قال الإمام أبو بكر بن خزيمة رحمه الله في «صحيحه» (جـ ١ ص ٨٢): نَا أَبُو عَمَّارٍ، نَا الفَضْلُ بْنُ مُوسَى، عَنْ يَزِيدَ بْنِ زِيَادٍ هُوَ ابْنُ أَبِي الجَعْدِ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ طَارِقٍ المُحَارِبِيِّ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ ﷺ مَرَّ فِي سُوقِ ذِي المَجَازِ وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ وَهُوَ يَقُولُ: «يَا أَيُّهَا النَّاسُ قُولُوا: لَا إِلَهَ إِلَّا اللهُ تُفْلِحُوا» وَرَجُلٌ يَتْبَعُهُ يَرْمِيهِ بِالحِجَارَةِ قَدْ أَدْمَى كَعْبَيْهِ وَعُرْقُوبَيْهِ وَهُوَ يَقُولُ: يَا أَيُّهَا النَّاسُ، لَا تُطِيعُوهُ؛ فَإِنَّهُ كَذَّابٌ. فَقُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: غُلَامُ بَنِي عَبْدِالمُطَّلِبِ، فَقُلْتُ: مَنْ هَذَا الَّذِي يَتْبَعُهُ يَرْمِيهِ بِالحِجَارَةِ؟ قَالُوا: هَذَا عَبْدُ العُزَّى أَبُو لَهَبٍ.
هذا حديث صحيح.
இமாம் அபூபக்கர் பின் குஜைமா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தமது 'ஸஹீஹ்' நூலில் (பாகம் 1, பக்கம் 82) பின்வருமாறு கூறுகின்றார்கள்:
தாரிக் அல்-முஹாரிபீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 'துல் மஜாஸ்' சந்தையைக் கடந்து செல்வதைக் கண்டேன். அவர்கள் ஒரு சிவப்பு நிற ஆடையை அணிந்திருந்தார்கள். அவர்கள், 'மக்களே! லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்லுங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!' என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரு மனிதன் அவர்களைப் பின்தொடர்ந்து, அவர்கள் மீது கற்களை எறிந்து கொண்டிருந்தான். இதனால் அவர்களின் கணுக்கால்களிலும் குதிங்கால்களிலும் இரத்தம் வழிந்தது. அவன், 'மக்களே! இவருக்குக் கீழ்ப்படியாதீர்கள்; நிச்சயமாக இவர் ஒரு பொய் சொல்பவர்!' என்று கூறிக்கொண்டிருந்தான்.
நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இவர் பனூ அப்தில் முத்தலிப் குலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர்' என்று கூறினார்கள். பிறகு நான், 'கற்களை எறிந்தவாறு இவரைப் பின்தொடர்ந்து செல்பவன் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இவன் அப்துல் உஸ்ஸா எனும் அபூ லஹப்' என்று கூறினார்கள்."
(இந்த ஹதீஸ் ஸஹீஹ் தரத்தில் பதிவாகி உள்ளது )
சிந்தனைத் துளிகள் :
நபி (ஸல்) அவர்களின் சகிப்புத்தன்மை:
இஸ்லாமிய அழைப்புப் பணியை எத்திவைக்கும் போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடுமையான உடலளவிலான மற்றும் மனதளவிலான துன்புறுத்தல்களைச் சந்தித்தபோதிலும், எள்ளளவும் சோர்ந்து போகாமல் சகிப்புத்தன்மையுடன் பொறுமையைக் கடைப்பிடித்தார்கள்.
சிரமங்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவம்:
சத்தியக் கொள்கையைப் பரப்பும் வழியில் எத்தனை எதிர்ப்புகளும் அவதூறுகளும் வந்தாலும், அல்லாஹ்வின் பாதையில் பொறுமைகாத்து பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் சிறந்த முன்மாதிரியாகும்.
எதிரிகளின் அறியாமையும் பிடிவாதமும்:
சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அபூ லஹப் போன்றவர்களே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு எதிராகக் கல்லை எறிந்து அவதூறு பரப்பியபோதிலும், நபி (ஸல்) அவர்கள் தங்கள் பணியில் உறுதியாக இருந்தார்கள்.
வெற்றியின் மூலதனம் 'தவ்ஹீத்':
அனைத்துச் சோதனைகளுக்கும் மத்தியிலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்களிடம் கொண்டு சென்ற முதன்மையான செய்தி — 'லாயிலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்ற ஓரிறைக் கொள்கையே மனிதகுலத்தின் வெற்றிக்கு வழிகோலும் என்பதாகும்.
( அல்லாஹ் மிக அறிந்தவன் )