குர்’ஆனை நேசிப்பது எப்படி?

-சகோதரி ஸஹ்ரா ஹஸன்

உள்ளத்தில் அமைதி அல்லாஹ்வால் விரிவாக்கப்படுகிறது

குர்’ஆனின் மீது வழக்கமாக நாம் காட்டும் அன்பு என்பது, அதை பத்திரமாக அலமாரியில் வைத்து,  சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்குப் பின் அதை வெளியே எடுத்து, தூசி தட்டி, ஒன்றிரண்டு முறை அதை முத்தமிட்டு, மீண்டும் அலமாரியில் வைப்பது தான்.  ரமதான் maaமாதம் அல்லது ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் சமயத்தில் தான் அதைப் படிப்பதற்கு எடுப்போம்.

இது குர்’ஆனின் மீதுள்ள உண்மையான அன்பல்ல.  நாம் அனைவரும் அறிவோம், குர்’ஆன், முழு மனிதகுலத்திற்கும் வழிகாட்டி என நாம் அறிவோம். ஆனால் என்றாவது அதற்கு நெருக்கமாக உணர்ந்திருக்கிறோமா? குர்’ஆனுடன் மகிழ்ச்சியாக கழித்த ஒரு நாள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இந்த விசித்திரமான அன்பைப் பற்றி உங்களுக்குத் தெரிந்து கொள்ள விருப்பமா?

உங்களால் ஏன் குர்’ஆனின் மேல் அன்பு காட்ட முடிவதில்லை?

இயலாமை

இன்றும் கூட ஒரு அரபி எழுத்து கூட தெரியாமல் இருக்கும் பலரையும் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர்களுக்கு குர்’ஆன் ஓதத் தெரியாது, இன்னும் சிலருக்கு குர்’ஆனைப் பற்றி எதுவுமே தெரியாது.  அவர்கள் இதை ஒரு இயலாமை என்று எண்ணுகிறார்கள். அவர்களைப் படிக்கச் சொன்னால், அவர்களுக்கு அதில் விருப்பம் இருப்பதில்லை அல்லது ஆர்வம் இல்லை.  அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் ஹிதாயத் அளிப்பானாக. ஆமீன்.

பரிச்சயமில்லாதது

மக்கள் கூறும் பல காரணங்களில் ஒன்று, அவர்களுக்கு அரபி மொழி பரிச்சயமில்லாததால், குர்’ஆனில் மேல் ஒட்டுதல் வரவில்லை என்பது.  ஆனால், இந்த காரணத்தை, அரபி கற்றுக் கொள்வதற்கு நிறைய சந்தர்ப்பங்களும், சாதனங்களும் உள்ள இந்நாட்களில் சொல்லக்கூடாது.  அல்லாஹ் தன் வேதத்தை அரபியில் அருளிய காரணம், புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கும் என்பதால் என குர்’ஆனில் குறிப்பிடுகிறான்.

நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம். [அல் குர்’ஆன் 12:2]

பரபரப்பான வாழ்க்கை

மக்கள் தங்களுக்கு குர்’ஆனை எடுத்து பக்கங்களைப் புரட்ட நேரமில்லை என்று சொல்கிறார்கள். நமக்கு, உண்ணுவதற்கும், துணிகளை இஸ்திரி போடுவதற்கும், உறங்குவதற்கும், உல்லாசப்பயணம், பொழுதுபோக்குகள் போன்ற அனைத்திற்கும் நேரம் இருக்கிறது. அதனால், நம் நேரத்தில் சில நிமிடங்களை ஏன் குர்’ஆனுக்காக ஒதுக்கக்கூடாது?

