இத்தா என்றால் என்ன?

- ஆஸிர் ஸலபி

இத்தா என்றால் என்ன?

இத்தா என்றால் காத்திருத்தல் அல்லது கணக்கிடுதல் என்பது கருத்தாகும். அதாவது கணவனை இழந்த பெண்கள், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மறுமணம் செய்வதற்காக திருமணம் செய்யாது காத்திருக்கும் காலமாகும்.

இத்தாவுடைய காலம்:

கணவன் இறந்தால் மனைவி உயிருடன் இருக்கும் பட்சத்தில் அம்மனைவியானவள் நான்கு மாதமும் பத்து நாட்களும் இத்தா காலத்தை அனுஷ்டிக்க வேண்டும். அவள் கருவுற்றவளாக இருப்பின் குழந்தை பெறும் வரை இத்தா காலமாக அமையும். அது ஒரு நாளாகவோ அல்லது பத்து மாதங்களாகவோ அல்லது ஒரு சில மணித்தியாலங்களாகவோ அமையக் கூடும்.
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 2:234)

கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும்.
(அல்குர்ஆன் 65:4)

கணவனால் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கான இத்தா காலம் மூன்று மாதவிடாய்க் காலம் ஆகும்.

விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 2:228)

அவ்வாறு விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்கு மாதவிடாய் நின்றிருப்பின் மூன்று மாதங்கள் இத்தாவுடைய காலமாகும்.

உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள்.
(அல்குர்ஆன் 65:4)

இந்த இத்தாவானது கணவனது வீட்டிலேயே இடம்பெற வேண்டும்:

(நீங்கள் விவாகரத்துக் செய்த) பெண்களை அவர்கள் (இருக்கும் உங்களுடைய) வீடுகளிலிருந்து (இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதற்கு முன்னர்), நீங்கள் வெளியேற்றிவிடவும் வேண்டாம், அவர்களும் வெளியேற வேண்டாம், பகிரங்கமான மானக்கேடான காரியத்தை அவர்கள் கொண்டு வந்தாலன்றி, இன்னும், இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும், எவர் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறுகின்றாரோ, அவர் நிச்சயமாக தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவராவார், அதன் பின்னர் (நீங்கள் சேர்ந்து வாழ) புதிய ஒரு காரியத்தை அல்லாஹ் ஏற்படுத்தி விடலாம் என்பதை நீர் அறியமாட்டீர்.
(அல்குர்ஆன்: 65:1)

மேலும் இந்தத் தலாக்குடைய இத்தா காலகட்டத்தில் மனைவிக்குரிய செலவுகளை மேற்கொள்வது கணவன் மீது கடமையாகும்:

மேலும், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு (தங்கள் ‘இத்தா’க்காலங்களில்) முறைப்படி (கணவனுடைய சொத்திலிருந்தே உணவு, உடை போன்றவைக்காக) செலவினம் (பெறப் பாத்தியம்) உண்டு.  (அவ்வாறு அவர்களுக்குச் செலவினம் கொடுப்பது) பயபக்தியுடையோர் மீது கடமையாகும்.
(அல்குர்ஆன்: 2:241)

பெண்ணிடமிருந்து வீட்டைச் சீதனாகப் பெற்று அதில் குடும்பம் நடாத்தும் கயவர்களுக்கு இவ்வாறாக தலாக் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்போது தலாக்குடைய காலத்தில் மனைவினுடைய செலவுகளை மேற்கொள்ளாமல் தலைமறைவாகிவிடுவதை நமது சமூகத்தில் தினமும் காண்கிறோம். இது வரம்பு மீறிய செயலாகும். இது நிச்சயமாக பயபக்தியுடையோரதோ அல்லது இஸ்லாமிய வழிமுறையோ அல்ல.

குல்உ:

பெண்கள் கணவனை விவாகரத்து செய்தால் (குல்உ) அப்பெண்களுடைய இத்தா ஒரு மாதவிடாய்க் காலம் ஆகும்.

ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் ஜமீலா எனும் தம் மனைவியை அடித்தார். அவரது கை ஒடிந்து விட்டது. இதைக் கண்ட அப்பெண்மணியின் சகோதரர் அன்றைய சமுதாயத் தலைவரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸை அழைத்து வரச் செய்து, “அவள் உமக்குத் தர வேண்டியதை (மஹரை)ப் பெற்றுக் கொண்டு அவளை அவள் வழியில் விட்டு விடுவீராக!” என்றார்கள். அவர் “சரி” என்றார். அப்பெண்மணியிடம் “ஒரு மாதவிடாய்க் காலம் வரை (திருமணம் செய்யாமல்) பொறுத்திருக்குமாறும் தாய் வீட்டில் சேர்ந்து கொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : ருபய்யிஃ (ரலி)
நூல் : நஸயீ 3440

திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முன்னர் விவாகரத்தான பெண்களுக்கு இத்தா இல்லை:

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் உங்களுக்காக அவர்கள் அனுசரிக்கும் இத்தா ஏதுமில்லை. (அல்குர்ஆன் 33:49)

இத்தா எனும் காத்திருப்பு எதற்காக?

