தர்மத்தைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்

தர்மத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:

1. ஸதகா என்பது ஏழைகளுக்கு உணவளிப்பது மட்டுமன்று. இஸ்லாத்தில், அது இன்னும் விரிவான பொருளைக் கொண்டது. உங்களுடைய எண்ணம் சரியாக இருந்தால், நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்கு செலவு செய்வது கூட ஒரு ஸதகாவாகக் கணக்கிடப்படும். (முஸ்லிம் 1002)

2. ஸதகா என்ற சொல் செல்வம் சார்ந்தது மட்டுமல்ல, அதற்கும் மேலானது. உங்கள் தாய்க்கு சமையலில் உதவி செய்வது, பூனையைக் கவனித்துக் கொள்வது, ஏன், அதிகம் புன்னகைப்பது கூடத்தான்! அதனால், உண்மையில் தர்மம் செய்ய வேண்டுமென்றால், பணக்காரராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நபி ﷺ மற்றவற்றுடன் சேர்த்து, புன்னகைப்பது, மனைவிக்கு ஒரு கவளம் உணவூட்டுவது, திக்ர் செய்வது, நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது, துஹா தொழுவது போன்றவற்றையும் தர்மம் என்றார்கள். [முஸ்லி 720].

3. ஸதகாவை தூய்மையான செல்வத்திலிருந்து தான் கொடுக்க வேண்டும். ஒருவர் தன்னுடைய பாவங்களுக்கு பரிகாரமாக தவறான வழியில் சம்பாதித்தவற்றை தர்மமாகக் கொடுக்கலாம் என நினைத்தால் அவர் மிகவும் தவறாகப் புரிந்திருக்கிறார். ஏனென்றால், தவறான வழியில் சம்பாதிப்பது அவருக்கே சொந்தமில்லாத பணம். அப்படியிருக்கும்போது அதை எப்படி அடுத்தவருக்கு கொடுக்க முடியும்? அதைவிட, எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரமாக, நன்மையை எதிர்பாராமல், அதை நம் செல்வத்திலிருந்து நீக்கி விட வேண்டும். அல்லாஹ் ﷻ கூறியுள்ளான்: நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; [அல் குர்’ஆன் 2:267]

4. யாருக்கு தர்மம் அளிக்கிறீர்களோ அவர்கள் தங்களைத் தாழ்வாக நினைக்கும்படி செய்தால் அது செல்லாது: அல்லாஹ் ﷻ கூறுகிறான்: நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்;[ அல் குர்’ஆன் 2:264]

5. தர்மம் தர்மம் போல் தோன்ற வேண்டுமென்பது கட்டாயமில்லை. நீங்கள் தர்மம் செய்வதற்கு சாதுரியமான பல வழிகளைக் கண்டுபிடிக்கலாம். உதாரணமாக, ஒரு ஏழை வியாபாரியின் பொருட்களை அவற்றின் விலையை விட அதிகமாகக் கொடுத்து வாங்குதல், கடன் சுமையில் இருக்கும் ஒரு சகோதரருடைய வங்கிக் கணக்கில் பணம் போடுவது, போன்றவை. இதை ஒழுங்காகச் செய்தால், நம்முடைய எண்ணங்களைத் தூய்மையாக வைத்திருக்கவும், தர்மம் பெறுபவரின் கௌரவத்தைக் காப்பாற்றவும் இது உதவும்.

6. ஸதகா ஜாரியா (தொடர்ந்து வரும் தர்மம்) நாம் கற்பனை செய்வதை விட விசாலாமான பெயர்: நீங்கள் செய்த எந்த தர்மம் நீங்கள் இறந்தபின்னும் உங்களைத் தொடர்ந்து வரும் என்பது உங்களுக்கே தெரியாது. உதாரணமாக, ஒரு பசித்த மனிதனுக்கு நீங்கள் உணவளித்திருந்தால், அது அவனை மரணத்திலிருந்து காப்பாற்றியுள்ளது. சிறிது காலம் கழித்து, அவருடைய சிரமங்கள் நீங்கி, அவர் ஒரு இஸ்லாமிய சொற்பொழிவாளராக மாறியிருந்தால், நியாயத் தீர்ப்பு நாளன்று உங்களுக்குக் கிடைக்கப்போகும் வெகுமதிகளை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அதனால், எந்த தர்மத்தையும் அற்பமாக கருதாதீர்கள். உங்களுடைய எந்த ஸதகா மறுமை நாளில் நன்மைகளின் மலையாக மாறும் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்.

7. தேவையுள்ளவர்களுக்கு தர்மம் ஒரு சலுகை அல்ல. அது அல்லாஹ் நமக்குத் தந்துள்ள அருள். முஸ்லிம் சமுதாயத்தின் மீது ஏழைகளுக்கு உரிமை உண்டு. அல்லாஹ் ﷻ கூறுகிறான்: அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் உரிமை உண்டு. [அல் குர்’ஆன் 51:19]

8. சில சமயம் நாம் ஏழைகள் நம்மைத் தேடி வருவதை விட நாம் அவர்களைத் தேட வேண்டும். நபி ﷺ கூறினார்கள்: ‘ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள எச்செல்வத்தையும் பெற்றிருக்க மாட்டான்; பிறரும் அவனுடைய நிலையை அறிந்து தர்மம் செய்ய மாட்டார்கள், தானும் வலியச் சென்று கேட்கமாட்டான்.” (இத்தகையவனே உண்மையான ஏழையாவான்.) அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். [புகாரி]
Previous Post Next Post