சிக்கனமான செலவே சீரான வாழ்க்கை

பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்..

இமாம் ஹஸன் கூறுகிறார்கள்: சிக்கனமாக செலவு செய்பவர் ஏழ்மை அடைய மாட்டார்.

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஸுஹ்து நூலில் இருந்து இமாம் ஹசன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்று, எண் : 1560

1560 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنِي هَارُونُ، حَدَّثَنَا سَيَّارٌ، حَدَّثَنَا جَعْفَرٌ، حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ زِيَادٍ قَالَ: سَمِعْتُ الْحَسَنَ، «يَحْلِفُ بِاللهِ مَا عَالَ مُقْتَصِدٌ قَطُّயு


கருத்து

செல்வத்தை சம்பாதிப்பது நமது தேவைகளுக்கு செலவு  செய்வதற்காகத்தான். ஆனால், செலவு செய்கிறபோது கவனம் இருக்க வேண்டும். நடுத்தரமாக, நிதானமாக, சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். அப்படி செலவு செய்தால் நமது நாளைய அவசிய தேவைகளுக்கு நாம் பிறரிடம் தேவையாகக்கூடிய நிலை ஏற்படாது. 

இல்லை என்றால் ஒரு நாள் நமக்கு முக்கிய தேவை ஒன்று வரும். அப்போது அதற்கு செலவு செய்ய நம்மிடம் கையில் செல்வம் இருக்காது. பிறரிடம் கடன் கேட்கவோ அல்லது யாசகம் கேட்கவோ கையேந்தும் நிலை உண்டாகிவிடும்.

விளக்கம்

இமாம் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்று ஒவ்வொன்றும் குர்ஆன், ஸுன்னாவின் ஊற்றுகளில் இருந்து ஊறிய மதுரமாகும். 

மனிதனின் கையில் நாலு காசு வந்துவிட்டால் அவன் ஆடுகிற ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. வசதி வர வர வாழ்க்கையின் பாதை பலருக்கு மாறிவிடுகிறது. செல்வம் கூடிவிட்டால் பலருக்கு ஆடம்பரமும் அனாவசிய செலவும் தொற்றிக் கொள்கிறது. வருமானம் பெருகிவிட்டால் ஊதாரித்தனமாக செலவு செய்வதில் பலருக்கு நாட்டம் செல்கிறது. 

பல செல்வந்தர்கள் உடைய வேலையே என்னவென்றால், தேவையற்றதை வாங்குவது, போதுமான அளவு வசதியாக இருக்கும் வீட்டையே இடித்து விட்டு மிகப் பெரிய வீட்டை பிரமாண்டமாக கட்டுவது, ஆடம்பர பொருட்களை அளவுக்கு அதிகமாக வாங்கி குவிப்பது. இப்படியாக செல்வத்தை செலவழிப்பதை வழக்கமாக ஆக்கிக் கொண்டிருப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் கண்கூடாக பார்க்கிறோம்.

செல்வத்தை அல்லாஹ் நமக்கு ஏன் கொடுத்திருக்கிறான் என்பதை நாம் முதலில் புரிய வேண்டும்.

செல்வம் இந்த உலக வாழ்க்கை நகர்வதற்கு மிக மிக முக்கியமான ஒரு மையப்பொருளாக இருக்கிறது. மனிதன் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதும், விமானங்கள் பறப்பதும், கப்பல்கள் மிதப்பதும், ஊர்திகள் இங்குமங்கு நீண்ட தூரங்களை கடப்பதும், மனிதன் முதுகில் சுமப்பதும், படிப்பதும், பணி செய்வதும் இப்படி எல்லாம் இந்த செல்வத்தை பெறுவதற்காகத்தான். 

மக்களின் வாழ்க்கையை நிறுத்தி நிலையாக்கக் கூடியது இந்த செல்வம் என்று அல்லாஹ் இந்த செல்வத்தை பற்றி கூறுகிறான்.

ஒருவேளை உணவு சாப்பிடுவதற்கு கூட இந்த செல்வம் தேவை. இன்றோ நல்ல தண்ணீர் குடிப்பதற்கு கூட இந்த செல்வம் தேவை என்றாகி விட்டது. சில இடங்களில் சுவாசிக்க நல்ல சுத்தமான ஆக்ஸிஜன் காற்றுக்கு கூட காசு கொடுத்தாக வேண்டும். 

