்தாஸ் போர்" இதற்கு 'அபூ ஆமிர் படைப்பிரிவு" என்ற பெயரும் உண்டு.

அவ்ஸ் - கஸ்ரஜ்:
மதீனா நகரிலிருந்த இரு பெரும் அரபுக்குலத்தார். முன்பு யமனில் வசித்து வந்த இவர்கள், மஃரிப் நீர் தேக்கத்தில் கி. பி. 542-570 வாக்கில் உடைப்பு ஏற்பட்ட போது அங்கிருந்து வந்து மதீனாவில் குடியேறினர். அன்சாரிகளில் இவர்களும் அடங்குவர்.

அன்சார்:
'உதவி புரிபவர்கள்"என்பது சொற்பொருளாகும். தம் தாயகமான மக்காவைத் துறந்து மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) சென்ற முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கும் அவர் தம் தோழர்களுக்கும், பிற பகுதிகளிலிருந்து மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) சென்ற முஸ்லிம்களுக்கும் ஆதரவளித்து உதவி செய்தமையால் மதீனா வாசிகள் 'அன்சார்" (உதவி புரிந்தோர்) என்றழைக்கப்படுகின்றனர்.

அஸர்:
பிற்பகலின் நடுப்பகுதியிலிருந்து சூரியன் மறையும் வரையுள்ள நேரத்தை இது குறிக்கும்; இந்நேரத்தில் தொழப்படும் தொழுகை அஸர் தொழுகை என்றழைக்கப்படுகின்றது. இதுவும் முஸ்லிம்கள் மீது கடமையான ஐங்காலத் தொழுகைகளில் ஒன்றாகும்.

ஆயத்துல் குர்ஸி:
'அல்லாஹு லா இலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்هம்" என்று ஆரம்பமாகும் 'திருக்குர் ஆன் வசனம் (2:25) ஆயத்துல் குர் என்று அழைக்கப்படுகின்றது. 'இது திருக்குர் ஆனின் வசனங்களிலேயே மிகவும் சிறப்புக்குரியது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆதம் (அலை):
ஆதம். ஆதி மனிதரும் ஆதியிறைத் தூதரும் ஆவார். ஆதம் - ஹவ்வா தம்பதியரிலிருந்தே மனித குலம் பெருகிற்று.

ஆது:
யமன் நாட்டு கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்த அரபுப் பழங்குடியினர். இவர்களுக்கு அனுப்பப்பட்ட நபியே ஹூத்(அலை) அவர்கள் ஆவார்கள். இவர்களது காலம் கி.மு. 2000 ஆகும்.

இம்ரான்:
அன்னை மர்யம் அவர்களின் தந்தை.

இல்யாஸ் (அலை):
(எலியா - கி. மு. - 8 - ஆம் நூற்றாண்டு) நபி ஹாரூன்(அலை) அவர்களின் வழித்தோன்றலில் வந்த ஓர் இறைத்தூதர். அன்றைய ஷாம் நாட்டு மக்களுக்கு இறைத் தூதராக நியமிக்கப் பட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ்:
இதற்கு 'இறைவன் நாடினால்......" என்று பொருள். வருங்காலத்தில் ஒன்றைச் செய்யப்போவதாக வாக்களிக்கும் இறை நம்பிக்கையாளர் இதையும் சேர்த்தே குறிப்பிடுவர். (உம்) இன்ஷா அல்லாஹ், முக்தஸ்ர் முஸ்லிம் விரைவில் வெளிவரும்.

இறை நம்பிக்கையாளர்:
(மூமின்) ஓரிறைவன், வானவர்கள், இறைத்தூதர்கள், இறுதித் தூதர் முஹம்மது(ஸல்), இறைவனால் அருளப்பட்ட முந்தைய வேதங்கள், இறுதி வேதம் திருக்குர்ஆன், மறுமை நாள், விதி ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டவர் இறை நம்பிக்கையாளர் ஆவார்.

இறை நம்பிக்கையாளர்களின் அன்னை:
(உம்முல் மூமினீன்) நபி(ஸல்) அவர்களின் துணைவியார்.

இறை நம்பிக்கையாளர்களின் தலைவர்:
(அமீருல் மூமினீன்) இறைத்தூதருக்குப் பின் வந்த இஸ்லாமிய ஆட்சித் தலைவர்.

இறை மறுப்பாளர்:
(காஃபிர்) இறைநம்பிக்கையாளர் என்பதன் எதிர்ச் சொல்.

இஃதிகாஃப்:
இறைவனுக்காக லைலத்துல் கத்ர் என்ற ஆயிரம் மாதங்களை விடச்சிறந்த இபாவை நாம் பெறுவதற்காக ரமளான் மாதத்தில் கடைசிப் பத்துநாட்கள் பள்ளியில் தங்கியிருக்கும் வணக்க வழிபாடு. இறைத்தூதர் வழிமுறையில் குறிப்பிட்ட காலம் பள்ளிவாசலில் தங்கும் ஒரு வகை வழிபாடு.

இகாமத்:
தொழுகைக்கு வருமாறு அழைப்பு. (பாங்கு) விடுத்த பிறகு தொழுகை நடைபெறப் போகிறது என்றறிவிக்கும் அழைப்பு.

இத்தா:
கணித்தல், எண்ணுதல் என்பது இதன் சொற்பொருளாகும்.
கணவனால் விவாகரத்துச் செய்யப்பட்ட அல்லது விவாகரத்தைப் பெற்ற பெண் மூன்று மாதவிடாய்க் காலத்தைத் தன் கணவன் வீட்டில் கழிப்பது கடமையாகும். இதற்கே 'இத்தா" என்று கூறப்படுகின்றது. இத்தா இருக்கும் நாட்களில் அவள் இத்தா இருக்கும் வீட்டிலிருந்து வெளியேறுவது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். விவாகரத்தின் காரணமாக இத்தா இருப்பவளை இத்தா காலத்தில் கணவனும் வீட்டை விட்டு வெளியேற்றக்கூடாது. மூன்று முறை தலாக்(விவாகரத்து) உரிமை கணவனுக்கு இருப்பதால் அந்த தலாக் முதலாவது தலாக்காக அல்லது இரண்டாவது தலாக்காக இருக்கும் பட்சத்தில் இருவர் மனமும் கனிந்து ஒன்றுசேரும் வாய்ப்பு இதன் மூலம் தரப்படுகிறது. இருவரும் தம் வாழ்வைப் பற்றிச் சிந்திப்பதற்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. மண உறவின் புனிதம், கணவனின் பொறுப்பு, மகளிர் நலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இத்தாவின் இந்தச் சட்டம் அமைந்துள்ளது.
இதனால் மூன்றாவது முறை தலாக்(விவாகரத்து) செய்யப்படும் போது அல்லது கணவன் இறந்துவிடும்போது பெண், தன் கருப்பை காலியாக உள்ளதா என்றறிந்து கொண்டு பிறகு வேறொரு ஆணைத் திருமணம் செய்துகொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. இத்தா இருந்து காத்திராமல் உடனடியாகத் திருமணம் செய்வதால் முந்திய கணவனால் உருவான கருவைச் சுமந்த நிலையில் வேறொருவரைக் கணவனாகப் பெறும் துர்பாக்கியத்திற்கு ஆளாகாமல் தப்பிக்கவும் தான் சுமக்கும் குழந்தையின் தந்தை யார் என்று தெரியாத அவல நிலை ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளவும் அவளுக்கு வாய்ப்பு கிடைக்கின்றது.
கணவன் இறந்த பெண்ணுக்கு நான்கு மாதங்களும் பத்து நாட்களும் இத்தாவுடைய காலமாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தலாக் செய்யப்பட்ட, மாதவிடாய் நின்றுபோன பெண்ணின் இத்தா காலம். மூன்று மாதங்களாகும். கருவுற்றிருக்கும் பெண்ணின் இத்தா காலம் குழந்தையை ஈன்றெடுக்கும் வரையிலாகும்.

இஸ்ரவேலர்கள்:
இறைத்தூதர் யஃகூப்(அலை) அவர்களுக்கு இஸ்ராயீல் என்றும் ஒரு பெயருண்டு. அவர்களது வழித் தோன்றல்களுக்கு இஸ்ரவேலர்கள் என்று சொல்லப்படும்.

இத்ரீஸ் (அலை):
இறைத்தூதர் நூஹ்(அலை) அவர்களின் முப்பாட்டனாரான இவர் நபி ஆதம் மற்றும் ஷுத்(அலை) அவர்களுக்குப் பின்னால் வந்த இறைத்தூதர் ஆவார்.

இப்ராஹீம் (அலை):
இறைத்தூதர்களில் ஒருவரான இப்ராஹீம்(அலை) அவர்கள் (ஆப்ரஹாம்) கி. மு. 2160-ல் தென் இராக்கில் உள்ள (உர்-ருசு) என்னும் ஊரில் பிறந்தார்கள். கலீலுல்லாஹ் - இறைவனின் உற்ற நண்பர் என்று சிறப்புப் பெயர் பெற்றவர்.

இப்லீஸ்:
நெருப்பால் படைக்கப்பட்ட 'ஜின்" இனத்தாரைச் சேர்ந்தவன். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து அவர்களுக்குச் சிரம்பணியும்படி இறைவன் கட்டளையிட்டபோது, பெருமையடித்து சிரம் பணிய மறுத்துவிட்ட காரணத்தால் இறைவன் தன் கருணையிலிருந்து இவனை அப்புறப்படுத்திவிட்டான். எனவே இவன் 'இப்லீஸ்"- இறைக்கருணையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டவன் என்று அழைக்கப்படுகிறான். இவன் ஷைத்தான்களின் தந்தை ஆவான்.

இப்னு (பின்):
மகன் (உம்: முஹம்மத் பின் அப்துல்லாஹ் - அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத்)

இமாம்:
இஸ்லாமிய அரசின் தலைவர்; குறிப்பிட்ட ஒரு துறையில் தேர்ச்சி பெற்று சிறந்த முன்னோடியாகத் திகழ்பவர்; தொழுகைக்குத் தலைமை தாங்கி நடத்துபவர்.

இஷா:
சூரியன் மறைந்து செவ்வானமும் மறைந்த பின்னால் உள்ள நேரம். இந்நேரத்தில் தொழப்படும் இரவுத் தொழுகை இஷாத் தொழுகை எனப்படும்.

இஸ்மாயீல் (அலை):
கி. மு. 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நபி இஸ்மாயீல்(அலை) அவர்கள் (இஸ்ம்வேல்), நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் மூத்த மகனாவார்கள். இவர்கள் அன்னை ஹாஜராவுக்குப் பிறந்தவர்கள். 'அரபுகளின் தந்தை" எனப் போற்றப்படும் இவர்களின் சந்ததியில்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.

இஹ்ராம்:
புனித ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய வழிபாடுகள் நிறைவேற்றப்படும் போது அணிய வேண்டிய, தைக்கப்படாத இரு துண்டுகளாலான வெண்மையான ஆடை.

ஈதுல் அள்ஹா:
ஹிஜ்ரி ஆண்டில் துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் முஸ்லிம்கள் கொண்டாடுகின்ற பெருநாள் பண்டிகை. இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைப்படி, தம் மகனான இஸ்மாயீலை இறைவனுக்காக அறுத்துப் பலியிட முன் வந்த தியாகத்தை நினைவு கூரும் வகையில் இந்நாளில் முஸ்லிம்கள் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளை இறைவனுக்காக அறுத்துத் தியாகம் புரிந்து, அதை ஏழைகளுக்குக் கொடுத்து இப்பண்டிகையைக் கொண்டாடுவதால் இது ஈதுல் அள்ஹா - தியாகப் பெருநாள் என்று அழைக்கப்படுகிறது. இதை ஹஜ் பெருநாள் என்றும் அழைப்பர்.

ஈதுல் ஃபித்ரு:
ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அந்த மாதம் முடிந்ததும் நோன்பை நிறைவு செய்து அடுத்த நாள் ஷவ்வால் மாதம் பிறை 1-ல் முஸ்லிம்கள் கொண்டாடுகின்ற பண்டிகை. ஆகவே, இந்த ஷவ்வால் முதல் நாள் பிறையின் வருகை தான் ரமளான் நோன்பை நிறைவு செய்யக் காரணம் என்பதால் இது ஈதுல் ஃபித்ரு - நோன்பை நிறைவுசெய்த பெருநாள் என்று அழைக்கப்படுகிறது. நோன்புப் பெருநாள் என்றும் இதை அழைப்பர்.