நொண்டிச் சாக்குகள்

“நாங்கள் தொழுகையில் ஓதுகிறோம், அது போதும்” போன்ற வெற்று சாக்குப் போக்குகளைக் கேட்கும்போது கோபம் வருகிறது.  சிலர், ‘ஒன்றும் பிரச்சினை இல்லை, அல்லாஹ் எங்களை மன்னிப்பான்.’ என்றும் கூறுகின்றனர். இன்னும் சிலர், ‘நாங்கள் நன்மைகளைச் செய்து, தீமைகளிலிருந்து விலகியிருந்தால் போதும். எங்களுக்கு நிறைய வேலைகள் இருப்பதால், எங்கள் நேரத்தை ஓதுவதில் கழிக்க முடியாது.’ என்று கூறுகின்றனர்.  சிலர் அலுத்துப் போய், ‘நாங்கள் பாவிகள். எங்களுக்கு குர்’ஆன் ஓத தகுதியில்லை.’ என்று கூறுவர்.

இதெல்லாம், மிகவும் வீணான சாக்குப்போக்குகள். மேலும், இப்படிப் பேசுவது அவர்களை நேராக ஜஹன்னத்தில் கொண்டுபோய் சேர்க்கும். அதனால், கவனமாக இருங்கள். பொய்யான செய்திகளைப் பேசிக்கொண்டிருப்பதன் மூலம் சூழ்நிலையை கட்டுப்படுத்தாதீர்கள். அல்லாஹ் (சுபஹ்) நம் அனைவரையும் காப்பானாக.

வேறுபட்ட பார்வைகள்

குர்’ஆனை நீங்கள் மிகவும் அரிய பொருளாகப் பார்த்தீர்களானால், உங்களுக்கு அதன் மேல் நேசம் இருக்கும்,  ஆனால், பெரும்பாலானவர்கள், அதை ஒரு புனித புத்தகமாகக் கருதி அதன் மதிப்பை அறியாமல் அதை ஒதுக்கி வைத்து விடுகிறார்கள்.  சிலர், ஆராய்ச்சி செய்யும் எண்ணத்துடன் குர்’ஆனைப் படிக்கிறார்கள். சிலர், மற்ற வேதங்களுடன் ஒப்பிடும் எண்ணத்துடன் படிக்கிறார்கள். சிலர், அதையும் ஒரு சாதாரண வேலையாகச் செய்கிறார்கள். சாதாரணமாக மக்கள் குர்’ஆனுடைய வசனங்களைக் காண தேர்ந்தெடுக்கும் வழிகளில் சில, இவை. “என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார். [அல் குர்’ஆன் 25:30]

நமக்கு குர்’ஆனின் மேல் அன்பில்லாவிட்டால் என்ன ஆகும்?

குறைவான ஈமான்

நீங்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமாக உணரமாட்டீர்கள்.  உங்களுடைய மனம் சந்தேகத்திலேயே இருக்கும், அதனால், நீங்கள் தீர்மானமில்லாமல் நடந்து கொள்வீர்கள். உங்களுடைய ஈமான் பலவீனமாகி அல்லாஹ்வுடன் உள்ள உறவை இழந்து விடுவீர்கள்.

கடினமான மனம்

உங்கள் உள்ளம் மென்மையாக இல்லை என்பதை உணருவீர்கள்.  மரியாதையாக நடந்து கொள்ள மாட்டீர்கள். கர்வம் உங்களை மிகைத்து விடும்.  ‘அல்லாஹ்’ என்ற சொல்லைக் கேட்கும்போது, உங்கள் உள்ளம் நடுங்காது.

பாவச்செயல்கள் அதிகரித்து விடும்.

நீங்கள் ஒரு பாவச்செயலைச் செய்யும்போது அது பாவம் என உணர மாட்டீர்கள்.  இது ஒரு தவறான செயல் அல்ல என உங்களை நீங்களே சமாதானப் படுத்திக் கொள்வீர்கள். வாக்குகளை மீறுவதும், பொய் சொல்லுவதும், மக்களிடம் நேர்மையின்றி இருப்பது, போன்றவை உங்களுக்குப் பழக்கமாகிவிடும்.  இது, உங்கள் செயல்களை பாவம் என்றே நினைக்காத அளவு  உங்களை பாவக்குழியில் தள்ளிவிடும்.