காசு இல்லை என்றால் நோய்க்கு மருத்துவம் இல்லை. பசித்தவனுக்கு உணவில்லை. குடி இருக்க வீடில்லை என்கிற அளவிற்கு செல்வத்தை வைத்தே உலகத்தின் இயக்கம் இருப்பதை எந்த அறிவாளியும் மறுக்க மாட்டான். நாலு பேருக்கு தர்மம் கொடுக்க, நாலு ஏழைகளுக்கு உணவளிக்க, அனாதைகளை ஆதரிக்க, அல்லாஹ்வின் இல்லத்தை கட்டி எழுப்ப, இப்படி எந்த நல்ல காரியத்தையும் கூட செல்வம் இன்றி செய்ய முடியாது.

ஆகவேதான், இஸ்லாமிய மார்க்கத்தில் செல்வத்தை சம்பாதிக்கவும் அதை செலவழிக்கவும் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

மனிதன் ஹலாலான வழிகளில்தான் செல்வத்தை ஈட்ட வேண்டும். ஹலாலான வழிகளில்தான் அதை பெருக்க வேண்டும். ஹராம் -என்ற தடுக்கப்பட்ட வழிகளில் செல்வத்தை சேகரிப்பது மிகப் பெரிய குற்றமும் பாவமும் ஆகும். தொழுகையை விடுவது, அல்லது அதை அலட்சியம் செய்வது எத்தகைய பெரிய பாவமோ அதுபோன்றுதான் ஹராமான தொழில் செய்வதும், ஹலாலான தொழிலை ஹராமான முறையில் செய்வதும், ஹலாலான தொழிலில் ஹராமை கலப்பதும் அந்தளவு பெரிய பாவமாகும்.

பெரும்பாலான முஸ்லிம்களுக்கு இந்த அறிவு இருப்பதில்லை. வட்டிக்கு விடுவதை மட்டும் குற்றமாக பார்க்கின்றனர். மது விற்பனை செய்வதை மட்டும் பாவமாக கருதுகின்றனர். பன்றிப்பண்ணை வைப்பதை பாவமாக எண்ணுகின்றனர். ஆனால், நிறுவையில் அளவையில் குறைப்பதை, வாக்கு மீறுவதை, கலப்படம் செய்வதை, போலி பொருளை விற்பனை செய்வதை, ஒப்பந்தங்களை மீறுவதை, பிறர் தொழிலில் குறுக்கே செல்வதை, குறைகளை மறைப்பதை, இன்னும் இப்படியாக இஸ்லாமிய மார்க்கத்தில் வியாபார பாடத்தில் தடுக்கப்பட்டுள்ள பல ஹராமான செயல்களை தங்களது ஹலாலான பொருட்களின் விற்பனையில் கலந்து விடுகிறார்கள். இதனால் அவர்களின் வருமானம் ஹராமாக, சந்தேகத்திற்கு இடமானதாக ஆகிவிடுகிறது.

சரி, ஹலால் ஹராம் பார்த்து பேணுதலாக சம்பாதித்து விட்டாலும் நமது பொறுப்பு நீங்கிவிடாது. மாறாக, அந்த செல்வத்திற்கு ஸகாத் கொடுக்க வேண்டும். பிறகு உபரியான தானதர்மங்கள் கொடுக்க வேண்டும். தாய் தந்தை, பிள்ளைகள், மனைவிகள், சகோதர சகோதரிகள் இப்படியாக நெருங்கிய, தூரமான ரத்த உறவுகள், பிறகு ஏழைகள், அனாதைகள், மார்க்கத் தேவைகள் என்று பல நல்ல வழிகளில் அந்த செல்வத்தை நாம் செலவு செய்ய வேண்டும். 

