بسم الله الرحمن الرحیم
நீங்கள் (தவ்ராத்) வேதத்தை ஓதிக்கொண்டே, உங்களை மறந்துவிட்டு, நன்மை செய்யுமாறு மக்களை ஏவுகிறீர்களா? நீங்கள் புரிந்து கொள்ளமாட்டீர்களா?
[அல் குர்ஆன், அல் பகரா, 02:44]
(இந்த வசனத்தில், வேதக்காரர்களின் மற்றொரு தீமை குறித்து அல்லாஹ் வினா எழுப்புகின்றான்:)
வேதக்காரர்களே! நன்மைகள் புரியுமாறு மக்களை நீங்கள் ஏவுகின்றீர்கள். ஆனால், உங்களை நீங்கள் மறந்துவிடுகின்றீர்களே! மக்களுக்கு எதை ஏவுகின்றீர்களோ, அதை நீங்கள் செயல்படுத்துவதில்லை. இத்தனைக்கும் நீங்கள் (தவ்ராத்) வேதத்தை ஓதிவருகிறீர்கள். இவ்வாறு நடந்துகொள்கின்றவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை அவ்வேதத்தின் மூலம் அறிந்துள்ளீர்கள். இது நியாயமா என இறைவன் இங்கே வினா தொடுக்கின்றான்.
மேலும், நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை அறிந்து, உறக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளமாட்டீர்களா? குருட்டுத் தனத்திலிருந்து வெளிவரமாட்டீர்களா எனவும் வினவுகின்றான் இறைவன்.
இவ்வசனம் தொடர்பாக விரிவுரையாளர் கத்தாதா (رحمه الله) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்விற்கு வழிப்பட்டு நடக்க வேண்டும்; அவனை அஞ்சி வாழ வேண்டும் என்றெல்லாம் மக்களுக்கு இஸ்ரவேலர்கள் உபதேசிப்பார்கள். ஆனால், அவர்கள் (தமது சொந்த வாழ்க்கையில்) அதற்கு மாறாக நடப்பார்கள். இதற்காக அவர்களை அல்லாஹ் கண்டிக்கின்றான்.
இப்னு அப்பாஸ் (رضی الله عنه) அவர்கள் கூறியதாவது:
உங்களிடம் உள்ள தவ்ராத் வேதத்தில் கூறப்பெற்றுள்ள நபித்துவத்தையும் ஒப்பந்தத்தையும் ஏற்று நடக்க வேண்டும். நிராகரிக்கக் கூடாது என்று மக்களுக்கு நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், உங்களை விட்டுவிடுகிறீர்களே! என் தூதர் முஹம்மதை ஏற்று நடக்க வேண்டும் என்று உங்களிடம் நான் வாங்கியுள்ள உறுதிமொழியை நீங்கள் மதிக்கவில்லையே! எனது வேதத்தில் நீங்கள் அறிந்துள்ளதை மறுக்கிறீர்கள். எனது ஒப்பந்தத்தை மீறுகிறீர்கள். (இது தர்மம் ஆகுமா?)
முஹம்மத் (ﷺ) அவர்களது மார்க்கத்தில் இணைந்துவிடுங்கள்; தொழுகையைக் கடைபிடியுங்கள் என்றெல்லாம் இறைவன் உங்களுக்கு இட்டுள்ள கட்டளைகளை மக்களுக்கு நீங்கள் எடுத்துரைக்கிறீர்கள்; ஆனால், உங்களை மறந்துவிடுகின்றீர்களே! - என்று இப்னு அப்பாஸ் (رضی الله عنه) அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கம் அளித்ததாக ளஹ்ஹாக் (رحمه الله) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அபுத்தர்தா (رضی الله عنه) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் எப்போது முழுமையான மார்க்க அறிவு உடையவராக ஆவாரென்றால், அல்லாஹ்வின் விஷயத்தில் மக்கள்மீது அவருக்குக் கோபம் வர வேண்டும். பின்னர் அவர் தம்மைப் பற்றிச் சிந்தித்து அதைவிடக் கடுமையாகத் தம்மீதே கோபம் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் முழுமையான மார்க்க அறிவு பெற்றவராவார்.