நற்செயல்கள் குறைதல்

படிப்படியாக உங்கள் நற்செயல்கள் குறைந்துவிடும்.  தொழுகையை விடுவீர்கள், நல்ல மனிதர்களின் தொடர்பை தவிர்ப்பீர்கள். எல்லாமே சுமையாக எண்ணத் தொடங்குவீர்கள்.

ஏமாற்றம்

மேலே குறிப்பிட்டுள்ள விளைவுகள் அத்தனையும் உங்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கும். நீங்கள் எப்போதும் ஒரு எரிச்சலுடனும், ஏமாற்றத்துடனும் இருப்பீர்கள்.  உங்களுடைய படிப்பு, வேலை, உங்கள் குடும்பம் எல்லாமே ஒரு சுமையாகத் தோன்றும்.  எதிர்மறையான எண்ணம் உங்களைச் சூழ்ந்திருக்கும், உங்களிடம் எந்த நேரிடையான எண்ணமும் இருக்காது.

‘(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை. (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.’ [அல் குர்’ஆன், 36:69-70]

இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. [அல் குர்’ஆன் 17:82]


குர்’ஆனின் மீது பிரியம் ஏற்படுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

யோசியுங்கள்:

உங்கள் நேரத்தில் சிறிது ஒதுக்கி, ஓய்வெடுங்கள். உங்கள் வாழ்வையும், மறுமையையும் பற்றி நினைத்துப் பாருங்கள்.  குர்’ஆனுடன் உங்களுக்குள்ள பிடிப்பை எண்ணிப் பாருங்கள். பிறகு, அதன் மேல் நேசம் கொள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என யோசியுங்கள். ஒரு பட்டியல் இடுங்கள்.

செயல்படுத்துங்கள்:

அந்த பட்டியலை செயல்படுத்துங்கள். குர்’ஆனிலிருந்து ஒரு பக்கத்தையேனும் தினமும் படியுங்கள்.  இப்போது அது உங்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தால், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் சில வசனங்களையாவது படியுங்கள்.  உங்களால் படிக்க முடியாவிட்டால் கவலைப் படாதீர்கள்.  ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ‘நிச்சயமாக, குர்’ஆனை அழகாக, சரளமாக, சரியாக ஓதுபவர் மிக சங்கை மிக்க கடமை தவறாத வானவர்களுடன் இருப்பார்கள்.  சிரமத்துடன், திக்கித் திணறி ஓதுபவருக்கோ அது போல் இரு மடங்கு நன்மை உண்டு.”[புகார், முஸ்லிம்]

புரிந்து கொள்ளுங்கள்:

ஓதுதல் மட்டும் போதாது.  நீங்கள் ஓதுவதன் பொருளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.  உங்களுக்கு அரபி புரியாவிட்டால், உங்கள் மொழியில் உள்ள குர்’ஆன் மொழிபெயர்ப்பை ஓதும்போது உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் ஓதுவதைப் புரிந்து கொள்வது, குர்’ஆனின் மேல் உங்கள் நேசத்தை வளர்ப்பதற்கு மிகவும் முக்கியம்.  (உங்களுக்கு குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், இங்கே சொடுக்குங்கள் உங்களுக்குத் தேவையானது கிடைக்கும், இன் ஷா அல்லாஹ்)

உங்களுடைய புலன்களை ஈடுபடுத்துங்கள்:

குர்’ஆனுடைய வசனங்களை ஆராயும்போது, உங்கள் புலன்களை ஈடுபடுத்துங்கள்.  ஓதும்போது உணருங்கள், வசனங்களைப் பற்றி சிந்தியுங்கள். எச்சரிக்கும் வசனங்களைப் படிக்கும்போது உங்களுக்கு நடுக்கம் வர வேண்டும், நற்செய்திகளைத் தரும் வசனங்களை ஓதும்போது உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க வேண்டும், வேதனைகளைப் பற்றி படிக்கும்போது சோகம் ஏற்பட வேண்டும். குர்’ஆனை உங்களால் உணர முடியும்போது உங்களால் குர்’ஆனை இன்னும் அதிகமாக நேசிக்க முடியும்.