ஈஸா (அலை):
இறைத்தூதர்களில் ஒருவரான இவர்(இயேசு - துநுளுருளு) பாலஸ்தீனத்தில் உள்ள நாஸரேத் - சூஹளுஹசுநுகூழ என்னும் ஊரில் மர்யம்(அலை) அவர்களுக்கு ஆண் துணையின்றி அற்புதமான முறையில் பிறந்தார்கள். இவர்களுக்கு இன்ஜீல் வேதம் (பைபிள் புதிய ஏற்பாடு - சூநுறு கூநுளுகூஹஆஹசூகூ) இறைவனால் அருளப்பட்டது.

உம்மு:
இதற்கு 'தாயார்" என்று பொருள். (உம்) உம்மு சலமா - சலமாவின் தாயார்.

உம்ரத்துல் களா:
(விடுபட்ட உம்ரா) ஹிஜ்ரி 7-ஆம் ஆண்டு நபிகளாரும் 2000 நபித்தோழர்களும் நிறைவேற்றிய உம்ரர் ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு நிறைவேற்ற முடியாமற் போன உம்ராவுக்குப் பிரதியாகவே இதை நிறைவேற்றினர்.

உம்ரா:
ஹஜ்ஜைப் போன்றே இதுவும் கஅபாவை தரிசிக்க மக்காவிற்குச் செல்லும் கட்டாயக் கடமையாகும். இதற்குக் காலக் குறிப்பு இல்லை.

உமர் பின் அப்துல் அஜீஸ்:
(ஹிஜ்ரி 61-101- கி. பி.681-720) உமைய்யா ஆட்சியாளர்களில் எட்டாமவர். (ஹிஜ்ரி:99-கி.பி717) நேர்வழி கலீஃபாக்களில் ஐந்தாமவர். நிர்வாகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் சீர் திருத்தங்கள் கொண்டு வருவதில் தனிக்கவனம் செலுத்தினார்கள்.

உளூ:
தொழுகை போன்ற சில குறிப்பிட்ட வணக்கங்களை நிறைவேற்றுவதற்கு முன்னால் முகம், கை, தலை, கால் முதலியவற்றை அல்லாஹ்வின் ஆணைக்கிணங்க நபிகளாரின் வழிமுறைக்குட்பட்டு தூய்மைப்படுத்திக் கொள்ளும் அங்க சுத்தி முறை.

உஸ்ஸா:
அறியாமைக் காலத்தில் குறை»யர் வணங்கி வந்த சிலைகளில் ஒன்று.

உஹுது(ப் போர்):
மதீனாவிற்கு அருகிலுள்ள 'உஹுது" மலைக்கருகில் ஹிஜ்ரி 3-ம் ஆண்டு ஷவ்வால் மாதத்தின் மத்தியில் இறைநம்பிக்கையாளர்களுக்கும் இறைமறுப்பாளர்களுக்குமிடையே நடைபெற்ற போர்.

ஊகியா:
38.66 கிராமுக்குச் சமமான அக்கால அரபுகளின் ஓர் எடை அளவு

கஅபா:
புனித மக்காவிலுள்ள சதுர வடிவம் கொண்ட கட்டடமான புனித இறையில்லம்; உலகில் முதன் முதலாக ஏக இறைவனின் வணக்கத்திற்காக அமைக்கப்பட்ட இறையாலயம். இதை முன்னோக்கியே முஸ்லிம்கள் தொழுகை நடத்துகிறார்கள். இதைத் தரிசிப்பதற்காகவே ஹஜ் புனிதப்பயணமும் மேற்கொள்கிறார்கள்.

கஃபன்:
இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது அவர்களுக்கு அணிவிக்கப்படும் ஆடை

கப்ரு:
இறந்தவர்களை அடக்கம் செய்யும் மண்ணறை; புதைகுழி

கராஜ்:
இஸ்லாமிய அரசின் பாதுகாப்பில் வாழும் முஸ்லிமல்லாதோர் ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட அளவு தங்களின் செல்வத்திலிருந்து அரசுக்குச் செலுத்த வேண்டிய ஒரு வகை நில வரி.

ஃகனீமத்:
போர்ச் செல்வம்; போரில் எதிரிகள் விட்டுச் சென்ற பொருள். இதில் போராளிகளுக்கு ஐந்தில் நான்கு பங்கும், மீதமுள்ள ஒரு பங்கு இறைத் தூதருக்கும் உரியதாகும்.

கலீஃபா:
இறைத்தூதரின் வழிமுறைப்படி இறைச் சட்டங்களை வாழ்க்கைத் துறைகள் அனைத்திலும் செயல்படுத்துகின்ற இஸ்லாமிய ஆட்சித் தலைவர். நபிகளாருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த முஸ்லிம் ஆட்சித் தலைவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டனர்.

களா:
கடமையான வணக்கங்களை உரிய நேரத்தில் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும் போது அவற்றிற்குரிய நேரம் கடந்து வேறு காலங்களில் அவற்றை நிறைவேற்றுவது.

கஸ்ர்:
கட்டாயக் கடமையான நான்கு ரக்அத் தொழுகைகள் ளுஹர், அஸர், இஷா அகியவற்றை பிரயாணத்தின் போது இரண்டு ரக்அத்களாகச் சுருக்கித் தொழுதல்.

காஃபிர்:
ஏக இறைவனை ஏற்க மறுப்பவர்; 'முஷ்ரிக்" எனும் இணைவைப்பவரும் ஒரே இறைவனை வணங்காமல் பல கடவுள்களை வணங்குவதால் அவரையும் 'காஃபிர்" எனக் கூறுவதுண்டு.

கவ்ஸர்:
சொர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கின்ற தண்،ர்த் தடாகம்! தாகம் நிறைந்த அந்நாளில் நபி(ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தினருக்கு அதிலிருந்து தண்ணீர் புகட்டுவார்கள்.

கஸாமா:
கொலைக் குற்றத்தில் சாட்சிகளுடன் கொலையாளி அறியப்படாத சந்தர்ப்பத்தில் கொலையுண்டவரின் உறவினர் செய்யும் ஒரு வகை சத்தியம்.

கிஸ்ரா:
பாரசீகப் பேரரசர்களின் புனைப் பெயர். நபிகளாரின் காலத்தில் இருந்த குஸ்ரூவின் பெயர் அப்ரோயஸ் பின் ஹுர்முஸ் - கி.பி. 590-628) இவருடன் இராக்கில் பாரசீகப் பேரரசு முடிவுக்கு வந்தது.

கிப்லா:
உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் மக்காவிலுள்ள புனித இறையில்லமாம் கஅபாவை நோக்கியே தொழ வேண்டும். கஅபா உள்ள திசையே 'கிப்லா" என்று அழைக்கப்படுகிறது.

கியாமத் நாள்:
உலகம் அடியோடு அழிக்கப்பட்டு, படைப்புகள் அனைத்தும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாள், இந்த நாளில் தான் மனிதன் செய்த செயல்களுக்குக்கான தீர்ப்புகள் வழங்கப்படும்; தீய செயல்களுக்குத் தக்க தண்டனைகளும் நற்செயல்களுக்கு முழுமையான நற்பலன்களும் வழங்கப்படும்.

கிராஅத்:
ஓதுதல். இறைமறையாம் திருக்குர் ஆனை முறையாக ஓதுவதற்கும், ஓதும் முறைக்கும் 'கிராஅத்" என்பர்.

கீராத்:
ஒரு கீராத் என்பது 213 மில்லி கிராம் அளவாகும். சில வேளைகளில் இது உஹுது மலையளவு பெரும் எடையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுவதுண்டு.

குஃப்ரு:
ஏக இறைவனை மறுக்கும் தன்மை, இணைவைத்தலும் இறையை மறுப்பதே!

குர்ஆன்:
உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்ட இறுதித் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளிய இறுதி வேதம்

குர்பானி:
இறைவனின் நெருக்கத்தைப் பெறுவதற்காக அவனது கட்டளைப்படி ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை அறுத்து ஏழைகளுக்குக் கொடுத்தல். இப்படி இறைவனுக்காக அறுத்துத் தியாகம் செய்யப்படும் பிராணியை குர்பானிப் பிராணி என்பர். தியாகப் பிராணி என்றும் கூறலாம்.

குமுஸ்:
இதற்கு 'ஐந்தில் ஒரு பாகம்" என்று பொருள். போரில் கிடைத்த செல்வங்களில் நான்கு பாகம் போரில் கலந்து கொண்ட வீரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். மீதமுள்ள ஒரு பாகம் (1ஃ5) இறைத் தூதருக்கு உரிய நிதியாகும். இதை 'குமுஸ்" என்பர். இதனை இறைத்தூதர் சேம நலநிதியாகவும் இன்னும் உரிய இனங்களிலும் செலவிடுவார்கள்.

குறைஷி:
நள்ர் பின் கினானாவின் சந்ததிகளாகிய அரபு வம்சத்தினர். நபி(ஸல்) அவர்களும் இவ்வம்சத்தைச் சேர்ந்தவர்களே.

குனூத்து:
இந்தச் சொல்லுக்கு தொழுகை, உள்ளச்சம், நீண்ட நேரம் நிற்றல், கீழ்ப்படிதல், பிரார்த்தனை என்று பல பொருள்கள் உண்டு. அதிகமாகத் தொழுகையில் ஓதப்படும் ஒரு குறிப்பிட்ட பிரார்த்தனையை இச் சொல் குறிக்கும்.

கூஃபா:
இராக்கிலுள்ள பெரிய நகரம்.

கைபர்:
யூத மதீனாவிலிருந்து ஷாம் நாட்டிற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள பெரிய நகரம். ஹிஜ்ரி 7-(கி.பி. 628)ஆம் ஆண்டில் இறைநம்பிக்கையாளர்களுக்கும், இறைமறுப்பாளர்களுக்கும் இடையே நடந்த போருக்கு 'கைபர்" போர் என்று கூறப்படுகிறது.

கைஸர்:
ரோம, பைஸாந்தியப் பேரரசர்களின் புனைப் பெயர், நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த கைசரின் பெயர் ஹிராக்ளியஸ் (oeraclius கி.பி 610- 641) ஆகும். இவரோடு ரோமப் பேரரசு முற்றுப் பெற்றது.

சமூத்:
கி.மு. இரண்டாயிரத்தில் (.2430) சவூதிய்யாவில் உள்ள 'ஆல் ஹிஜ்ர்" என்னுமிடத்தில் வாழ்ந்த அரபுப் பழங்குடியினர்.

சஃயு:
ஸஃபா, மர்வா மலைக்குன்றுகளுக்கிடையே ஏழுமுறை ஓட்டமும் நடையுமாகச் செல்வது இது ஹஜ்ஜின் கிரியைகளில் ஒன்றாகும்.

சதகா, ஸதகா:
தர்மம்; அறம். அரபி மொழியில் இச்சொல் கடமையான ஸகாத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுவது உண்டு.

சரிஃப்:
மக்காவிலிருந்து பத்து மைல்களுக்கு உட்பட்ட ஒரு பகுதி. இங்குதான் நபிகளாரின் துணைவியார் அன்னை மைமூனா (ரலி) அவர்கள் இறந்தார்கள்.

சஜ்தா (சுஜுத்):
சிரவணக்கம். தொழுகையில் நெற்றி, மூக்கு, இரு உள்ளங்கைகள், இரு முட்டுக் கால்கள், இரு கால்களின் விரல்கள் ஆகிய உறுப்புகள் தரையில் படும்படி செய்யப்படும் சிரவணக்கம். இது, இறைவனுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டியதாகும்.

சஹர் (நேரம்):
இரவின் பிற்பகுதியில் வைகறைக்குச் சற்று முன்னுள்ள, நோன்பிற்காக உணவு உண்ணும் நேரம்.

சலாம்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைச் சந்திக்கும் பொழுது 'அஸ்ஸலாமு அலைக்கும்" (இறைவனின் சாந்தி, அமைதி உங்கள் மீது உண்டாகட்டும்) என்று கூறும் இஸ்லாமிய முகமன். சலாம் சொல்லப்பட்டவர் சலாம் சொன்னவருக்கு 'வ அலைக்கு முஸ் ஸலாம்" (அவ்வாறே உங்கள் மீதும் இறைவன் சாந்தி உண்டாகட்டும்) என்று பதில் சொல்லவேண்டும்.