எவருக்கும் எந்த அநியாயமும் பாதிப்புகளும் ஏற்படக்கூடாது என்பதற்காக அல்லாஹ் மார்க்கத்தில் பல வரையறைகளையும் சட்டங்களையும் அமைத்துள்ளான். அதனை மனிதர்கள் மீறும் பட்சத்திலேயே இழப்புகளை எதிர்க்கொள்கின்றனர். அந்த வகையில் திருமணத்தின் மூலம் பெண்களுக்கே அதிக கஷ்டங்கள் இல்வாழ்வில் ஏற்படுகின்றது. ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் இறந்து விட்டாலோ அல்லது அவளை விவாகரத்து செய்து விட்டாலோ இன்னும் அதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடுகின்றது. இளம் வயதுடைய ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரி நிலைமை ஏற்படின் அவளுக்கு இன்னொரு வாழ்க்கைத் துணை கட்டாயம் தேவைப்படும். எனவே அவள் மறுமணம் செய்ய வேண்டும்.

கணவன் இறந்து அல்லது விவாகரத்து செய்த மறுகணமே அல்லது காலவரையறை எதுவுமின்றி அவள் மறுமணம் செய்தால் அவளுக்கு மறுமணத்தின் பின்னர் கிடைக்கும் குழந்தைக்கு தந்தை யார்? என்பதில் சில வேளைகளில் புதிய கணவனுக்கோ மற்றவர்களுக்கோ சந்தேகம் ஏற்படலாம். இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக அதனை கண்டுபிடிக்க சாதனங்கள் இருப்பினும் பணத்தை வீசி பொய்யான மருத்துவ அறிக்கைகளைப் பெறுவதும் கூட மிக இலகுவாக உள்ளது. அதனால் பாதிக்கப்படுவது அந்தப் பெண் மட்டுமல்ல அவளது குழந்தையும் தான். அதனால் தான் அல்லாஹ் பெண்ணுக்கு மறுமணத்திற்காக ஒரு காத்திருப்பு (இத்தா) காலத்தை ஏற்படுத்தி கருவுற்றிருப்பதை ஊர்ஜிதம் செய்து தெளிவுபடுத்தியதன் பின்னரே மறுமணம் செய்ய அனுமதித்துள்ளான். இது பெண்களுக்கு கிடைத்த அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடையாகும்.

இத்தாவின் போது தடைசெய்யப்பட்டவை:

மறுமணம் செய்யக்கூடாது.
திருமண ஒப்பந்தம் செய்யலாகாது.

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றமில்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2:235)

மைதீட்டல், நறுமணம் பூசுதல், சாயம் பூசுதல், அலங்காரம் செய்தல் தவிர்க்க வேண்டும்.

‘இறந்தவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாட்களில் நாங்கள் சுருமா இடவோ, மணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப் பட்ட ஆடைகளை     அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும்போது மணப் பொருளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளோம்” என உம்மு அதிய்யா (ரலி) அறிவித்தார். நூல் : புகாரி 313

கணவனை இழந்த பெண், மஞ்சள் அல்லது சிவப்புச் சாயம் பூசப்பட்ட ஆடைகள், நகை ஆகியவற்றை அணியக் கூடாது; தலைக்குச் சாயம் பூசக் கூடாது; சுர்மா இடக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி) நூல்: அபூதாவூத் 1960

மறுமணத்தைத் தள்ளிப் போடும் இந்தக் காலகட்டத்தில் நகை அணியலாகாது. மருதானி போன்ற சாயங்கள் பூசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி) நூல் : அபூதாவூத் 1960, அஹ்மத் 25369

முற்றிலும் வண்ண ஆடைகளைத் தவிர்த்து வெள்ளையும் வண்ணமும் கலந்த ஆடையை அணியலாம்.