தேடுங்கள் மேலும் தேடுங்கள்:

அதிகமான விஷயங்களுக்காக குர்’ஆனைத் தேடுங்கள்.  நீங்கள் தேடத் தேட இன்னும் அழகான சிந்திக்கக் கூடிய வசனங்களைப் படிப்பீர்கள்.  அவற்றையும், தேவையிருந்தால, உங்களுடைய எண்ணங்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். விரைவில் குர்’ஆன் எப்படி அறிவுபூர்வமாக சத்தியத்தைத் தாங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

மனப்பாடம் செய்யுங்கள்:

உங்களைக் கவரும் வசனங்களை மனப்பாடம் செய்யுங்கள். நீங்கள் மனப்பாடம் செய்யச் செய்ய, ஆர்வம் அதிகரித்து, இறுதியில் முழு குர்’ஆனையும் மனப்பாடம் செய்ய விரும்புவீர்கள்! நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? [அல் குர்’ஆன் 54: 17]

தொழுகையில் ஓதுங்கள்:

நீங்கள் மனப்பாடம் செய்தவற்றை உங்களுடைய ஐவேளைத் தொழுகைகளில் ஓதுங்கள். உங்கள் துவாக்களிலும் அவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

குர்’ஆனை ஒரு வெறும் பிரார்த்தனைப் புத்தகம் என எண்ணாதீர்கள்:

குர்’ஆனை ஒரு பிரார்த்தனைப் புத்தகம் என்று மட்டும் எண்ணினால், அதன் மேல் உங்கள் நேசம் குறைவாகத் தான் இருக்கும், மேலும், அது சுயநலத்தின் அடிப்படையில் தான் இருக்கும். அதனால், பல்வேறு கோணங்களில் குர்’ஆனைப் பாருங்கள் – ஒரு வேதமாக, வழிகாட்டியாக, நீதிநூலாக, சட்டப்புத்தகமாக அல்லது அறிவியல் புத்தகமாக. நீங்கள் எந்த அளவிற்கு வெவ்வேறு கோணங்களில் ஆராய்கிறீர்களோ அந்த அளவு அதன் மீது நீங்கள் பிரியம் கொள்வீர்கள்.

 குர்’ஆனின் படி வாழுங்கள்:

குர்’ஆனில் சொல்லியபடி நீங்கள் வாழாவிட்டால், மேலே கூறிய அனைத்தும் வீண் தான்.  அதனால், அதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு அறிவுரையையும் கடைபிடியுங்கள், உற்சாகப்படுத்தும் குறிப்புகள், ஊக்கமளிக்கும் சொற்கள், உதவக்கூடிய திறன்கள், உங்களுக்கு நேர்வழி காட்டும் எச்சரிக்கைகள் போன்றவற்றை செயல்படுத்துங்கள். குர்’ஆனின் படி வாழுங்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இருந்தது போல ஒரு நடமாடும் குர்’ஆனாக இருங்கள். ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடைய குணத்தைப் பற்றி கேட்கப்பட்ட போது, அவர்கள், ‘நபி(ஸல்) அவர்களுடைய குணம் குர்’ஆனாகவே இருந்தது’ என்று பதிலளித்தார்கள். [புகாரி]

உங்களுடைய நம்பிக்கையை உறுதியாக்குங்கள்:

அல்லாஹ்வை அடிக்கடி நினைவு கூருவதன் மூலம் உங்களுடைய ஈமானை உறுதியாக்கிக் கொள்ளுங்கள், ஏனென்றால், நேசம் பிறக்கும் இடத்தில் தான் விசுவாசமும் இருக்கிறது. உங்களுடைய விசுவாசம் எத்தனை ஆழமாக இருக்கிறதோ, குர்’ஆனின் மீது உங்களுக்குள்ள பிரியமும் அத்தனை ஆழமாக இருக்கும்.  அதனால், உங்களுடைய ஈமானில் உறுதியாக இருந்து, வித்தியாசத்தை உணருங்கள்.