சீஃபுல் பஹ்ர்:
'கடற்கரை" என்று பொருள். ஹிஜ்ரி - 8 - ஆம் ஆண்டு ரஜப் (கி.பி. 629 நவம்பர்) மாதம் மதீனாவிலிருந்து அன்றைய 5 நாள் தொலை தூரத்தில் இருந்த கடற்கரை ஓரத்தில் சென்று கொண்டிருந்த குறை»களின் வணிகக் குழுவொன்றை மடக்க, 300 பேர் கொண்ட படை அபூ உபைதா பின் ஜர்ராஹ்(ரலி) தலைமையில் சென்றது. இச்சம்பவத்தை 'கடற்கரைப் போர்" என்றும் 'அபூ உபைதா படைப்பிரிவு" என்றும் 'கருவேல இலை படைப்பிரிவு" என்றும் குறிப்பிடுவர்.

சுப்ஹானல்லாஹ்:
'இறைவன் எந்த விதக் குறைபாடும் பலவீனமும் அற்ற தூயோன்" என்பது இதன் பொருளாகும். பெரும்பாலும் வியப்புக்குரிய விஷயங்களைப் பார்க்கும் போதோ கேட்கும் போதோ இப்படிக் கூறப்படும். இறைவனைத் துதிக்க இதைக் கூறுவார்கள்.

சுப்ஹு:
வைகறையில் சூரிய உதயத்திற்கு முன்னுள்ள நேரம். இந்நேரத்தில் நிறைவேற்றப்படும் கடமையான தொழுகைக்கே சுப்ஹுத் தொழுகை என்றும் ஃபஜ்ருத் தொழுகை என்றும் பெயர்.

சுலைமான்:
நபி சுலைமான்(அலை) அவர்கள் (கி.மு. 990-930) நபி தாவூத்(அலை) அவர்களின் மைந்தராவார். இவர் பேரரசராகவும் விளங்கினார். ஜெரூசலத்திலுள்ள புனித இறையில்லமான பைத்துல் மக்திஸை இறைவனின் கட்டளைக்கு ஏற்ப புதுப்பித்தார்கள். ஜின் இனமும் பறவை இனமும் அன்னாருக்கு வசப்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன.

சேர்த்துத் தொழுதல்:
''அரஃபாவில் இருவேளைத் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுதல்"" என்பதும் 'முஸ்தலிஃபாவில் இருவேளைத் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுதல்" என்பதும் ஜம்வு என்று அழைக்கப்படுகின்றது. பயணத்தில் லுஹர், அஸர் தொழுகைகளை சேர்த்துத் தொழலாம். மக்ரிப் இஷா தொழுகைகளையும் சேர்த்துத் தொழலாம். லுஹர், அஸர் ஆகிய தொழுகைகளை லுஹர் நேரத்தில் சேர்த்துத் தொழுதால் ஜம்மதக்தீம் என்றும் அஸர் நேரத்தில் தொழுதால் ஜம்மதஃகீம் என்றும் கூறப்படும். அவ்வாறே இஷாவை மக்ரிப் நேரத்தில் சேர்த்துத் தொழுதால் ஜம்ம தக்தீம் என்றும், இஷா நேரத்தில் சேர்த்துத் தொழுதால் ஜம்மதஃகீர் என்றும் கூறப்படும்.

தஆலா:
'உயர்ந்து விட்டான்" என்று பொருள். பெரும்பாலும் அல்லாஹ்வின் திரு நாமத்துக்குப் பின்னால் இணைத்து (அல்லாஹுத் தஆலா - உயர்ந்தோனாகிய அல்லாஹ் என்று) கூறப்படுகிறது.

தக்பீர்:
'அல்லாஹு அக்பர் - இறைவன் மிகப் பெரியவன்" என்று சொல்லுதல்.

தவாஃப்:
புனித கஅபாவைச் சுற்றி ஏழு முறை வலம் வருவது. ஹஜ்ஜிலும் உம்ராவிலும் இது முக்கிய வழிபாடாகும்.

தயம்மும்:
'உளூ" என்னும் அங்க சுத்தி செய்யத் தண்ணீர் கிடைக்காத சமயங்களிலும் நோயுற்றிருப்பது போன்ற சமயங்களிலும் சுத்தமான மண் உள்ள தரையில் கைகளைப் பதித்து முகம் கைகளில் தடவிக் கொள்வது.

தபூக்:
மதீனாவிற்கு வடக்கில் 7 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள நகரம். ஹிஜ்ரி 9ல் ரஜப் மாதத்தில் நம்பிக்கையாளர்களுக்கும் இறைமறுப்பாளர்களுக்கு மிடையே இங்கு நடைபெற்ற போர் 'தபூக் போர்" எனப்படுகிறது.

தல்பியா:
'லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக்க வல்முல்க, லாஷரீக்க லக்க" எனக் கூறுவது. இதன் பொருள் பின்வருமாறு: இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன். இணையில்லாதவனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன். புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையானவர் எவருமில்லை.

தவ்ராத்:
(தோரா) இறைவன் இறைத்தூதர் மூசா(அலை) அவர்களுக்கு அருளிய வேதம். இது பைபிளின் பழைய ஏற்பாடாகக் கருதப்படுகின்றது.

தஜ்ஜால்:
இறுதி நாள் சமீபிக்கும் பொழுது தோன்றும் பொய்யன்; கண்கட்டு வித்தை செய்பவன். கிறிஸ்தவர்கள் இவனை அன்டி கிறிஸ்து என்பர். இவனை ஈஸா(அலை) அவர்கள் வந்து கொல்வார்கள்.

தஸ்பீஹ்:
'சுப்ஹானல்லாஹ்" (இறைவன் அனைத்துக் குறைபாடுகளிலிருந்தும் தூய்மையானவன்) என்று துதித்தல்.

தஹஜ்ஜுத் (தொழுகை):
சூரியன் மறைந்து, செல்வானமும் மறைந்த பின்னால் தொழப்படும் இஷா - இரவுத் தொழுகைக்குப் பின்பு தூங்கி எழுந்து தொழும் நள்ளிரவுத் தொழுகை.

தராவீஹ்:
'தர்வீஹ்" என்பது இதன் ஒருமையாகும். 'ஓய்வெடுத்தல்" என்பது இதன் பொருள். ரமளான் மாத இரவு நேரத்தில் தொழப்படும் இத்தொழுகையைத் தொழுபவர்கள். இரண்டு ஸலாம்களுக்கிடையே சற்று ஓய்வெடுத்துக் கொள்வார்கள். எனவே, இது 'தராவீஹ்" என அழைக்கப்படுகிறது.

தவ்பா:
செய்த தவற்றிற்காக மனம் வருந்தி, அதை மீண்டும் செய்வதில்லை என்ற உறுதியுடன், இறைவன் மன்னிப்பான் என்ற நம்பிக்கையுடன், தூய்மையான எண்ணத்துடன் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுதல்.

தவாஃபுல் வதா:
கஅபாவை இறுதியாக வலம் வருதல்.

தவாஃபுஸ் ஸியாரத்:
தவாஃப் வலம் வருதல், ஸியாரத் - சந்தித்தல். துல்ஹஜ் மாதம் 10ம் நாள் ஹஜ் புனிதப் பயணிகள் மினாவிலிருந்து திரும்பி வந்து கஅபாவை ஏழுமுறை சுற்றி வலம்வருவது. இது ஹஜ்ஜின் இன்றியமையாக் கடமைகளுள் ஒன்றாகும்.

தஷஹ்ஹுத்:
'சாட்சி சொல்லுதல்" என்று பொருள். தொழுகையின் இரண்டாவது ரக்அத் மற்றும் கடைசி ரக்அத்தில் இரண்டாவது ஸஜ்தாவிற்குப் பின் அமர்ந்து ஓதுகின்றவற்றில் 'அஷ்ஹது" நான் சாட்சி சொல்கிறேன்" என்ற வாசகம் வந்துள்ளதால் இந்த இருப்பிற்கு தஷஹ்ஹுதின் இருப்பு (சாட்சி சொல்லும் இருப்பு) என்றும் இதில் ஓதுவதை 'தஷஹ்ஹுத்" ஓதுவது என்றும் சொல்லப்படுகின்றது. தஷஹ்ஹுத் அஷ்ஹது இரண்டும் ஒரே வேர்ச் சொல்லிலிருந்து வந்தவையாகும்.

தாத்துல் கரத்:
மதீனாவிலிருந்து ஷாம் நாடு செல்லும் வழியில் அன்றைய 2 நாள் பயணத் தொலைவிலமைந்த ஓர் இடத்தின் பெயர். இங்கு ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு ஒட்டகத் திருடர்களுடன் நடைபெற்ற உரிமைப் போராட்டமே தாத்துல் கரத் போர், தூ கரத் போர், அல் ஃகாபா போர் எனும் பெயர்களில் அறியப்படுகிறது.

தாத்துர் ரிகாஉ:
சவூதிய்யாவில் நஜ்த் பகுதியில் உள்ள ஓர் இடம். ஃகத்ஃபான் குலத்தாரான பனூ முஹாரிப், பனூ ஸஅலபா கூட்டத்தாருடன் ஹிஜ்ரி 7-ஆம் ஆண்டு நடந்த கைபர் போருக்குப் பிறகு இங்கு நடை பெற்ற சண்டையே தாத்துர் ரிகாஉ போர்; முஹாரிபு கஸ்ஃபா போர்; பனூ ஸஅலபா போர்; நஜ்துப் போர் என்ற பெயர்களில் அறியப்படுகிறது.

தாலூத்:
கி.மு. 10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களின் தலைவர். நபி மூசா(அலை) அவர்களுக்கு சுமார் 350 ஆண்டுகளுக்குப் பின் வாழ்ந்த அவர் அரசராகவும் இருந்தார்.

தாயிஃப்:
மக்காவிற்குத் தென்கிழக்கே 65 மைல் தொலைவில் அமைந்துள்ள நகரம்.

தாத்துஸ் ஸலாஸில்:
மதீனா நகரிலிருந்து அன்றைய 10 நாள் பயணத் தொலைவிலிருந்த மணற் பாங்கான ஓர் இடம். அங்கு வாழ்ந்த அரபுக் குலத்தார் மதீனாவின் மீது படையெடுக்க முற்பட்டனர். அவர்களுடன் இங்கு ஹிஜ்ரி 7 அல்லது 8-(கி. பி. 630) ஆம் ஆண்டு நடை பெற்ற சண்டையே 'தாத்துஸ்ஸலாவில் போர்" எனப்படுகிறது. இதற்கு 'லக்ம் போர்" 'ஜுதாம் போர்" என்ற பெயர்களும் உண்டு.

தாவூத் (அலை):
நபி தாவூத்(அலை) அவர்கள் (கி. மு. 1010 - 970) நபி யஅகூப் (அலை) அவர்களின் வழித் தோன்றலாவார்கள். இவர்களுக்கு 'ஸபூர்" என்னும் வேதம் இறைவனால் அருளப்பட்டது. பாலஸ்தீன சர்வாதிகாரி ஜாலூத்தை வீழ்த்தி சாதனை படைத்தார்கள்.

திம்மீ:
இஸ்லாமிய அரசின் கீழ்வாழும் பிற மதத்தவர்.

திர்ஹம்:
இது 3.62 கிராம் அளவு கொண்ட அக்கால வெள்ளி நாணயம்.

தீனார்:
4.374 கிராம் எடை கொண்ட தங்க நாணயம். 50 வாற் கோதுமை தானியங்களுக்குச் சமமான எடை.

துஆ:
பிரார்த்தனை வேண்டுதல்.

துல்கலஸா:
(துல்குலஸா) யமன் நாட்டு கஸ்அம் மற்றும் பஜீலா குலத்தார் எழுப்பிய ஆலயம். இது தாயிஃப் - நஜ்ரான் இடையே கஸ்அம் என்னுமிடத்தில் இருந்தது. போட்டி கஅபாவாக நிர்மாணிக்கப்பட்ட இந்த ஆலயம் 'யமன் நாட்டு கஅபா" என்று அழைக்கப்பட்டு வந்தது.

