குழந்தைகளைக் கிள்ளிவிட்டு அழ வைப்பது

குழந்தைகளைக் கிள்ளிவிட்டு அழ வைப்பது, பயமுறுத்தி மிரள வைப்பது, வேண்டுமென்றே அடித்துவிட்டுச் சிரிப்பது போன்றவை ஷைத்தானிய குணங்களாகும். 'பிறந்தவுடனே ஒரு குழந்தை வீறிட்டு அழக் காரணம், அதை ஷைத்தான் அப்போது தீண்டுகிறான்; குத்துகிறான்' என்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்). அப்படியானால் முதலில் இதைச் செய்வது ஜின் இன ஷைத்தானே. இந்தக் கெட்ட குணம்தான் மனிதர்கள் சிலரிடம் பழக்கமாகவே நுழைந்துள்ளது. 'சிறுவர்கள் மீது கருணை காட்டாதவர் நம்மைச் சேர்ந்தவர் அல்ல' என்ற நபிமொழியில் வரும் எச்சரிக்கைப்படி இந்தப் பழக்கங்கள் பாவங்களில் அடங்கும். அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேட வேண்டும். அவனுக்கு அஞ்ச வேண்டும்.

'விளையாட்டுக்காக, பிரியத்திற்காகச் செய்வதும் பாவமா' என்பவர்கள், 'உங்களைக் கிள்ளிவிட்டு, அடித்துவிட்டு, பயமுறுத்தி ரசிப்பவர்களை என்ன சொல்வீர்கள்?' விளையாட்டு என்றால் அந்தக் குழந்தையும் அப்படி நினைக்கும் அளவில் இருக்க வேண்டும். அது மகிழ்ச்சி அடைய வேண்டும். வலிக்கும் அளவுக்குச் செய்துவிட்டு அதை விளையாட்டு என்றால், எது விளையாட்டு என ஒரு குழந்தை அறிந்ததுகூட நாம் அறியவில்லை என்று அர்த்தம். அறிந்தோ அறியாமலோ இப்படி நடந்திருந்தால் குழந்தைகளிடம்கூட நாம் மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும். ஏனெனில், நமது இரட்சகனின் விசாரணையிலிருந்து எதுவும் தப்பாது.

உஸ்தாத் MF. அலீ
Previous Post Next Post