(நபியே!) “ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரீல்) இதை இறக்கி வைத்தார்” என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக.’ [அல் குர்’ஆன் 16:102]


குர்’ஆனை நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பதை எப்படி அறிவது?

அல்லாஹ்வுடன் நெருக்கம்:

அல்லாஹ்விடம் மிகவும் நெருங்கியிருப்பதாக உணருவீர்கள்.  அவனுடைய இருத்தலை உணர்வீர்கள், படிப்படியாக அவனுடன் உள்ள நெருக்கத்தை வளர்த்துக் கொள்வீர்கள்.

தனிப்பட்ட வளர்ச்சி:

உங்களுடைய தனிப்பட்ட குணநலன் வெகுவாக மேம்படுவதுடன், நேர்மறையான உணர்வை பிரதிபலிப்பீர்கள்.

திருப்தியும் அமைதியும்:

உங்களைப் பற்றி திருப்தியும், மகிழ்ச்சியும் அடைவீர்கள்.  அமைதி உங்களைச் சூழும், மனம் லேசாக இருக்கும்!

நன்மையை ஏவி, தீமையைத் தடுங்கள்:

நீங்கள் பாவக்குழியில் வீழ்ந்து விடாமல், பாவங்களைப் பற்றி கவனமாக இருப்பீர்கள்.   நற்செயல்கள் புரிய உற்சாகப்படுவீர்கள். மற்றவர்கள் விஷயத்திலும், அவர்கள் பாவம் செய்யும்போது தடுத்து, நற்செயல் புரிய ஊக்கமளிப்பீர்கள்.

தன்னம்பிக்கை:

நீங்கள் நம்பிக்கை நிறைந்து இருப்பீர்கள், நீங்கள் எண்ணியது கிடைக்காவிட்டாலும், மறுமையில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.  நீங்கள் செய்யும் அனைத்திலும் வெற்றி கிட்டும்.  உடனே கிடைக்காவிட்டாலும், உங்கள் வாழ்வின் பிற்பகுதியில் கிடைக்கக்கூடும், அல்லது, அது பத்திரப்படுத்தப் பட்டு, மறுமை வெற்றியாக உங்களுக்குக் கிடைக்கும் என்பதில் உறுதியான நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.

இறுதியாக:

இறுதியாக, இக்கட்டுரையை ஒரு அழகிய, உற்சாகமூட்டும் சொற்களுடன் முடிக்கிறேன்: ‘எவர் குர்’ஆனைப் படித்து அதை பிரியத்துடன் இதயத்தில் தாங்கியிருக்கிறாரோ, அவர் மக்கள் உறங்குகையில் தன் இரவுகளையும், மக்கள் பரபரப்பாக இருக்கும் தன் பகல்களையும், மக்கள் சந்தோஷமாக இருக்கும்போது தன் வருத்தத்தையும், மக்கள் சிரிக்கும்போது தன் அழுகையையும், மக்கள் பேசிக்கொண்டிருக்கும்போது தன் மௌனத்தையும், மக்கள் கர்வத்துடன் இருக்கும்போது தன் பணிவையும் அருமையாக கருதுவார்.’ அவர் வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் அவருக்கு மிகவும் அருமையானதாக இருக்கும். அவர் என்றும் கடுமையாகவோ, சண்டைபோடுபவராகவோ இல்லாமல், மென்மையாக இருப்பார்.  சந்தையில் கூச்சலிடுபவராகவோ, முன்கோபக்காரராகவோ இருக்க மாட்டார்.’ ‘இப்னு மஸ்’வூத்  
Previous Post Next Post