வாசிப்பு

‘உங்கள் கரங்களில் கிடைக்கும் அனைத்தையும் வாசியுங்கள்' என்று சொல்வீர்களாயின், 'வாசிக்கக் கூடாதது, வாசிக்கத் தகுதியற்றது' என்ற வகைப்பாடே இல்லை எனச் சொல்ல வருகிறீர்கள். இது அறியாமை இல்லையா? 'அப்படியல்ல, வாசிக்கின்றவர் அதை முடிவு செய்யட்டும்' என்பீர்களெனில், வாசிக்கக் கூடாததையும் தகுதியற்றதையும் வாசிக்க வைத்த குற்றத்தை யார் சுமப்பது? அவரின் மகத்தான நேரத்தை வீணடிக்க, தவறான தத்துவம் சொன்ன மடமைக்கு யார் பொறுப்பேற்பது? 'அனைத்தையும் வாசி' என்று சொன்ன நீதான் என்னைக் கெடுத்த, என் நேரத்தை வீணடித்த முதல் குற்றவாளி எனச் சொன்னால், ஒப்புக்கொள்ள தயாரா?

எதை வாசிக்கலாம் என்று வழிகாட்டவும் அறிவுரை தேவை. அது அறிஞர்களின் மூலம் அறியப்படுகிறது. வாசிக்கவே அறியாதவர்களை நோக்கி வாசி (இக்ரஃ) என்று முதல் கட்டளை இறக்கப்பட்டதில் ஆழமான பல கருத்துகள் உண்டு. வாசிக்க தகுதியானதைத் தான் வாசிக்க வேண்டும் என்பதும் அதில் ஒன்று. வாசிக்கவே தெரியாத ஒரு நபியும் அதற்கு வழிகாட்ட முடியும். யாருடையதை வாசிக்கலாம் என்பதை வைத்து.

வாசிப்பு (கிராஅத்) என்பது கல்வித் தேடலின் துணை சாதனங்களில் ஒன்று. அதுவே கல்வி (இல்மு) அல்ல.

இஸ்லாமிய மரபின் தனித்தன்மை, கற்றல் (தஅலிம்) மரபைக் கொண்டது. அதாவது, ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது. அதிலிருந்து தன்னை வளர்த்தெடுத்து பண்படுத்திக் கொண்டே இருப்பது. இந்தக் கற்றல் அனுபவத்தைப் பாதுகாக்கவும், மறந்தால் மீட்டிக் கொள்ளவும், தொகுத்துக் கொள்ளவும்தான் புத்தகங்கள். எனவேதான், அல்லாஹ்வின் வேதத்திற்குக் கூட திக்ர் (நினைவூட்டல்), கிதாப் (எழுதப்பட்டது), குர்ஆன் (வாசிக்கப்படுவது) என்ற பெயர்கள் உள்ளன.

வாசிப்பீராக என்று அல்லாஹ் முதல் கட்டளையை இறக்கினான் என்றால், நாம் எதை வேண்டுமானாலும் வாசிக்க வேண்டும் என்பதல்ல. தட்டையாக அதை அப்படிப் புரிந்தால், உமர் (ரலி) அவர்கள் தவ்ராத்தின் சில பகுதிகளை வாசித்துக் காட்டியபோது நபியவர்கள் முகம் சிவக்கக் கோபம் கொண்டிருக்க மாட்டார்கள். உண்மையில் வாசிப்புதான் ஒரு சமூகத்தை மேம்பட்ட நாகரிக சமூகமாக மாற்றும் என்ற மேற்கத்திய கற்பனையை நபித்தோழர்கள் முறியடித்துவிட்டார்கள்.

