عَنْ عُتْبَةَ بْنِ عَبْدٍ السُّلَمِيِّ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: "إِنَّ رَبِّي وَعَدَنِي أَنْ يُدْخِلَ مِنْ أُمَّتِي الْجَنَّةَ سَبْعِينَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ، ثُمَّ يُتْبِعُ كُلَّ أَلْفٍ بِسَبْعِينَ أَلْفًا، ثُمَّ يَحْثِي بِكَفَّيْهِ ثَلَاثَ حَثَيَاتٍ". فَكَبَّرَ عُمَرُ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "إِنَّ السَّبْعِينَ أَلْفًا الْأَوَّلَ يُشَفِّعُهُمُ اللَّه فِي آبَائِهِمْ وَأُمَّهَاتِهِمْ وَعَشَائِرِهِمْ، وَأَرْجُو أَنْ يَجْعَلَ أُمَّتِي أَدْنَى الْحَفَنَاتِ الْأَوَاخِرِ".
உத்பா இப்னு அப்த் அஸ்ஸலமீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக! என் இரட்சகன் என் சமூகத்தில் எழுபதாயிரம நபர்களை எந்த விசாரணையும் இன்றி சுவனத்தில் நுழைவிப்பதாக எனக்கு வாக்குறுதி கொடுத்துள்ளான். பிறகு அவன் (அந்த எழுபதாயிரம் நபர்களில்) ஒவ்வொரு ஆயிரத்துடனும் எழுபதாயிரம் நபர்களைத் தொடரச் செய்வான் (அனுப்பிவைப்பான்). பிறகு அவன் தன் இரு கரங்களால் மூன்று தடவை (மனிதர்களை) அள்ளி (சுவனத்தில்) போடுவான்."
அப்போது உமர் (ரலி) அவர்கள் (மகிழ்ச்சியால்) 'தக்பீர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக, அந்த முதலாம் எழுபதாயிரம் நபர்களுக்கும், அல்லாஹ் அவர்களின் தந்தையர்கள், அவர்களின் தாயார்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களின் விஷயத்தில் பரிந்துரை செய்யும் (ஷஃபாஅத்) பாக்கியத்தை வழங்குவான்.
மேலும், என் உம்மத்தினரே அந்த இறுதி அள்ளுதல்களில் (அல்லாஹ்வின் கருணையால் அள்ளப்படுபவர்களில்) பெரும்பகுதியாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்."
📖 ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 7247
( ஸஹீஹ் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் )
பேரறிஞர் இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (ரஹ்) அவர்களின் விரிவுரை :
"قَوْلُهُ: 'يُشَفِّعُهُمُ اللَّهُ فِي آبَائِهِمْ وَأُمَّهَاتِهِمْ وَعَشَائِرِهِمْ' فِيهِ دَلِيلٌ وَاضِحٌ عَلَى أَنَّ هَؤُلَاءِ السَّبْعِينَ أَلْفًا الَّذِينَ يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ، لَيْسَتْ هَذِهِ الْفَضِيلَةُ مَقْصُورَةً عَلَيْهِمْ فَقَطْ أَوْ أَنَّ نَفْعَهُمْ لَا يَتَعَدَّى إِلَى غَيْرِهِمْ. بَلْ إِنَّ اللَّهَ تَعَالَى يُكْرِمُهُمْ بِأَنْ يَجْعَلَهُمْ شُفَعَاءَ لِأَهْلِ بَيْتِهِمْ وَقَرَابَتِهِمْ، فَيَعُودُ بَرَكَةُ صَلَاحِهِمْ وَتَقْوَاهُمْ عَلَى مَنْ حَوْلَهُمْ إِعْلَاءً لِمَنْزِلَتِهِمْ. وَفِي حَدِيثِ عُتْبَةَ هَذَا زِيَادَةٌ جَلِيلَةٌ عَلَى مَا فِي الصَّحِيحَيْنِ مِنْ حَدِيثِ ابْنِ عَبَّاسٍ، حَيْثُ فُسِّرَتْ فِيهِ بَعْضُ النِّعَمِ الزَّائِدَةِ لِهَذِهِ الأُمَّةِ الْمَرْحُومَةِ، وَخُصُوصًا فِي قَوْلِهِ 'ثُمَّ يُتْبِعُ كُلَّ أَلْفٍ بِسَبْعِينَ أَلْفًا' وَفِي ذَلِكَ مُعْجِزَةٌ ظَاهِرَةٌ وَبِشَارَةٌ عَظِيمَةٌ لِلْمُسْلِمِينَ."
"அல்லாஹ் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களின் விஷயத்தில் அவர்களின் பரிந்துரையை ஏற்பான்" என்ற நபியவர்களின் கூற்று, எந்தவித விசாரணையுமின்றி சுவனத்தில் நுழையும் அந்த எழுபதாயிரம் நபர்களின் சிறப்பானது, அவர்களோடு மட்டும் சுருங்கிவிடுவதில்லை என்பதற்கும், அவர்களின் நன்மைகள் மற்றவர்களுக்குப் பயன்படாமல் போகாது என்பதற்கும் தெளிவான சான்றாகும்.
மாறாக, அல்லாஹ் அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக, அவர்களை அவர்களின் குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் பரிந்துரை செய்பவர்களாக (ஷஃபாஅத் செய்பவர்களாக) ஆக்குகிறான்.
இதன் மூலம், அவர்களின் மார்க்கப் பற்று, நற்செயல்கள் மற்றும் தக்வாவின் (இறையச்சத்தின்) பரக்கத் (அருள்வளம்) அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் சென்றடைகிறது; இது சுவனத்தில் அவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதற்காக அல்லாஹ் செய்யும் கண்ணியமாகும்.
மேலும், உத்பா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸானது, புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய நூல்களில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக வரும் ஹதீஸை விட கூடுதல் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. ஏனெனில், இந்த முஹம்மதிய சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் அருட்கொடைகள் இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, "ஒவ்வொரு ஆயிரத்துடனும் மேலும் எழுபதாயிரத்தைத் தொடரச் செய்வான்" என்ற வரிகள், முஸ்லிம்களுக்குக் கிடைத்துள்ள ஒரு மாபெரும் நற்செய்தியாகவும், நபியவர்களின் தெளிவான அற்புதமாகவும் (முஃஜிஸா) விளங்குகிறது.
ஆதார நூல் : ஃபத்ஹுல் பாரி
யா அல்லாஹ்! எவ்வித விசாரணையும் இன்றி சுவனம் நுழையும் அந்தப் பாக்கியசாலிகளின் கூட்டத்தில் நம்மையும், நம் பெற்றோர்களையும், நம் குடும்பத்தாரையும் சேர்த்துக் அருள் புரிவாயாக! ஆமீன்!
- Abdullah Publications