بسم الله الرحمن الرحیم
40. இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் அளித்த அருட்கொடையை நீங்கள் எண்ணிப்பாருங்கள். மேலும், நீங்கள் என்(னுடன் செய்துகொண்ட) ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள். அவ்வாறாயின், நான் உங்கள் (உடன் செய்த) ஒப்பந்தத்தை நிறைவேற்றுவேன். என்னையே நீங்கள் அஞ்சுங்கள்.
41. உங்களிடம் உள்ள (தவ்ராத் எனும் வேதத்)தை உண்மைப்படுத்தும் வகையில் நான் அருளியுள்ள (இவ்வேதத்)தை நம்புங்கள். இதை மறுப்பவர்களில் நீங்கள் முதலாமவர்களாக ஆகிவிடாதீர்கள்; என் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள். எனக்கே அஞ்சுங்கள்.
[அல் குர்ஆன், அல் பகரா, 02:40, 41]
"என் வசனங்களை சொற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள்" என்ற வசனத்தொடரின் பொருளாவது:
என் வசனங்களை நம்பி, என் தூதரை மெய்ப்படுத்துவதற்குப் பதிலாக இவ்வுலக இன்பங்களைத் தேர்ந்தெடுத்துவிடாதீர்கள். இவ்வுலக இன்பம் அற்பமானவை; அழியக்கூடியவை ஆகும்.
'சொற்பவிலை' என்பது எதைக் குறிக்கிறது என ஹசன் அல்பஸ்ரீ (رحمه الله) அவர்களிடம் வினவப்பட்டபோது,
"இந்த உலகம் முழுவதுமே சொற்ப விலைதான்" என்று விடையளித்தார்கள்.
சயீத் இப்னு ஜுபைர் (رحمه الله) அவர்கள் கூறினார்கள்:
'என் வசனங்கள்' என்பது இஸ்ரவேலர்களுக்கு இறைவன் அருளிய வேதத்தையும், 'சொற்ப விலை' என்பது இம்மையின் சுகங்களையும் குறிக்கும்.
இந்த வசனத்திற்கு வேறொரு பொருளும் கூறப்பட்டுள்ளது:
அதாவது (உண்மைகளை) எடுத்துரைத்தல், தெளிவு படுத்துதல், பயனுள்ள கல்வியைப் பரப்புதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, அவற்றை மறைப்பதையும் குழப்புவதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளாதீர்கள். விரைவில் அழிந்துபோகும் இந்த அற்ப உலகத்தில் உங்களது தலைமைப் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இவ்வாறு செய்யாதீர்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் திருமுகத்தை நாடிக் கற்க வேண்டிய ஒரு கல்வியை, உலக ஆதாயங்களில் ஒன்றை அடைவதற்காவே ஒருவர் கற்றால், மறுமையில் சொர்க்கத்தின் வாடையைக்கூட அவர் நுகரமாட்டார். [அறிவிப்பாளர்: அபூஹுரைரா (رضی الله عنه); நூல்: அபூதாவூத், இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத்]
கல்வி போதிக்க ஊதியம் பெறலாமா?
("என் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள்" என்ற தொடரிலிருந்து குர்ஆன் உள்ளிட்ட மார்க்க கல்வி போதிப்பதற்காக ஊதியம் பெறக் கூடாதோ என எண்ணத் தோன்றும்.)
கல்வி கற்பிக்க ஊதியம் பெறுவது தொடர்பாக அறிஞர்களின் கருத்தாவது:
கற்பிப்பதற்கு (தகுதி படைத்தவராக) அவர் ஒருவர் மட்டுமே இருக்கும்போது ஊதியம் பெ(ற்றே கற்பிப்பேன் என்று கூ)றுவது கூடாது. ஆனால், அவர் தமக்கும்தம் குடும்பத்தார்க்கும் வேண்டியதைப் பொது நிதியிலிருந்து பெறலாம். கற்பிக்க அவர் மட்டுமே (தகுதியானவர்) என்ற நிலை இல்லாது (தகுதியுள்ள வேறு பலரும்) இருக்கும்போது, (அவர் தமது நேரத்தை இதில் செலவிடுவதற்காக) ஊதியம் பெறலாம்.
பொது நிதியிலிருந்து எதுவும் கிடைக்காததுடன், கற்பித்தால் வேறு தொழில் செய்யவும் இயலாது என்ற நிலையில் உள்ள ஒருவர், கற்பித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இல்லாதவராகவே கருதப்படுவார். (அவரும் ஊதியம் பெறலாம்.) இதுவே இமாம்களான ஷாஃபிஈ (رحمه الله), அஹ்மத் (رحمه الله) உள்ளிட்ட பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.
இதற்கு ஆதாரமாக, விஷக் கடிக்கு ஆளான ஒருவருக்கு நபித்தோழர் ஓதிப் பார்த்து கூலி பெற்ற நிகழ்ச்சி அமைந்துள்ளது. இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள், "நீங்கள் ஊதியம் பெற்றிட மிகவும் தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் வேதமே ஆகும்" என்று குறிப்பிட்டார்கள். [ஸஹீஹ் புகாரீ - 5737]
அவ்வாறே, ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முன்வந்த ஒருவர், 'மஹ்ர்' (மணக்கொடை) கொடுக்கத் தம்மிடம் ஒன்றுமில்லை என்று தெரிவித்தபோது, "உம்முடன் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்து வைத்தேன்" என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.
[ஸஹீஹ் புகாரீ - 2311, 5029, 5030, 5087, 5121, 7417]
இந்த வசனத்தின் இறுதியில், "எனக்கே அஞ்சுங்கள்" என அல்லாஹ் கூறுகின்றான். 'அஞ்சுதல்' என்பதைக் குறிக்க 'தக்வா' எனும் சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. "இறையருளை எதிர்ப்பார்த்து இறை ஔியில் நின்று இறைவனுக்கு வழிப்பட்டு நடப்பதும், இறைவனின் தண்டனையை அஞ்சி இறை ஔியில் நின்று இறைவனுக்கு மாறு செய்வதைத் தவிர்ப்பதும்தான் 'தக்வா' எனப்படுகிறது என்று தல்க் பின் ஹபீப் (رحمه الله) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
வேதக்காரர்கள் திட்டமிட்டே உண்மையை மறைத்து, உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பிவருவது தொடர்பாகவும், இறைத்தூதருக்கு மாறு செய்வது தொடர்பாகவும் அவர்களை இறைவன் இங்கு எச்சரிக்கின்றான். (எனக்கு அஞ்சி இந்தப் பாவங்களைக் கைவிடுங்கள் என அறிவுறுத்துகின்றான்.)
ஆதாரம்: தஃப்சீர் இப்னு கஸீர்