துல் ஹுலைஃபா:
மக்கா - மதீனா இடையே உள்ள ஓர் இடம். மதீனா மற்றும் அதன் திசையிலிருந்து ஹஜ்ஜுக்குச் செல்வோர் இங்கு தான் இஹ்ராம் உடை அணிவர்.

துல்கஅதா:
ஹிஜ்ரி ஆண்டின் பதினோராம் மாதம்.

துல் ஹஜ்:
ஹிஜ்ரி ஆண்டின் பன்னிரண்டாம் மாதம்.

தூர்:
மலை என்று பொருள். நபி மூசா(அலை) அவர்கள் இறைவனுடன் உரையாடிய இடம் தூர் சீனா - சினாய் மலை ஆகும்.

தூ கரத்:
மதீனாவிலிருந்து ஷாம் நாடு செல்லும் வழியில் அன்றைய 2 நாள் பயணத் தொலைவிலமைந்த ஓர் இடத்தின் பெயர். இங்கு ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு ஒட்டகத் திருடர்களுடன் நடைபெற்ற உரிமைப் போராட்டமே தாத்துல் கரத் போர், தூ கரத் போர், அல் ஃகாபா போர் எனும் பெயர்களில் அறியப்படுகிறது.

நபி:
மக்களுக்கு இறைச் செய்திகளை எடுத்துரைத்து, அவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக மக்களிலிருந்தே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்.

நயவஞ்சகர்கள்:
(முனாஃபிக்கூன்) நெஞ்சத்தில் வஞ்சத்தை (இறைமறுப்பை) வைத்துக் கொண்டு முஸ்லிமைப் போல நடிப்பவர்கள்.

நஜ்த்:
இதற்கு மேட்டு நிலம், உள்நாடு, மேட்டுச் சமவெளி என்று சொற் பொருள்கள் கொள்வர். அன்று திஹாமாவிலிருந்து இராக் நிலப்பரப்பு வரையுள்ள மேடான பகுதிகளுக்கு நஜ்த் என்ற பெயர் இருந்தது. பின்னர் நஜ்த் என்பது ரியாத், உனைஸா, புரைதா உள்ளிட்ட அரேபிய நகரங்களைக் கொண்ட சவூதிய்யாவின் மத்திய மாகாணத்திற்குப் பெயராயிற்று.

நஜாஷீ:
இது அபிசீனிய நாட்டு மன்னர்களின் புனைப் பெயராகும். நபிகளாரின் காலத்தில் வாழ்ந்த நஜாஷீயின் இயற் பெயர்: அஸ்ஹமா, அன்னார் நபிகளாரை விசுவாசித்ததுடன் மக்கா நகர முஸ்லிம்களுக்கு இக்கட்டான காலத்தில் ஆதரவும் நல்கினார். ஹிஜ்ரி 8 அல்லது 9-ஆம் ஆண்டு இறந்தார்.

நஃபில்:
கடமையல்லாத, உபரியான வணக்க வழிபாடு.

நற்கூலி, நன்மை:
வணக்க வழிபாடுகள், தான தர்மங்கள் மற்றும் நல்ல செயல்களுக்குக் கிடைக்கும் பலனை, புண்ணியத்தைக் குறிக்கும் பொருளில் இந்தச் சொற்களைத் தமிழ் முஸ்லிம்கள் வழங்கி வருகின்றனர்.

நிய்யத்:
மனதில் எண்ணம் கொள்ளுதல், தொழுகை நிய்யத்: தொழப்போகிறேன் என எண்ணுதல். நோன்பு நிய்யத்: நோன்பு நோற்பதாக எண்ணுதல்.

நுஸுக்:
இறைவணக்கம், அல்லாஹ்விற்காகச் சமர்ப்பிக்கப்படக்கூடியது. அறுக்கப்படக்கூடிய பலிப்பிராணி (குர்பானி) என இதற்குப் பல பொருள்களுண்டு!

நூஹ் (அலை):
(நோவா) ஆதித் தூதர் ஆதம் (அலை) அவர்களுக்குப் பின் வந்த ஓர் இறைத்தூதர். 950 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அன்னாரின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தை வரலாறு பேசும்.

நைல்:
ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள உலகிலேயே நீளமான நதி. இறைத்தூதர் மூசா(அலை) அவர்களுக்கு எதிராகச் செயல்பட்ட அரசன் ஃபிர்அவ்ன் இந்த நதியில் தான் இறைவனால் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான்.

பத்ரு(ப் போர்):
மதீனாவிற்குத் தெற்கே 150 கி. மீ. தொலைவில் 'பத்ரு" என்னும் இடம் அமைந்துள்ளது. இவ்விடத்தில் ஹிஜ்ரி 2ல் இறைநம்பிக்கையாளர்களுக்கும், இறைமறுப்பாளர்களுக்குமிடையே நடந்த போர் பத்ருப் போராகும். இஸ்லாமிய வரலாற்றில் இதுவே முதல் புனிதப் போராகும்.

பள்ளி:
பள்ளிவாசல்; தொழுகை நடத்தப்படும் இறையில்லம்; 'பள்ளி" என தமிழ் முஸ்லிம்களின் வழக்கில் அழைக்கப்படுகின்றது.

ஃபதக்:
கைபர் நகரத்துக்கு அருகிலுள்ள ஓர் இடம்.

ஃபர்ஸக்:
சுமார் 8 கிலோ மீட்டர் கொண்ட தூரம்.

ஃபரக்:
சுமார் 7.425 கி. கிராம் எடையுள்ள அரபுகளின் அளவை.

ஃபஜ்ரு(த் தொழுகை):
வைகறையில் சூரிய உதயத்திற்கு முன்னர் தொழப்படும் தொழுகை.

பனூ இஸ்ராயீல்:
இறைத்தூதர் யஅகூப் (அலை) அவர்களுக்கு இஸ்ராயீல் என்ற பெயருண்டு. அவர்களின் சந்ததிகள் பனூ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் பிள்ளைகள் - இஸ்ரவேலர்கள்) என அழைக்கப்படுகின்றனர்.

பஸரா:
இராக்கிலுள்ள முக்கியமான நகரம். இரண்டாவது கலீஃபா உமர் பின் கத்தாப்(ரலி) அவர்களின் காலத்தில் கி. பி. 636ல் இந்நகரம் நிறுவப்பட்டது.

பஹ்ரைன்:
சவூதிக்குக் கிழக்கே பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள அரேபிய நாடு. இதன் தலைநகர் மனாமா.

பர்தா:
அந்நிய ஆடவர்கள் பார்க்காத வகையில் பெண்கள் தங்கள் முகம், கைகள், பாதங்கள் தவிர உடல் முழுவதையும் துணியால் மறைத்துக் கொள்ளுதல். இதனை 'ஹிஜாப்" என்றும் கூறுவர்.
அந்நிய ஆண்கள் பார்க்காத வகையில் பெண்கள் தமது உடல் முழுவதையும் மறைத்துக் கொள்ளுதல். இதனை ஹிஜாப் என்றும் கூறுவர். உடலை மறைக்கும் விஷயத்தில் பின்வரும் நிபந்தனைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.
1. முழு உடலையும் மறைக்கும் விதமாக ஆடைகள் அமைய வேண்டும்.
2. ஆடைகள் பிறரை வசீகரித்து இழுக்கும் விதத்தில் கவர்ச்சி கரமானவையாக இருக்கலாகாது.
3. உடல் அவயவங்களைக் காட்டும் வகையில் மெல்லியதாக இல்லாமல் கனமானவையாக இருக்க வேண்டும்.
4. உடலின் கனபரிமாணங்களைக் காட்டும் விதத்தில் இறுக்கமானதாக இல்லாமல் தொய்வாக இருக்க வேண்டும்.
5. நறுமணம் தடவப்பட்டதாக இருக்கக் கூடாது.
6. ஆண்களின் ஆடைகள் போல இருக்கக் கூடாது.
7. அந்நிய மதப் பெண்கள் அணியும் ஆடை போன்றும் இருக்கக் கூடாது. உதாரணம் பொட்டு, பூ போன்றவைகளாகும்.
8. மமதை கர்வத்தை ஏற்படுத்தும் விதமாகப் பெருமையான ஆடைகளை அணியாலகாது.

பரக்கத்:
அருள் வளம்; வளர்ச்சி; மேம்பாடு; அபிவிருத்தி என்று பொருள் கொள்ளலாம். கல்வி, செல்வம், ஆற்றல், ஆயுள் ஆகிய அனைத்துத் துறைகளிலும் இறைவன் அருளும் மேம்பாட்டை இச்சொல் குறிக்கிறது.

ஃபய்உ:
எதிரி நாட்டுடன் போர் நடக்காமலேயே அந்நாடு வெற்றி கொள்ளப்படும் பட்சத்தில் கிடைக்கப் பெறும் செல்வம். இதில் போராளிகளுக்குப் பங்கு கிடையாது. ஆட்சியாளரின் பொறுப்பில் இது சிறப்பு நிதியாக இருந்து வரும்.

பனூ அன்மார்:
(அன்மார்) வடக்கு அரேபியக்குலங்களில் ஒன்று. நிஸார் பின் முஅத் என்பவரின் மக்களில் ஒருவரான 'அன்மார்" என்பவரின் வழித் தோன்றல்களே பனூ அன்மார் ஆவர். தாத்துர் ரிகாஉப் போரில் இவர்களும் கலந்து கொண்டனர். ஆகவே அப்போருக்கு 'அன்மார் போர்" என்ற பெயரும் உண்டு.

பனூ முஸ்தலிக்:
பனூ குஸாஆ குலத்து ஜுதைமா பின் சஅத் என்பாரின் புனை பெயரே முஸ்தலிக். இவருடைய வழித்தோன்றல்களே பனூ முஸ்தலிக் குலத்தார் ஆவர். இவர்களின் தாக்குதலை முறியடிக்க மதீனா அருகிலுள்ள முரைசீஉ எனும் நீர் நிலையருகே (ஹிஜ்ரி 5 அல்லது 6-ல்) நடை பெற்ற எதிர்த் தாக்குதலே பனூ முஸ்தலிக் போர், முரைசீஉ போர் எனும் பெயர்களில் அறியப்படுகிறது.

பாத்திஹா சூரா:
திருக்குர்ஆன் ஓதுவதைத் தொடங்கி வைக்கும் திறப்பாக அமைந்துள்ள முதல் அத்தியாயம்;. எல்லாத் தொழுகைகளிலும் இது ஓதப்படுகின்றது.

பாங்கு:
தொழுகைக்காக விடுக்கப்படும் அழைப்பு.

ஃபிர் அவ்ன்:
அமாலிக்கா அரசப்பரம்பரையில் வந்த 11 எகிப்து நாட்டு அரசர்களின் பட்டப் பெயர். இறைத்தூதர் மூசா(அலை) அவர்கள் காலத்தில் சர்வாதிகாரியாக இருந்த ஃபிர்அவ்னின் (சயஅளநள ஐஐ) பெயர் முஸ்அப் பின் உமைர் ஆகும். இவன் கி.மு. 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தான். இறைவனுக்கும் இறைத்தூதர் மூசா(அலை) அவர்களுக்கும் எதிராகச் செயல்பட்ட இவன் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான். இவனுடைய உடல் பாதுகாக்கப்பட்டு, இன்றும் எகிப்து மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஃபிர்தவ்ஸ்:
தோட்டம், பூங்கா, சோலை ஆகிய பொருள்கள் உண்டு. சொர்க்கத்திலுள்ள தோட்டம் ஒன்றுக்கு ஃபிர்தவ்ஸ் என்று பெயர். 'அல்ஃபிர்தவ்ஸுல் அஃலா" என்றால் உயர்ந்த சொர்க்கம் என்று பொருள்.

பித்அத்:
மார்க்கத்தின் பெயரால் மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்படுகின்ற, அல்லாஹ்வும் இறைத்தூதரும் அங்கீகரிக்காத நூதன கருத்துக்கள், கொள்கைகள், சடங்குகள் மற்றும் செயல்பாடுகள்.

ஃபித்ரா:
நோன்புப் பெருநாளாகிய ஈதுல் ஃபித்ர் பெருநாளுக்காக (நோன்புப் பெருநாள்) ஏழை எளியோர்க்கு குடும்பத்திலுள்ள பெரியவர்கள், சிறியவர்கள் அனைவர் சார்பாகவும் நோன்பாளியால் அளிக்கப்படும் கட்டாய தர்மம்.