நமது மறுமைக்காக நாம் இறந்த பின்னரும் நன்மைகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதற்காக சதகா ஜாரியா - நிலையான தர்மமாகவும் செல்வத்தின் ஒரு பகுதியை ஆக்க வேண்டும். போதுமான அளவு வாரிசுகளுக்கும் செல்வத்தை விட்டு செல்ல வேண்டும். இவை போக நமது ஹலாலான ஆசைகளுக்கும் தேவைகளுக்கும் நாம் வரம்பு மீறாமல் செலவு செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறோம்.

அல்குர்ஆனில் இது குறித்து சொல்லப்பட்டுள்ள இரு வசனங்கள் மிக முக்கியமானவை ஆகும்.

அல்லாஹு தஆலா கூறுகிறான்:

﴿وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا ﴾
அவர்கள் தர்மம் (அல்லது செலவு) செய்தால் அளவு கடந்துவிட மாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்யமாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் செய்வார்கள்.  (அல்குர்ஆன் 25 : 67)

﴿وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًا مَحْسُورًا ﴾

(உமது பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உமது கைகளைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்! (உம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உமது கையை முற்றிலும் விரித்து விடாதீர்! அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும் முடைப்பட்டவராகவும் தங்கிவிடுவீர்.  (அல்குர்ஆன் 17 : 29)

இத்தகைய தெளிவான வழிகாட்டல் நமக்கு கொடுக்கப்பட்ட பின்னர் ஒருவர் வாழ்க்கையில் சிரமப்பட்டால் அதற்கு அவர்தான் பொறுப்பு.

வாழ்க்கை என்பது ஒரு கடலில் பயணம் செய்கிற ஓர் ஓடத்தை போன்றுதான். திடீரென கடலில் கொந்தளிப்பு ஏற்படலாம், எதிர்பாராமல் கடும் புயல் வீசலாம். இப்படியாக குழப்பங்கள் வருவதும் திசைகள் மாறுவதும் கடல் பயணத்தில் சகஜமாக இருப்பதுபோன்றே வாழ்க்கை என்கிற பயணத்திலும் வறுமையும் செல்வமும் ஒட்டிப் பிறந்தவை. வசதியும் நெருக்கடியும் இணைபிரியா நண்பர்கள்.

ஒருவர் ஏழையாக பிறந்ததால் அவர் வாழ்நாள் எல்லாம் ஏழையாக இருப்பார் என்று அர்த்தமல்ல. ஒருவர் செல்வந்தராக பிறந்ததால் அவர் வாழ்நாள் எல்லாம் செல்வந்தராக இருப்பார் என்று அர்த்தமல்ல. 

ஏழையை செல்வந்தனாக ஆக்குவதும் செல்வந்தனை ஏழையாக்குவதும் அல்லாஹ் தனது ஞானத்தின் படி செய்து முடிக்கிறான். எல்லாம் இந்த உலகத்தில் ஒரு சோதனைதான். 

ஆகவே, வறுமையில் துவண்டு விடவும் கூடாது. செல்வத்தில் துடிக்கவும் கூடாது. நெருக்கடியான வாழ்க்கையில் இருப்பதால் கூனிக்குருகிவிடவும் கூடாது. வசதியான வாழ்க்கையில் இருப்பதால் ரொம்ப ஆடவும் கூடாது.

வறுமைக்கு பின்னர் வருமானம் அதிகரித்தால் வாயும் கையும் அளவு கடந்து நீளவும் கூடாது. வீடும் வாகனமும் மாறவேண்டும் என்ற அவசியம் கிடையாது.

தனது வருங்கால தேவைகளை கவனத்தில் வைக்க வேண்டும். தனது குடும்பம், பிள்ளைகளின் எதிர்கால தேவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். ஓரளவிற்கு நல்ல சேமிப்பு இருப்பதை மார்க்கம் குறை சொல்லவில்லை. ஸகாத்தை நாம் சரியாக கொடுத்துவிட்டால் நாம் செல்வத்தை சேமிப்பதில் மார்க்கம் நம்மை குற்றம் பிடிக்காது.