இஸ்லாமிய மரபில் வாசிப்பின் தரநிலை ஒரு துணை சாதனமாகவே ஆரம்பம் முதல் அணுகப்பட்டது என்பதை ஓர் எளிய ஆதாரம் மூலம் நிறுவ முடியும். அது கீழே:

عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِتْيَانٌ حَزَاوِرَةٌ فَتَعَلَّمْنَا الْإِيمَانَ قَبْلَ أَنْ نَتَعَلَّمَ الْقُرْآنَ ثُمَّ تَعَلَّمْنَا الْقُرْآنَ فَازْدَدْنَا بِهِ إِيمَانًا

61 سنن ابن ماجه كتاب المقدمة باب في الإيمان
52 المحدث الألباني خلاصة حكم المحدث صحيح في صحيح ابن ماجه

நபித்தோழர் ஜுந்துப் (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: வலிமைமிக்க வாலிபர்களாக நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தோம். குர்ஆனை கற்றுக்கொள்வதற்கு முன்பாக ஈமானை நாங்கள் கற்றுக்கொண்டோம். பின்பு குர்ஆனை கற்றுக்கொண்டோம். அதைக் கொண்டு எங்கள் ஈமானை அதிகப்படுத்திக் கொண்டோம். (சுனன் இப்னு மாஜா - ஈமான் பாடத்தின் முன்னுரையில் 61. இமாம் அல்பானி - சஹீஹ் 52)

இங்கு நமது பேசுபொருள் வாசிப்பின் தரநிலை இஸ்லாமிய மரபில் என்ன என்பதுதான். அதை மேற்கத்திய மூடநம்பிக்கை எல்லை மீறி மெச்சி புனிதப்படுத்தி வருகிறது. Reading என்பதை ஒரு Habit என்கிறது. இஸ்லாம் ஒன்றைச் சிறந்த habit என்று வரவேற்கும் எனில், அது எல்லோருக்கும் பொதுவானதாக ஆக்கி இருக்கும். எழுதவோ வாசிக்கவோ தெரியாத தன் சமூக மக்களை அந்த நல்ல habit பக்கம் வழிநடத்த தொடர்ந்து நபியவர்கள் போராடி இருப்பார்கள். அது ஒரு சமூகமே எல்லா வகையான வாசிப்புக்கும் ஆயத்தமான புரட்சி வரலாற்றின் முன்மாதிரி சமூகமாக மாறி இருக்கும். ஆனால், நமது தனித்தன்மை கற்றல் மரபுடன் கொண்டது. வாசிப்பு அதில் ஒரு சிறிய துணை சாதனம். அவ்வளவே. Reading is not itself learning. இன்று வாசிப்பை ஒரு கற்றல் தரத்தில் வைத்து போற்றுவதும், அதில் ஏற்படுகின்ற அறிவுத் தடுமாற்றத்துடன் ஒரு சிறிய வட்டத்தில் நின்று உலமாவுக்கும் ஆசிரியர்களுக்கும் புத்திமதி சொல்லிக் கொண்டு ஆணவம் வெளிப்படுத்துவதும் அறிவு வறுமை. புத்திமதி யாரும் யாருக்கும் சொல்லலாம். ஆனால், மடமையை ஒருவர் நல்லறிவு போல தன்னைவிட மூத்த கல்வி உள்ளவர்களுக்கு புத்திமதியாகச் சொன்னால், நீங்களும் நானும் அதை என்ன சொல்வோம்? ஆசிரியர்களிடம் பண்பட்டவனுக்கும் வெறும் வாசிப்பில் தன்னை வளர்த்துக் கொண்டவனுக்கும் புத்திமதி சொல்லும் அணுகுமுறையில் கூட வேறுபாடு இருக்கும் அல்லவா?

கற்றல் விரிந்த பொருள் கொண்டது. அதற்குப் பணிவுடன் ஒரு மாணவராக நாம் பண்பட வேண்டும். வாசிப்பு ஒரு சிறிய வட்டம். அதற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தால், ஆசிரியர்களுக்கு கூட புத்திமதி சொல்கின்ற ஆணவம்தான் வளரும். அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.

-உஸ்தாத் M.F அலீ
Previous Post Next Post