இந்த வசனம் தொடர்பாக அப்துர் ரஹ்மான் பின் அஸ்லம் (رحمه الله) அவர்கள் கூறியதாவது:
இந்த யூதர்களிடம் ஒரு பழக்கம் இருந்துவந்தது. அவர்களிடம் ஒருவர் வந்து ஏதேனும் ஒன்றைக் குறித்துக் கேட்டால், அதன்மூலம் அவர்களுக்கு இலஞ்சமோ வேறு ஆதாயமோ கிடைக்காது என்றிருந்தால், அப்போது (மட்டும்) அவர்கள் உண்மையைக் கூறுவார்கள். இவ்வாறு நன்மை புரியுமாறு மக்களுக்குச் சொல்லிவிட்டு, உங்களை நீங்கள் மறந்துவிடுகின்றீர்களே! இது நியாயமா என இறைவன் இங்கு வினா எழுப்புகின்றான்.
நன்மை புரியுமாறு பிறரை ஏவிவிட்டு, தாங்கள் அதைச் செய்யாமலிருந்தது தவறு என்பதை உணர்த்திக் காட்டி, இந்தச் செயலுக்காக இஸ்ரவேலர்களைக் கண்டிப்பது தான் இறைவனின் நோக்கமாகும். நன்மை புரியுமாறு மக்களை அவர்கள் ஏவியதையே கண்டிப்பது இங்கு நோக்கமல்ல.
ஏனெனில், நன்மை புரியுமாறு கூறுவதும் நன்மைதான்; அது அறிஞர்களின் கடமையும்கூட. இருப்பினும், பிறருக்கு ஏவும்போது தாமும் மக்களுடன் சேர்ந்து அதைச் செயல்படுத்துவதும் பின்வாங்காமல் இருப்பதும் அறிஞரின் ஏற்றமிகு கடமையாகும்.
இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, (இறைத்தூதர்) ஷுஐப் (علیه السلام) அவர்களது கூற்றாகும்:
உங்களுக்கு நான் எதைத் தடை செய்தேனோ அதையே நான் செய்து உங்களிடமிருந்து வேறுபட நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரை சீர்த்திருத்தம் செய்வதையே நான் விரும்புகிறேன் . [அல் குர்ஆன், 11:88]
ஆக, நன்மை புரியுமாறு பிறருக்கு உபதேசிப்பது, அதைத் தாமும் செயல்படுத்துவது, இந்த இரண்டும் வெவ்வேறு கடமைகள் ஆகும். அவற்றில் ஒன்றைக் கைவிடுவதால் மற்றொன்றையும் கைவிட வேண்டும் என்று கூற முடியாது. இதுவே முற்கால மற்றும் பிற்கால அறிஞர்களின் கருத்துகளில் சரியான கருத்தாகும்.
வேறுசிலர், "பாவங்கள் புரிகின்றவர், அவற்றைக் கைவிடுமாறு பிறரை உபதேசிக்கக் கூடாது" என்கின்றனர். இது பலவீனமான கருத்தாகும். அறிஞர்கள் தாம் ஒரு நன்மையைச் செய்யாவிட்டாலும், அதைச் செய்யுமாறு பிறரை ஏவ வேண்டும்; தாம் ஒரு தீமையைப் புரிந்தாலும், அதைச் செய்யக் கூடாதெனப் பிறரைத் தடுக்க வேண்டும் என்பதே சரியான கருத்தாகும்.
ஒருவர் தாம் சொன்னபடி நடக்காத வரை நன்மை புரியுமாறு ஏவக் கூடாது; தீமையைத் தடுக்கக் கூடாது என்றால், யாருமே இதைச் செய்யப்போவதில்லை என்று சயீத் பின் ஜுபைர் (رحمه الله) அவர்கள் கூறினார்கள்.
ஆயினும், அறிஞர் ஒருவர் இறைவனுக்குக் கீழ்படிந்து நடப்பதைக் கைவிட்டு, பாவங்கள் புரிவதால் அவர் கண்டனத்துக்குரியவரே! ஏனெனில், அவர் அறிந்துகொண்டே தாம் கற்ற கல்விக்கு மாறாக நடந்துகொள்கிறார். கற்றவர் கல்லாதோரைப் போன்றவர் அல்லர்.
இதனாலேயே கற்றோர் விஷயத்தில் எச்சரிக்கை விடுக்கும் நபிமொழிகள் ஏராளம் உள்ளன.
ஆதாரம்: தஃப்சீர் இப்னு கஸீர்