இத்தாவின் போது இருக்க வேண்டிய முறைகள்:

மேற்கூறிய தடைகள் தவிர மற்ற விடயங்களில் மார்க்கம் கூறியதற்கமைய எந்நாளும் இருப்பது போல் சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எம் சமுதாயத்து மக்களிடம் இத்தா இருக்கும் போது தான், யார் அஜ்னபி (திருமணம் முடிக்க அனுமதிக்கப்பட்டவர்கள்), யார் மஹ்ரமி (திருமணம் முடிக்க அனுமதிக்கப்படாதவர்கள்) என்பதை ஆராய்வார்கள். கணவனை இழந்தால் அல்லது கணவன் விவாகரத்து செய்தால் தான் மார்க்கத்தின் வரைறைகள் நினைவுக்கு வருகின்றன. மார்க்க வரையறைகள் எப்போதும் கடைபிடிக்க வேண்டியவை. அவற்றை கடைபிடிக்க கணவன் இறக்கும் வரை அல்லது விவாகரத்து செய்யும் வரை இருக்க வேண்டியதில்லை. மார்க்கச் சட்டமானது ஆண், பெண் எல்லோருக்கும் பொதுவானது. எப்போதும் பின்பற்றப்பட வேண்டியது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
அல்குர்ஆன் 24:31

முஹம்மதே! தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 24:30

எனவே இத்தா இருப்பதற்கு என்று விசேடமான முறைகள் எதுவுமில்லை. சர்வ சாதாரணமாக அன்றாடம் செய்யும் வேலைகளைச் செய்து கொண்டு அல்லாஹ் தவிர்க்கும் படி கூறியவைகளை மாத்திரம் தவிர்க்க வேண்டும். தேவை ஏற்படின் இத்தா காலத்தில் தொழிலுக்குக் கூட செல்ல அனுமதி உண்டு. ஆனால் மார்க்கத்தின் வரையறைகள் பேணப்பட வேண்டும்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் (இத்தாவில் இருந்த போது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம்; நீ (சென்று) உமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள்! ஏனெனில் (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும் என்றார்கள்.
நூல் : முஸ்லிம் 2972

இத்தாவின் போது நடைமுறைப்படுத்தப்படும் நூதனங்கள்:

இத்தாவின் போது நம்முடைய சமுதாய மக்கள் மார்க்கத்தில் இல்லாத சட்டங்களையும் சடங்குகளையும் ஏற்படுத்தி பெண்களை கஷ்டப்படுத்துவதைக் காணலாம். ஆனால் இஸ்லாம் மார்க்கமோ எந்த ஒரு மதமும் காட்டித்தராத அளவுக்கு இந்த இத்தா மூலம் பெண்களுக்கு ஏராளமான நன்மைகளை அள்ளித் தருகின்றது.

மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பின்வரும் நூதனமான காரியங்களை பார்ப்போம்.

வெள்ளை நிற ஆடையை மட்டும் இத்தா இருப்பவர் அணிதல்.

திரைச்சீலை, கட்டில் விரிப்பு, தலையணை உறை போன்றவற்றுக்கு வெள்ளை நிறத்துணி உபயோகித்தல். முகம் பார்க்கும் கண்ணாடியைக்   கூட விட்டு வைக்காமல் வெள்ளை நிறத் துணியால் அதனை மூடிவிடல்.

கர்ப்பிணித் தாய்மாருக்கு இத்தா இருக்கும் பெண்ணை பார்க்கத் தடை. காரணம் கருவில் இருப்பது ஆண் குழந்தையோ என்ற சந்தேகம்.   
 
ஒரு அறையில் இத்தா இருப்பவரை பூட்டி வைத்தல்.
வீட்டிற்குள்ளேயே உலாவுவதற்குக் கூட தடை.  

நோய் ஏற்பட்டால் வைத்தியரிடம் அழைத்துச் செல்லாதிருத்தல்.

தொலைக்காட்சி, புகைப்படம் (Photo) பார்க்க தடை.   

இத்தா இருக்கும் பெண்ணின் பேரப் பிள்ளைகள் மற்றும் மகளின் கணவனை கூட பார்க்கத் தடை மற்றும் சிறு ஆண் பிள்ளைகளைக் கூட பார்க்கத் தடை.

இவ்வனைத்தும் எமது மார்க்கத்தில் இல்லாத அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத மார்க்கத்துக்கு முரணான காரியங்களாகும்.

மறுமணத்திற்கு அனுமதி அளிக்கும் மார்க்கம்:

எமது சமுதாயத்திலும் அந்நிய மதத்தவர்களைப் போல ஒரு பெண்ணின் கணவர் இறந்தாலோ அல்லது விவாகரத்து செய்தாலோ இத்தாவுடைய காலம் முடிவடைந்த பின்னர் காலம் பூராகவும் அப்பெண் விதவையாகவே இருக்க வேண்டும் என்று மறுமணத்திற்கு தடை விதித்திருப்பதும் மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். காரணம் எமது மார்க்கத்தில் தான் பெண்களுக்கு மறுமணம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே மார்க்கம் அனுமதித்த ஒன்றை தடை செய்வதற்கு எமக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது.

பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
அல்குர்ஆன் 2:232

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 2:234
Previous Post Next Post