பின்து:
மகள் (ஃபாத்திமா பின்த்து முஹம்மத் - முஹம்மதின் மகள் ஃபாத்திமா)

ஃபித்னா:
இதற்குப் பல்வேறு பொருள்கள் உண்டு. வழிகெடுத்தல், இறைநிராகரிப்பு, போர், குழப்பம், துன்பம் என்னும் பொருளில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழப்பம் மேற்கண்ட பொருள்களில் எந்த வடிவில் வேண்டுமானாலும் வரலாம்; பெரும்பாலும் முஸ்லிம்களிடையே உட்பூசல், தமக்கிடையே ஒருவரோடொருவர் போர்புரிதல் ஆகிய வடிவங்களில்தான் இந்தக் குழப்பம் தலைதூக்கியது.

பிஸ்மில்லாஹ்:
அல்லாஹ்வின் பெயரால்................

புஆஸ்:
மதீனாவிலிருந்து 2 மைல் தொலைவிலுள்ள ஓர் இடம். ஹிஜ்ரத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன் மதீனா வாசிகளான அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரிடையே இங்கு நடைபெற்ற (உள் நாட்டுச் சண்டையே 'புஆஸ் போர்" எனப்படுகிறது.

புராக்:
கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த (மின்னல் வேக) பறக்கும் வாகனம். இது பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கும் அபார ஆற்றல் கொண்டது. இதில்தான் நபிகளார் மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டார்கள்.

புவைரா:
மதீனாவுக்கும் தைமாவுக்கும் இடையே உள்ள ஓர் இடம்.

பைத்துல் மஅமூர்:
மக்காவிலுள்ள இறையில்லம் கஅபாவிற்கு நேராகவானில் அமைந்துள்ள இறையில்லமாகும். 'ளுராஹ்" என்பது இப்பள்ளிவாசலின் பெயராகும். இதன் உண்மை நிலையை இறைவனே அறிவான்.

பைத்துல் மக்திஸ்:
ஐவேளைத் தொழுகைகள் நடத்தப்படும் பள்ளிவாசல், அரபு மொழியில் 'மஸ்ஜித்" - 'அல் மஸ்ஜித்" (தொழும் இடம்) என அழைக்கப்படுகிறது. 'அல் அக்ஸா" பள்ளிவாசல் பாலஸ்தீனத்தில் ஜெரூசலத்திலுள்ள பள்ளிவாசல் ஆகும். 'பைத்து மக்திஸ்" (தூய்மையின் இல்லம்) 'அல் பைத்துல் முகத்தஸ்" (தூய்மையான இல்லம்) என்றும் அழைப்பர். இப்பள்ளிவாசல் இருக்கும் திசை நோக்கித் தான் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் இறைவனைத் தொழுது வந்தார்கள். வேதக்காரரர்கள் இதை 'ஹைக்கல்' என்பர். இது மூன்றாவது புனிதப் பள்ளி ஆகும்.

பைஅத்துர் ரிள்வான்:
ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு நபி(ஸல்) அவர்களும் 1500 முஸ்லிம்களும் உம்ராப் பயணம் மேற்கொண்ட போது மக்கா வாசிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் முஸ்லிம்களைத் தாக்கப் போகும் செய்தி நபிகளாரை எட்டிய போது நபித்தோழர்கள் ''மீன் வாங்க மாட்டோம்; உயிரைத் தத்தம் செய்வோம்"" என உறுதி மொழி வழங்கினர். ஒரு கரு வேலமரத்தினடியில் நடை பெற்ற இச்சம்பவத்தைத் 'பை அத்துர் ரிள்வான்" (இறை திருப்தி பெற்ற உறுதி மொழி) என்று அழைப்பர்.

பைத்துல் ஹராம்:
கண்ணியமிக்க இறையில்லம்; புனித கஅபாவைச் சுற்றிலுமுள்ள பள்ளிவாசல். இதற்கு 'மஸ்ஜிதுல் ஹராம் - கண்ணியமிக்க பள்ளிவாசல்" என்றும் பெயருண்டு.

பைளா:
நபி(ஸல்) அவர்களது வெள்ளைக் கோவேறுக் கழுதையின் பெயர்.

பைஸாந்தியர்:
அன்றைய ரோம் நாட்டவர்.

மகாமு இப்ராஹீம்:
'இப்ராஹீம் நின்ற இடம்" என்று பொருள். நபி இப்ராஹீம்(அலை) அவர்களும் அன்னாரின் புதல்வர் இஸ்மாயீல்(அலை) அவர்களும் கஅபாவின் அடித்தளத்தை உயர்த்திக்கட்டி அதைப் புதுப்பித்த போது இப்ராஹீம்(அலை) அவர்கள் எந்த இடத்தில் நின்று கஅபாவைக் கட்டினார்களோ அந்த இடத்தின் பெயர்.

மஸ்ஜித்:
ஐவேளைத் தொழுகைகள் நடத்தப்படும் பள்ளிவாசல், அரபு மொழியில் ''மஸ்ஜித்"" (தொழும் இடம்) என அழைக்கப்படுகின்றது.

மய்யித்:
இறந்த உடல்

மலக்கு:
வானவர். இதன் பன்மை 'மலாயிக்கா" (மலக்குகள்) என்பதாகும். இவர்கள் இறைவனின் பேரரசில் அவனது ஊழியர்கள் ஆவர். அவன் இட்ட கட்டளைகளை அப்படியே செயல்படுத்துபவர்கள் ஆவர். இவர்கள் இறைக்கட்டளைக்கு மாறு செய்யமாட்டார்கள்.

மகாமுன் மஹ்மூத்:
புகழப்படும் அந்தஸ்து, மறுமையில், நீதி விசாரணைக்கு முன்பு மக்கள் மறுமையின் வேதனையால் துன்புறும் பொழுது அதிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு, அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும் மிகப்பெரிய அந்தஸ்தை நபி(ஸல்) அவர்களுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்குவான். இதனால் நபி(ஸல்) அவர்கள் அனைவராலும் புகழப்படுவார்கள். இந்த மிகப்பெரிய அந்தஸ்து மகாமுன் மஹ்மூத் எனப்படுகிறது.

மர்யம்:
அன்னை மேரி. இம்ரான் - ஹன்னா தம்பதியரின் மகளான இவர், ஆண் துணையின்றி அற்புதமான முறையில் இயேசு(ஈசா)வைப் பெற்றெடுத்த கன்னித் தாய் ஆவார். இறுதி வரை மணமுடித்துக் கொள்ளாத அன்னை மரியாளை இறைத்தூதர் ஸகரிய்யா(அலை) அவர்களே வளர்த்தார்கள்.

மஹ்ஷர்:
ஒன்று கூட்டப்படும் இடம். காலம் உலகில் தோன்றிய எல்லா மனிதர்களையும் உலகம் அழிந்த பின் உயிரூட்டப்பட்டு ஒன்று கூட்டப்படும் நாளையே 'யவ்முல் ஹஷ்ர்" என்றும் 'மஹ்ஷர்" என்றும் கூறுவர்.

மஸீஹ்:
(அ) இதற்குத் தடவுகின்றவர், தடவப்பட்டவர், பயணிப்பவர் முதலிய பொருள்கள் உண்டு. இறை உதவியால் தமது திருக்கரங்கொண்டு நோயாளிகளைத் தடவி நிவாரணப்படுத்தியமையால் இறைத்தூதர் ஈசா(அலை) அவர்களை 'மஸீஹ் - தடவுகின்றவர்" என்பர். கிறிஸ்தவர்களை 'மஸுஹிய்யூன்" என்பர்.

மக்ரிபு(த் தொழுகை):
சூரியன் மறையும் மேற்குத் திசை. சூரியன் மறைந்த பின் தொழப்படும் தொழுகை 'மக்ரிபுத் தொழுகை" என்று சொல்லப்படும்.

மஜூஸி:
'மின்ஜ் கூஷ்" தோற்றுவித்த கொள்கையை ஏற்றவர்கள் 'மஜூஸிகள்" என்றழைக்கப்படுகின்றனர். ஒளியும் இருளுமே அனைத்துச் செயல்களுக்கும் அடிப்படை. நல்லவை ஒளியிலிருந்தும் தீயவை இருளிலிருந்தும் உருவாகின்றன என்பது இவர்களின் முக்கியக் கொள்கை. 'மின்ஜ் கூஷ்" என்ற வார்த்தை அரபியாக்கப்பட்டு 'மஜூஸ்" என்றானது.

மஸ்ஜிதுல் அக்ஸா:
ஐவேளைத் தொழுகைகள் நடத்தப்படும் பள்ளிவாசல், அரபு மொழியில் 'மஸ்ஜித்" - 'அல் மஸ்ஜித்" (தொழும் இடம்) என அழைக்கப்படுகிறது. 'அல் அக்ஸா" பள்ளிவாசல் பாலஸ்தீனத்தில் ஜெரூசலத்திலுள்ள பள்ளிவாசல் ஆகும். 'பைத்து மக்திஸ்" (தூய்மையின் இல்லம்) 'அல் பைத்துல் முகத்தஸ்" (தூய்மையான இல்லம்) என்றும் அழைப்பர். இப்பள்ளிவாசல் இருக்கும் திசை நோக்கித் தான் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் இறைவனைத் தொழுது வந்தார்கள். வேதக்காரரர்கள் இதை 'ஹைக்கல்' என்பர். இது மூன்றாவது புனிதப் பள்ளி ஆகும்.

மஸ்ஜிதுந் நபவி:
மதீனாவிலுள்ள புனித இறையில்லம். இதை நபி(ஸல்) அவர்கள் கட்டியதால் இது மஸ்ஜிதுந் நபவி (நபிகளாரின் பள்ளிவாசல்) என அழைக்கப் படுகின்றது. இது உலகின் இரண்டாவது மிகப் பெரும் பள்ளிவாசலாகும்.

மஸ்ஜிதுல் ஹராம்:
புனித மக்காவிலுள்ள இறையில்லம்; இதனுள்ளிருக்கும் மையப் பகுதியில் தான் 'கஅபா" என்னும் புராதன இறையில்லம் உள்ளது.

மஸ்ஹு:
தடவுதல் என்று பொருள். உளூச் செய்யும்போது நனைந்த கைகளால் தலையைத் தடவுவதற்கும், அடி, காயம் போன்ற காரணங்களால் கழுவ முடியாத உறுப்புகளை நீர் தொட்டுத் துடைப்பதற்கும் மஸ்ஹு என்பர்.

மஹ்ர்:
மணம் புரிந்து கொள்வதற்காக மணமகன் மணமகளுக்குக் கட்டாயம் செலுத்த வேண்டிய விவாகக் கட்டணம்.

மிஅராஜ்:
(இதற்கு ஏறும் கருவி - ஏணி என்பது சொற்பொருள்.) இறைவனின் கட்டளைப்படி நபி(ஸல்) மேற்கொண்ட விண்ணுலகப் பயணம். இப்பயணம் நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) செல்வதற்கு ஓராண்டிற்கு முன்பு ரஜப் மாதம் 27ம் நாளில் (கி. பி.621ல்) நடந்தது. இப்பயணத்தின் போது இறைவானால் முஸ்லிம்களுக்கு ஐவேளைத் தொழுகை கடமையாக்கப்பட்டது.

மிம்பர்:
உரைமேடை. இமாம் அல்லது தலைவர் ஏறி நின்று சொற்பொழிவாற்ற பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்படும் இடத்திற்கு அருகில் இது அமைக்கப்பட்டிருக்கும்.

மினா:
அரஃபாவுக்குச் செல்லும் வழியில் மக்காவிலிருந்து 5 மைல் தொலைவில் அரஃபாவிலிருந்து ஏறக்குறைய 10 மைல் தூரத்தில் அமைந்துள்ள ஓர் இடம்.

மினாவுடைய இரவு:
'ஹஜ் உடைய காலங்களில் 'மினா" என்ற இடத்தில் தங்க வேண்டிய துல்ஹஜ் 11,12,13 ஆகிய மூன்று நாட்கள்.

மீக்காயீல்:
முக்கியமான வானவர்களில் ஒருவர். மழை மற்றும் பயிர்களுக்குரிய பொறுப்புக் கொடுக்கப்பட்டவர். சில நேரங்களில் இறைச் செய்தியை இறைத் தூதர்களுக்குத் தெரிவிக்கும் பணியையும் செய்துள்ளார்.

