நமது தெரிவும் நமது வழியும் பரிபூரண மார்க்கமான இஸ்லாம் மட்டுமே.

உலகில் பல கோட்பாடுகள், சமயங்கள், சித்தாத்தங்கள் காணப்படுகின்றன.
அவை தோன்றிய போது யாரோ ஒரு மனிதரின் சிந்தனைத் தாக்கத்தினாலோ, கவர்ச்சியினாலோ, சுயநலனத்தினாலோ விரும்பியோ விரும்பாமலோ அவை பின்பற்றப்படுகின்றன.

அதன் காரணமாகவே அந்த சித்தாந்தத்தின் சிப்பியுடனோ, அல்லது அவர் பெயரில் செதுக்கப்பட்ட  சிலையுடனோ அல்லது பல்வேறு சிலைகளுடனோ சம்மந்தப்பட்ட மதத்தவர்கள் தமது ஆராதனைகளை நிறைவேற்றுகின்றனர்.

அது அந்த கோட்பாடுகளை நிறைவேற்றுவோரின் சுதந்திரமாகும்.

ஆம்! உலகில் தோன்றிய பல மதங்கள் அழிந்து விட்டன. சிலதின் கோட்பாடுகள் பற்றி மாத்திரம் பேசப்படுவதாக மத ஆய்வாளர்கள் குறிப்பிடுவது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

நாம் ஏற்றுக் கொண்ட இஸ்லாமிய மார்க்கம் அவ்வாறன்று. அது உலக மனித கற்பனைகளுக்கும் தத்துவக் கோட்பாடுகளுக்கும் அவதூறுகளுக்கும் அப்பாற்பட்ட தெளிவான இறைச் செய்திகளை உள்ளடக்கிய என்றும் சாகாவரம் பெற்ற நிரந்தர மார்கமாகும்.

அது முஹம்மது நபிக்கு மாத்திரம் வழங்கப்பட்டதொரு மார்க்கம் கிடையாது. அவர் பூமியில் வந்த இறுதி இறைத் தூதராகும் .

அவருக்கு முன்னால் பல நூறு தூதர்கள் உலகுக்கு இறைவனால் அனுப்பப்பட்டு அவர்கள் மரணித்தும் விட்டனர். 

அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கால கட்டங்களில் மனித சமூகம் வாழ்ந்த வெவ்வேறான பிரதேசங்களிலும் இறைச் செய்தி வழங்கப்பட்டு இறைவன் பாவமாக அறிவிக்கும் சிலை வணக்கம், வட்டி, குடி, விபச்சாரம், பாலியல் துஷ்பிரயோகம் அநீதி, கொலை, கொள்ளை போன்ற கொடிய பாவங்களில் ஈடுபட்டவர்கள் தடுக்கப்பட்டு அவர்கள் அனைவரினதும் மரணத்தின் பின்னால் உள்ள விசாரணைக்காக தயார்படுத்தப்பட்டனர் .

சுருக்கமாகச் சொன்னால் பூமியில் இறை திருப்தியோடு வாழ்ந்து இறைவனைச் சந்திக்கின்ற மறுமை நாளில் இறை பொருத்தம் பெற தயார் செய்யப்பட்டனர்.

ஆகவே மறுமை நாளில் இறைவனைச் சந்திப்போம் என்பதை உறுதியாக நம்பிக்கை கொள்கின்ற முஸ்லிம்களாகிய நாம் அவர்களின் கோட்பாடுகளை நம்பவோ பின்பற்றவோ வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

இந்த உலகின் படைப்பாளன்
----
இந்த உலகம், வானம், பூமி அவற்றில் படைக்கப்பட்டுள்ள கோடான கோடி படைப்புக்கள் யாவையும் படைத்தவன் அர்ஷின் இரட்சகனாகிய அல்லாஹ்வே!

அவன் யாரின் எந்த உதவியும் துணையும் இன்றி மனிதன் வியக்கும் இந்த உலகைப் படைத்த மாபெரும் படைப்பாளனும் ஈருலகினதும் உண்மையான அதிபதியுமான கருணைமிகு இரட்சகனாகும். 

ஆகவே இந்த உலகை நிர்வகிக்கின்ற முழு அதிகாரமும் அவனுக்கே உரியது. அவன் வழங்கிய சிறிய நிலப்பரப்பில், கொஞ்சம் செல்வத்தில் ஒருவன் என்ன தலைக்கணத்தோடு வாழ்கின்றான்!!! என்பதை நாம் அறிவோமல்லவா?

நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை அல்லாஹ் சூறா முல்க் 02 வது வசனத்தில் தெளிவாக கூறுகிறான்.

 اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ‏ [ الملك - ٢ ]
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காகவே. அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க மன்னிப்பாளன்.
 (அல் முல்க் :2 )

அப்படியானால்  இந்த உலகின் உண்மையான உரிமையாளனுக்கு தனது ஆளுகையின்
கீழ் இருக்கும் இந்த உலகு எவ்வாறு ஆளப்பட வேண்டும், அதன் ஒழுங்குமுறைகள் எவ்வாறு அமையப் பெற வேண்டும் என்பதை  அவனே அது பற்றி  மிகத் துல்லியமாக அறிந்தவன் என்பது அவனது முடிவாகும்.

அதனாலேயே அவன் தூதர்களை அனுப்பி இந்த பூமியில் வாழும் மக்களுக்கு நேர்வழியும் காட்டுகினான். அவனையே நாம் அல்லாஹ் எனப் போற்றி புகழ்கின்றோம். அவனையே நாம் நேசிக்கின்றோம். அவன் சொன்ன வழி 
நடப்பதையே அழகிய இஸ்லாம் என்கின்றோம்.

இறைவழிகாட்டல் அளிக்கப்பட்ட முதல் மனிதர்
-----
பூமியைப் படைத்த பின்னால் அதன் மண்கலவைகளில்  இருந்தே அல்லாஹ் தனது இருகரம்  கொண்டு முதல் மனிதர் ஆதமைப் படைத்து, அவருக்குரிய அவன்
அவரில் உயிரை ஊதினான் எனக் குர்ஆன் குறிப்பிடுகின்றது.

பிசுபிசுப்பான தட்டினால் (கிணீர்) சப்தம் வருகின்ற சூடான களிமண்ணில் இருந்து மனித இனத் தந்தை ஆதாம் (அலை)  அவர்களையும் அவரது விலா எலும்பில் இருந்து படைக்கப்பட்ட முதல் பெண் ஹவ்வா அவர்களை அவருக்கு மனைவியாகவும் படைத்தான்.

அவ்விருவரும் சோதனைக்காக அவன் ஏழு வானத்திற்கும் மேலால் உள்ள சுவனலோகத்தில்  வாழவைக்கப்பட்டனர்.

ஆதம் நபி (அலை) அவர்கள் 60 முளம் - 90 அடி உயர அளவு மனிதராகப் படைக்கப்பட்டதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி).

சொர்க்கத்தில் குறித்த ஒரு மரத்தை மட்டும் நெருங்க வேண்டாமென்ற இறை கட்டளையோடும் ஷைத்தான் தங்களை வழிகெடுத்து அங்கிருந்து வெளியேற்ற இடமளித்து விட வேண்டாம் என்ற இறை வழிகாட்டலோடும் அந்த சுகபோக வாழ்க்கை  நமது தாய்க்கும் தந்தைக்கும் வசதி செய்து தரப்பட்டது.

இதற்கு முன் தீச்சுவாலையில் இருந்து படைக்கப்பட்டவன் என குர்ஆன் குறிப்பிடும் முஸ்லிம்களின் விரோதியான ஷைத்தான்களின் தலைவன் இப்லீசும் அங்கிருந்தான் என்பது கவனிக்க வேண்டிய வரலாறாகும் .

ஷைத்தானின் ஆசை வார்த்தையில் மயங்கிய அவ்விருவரும் தமக்கு இறைவன் சொன்னதை மறந்து, குறித்த மரத்தை நெருங்கியதன் தண்டனையாக சுவர்க்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். தமது குற்றத்திற்காக மனம் உருகி, இறைவனை இறைஞ்சி அதற்கு பரிகாரம் வேண்டியதோடு, பாவம் மன்னிக்கப்பட்டவர்களாகவே இந்த பூமிக்கு வெளியேற்றப்பட்டனர்.

இது குறித்த உரையாடல் மற்றும் வழிகாட்டல்கள் பற்றி  தாஹா அத்தியாயம் 115 முதல் ஆரம்பமாகின்றது.

 பூமிக்கு வெளியேற்றப்பட்ட போது பின்வருமாறு அறிவுறுத்தப்பட்டே அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் என்பதை தாஹா- 123-124 ம் வசனங்கள் பின்வருமாறு உறுதி செய்கின்றன. 
 قَالَ اهْبِطَا مِنْهَا جَمِيْعًا‌ۢ بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ‌ ۚ فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى ۙ فَمَنِ اتَّبَعَ هُدَاىَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقٰى‏ [طه - ١٢٣]

 “இதிலிருந்து நீங்கள் இருவரும்  இங்கிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ள் சந்ததிக)ளில் சிலருக்குச் சிலர் பகைவர்களாகவே இருப்பார்கள்; அப்பொழுது நிச்சயமாக என்னிடமிருந்து நிச்சயமாக உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடப்பாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார். (தாஹா -123)
மேற்படி வசனத்தோடு மனித குலத்திற்கு பின்வரும் எச்சரிக்கையும் சொல்லி இருக்கின்றது.

 وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى‏ [طه - ١٢٤]
 “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கின்றானோ, நிச்சயமாக அவனுக்கு (இவ்வுலகில்) நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும் ; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” (தஹா- 124).
 அதற்கு மனிதன்
قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِىْۤ اَعْمٰى وَقَدْ كُنْتُ بَصِيْرًا‏ [طه - ١٢٥]
 (அப்போது அவன்) “என் இறைவனே! நான் தெளிவான பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை நீ ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கேட்பான்.
பதில்: 
 قَالَ كَذٰلِكَ اَتَـتْكَ اٰيٰتُنَا فَنَسِيْتَهَا‌ۚ وَكَذٰلِكَ الْيَوْمَ تُنْسٰى‏ [طه - ١٢٦]
(அதற்கு இறைவன்,) “இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; அவற்றை நீ மறந்து நடந்தாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவான்.( தாஹா- 126)

மண்ணில் இருந்து படைக்கப்பட்ட 
மனித இனம் மறுமை வரை  இம்மண்ணிலேயே வாழ்ந்து இம்மணிலயே மரணித்து, பின் ஒரு நாள் இந்த மண்ணில் இருந்தே மீண்டும் எழுப்பப்படுவர்.

مِنْهَا خَلَقْنٰكُمْ وَفِيْهَا نُعِيْدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً اُخْرٰى‏ [طه - ٥٥]

இப்பூமியிலிருந்தே  உங்களை நாம் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் (கேள்வி கணக்கிற்காக ) வெளிப்படுத்துவோம்.( தாஹா- 55) என்ற குர்ஆனின் செய்தியானது மனித வாழ்வின் நோக்கையும் இலக்கையும்  தெளிவுபடுத்தி விட்டது. 

முஹம்மது நபியே நமது தூதர்.
----
இறைவன் தனது இறுதித் தூதராக முஹம்மது நபியை தேர்வு செய்து அனுப்பி வைத்துள்ளான். அவர் எங்களுக்கு சாதாரண மலசல ஓழுங்குமுறைகள் தொடக்கம் மண்ணறை வாழ்வு,  பாரிய படுபயங்கர நரகம் இன்பம் நிறைந்த சொர்க்கம் வரை வழி காட்டி இருப்பதால் அவரே நமது வழிகாட்டியும் இறைத் தூதரும் ஆவார்.

وَمَآ أَرْسَلْنَٰكَ إِلَّا رَحْمَةً لِّلْعَٰلَمِينَ
(الأنبياء - 107)
(நபியே!) நாம் உம்மை அனைவருக்கும்  ஓர் அருட் கொடையாகவே அன்றி அனுப்பவில்லை. ( அல்அன்பியா- 107).

وَمَآ أَرْسَلْنَٰكَ إِلَّا كَآفَّةً لِّلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ. (سبأ - 28)

இன்னும், (நபியே!) உம்மை நாம்  மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறக் கூடியவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக் கூடியவராகவுமே அன்றி அனுப்பவில்லை; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இது பற்றி ) அறியமாட்டார்கள். (தாஹா- 55)

மேற்படி இறைவழிகாட்டல் கள் அடங்கிய வசனங்களை நிதானமாக சிந்திக்கும் மனிதன் இறைவனை, மறுமை நாளை மறந்த தனது வாழ்க்கைப் பயணத்தை மாற்றி, இறை
வழிகாட்டல்களையும்அவனது தூதர் போதனைகளையும் தேடுவான். 

குறிப்பு
----
இஸ்லாத்தைப் பற்றி சந்தேமின்றி அறிய வேண்டுமானால் அதன் மூல நூலான குர்ஆனிலிருந்தும் இறைத் தூதர் அவர்களின் ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலிருந்தும் ஒருவர் தனக்குரிய பதிலைப் பெற வேண்டும்.

சில விடயங்களை உங்களால் புரியமுடியாத போது   அதனை இறை அச்சத்துடன் கற்று, தெளிவாகப்  படிப்பவர்களிடம் சென்று தெளிவடைந்து கொள்ள வேண்டும்

தங்களின் மார்க்கத்தையே ஒழுங்காக கற்காதவர்களாலேயே இஸ்லாம் விமர்சிக்கப்படுகின்றது. ஆகவே அவர்களை விடுத்து இஸ்லாமிய அறிஞர்களிடமே அது பற்றிய சந்தேகளுக்கான தீர்வைக் எட்ட முடியும்.

இஸ்லாம் பற்றி காழ்ப்புணர்ச்சியோடு 24 , மணி நேரமும் வாழ்வோருக்கு நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட இஸ்லாமிய மார்க்கம் பற்றியோ,  அதன் தூதரான முஹம்மது நபியைப் பற்றியோ தவறாகப் பேச எந்த உரிமையும் கிடையாது.

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
Previous Post Next Post