ஆகவே, செல்வத்தின் ஆரம்ப படியில் இருப்பவர்களும் செல்வத்தின் நடுப்படி யில் இருப்பவர்களும் செல்வத்தின் உச்சத்தில் இருப்பவர்களும் கால சூழ்நிலைகள் மாறக்கூடியவை என்பதை மறந்து விடக்கூடாது. காலத்தை சக்கரத்திற்கு ஒப்பிடுவார்கள். காரணம், சக்கரம் சுற்றுவதை போன்று காலம் சுற்றிக் கொண்டே இருக்கும். கீழே இருப்பவர் மேலே வருவார். மேலே இருப்பவர் கீழே வருவார். ஆகவே, எப்போதும் நிதானம் வேண்டும். தலைகால் புரியாமல் ஆடக்கூடாது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செலவு செய்யக் கூடாது. ஓர் இடத்தில் செலவு செய்யும் முன்பாக நன்கு யோசித்து ஆலோசித்து செலவு செய்ய வேண்டும். மார்க்க அறிஞர்களின் ஆலோசனை படி செலவு செய்ய வேண்டும். 

மனம் விரும்பிய படி மனம்போன போக்கில் செலவு செய்ய கூடாது. எதிலும் நடுத்தரம் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மிக விருப்பமானது என்பதை மறந்து விடக்கூடாது. பிறர் கஞ்சன் என்று திட்டும் அளவிற்கு கருமியாகவும் இருக்கக் கூடாது. அல்லது, இவனா, இவன் ஓர் ஊதாரி என்று குறை சொல்கிற அளவிற்கு அளவு கடந்து செலவு செய்பவனாகவும் இருக்கக் கூடாது.

இடம் பொருள் ஏவல் அறிந்து அதற்கேற்ப செலவு செய்ய வேண்டும். முன்னுரிமை கொடுக்க வேண்டியவை, உடனே செய்ய வேண்டியவை, அவசியமாக செய்ய வேண்டியவை, பிறகு, அடுத்தது, பிறகு அடுத்தது என்று தராதரம் அறிந்து நாம் நமது செல்வத்தை செலவு செய்ய வேண்டும்.

நமது சொந்த தேவைக்காக இருந்தாலும் எதில் அதிகம் செலவு செய்ய வேண்டும், எதில் அதிகம் செலவு செய்யக் கூடாது என்பதை அறிந்து புரிந்து செலவு செய்ய வேண்டும்.

நிலையான தேவை, தற்காலிகமான தேவை, அவசியமான தேவை, உபரியான தேவை, முக்கியமான தேவை, அதிகப்படியான தேவை என்று பல வகையான தேவைகள் உள்ளன. ஒவ்வொரு தேவைக்கும் அதற்குரிய அளவைதான் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் வாழ்க்கை குழப்பமாகிவிடும்.

இதைத்தான் இமாம் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அழகாக சுருக்கமாக சொன்னார்கள், சிக்கனமாக செலவு செய்கிறவர் ஒருபோதும் பிறரிடம் தேவையாக மாட்டார் என்று.

கருமித்தனமில்லா சிக்கனத்தை கடைபிடிப்போமாக! கஞ்சத்தனமில்லா நடுத்தரத்தை பின்பற்றுவோமாக! ஊதாரியாகவும் இல்லாமல், பகட்டுக்கு செலவு செய்கிற பெருமைக்காரனாகவும் இல்லாமல் ஒவ்வொரு தேவையின் தரத்தையும் அதற்கு செலவு செய்ய வேண்டிய அளவையும் அறிந்து அதன்படி செலவு செய்வோமாக! அல்லாஹ் நமக்கு கொடுத்த செல்வத்தின் அருமையை அறிவோமாக!

நமக்கு அல்லாஹ் கொடுத்த செல்வத்தின் மூலம் நாமும் தேவையான அளவு ஆகுமான வழிகளில் பயன் பெற்று, இன்புற்று, சுகமாக வாழ்ந்து, பிற மக்களுக்கும் அந்த செல்வத்தை பகிர்ந்தளித்து மனமுவந்து அள்ளிக் கொடுத்து, தான தர்மம் செய்து ஈகை குணத்தோடு வாழ்வோமாக! 

வீண்விரயம் செய்வதையும் கருமித்தனத்தையும் தவிர்ப்போமாக!

அல்லாஹ்வே! எங்களை உன் கட்டளை படி நடக்கிற நல்லோரில் ஆக்குவாயாக! ஆமீன்.

Previous Post Next Post