முஃமின்:
ஓரிறைவன், வானவர்கள், இறைத் தூதர்கள், இறுதித் தூதர் முஹம்மது(ஸல்), இறைவனால் அருளப்பட்ட முந்தைய வேதங்கள், இறுதி வேதம் திருக்குர் ஆன், மறுமை நாள் மற்றும் தலைவிதி ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்ட இறை நம்பிக்கையாளர்.

முரைசீஉ:
பனூ குஸாஆ குலத்து ஜுதைமா பின் சஅத் என்பாரின் புனை பெயரே முஸ்தலிக். இவருடைய வழித்தோன்றல்களே பனூ முஸ்தலிக் குலத்தார் ஆவர். இவர்களின் தாக்குதலை முறியடிக்க மதீனா அருகிலுள்ள முரைசீஉ எனும் நீர் நிலையருகே (ஹிஜ்ரி 5 அல்லது 6-ல்) நடை பெற்ற எதிர்த் தாக்குதலே பனூ முஸ்தலிக் போர், முரைசீஉ போர் எனும் பெயர்களில் அறியப்படுகிறது.

முஸ்தலிஃபா:
அரஃபாவுக்கும் மினாவுக்கும் இடையில் உள்ள திறந்த வெளி. ஹாஜிகள் அரஃபாவிலிருந்து திரும்பிய பின்னர் இங்கு தங்குவர்; இதுவும் ஹஜ்ஜின் கிரியைகளில் ஒன்றாகும். இதை 'மஷ்அருல் ஹராம்' (புனிதச் சின்னம்) என்று அழைப்பர்.

முஸைலிமா:
நபி(ஸல்) அவர்களின் அந்திமக் காலத்தில் (கி. பி. 633) யமாமா பகுதியில் வாழ்ந்த ஒரு மகா பொய்யனின் பெயர். இவன் தன்னை இறைத்தூதரென வாதிட்டு வந்தான். முதலாம் கலீஃபா அபூபக்ர்(ரலி) ஆட்சிக் காலத்தில் (ஹிஜ்ரி: 14-ல்) வடக்கு யமாமாவிலுள்ள அக்ரபா (ஹதீக்கத்துல் மவ்த்) எனும் களத்தில் நடந்த யமாமா போரில் நபித்தோழர் வஹ்ஷீ(ரலி) கொல்லப்பட்டான்.

முஹாஜிர்:
நாடு துறந்தவர். இறைமார்க்கத்தைப் பின்பற்றிட தடைகள் ஏற்படும் போது தாம் வசிக்குமிடத்தை, தாயகத்தைத் துறந்து வேற்றிடம் செல்பவர். இவ்வாறு மக்காவைத் துறந்து மதீனா நகரத்திற்குச் சென்ற நபித்தோழர்கள் 'முஹாஜிர்கள்" என அழைக்கப்படுகின்றனர்.

முத்து:
மதீனா நகரில் நடைமுறையில் இருந்து வந்த சுமார் 796 கிராம், 68 மில்லிகிராம் எடை கொண்ட ஓர் அளவு.

முஸ்லிம்:
இறைநம்பிக்கை கொண்டு இறைச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிபவர்; இறை வழிபாடுகளைச் சரிவரச் செய்து வருபவர்.

முஹம்மது (ஸல்):
இறைவனின் இறுதித் தூதரான நபி(ஸல்) அவர்களுடைய பெயர். புகழப்பட்டவர் என்பது இதன் பொருள். இவர்கள் கி. பி. 570 ஆகஸ்டு 20 -ல் மக்காவில் பிறந்தார்கள்.

முஸல்லா:
தொழுகைத்திடல், தொழுகை விரிப்பு

முனாஃபிக்:
நயவஞ்சகன்; வெளித்தோற்றத்தில் தன்னை இறைநம்பிக்கையாளனாகக் காட்டிக் கொண்டு உள்ளே இறைநிராகரிப்பை கொள்கையாகக் கொண்டிருப்பவன்.

முஹர்ரம்:
ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம்.

மூஸா (மோசஸ்) (அலை):
இறைத்தூதர்களில் ஒருவர். இவர்கள் கி. மு.14ம் நூற்றாண்டில் எகிப்தில் பிறந்தார்கள். (Moses மோசோ, கி.மு. 1520- 1400) இவர்களுக்கு இறைவனால் தவ்ராத் (தோரா) என்னும் பழைய ஏற்பாடு (old testament) அருளப்பட்டது.

மூத்தா:
ஜோர்தான் நாட்டில் 'அல்கரத்" நகருக்குத் தெற்கே அமைந்துள்ள ஓர் இடம். இது அன்றைய ஷாம் நாட்டின் 'அல் பல்கா" நகர் அருகில் அமைந்திருந்தது. இங்கு ஹிஜ்ரி 8-ஆம் ஆண்டு ரோம பைஸாந்தியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடை பெற்ற சண்டையே 'மூத்தா போர்" எனப்படுகிறது.

யாக்கோபு (அலை):
யாக்கோபு (யஅகூப்) - கி. மு. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்கள் நபி இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரும் இறைத்தூதர்களில் ஒருவரும் ஆவார். அன்னாருக்கு 12 ஆண் பிள்ளைகள் இருந்தனர். இந்த பன்னிருவரின் வழித்தோன்றல்களே இஸ்ரவேல் சமுதாயத்தினர் ஆவர். யஅகூப்(அலை) அவர்களின் மற்றொரு பெயரே இஸ்ராயீல். இதனால்தான் இஸ்ரவேலர்களை பனூ இஸ்ராயீல் - இஸ்ராயீலின் மக்கள் என்பர்.

யஃஜூஜ், மஃஜூஜ்:
வடகிழக்கு ஆசியாவில் வாழ்ந்த ஒரு சமூகத்தார். இவர்கள் வளமிக்க நாடுகளைக் கொள்ளையடித்து வாழ்ந்து வந்தனர். மறுமை நாளின் சமீபத்தில் இவர்கள் வெளிப்படுவர். வேறு சிலரின் கருத்துப்படி கருங்கடலின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த சித்தியன் (ளலவாயைளெ) சமூகத்தினர் என்றும் கூறப்பட்டுள்ளது. மாஸ்லே உள்ளிட்ட ரஷ்யப் பகுதிகளிலும் வாழ்ந்துள்ளனர்.

யமன்:
சவூதிக்கும், ஓமனுக்கும், ஏடான் வளைகுடாவுக்கும், செங்கடலுக்கும் மத்தியில் அமைந்துள்ள அரேபிய தீபகற்பத்தின் தென் மேற்குப் பகுதியிலுள்ள அரபு நாடு.

யமாமா:
மக்கா நகரிலிருந்து அன்றைய 4 நாள் பயணத் தொலைவில் அமைந்த ஓர் இடம். அன்று யமன் நகரமாக இருந்த யமாமா இன்று சவூதிய்யாவில் ஒரு பாலை இடைச் சோலை ஆகும். தன்னை நபியென வாதிட்ட மகா பொய்யன் முஸைலிமாவுடன் கலீஃபா அபூபக்ர்(ரலி) ஆட்சியில் இங்கு நடை பெற்ற போரே 'யமாமா போர்" எனப்படுகிறது.

யர்மூக்:
ஜோர்தானிலுள்ள ஒரு கால்வாயின் பெயர். ஹிஜ்ரி 15-ஆம் ஆண்டில் (கி.பி. 636) இரண்டாம் கலீஃபா உமர்(ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் ரோம பைஸாந்தியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையே 'யர்மூக் போர்" எனப்படுகிறது.

யஹ்யா (அலை):
இறைத்தூதர் யஹ்யா(அலை) அவர்கள்; (யோவான்) நபி ஸகரிய்யா(அலை) அவர்களின் மகனாவார். இவர்கள் இஸ்ரவேலர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

யஸ்ரிப்:
'குழப்பம்" என்பது சொற்பொருள். நபி(ஸல்) அவர்கள் குடியேறிய மதீனா நகரத்தின் முன்னாள் பெயரே இது. பின்னாளில் 'மதீனத்துந் நபீ - நபிகளாரின் நகரம்" எனப் பெயர் மாற்றப் பெற்றது.

யஹீத்:
யூதர்கள் (இஸ்ரவேலர்கள்)

யூசுஃப் (அலை):
இறைத்தூதர் யஅகூப்(அலை) அவர்களின் மகனான இவர்களும் ஓர் இறைத் தூதராவார்கள். இவர்கள் கி. மு. 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்தார்கள். எகிப்திய அரசில் ஆற்றல் மிக்க நிதியமைச்சராக இவர்கள் இருந்திருக்கிறார்கள்.

யவ்முன் னஹ்ர்:
பலியிடும் நாள், துல்ஹஜ் 10ஆம் நாள் பலிப்பிராணியைப் பலியிடுவதால் அந்நாள் 'யவ்முனஹ்ர்" என்று சொல்லப்படுகிறது. இதே நாளில் தான் உலக முஸ்லிம்கள் அனைவரும் இறைவனுக்காகப் பிராணியைப் பலியிட்டு இறைவனுக்காக எதையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் உணர்வைத் தெரிவிக்கும் நாள் (ஈதுல் அள்ஹா) கொண்டாடப்படுகிறது.

யூனுஸ் (அலை):
நபி யூனுஸ் பின் மத்தா(அலை) அவர்கள் (யோனா - துடீசூஹழ) கி. மு. 6-ம் நூற்றாண்டில் இராக்கிலுள்ள 'நீனவா" பகுதி மக்களுக்கு இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள்.

யூஷஉ பின் நூன்:
யூஷஉ பின் நூன்(அலை) அவர்கள் இறைத்தூதர் மூசா(அலை) அவர்கள் இறந்து 40 வருடங்களுக்குப் பின் நபியாக்கப்பட்டார்கள்.

ரக்அத்து:
தொழுகையில் ஒரு முறை குனிதல் மற்றும் இரண்டு முறை ஸஜ்தா (தரையில் நெற்றியைப் பதித்து வணங்கும்) நிலைகளை உள்ளடக்கிய பகுதி.

ரப்பு:
நிர்வகிப்பவன். வளர்ப்பவன் என்று பொருள்படும். உலகில் அனைவரையும் நிர்வகிக்கக் கூடிய இறைவனான அல்லாஹ்வுக்கு 'ரப்பு" என்று சொல்லப்படும்.

ரமளான்:
ஹிஜ்ரி ஆண்டின் ஒன்பதாம் மாதம். இம்மாதத்தில் தான் திருக்குர் ஆன் அருளப்பட்டது. நோன்பு வைப்பது கடமையாக்கப்பட்டது. இம்மாதத்தில் முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு நோற்பர்.

ரலி:
'ரலியல்லாஹு அன்ஹு" 'இறைவன் அவர்களைக் குறித்துத் திருப்தி கொள்வானாக!" என்பதன் சுருக்கம். இது பெரும்பாலும் நபித்தோழர்களுக்காகச் செய்யப்படும் பிரார்த்தனையாகும்.

ரஜப்:
ஹிஜ்ரி ஆண்டின் ஏழாம் மாதம்.

ரஹ்:
'ரஹ்மத்துல்லாஹி அலைஹி" - இவர்கள் மீது இறைவன் கருணை புரிவானாக!" என்பதன் சுருக்கம். இறந்து போன இஸ்லாமியப் பெரியவர்களுக்காக இப்படிப் பிரார்த்திப்பது வழக்கம்.

ரஜீஉ:
மக்காவிற்கும் தாயிஃபிற்கும் இடையே உள்ள ஓர் இடம். ஹுதைல் என்னும் அரபுப் பூர்வீகக் குடிகள் இங்கு வசித்து வந்தனர். ஹிஜ்ரி 3-ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற சண்டையே 'ரஜீஉ போர்" எனப்படுகிறது.

ரமல்:
ஹஜ்ஜிலும் உம்ராவிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓடுவது.

ராம ஹுர்முஸ்:
மேற்கு ஈரானில் கோஸஸ்தான் மாகாணத்திலுள்ள தொன்மை வாய்ந்த ஒரு பிரபல நகரம். இது 'இராக்குல் அரபு" பகுதிக்கு அருகிலுள்ளது. நபித்தோழர் சல்மான் அல் பார்சீ(ரலி) அவர்கள் இந்நகரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ருக்னுல் யமானி:
கஅபாவின் வலதுபக்க மூலை.

