بسم الله الرحمن الرحیم
இப்னு அப்பாஸ் (رضی الله عنه) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) சுப்ஹு (அதிகாலை) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒருவர் (தனிப்பட்ட முறையில்) இரண்டு ரக்அத்கள் தொழுவதற்காக எழுந்து நின்றார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் அவருடைய ஆடையைப் பிடித்திழுத்து, "சுப்ஹு தொழுகையை நான்கு ரகாஅத்களாக நிறைவேற்றுவீரா என்ன?" என்று கேட்டார்கள்.
ஆதாரம்: முஸ்னது அஹ்மத் - 2023
அதாவது ஃபஜ்ருடைய ஃபர்ள் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்ட பிறகு, ஃபஜ்ருடைய முந்தைய சுன்னத் இரு ரக்அத்களை ஒருவர் தொழ ஆரம்பித்தால், ஃபஜ்ருடைய ஃபர்ளையே நான்கு ரக்அத்களாக அவர் ஆக்கிவிட்டதைப் போல் ஆகும். காரணம், இகாமத் சொல்லப்பட்ட பிறகு, கட்டாயத் தொழுகையான ஃர்ளுதான் தொழப்படும். அப்படியிருக்க, அந்ரேத்தில் சுன்னத் தொழுதால் அதையும் அவர் ஃபர்ள்போல் கருதிவிட்டார் என்றுதானே பொருள்!
அத்துடன், இகாமத் கூறப்பட்டபின் கட்டாய தொழுகைக்காக ஒருவர் தம்மைத் தயார்படுத்திக் கொண்டு, தக்பீர் தஹ்ரீமாவிலிருந்தே இமாமைப் பின்பற்றி ஃபர்ளை முழுமையாக நிறைவேற்றுவதுதான் முறையாகும். வேறு தொழுகையில் ஈடுபடுகையில், ஃபர்ளுக்குத் தர வேண்டிய முக்கியத்துவத்தை அவர் தரவில்லை என்றாகும். தவிரவும், இமாமுக்கு மாற்றம் செய்வதைப் போன்றும் அச்செயல் ஆகிவிடும்.
ஆதாரம்: அல்ஃபத்ஹுர் ரப்பானீ