ருகூஉ:
தொழுகையில் இரு கைகளையும் இரு முழங்கால்கள் மீது வைத்துக் குனிந்து நிற்கும் நிலை.

லப்பைக் பி உம்ரத்தின் வ ஹஜ்ஜத்தின்:
ஹஜ் உம்ராவை நிறைவேற்றுவதற்காக உன் கட்டளைக்கு அடிபணிந்து வந்து விட்டேன்!"" என்பது இதன் பொருளாகும். இது உம்ராவும் ஹஜ்ஜும் செய்வதற்காக மனத்தில் உறுதி கொண்டவண்ணம் வாயால் மொழிவதாகும். இது கடமையான ஒன்று.

லா இலாஹ இல்லல்லாஹ்:
'வணக்கத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் உரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை!"

லைலத்துல் கத்ரு:
'கண்ணியத்துக்குரிய இரவு. இந்த இரவில் தான் திருக்குர்ஆன், நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. ரமளான் மாதத்தில், கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் இந்த இரவு இருப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

லுஹ்ர் (தொழுகை):
நண்பகலுக்குப் பின் பிற்பகலின் முற்பகுதியில் உள்ள நேரம் லுஹர் ஆகும். அந்நேரத்தில் தொழப்படும் தொழுகை இது இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையான ஐவேளைத் தொழுகைகளில் இதுவும் ஒன்றாகும்.

லுக்மான் (அல் ஹகீம்):
மத்திய கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த ஒரு தத்துவப் பேரறிவாளர். செங்கடலோரத்தில் 'அய்லா" எனும் பகுதியில் வசித்து வந்த அன்னார், ஓரிறைக் கொள்கையை அழுத்தமாகப் போதிப்பவராகத் திகழ்ந்தார்கள். அன்னாரின் தத்துவங்கள் சிலவற்றைத் திருக்குர் ஆன் எடுத்துரைப்பதே அன்னாரின் சிறப்புக்கு போதிய சான்றாகும்.

லூத்(அலை):
லோத். இறைத்தூதர்களில் ஒருவர். நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் சகோதரர் மகனான அன்னார் ஜோர்தானிலுள்ள 'ஸத்தூம்" என்னும் பகுதிக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள். சிலை வணக்கத்தையும் ஓரினச் சேர்க்கையையும் எதிர்த்துத் தீவிரப் பிரசாரம் செய்தார்கள்.

ளஃன்:
பெரிய அரபுக் குலமான 'அஸ்த்" குலத்தில் ஒரு கிளையே 'தவ்ஸ்" என்னும் குலம். இக்குலத்தார் வசித்து வந்த பகுதியிலிருந்த ஒரு மலையின் பெயரே 'ளஃன்" ஆகும். நபித்தோழர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் 'தவ்ஸ்" குலத்தார் ஆவார்கள்.

ளுஹா:
சூரிய உதயத்திற்கும் நண்பகலுக்கும் இடைப்பட்ட நேரம். இந்நேரத்தில் நபிகளார் தொழுத எட்டு ரக்அத் தொழுகைக்கு 'ளுஹா தொழுகை" எனப்படுகிறது. இது கடமையல்லாத தொழுகையாகும்.

வலீமா:
திருமணத்திற்குப் பின் மணாளன் வழங்க வேண்டிய மணவிருந்து. இது நபி வழியாகும்.

வக்ஃப்:
ஒருவர் தனது பொருளைத் தன்னிடம் வைத்துக் கொண்டு (pசiஎயவந ழக கயஅடைல வசரளவ) அல்லது இறைவனிடம் (பொதுவான அறக்கொடையாக pரடிடiஉ வசரளவ) ஒப்படைத்து விட்டு, அதன் பயன்பாட்டைத் தர்மம் செய்வது.

வஸக்கு:
160 கி. கிராமுக்குச் சமமான அளவு.

வஹீ:
வானவர் மூலம் இறைத்தூதர்களுக்கு இறைவனால் வழங்கப்படும் இறைச் செய்தி.

வாதில் குரா:
ஹிஜாஸ் பிரதேசத்தில் மதீனாவுக்கும் அல் உலாவுக்கும் இடையே உள்ள ஒரு பள்ளத்தாக்கு. ஹிஜ்ர் வாசிகளும் சமூத் கூட்டத்தாரும் வாழ்ந்த வரலாற்றுப் பதிவு பெற்ற பகுதியாகும்.

வானவர்கள்:
(மலக்குகள்) மனித இனம், ஜின் இனம் அல்லாத வேறோர் இனத்தினர். ஒளியால் படைக்கப் பட்ட இவர்கள் ஆண்பாலினருமல்லர். பெண்பாலினருமல்லர். இறைவனின் உத்தரவுகளைச் செய்து முடிப்பதும் இறைவனை வணங்குவதும் துதிப்பதுமே இவர்களின் பணிகளாகும். இவர்களுக்கு ஊண், உறக்கம், உறவு, திருமணம், ஆசா பாசம், சந்ததி கிடையா. வானகமே இவர்களின் வசிப்பிடமாகும்.

வித்ர்:
ஒற்றை, ஒற்றையானவன் என்று பொருள். இஷா தொழுகைக்குப் பின்பு அல்லது தஹஜ்ஜுத் இரவுத் தொழுகைக்குப் பின்பு தொழப்படும் ஒற்றைப்படையான ரக்அத் கொண்ட தொழுகைக்கு 'வித்ருத் தொழுகை" என்பர்.

ஜமல் (போர்):
ஹிஜ்ரி 36-ம் ஆண்டு பஸரா (கி. பி. 656) (இராக்) நுழைவு வாயிலில் அலீ(ரலி) அவர்களின் ஆதரவாளர்களுக்கும், ஆயிஷா(ரலி) அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த உள் நாட்டுப் போர்.

ஜனாஸா (மய்யித்):
இறந்த உடல், பிரேதப் பெட்டி, பிரேதப் பெட்டியில் கிடத்தப் பட்டிருக்கும் சடலம் என்ற பொருள்கள் உண்டு. இறந்தவருக்குப் பிரார்த்தனை செய்யும் முகமாகத் தொழுவிக்கப்படும் தொழுகைக்கு 'ஜனாஸாத் தொழுகை" என்றும், கண்ணெதிரே பிரேதம் இல்லாமல் தொழுவிக்கப்படும் தொழுகைக்கு 'ஃகாயிப் ஜனாஸா தொழுகை" என்றும் கூறுவர்.

ஜம்ரா:
ஹரம் எல்லைக்குள் 'மினா" எனுமித்தில் இருக்கின்ற ஷைத்தான் மீது கல்லெறியும் இடத்தைக் குறிக்கின்றது. இத்தகைய ஜம்ராக்கள் மொத்தம் மூன்று உள்ளன.(அ) ஜம்ராத்துல் ஊலா: முதல் ஜம்ரா (ஆ) ஜம்ரத்துல் உஸ்தா: நடு ஜம்ரா (இ) ஜம்ரத்துல் அகபா : கடைசி ஜம்ரா

ஜமாஅத்:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட அமைப்புக் கூட்டம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து நடத்தும் தொழுகை 'ஜமா அத்" தொழுகை எனப்படுகிறது.

ஜாமிஉ:
தொகுப்பு; திரட்டு 'அல் ஜாமில்உஸ் ஸஹீஹ் அல் முஸ்னத் அல் முக்தஸர் மின் உமூரி ரசூலில்லாஹி வசுனனிஹி வ அய்யாமிஹி" என்பதன் துவக்கம். இதுவே ஸஹீஹுல் புகாரி என்னும் நூலுக்கு நூலின் ஆசிரியர் சூட்டிய முழுப் பெயராகும். இதன் பொருளாவது; ஆதாரப் பூர்வமான, அறிவிப்பாளர் தொடர் முறிவுறாத, நிபந்தனைக்குட்பட்ட அறிவிப்புகள் மட்டுமே இடம்பெற்ற நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், வாழ்க்கைச் சரிதை, குண நலன்கள், அங்க லட்சணங்கள் ஆகிய அனைத்தும் உட்பொதிவாய் அமைந்த சன் மார்க்கத்தின் சகல துறைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு.

ஜின்:
மனிதனும் வானவரும் அல்லாத ஓர் இனம். இந்த இனம் தீப்பிழம்பால் படைக்கப் பட்டதாகும். கண்ணுக்குத் தெரியாத வாயுவாகவும் மனிதன் உள்பட பல்வேறு உயிரினங்களின் தோற்றத்திலும் ஜின்கள் உள்ளன. மனிதனுக்கு முன்பே இந்த இனம் படைக்கப்பட்டுவிட்டது. நம்மைப் போலவே ஜின்களிலும் ஆண், பெண், சந்ததிப் பெருக்கம், மார்க்கச் சட்டம், நன்மை - தீமை எல்லாம் உண்டு. இப்லீஸ் இந்த இனத்தில் பிறந்தவன் ஆவான்.

ஜிஹாத்:
இறைதிருப்தியைப் பெறுகின்ற ஒரே நோக்கத்துடன் தர்மத்தைக் காப்பதற்காக அதர்மத்தை எதிர்த்து இறைவரம்புகளுக்குட்பட்டு போர்புரிதல்; சொல்லாலும் செயலாலும் உண்மை முஸ்லிமாக வாழ முயலுதல்.


ஜிப்ரில்:
இறைவனின் தரப்பிலிருந்து இறைத்தூதர்களுக்குச் செய்தி கொண்டு வந்த வானவர். இவரே வானவர்களின் தலைவர் ஆவார்.

ஜிஸ்யா:
இஸ்லாமிய அரசின் கீழ் அதன் பாதுகாப்பில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிமல்லாத பிரஜைகளுக்கு முஸ்லிம்களுக்கிருந்த அனைத்து உரிமைகளும் அளிக்கப்பட்டன. இந்தப் பிரஜைகளுக்குப் போரில் கலந்து கொள்வதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்த விதிவிலக்கால் அவர்கள் அமைதியான வாழ்க்கை வாழவும், வளரவும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. மேற்சொன்ன நியாயமான காரணங்களுக்காக மிகக் குறைந்த விகிதத்தில் 'ஜிஸ்யா" எனும் காப்பு வரி அவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது. இந்த வரியைப் பெண்களும் ஏழைகளும் செலுத்த வேண்டியதில்லை. இதை இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்த முஸ்லிமல்லாத அரசுகள் கூட இஸ்லாமியப் பேரரசுக்குக் கப்பமாகக் கட்டி வந்தன. பெருமானார் காலத்தில் இது வருடத்திற்கு 10 திர்ஹம்களாக இருந்தது. மேலும் முஸ்லிமல்லாத ஒருவர் இஸ்லாமியப் படையில் சேர்ந்து பணியாற்றும் பொழுது அவருக்கும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

ஜும்ஆ நாள்:
வெள்ளிக் கிழமை, இந்நாளில் முஸ்லிம்கள் சூரியன் உச்சி சாய்ந்த பின்பு பள்ளிவாசலில் ஒன்று கூடி ஜும்ஆ தொழுகையை நடத்துவதால் இந்நாள் ஜும்ஆ நாள் என்றழைக்கப்படுகிறது.

ஜுஹைனா:
ஜுஹைனா பின் ஸுஃபர் என்பாரின் வழித் தோன்றல்கள், அறியாமைக் காலத்தில் செல்வாக்குடன் வாழ்ந்த அரபுக் குலத்தார்.

ஷவ்வால்:
ஹிஜ்ரீ இஸ்லாமிய ஆண்டின் 10 ஆவது மாதம்; ரமளான் மாதத்திற்கு அடுத்த மாதம்.

ஷஅபான்:
ஹிஜ்ரி ஆண்டின் எட்டாம் மாதம்.

ஷஹீத்:
உயிர்த் தியாகி இறைவாக்கை (சத்தியத்தை) மேலோங்கச் செய்வதற்காக அதர்மத்திற்கு எதிரான அறப்போரில் உயிர்த் தியாகம் செய்தவர்.

ஷாம்:
அக்காலத்தில் சிரியா, ஃபலஸ்தீன், ஜோர்தான், லெபனான் முதலான நாடுகள் சேர்ந்த ஐக்கிய நாட்டின் பெயராகும். இன்று அதன் பெரும்பகுதி சிரியாவில் அமைந்துள்ளது.

ஷுஐப் (அலை):
நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் வந்த ஓர் இறைத் தூதர். அன்னார் வட மேற்கு சவூதிய்யாவிலுள்ள மலைப்பிரதேசமான 'மத்யன்" பகுதிக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள். ஓரிறைக் கோட்பாட்டையும் வணிக நேர்மையையும் வலியுறுத்தி, தம் மக்களிடையே தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்கள்.

ஷைத்தான்:
சாத்தான்; மனித இனத்தை - கண்ணுக்குத் தெரியாமல் இருந்து கொண்டே - வழி கெடுக்கும் ஜின் இனத்தைச் சேர்ந்தவன்; இவனைக் கிறிஸ்தவர்கள் அசுத்த ஆவி என்றழைக்கின்றனர்.

ஸகாத்:
ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட அளவு செல்வம் ஒருவரிடம் தேங்கியிருந்தால் அவர் கட்டாயக் கடமையாக இறைவனுக்காக அதிலிருந்து 2.5 சதவீதம் இஸ்லாமியப் பொதுநிதி வரியாக குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள, தேவையுள்ள எட்டு பிரிவினருக்கு வழங்க வேண்டும்.

ஸஃபா, மர்வா:
மக்காவில் கஅபாவுக்கு அருகே அமைந்துள்ள சிறிய மலைக் குன்றுகள்.

ஸம்ஸம்:
மக்காவிலுள்ள புனிதக் கிணறு.

ஸமூது:
கி. மு. இரண்டாயிரத்தில் (2430) சவூதி அரேபியாவில் உள்ள 'அல் ஹிஜ்ர்" என்னும் இடத்தில் வாழ்ந்த அரபுப் பழங்குடியினர். இவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக அனுப்பட்ட இறைத்தூதர் ஸாலிஹ்(அலை) அவர்கள் ஆவார்கள்.

ஸல்:
'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' (இறைவனது கருணையும் அமைதியும் அவர்கள் மீது உண்டாகட்டும்) என்பதன் சுருக்கம். இது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பெயருடன் இணைத்துக் கூறப்படும். அவர்களுக்காக நாம் அவ்வாறு பிரார்த்திக்கிறோம்.

ஸஜ்தா, ஸுஜுது:
தொழுகையில் இரு பாதங்கள், இரு முழங்கால்கள், இரு கைகள், நெற்றி ஆகிய ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு தலை தாழ்த்தி வணங்கும் நிலை.

ஸஹ்ர்:
1. வைகறை - விடிகாலை. 2. நோன்பு நோற்பதற்காக வைகறைக்கு முன்னால் உண்ணப்படும் உணவு அவ்வாறு உண்ணுதல்.

ஸஹாபா:
நபித்தோழர்கள்; நபி(ஸல்) அவர்களோடு நட்புக் கொண்டு அல்லது அவர்களைப் பார்த்து, இஸ்லாத்தை ஏற்று, முஸ்லிம்களாகவே வாழ்ந்தவர்கள்.

ஸாவு:
மதீனாவில் நடைமுறையில் இருந்து வந்த 3 கிலோ 149 கிராம் 280 மி. கி. எடை கொண்ட அளவு.

ஸவ்ர்:
மக்காவிற்கு அருகிலுள்ள ஒரு மலையின் பெயர். இதிலுள்ள குகையொன்றில்தான் நபி(ஸல்) அவர்களும், தோழர் அபூபக்ர்(ரலி) அவர்களும் ஹிஜ்ரத் பயணத்தின் போது ஒளிந்திருந்தார்கள்.

ஸகரிய்யா (அலை):
ஜகரியா கி. மு. முதலாம் நுற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் இஸ்ரவேலர்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள். நபி தாவூத் (அலை) அவர்களின் வழித் தோன்றலான இவர்களே அன்னை மர்யமை வளர்த்தார்கள். நபி யஹ்யா(அலை) அவர்கள் அன்னாரின் புதல்வராவார்.

ஸன்ஆ:
யமன் நாட்டின் தலைநகர்.

ஸாலிஹ் (அலை):
கி. மு. 2000-ல் (2430) சவூதிய்யாவில் உள்ள 'அல்ஹிஜ்ர்" என்னும் இடத்தில் வாழ்ந்த இறைத்தூதர். ஆடம்பர வாழ்வில் மூழ்கி, சிலை வணக்கத்தில் மாய்ந்து போய்க்கொண்டிருந்த 'சமூத்" கூட்டத்தாரைச் சீர்திருத்தப் பாடுபட்டார்கள்.

ஸிஃப்பீன் (போர்):
கி. பி. 657ல் ஹஜ்ரி 37 ஆம் ஆண்டு சிரியா நாட்டின் هப்ரடீஸ் நதிக்கரையில் 'ஸிஃப்பீன்" எனும் இடத்தில் அலீ பின் அபீதாலிப்(ரலி) அவர்களின் ஆதரவாளர்களுக்கும் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களின் ஆதரவாளர்களுக்குமிடையே நடைபெற்ற உள் நாட்டுப் போர். கார்ஜியாக்களின் கிளர்ச்சி இதற்குப் பிறகு தான் துவங்கிற்று.

ஸுன்ஹு:
மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள ஒரு கிராமத்தின் பெயர். மதீனாவின் மேட்டுப்பகுதியில் இது இருந்ததால் இதனை 'ஆலியா - மேட்டுப்பட்டி" என்றும் அழைப்பர்

ஸுர்மா:
குறிப்பிட்ட கல்லிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை அஞ்சனம். (கண் மை)

ஸுன்னா:
நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம்.

ஸுப்ஹானல்லாஹ்:
''இறைவன் எந்த விதக் குறைபாடு பலவீனமும் அற்ற தூயோன்"" என்பது இதன் பொருள். பெரும்பாலும் வியப்புக்குரிய விஷயங்களைப் பார்க்கும் போதோ, கேட்கும்போதோ இப்படிக் கூறப்படும்; மனிதத் தவறுகளையும் குறைபாடுகளையும் நினைவுகூரும் போதும் இப்படிக் கூற வேண்டும்.

ஹதீஸ்:
நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவையும் அவற்றை அறிவிப்பதும் 'ஹதீஸ்" எனப்படும்.

ஹர்ரா:
மதீனாவுக்கு வெளியே கருங்கற்கள் நிறைந்த பகுதி. உமைய்யாக்களின் இரண்டாம் கலீஃபா யதுக்கும் மதீனா முஸ்லிம்களுக்கும் இடையே ஹிஜ்ரி 63-ல் இங்கு நடைபெற்ற சண்டையே 'அல் ஹர்ரா போர்" எனப்படுகிறது.

ஹரம்:
அபயமளிக்கும் புனித பூமி. புனித மக்காவும் புனித மதீனாவும் அபயம் அளிக்கும் புனித பூமிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு போர் புரியக் கூடாது. எந்த உயிரினத்திற்கும் இம்மியும் இடைஞ்சல் தரக்கூடாது.

ஹராம்:
திருக்குர்ஆனாலும், நபி(ஸல்) அவர்களாலும் சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டவை. சட்டப் பூர்வமாக அனுமதிக்கப்பட்டவற்றுக்கு ஹலால் என்று சொல்லப்படும்.

ஹஜ்:
புனித மக்காவிலுள்ள முதல் இறையில்லத்தை (கஅபாவை) தரிசித்து நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வழிபாடு. இது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.

ஹலால்:
அனுமதிக்கப்பட்டது என்று பொருள். புனித ஹஜ்ஜின் போது இஹ்ராம் உடையைக் களைந்து இயல்பான நிலைக்குத் திரும்புவதற்கும் 'ஹலால்" எனும் சொல் ஆளப்படுவதுண்டு.

ஹவ்ளுல் கவ்ஸர்:
மறுமையில் நபி(ஸல்) அவர்களுக்கு இறைவன் கொடுக்கிற தண்ணீர் தடாகம்.

ஹஜ்ஜதுல் வதா:
நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முந்தைய ஹிஜ்ரி 10-ம் ஆண்டில் முதலாவதாகவும் இறுதியாகவும் செய்த ஹஜ் ஹஜ்ஜதுல் வதா - விடை பெற்றுச் செல்லும் ஹஜ் என்றழைக்கப்படுகின்றது.

ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப்:
(ஹிஜ்ரி: 95, கி. பி. 714) தாயிஃப் வாசியான இவர் அப்துல் மலிக் பின் மர்வானின் படைத்தளபதியாகத் திகழ்ந்தார். இலக்கிய வாதியான இவர்(மக்கா, மதீனா, தாயிஃப், இராக் உள்ளிட்ட) ஹிஜாஸ் மாநிலத்தின் ஆளுநர் பதவி வகித்தார். இவரது ஆட்சியில் கொடுங்கோண்மை கோலோச்சியது.

ஹஜருல் அஸ்வத்:
கஅபாவின் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ள கருப்புக் கல்; ஹஜ்ஜின் போது இதை முத்தமிடல் நபி வழியாகும்.

ஹஜூன்:
மக்காவின் பொது அடக்கத்தலத்திற்கு அருகிலுள்ள ஓர் இடம். மக்கா வெற்றியின் போது இங்குதான் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமியச் சேனையின் கொடியை நட்டு வைக்க உத்தரவிட்டார்கள்.

ஹாரூன் (அலை):
ஆரோன்; மூசா(அலை) அவர்களின் சகோதரரான இவர்கள் மூசா(அலை) அவர்களுக்குத் துணையாக ஏக காலத்தில் இறைத்தூதராகப் பணியாற்றினார்கள்.

ஹிரா:
மக்காவிற்கு அருகிலுள்ள மலை. பெருமானார் நபியாக அனுப்பப்படுவதற்கு முன்பே இறைவனை இங்கு வணங்கி வந்தார்கள். அவர்களின் 40வது வயதில் கி. பி. 610 ஆகஸ்டு 10ல் திருக்குர் ஆன் முதல் திருவசனம் இங்குதான் அருளப்பட்டது.

ஹிஜ்ரத்:
இறைமார்க்கத்தைப் பின்பற்றிடத் தடைகள் ஏற்படும் பொழுது தாம் வசிக்குமிடத்தை, தாயகத்தைத் துறந்து வேற்றிடம் செல்லுதல். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கி. பி. 622-ல் மக்காவைத் துறந்து மதீனா சென்ற நிகழ்ச்சி இஸ்லாமியச் சொல் வழக்கில் ஹிஜ்ரத் எனப்படுகிறது.

ஹிஜ்ரி:
மேற்கூறப்பட்ட ஹிஜ்ரத் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டே 'ஹிஜ்ரி" எனும் இஸ்லாமிய ஆண்டு துவங்குகிறது.

ஹிஜாஸ்:
சவூதி அரேபியாவில் செங்கடலுக்கு அருகே வடக்கே அகபா வளைகுடாவிலிருந்து தெற்கே 'அசீர்" வரை பரந்து கிடக்கும் பகுதி. இந்த நிலப்பகுதியில் தான் மக்கா, தாயிஃப், தபூக் நகரங்கள் உள்ளன. புனித மக்கா இதன் தலைநகராகும்.

ஹிம்ஸ்:
சிரியா நாட்டில் டமாஸ்கஸுக்கும் ஹமாத்திற்கும் இடையில் உள்ள ஒரு நகரம். இதனை ஹும்ஸ் என்றும் அழைப்பர்.

ஹுதைபிய்யா:
இது மக்காவிலிருந்து சிறிது தொலைவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும். ஹிஜ்ரி 6ம் ஆண்டில் நபி(ஸல்) அவர்களும் மக்காவாசிகளும் இங்கு செய்து கொண்ட ஒப்பந்தம் 'ஹுதைபிய்யா" ஒப்பந்தம் எனப்படுகின்றது.

ஹுனைன் (போர்):
மக்காவிலிருந்து 3 மைல் தொலைவில் உள்ள 'ஹீனைன்" என்ற இடத்தில் ஹிஜ்ரி 8ஆம் ஆண்டு நடந்த போர்.

ஹூத் (அலை):
கி.மு 2000-ல் வாழ்ந்த 'ஆத்" சமூகத்தின் இறைத்தூதர்.
Previous Post Next Post